Saturday, May 9, 2020



திருமுறைப் பகுதி
திருவாசகம் - பிடித்த பத்து, முதற்பாட்டு

ஆசிரியர்

திருவாசகம் உரைப்பதிப்புக்கள் ஆறும், மூலப் பதிப்புகள் எண்ணற்றனவும் வெளிவந்துள்ளன. முதல் முதலாகக் கொட்டையூர்ச் சிவக்கொழுந்துதேசிகர், ஓலையேடுகள் பலகொண்டு பரிசோதித்துத் திருவாசகத்தை 1836 ல் அச்சிட்டார். இதன் பின்னர் வெளிவந்த இராமசாமி முதலியார் பதிப்பு 1843, அனந்தையர் பதிப்பு 1868 முதலான பலபதிப்புக்கள் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்புக் கிணங்க' என்ற தொடரை முன் ஏட்டில் மகுடமாக வைத்துப் பதிப்பிக்கப் பெற்றன. இதன் பின்னர் வெளி வந்த பதிப்புக்கள் யாவும் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பித்த பாடம் என்ற ஒரு சட்டத்தை வைத்து அமைந்தவையே ஆகும். ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் திருவாசகம் பதிப்பித்த போது கூட தாம் மூலஏடுகளை வைத்துப்பரி சோதிக்காமையால், பரிசோதித்து' என்ற வார்த்தையை முகப்பு ஏட்டில் எழுதாமல், "நாவலர் அவர்கள் பார்வையில்'' என்று மட்டும் எழுதி வெளியிடச் செய்தார்கள் என்று அறிஞர்கள் சொல்வார்கள்.

உரைப் பதிப்புகளைச் சீர் தூக்கி ஆராய இது இடமில்லை.

1940 இல் சைவ சித்தாந்த சமாஜத்தார் சிறப்பான தோர் ஆராய்ச்சிப் பதிப்பு வெளியிட்டார்கள். இப்பதிப்பில் புதிய பாடங்கள் எவற்றையும் இவர்கள் மேற் கொள்ளவில்லை. ஆனால் பலவிதமான அகராதிகளும், ஆராய்ச்சிக் குறிப்புகளும் தந்து உதவியிருக்கிறார்கள்.

1956 இல் மர்ரே கம்பெனியார் சிறப்பான பதிப்பா சிரியர் குழு ஒன்று நியமித்து, அவர்கள் மூலம் 67 ஏடு களையும், பழைய பதிப்புகளையும் வைத்து ஆராய்ந்து சிறப்பான பதிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். சிவக் கொழுந்து தேசிகருக்குப்பின், பதிப்பு என்று சொல்லத் தக்க சிறப்பு வாய்ந்தது இப்பதிப்பு ஒன்றே. இங்கு பதிப்பாளர் சிறப்பான பாடங்கள் பலவற்றைக் கொண்டதோடு ஏற்புடைய பாடங்களைத் தொகுத்துத் தனியாகத் தந்து, மேலும் அறிஞர் ஆராய்வதற்காக உதவியும் செய்திருக்கிறார்கள். இப்பதிப்பு சைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் சிறந்த ஒரு தொண்டாகும். சைவ மக்கள் மர்ரே கம்பெனி யாருக்கு இப்பெருந் தொண்டிற்காகப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், மர்ரே கம்பெனியார் சிறப்பான பதிப்பு வெளியிட்டதனால், மேலும் ஆராய்ச்சிக்கோ, புதுப்பதிப்பிற்கோ இடமில்லை என்று கருதுதல் ஆகாது. கிடைக்கின்ற எல்லா ஏடுகளையும் தொகுத்து ஏடு பரி சோதிக்கும் திறம் வாய்ந்தவர்கள், மீண்டும் பல முறை ஏடுகளைப் பரிசோதிக்க முடியுமானால், சிறப்பான பலன் ஏற்படும் என்பது உறுதி. இவ்வாண்டு சைவ சித்தாந்த சமாஜம் திருவாசக மூலப்பதிப்பு வெளியிடுவது என்ற ஓர் ஏற்பாடு இருக்கிறது. இச்சமயத்தில் ஏடுகளை ஆராயும் வாய்ப்புள்ளவர்கள் ஏடு ஆராயும் முயற்சியை மேற் கொள்வது மிகவும் அவசியமாகும். எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்குக் குறிப்பிடலாம்.

பிடித்தபத்தின் முதற்பாடல் சைவ மக்கள் எல்லோ ரும் நன்கு அறிந்த பாடல். பின் வரும் வடிவத்தில் அது அச்சுப் புத்தகங்களில் காணப்படுகிறது.

உம்பர்கட் கரசே! ஒழிவற நிறைந்த த
யோகமே ! ஊற்றையேன் றனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டும்
வாழ்வற வாழ்வித்த மருந்தே !
செம்பொருட் டுணிவே 1 சீருடைக கழலே !
செல்வமே ! சிவபெரு மானே !
எமபொருடடுன்னைச் சீககெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

அப்பாடலில் ''ஊற்றையேன்" என்ற தொடர் ஊத்தையேன் என்று தான் ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகிறது. ஊத்தையேன் என்பதற்கு மல அழுக்கு உள்ளவன் என்பது கருத்து. ஊத்தை என்பது கொச்சைச் சொல் என்று கருதிப் போலும் பதிப்பித்தவர்கள், ஊற்றையேன் என அச்சிட்டார்கள். உரை எழுதியவர்களும் ஊற்றை என்பது ஊத்தை என்ற சொல்லின் திரிபு என்றே குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, இச்சொல் ஏட்டில் உள்ளபடி ஊத்தையேன் என்றே பதிப்பித்தற்குரியது. மர்ரே கம் பெனியாரும் இவ்வாறே பதிப்பித்துள்ளார்கள். ஆனால் இங்கு நாம் கருதப் போகிற தொடர் "சீருடைக் கழலே என்பது. எல்லாப் பதிப்புக்களும் இத்தொடரை "சீரு டைக் கழலே" என்றே கொண்டிருக்கின்றன. இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் இறைவனை அரசே, யோகமே, மருந்தே, துணிவே, கழலே. செல்வமே, சிவபெருமானே என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சொற்களில் கழலே' என்ற சொல் ஒன்றுதான் பொருந்தாததாய் உள்ளது. ஆண்டவனை இங்குக் குறிப்பிட்டவை போன்ற சொற்களால் விளித்துப் பேசுவது மரபு. அரசு, யோகம், மருந்து முதலான சொறகள் செலவமாகிய சிவபெருமானுக்கு ஏறபுடையதாகுமா? என்பது கேள்வி. சிவபெருமானின் திருநாமங்கள் பலவற்றைச் சொல்லி அவனை அழைக்கலாம். உருவகமாக அவனை மருந்து என்றும், யோகம் என்றும் கூறுவது மரபுக்கு ஒத்தது. ஆனால் கழல் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்?

சைவ இலக்கியங்களில் இறைவனாகிய சிவபெருமானது முழுவடிவத்தைச் சுட்டி விளித்துப் பேசுவதே மரபு : சிவபெருமானுடைய அங்கங்களில் ஒன்றை மட்டும் சுட்டிப் பேசியதாக சமய நூல்களில் (திருமுறைகளில்) கண்டதில்லை. திருமுகமே, திருக்கரமே, திருவடியே என்று யாரும் பாடியதில்லை.

''கழலே' என்பது கழலை அணிந்த திருவடியை உணர்த்தி, சீருடைய திருவடியே என்று பொருள்பட நிற்கிறது. இவ்வாறு கூறுவது மரபன்று. இதை உணர்ந்த பெரியவர்கள், இத்தொடருக்குக் கழலை உடையவன் " என்றும், " கழலை அன்பர்க்குத் தருபவன் என்றும் " பொருள் செய்திருக்கிறார்கள். கழல் என்பது ஆகுபெயராய், கழலணிந்த திருவடியைக் குறிக்க என்று கூறியிருக்கிறார்கள். " கழல் என்பது இங்கு ஆகுபெயராய் சிவபெருமானுடைய இரண்டு திருவடிகளையும் குறிக்கிறது. திருவ + அருளாதலின் அருட்செல்வமே, என்று உரை செய்யப்பட்டது' என நெல்லையப்ப பிள்ளையவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆகவே, 'கழலே' என்பது நேரே பொருள் தரவில்லை என்பது தெளிவு.

இனி சம்பந்தர் தேவாரத்துள் ஒரு பாசுரம் ஆண்டவனைத் திருவடி என்றே குறிப்பதாக வுள்ளது.

கருவடிய பசுங்கால் வெண் குருகேஒண் கழி நாராய்
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒருநாட் சென்றுரையீரே
செருவடி தோட் சிறுத்தொண்டன செங்காட்டங்குடி மேய
திருவடிதன் திருவருளே பெறலாமே திறத்தவர்க்கே.

என்பது பாசுரம். செங்காட்டங் குடிமேய - திருவடி என்பது, செங்காட்டங் குடிமேய சிவபிரான் என்று பொருள் கொள்ளத்தக்கது என்று திரு. வ. சு. செங்கல்வராய பிள்ளையவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இங்கும் திருவடி. என்ற சொல் படர்க்கையில் சிவபிரானைக் குறிப்பதன்றி முன்னிலையாக வரவில்லை. அப்பர் சுவாமிகள் தாண்டகத் திருமுறையில் "அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி'  என்ற பதிகம் முழுமையும் திருவடித் திருத்தாண்டகம் என்ற பெயரோடு திருவடியின் புகழையே பாடுவதாகவுள்ளது. இங்கும் அப்பர் திருவடியைப் படர்க்கையில் பேசுகின்றாரே யன்றி முன்னிலையாகப் பேசவில்லை. மிகப் பழமையான இரண்டு ஏடுகளை நான் சமீபத்தில் பரிசோதித்து வந்தபோது, அவ்விரண்டு ஏடுகளிலும் "சீருடைக் கடலே" என்பதே பாடமாகக் காணப்பட்டது. 'கடலே'' என்ற தொடரால் மாணிக்கவாசகர் ஆண்டவனைப் பல இடங்களில் அழைக்கிறார். பிடித்த பத்து இரண்டாம் பாடலில் கூட 'கடவுளே, கருணைமா கடலே'' என்று கூறுகின்றார். கடலே என்று அமைப்பதில் மரபு வழு எதுவும் இலது.

கடலே என்று ஆதியில் பாடம் இருந்து, எங்கோ ஓர் ஏட்டில், ஏட்டின் பழுது காரணமாகப் பெயர்த்து எழுதி யவர் '' வை '' வாக எழுதியிருக்கக் கூடும். இவ்வேட்டிலிருந்து பிரதி செய்யப்பட்ட ஏடுகள் யாவும் "கழலே'' என்ற பாடத்தைக் கொண்டு விட்டன. இவ்விதமே பிழை எழுந்தது என்று கருதுதல் பொருந்துவதாகும். எனினும், இப்போது பழைய ஏடுகளில் "கடலே" என்று காணப்படுவதால், கடல் என்பது தான் உண்மையான பாடமாக யிருக்க வேண்டுமென்று நாம் முடிவு செய்யலாம்.

இது போல் நுட்பமான பாடச் சிறப்புக்கள் பல புதிதாய் ஏட்டுப் பரிசோதனை செய்யும் போது கிடைக்கக் கூடும். ஏட்டுப் பரிசோதனை உண்மையான பாடத்தை வரையறை செய்வதற்குப் பேருதவியாயிருக்கும். அச்சில் வந்துவிட்டதால், ஏடு இனி எதற்கு என்று யாரும் எண்ணா திருப்பார்களாக.  

சித்தாந்தம் – 1964 ௵ - மார்ச்சு, ௴


No comments:

Post a Comment