Sunday, May 10, 2020



வீர சைவம்
தவத்திரு. இராமசாமி அடிகள், பேரூர்,

[பழநியிற் சமாஜ விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.]

அன்புப் பெருமக்களே! தாய் மார்களே! வணக்கம். சிவ நெறியினைப் பல்லாண்டுகளாக வளர்த்து வரும். சமாச ஆண்டு விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விழாவில்'வீர சைவம்'என்ற தலைப்பில் பேசுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். வீர சைவ நெறியினைப் பற்றி எத்தனையோ பெருமக்கள் பேசியுள்ளனர். நூல் வடிவாக எழுதியுள்ளனர். அவற் மின் நுண்பொருள்களெல்லாம் நன்குணர்ந்த பெருமக் கள் பலர் இருக்கின்றனர். இருப்பினும், என்னை இத் தலைப்பில் பேசுமாறு கேட்டுக் கொண்டது, வீரசைவப் பெருநெறியில் வாழ்ந்து செந்தமிழ்ச் சிவ நெறியை உலகுக் கருளிய அருண்மிகு சாந்தலிங்கப் பெருமான் திருவருளைக் குறிக்கொண்டு தான் என்று நம்புகின்றேன்.

வீரசைவம், சைவம் என்ற இன்றைய கொள்கை களின் முடிவில் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. சைவ சித்தாந்தக் கொள்கையையே வீர சைவம் என்ற பெயராலும் குறிப்பிடுகிறோம். முடிவில் சிறு வேறு பாடு உண்டெனச் சிலர் கூறுவர். ஆனால் நன்கு ஆராய்ந்து உணர்பவர்க்கு அது வேறுபாடாகத் தோன்றாது. சைவம் என்ற பெயர் இருக்க 'வீர சைவம்' எனப் பெயர் வருவானேன்? என ஆராயாமல் இருக்க முடியாது.

இப்பெயர் அக்கொள்கையுடையவர்களால் வைத்துக் கொள்ளப்பட்டதா? மற்றோரால் இடப்பட்டதா? என்பதையும் உணர வேண்டும் வலிமையுடைய கொள்கையின் காரணமாக இப்பெயர் கொள்ளப்பட்டிருக்கிறது. வழிபாடு முதவில் அகத்தில் மலர்ந்து புறத்தேயும் கொள்ளப்பட்டது எனலாம். விரும்பிய இறை வடிவை எண்ணிய பெரியோர்கள், அவ்வடிவினை வழிபடுவதற்கான புறத் தொண்டுகளையும் மேற்கொண்டனர் மனத்தகத்தானாகிய இறைவனைப் பொருள் சேர் புகழ்ச் சொற்களாலே போற்றினர்.

அவ்வடிவினையே புறத்துக் கொண்டும் வழிபட்டனர் என்று கொள்ளலாம். அவ்வாறு அகவழிபாட்டில் முதிர்ந்த காட்சியையே புறத்தும் கொண்டு வழிபடுவதற்காக அமைந்த வடிவங்கள் பல. அம்முறையில் நாம், நமது, சிவ வழிபாட்டை இலிங்க உருவமாக வைத்துப் போற்றுகிறோம். இதன் கோட்பாட்டை நீங்கள் அறிவீர்கள். அருவுருவத் திருமேனியாகக் கருதும் இலிங்க வழிபாடு பண்டையது என்பதற்குரிய சான்றுகள் பல. உலக நாடுகளில் பல பகுதிகளிலும் சிவலிங்கங்கள் உள்ளன என்பதை வரலாறு கூறுகின்றது. புதையுண்ட பண்டைய பகுதிகளிலும் இவ்வழி பாட்டுண்மை வெளிப்படுவதை அறிகிறோம்,

இவ்வாறு எல்லோரும் வழிபட அமைத்துக் கொண்ட இடங்களே திருக்கோயில்கள். அன்றியும் சிறப்பாகத் தமது உயிர்ப்பாக, உள்ளும், புறம்பும் வழிபடு முறையில் சிவ பூசைகளைத் தனித்தனி மேற் கொண்ட முறைமையும் காண்கிறோம். இதனை ஆன்மார்த்தம் அல்லது உயிர்க்குறுதி எனக் கொள்ளுகிறோம். இவ்வழிபாட்டில் தான் வீரசைவம், சைவம் என்ற இரு பாகுபாடுகள் தோன்று கின்றன. தத்தம் முறைக்கேற்ப ஒவ்வொன்றும் சிறந்தது எனக் கொள்ளுகின்றனர் அன்பர்கள். உயிர்க் குறுதியாகக் கொள்ளப்படும் இவ்வழி பாட்டில் வீர சைவ நெறி உறுதியானது.

வீரசைவ நெறி, காயமே கோயிலாக இறைவனை ஏற்றுக் கொள்ளுகிறது. இறைவன் நம் வழிபாட்டை ஏற்று அருள்புரிய நுண் வடிவில் மனத்தகத்தானாக இருக்கிறான். பரு அங்கத்தில் தங்குபவனாகவும் இருக்கின்றான் என்பதை வலியுறுத்துகிறது இந்நெறி இத்தகைய வீரசைவ நெறி இமய முதல், ஈழம் வரை பரவியிருக்கிறது. வடநாட்டில் உள்ள இமயத்தில் சிறந்தவழிபாட்டுத் தலமாக விளங்கும்கேதாரம் வீரசைவப் பீடத்தில் ஒன்றாய்ப் பேசப்படுகிறது. இன்றும் அக்கோயில் ஆட்சிப் பொறுப்பு அப்பீடத்திற்கே உரியது எனக் கூறுகின்றனர். மற்றும் காசியில் ஒரு பீடமும், அதன் கிளையாக நேபாளப் பீடமும் அமைந்துள்ளன. அதுவன்றி உச்சயினி, சீசைலம், அரம்பாபுரி ஆகிய இடங்களிலும் வீரசைவப் பீடங்கள் உள்ளன. ஈழத்தில் சிலர் வழிபாடு ஆற்றும் தொண்டில் ஈடுபட்டிருப்பதையும் அறிந்தேன்.

வீரசைவ நூல்களில், இந்நெறி வேதகாலத்திற்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது எனவும், இறைவனால் அருளிய ஆகமங்களில் முதலாகவிளங்கும் காமிகாகமத்தில் இந்நெறி உயர்ந்ததாகக் கூறப்படுகிறது எனவும் கூறியுள்ளனர். மேலும், வடநாட்டுப் பீடங்கள் போலத் தமிழ்நாட்டுத் திருமடங்களும் பழைமையானதாக விளங்குகின்றன. வழிபாட்டு நெறியிலும், நூல்களின் குறிப்புகளிலும், இது பழைமையானது எனக் கொள்ளப்படுகின்றது. அன்றியும் பழைமையான பல திருவுருவங்களில் சிவலிங்கம் முடியிலுள்ளதாக அமைத்திருப்பதும், இது பழைமையான வலிவுடைய, கொள்கை யென்பதை விளக்குகிறது.

வடமொழி நூல்களில் காமிகாகமம், வாதுளாகமம், வீராகமம் முதலான நூல்களில் இதன் பெருமை பேசப்படுகிறது என்பதையும்; நீலகண்ட சிவாச்சாரியார் பதி பண்டிதர் - ஆகியோர் இயற்றிய பேருரைகளும் (பாடியங் களும்) இதனைச் சிறப்பித்து உறுதிப்படுத்தியுள்ளன என்பதையும் அறிகின்றோம். இதனை நமது கற்பனைக் களஞ்சியம் ஆகிய சிவப்பிரகாச அடிகளார் தாம் இயற்றிய சித்தாந்த சிகாமணியில்,

ஏகனுற்றருள் காமிகமே முதல்
ஆக மத்திலறைந்திடு முத்தர
பாக முற்றும் பகர்வீர சைவமாம்
கோக மற்றுயர் தொன்மதந் தோன்றுமால்''  எனக் கூறுகின்றார்.
வீரசிங்காதன புராணத்தில்,

''வாதுளா கமத்தின் உத்தரத்துறு தந்திரோக்த வண் பிரதிட்டை மருவும்
ஆதியாஞ் சிவசித்தாந்த தந்திரத்தும் அதர்வண வேத மத்தியினும்
நீதியாம் அநாதிவீர சைவத்தின் நிலையினைத் தொகுத் தான் நிகரின்றி
ஓதிடும் பரம ரகசியமாக உரைத்தனன் உமையவள் தனக்கே

என்பதனாலும் அவ்வுண்மைகளை உணருகின்றோம்.

மேலும் பண்டைய திருவுருவங்களின் முடியில் சிவலிங்கம் அமைத்திருப்பதும் வீரசைவத்தின் பழமைக்குச் சான்றாக உள்ளது. பண்டரி நாதராகிய  'விடோபாவின்' முடியில் சிவலிங்கம் இருக்கிறது. இதனைத் துக்காராம் தமது பாடலில் தெரிவித்துள்ளார். பாசி பட்டினத்திலுள்ள 'பகவந்தன்' என்னும் திருமால் முடியிலும், சொண்டூர் குமாரசாமி 'குட்டாபுரம் 'தானம்மை' யாதிய திருவுருவங்களின் முடியிலும் நமது தமிழகத்தில் மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் 'திருமுடியிலும் இன்னும் பல உருவங்களின் முடியிலும், சிவலிங்கம் இருப்பதை அறிகின்றோம். இவற்றால் இதன் பழைமை நமக்குப் புலனாகிறது.

நமது தமிழகத்தின் திருமடங்களில் மிகச் சிறந்த அருளாளர்கள் இந்த நெறியை மேற் கொண்டு வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள். மயிலம் பொம்மபுர ஆதீனம் காலத்தால் மூத்ததாகச் சிறந்து விளங்குவதும், பழைய தாகிய சாரங்க தேவர் மடம் குடந்தையில் இருப்பதும் தமிழகத்தின் வீரசைவ சமய வளர்ச்சிக்தச் சான்றாக விளங்குகின்றன

மயிலம் திருமடத்தின் பழமையையும், அதன் சீடர்களாக வாழ்ந்த அருந்தவர்களின் நிலைமையையும் நாம் அறியும் போது, சித்தாந்த சிவநெறியே வீரசைவ நெறி எனத் திகழ்கின்ற தென்பது புலனாகும். மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் மாணவர் ஆக விளங்கியவர் நமது செந்தமிழ்ச்சிவப் பிரகாச அடிகளார். அவர் சைவ சித்தாந்தச் செந்நெறியையும், திருமுறை நெறியையும் எவ்வாறு மேற்கொண்டு இருந்தார்கள் என்பதை 'நால்வர் நான்மணி மாலையும், பிற பாக்களும் அறிவிக்கின்றன. அதேபோல் தமிழ் மொழியில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன.

வீரசைவ நெறி பண்டைய தமிழ்ப் பண்புகளுடன் விளங்குகிறது என்பதை அறிவதற்கு முன், இடைக்காலத்தின் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். திருவாவடு துறையாதீனத்தின் சிறந்த அருளாளர் ஆகிய துறையூர்ச் சிவப்பிரகாச அடிகளார் தில்லைக் கூத்தன் வழிபாடு முட்டின்றி நடைபெற வேண்டி வீரசைவக் கொள்கையை மேற்கொண்டார் என்ற வர லாறு, உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரது மாணவராக அருண் மிகு சாந்தலிங்க அடிகளார் அவர்களும், அவர்களது மாணவராகக் கன்னடநாட்டு வேந்தராக விளங்கிய குமார தேவரும், அவரது மாணவராக முருகன் திருவாசகம் என்று சொல்லும் திருப்போரூர்ச் சந்நிதி முறையை அருளிய சிதம்பர சுவாமிகளும் விளங்கி, வீரசைவ நெறியை முப்பொருள் உண்மை நெறியாம் சித்தாந்த நெறியாக வளர்த்துள்ளனர் என்பதை அறிகிறோம். அவர் கள் வாழ்ந்து வழிகாட்டிய நிலையங்களாகப் பேரூர் திரு முதுகுன்றம் திருப்போரூர் திருமடங்கள் விளங்குகின்றன. இன்றும் தில்லையில் மௌன சுவாமிகள் மடம், அம்பலத் தாடி மடம் போன்ற திருமடங்களும் அங்கங்கே வீரசைவச் செந்நெறி வளர்ச்சிக்குத் துணைபுரிவதாக இருந்து வருகின்றன.

வீரசைவ நெறி, குரு இலிங்கம் சங்கமம் ஆகிய மூன் றினையும் பேணுதலாகிய கொள்கையினை மிகச்சிறந்த தெனக் கொள்ளுகிறது. கொலை வேள்வியை வெறுக்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன்'என்னும் உயரிய கொள் கையினைக் கடைப் பிடிப்பதே சிவநெறி. பண்டைய வழி பாடுகள் இவ்வுண்மையை வலியுறுத்தி அன்பும், அருளும் பூண்ட கொள்கையையே சமயக் கொள்கையாகக் கொண்டு விளங்கின.

இறைவன் "புல்லிலை எருக்க மாயினும் வேண்டா'' என்பவன் அல்லன். நல்லனவற்றை மன்பதைக் கருளி அல்லதை எல்லாம் தான் கொள்கிறான். வானோரும் மண்ணோரும் உய்ய நஞ்சுண்டும் சாவாத பேரருளாளன் நம்மிறைவன், அன்பும், அருளும் கொண்ட வாழ்க்கையுடைய வள்ளல்களைப் புலவர்கள் வாழ்த்தினர். அவர்கள் வாழ்த்துக்கு உவமை இறைவனது பேரருள் திறனாக விளங்கியது. புறநானூற்றில் ஒளவையார் அதிகமானை "நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே'' என்று வாழ்த்தும் வாழ்த்துரையை நாம் படிக்குந் தோறும் நம் சமயக் கோட்பாடு வளர்ந்திருந்த பெருமையை எண்ணி மகிழ்கிறோம். இத்தகைய அன்பு நெறியாகிய சிவநெறி, பின்னர் எல்லோரும் ஓர் குலம் என்கிற ஒரு ஒருமைப் பாட்டினைப் பிறசமயத் தாக்குதல்களால் மறந்தது. அதனை மீண்டும் வலியுறுத்த 'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்'' என்ற ஒற்றுமைமுழக்கத்தைத் திருமூலர் எழுப்பினார். ஆனால் சாதிப்பித்தினை வளர்க்கும் பிறரது கலப்பால் நம் தமிழ் நெறி அக் கொள்கையை முற்றும் பின் பற்ற முடியாமல் தளர்ந்தது என்றே கருத வேண்டி யிருக்கின்றது.

திருமுறை அருளிய அருளாளர்கள் இச்சாதிக் கொடுமையைப் பார்த்து வருந்தினர். சமயச் செந்நெறியிலும் இப்பேய்புகுந்து கொண்டது என அதைச் சாடினர். இந்தப் பிறவிக் கடலைக் கடப்பதற்குச் சமயச் செந்நெறிதான் வழியாக இருந்தது. ஆனால் அந்நெறி செல்லும் தெப்பர்தை மூழ்கடிக்கும் சுழியாக அமைந்து விட்டன சாதி குலங்கள். அவற்றைக் கடந்து ஏறுவதற்குச் சிவநெறியே துணை செய்தது என்பதனை மாணிக்கவாசகர்.

"சாதி குலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதை குணம் பிறருருவம் யான் என தென் னுரை மாய்த்துக்
கோதில மூதானானைக் குலாவு தில்லை கண்டேனே!  என்று பேசுகிறார்.
இச்சாதி முறை புகுந்து வழிபாட்டுச் செந்நெறியாம் நம் சமயத்தைப் பாழ்படுத்தியது. இதனைக்கண்டு மனம் வருந்திய அப்பரடிகள்.

''சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங் கொண்டென் செய்வீர்
பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே''  என்கிறார்.

'சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள்'எ ன்பதற்கு வெறும் நூலறிவினாலே பயனற்ற நிலையை உருவாக்கும் குழப்பவாதிகளே என்பதுதானே பொருள். அதற்கு மேல் செம்மையுள் நின்று சிவகதி' விளைவதற்காவன செய்யாமல் இருக்கும் தடையையும் எடுத்துக் கூறுவார் போல "கோத்திரமுங் குலமுங் கொண்டென் செய்வீர்'' என்று கூறுவதைக் காண்கிறோம்.

இவ்வாறு பிறரது கொள்கைக் கலப்பால் எழுந்த சாதிக் கோட்பாடுகளைச் சமயத்தினின்றும் அறவே விரட்டும் நெறியாகவே வீரசைவ நெறிவிளங்கியது. ஒன்றே குலம் என்ற கொள்கையில் பற்றிக் கொண்டு, தாம் வழிபடும் உயிர்க்குறுதிப் பொருளாம் இறைவனை அகத்தும் புறத்தும் கொண்டு வாழ்தல் வேண்டும் என்று வற்புறுத்தியது. அவ்வாறு வாழும் நெறியுடையோர், அனைவரும் ஒரே குலத்தினர். அவர்களை வேறாகக் கருதினால் அவர் கள் வழிபடும் இறைவனையும் வேறாகக் கருதினவர்கள் ஆவார்கள் என்பதையே,

சங்கமனுக் கொரு சாதி யுன்னினான்
அங்கையின் அமர் தரும் அரற்கு முன்னினான்''

எனச் சிவப்பிரகாச அடிகள், சித்தாந்த சிகாமணியில் கூறியுள்ளார். வீரசைவ நெறி சாதி பற்றிய எண்ணம் பரவாமல் தடுத்து, எல்லோரையும் ஒன்று படுத்திய நெறி யென்று கூறலாம். ஆனால் இன்று தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இதுவும் சாதிச்சுழலிலிருந்து தப்பவில்லை. தப்பாதது மட்டுமல்ல, அதனுள்ளும் ஒரு தனிச்சாதி என்கின்ற நிலை வளர்ந்து விட்டது. இந்நிலை மாறித்தானாக வேண்டும்.

நமது சைவசித்தாந்த நெறி முப்பொருள் உண்மையை வலியுறுத்துவது. உயிர்க்குயிராய் இருந்து இறைவன் அருள் புரிவதை உணர்த்துவது. கண்ணொளியும், அருக்க னொளியும் போல உயிர்க்கு இறைவன் உணர்த்துகிறான் என்பதை விளக்குகிறது. இதனையே வீரசைவ நெறியும் வற்புறுத்துகிறது. பருப்பொருளாகிய (பூத) உடம்பு, தூயதாதற்பொருட்டு அங்கலிங்கமும், நுண்பொருளாகிய (சூக்கும) உடம்பு தூயதாதற் பொருட்டுப் பிராணலிங் மமும், (சூக்குமம்) சிற்றறிவுடைய உயிர் தூயதாதற் பொருட்டுக் காரணலிங்கமும், (அதிசூக்குமம்) கொண்டு வழிபட வேண்டும். என்பது வீரசைவ நெறி. இவ்வழி பாட்டைத் திருமுறை யாசிரியர்களும் வற்புறுத்து கின்றனர். நமது அப்பரடிகள்,

"காயமே கோயில் ஆகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோமே''

என்று கூறுவதை எண்ணும் போதும், ''உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பும் ஆலயம்'' என்ற திருமூலர் செஞ்சொல்லை நினைக்கும் போதும், உடம்பும் உள்ளமும் இறைவன் எழுந்தருளுதற் கேற்ற இடம் என்பதும், உணர்வு கொண்டு வழிபாடாற்றுதல் வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

மூவகையாக நாம் ஒரு பொருளை நுகருகிறோம் பருப் பொருளாகிய ஒரு பழத்தை உண்கிறோம். அதன் நுண்மையாகிய சுவையை மனத்தில் கொள்ளுகிறோம் அம்பழத்தை யுண்டதினாலும், சுவையை நுகர்ந்ததினாலுப் ஆயபயன் நம்மை அமைதிப் படுத்துகின்றது. இம் மூன்று தன்மையும் வைத்து 'அங்கலிங்கம்' உடம்பிலும், பிராணலிங்கம்' உள்ளத்திலும், காரணலிங்கம் (பாவம்) உணர்விலும் அமைய, அம்மூன்றையும் இறைவனுக்குப் படைக்க வேண்டு மென்று வீரசைவ நெறி வற்புறுத்துகிறது. இதனைப் பிரபுலிங்க லீலையில் சிவப்பிரகாச அடிகளார்,

''அடைந்துள்ள உருச் சுவை அமைதி யென்பன
உடம் பொரு மூன்றினு முற்ற டைந்திடுந்
தொடர்ந் துள வினைவலி தொலைத்து யானெனும்
இடும்பையி லின்பருளிட்ட லிங்கமே''      எனவும்,

சித்தாந்த சிகாமணியில்.

"திரம்பெறு மிலிங்க மூன்று திறத்ததாந் தூலலிங்கம்
பரம் பெறு சூக்குமம்பின் பராற்பர மென்னத் தூலங்
கரம் பெறு மிட்டலிங்கங் கருத்தது சூக்கு மந்தான்
நிரம் புறு மிலிங்கந் தானே நிகழ் பராற் பரமென் றோர்வாய்"

என்றும் தெரிவித்துள்ளார்கள்.

பண்டைய அருளாளர்கள் கொள்கைகள் இம்முறையை ஏற்றுக் கொள்ளுகின்றன. சிவவழிபாடும், அகத்தினில் வழிபடும் பாங்கும் மனந்தூய்மையும், செய்வினைகள் தூய்மையும் ஆகத் துணை செய்கின்றன. இவ்வாறு வழிபாடு சிறப்பதற்கு அடியார் திருக்கூட்டத்தில் இணைந்த வாழ்க்கை வேண்டும் இதனையே  'குருலிங்க சங்கமம்' என்கின்றோம். இத்தகைய நெறியையே வீரசைவம் என்று போற்றுகின்றோம்.

அழுதடியடைந்த அன்பர் ஆகிய மாணிக்கவாசகர், நமது மனமுருக்கும் வாசகந்தந்த பெருந்தகை அவர் தம்மைப் பற்றி,

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்ச நெக்குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவாச கமிங் கொருகால் ஓதின்
கருங்கல் மனமுங் கரைத் துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய
மெய்ம் மயிர் பொடிப்ப விதிர் விதிர்ப் பெய்தி
அன்ப ராகு நரன்றி
மன்பதை உலகின் மற்றைய ரிலரே''

என்று சிவப்பிரகாச அடிகள் கூறுவதை அறிகிறோம். அத்தகைய திருவாசகப் பாடல்கள் நம்மை ஒருவழிப் படுத்துவன. வீரசைவ உண்மையைப் புலப்படுத்துவன போல விளங்குகின்றன.

"முத்திநெறி அறியாத மூர்க்க ரொடு முயல் வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தனெனக் கருளியவா றார் பெறுவார் அச்சோவே''

என்று கூறுவதால், அவனே தானாகின்ற செந்நெறி ஆகிய சிவகதி விளைவினைக் காண்கிறோம்.

இன்னும் இறைவன், இறைவியுடன் நீக்கமற நிற் கிறான். இறைவி, இறைவனை விட்டு நீங்காது இருக் கிறாள். வழிபடும் அன்பரிடத்தில் இருவரும் ஒன்றாய் விளங்குகின் றனர். சத்தியின் அருளே பலவிதமாக நம்மை ஆட்கொள்ளுகிறது. நாம் வழிபடும் திருவுருவ மாக இறைவன் வெளிப்படுதற்கும் சத்தியே காரணம். அன்னையொடு விளங்கும் அண்ணல் மூலபண்டாரம் வழங்கும் முதல்வனாக இருக்கிறான். அத்தகைய அண்ணலை நோக்கி மாணிக்கவாசகர்.

"மையிலங்கு நற் கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்ட பின்மழக்
கையிலங்கு பொற் கிண்ண மென்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யிலங்கு வெண்ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யிலங் கெனைப் புகுத விட்டு நீ
போவதே சொலாய் பொருத்தமாவதே''

என்கிறார். இதே கருத்தை இன்னொரு வகையாகச் சிவப் பிரகாசரும்,
"பூவாய் நெடுங் கோட் டுறு பசுந்தேன்
கைகான் முடங்கு பொறி யிலிதன்
நாவாய் ஒழுகிற்று எனவுலகம்
அளந்த மாலும் நான் முகனுங்
காவாய் என நின் றேத் தெடுப்பத்
தானே வந்தெங் கரதலத்தின்
மேவா வமர்ந்த மாமணியைத்
தொழுது வினைக்கு விடை கொடுப்பாம் "

என்கிறார். மணிவாசகர் கூறுகின்ற,

"வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போது நான் வினைக் கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று ன்னை அறிவித் தென்னை
ஆட் கொண் டெம் பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவறியேன் முதலந்தம் ஆயினானே"

என்னும் பாடலும் இதனை வலியுறுத்துகின்றது.

மேலும் அடியவர் நடுவில் வாழும் வாழ்க்கையை வீர சைவம், தன் நெறியின் சிறந்த கொள்கையாகக் கொள்ளுகிறது என்பதைப் பார்த்தோம். அக்கருத்தை வலியுறுத்தும் பாங்கிலேயே சிவப்பிரகாசர் நால்வர் நான் மணி மாலை, நெஞ்சு விடு தூது போன்றவற்றிலும் நாயன் மார்களது புகழ்களைக் கூறுகின்றார். அத்தகைய அடியாருடன் வாழும் வாழ்க்கையையே.

''உடையாள் உன் தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன் உன்
அடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய் பொன்னம் பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே''

என்பதும், இந்நெறிக்கு அரண் செய்வதாக இருக்கிறது. அன்றியும் இறைவனது திருவருள் நலந்தோய்ந்த மணி வாசகர்,

தந்த துன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்த மொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்ற தொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற் கிலன் ஓர் கைம் மாறே.''

என்று கூறுவதிலிருந்து அகத்தும். புறத்தும் இறைவனைத் தாங்கி வாழும் வீரசைவ நெறியின் கொள்கை சைவசித் தாந்தக் கொள்கையே என்பது வலியுறுத்தப் படுகின்றது இப்படிக்கூறுவதிலிருந்து மாணிக்கவாசகர் இக்கொள்கையினர் என்றோ அல்லர் என்றோ கூறுவதாகிய ஆராய்ச்சிக்கு யான் வரவில்லை. வீரசைவநெறி முப்பொருள் உண்மையை ஒத்துக் கொள்கின்ற, நால்வராதிய பெருமக்கள் கூறுகின்ற கொள்கையை வலியுறுத்துகின்ற, சாதி குலப்பித்தகற்றும் நெறி என்பதை விளக்குவதே ஆகும்.

இந்நெறியினை மேற்கொண்டு செந்தமிழ்ச் சிவநெறி தழைக்க, கருணை (பத்தி), ஈடுபாடு, உறுதி, இன்பம் ஆகிய வற்றை உணருமாறு கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் என்னும் நூல்களை அருளிய, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் சிவ நெறியே சிறந்தது எனக் கொலை மறுத்தலில் வற்புறுத்துகிறார்.

மேலும் தமக்குத் தில்லைப் பெருமான் திருக்காட்சி கிடைத்ததை மீண்டும் பெற வேண்டு மென்று விரும்புகிறார். அதற்காக இறைவனிடம் முறையிடுகிறார் ஒரு நாள் ஆனேற்றில் அம்மையுடன் எளிதாகக் காட்சி தந்த இறைவனே! இன்று நீ வரமாட்டாயா? என்று ஏங்கி நிற்கின்றேன். இரங்க மாட்டாயா?” என்பதை

"பிரானே திருத்தில்லை யுளாயன் றிப் பேதையேன் முன்
ஒரானேறி வர்ந்தம்பிகையோ டெளிதோடி வந்தாய்
வரானோ வினமெம் மிறை யென்றுனை நாடி வாடி
யிரா நாயடியேற் கெதிர் தோன்றிலை யின்றி தென்னே''

என்னும் வைராக்கிய சதகப் பாடலால் அறிகிறோம்.

இவ்வாறு இறைவனைத் திருக்கோயிற் காட்சியிற் காண விழைந்ததுடன், தம் ஆணவ வல்வினையை அகற்றுபவர் என அவரிடத்துத் தம் முறையீட்டைத் தெரிவிக்கிறார். இவ்வாணவம், ஐவர்க் கெதிரே என்னை இழிவு படுத்துகிறது. வினைத் தொகையைப் பெருகச் செய்து, பிறவியில் சேர்ப்பேன் என்கிறது. உனக்காகச் சிவனே, முன் வரினும் அவ்வாண்மையைப் பார்க்கிறேன், எனச் சொல்லுகிறது. அதனை மாற்றுக என்பதை,

"செய்விப்பன் வினைத்தொகை வெம்பவஞ்சேர்ப்பனுன்னை
யுய்விப்பனே லச்சிவனாண்மையு மோர்வ னென்றோர்
ஐவர்க் கெதிரேயெனை நோக்கி மறைந்ததையா
மைவெற் பன ஆணவம் நீயதை மாற்றிடாயோ.''
இத்தகைய எந்தை எனக்குக் குருவாக விளங்குவதுடன், என் அங்கைத் தலத்தும் விளங்குகிறார். அவரை யான் என்னென்று சொல்லுவேன், என அருளுவதை நாம் உணருந்தோறும், நமது முன்னோர்கள் கொண்ட சிவநெறியாகிய அருள் நெறி ஒருமைப் பாடுடையது; வேறு படாதது; உள்ளும், புறம்பும் இறைவனை யெண்ணும் தகையது. அப்பொருள் உருவாயும் அருவாயும் அருவுருவாயும் விளங்கும் இதனை யுணருவதே நமது குறிக்கோள் என்பது தெளிவாகிறது.

இவற்றைச் சாந்தலிங்க அடிகளார்,

விளம்பற்கருஞ் சோதி யென்கோ விடையோ னென்கோ வென்
உளம் புக்க சிவப்பிரகாச னென்கோ வென்னங் கைத்
தளம் பற்றிய சாந்த னென்கோ நின்றனது நாமம்
வளம் பெற்ற திருக்கயிலாய சொல்வா யெனக்கே''

என அருளியுள்ளார்.

அன்புப் பெருமக்களே! இதுகாறும் கூறியவற்றால், வீரசைவநெறி பண்டையது, சித்தாந்த நெறி, இந்திய நாடு முழுவதும் பரவியது என்பதை உணருகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருமுறை நெறியே, வீர சைவ நெறி; சிவநெறியின் உறுதிப் பாடே வீரசைவநெறி. சாதி, குலம் சமயத்தில் புகுதாமல் இருக்க வேண்டுமென்பதே இதன் கொள்கை. இவ்வாறு நாம் வழிபடுவதனால் எய்தும் பயன், யான், எனது என்பதை யறுப்பதே என்பதை யுணருகிறோம். யார், எவ்வடிவத்தில் எவ்வாறு, வழிபட்டாலும் அங்கெல்லாம் இறைவன் வெளிப்படு கிறான். வழிபாட்டின் பயன் வீடுபெறுதல். வீடடைதற்குத் தடையாக இருப்பது, தற்போத மாகிய யான் எனதென்னும் செருக்காகும். அதனை அறுப்பதே உயர் வான நெறி என்பதை,

எம்மதத் தோரெவ் வகை நிட்டை சொல்லினுஞ்
சம்மத மே யெமக் குந்தீ பற
தற்போதம் மாய்க்குமேல் உந்தீ பற"

என்கிறார் சாந்தலிங்க அடிகளார். இதனை நன் குணர்ந்து வாழ்வோமாக!

வளர்க அருள் நெறி - வாழ்க தமிழ்ப் பண்பு

சித்தாந்தம் – 1962 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment