Sunday, May 10, 2020



ஸ்ரீ பர்வதம்.

Ruskin (ரஸ்கின்) எனும் பெரியோர் எனக்குச் சொல்லியிருக்கிறார், ஆல்ப்ஸ் (the Alps) என்னும் மலையுச்சியை அடைந்தபோதெல்லாம் அவர் தோத்திரம் பண்ணுவதாக. அந்த உன்னத காட்சிகளில் சந்தடியில்லாத ஒரு மூலையிலுட்கார்ந்து முழங்காலிட்டுத்துதிப்பர். கடவுளை அவரது சிருஷ்டிப் பொருளாகிய ஆல்ப்ஸ் மலையைப் புகழ்ந்து அவரைத்துதிப்பர்.''
     
ஓங்கி விளங்கா நின்ற கடவுளுக்கு மிக உயரமான மலைச்சி கரங்களிலும் வெகு கம்பீரமான குன்றுகளின் மேலும் வழிபாட்டிற்காக கோயில்கள் கட்டுவதான நம்மவருள் பரவியிருக்கும் கோட்பாட்டை மேற்குறித்த அரியவாக்கியம் தெளிவாக விளக்குகிறது. இக்குன்றுகள் எவ்வளவு அணுக ஒண்ணாதவையாயும் ஏறுவதற்கு கஷ்டமாயும் இருக்கின்றனவோ அவ்வளவு மகிமை அதிகமுள்ளதாக ஜனங்கள் கொண்டாடுகிறார்கள். இந்த யாத்திரைகளில் அதிக மெய்வருத்தம், உழைப்பு, பொறுமை, பணச்செலவு முதலியன உண்டாகக் காண்கின்றோம். வைராக்கிய மிகுந்த பக்தி இவர்களைத் தூண்டாவிடின் இக்குணங்கள் வெளித்தோன்றாது.. பூமியின் கம்பீரமான காட்சிகளும் மனதை வசீகரிக்கும். இத்தகைய குன்றுகளை அடைகிறபோது காணப்படும் உயர்ச்சியும், மனப்பற்றுவீக்கமும், புனிதமும் அழகும், பயமும் சொல்ல முடியாது, ஆயினும் வித்வான்கள் இமாலயம், பிளாங்க்மலையில் (Mount Blanc) காணப்படும் சூரியோதய சூரியாஸ்தமனங்களைப் பற்றி வர்ணித்துள்ளார்கள். அத்த கையகாட்சிகளைக் கண்ணுறும் பொழுது ஒவ்வொருவரும் உள்ளன் பினாலே

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற்பனை முலை மடந்தை
பாதியே, பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
            பங்கயத் தயனுமாலறியா - நீதியே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே''
 
என்று கதற வேண்டியதே.
 
சிவலிங்கடானது அதன் உற்பத்தியில் உள்ளபடியே மலைச்சிகரமேயாகும். ஜியூஸ் (Jews) ரோமதேசத்தார் ஆகிய இவர்களுள்ளும் மலைச்சிரங்களில் கடவுளைவழி படும்வழக்க முள்ளது மோஸஸ் என்பவருக்கு இடியும் மின்னலும் கூடிய மேகங்களோடு கடவுள் மலைச்சிரங்களின் மீது அக்கினி உருவமாகத் தோன்றினர். இது கிரீசன் கபர்டின் என்று கூறப்படும் சிவபெருமானின் உண்மை லக்ஷணமே. இந்தியாவிலுள்ள உன்னத சிகரங்களில் தொன்று தொட்டு சிவபெருமானையும் பார்வதி தேவியாரையும் இமயமலை, விந்தகிரி, மேற்குத் தொடர்ச்சிமலை நடுத் தொடர்ச்சிமலை, கிழக்குத் தொடர்ச்சிமலை மைநாக முதலியவைகளில் பூஜித்துவந்தார்கள். இவைகளெல்லாவற்றுள்ளும் கைலையங்கரி மிகப் புண்ணியகிரி. அப்பர்சுவாமிகளும் கைலையங்கிரியை பூமியின் மீது காணாது போய்விட்டாரெனின், இக்கைலையங்கிரி மண்ணுருவமானதல்ல என்றும், மனிதன் தன் உயர்ந்த நிலைக்குரிய புத்தி விசேடம், ஒழுக்க விசேடம், ஆன்ம விசேடம் அடைந்து இவன் பெருமையைக் காட்டும் அகங்காரத்தை ஒழித்தபிறகு, எஞ்ஞான்றும் நிலைதலான தெளிவும், அழகும், ஆனந்தமும் கூடிய பேரின்ப வீட்டைச் சத்தியமாய் அடைவன் என்றும் துணியலாம். ஆயினும் சிலர் இப்பேரின்ப வீட்டை இக்குன்று அச்சிகரம் அம்மலை என்றும் குறிப்பாக யாழ்ப்பாணத்துள்ள மைனாகமலையையும், திரசிரபுரத்துள்ள பாறையையும், காளத்திமலையையும், ஸ்ரீ பர்வதத்தையும், இமயமலையையும் காட்டுகிறார்கள். இதன் கருத்து வருமாறு, தீடீரென மனிதன் பரமசாம்பிராஜ்ஜியத்தை அடையமுடியாது. தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறவேண்டும்; படிப்படியாய் உணரவேண்டும்; ஒவ்வொருபடியையும் அந்த நிலையில் யாவையினும் விசேடமுள்ளதாக மதிக்கவேண்டும். இதுவரையும் அடைந்தபடி நிலைகளைக் கண்டிக்காமலும், இவைகள் எல்லாவற்றுள்ளும் உயர்ந்தோங்கும் ராஜபடியை அடையும் வரையும் மேன்மேல் அடையவேண்டியபடிகளாகிய (சாதனங்களை) சதாநோக்கியே செல்ல வேண்டும்.
   
இக்குன்று ஆலயங்களுள் ஸ்ரீசைலம், ஸ்ரீபர்வதம், ஸ்ரீ மல்லிகார்ச்சுனம், மஹாநந்தி என்று வழங்கும் குன்றே மிகச்சிறந்தது. இதன் அருமையை, பர்வதம் எனும் சிறப்பாக அமைந் தபெயரே புலப்படுத்தும். அதன் பெருந்தோற்றத்தாலிப் பெ யர் எய்தியது. மற்றமலைகளுக்கு வேறு வேறு பெயர்கள் உண்டு தென்னாட்டினுள்ள குன்றுகளைவிட இதை அடைவதற்கு பெ ரும் பிரயாசை உண்டு. மிகக் கம்பீரமான காட்சிகளையும் காட்டுகிறது. இம்மஹாசந்நிதானத்தை கட்டுவதிலும் அணிபெறச் செய்வதிலும் பூர்வீகராஜக்களும் ஜனங்களும் தங்கள் கஷ்டத்தையும் பொருளையும் செலுத்தினார்கள். அவர்கள் சந்ததியார்கள் இச்சிறந்த ஆலயம் கிலமாய்ப் போவதை தற்காலம் கவனிக்கிறதில்லை. சாதரணமாய் தென் நாட்டார்க்கு சைவசமயாசாரியர்களாவது ஆள்வார்களாவது சென்ற ஆலயங்களே மகிமையுள்ளனவாம். ஸ்ரீசைலம் அப்பர் சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரத்தில் பாடப்பெற்றது. இந்த ஸ்தலம் ஸ்ரீ பருப்பதம் என்று அழைக்கப்படும் அவர்கள் பாசுரங்களில். ஸ்ரீ பர்வதம் என்பது ஸ்ரீ பருப்பதம் என்று தமிழ்ல் வழங்கியது. இந்த ஸ்தலத்திற்கு ஆண்டு சுற்றுப்பக்கங்களில் இன்னும் ஸ்ரீ சைலம் மல்லிகார்ச்சுனம் என்பதைவிட இப்பெயரே வழங்குகிறது.

இனி இத்தலயாத்திரையைப் பற்றி கூறுதும். எம். எஸ். எம். ஆர் ரெயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தியால் அடைந்து அங்கிருந்து 28 மைலிலுள்ள ஆத்மகூர் என்னும் ஊருக்கு வண்டியிற் செல்லவேண்டும். சாலை வெகு தூரம் கேவலமாயிருக்கும். வண்டிக்காரர்கள் பெரியசாலையை இதற்காக பத்து மைல் தூரம் விட்டு விட்டு நாட்டு வழிகளில் ஓட்டுவார்கள். ஆத்மகூர் ஒரு சிறியஊர். டிப்டிதாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபீசுகளும், லோகல் பண்டு ஆஸ்பத்திரியும் அதில் உண்டு. இங்கிருந்து நாகலுடி என்னும் மலையடிவாரம் வரையில் 12 - மைல் உள்ளது. இச்சாலையும் வெகு கேவலமானது. நாகலுடியில் இயற்கையமைப்பு வெகு சுகமாயிருக்கிறது. அடர்ந்ததோப்புகள் சூழ்ந்துள்ளன. ரிஷபத்தின் வாயிலிருந்து ஜலம் விழுகின்ற அழகானதும் குளிர்ச்சியுள்ளதும் ஆன ஒரு அருவி உள்ளது இங்கே சிவபெருமானுக்கும் வீரபத்திரேஸ்வரர்க்கும் ஒருசிறிய ஆலயம் உண்டு. நாகலுடியிலிருந்து மலை ஏறவேண்டும். இரண்டு மூன்று மைலுக்குச் செங்குத்தாயிருக்கிறது. இவ்வளவு தூரத்திற்கும் சுட்டியுள்ள படிகளாலே இக்கஷ்டம் நேரிடுகிறது. இரண்டு மூன்று குன்றுகளைக்கடந்தறகு வழிசுமாராக இருக்கும். பெத்த செருவுக்குப்போனதும் சுற்றிலும் குன்றுகளால் சூழப்பட்ட ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. பெத்த செருவில் அன்றைய தினம் தங்கலாம். அதன் தூரம் சுமார் 16 மைல். அழகியகுளம் ஒன்றிங்கே உள்ளது. உயர்ந்து வளரும் முங்கில் சூழ்ந்துள்ளதால் இது வெகு அழகாக யிருக்கிறது. குளத்தில் அழகான வெண்டாமரையும் அல்லியும் பாசியும் உள்ளன. இவைகளின் வாசனையால் ஜலம் ருசியாய் உள்ளது.
   
மறுநாட்காலை பிரயாணம் ஆரம்பிக்கலாம். கொஞ்ச தூரம் சென்ற பிறகு வழி கஷ்டமில்லாதபோதிலும் அநேகசிறு குன்றுகளைத் தாண்ட வேண்டியிருத்தலால் கரடுமுரடாயிருக்கிறது. பீமனி கொல்லம் என்னும் இடம் சமீபத்தபோது ஒரு ஆழமான பள்ளம் சுற்றிலுமுள்ள குன்றுகளினின்றும் ஸ்ரீபர்வதத்தைப் பிரிக் கின்றது. இதில் இறங்குவதும் பிறகு ஏறுவதும் கஷ்டமாக இருக்கின்றது. மேலிருந்து உள்ளே நோக்கினாலும் காட்சி அழகாயுள்ளது. இப்பாறைகளை இப்பள்ளம் வெகு ஆழமாக்குகிறது பாறைகளின் பக்கங்கள் செங்குத்தாயும் நேராகவும் கருமையா யும் இருத்தலால் கோட்டைச்சுவரை ஒத்தன. பள்ளத்தின் நடுப்பாகம் பலகை வடிவாயுள்ளது. மணலல்ல. சிறுகற்களுமல்ல. பீமனிகொல்லம் என்னும் இந்த அடிவாரத்திலிருந்து கைலையங் கிரியெனும் மலையை ஏற ஆரம்பம். ஏற ஏற அணியணியாய்க் குன்றுகள் தோன்றுகின்றன. தூரத்தேயுள்ள முடிகளும் அவை மீதுள்ள மரங்களும் கோயில் விமானத்தையும் அதன் கலசங்க ளையும் ஒத்தன. ஆவுடையார் மீதுள்ள சிவலிங்கம் போன்ற அரியகாட்சியும் ஓரிடத்தே தோன்றும். அஃது பரமேஸ்வரன் பெரிய சிகரம் ஒன்றும் பார்வதியெனும் சிறு சிகரமும் மத்தி யிலுள்ளது. அதன் முன்பாக மேஜைவடி வான ஒருபாறை யுள்ளது, இக்காட்சியை  நாம் சிற்பி ஓர்படம்பிடித்துச் சிவபார்வதி என்று பேரிட்டால் சிவலிங்கரூபமாய் விளங்கும் இதுபோன்ற காட்சி இதற்கு உற்பத்திபோலும் பிறகு மேல் மேல் ஏற வேண்டியது. உழைப்பும் வருத்தமும் அதிகமாகத் தோன்றும், கடைசியாய் கைலாயவாயற்படி யெனும் "கைலாச வாக்கிலி'' என்னும் உச்சியை அடையலாம். இதுவரையும் நடந்த இளைப்பை இங்கே வீசும் சுகமான காற்று ஆற்றும். ஒய்வும் இன்பமும் ஆன உணர்ச்சி உண்டாகிறது. இவ்வுலகத்தில் நாமனு பவிக்கும் இன்பத்தில் அதனை அனுபவித்தற்கு உண்டாகும் கஷ்டமில்லாவிடின் பாதி இன்பம் உண்மையாய் இலதாகும். கைலாசவாயிற்படியிலிருந்து செல்லுவோமாயின் ஆலயத்தின் தோற்றம் ஒரு சிறிது புலப்படும். ஆலயம் கைலையங்கிரியின் ஒரு பள்ளத்திலமைந்துள்ளது. கிருஷ்ணாந்தியாலும் பெரிய பள்ள பூமிகளாலும் கைலையங்கிரி எல்லாப்பக்கத்திலும் சூழப்பெற்றுள்ள தினாலும் அது பீமனிகொல்லத் தண்டை அருவி கிருஷ்ணாந்தியிற் சேருகிறபடியாலும் வருகிறபடியாலும் செங்குத்தாயும் அணுக ஒண்ணாததாயும் உள்ளது. அதன் ஸ்தானமும் மத்தியிலுள்ளது. அங்கிருந்து அப்புறம் ஊருக்குவர 30, 40 மைல் செல்லும்.

ஆலயம் மாத்திரம் கருங்கல் மதிலாற் சூழ்ந்துள்ளது. மதிலின் நீளம் 1500 அடி, அகலம் மதில் 1000 அடி, உயரம் 21 அடி, கனம் 4 அடி. மதில்களின் வெளிப்புறமுழுதும் தெய்வம், மனிதர் மிருகம் இவைகளின் உருவங்கள் அமைந்துள்ளன. நானாவித வேட்டைகளும், குதிரைகளும், யானைகளும் புராண திருவோலக்கமும் பலவிதமான நிலையோடு தவஞ்செய்யும் ரிஷிகளும் பயங்கரமான மிருகங்களும், நகர்வனவும், மல்ல யுத்தக்காரர்களும் மதில்களிற் காணப்படுகின்றன. இதனால் இவ்வுருவமைத்த ஜாதியார்கள் போர்த்தொழில் புரிவோராயும் ஆண்மைத்தனம் உடையவராயும் காணப்படுகிறார்கள். மூன்று கோபுரங்கள் உள்ளன. அவைகளுள் உயர்ந்ததை தென்னிந்தியாவிலுள்ள மிக உயர்ந்த கோபுரத்தோடு ஒப்பிடலாம்.
    
உள்ளே சென்றுழி மூன்று பாகமாகப் பிரிந்துள்ளது. பக்கங்களில் கணக்கிலாத மண்டபங்களும் விக்கிரகங்களில்லாமலும் ஜீரண திசையிலும் உள்ள சிறு கோயில்களும் உள்ளன. மேலே ஸ்தூபிகள் விளங்க அநேக கிணறுகள் உண்டு. அவையே வரும் பிரயாணிகளுக்கு ஜலாதாரம். பெரும்பாலும் உலர்ந்தும் கொஞ்சம் ஜலமுடையதுமாய் இருக்கின்றன. நடுவிலேயுள்ளது மல்லி கேஸ்வரராலயம். அது விலையுயர்ந்த கட்டிடம் உடையது. தென்னிந்தியாவிலுள்ள வேறு எந்த ஸ்தலத்தைப்பார்க்கிலும் இதன் முக்கிய விமானம் சிகரம் முதல் அடிவரையில் தங்கத்தகட்டால் அமைந்தது. விமானத்திற்கு எதிரிலுள்ள மண்டப மேல்நிலையில் நந்தி, தக்ஷிணாமூர்த்தி விக்கிரகங்கள் பொன்மயமாய் விளங்குகின்றன. பண்டைக் காலத்தில் இவ்விக்கிரகங்களுக்குள்ளே அளவற்ற திரவியம் இருந்ததென்றும் ரோஹில்லா என்னும் கொள்ளைக்காரர்கள் இவ்வாலயத்தைக் கொள்ளையிட்டபோது இப்போ துள்ளவிக்கிரகங்களைப் பின்னமாக்கினரென்றும் கூறுகின்றார்கள். இவ்வாலயக் கட்டிடம் தென் தேசத்துள்ள சோழர் பாண்டியர் கட்டிடமாதிரி போலில்லை. ஆயினும் இவைகளுக்கும் கடலோரத்திருக்கும் மஹாமலைபுரம் (மஹாபலிபுரம் எனத் திரிந்தது) கோயில் கட்டிடத்திற்கும் அற்புதமான ஒற்றுமை உண்டு, மஹா மலைபுரத்தில் வழங்கும் சரித்திரத்தால் ஸ்ரீ சைலத்திலிருந்து பூஜாரிகள் அங்கே கொண்டுவரப் பட்டார்களென்று தெரிகிறது. இதனால் ஸ்ரீ சைல கோயிலின் புராதனம் ஏற்படுகின்றது. கட்டிடம் சாலுக்யமாதிரியுள்ளது. காஞ்சிபுரம் பழைய கைலாசநாதர் ஆலயமும், மஹாபலிபுரம் ஆலயங்களும் சாலுக்யமாஜவம்சத்தாரால் தாங்கள் இவ்வூர்களை ஆண்ட காலத்திற் கட்டப்பட்டது. எல்லோரா (Ellora) என்னும் கைலாயகிரியிலுள்ள ஒரே பாறையி லிருந்து உண்டாக்கப்பட்ட கோயிலுமவர்கள் கட்டியதே. இப்பழையசந்த தியாகிய ராஜாக்களுடைய மதவைராக்கியமும் பக்தியும் எழுத ஏட்டிலடங்காவாயினும் தற்கால இதிகாச மாணவர் இவர்களைப்பற்றி ஒரு சிறிதும் உணர்ந்திலர்.
   
ஸ்ரீ பார்வதிகோயில் தற்காலம் சிறியதாய் உள்ளது. பழைய விக்கிரகத்தைக் கொள்ளையடித்தார்களென்றும் அல்லது பின்னப் படுத்தினார்களென்றும் தற்காலஸ்தானம் வேறொன்றும் காணப்படுகின்றது. முக்கியமான அம்மன் கோயிலில் பிரம்மரம்பா எனும்தேவி இருக்கிறது. அத்தேவிக்கு சித்திரை மாதத்தில் பெரிய உற்சவம் நடக்கிறது. அதில் ஆடுமாடுகளையும் பலி கொடுக்கிறார்கள். உண்மையில் இது காளியேயாகும். மற்றைய கோயில்கள் திறந்திருக்கும் போதும் இரவில் இதை கொஞ்சநேரம் கழித்து மூடி விடுகிறார்கள். இக்கோயில் தனித்து உள்ளது. ஆகவே கோயில் புஷ்பகிரி மடத்தார் வசம்வந்த பிறகு இவ்விக்கிரகம் பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும். ஸ்ரீ பார்வதிவிக்கிரகம் காணாமற்போய் விட்டபோது அதற்குப்பதிலாக கோயிலுக்கு வெளியேயிருந்த இதை ஒருவேளை பிரதிஷ்டை பண்ணியிருக்கலாம். எங்ஙனமாயினும் இக்கோயிலின் முக்கியமான வழிபாட்டோடு இந்த பிரம்மரம்பா என்பதையும் வழிபடு தலைச்சேர்த்தல் கூடாது. ஸ்ரீ காஞ்சியில் காணப்படுவது போலவே, இவ்வம்மன் கோயில் பூஜாரிகள் ஸ்மார்த்தர்கள். சுவாமி கோயில் பூஜாரிகள் குருக்களாயுள்ளவர்கள். அத்திமரம் ஸ்தலவிருக்ஷம். அது வெகுகாலங் கண்டது. உயர்ந்த கோபுரத்தினும் உயர்ந்திருக்கிறது. அதன் அடிவாரம் சுற்று 55 அடிக்குமேல் உள்ளது. அதனீழலில் யோகிகளும் சன்னியாசிகளும் தங்குகிறார்கள். இதுபோல பழையமரம் வேறெங்கும் காணுதற்கரியது. இவ்வாலயத்திலும் இந்தப்பக்கங்களிலுள்ள மற்ற ஆலயங்களிலும் சுதந்தரம் உண்டு. அதாவது ஒவ்வொரு நற்சாதி இந்தியனும் தானே ஆலயபூஜை செய்யலாம். தற்காலம் வடதே சத்திலிருப்பது போல் இவ்வழக்கம் ஒருகாலத்தில் தென் தேசத்திலுமுள்ளது. நம்முடைய கைகளால் எவ்வளவு நேரமாயினும் இஷ்டம்போல் பூஜை அபிஷேகம் அர்ச்சனை, தேவார திருவாசக பாராயணத்துடன் செய்யலாம். இம்மாதிரியான பூஜைகளில் ஆன்மவிசேடம் அடைய அவாவுதற்குமுன் தன்னை மறந்தவராய் தெளிவு பிறந்து சித்த சமாதானங்கொண்டு பயபத்தி யோடுங் கூடிய மனமும் யாக்கையும் உடையராக வேண்டும், நல்லமலைத் தொடர்ச்சியை யூடுருவிச் செல்லும் கிருஷ்ணாநதி இங்கு சென்று ஸ்நானஞ்செய்தல் மிகப்புண்ணிய மென்று கொள்கிறார்கள். மிகவும் செங்குத்து. ஆழ்ந்து இறங்கவேண்டும். அடி வாரத்தில் சுத்தநீல நிறமாயும் தெளிவாயும் உள்ளது பாதாளகங்கை அல்லது நீலகங்கை என்னும் கிருஷ்ணை. இங்குள்ள இயற்கை காட்சி சலவைக்குன்றுகளண்டை ஓடும் நறுமதை நதியின் காட்சியைப் போன்றது. பெத்த செருவுக்கும் கைலையங்கிரிக்கும் 15 மைல் தூரம். கைலையங்கிரிக்கும் பாதாளகங்கைக்கும் 5 மைல் உள்ளது.

பெரும்பாலும் மலையில் மூங்கில்களும் பலவி தவிலையுயர்ந்த மரங்களும் அடர்ந்துள்ளன. இக்குன்றுகளிலும் காடுநெருங்கிய இடங்களிலும் சொந்தமாய் வசிக்கும் சென்சுகள் (ஏனாதியர்கள்) என்னும் ஜாதியர் இக்காட்டின் விளைபொருள்களை அனுபவிக்கிறார்கள். ஸ்ரீ சைலத்திற்குப் போகும் வழியில் இந்தச் சென்சுகள் ஜாதியார்' கூடங்கள்' எனும் மூன்றிடங்களில் வசிக்கிறார்கள்.
நாகலுடிக்கருகில் ஒன்று. பெத்த செருவுக்கருகே ஒன்று. ஸ்ரீசைலத்திற் கருகே ஒன்று. இந்த வழியாய்ச் செல்லும் யாத்திரை வாசிகளிடமிருந்து ஒருதலைக்கு ஒரு அணாவீதம் வரிவாங்குகிறார்கள். இவ்வனாந்தரத்தில் யாத்திரைவாசிகளையும் அவர்கள் சொத்துக்களையும் காப்பதற்காக இவ்வரி என்று சொல்லுகிறார்கள். அவர்கள் யோக்கியதையைப்பற்றிப் போலீஸ் இன்ஸ்பெக்டரே மெச்சுகிறார். கீழ்நாட்டினுள்ள ஏனைய வாசிகளுக்கும் இக்குன்று வாசிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. லங்கோடு தவிர இவர்கள் வேறு உடுக்கிறதில்லை. பெரியதோர் துணியை மேலே தோள்மேல் வாரிப் போட்டுக்கொள்கிறார்கள். கொண்டமுடிச்சு என்கிற மாதிரியாய் ஒருவிதமாக மயிர்முடி போடுகிறார்கள். மதுரை முதலான இடங்களில் இவ்வித உடுப்பு பழைய சித்திரங்களிற் காணலாம்.
   
இவர்கள் ஒருவாற்றானும் நாகரீகமிலாத பூர்வீகராகார். பழமை நாகரீகமுடைய ஜாதியராய் இருத்தல் வேண்டும். இக்குன்றுகளிலேயே வசித்து வந்த பழக்கத்தால் நாகரீகம் குறைவடைந்தார்கள். ஸ்ரீகள் சுமாரான உடுப்பு உடையவர்கள். குறிஞ்சி நாட்டார்களாதலின் அவர்கள் வழக்கமாயுள்ளது காந்தர்வ விவாகம்.. ஆடவரும் பெண்களும் திரிந்துகொண்டிருக்கும் போது ஒருவருக்கொருவர் பழக்கமுடையராய்த் தாங்களே மனம் ஒன்று படுகிறார்கள். இவர்கள் கலந்து சின்னாட்கழித்துத் தெரிந்த போது சிலரை வரவழைத்து விருந்து செய்து கலியாணத்தைத் தெரிவிக்கிறார்கள் குறிஞ்சிப்பாட்டில் இதைக் காணலாம். சுற்றிலுமுள்ள தேச இயற்கை சௌகரியமாயிருத்தலாலும் ஜனங்களும் மிகக்குறைவாயிருத்தலாலும் போக்குவரவுக்குரிய சுதந்தரம் அதிகமாயுள்ளதாலும் இம்மாதிரியான சாதியாருள் இவ்வித கலியாணமே தேர்தல் சகஜம். நம்முடைய கவிவாணர்களும் நியாயவாதிகளும் இந்த இந்தமாதிரி கலியாணம் இந்த இந்தத் திணைக்குரியது என்று கொள்கிறார்கள். நண்பர் ஸ்ரீ. தி. வீரபத்திரமுதலியாரும் ஏனோ நம்புலவர்கள் மருதநிலத்தில் தாசிகளையும் வேசையர்களையும் மாக்களாக்குகின்ற கட்டாயம் என்று ஆக்சரியப்படுகிறார். ஆயினும் கட்டாயம் என்பது இல்லை. அவர்கள் அபிப்பிராயத்தின்படியும் மருதநிலம் நெல்வயல் நிறைந்துளதாகலின் செல்வமும் ஆடம்பாமும் உண்டாகும், கூடவே நாகரீகமும் பரத்தையர்ப்புணர்தலும் வரும். ஆதலால் நாகரீகமுள்ள நகரங்களைப்பற்றிக் கூறும்போதெல்லாம் இக்காமக் கிழத்தியர் சிறப்பும் உடன் கூறுவதுமரபாக்கொண்டார் ஆயினும் திணை மயக்கம் என்பதற்கும் வேண்டிய அளவு இடங்கொடுக்கிறார்கள்.

மஹாநந்தி என்னும் ஸ்தலத்தில் மகிமையுள்ள தீர்த்தமும் கோயிலும் உண்டு. ஸ்ரீ சைலத்திருந்து திப்பிவரும் யாத்திரை வாசிகள் இதன் வழிபாய்ப் போகின்றார்கள். நந்தியாவிலிருந்து, இது சுமார் 9 மைலுள்ளது.
முக்கியமான விசேஷம் பாதெனில் இத்தீர்த்தத்திலிருந்து சதா ஊற்றுசுரந்து இரண்டு பெரிய கால் வழியாக ஓடுகிறது. ஜலம் கொஞ்சம் உஷ்ணமுள்ள போதிலும் வெகு சுத்தமாயும் தெளிவாயும் உள்ளது. சுத்தப்பளிங்கு போல் இதனிடத்தில் சூரிய கிரணம் பிரதிபிம்பிக்கிறது. தீர்த்தத்தின் அடியில் நீந்தும் போது வானவில்லின் வர்ணங்களைக் காணலாம். 5 அடிசுற்றிலும் ஆழமுள்ளது. ஸ்நானம் பண்ண ஆரம்பித்தால் வெளியே ஏறப்பிரியம் வராது. அடியிலே ஒரு ஊசி இருந்தாலும் தெரியும். ஜலத்தை எவ்வளவு அசுத்தமாக்கினாலும் கூணப்பொழுதில் தெளிந்துவிடும். ஜலத்திலும் அடியிலும் அணுவளவும் அழுக்கில்லை. ஜலத்தில் விழும் இலை முதலியவை அடித்துக்கொண்டு போகப்படுகின்றன. காண்பவர்களும் இதன் காரணம் உணர்ந்திலர். ஆலத்தின் நிலைக்குச் சரியாய் கண்ணை வைத்துப்பார்ப்போமாயின் ஆலத்தின் மேல் கொப்பளிக்கும் காற்று தோன்றுகின்றது. இது அழுந்திக்கிடக்கும் வாயு நீரோடு வெளிப்படுவதே பெரியகுமிழிகளும் கிளம்புகின்றன. ஊற்றின் வேகமும் இந்தக் காற்றும் சேர்ந்து இலை, அழுக்கு முதலி. பவைகளை நீக்கிவிடுகின்றது. கால்வாய் வழியாய்க் கொண்டு போய் விடுகிறது. இவ்வூற்று ஜலம் எவ்வளவோ நிலங்களுக்கு எஞ்ஞான்றும் சாகுபடிக்கு உபயோகமாகிறது. இங்கே நம்புலவர்கள் வர்ணிக்கும் வழக்கத்திற்கு ஒரு உதாரணம். காடும் மலையும் நாடும் சேர்ந்துள்ள காட்சியே திணைமபக்கம். குறிஞ்சியும் முல்லையும் மருதமும் ஒரே இடத்துக் கலந்துள்ளது. இதனாற்றான் இவ்விடம் மிகமனோரம்மியமாயிருக்கிறது.
 
குறிப்பு - ஸ்ரீமான். J.M. நல்லசுவாமி பிள்ளை B.A., B.L., அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதை மொழிபெயர்க்கப்பட்டது.

                      மோ. கந்தசாமி முதலியார்.

சித்தாந்தம் – 1913 ௵ - பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் ௴
            


No comments:

Post a Comment