Saturday, May 9, 2020



மருள் நீக்கியார்
திரு. பு. ர. சுவாமிநாதன் அவர்கள், M. A., L. T.,
அண்ணாமலை நகர், சிதம்பரம்
                                                                                                  
சைவ சமய ஆசாரியர் நால்வருள் ஒருவராய திரு நாவுக்கரசு சுவாமிகட்கு அவர் தாய் தகப்பனாரால் அழைக்கப்பட்ட பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். சைவ சமயாசாரியர் நால்வரும் இறைவனை நேரே தம் அனுபவத் திற், கண்டு பேரின்பப் பெருவாழ் வெய்திய சிவஞானி களாவர். இறைவனை அடையும் மார்க்கங்களில் ஒவ் வொன்று ஒவ்வொருவர் வாயிலாக உலகில் சிறப்பு வகை யில் விளங்குவதாயிற்று. இப் பெரியார்களது சரித்திரங்களை உற்று நோக்கினால் தாசமார்க்கம். சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நான்கு மார்க்கங்களும் முறையே திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் என்பவர்களது வாழ்க்கையால் விளக்கப்பெறும் உண்மை புலனாகும். மக்கள் தம் வாழ்க்கையில் எவ்வித வழிகளைக் கடைப் பிடித்து நடந்து முன்னேறலாம் என்பதைக் காட்டுவது போல இந்நெறிகள் அமைந்துள்ளன.

தாசமார்க்கம் ஆண்டான் அடிமை முறையைப் பின் பற்றுவதாகும்; சற்புத்திரமார்க்கம் தகப்பனும் பிள்ளையும் இருக்கும் வகையைச் சார்ந்தது; சகமார்க்கம் உற்ற நண்பர் இருவர் வாழும் நிலையை விளக்குவது; சன்மார்க்கம் இருகாதலரின் ஒருமித்த வாழ்க்கையை மேற்கொண்டுள்ளது, தனிப்பட்ட ஒருவனது வாழ்க்கையில் இவற்றில் ஏதாவதொன்றின் வழியிலேயே அவன் வாழ்க்கை நடத்த வேண்டிவரும். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வகையிலும் தன் வாழ்க்கையை நடத்தவுங்கூடும். இவற்றில் திருநாவுக்கரசரது வாழ்வு ஆண்டான் அடிமை நிலையை விளங்கவைத்தது. அவரது ஆரம்ப வாழ்விலிருந்து இறுதியில் சிவஞானப்பேறுபெற்றவரை, கடினமான வாழ்க்கையாகவே அமைந்துள்ளதை நாம் அனைவரும் கருத வேண்டியுள்ளது. திருஞானசம்பந்தர் போன்று முத்துச்சிவிகை பெற்று அதன் மேல் தலயாத்திரை புரிந்தாரில்லை, அல்லது சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆண்டவனை வேண்டிப் பெற்று அனுபவித்த கஸ்தூரி கமழ்சாந்தோ, அல்லது குண்டையூரில் பெற்ற நெல்மலைகளோ திருநாவுக்கரசருக்குக் கிடைக்கவில்லை. இவற்றால் இவ்விருவரும் நாவுக்கரசரை விட உயர்ந்தோர் எனக் கூறுவதற்கில்லை. இந்நிலைகளில் ஒவ்வொரு நிலையும் அதனதன் தகுதியிலே சாலச்சிறப்புடைத்து. மருள் நீக்கியார் அவதாரத்தைக் கூறவரும் சேக்கிழார் பெருமான் கூறுவது என்ன?

"திலகவதியார் பிறந்து சில முறையாண் டகன்றதற் பின்,
அலகில் கலைத்துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ,
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல,
மலரும் மருணீக்கியார் வந்தவதாரஞ் செய்தார்''
இச்செய்யுளால் நமக்குக் கிடைப்பன மூன்று கருத்துக்கள். அவை நாயனார் அவதாரத்துக்கு முன் கலைத்துறை தழைத்திருக்கவில்லை, அருந்தவத்தோர் நெறி செம்மையாயில்லை, உலகில் இருள் எங்கும் நிறைந்திருந்தது - இவை மாற வேண்டிய நிலை ஏற்பட்டதை ஒழுங்கு செய்யவே ஆண்டவன் இப்பெரியாரை உலகில் அவதரிக்க வைத்தார் என்பதாகும்.

இவரது வாழ்க்கை வரலாற்றைச் சேக்கிழாரருளிச் செய்த பெரிய புராணத்தின் மூலம் உணர்ந்தபின், இவர் அருளிச் செய்த திருமுறைகளையுங்கற்றபின், மேற் கூறிய மூன்று கருத்துக்களையுங் கவனிப் போமாயின் நமக்குப் பல உண்மைகள் புலனாகும்.

பொதுவாக இவரது தேவாரப் பாடல்களை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக வகுத்துள்ளனர். அதில் நான்காம் திருமுறையில் கவிச் சுவை நிரம்பிய பாசுரங் களும், ஐந்தாம் திருமுறையில் உபதேசம் நிரம்பிய பாடல் களும், ஆறாம் திருமுறையில் இறைவனின் தன்மை, அருளும் வகை, வரலாறுகளும் உள்ளன வென்று ஆராயப்பட்டுள்ளன, இவற்றால் கலைத்துறை தழைக்க இவரது பாடல்கள் உதவின. அக்காலத்தில் நாட்டில் சமண சமயம்ஓங்கிச் சைவம் குன்றியிருந்தது - பல்லவ அரசனே சமண மதத்தைத் தழுவி அதற்கு வேண்டிய உதவிகள் புரிந்ததை நாவுக்கரசர் புராணம் கூறுவதை அக்காலத்திய கல்வெட்டுச் சான்றுகளாலும், பலரால் ஆராயப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றுச் செய்திகளாலும் காண்கிறோம். நாயனார் சமண சமயத்தைச் சார்ந்து கலைவல்லுநராகி "தரும் சேனர்' என்ற தகுதியோடு வாழ்ந்த பின் மீண்டும் சைவரான செய்தி நம்மனைவருக்கும் தெரிந்த தொன்றே - இச்சந்தர்ப்பத்தில் சைவத்திற்குத் தாயாக விளங்கி நம் சைவ உலகிற்கே ஒரு ஆசாரிய புருஷனைக் கிடைக்கச் செய்த திலகவதித்தாயை எண்ணாமலிருக்க முடியுமா? அவர் ஏன் உயிரை நீக்கிக் கொள்ளாமல் வாழ்ந்தார் என்பதைக் கூறவந்த சேக்கிழார்,

தம்பியார் உளராக வேண்டும் எனவைத்த தயா
உம்பருலகணைய வுறு நிலை விலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல் தாங்கா தனைத் துயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியாரிருந்தார்'' எனவும்,

"தூண்டுதவ விளக்கனையார் சுடரொளியைத் தொழு
ஆண்டருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப்பரசமயக் குழி நின்றும் எடுத்தாள
வேண்டும் எனப்பலமுறையும் விண்ணப்பம் செய்தனரால்'
என்பதிலிருந்து நன்கு உணரமுடிகின்றது.

அனைத்துயிர்க்கும் அருள் தாங்க விழைந்தார் தாய் திலகவதியம்மை. வாழ்ந்தார் நாயனார் நாவுக்கரசு - தழைத்தது கலை உலகம். ஓங்கியது அருந்தவத்தோர் நெறி. நீங்கியது உலகில் நிலவிய இருள். இன்றைய உலகைச் சற்று எண்ணிப் பார்ப்போமானால். எங்கும் இருள் சூழ்ந்துள்ளது, உலகத்தலைவர் என்போரெல்லாம் ஒளி எங்கு உள்ளது எனத் தேடித்தேடி அலைகின்றனர். நாயனார் போன்'றதொரு ஒளி தோன்ற வில்லையாயின், என்ன நேரிடுமோ என் அஞ்சத்தான் வேண்டியுள்ளது. தைமாதம் ஒன்றுசேர விருக்கும் எட்டுக்கிரகங்களைச் சாந்தப்படுத்த ஆங்காங்கே ஆண்டவன் சந்நிதிகளில் முறையீடுகள் செய்யப் பெறுகின்றன. அண்மையில் காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள், கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்ய நம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்பதிகம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பெற்றது. இதைப் பாடுவதற்குக் காரணமாக இருந்த பெரியார் நம் நாவுக் கரசராவார். ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தாய் ஆகிய மங்கையர்க்கரசியார் வேண்டுகோட்கிணங்கிப் பாண்டி நாட்டிற்குப் புறப்படுந் தருவாயில், உடன் இருந்த நாவுக்கரசு சுவாமிகள் தாம் சமணரால் முன்னர் அவதியுற்ற அத்தனையையும் நினைத்து,

''அரசு அருளிச் செய்கின்றார்'பிள்ளாய்! அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதியில்லை
உரை செய்வ துளது உறுகோள் தானும் தீய
எழுந்தருள உடன் படுவதொண்ணா'தென்னப்
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய் மலர்த்தாள் போற்றிப்புகலி வேந்தர்
வேயுறு தோளியை' எடுத்து விளம்பினாரே'' –

"சிரபுரத்துப் பிள்ளையா ரருளிச் செய்த
திருப்பதி கங்கேட்ட தற்பின் திருந்து நாவுக்
கரசு மதற்குடன் பாடு செய்து தாமும் –
அவர்முன்னே எழுந்தருள அமைந்தபோது
புரமெரித்தார் திருமகனார் அப்பா இந்தப்
புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலருந் தொழுதரிதாங் கருத்தில் நேர்ந்தார்"

'வேயுறு தோளிபங்கன்' என்ற திருப்பாசுரத்தில், தானுறு கோளும் நாளும் அடியாரைவந்து நலியாத வண்ணம் உரை செய்-

ஆன்கொன் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே'' என்ற பின்னரே நாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானுக்குப் போகுமாறு ஆணைதந் தனர். ஆகவே பாண்டி நாட்டில் சைவசமயப் பயிர் தழைக்க நாவுக்கரசர் வழியனுப்பிய செய்தி உதவுகிறது.

இனி நாவுக்கரசர் நமக்கு அருளிய சில உண்மைகளை உணர முயற்சிப்போம். தாமே நடந்து காட்டி மக்களும் அவ்வழியைப் பின்பற்றி நற்கதியடைய முயற்சிக்க ஊக்குகின்றார். பல்லவ அரசன் தம்மை அழைத்த போது

"நாமார்க்கும் குடியல் லோம் நமனை அஞ்சோம்'' என்ற அஞ்சாமை,

"உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவதியா தொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை'' என்பதாலும் "மண் பாதலம் புக்குமால் கடல்மூடி மற்றேழுலகும் விண்பால் திசை கெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே'' என்றும்

“வானந் துளங்கி லென்மண்கம்ப மாகிலென் மால் வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறி லென் தண் கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலை நஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே''

என்றும் தீரவார்த்தைகளை நமக்களித்துள்ளது. சுலபமாக இறைவனை அடைய வழிகளிருப்பின் அதைக் கடைப் பிடித்து அதை எளிதாகச் செய்யலாமே எனக் கருதுங் காலம் இது. நாவுக்கரசர் கூறும் ஒரு வழியைச் சற்றுக் கவனிப்போம்.

''அவன் தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால், இவன் எனைப்பன்னாள் அழைப்பொழியான் எனச், சிவன் எனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனி எம்மான் எதிர்ப்படுமே'' என எவ்வளவு அழகாகக் கூறுகின்றார். ஆண்டவன் நாமத்தைக் கூறியே அவனை அடைய முயற்சிப் போமாக - எப்படி வழி படுவது என்பதைக் கூறவந்த நாயனார்,

"வேட்களத் துறைவேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறை மிடற்றண்ணலே''

என வழி வகையுங் கூறுகிறார். தாம் சிவபூசை செய்ததை


“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என் நாவில் மறந்தறியேன்"
எனத் தமது முதற் பதிகத்திலேயே கூறுகின்றார். எப்படி எல்லாம் ஆண்டவன் நமது செயல்களைக் கவனிக்கின்றார் என்பதை நயமாகக் கூறுகின்றார் நமசுவாமிகள்.


தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழு துங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே''

திருஎறும்பியூர்த் திருத்தாண்டகத்தில் ஆண்டவன் அருளும் திறத்தினை,

"பன்னிய செந்தமிழறியேன் கவியேல் மாட்டேன்
எண்ணோடு பண் நிறைந்த கலைகளாய
தன்னையுந் தன் திறத்தறியாப் பொறியிலேனைத்
தன் திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர் ந்தென்னை ஆளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
செழுஞ் சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே”

எனக் கூறுவது சிந்திக்கற் பாலது: ஆண்டவன் எங்ஙனம் அடியார்கள் பிழைகளைப் பொறுத்து ஆட்கொள்கின்றார் என்பதை,

"அத்தா உன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்த வாறே "

என்ற பாசுரத்தின் மூலம் மனிதனது தாழ்ந்த நிலையிலும் கடவுள் செய்யும் கருணையின் உயர்ந்த தன்மையை விளக்குகின்றார்.

அடக்கமே உருவான அப்பர் பெருமான் வாழ்க்கையில் நடத்திக் காட்டிய ஒரு நிகழ்ச்சி நமக்கெல்லாம் ஒருபெரும் படிப்பினையாக அமைந்துள்ளது. யாராலும் காட்ட முடியாத இறைவனைச் சுட்டிக்காட்டி, அம்மையாரின் அமுதுண்ட ஞானசம்பந்தப் பிள்ளையார் தம் சிவிகையில் செல்கின்றார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் கல்லினைத் தெப்பமாகக் கொண்டு கரையேறி "நாவுக்கரசர்'' என்று ஆண்டவனால் அழைக்கப்பெற்ற பெருமானைத் தரிசிக்க விழைகின்றார். ஆனால் அப்பர் பெருமானோ சம்பந்தப் பெருமான் சிவிகையினைத் தாங்கி வருகின்றார். இக்காட்சியை நம் சேக்கிழார் பெருமானின் திருவார்த்தை களினாலேயே காண்போம்.

"வந்தொருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணிமுத்தின்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்கு வாருடன் தாங்கி
சிந்தை களிப்புற வருவார் தமையாருந் தெளிந்திலரால்.

திருஞான மாமுனிவர் அரசிருந்த பூந் துருத்திக்
கருகாக எழுந்தருளி “ எங்குற்றார் அப்பர்'' என
உருகா நின்றும் “ அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெருவாழ்வு வந்தெய்தப் பெற்றிங்குற்றேன்''

என்றார். சைவசமய ஆசார்யர்களுள் வயது முதிர்ந்த அப்பர் பெருமானின் அடக்கம், எந்நிலையிலிருந்த தென்பதை இந்நிகழ்ச்சி அறிவுறுத்துகின்றது.

கயிலையைக் காண வடநாட்டு யாத்திரையை மேற் கொண்டு சென்றபோது மிகவுங் கடினமான நிலைகளை அடைகின்றார் - தசைப்பொதிகள் கழன்று எலும்பும் தேய்ந்து போன போது, ஆண்டவனே ஒரு குளக்கரையில் இருந்து கயிலையாத்திரையின் கடுமையை உணர்த்திய போது, அப்பர் பெருமானின் ஆண்மையுடன் கூடிய பதில் இதுவாகும்.

“ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்"

நாவுக்கரசரது பாடல்களில் எப்படி எல்லாம் ஆண்டவனைத் தான் உணர்ந்து அனுபவித்துள்ளார் என்பது நன்கு புலனாகின்றது.

"என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன்
என்னைத் தன் அடியான் என்றறிதலும்
தன்னை நானும் பிரான் என்றறிந்தெனே''

உண்மையான உள்ளத்தோடு வழிபாடு நடைபெறல் வேண்டும்: இன்றேல் இறைவன் கூசுகின்றான் என்ற கருத்தை,

"நெக்குநெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு
நக்கு நிற்பன் அவர் தமை நாணியே "

''கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடினாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடிவைத் திட்ட மூர்க்கனோ டொக்குமே''
என்ற பாடல்களால் விளக்குகின்றார்.

ஒருகுறிக் கோளோடு நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை,

"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் –
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்புவந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக் கொண்டீச் சுரத் துளானே

என்பதனால் வலியுறுத்துகின்றார்.

எங்குபார்த்தாலும் மக்கட்குத் தொண்டு புரிதல் வேண்டும் எனப் பேசப்படுவதைப் பார்க்கின்றோம். இதற்கு வித்திட்ட பெருமை நம் அப்பர் பெருமானையே சேரும். “என்கடன் பணி செய்து கிடப்பதே'' என்ற அரிய வார்த்தைகள் அடங்கிய சொற்றொடர் "சொற் குறுதிக்கு அப்பர் எனச் சொல்'' என்ற பெரியாரது சிறந்த இனிய உறுதி வார்த்தைகளல்லவா!

இறுதியாக இவர் திருநாமமே ஒரு பஞ்சாட்சரமாக அமைந்துள்ளது. ஒற்றெழுத்து நீங்கலாக "நாவுக்கரசு" என்ற பக்த பஞ்சாட்சரமாக அமைகின்றது அவர் திரு நாமம். இதனைச் செபித்தே பெரிய பதவிகளை அடைந்த பெரியார் பலருண்டு. அறுபத்து மூவருள் ஒருவராய அப்பூதி அடிகள் பெற்ற பேற்றினை நால்வர் நான்மணிமாலை' யில் சிவப்பிரகாச சுவாமிகள் கூறும் வார்த்தைகளைக் கொண்டு காண்போம்..

உற்றானலன் தவம்; தீயில் நின்றானவன்; ஊண்புனலா
அற்றானலன் நுகர்வும்; திருநாவுக்கரசு எனும் ஓர்
சொல் தான் எழுதியுங் கூறியுமே என்றும் துன்பில்பதம்
பெற்றான் ஒரு நம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே"

ஆக நாமும் நாவுக்கரசர் வாழ்க்கையில் கண்டபல உண்மைகளைச் சிந்தித்து அஞ்சாமை, அடக்க முடைமை, ஆண்மை, உறுதி, ஊக்கம், தொண்டு மனப்பான்மை ஆகிய நலன்களைப் பெற முயற்சிப்போமாக!

"மணியன மாமறைக்காட்டு மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கதவந் திறப் பித்தன தெண்கடலிற்
பிணியன கன் மிதப் பித்தன சைவப் பெரு நெறிக்கே
அணியன நாவுக்கரையர் பிரான் தன் அருந்தமிழே"

சித்தாந்தம் – 1962 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment