Saturday, May 9, 2020



நக்கீரர்
நக்கீரதேவர் என்பார் கடைச்சங்கத்துப் புலவருள் தலைமை பூண்டவர். அவர் தனக்கிருந்த கல்வியின் வல்லமையால் இறைவன் முன்னரும் வீரம் பேசினோர். இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, கைலைபாதி காளத்திபாதியந்தாதி, திருவீங்கோய்மாலையெழுபது, திருவலஞ்சுழிமும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றித் திருக்கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம் முதலிய பிரபந்தங்கள் பாடியுள்ளார். இவற்றுள் நெடுநல்வாடை நீங்கலாக மற்றவை பதினோராந்திருமுறையிலுள்ளன. கோபப்பிரசாதம், கலிவெண்பா, பெருந்தேவபாணி மூன்றும் இறைவன் தன் மீது சீற்றங்கொண்டபோது அது தணியப்பாடப்பட்டன. இவையனைத்தினும் திடபத்தியினையும், தத்துவஞானத்திற் குரியவற்றையும் பூர்வசரித்திரங்களையும் நன்கு விளக்குகிறது. அவையாவும் எவராலும் விரும்பத்தக்கன. இவர் பிரபந்தங்கள் சமயகுரவர்கள் சந்தான குமவர்கள் பிரபந்தங்களுக்கு முன் தோன்றியன இவ்வுண்மையினை யறியாத வைணவர்கள் பத்திமார்க்கத்திற்குத் தங்கள் ஆசிரியர்களே பூர்வீகராவரென நினைக்கின்றார்கள். இவர்கள் பதி.னோராந் திருமுறை ஆசியர்களைப்பற்றிச் சிறிது மாராயாதவராவர் இவ்வாசிரியர்கள் வைணவ ஆசிரியர்கட்கு வெகுகால முந்தியவர்கள் இவ்வைணவர்கள் சைவசமய உண்மையினையும் தெரியாதவர். இத்தசையினர்க்கு இத் திருமுறைகள் ஆச்சரியத்தினை விளைவிக்கு மென்பதிற்றடையில்லை. சரியை கிரியை யோகம் ஞானம் எனப்படும், தாத சற்புத்திர தாச சன்மார்க்கங்கனை வெகு பண்டைய காலத்தவராகிய நக்கீரதேவர் எடுத்தாண்டிருக்கின்றனர். இவ்வுண்மையினைக் கபிலைபாதிகாளத்திபாதியில் சில காட்டுகின்றோம்.
உண்மைவணக்கம்.
      சொல்லும் பொருளுமே தூத்திரியு நெய்யுமாம்
      நல்லிடிஞ்சி லென்னுடைய நாவாகச் - சொல்லரிய
      வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
      பெண்பாகர்க் கேற்றினேன் பெற்
மனக்கோயிலான்.
பெரியவர் காணீரென் னுள்ளத்தின் பெற்றி
           தெரிவரிய தேவாதி தேவன் - - பெரிதுந்
          திருத்தக்கோ ரேத்துந் திருக்கயிலைக் கோனை
           யிருத்தத்தான் போந்த திடம்.

தாசோகம்.
              பண்டு தொடங்கியும் பாவித்து நின்கழற்கே
           தொண்டு படுவான் றொடர்வேனைக் - கண்டுகொண்
           டாளத் தயாவுண்டோ வில்லையோ சொல்லாயே - -
           காளத்தி யாயுன் கருத்து.
பிறவிக்கு அணை.
            நிலையிற் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
      தலைவ தடுமாறு கின்றேன் - றொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
      வேந்தே யிப்பாசத்தை விட்டு.
மணவாளன்.
      மகிழ்ந் தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
      நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
      விண்ணிறங்கா, வோங்கும் வியன் கயிலை மேயாயென்
      பெண்ணுறங்கா ளென் செய்கேன் பேசு.
பஞ்சாட்சரம்.
            வாயிலே வைக்கு மாவின் மருந்தாகித்.
தீய பிறவிநோய் தீர்க்குடே - தூயவே
      நம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்
      தெம்பெருமா னோரஞ்செ ழுத்து.
இதுவுமது
      அஞ்செழுத்துங் கண்டீ ரருமறைக ளாவனவு
      மஞ்செழுத்துங் கற்க வணித்தாகு - நஞ்சவித்த
      காளத்தியார் யார்க்குங் காண்டற் கரிதாய்ப் போய்
      நீளத்தே நின்ற நெறி.
பசுஞானமும் - பதிஞானமும்.
      உணருங்கா லொன்றை யுருத்தெரியக் காட்டாய்
      புணருங்கா லாரமுதே போன்று - மிணரிற்
      கனியவாஞ் சோலைக் கயிலாய மேயா
      யினியவா காணின் னியல்பு.

அபேதம்.
      உரையும் பொருளு முடலு முயிரும்
      விரையு மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்
      சென்றவா றோங்குந் திருக்கயிலை யெம்பெருமா
      நின்றவா றெங்கு நிறைந்து.

அத்துவிதம்.
      யானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பதனை
      யானென்றுங் கொண்டிருப்ப னானாலுந் - தேனுண்
      டளிகடாம் பாடு மகன்கயிலை மேயான்
      றெளிகொடான் மாயங்கள் செய்து.

அருள்.
      சார்ந்தாரை யெவ்விடத்துங் காப்பனவுஞ் சார்ந்தன்பு
      கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவுங் - கூர்ந்துள்ளே
      முளத்தி யானிப்பார் முன்வந்து நிற்பனவுங்
      காளத்தி யார்தங் கழல்.
சதுர்த்தம்.
     அவரோ னெடுமா லமரர்கோன் மற்றும்
      பலராய்ப் படைத்துக் காத்தாண்டு - - புலர்காலத்
      தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
      குன்றாத சீர்க்கயிலைக் கோ.

நிற்க, நக்கீரதேவர் இவ்வந்தாதியினும், திருக்கண்ணப்பதேவர் திருமறத்தினும் கண்ணப்பநாயனார் அரிய பத்தியினை மிக வியந்து பாராட்டுகின்றனர். இதைய நுசரித்தே அருண்மொழியாராகிய சேக்கிழார் விஸ்தாரமாகப் பெரிய புராணத்தில் கூறியுள்ளார். அரிய பத்திக்கு உதாரணமாக மாணிக்கவாசக சுவாமிகளும் சங்கராசாரியரும் கண்ணப்ப நாயனாரையே வியந்து பாராட்டுகின்றன ரென்பது யாவரு மறிந்த வுண்மையே.
ஒரு காலத்தில் நக்கீரதேவர் யாத்திரை செய்த போது. இடையிலே பூதமொன்று இவரைப் பிடித்து முன்னமே ஒரு குகையில் தான் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த 999 பெயர்களுடன் சேர்த்து யாவரையும் விழிங்கிவிட உத்தேசித்திருக்கையில், நக்கீரதேவர் திருமுருகாற்றுப்படையினைப் பாடியவுடன் முருகக்கடவுள் பிரத்தியட்சமாகி அவ்விடையூறின்றி இவரையும் மற்றையரையும் நீக்கினர். அதுமுதல் இத்திருமுருகாற்றுப்படையைப் பாராயணஞ் செய்யில் சகல இடுக்கண்களுநீங்க முருகக்கடவுள் கிருபை கிடைக்குமெனும் நம்பிக்கையுடன் சைவர்கள் படித்து வருவதுடன் முருகக்கடவுள் திருவருளுக்குப் பர்த்திரராகின்றனர். முருகக்கடவுள் அருள் பெற்றானொருவன் மற்றொருவனைக் கண்டு அவ்விறைவனது படைவீடுகளாகிய திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குட (பழதி), திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர் சோலை (கள்ளழகர் கோயில்) சென்று வழிபடின் திருவருளடையலாமெனவற்புறுத்தி வழிப்படுத்தலைத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. இப்படையுள் பெருமான் விபவத்தையும் அருள்விளையாடலையும் தெரிவிக்கின்றது. இடையிடையே, கடல், ஆகாயம், மலை, காடு, சூரியன், சந்திரன், விருட்சம், புஷ்பம், பட்சி முதய சிருஷ்டிவர்க்கங்களி லமைந்துள்ள இறைவன் மாட்சிமைகளை விளக்குகின்றது. நாம் நேரே கடவுளை நமது சீவகரணங்களால் பார்க்கக்கூடாது. உண்மைத் தீர்க்கதரிசிகள் உலகசிருஷ்டியின் சுபாவமாக வமைந்துள்ள சிங்காரங்களால் கடவுளின்மகிமையினைக்கண்டு ஆனந்தமடைசின்றனர். இவை முதலிய காரணங்களால் நக்கீரதேவர் நூல்களனைத்தும் பத்திக்கு ஏது வானவைகளேயாம்.
[இவ்விஷயம் - ஜே - யம் - நல்லசாமிபிள்ளையவர்கள்
ஆங்கிலேயத்திலியற்றியதின் மொழிபெயர்ப்பு.]
                              
   மணவழகு.
சித்தாந்தம் – 1912 ௵ - ஜூலை ௴



No comments:

Post a Comment