Saturday, May 9, 2020



பவணந்தியாரும் அவரியற்றிய நூல்களும்.

"சைவசித்தாந்த மகாசமாஜ'' ஸ்தாபகரும், முன்னே சென்னைக் கிறிஸ்டியன் காலேஜில் உயர்வகுப்புத் தமிழ்ப் போதகாசிரியராய் இருந்தவரும், சைவசித்தாந்த மகோபந்தியாசகரும்' ''ஞானசாகரம்'' என்னும் தமிழ்ப் பத்திரிகை, ''ஓரியண்டல் மிஸ்டிக் மைனா'' என்னும் ஆங்கிலப்பத்திரிகை இவைகளின் பத்திரிகாசிரியரும்; "சமரச சன்மார்க்க நிலைய" குருபோதகருமான ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்: -

பவணந்தியார் இயற்றிய நூல்கள் இவைதாம் என்று வரை யறுத்து ஓர் உரை வரைகவென்று செல்வச் சிரஞ்சீவி ஸ்ரீமார். நாகை - வி. கோபாலகிருஷ்ண பிள்ளையும் ஏனைய அன்பர் சிலரும் எம்மை வேண்டிக்கோடலின்; அவர்கள் வேண்டுகோளுக்கு இண ங்கிச் சுருக்கமான ஓர் உரை அதுபற்றி ஈண்டு எழுதுதற்கு ஒருப்பட்டேம். உலக நலங்கருதி உயர்ந்த முயற்சிகள் பலவற்றுள் உறைத்து நிற்கின்றே மாதலின், இவ்வுரையினை விரித்தெழுது தற்கு ஒழிவு காண்கின்றிலேம்; எனினும் இச்சுருக்க வுரைப் பொருள் கொண்டு நிடுநிலை திறம்பாது உண்மை ஈதெனத்தெளிந்து கோடல் இன்னோரன்ன ஆராய்ச்சியில் விழைவுமிக்கு நிற்பார் எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம்.

பவணந்தியாரால் இயற்றப்பட்டனவாக இஞ்ஞான்று வழங்கி வரும் நூல்கள் நன்னூற்பெயர் கொண்ட எழுத்ததிகார சொல்லதிகாரங்களேயாம். இனி இவ்விரண்டு அதிகாரங்களின் வேறாகப் பொருள் யாப்பு அணி அதிகாரங்களும் அவர் இயற்றினரோ அல்லரோ என்பதே ஆராயற்பாற்று. இங்ஙனம் ஒர் ஆராய்ச்சிதோ ற்றுவித்தற்கு ஏதுவாய் நின்றது அந்நன்னூலின் முகத்தே பெய்து வைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பாயிரமேயாம். இப்பாயிரவுரை.க்கண், 'ஐந்திலக்கணங்களையும் எல்லாரும் எளிதிலுணருமா.று ஒரு நூல் செய்து தருகவென்று சீயகங்கன் என்னும் அரசன் வேண்டியதற் கிணங்கிப் பவணந்தி என்பார் 'நன்னூல்' என்னும் பெயரால் ஒரு நூல் வகுத்தனர் என்பது கூறப்பட்டது, இதன் கட்போந்த சீடகங்கன் வேண்டுகோளுரையில் ஐந்து இலக்கணங்களும் இயற்றித்தரல் வேண்டு மென்பது தெளிவுறுத்தப்பட்டாற் போல, அவ்வேண்டுகோளுக்கு இசைந்து அவர் நன்னூல் இயற்றினாரென்னும் உரையில் அவ்வைந்திலக்கணங்களும் அவர் இயற்றினா ரென்பது தெளிவுறுத்துரைக்கப்பட்டிலது. நூல் வரலாறு தெரிக்குஞ் சிறப்புப்பாயிரவுரையாய் எழுந்த இது, தன்னால் நுவலப்படும் நன்னூலின்கட் பகுத்துரைக்கப்பட்ட பொருள்கள் இவ்விவை என்று விளங்க எடுத்துக் கூறுதலே முறையாம். அங்ஙனம் நூற்பொருள்கள் இவையென்பது காட்டுதற்கு உரிய இடத்தே அவறறைக்காட்டாது வாளா நன்னூற்பெயரின் வகுத்த னன்' என்று ஐயுறுதற்கு ஏதுவாய் நெகிழ்ந்துரை கூறிப்போதல் முறையன்றாம். அற்றன்று, முன்னர்ப்போந்த சீயகங்கன் வேண்டு கோளுரைக்கண் ஐந்திலக்கணங்களுஞ் செய்துதரல் வேண்டுமென்பது இனிதெடுத்துக் கூறப்பட்டமையின், பின்னர் அதற்கு ஒருப்பட்டு நன்னூல் இயற்றினாரென்னும் உரைக்கண்ணும் அவ்வைந்தினையும் பெயர்த்து மெடுத்து மொழிதல் வேண்டா கூறலாமெனின்;- “அறியாது கடாயினாய், நுண்மாண் நுழை புலமுடைய கற்றார் ஒருவரது கல்வி மாட்சியினையுணர்ந்தோர், தாம் விரும்பிய நூல் எல்லாம் அவர் செய்துதரல் வேண்டுமென்றே அவரைப் பெரிதும் இரந்துகேட்பர் இஃதியற்கை. மற்று அவர் கேட்டவாறே அக்கற்றார் எவ்வெந்நூல்கள் இயற்றினாரென்பதனை அறிதற்கே எவரும் விழைந்து முந்துவராகவின், அவர் இயற்றின இவ்விவை என்று கிளந்தெடுத்துக் கூறுதலே வரலாறு தெரிப்பார்க்கு இன்றியமையாத கடப்பாடாம். இவ்வியற்கை நிகழ்ச்சி முறையில் வைத்துச், சீயகங்கன் ஐந்திலக்கணங்களுஞ் செய்து தருக வென்று கேட்டதுண்மையாகலாம்; ஆனால், அவன் கேட்டதற் கேற்பப் பவணந்திபர் அவ்வைந்திலக்கணங்களுஞ் செய்து தந்தனரோ, அன்றி அவற்றுட்சில பல குறையவே செய்தனரோ என்று உண்மையறிவு பெற விழைந்து ஆராய்வார்க்கு ஒருதலையால் ஐயஞ் செல்லுமாகலின், அவ்வையம் அறுத்தற்பொருட்டு இவ்விவை செய்தார், அல்லது இவ்வைந்துஞ் செய்தார் எனக் கிளந்தெடுத்துக் கூறுதலே செயற்பாலதாம். அங்கனம் ஐந்துஞ் செய்தார் எனவாதல், எழுத்துஞ் சொல்லுமே செய்தார் எனவாதல் புலப்பட வகுத்துரையாது வறிதே 'நன்னூற் பெயரின் வகுத்தனன்' என மயங்கக்கூறிச்செல்லல் பாயிர முரைப்பார்க்குச் சிறிதும் இயையாத நெறியாம் என்க. தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் உரைத்த ஆசிரியர் பனம்பாரனார் இங்ஙனம் மயங் கவுரைகூறாது,“'எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச், செந் தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு. முந்து நூல்கண்டு முறைப் பட வெண்ணிப், புலந்தொகுத்தோனே போக்கறுபனுவல்'என்று அந்நூல் அதிகரித்த பொருள் இவ்விவை என்பது தெற்றென விளங்க வைத்துரைத்ததூஉங் காண்க.

அற்றேல், நன்னூற்குச் சிறப்புப்பாயிர முரைத்தார் நன்னூ லின்கண் அதிகரிக்கப்பட்ட பொருள் இவ்விவை என்று கிளர்ந்து கூறாது “நன்னூற் பெயரின் வகுத்தனன்''  என்று வாளா கூறியது தான் என்னையெனிற், கூறுதும். நன்னூற்குப் பாயிரம் உரைத்த புலவர், நன்னூலை ஆக்கிய பவணந்தியாரோடு ஒருகால த்திருந்தனராயின் அவர் இயற்றிய நூல்கள் இவ்விவைதாம் என்று நன்கு அறிந்து அவற்றைக்கிளந்து கூறியிருப்பர். மற்று அவர் அவ்வாசிரியர் காலத்திலன்றிப் பிற்காலத்தில் இருந்ததனாற்றான் அவர் செய்த நூல்கள் இவ்விவையென்டு காணமாட்டாராய், அங்ஙனங் காணமாட்டாமையின் துணிபுரை கிளக்க ஏலாது பொதுப்பட வைத்து 'நன்னூற் பெயரின் வகுத்தனன்' என்று கூறுவாராயினர். பவணந்தியார் இயற்றிய எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பிற்காலத்தில் மிக்கு வழங்குதல் கண்டு, அதனைச் சிறப் பித்துப் பாயிரங் கூறுவான் புகுந்த பிற்றை ஞான்றைப் புலவர் ஒருவர், 'சீயகங்கன் ஐந்திலக்கணமுஞ் செய்து தருகவென வேண்டியதற்கு இசைந்து பவணந்தியார் நன்னூல் இயற்றினர்' என்று பலர் பரம்பரை வழக்காகப் பொதுப்பட வழங்கி வருவதனை ஓர்ந்து, அந்நூலில் எழுத்துஞ் சொல்லுமன்றிப் பொருள் யாப்பணி இலக்கணங்கள் இல்லாமையுங் கண்டு, ஐந்திலக்கணங் கேட்ட அரசன் கருத்துப்படி இவர் ஐந்தும் இயற்றினரோ, அன்றி எழுத்துஞ் சொல்லும் மாத்திரமே இயற்றினரோ என ஐயுற்று, அவ்வைபவத்தின் நீங்கித் தெளிதற்குத் தாம் வேறு வழி காணாமையின், தாம் கேட்டபடியே வைத்துத் துணிபுரை கிளவாது, தாங் கொண்ட ஐயம் நுனித்தறிவார்க்கு விளங்கும் வண்ணம் 'நன்னூற் பெயரின் வகுத்தனன்' என்று ஐயப்பொது மொழித் தொடரே கொண்டு அப்பாயிர வுரையினை இபற்றியிட்டார். இனி இவர் பவணதியாரோடு ஒருகாலத் திருந்தனராயின், இங்ஙனம் ஐயுறுதற்கு இடம் பெறாராய், அவர் நன்னூற் பெயரில் இவ்விவ்வதிகாரங்கள் ஆக்கினார் என்று துணிபு தோன்றத் கூறியிருப்பரென்பதூஉங் கடைப்பிடிக்க. எனவே, நன்னூலுக்குச் சிறப்புப்பாயிரம் நுவன்ற புலவர் நன்னூலை ஆக்கிய பவணந்தியார் காலத்திலன்றி அவர்க்குப் பிற்காலத்தே இருந்தனரென்பதும், அவர் தங்காலத்தே நன்னூலில் எழுத்துச் சொல்லையன்றிப் பிற இலக்கணங்களைக் காணாராயினும் 'சீயகங்கன் ஐந்து இலக்கணங்களையுஞ்செய்து தருகவென்று கேட்டதற்கிணங்கிப் பவணந்தியார் நன்னூலை இயற்றினர்' என்னும் பரம்பரை வழக்கைக் கேட்டு ஒருகால் இவர் ஐந்தி லக்கணங்களும் இபற்றினரோ' என ஐயமுற்றன ரென்பதும், அங்கனம் ஐயமுற்றது பற்றியே நன்னூல் இவ்விவ்விலக்கணங்கனை நுதலுவதெனத் தோன்றக்கூறாது பொதுவகையால் வைத்து ஐயவுரையே கூறினரென்பதும் இனிது பெறக்கிடந்தன.

இங்னம் நன்னூலுக்குச் சிறப்புப்பாயிரமாய் எழுந்தவுரையே நன்னூலுள் அதிகரிக்கப்பட்ட பொருள்களிவ்விவை என்று உரையாமல் ஐயுறவுகொண்டு நெகிழ்க் தொழுகுமாயின், இஞ்ஞான்றுள்ள ஒருசிலர் பவணந்தியார் எழுத்துச் சொல்லேயன்றிப் பொருள்யாப்பு அணிகளும் இயற்றினார் எனத்தமக்குத் தோன்றியவாறே பற்றித் துணிந்துரைக்கு முரை வெறும் போலியுரை யாவதன்றி மற்றென்னை?

அற்றன்று, ''ஐந்துந் தருகெனச் சீயாங்கன் வேண்ட நன்னூற்பெயரின் வகுத்தனன்'' என்ற அப்பாயிரவுரையால் அவ்வைந்திலக்கணமும் இயற்றினாரென்பது தானே பெறப்படுவாலெனின் அறியாது கூறினார்; ஐந்துந் தருகெனவேண்டினவனுக்கு அவன் வேண்டியவாறே நன்னூற் பெயரின் ஐந்தும் வகுத்தனன் என்று அப்பாயிரம் கிளந்து ஓதாமையின் அது பெறப்படுதல் யாண்டையதெனக்கூறி மறுக்க. பவணந்தியார் ஐந்திலக்கணமும் இயற்றினார் என்னும் மேற்கோளை வலியுறுத்தற்குச் சீயகங்கள் வேண்டுகோளுரையை ஓர் ஏதுவாகக் கூறுதல் சற்பிரதிபக்கம் என்னும் ஏதுப்போலியாய்த் தருக்க வழுவா மென்று உணர்க. என்னை? ஒருவர் வேண்டிய பொருளெல்லாம் அவர் வேண்டியவாறே செய்து தரு தருதற்குடன்பட்டார் அவற்றைக் கடைபோகச் செய்து முடிக்க. மாட்டுவார் என்னும் நியதமான உடன் நிகழ்ச்சி நிலையாமையுள்ள இந்நிலவுலகத்தின்கண் யாண்டுமின்மையானும், ஒருவர் வேண்யவாறே வேண்டிடப்பட்டார் முற்றுஞ் செய்து முடிக்கும் ஆற்றல் இல்லாராய்ப் போதலும், வேண்டியதற்கு மாறாயின விளைதலும் நாளும் அறியப்பட்ட நிகழ்ச்சியாகலானும் என்க. கிளந்தோதுதற்கு இன்றியமையா இடமாகிய இச்சிறப்புப்பாயிரவுரையுள் அங்ஙனம் ஓதாமையே, அப்பாயிரம் இயற்றினார் நூலாசிரியன் காலத்தவர் அல்ல ரென்பதையும், அதனால் அவர் துணிந்துரை கூறற்கு இசைந்திலரென்பதையும் நிறுவுஞ் சான்றாமென முன்னரே விளக்கிப்போர்தாம்.

இனி, நன்னூலுக்கு அகலவுரை வகுத்த சங்கர நமச்சிவாயப் புலவரும் துணிபு தோன்றக் கூறாது 'போலும்' என்னும் ஐயச் சொற்பெய்து ‘ இந்நூலுட் கூறிய பொருள் யாப் பணிகள் என்னு மூன்றதிகாரங்களும் அக்காலத்துள்ளன போலும்'' என்று ஐயுற்றுக் கூறுதலின், இவ்வையவுரைகொண்டு பவணந்தியார் ஏனை மூன் மதிகாரங்களும் இயற்றினார் எனத்துணிபுரை கூறுவார் கூற்றுச் சங்கர நமச்சிவாயர் கூற்றினும் மிக்கது போலும்!

இனிப் பவணந்தியார் தாம் எடுத்த எழுத்ததிகார சொல்லதி காரங்களை முடித்து, அவற்றின் மேல் வேறு மூன்றிலக்கணங்களும் எழுதுங் கருத்தில்லாமையால், தாம் அவ்விரண்டதிகாரங்களால் முடித்த தமது நூல் முழுவதற்கும் முடிபுரைப் புறனடைச் சூத்திரமாகவைத்த "பழையன கழிதலும்'' என்பதனை, நன்னூலுக்குரை எழுதின சமணவுரைகாரர் பவணந்தியார் ஐந்ததிகாரத் திற்கும் சிங்கநோக்காக இச்சூத்திரத்தை நிறுத்தினார் எனக் கூறி யது சிறிதுங் கொள்ளற் பாலதன்றாம். என்னை? ஆற்றொழுக்காகவும், சிங்கநோக்காகவும், தவளைப்பாய்த்தாகவும், பருந்தின் வீழ்ச்சியாகவும் நிற்கும் நால்வகைச் சூத்திரநிலை ஓர் இயலுள்ளும், ஓர திகாரத்துள்ளும் வருவனவே யல்லாமல், ஓரதிகாரத்திற்கும் பிறிதோர் அதிகாரத்திற்கும் இடையில் ஒரு சிறிதும் வருவன அல்ல வாகலினால் என்க. சீயகங்கன் ஐந்திலக்கணமுஞ் செய்து தருக வென்று கேட்டதே பற்றிப் பவணந்தியார் ஐந்திலக்கணமுஞ் செய்திருப்பார் என்று பிழைபட நம்பி விட்ட அச்சமணவுரைகாரர், தாங்கொண்ட பிழையுணர்ச்சிக்கேற்ப நூலுன் முடிபுரையாய் நின்ற 'பழையனகழிதலும்" என்னும் அச்சூத்திரத்தைப் பொருத்துவான் புகுந்து இடர்ப்பட்டுச், சூத்திர நிலைகளுக்கு ஓதிய இலக்கணவரம்பையுங் கடந்து, அதனை ஐந்ததிகாரங்களுக்குஞ் சிங்கநோக்காய் நின்றபுறனடைச் சூத்திரமென்றுரை கூறி இழுக்கினார். ஆகவே, தருக்க முறையறியாது பிழைபட மயங்கிய இச்சமணவுரைகாரர் உரையைப் பற்றுக்கோடாகப் பற்றி எழுந்தவர் அது முறிபட்டு வீழ்ந்து தாமும் இழுக்குறுவரென்றுணர்க.

இனிப் பெரிய தனிமொழித் தனியனுரைகாரரும் சீயகங்கன் ஐந்திலக்கணங்களுஞ் செய்து தருக என்றவுரையையே ஓர் ஏதுவாக்சொண்டு பவணந்தியார் ஐந்துஞ் செய்திருப்பரெனப் பிழைபடநம்பிக் கூறிய பின்னோராதலின், அவருரையுங் கொள்ளற்பாற்றன்றாதல் சிடுதறிவுடையார்க்கும் விளங்கக் கிடந்தது.

பவணந்தியார் எழுத்துச்சொல்லேயன்றிப் பொருள் யாப்பு அணிகளும் இயற்றினரென இவ்வாறெல்லாம் பிழைபட வுணர்ந்த பின்னவர் சிலர் தருக்கத்திற்கு இசையாத வெறும் போலிநம்பிக் கையேப்பற்றி அங்ஙனங் கூறினாரல்லால், ஆகாயத்தாமரைபோல் இலய அம்மூன்றதிகாரங்களி லிருந்து ஒரு சூத்திரமேனும்   எடுத்துக்காட்டிற் றிலராகலின், அவருரைகண்டு உண்மை யறிவு டையோர் சிறிதும் மயங்கார் என்க.

அற்றேல் அஃதாக, சீயகங்கன் ஐந்திலக்கணங்களுஞ் செ ய்து தருக வென்ற வேண்டுகோளுக்கு இயைந்து நூல் செய்வான் புக்க பவணந்தியார் எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் மாத்தி மேசெய்து எனை மூன்று அதிகாரங்களுஞ் செய்யாது விட்டமை தான் என்னை யெனின்; - அது சிறிது விளங்கக்காட்டுதும். முற் காலத்தவர்க்குப் பேரிலக்கணமாய் விளங்கியது தொல்காப்பியம் ஒன்று மேயாம். இந்நூல் ஒன்றே ஐந்திலக்கணங்களையும் முற்ற வெடுத்து முடியக்கூறும் முழுமுதல் இலக்கணமாகும். சொற்பொ ருட்டிட்ப நுட்பங்கள் செறிந்து, எடுக்குந்தோறுங் குறையாத பொருளாழமுடைத்தாய்க், கடல்போல் விரிந்து செல்லும் விழுப்பமும் மிக்கது இந்நூல். பிற்காலத்தவர் அறிவு ஆற்றல் குறைந்து இவ்வரிய பெரிய நூலைத்துவங்கிப் பயிலுதற்கு ஏலாதாகவே, அந் நூலை மிகவருந்திக் கற்றுத் தேறிய சான்றோர் சிலர் அந்நூலினுட்பொருள்களைத் தனித்தனியே எடுத்துப் பின்னவர் எளிதிலுண ருமாறு வேறு வேறு சிற்றிலக்கணங்கள் செய்வாராயினர். இங்ஙனமே அந்நூலின்கட் சொல்லப்பட்ட அகப்பொருளிலக்கணமானது வேறு தனியாக எடுத்து 'இறையனார் அகப்பொருள்' என்னும் பெயராற் சுருக்கமாக இயற்றப்பட்டது; அதன் புறப்பொருளில்க்கணமானது 'புறப்பொருள் வெண்பா மாலை' யிற் சுருக்கமாக எடுத்து விளக்கப்பட்டது; அநன் யாப்பிலக்கணமானது 'யாப்பருங்கலம்'' 'யாப்பருங்கலக்காரிகை'' முதலிய சிற்றிலக்கணங்களில் தெளித்துக் கூறப்பட்டது; அதன் அணி பிலக்கணமானது 'தண்டியலங்காரத்தில் விரித்து விளக்கப்பட்டது. இவ்வாறு அதன்கட் கூறப்பட்ட பொருள்யாப்பு அணிகளை இனிது விளக்குஞ் சிற்றிலக்கணங்கள் பிற்காலத்துச் சான்றோராற் செய்யப்பட்டனவேனும், அதனுளெஞ்சி நின்ற எழுத்திலக்கண செவ்வனே விளக்கும் நூல்கள் அவரால் எழுதப்பட்டில. இதுகண்ட பவணந்திபார் தொல்காப்பியத்தின்கட் போந்த எழுத்துச் சொல்லை மாத்திரம் வேறெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயில்வார் எளிதிலுமாக உணரும்படி விளக்கமாக நன்னூல் இயற்றி, எனைப்பொருள் யாப்பு அணிகளை விளக்குதற்கு 'இறையனா கரப்பொருள்'' “யாப்பருங்கலம்' முதலான ஏனைச் சிறந்த நூல்கள் இருத்தலின், தாமும் அவற்றிற்கு நூல்கள் எழுதல் மிகையாமென்ப துணர்ந்து, அவற்றை இயற்றாது விட்டனர் என்பதே தேற்றமாம் என்க.

சுவாமி வேதாசலசுவாமிகள்.
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴



No comments:

Post a Comment