Sunday, May 10, 2020



முருகன் பெருமை
[ர. சேது அம்மையார்]

[* சீகாழியில் நடந்த சமாஜ விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவு]

எம் குருநாதரவர்களை நினைவுக்கு வரச்செய்யும் தோற்றத்துடன் வீற்றிருக்கும் தலைவரவர்களுக்கும், தாய்மார்களுக்கும், மற்றுமுள்ள மெய்யன்பர்களுக்கும் என் தாழ்மையான வணக்கம். நம் காரியதரிசி அவர்கள் என்னால் ஆற்றுதற்கு இயலாத பணியொன்றை நியமித்து விட்டார்கள். இவ்வளவு பெரிய அவையின் முன்பு - அறிவு முதிர்ந்தோர்பலர் குழுமியுள்ள அவையின் முன்பு - பேசுவது இதுவே அடியேனுக்கு முதன் முறை. மேலும் ஆராய்ச்சியின் மணமேயறியாத என்னுடைய இச்சிறிய சொற்பொழிவில்குற்றங்கள் மிக மலிந்து கிடக்கும். அவைகளைப் பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இன்று யான் பேசவேண்டிய பொருள் ''முருகன் பெருமை'' என்பதாகும். முருகனின் பெருமை கடல்போன்றது. அவனது பெருமையை எடுத்துச் சொல்வதென்றால் கடலின் ஆழத்தை அளப்பது போன்றது. பெரும் புலமை வாய்ந்த நக்கீரர் பெருமானே அவனைப் புகழ்ந்து பாடிய திருமுருகாற்றுப் படையிலே நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமை " என்று கூறியவர் அதற்கு முன்னுள்ள அடியில் “யான் அறி அள வையின் ஏத்தி'' என்று கூறியுள்ளார். “பெருமை பெறு நினது புகழ்பேச வேண்டும்'' என்ற அருட்பா அடியும் இக்கருத்தைக் கொண்டதே.

முருகன் என்ற சொல்லின் பகுதியாகிய ‘முருகு' என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அழகு, இளமை,மணம், தெய்வத் தன்மை என்பன முக்கியமானவை. முதலில் அழகை எடுத்துக் கொள்வோம். முருகனழகு நம்முடைய அழியும் அழகைப் போன்றதன்று. நம் அழகு சிலகாலம் வரை தான் நிலைத்திருக்கும். உதாரணமாக, ஒரு மாமரத்தை எடுத்துக் கொள்வோம்.

அம்மரத்தைக் கடந்து செல்லும் வழிப்போக்கன் ஒருவன், உச்சியில் துளிர்ந்து வரும் ஓர் இலையின் பொன்னிறததை நோக்கி அதன் அழகை ஆனந்தத்துடன் அனுபவிக்கின்றான். சரியாக நோக்குதற் பொருட்டு, தலையிலுள்ள தலைப்பாகையைக் கூட எடுத்துவிட்டுப் பார்க்கிறான். ஆனால் அதே இலை சில நாட்கள் கழித்து, பழுத்து, மஞ்சள் நிறமடைந்து, கீழேயும் விழுந்தபின், அதை மிதியடியால் மிதிக்கின்றோம் என்ற நினைவுமில்லாமல் மிதித்துச் செல்கின்றான். நம்முடைய அழகும் அம்மாந்தளிரின் அழகைப்போன்றதே. இளமையில், யௌவனப் பருவத்தில் தான் அழகு போற்றப்படுகிறது. வயது முதிர்ந்து “வளைமுதுகோட்டிக் கைதாற்றி நரம்பா லார்க்கையிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்” முதுமைப் பருவம் அடைந்தபின்அழகு என்னும் பதத்திற்கு அவ்வுடலில் பொருள் தோன்றுவதேயில்லை. ஆனால் முருகப் பெருமானின் அழகோ என்றும் நிலைத்திருக்கும் தன்மையதாய், பார்க்கப் பார்க்கத்தெவிட்டாமல் அனுபவிக்கக் கூடியதாய் விளங்குகின்றது. பின்வரும் செய்யுள் இதை நன்கு விளக்கும்.

"சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
எர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலு மெல்லாம்
ஆர்க்குள வுலகி லம்மா ! அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினும் தெவிட்டிற் றீல்லை இன்னுமென் பார்வை தானும் "

இச் செய்யுள், சூர சம்ஹாரத்தின்போது, முருகக்கடவுளின் எழிலை வியந்து அவ்வரக்கன் பாடியது. ஒருவகனத் தன் நண்பனோ கிளைஞனோ புகழலாம். அது இயற்கையே. ஆனால் எவனொருவன் தன் பகைவனாலும் புகழப்படுகிறானோ, அவனே சிறந்தவன். முற்கூறிய தினும்பற்குறிப்பிட்ட புகழ்தான் சிறந்தது. இன்னும் அழகில்சிறந்தவன் மன்மதன். அவனழகையும் குறைக்கும் பேரழகன்முருகன். அள்ளிக் கொள்ளும் பேரழகன் இவன் என்பதை இவன் நாமங்களுள் ஒன்றாகிய குமாரன் என்பதே குறிக்கும். மாரன் = மன்மதனை, கு = குறைப்பவன். மாரன் கருநிறத்தோன். முருகன் செந்நிறத்தோன். செவ்வேள் என்பதைக் காண்க. இறந்தவன் மன்மதன். என்றும் அழியா தவன் முருகன். ஆதலின் கோடிக் கணக்கான மன்மதர்களுடைய அழகுகள் எல்லாம் ஒன்றாய்த் திரண்டு உருப்பெற்றாலும் முருகப் பிரான் திருவடி எழிலுக்கு ஆற்றாதன்றோ!

"ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின வெனினும் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில்
தூயநல் லெழிலுக் காற்றாது என்றிடில் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்! "

அடுத்தது இளமை. நமக்கு, இளமை குறிப்பிட்டசில வருடங்கள் தான் நிலைத்திருக்கக் கூடியது. ஆனால்,முருகனோ என்றும் இளையவன். நமது நக்கீரனாரும்,

குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர் தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய்"

என்று அப்பெருமானை விளித்தார். பின், மணம். நாம் தற்காலத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் பல வாசனைத் திரவி மையங்களை உபயோகித்து, கேவலம் செயற்கை மணமுண்டாக்கிக் கொள்கின்றோம். முருகனுக்கோ இயற்கையிலேயே தெய்வீக மணமுண்டு. அடுத்ததாக முருகனின் தோற்றத்தைச் சற்று நோக்குவோம். வேலேந்திய செவ்வேள் மயில் வாகனத்தின் மீது எழுந்தருளுவதை நக்கீரர் திருமுருகாற்றுப்படை துவக்கத்திலேயே,

"உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாங்கு"
என்று விளங்க வைத்திருக்கின்றார். நீலநிறமுள்ள கடலினின்று செங்கதிர்களைப் பரப்பிக்கொண்டு கதிரவன் எழுவதை ஒருவாறு ஒக்கும், ஆடும் பரிமேல் அறுமுகவன் காட்சி. குமரகுருபர ஸ்வாமிகளும் சோதி இளம்பரிதி நூறாயிரங் கோடி போல வளந்தரு தெய்வீக வடிவும்'' என்றார். நம்மனதைக் கவரத்தக்க ஓர் உருவத்தைப் பொதுவாக நோக்கியபின், அவயவம் அவயவமாக முகத்தினின்றும் கால்வரை நோக்குகின்றோ மல்லவா? அதேபோல் உள்ளங்கவர் கள்வனாகிய நம் முருகனுருவத்தையும் சற்றுப்பார்ப்போம். முருகனுக்கு இன்னொரு பெயர் ஷண்முகன். இதற்குப் பொருள் ஆறுமுகங்களுடையவன் என்பது. ஒருமுகம் சிவத்தைக் குறிக்கும். இரண்டாவது சக்தியைக்குறிக்கும். மற்றைய நான்கும் முறையே முகில் வண்ணனையும், நான்முகனையும், ஐங்கரக்தோனையும், கதிரவனையும் குறிப்பன. சிலர் சிவத்தையே பூஜிப்பர். சிலர் விநாயகபூஜை மட்டும் செய்வர். ஆனால் நம் அறுமுகவனை வழிபடும் அன்பர், அனைவரையும் தொழுதவராவர். முருகன் சமஷ்டித் தெய்வம். ஆறுமுகம் எனற்கு எங்கும் உள்ளவன் என்பதே பொருள் என்பர் சிலர். பெருந்திக்குகள் கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கே உள்ளன. அவற்றுடன் மேல், கீழ் என்ற இரு இடங்களும் காணக் கிடக்கின்றன. ஆதலின் இவ்வாறிடங்களிலும் நிறைந்தவன ஆறுமுகன். நம் வடிவம் போன்ற தன்று அவனுருவம். நாம இருக்க இடம் விரும்புகின்றோம். அவனுக்கு அங்ஙனம் இடம் வேண்டியதில்லை. 'ஐந்து முகத்தோடு அதோ முகமுந் தந்து" என்றார் குமரகுருபரர். ஆறாவதாகியமுகம் கீழ் நோக்கிய முகம். அதோ முகம் எனப்படும். அம்முகத்தை அறிந்தோர் நல்ல ஞானிகளே. உதாமணமாக சாதாரண அறிவுள்ள ஒருவனை, தரையின் மீதுவைத்துள்ள ஒரு பெட்டிக்கு எத்தனை பக்கங்கள் உள்ளனஎன்றால் ஐந்து என்றே சொல்வான். சிந்தனை உள்ளவனுக்குத்தான் மறைந்திருக்கும் ஆறாவது பக்கம் நினைவுக்கு வரும். "அறிஞராயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டான்" என்றார் ஒரு பெரியாரும்.

ஆறுமுகக் கடவுளின் ஆறு முகங்களும் எவ்வகையான பணிகளை இயற்றுகின்றன என்பதை நம் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறியுள்ளார். ஒரு முகம் அஞ்ஞானமாகிய இருளைப் போக்குதற் பொருட்டு சூரியனைப் போன்ற தன் முகத்தினின்றும் கதிரொளி பரப்புகின்றது. இன்னொன்று, தன் மெய்யன்பர்கள் வேண்டும் வரங் கொடுக்கின்றது. மற்றொன்று அந்தணர்கள் செய்யும் வேள்விகளை ஏற்றுக் கொள்ளும். இவையல்லாது இன்னும் பல நற்செய்கைகளைச் செய்து திங்கள் போல விளங்கும். ஐந்தாவதுமுகம் ஆறாவது முகம் வள்ளியம்மையொடு நகை புரியும்.இவ்வாறு முகங்களும் எழில் நிறைந்தன வல்லாமல் கருணைசொரியும் தன்மையுமுள்ளன. ''மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி.........'' என்றார் ஒரு பெரியார். அம் முகங்களை நோக்கியதுமே அவைகளினின்றும் முகில்மழை பெய்கின்றது போன்று கருணை பொழிவதை நோக்கினார். தாரகனுடன் ஷண்முகப் பெருமான் போர்புரியும் போது முந்நான்காகும் விழிகளினருளைத் தாருகன் கண்டனன். கொடிய பகைஞனையும் கருணையுடன் அவ்விழிகள் நோக்கினவென்றால், அவ்விழிகளின் கருணைக்கு எல்லையுண்டோ?

"அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலக முய்ய"

முருகனின் முகக் கருணையினை முடியக் கூறுவார் எவர்?முகம் போலவே கைகளும் கருணை நிரம்பியன.

கைகளுக்கு அடுத்தாற் போலுள்ளன கால்கள். நம்பெருமானுடைய திருவடிகள் அப்பரமனை நிமிடந்தோறும் மனத்திருத்தித் தொழும் அன்பர்களுக்குப் பரசுகத்தைத்தருவன. இன்னும், "முருக, அறுமுக, குமர, சரணம்புகுந்தேன்''  என்று மொழி குழற அழுது தொழுது உருகும் தொண்டர்களுக்கு அஞ்சலளிக்கும் அருள் பெற்றன. அவனடிகள் பிறந்திறந்து பிறக்கும் மானிடர்க்குத்தன்னை அடைந்தபோது பிறவிக் கடலைக் கடப்பதற்குக்கலனாக உதவி செய்யும் தன்மையன. கலிவெண்பாவில்,குமரகுருபரர் நம்பிரானது திருவடி, லக்ஷணத்தைக் கூறுங்கால் "யான் எனது என்றற்ற இடமே திருவடியாக" என்றார்! அகங்கார மமகாமங்கள் நம்மிடத்தில் இருக்கும்வரை அவன் திருவடிகளைக் காண இயலாது. "ஆணவமலம் முற்றும் அழிவது மிக்க கடினம். பெருங்காயம் வைத்திருக்கும் ஒரு பெட்டியினின்று அப்பெருங்காயத்தை நீக்கியபிறகும் அவ்வாசனை சிறிது அப்பெட்டியில் இருப்பது போல்,ஆணவ மலம் நம்மைவிட்டுப் பிரிவது எளிதல்ல. ஆயினும் அம்மலத்தினின்றும் நாம் விடுபட்ட பின்பே பரமன் பாதகமலங்களைப் பார்க்க இயலும். வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்டி நீ யாதருள் செய்தாய் யானும் அதுவேவேண்டினேன், எனக்கென்று ஒன்றும் இல்லை எல்லாம்நின்னதே'' என்று கூறி அகங்கார மமகாரங்களை முற்றும் நீக்கிய பின் தான் முருகன் திருவடித் தாமரைகளைக் காணப்பெறலாம். இச்சந்தர்ப்பத்தில் நமக்கு ஓர்உண்மை நினைவுக்கு வரலாம். அதாவது, கடவுளை எவ்வுருவத்தில் வழிபட்டோரும் அக்கடவுளின் திருவடிகள் மூலமாகவே ஞானம் பெற்றிருக்கின்றனர். உதாரணமாக நம்மணிவாசகப் பெருமானும், தேன் போன்ற தம் திருவாசகத்தில், சிறப்பாக இம்மாதத்திற்குரிய திருவெம்பாவையில்,கடைசிச் செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் சிவபெருமானின் திருவடிகளையே சிறப்பித்துப் பாடியிருக்கின்றார்.

"போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றியெல்லா வுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல்லா வுயிர்க்கும் ஈறும் இணையடிகள்
போற்றிமால் நான் முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்க
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்"

இதுவரை முருகப்பிரானது தோற்றத்தை ஒருவாறு நோக்கினோம். அவனைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள்இருந்தாலும் போதா.
“மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்திலனே அந்த நான்ழகனே ''
என்றார் அருணகிரிநாதர்.

இனி, அவனை நினைக்கும் பொழுதே நமக்கு நினைவுக்குவரும் ஆடும்பரி, வேல், அணிசேவல் முதலியனவற்றைக் கவனிப்போம். முருகனை நினைக்கும் பொழுதே அவன் ஏறிவரும் மயில் வாகனம் நம் எண்ணத்தில் தோன்றுகிறது. உடனே அவன் கையில் பிடித்திருக்கும் வேலையும் சேவற்கொடியையும் நினைக்கின்றோம். இம்மூன்றனுள் வேலே மிகவும் முக்கியமானது. வேல் ஞானத்தைக் குறிக்கும். அது இலை வடிவமானது. ஆனால் பிரகாசமுமுள்ளது. இதைநக்கீரனார் ''சுடரிலை நெடுவேல்' என்று அழகாக விளக்குகின்றார். சுடராகிய இலை வடிவத்தையுடையது வேல் என்றார். இனி அதன் மகிமையைப் பார்ப்போம்.

“தோகைமேல் உலவும் கந்தன் சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை''  

என்றார் ஒரு பெரியார். தமிழில் பொதுவாக வெல்லுதலைச்செய்வது வேல் என்பர்.. அஞ்ஞானப் பகையை வெல்லவேலினும் மிக்க தொன்றில்லை. போக்குதற்குரிய நிலையில் நம்பால் உள்ளன பலவற்றில் பகை ஒன்று. பகைவரிலும்நண்பரைப் போன்று நடித்து நெஞ்சகத்தில் கொஞ்சமும் நல்லெண்ணமின்றிப் பகையெண்ணமே மிகுந்தவர் தான் மிகக்கொடியவர். இத்தகைய பகைவன் தான் அஞ்ஞானம். நாம்என்றோ அன்றே அவனும். இத்தகைய அஞ்ஞானப்பகையை வெல்ல வேலி னும் மிக்க தொன்றில்லை. இவ்வேல்தனிச் சிறப்புடையது. மற்றைய படைகளைப்போல்உடம்பை அழிக்காமல் உயிருள் கலந்து உயிரையும் மயக்கும்பெரும்பகையாகிய அறியாமையை அழித்து ஞானந் தரும்.ஞானம் ஒவ்வொருவருக்கும் மிக வேண்டிய தொன்றாம்.இல்லையேல் ஆணவ இருட் குழம்பில் அவதியே படல்வேண்டும். ஞான வருகை, அஞ்ஞான நீக்கம். இன்னும்,வேல் எவ்வகைத் துன்பங்களையும் நீக்கவல்லது.

“பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன்
இசைக்கு உருகி வரைக்குகையை இடித்து வழிகாணும்"

ஒருவரன்றி ஆயிரவர் துன்பத்தை ஒரே காலத்தில் போக்கிய சிறப்பு வேலுக்கு உண்டு என்பதை இவ்வடிகள் விளக்குகின்றன. துன்பத்தை நீக்கி இன்பந்தரவல்லது வேல். இன்னும் வழித்துணையாகும் வேல்.

"தனித்துவழி நடக்கும் என திடத்தும் ஒரு வலத்தும்
இருபுறத்தும் அருகடுத்து இரவுபகல் துணைய தாகும்"

ஒப்பற்ற துணையாகும் வேல். முடிவாகக் கூறும் ஒப்பற்றதுணை மனைவி, மக்கள், உற்றார் உறவினரன்றி முருகன் வேலும் அதனை ஏந்திய கையுமாகும். 

“சூலம் பிடித்து எமபாசம் சுழற்றித் தொடர்ந்து வரும்
காலன் தனக்கு ஒருகாலு மஞ்சேன் கடல்மீ தெழுந்த
ஆலங்குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே"

எமபயத்தை அகற்றவல்லது வேல். ஏனைய துன்பங்களைக்காட்டிலும் இறக்கும் தருவாயில், இறுதியில் நேரும் யமன்தொந்தரையையே பெருந் துன்பமாகக் கருதுவோம் நாம்.அத்தகைய கொடிய துன்பத்தையும் அகற்றவல்லது வேல்.வேலைப் பற்றிப் பல பேசலாம். அது வினையைப் போக்குது “வினையோட விடும் கதிர்வேல் மறவேன்" என்றுள்ளது அநுபூதியில். அன்பர்களை நீதியில் நடத்தும், இங்ஙனம் பல செய்யும் சீர்மையுடையது இவ்வேல்.

அடுத்த படியாக உள்ளன மயிலும் சேவலும். சூரசம்ஹாரத்தின் பின் சூரனுடைய இரு உயிர்களுள் சூரன் என்ற உயிர் மயிலாகவும் பதுமன் என்ற இன்னொன்று சேவவாகவும் ஆயின. ஒன்று வாகன மாயிற்று. இன்னொன்று கொடியாயிற்று. ஒன்றை மட்டும் தாழ்த்தி இன்னொன்றுக்கு மட்டும் உயர்வு கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழு மாயின் அதற்கும் காரணம் உண்டு.

எவரொருவரை எடுத்துக் கொண்ட போதிலும் அவரிடம் சில நல்ல குணங்களும் சில தீய குணங்களும் காணலாமேயன்றி, எவரேனும் முற்றும் நல்லவராக அல்லது முற்றும் தீயவராக நாம் பார்ப்பதேயில்லை. எவர்க்கும் இவ்விரு குணங்களும் அமைந்திருக்கும். ஆனால் ஒன்று மிகுந்து, இன்னொன்று குறைந்திருக்கலாம் .அதேபோல் புராணத்திலும், நல்ல குணம், சத்துவ குணம் செந்நிறச் சேவலைச் சுட்டும். தீய குணம், அசத்துவ குணம் கருநிற மயிலைச் சுட்டும். சேவல் வெளிச்சத்தை விரும்பும். காலையில் கதிரவன் புறப்படும்போது கூ. வி உலகத்தை எழுபபும். மயிலோ இருளை விரும்பும் தன்மையது. கருநிறமுகிலைக் கண்டதும் தோகை விரித்தாடும். ஆதலின் சத்துவகுணம் உயர்த்தப்பட்டது. அசத்துவ குணம் தாழ்த்தப்பட்டது. இவ்விரண்டையும் பிரித்தது வேல், ஞானம். அருணகிரி நாதர் பெருமானும் அம்முறையிலேயே “ஆடும்பரி, வேல், அணி சேவல்'' என்று வேலை நடுவில் அமைதிதார்.
     
இனி, முருகனின் இன்னும் பல பெருமைகளைக் கவனிப்போம். முருகனின் அன்பர்கள், முருகனையே எண்ணத்தில் எப்போதும் வைத்துள்ளோர்கள், எல்லோரும் பயப்படும்மரணபயம் ஒழிவார்கள், எமனிடம் அதிகாரம் பேசுவார்கள். கந்தரலங்காரத்திலுள்ள இரண்டு செய்யுட்களைப் பார்ப்போம்.  

பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண்ட லாதுவிடேன் வெய்ய சூரனைப் போய்
முட்டிப் பொருத செவ்வேற் பெருமான் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்பட்டா சத்திவாள் எந்தன் கையது வே"

காலனை 'அடா' என்று கூப்பிடுதற்கும் அவர்களுக்கு உரிமை யுண்டு.

“தண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி யுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய வென் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்துபார் சற்று என்கைக் கெட்டவே''

இது பாட்டாகக் காணப்படவில்லை. சண்டையில் கோபமோடு பேசுகின்ற பேச்சாகவே அமைந்திருக்கின்றது.

எமனுக்கு மட்டுமல்ல, நாள் நக்ஷத்திரம் முதலியன வற்றுக்கும் அஞ்சார் முருகனின் மெய்யன்பர்.

“நாளென் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"

நிற்க. முருகன் குறைந்த அறிவிலே போகத்தையும் நிறைந்த அறிவிலே வீட்டையும் தருகின்றான். இரண்டை'யும் ஒருவனே தருகின்றான். நடுநிலைமையிலிருப்பவள் தாய். அவள் பிறந்த குழந்தைக்குப் பால் தருகின்றாள். அவளே வளர்ந்த இளைஞனுக்குச் சற்று கடினமாகச் செரிக்கத் தக்க பலகாரங்கள் தருகின்றாள்: அவ்வாறே நடுநிலைமையில் எப்போதுமிருக்கும் இறைவன் அவரவர் தகுதிக்கேற்ப வேண்டியவற்றை உதவுகின்றான். அவன் தரும் எவ்வொன்றும் பேரின்பத்தையே குறிக்கோளாகக்கொண்டு விளங்குகின்றது. நிறைந்ததும் சுத்தமான துமாக இருப்பதுபேரின்பமே. போகத்தையும் வீட்டையும் உதவும் வள்ளல் அவன் ஒருவனே. அவன் ஒருவனே சிவன் முதலாகிய ஆறுருவங்களையும் கொண்டவன். அவனொருவனே ஆறுமதங்களுக்கும் தலைவனாக வீற்றிருக்கின்றான். இவ்வுண்மைக்கு இருப்பிடமாக ஆறுமுகன் ஆறுமுகங்களும் இருக்கின்றன. “யான் ஒருவனே ஆறு சமயங்கள் தொறும் எழுந்தருளுகின்றேன். யான் ஒருவனே அங்கங்கிருந்து என்னை வணங்கும் அன்பருக்கு முத்தி தருகின்றேன்" என்று கூறுகின்றான்.

“ஆறு சமயந்தொறும் வேறு வேறின்றி யான் ஒருவனே
அங்கங்கிருந்து அன்பருக்கு முத்திதரு வித்தென்று
யாவர்க்கும் அறிவித்த வதன மணியே''

என்பது சந்நிதி முறை. முருகன் சமஷ்டித் தெய்வம். தனியாகப் பார்க்கும்போது சிவன் முதலிய வேறுபாடுகள்தோன்றும். போகமாகிய தானத்தையும் ஞானமாகிய தர்மத்தையும் உயிர்த் தொகைகளுக்கு அருளுகின்றன அவன்கரம். மேற் கூறியதில் வதனமணி முத்தியை யாருக்குத்தருவான் என்று நோக்குங்கால் அவன் இன்ன தேசத்துப்பிறந்தானிலன்; இன்ன குலத்தில் பிறந்தானிலன்; இன்னகாலத்து வாழ்ந்தவனிலன்; இன்ன ஆசிரமத்தைக் கைக்கொண்டவனிலன் என்றெல்லாம் நோக்காது யாரே யாயினும் அன்பு செய்வார்க்கு வீட்டின்பத்தைத் தருகின்றான்.அவன் நம்மிடம் எதிர் பார்ப்பது இவ்வன்பு ஒன்றே,வேறேதுமில்லை. நாம் ஒவ்வொருவரும் அன்பை வளர்த்தல் வேண்டும். நம் உற்றார், உறவினர், நண்பர்வரை மட்டும் நிறுத்திவிடாது ஏனைய உயிர்களிடத்தும் அன்பு செலுத்தல் வேண்டும். அன்பு செலுத்துவதைத் தொண்டின் மூலமாய்த்தான் காண்பித்தல் வேண்டும். அன்பு தொண்டின்வழிப்படாவிடில் அது அன்பாகாது. முருகனிடத்திலுள்ள அன்பை அவனுக்கே தொண்டு செய்து காண்பித்தல் வேண்டும் என்ற அவசியமில்லை. அவன் குழவிகளாகிய ஏனைய உயிர்களுக்குத் தொண்டு செய்தலே சாலும் தன்னுயிரைப் போல் மன்னுயிரைப் பார்ப்பது போன்ற தொண்டு கிடை யாது. முருகனுக்குக் தொண்டு செய்வார் முக்கரணங்களா லும் செய்யலாம். மனம், வாக்குக் காயங்கள் மயிலேறும் வள்ளி நாதன்பால் சென்றபோதே பெருமையுடையன .ஆனால் கடவுள் தொண்டுடன் உயிர்த் தொண்டும் செய்தல்வேண்டும். நம் அன்பு மேலும் மேலும் பரவி, இறவாதஇன்ப அன்பாக மாறுதல் வேண்டும். நம் காரைக்காலம்மையாரும் எம்பெருமானிடத்து அத்தகைய அன்பையே வேண்டினார்கள்.

"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க"
என்றார்

அன்பு, சிவஞான போதத்தில் சொல்லியிருப்பது போல் மலிந்தும் இருத்தல் வேண்டும். அயரா அன்பாகவும்இருக்க வேண்டும்.

நிற்க, முருகன் தனக்குப் பெருந்தீமை செய்தவனாயினும் அவன் அன்பனாயின் அருள் செய்குவான், திட்டினும் மகிழ்கின்றான். ஏன்? 'நம்மை ஆதாரமாகக் கொண்டு தானே திட்டுகின்றான் என்பது அவன் எண்ணம். முருகன் தயவுக்கு அளவேயில்லை. அன்பர்களிடத்தில் தானே செல்வான். அவர் அறியாது 'நீ யார்' என்றால் தன்னையும் அறிவிப்பான், 'நின் துன்பத்தைக் களை தற்கே வந்தேன். விரைவில் உன் துன்பங்கள் நீங்கும்' என ஆறுதல் கூறுவான். பிறர்துன்புறச் சகியான்.

“நோவ வுரையான் எம்மை நோவக்கண் பார்த்திடான்
சாவ நினையான் தளர விடான் - பாவனைய
சொல்லாய்க் குறத்தி இணைபிரியாப் போரூரன்
நல்வாய்ப்பு அரையன் நெஞ்சே நாடு''

முருகனுடைய பெருமையை அளந்தறிதற்கு எல்லை, வரம்பு கிடையது.

“ஞானந் தானுருவாகிய நாயக னியல்பை
யானு நீயுமாய் இசைத்து மென்றால் அஃதெளிதோ !
மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதும்
தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந் தலைமை"

என்பது போல் அவனே அவன் பெருமையை முற்றும் உணர்ந்திலன் என்றால் என் போன்ற அறிவிலும் அநுபவத்திலும் மிகச் சிறியவர்க்கு எடுத்துக் கூறுதல் முடியுமோ?

தொடர்ந்து வரும் சொல்விருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நீங்களனைவரும், இதுவரை, இச்சிறிய சொற்பொழிவை மிகப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்ததற்காக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகின்றேன். 

சித்தாந்தம் – 1943 ௵ - மே, ஜுன் ௴


No comments:

Post a Comment