Sunday, May 10, 2020



ஸ்ரீமத் மிருகேந்திரம்.

"கோவிஸேஷஸ்ஸிவாகமே''?
       சிவாகமத்தில் என்ன விசேஷம்?
    
இவ்வரியவினா ஸ்ரீமிருகேந்திராகமத்தில் வந்துளது. பராத்துவாஜபகவான் இந்திரனைக் கேட்கின்றார். அவ்வினாவருஞ் சுலோகம் இது:

வினா - சுலோகம்.
      வேதாந்தலாங்க்யம்ஸதஸத்
பதார்த்தகமதாதிஷு |
ஸஸாதனாமுக்திரஸ்தி
      கோவிஸெஸ்ஸிவாகமே | |
    
இதன்பொருள்: - வேதாந்த சாத்திரங்களிலும், ஸாங்கிய ஆருகத - கணாத - பாதஞ்சல - காபிலாதி மதங்களிலும் சாதனத்தோடு முத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிவாகமத்தில் என்ன விஷேம், என்பதாம்.

விடை சுலோகம்.

ப்ரனேதருஸர்வாவே தித்வாத்
      நஸ்புடோவஸ்துஸங்க்ரஹ: |
      உபாயாஸ்ஸபவாஸ்தவத்
      மைவேஸர்வமிதம்வரம் ||
    
இதன்பொருள்: - வேதாந்தாதி சாத்திரங்களைச் சொன்ன இரணிய கர்ப்ப - கணாத - பதஞ்சல - கபிலாதி தேவரும் ருஷிகளும் (எல்லா முணர்ந்து சொல்லவல்ல) ஸர்வஞ்ஞர்ரல்லாதபடியால், அவர்கள், சொன்ன வஸ்து நிச்சயமும் சாதனமும் பயனும் சுத்தமாயிருக்க (சரியாயிருக்க) நியாயமில்லை. சிவசாத்திரமோ, ஸர்வார்த்த விஷயகஞானக்கிரியா சக்தியுடைய பரமேசுரனாற் சொல்லப்பட்டபடியால், இதிற் சொல்லியவஸ்து நிச்சயம் முதலியவை மேலானவையாயிருக்கும். என்பதாம். (சரியாயிருக்கும் என்றபடி.)

தேவர்களும் ருஷிகளும் மனிதரை நோக்க சர்வஞ்ஞரென் றாலும், ஈசுரனை நோக்க அஸர்வஞ்ஞரேயாவர். ஏனெனில், அவர்கள் ஆன்மாக்களாய் மலசம்பந்தமுற்றிருத்தலாலும், தேவர்கள் நிலைபிரகிருதியந்தமான ஆன்மதத்துவத்துளடங்கி விட்டமையாலும், பிரகிருதிக்கு மேலுள்ள தத்துவவியல்பறியாமாட்டாமையாலும், பிரமவிஷ்ணுவாதி தேவர்களும் அஸர்வஞ்ஞராவரென்க

வேதாந்தம் எனப்படும் உபநிஷத்துக்கள் பூர்வபக்ஷ உபநிஷத்து - சித்தாந்த உபநிஷத்து என இருவிதமாகக் காணப்படுகின்றன. இங்கே வேதாந்தம் என்றது தேகாத்மவாதமுதல் ஏகாத்மவாதமீறாயுள்ள பூர்வபஷீக்கொள்கைகளைப் பிரதிபாதிக்கும் உபநிஷத்துக்களையாம். வேதத்தில் தேகமுதல் ஆன்மபரியந்தமான பொருள்களைப் பரம் - பரம் எனக்கூறிக் கழிக்கும் உபநிஷத்வாக்கியங்களே யிதற்குப் பிரமாணம். வேதம் பூர்வபக்ஷங்களையும் பிரதி பாதிக்கும் என்பது கைவல்லிய நூலார் சம்மதமுமாம்.

     ''பூருவஞ்சித்தாந்தம், காவல்வேதங்க
      ளுரைத்திடும்..................'' 
 என்பது கைவல்லிய நூல் வாக்கியம்.
    
இனி, சிவசாத்திரத்தில் வஸ்து நிச்சயமுதலியவை மேலானவையா யிருக்கும் என்பது எதனாற் பெறப்படும்? என்று வினாவிய பார்த்துவாஜருக்கு உத்தரமளிக்கு முகத்தில், வேதாந்த - சாங்கியாதி மதங்களின் கொள்கைகளையும் முடிபுகளையும் முறையே ஆராய்ந்து (analise) சென்று, அவற்றிலுள்ள யுக்தி - நியாய - அனுபவப் பொருத்தமின்மைகளை விளக்கிப் பூர்வபக்ஷஞ் செய்து, முடிவில் சித்தாந்தவஸ்து நிச்சயமுதலியவற்றைத் தாபித்திருக்கின்றது. இங்கே கவனிக்கத்தக்க பகுதியொன்றுளது. சிவாகமங்களொவ்வொன்றிலும் இங்கனம் மதவாராய்ச்சி செய்து பூர்வபக்ஷம் பண்ணுமுறை முக்கிய பகுதியாய் வந்திருப்பதாகக் காண்கின்றது. இது, சிவாகமங்களின் ஞானபாகங்களில் காணக்கிடக்கும்.. அங்ஙனம் பூர்வபக்ஷம் பண்ணுமியல்பினாலே தான் சிவாகமங்கட்குச் சித்தாந்தம் என்னும் பெயர் வந்திருக்கலாம் போலும்.

சிவாகமங்கள் ஏன்? அவ்வாறு பூர்வபக்ஷம் பண்ணுங்கடமையை வகிக்கவேண்டும், என்று விசாரிக்கையில், அது, ஆன்மாக்களிடத்து வைத்த கருணையினாலாமென விளங்கும். என்னை கன்மபேதங்களும் அவற்றிற்கேற்ப பரிபாகபேதங்களும் சிருட்டியிலமைந்து வருமுண்மையுணர்ந்து, அப்பரிபாக வியல்புக்கேற்பக் கொள்கைகளும் மதங்களுமெழுந்து உண்மைநிலை தெரியாவண்ணம் மயக்கம் (Confusion) செய்யக்கூடுமாதலால், அம்மயக்க நிவர்த்தியின் நிமித்தம் சிவாகமங்களொவ்வொன்றும் மதவாராய்ச்சி செய்து பூர்வபக்ஷம் பண்ணுந்தொழிலை முக்கிய கடமையாவகிக்க நேர்ந்ததெனக்காண்கின்றது. மதவாராய்ச்சி செய்து பூர்வபக்ஷம் பண்ணும் வழியில், முத்திநெறியொன்றுளது என்னும் உணர்ச்சியேயில்லாதார்க்கு அவ்வுணர்ச்சியை யுதிப்பிக்கவும், முத்திநெறி தலைப்பட்டாரில், பரிபாகத்தளவாகக் கீழ்க் கீழ்தத்துவநிலை முத்திநெறிகளிற் பயில் வாரை, மேன் மேல் முத்தி நிலைகளி லுயர்த்தவும், உத்தமபரிபாகிகளா யுள்ளார்க்குக் கீழ்நிலைத் தத்துவமுத்திநெறிகளிற் சாரும்மயக்கம் வாராதிருக்கவும், சத்திநிபாதத்தால் தீவரதரபக்குவமுற்றோரை உண்மை முத்திநெறியில் நேரே செலுத்துதற் பொருட்டுமே, திவ்வியாகமங்கள் அங்ஙனம் ஓயாது மதவாராய்ச்சி செய்து சித்தாந்த முடிபினை நிறுத்துந் தொழிலை, இன்றியமையாப்பெருங்கடனாக வகித்தனவாமெனத் தோன்றுகின்றது. சிவம் ஆன்மவனுக்கிரம் ஒன்றினையே சிந்தித்திருக்கும். அதன் பொருட்டே அது பஞ்சகிருத்தியமும் பணணும், அத்தகைய கருணை மிகுந்த பரமசிவம் ஆகமங்களில் மதவாராய்ச்சி செய்து பூர்வபக்ஷம் பண்ணுமானால், அது சரியாயிருக்கக் கேட்கவும் வேண்டுமோ! அவ்வாராய்ச்சி, வைஷம்மியபுத்தியாற் செய்யப்படுவதொன்றெனக்கருதவும் படுங்கொல்லோ! அது, இரக்கமிகுதியாற்செய்யும் பேருபகார கிருத்தியமேயாமென்க. அப்பரோபகாரச் செயல்வகிக்கச் சிவாகமமொன்றே அருகமுடையதாகும். ஏனெனில், ஏனைமத நூல்களெல்லாம் கீழ் நிலைத் தத்துவங்களின்ளவில் நின்று விட்டமையாலென்க.
    
இனி, பூர்வபக்ஷக்கொள்கைகளும் மதங்களும் எக்காலத்துண்டாயின? எனில், அவை, தத்துவவரிசைகளும், புவனவரிசைகளும், புவனேசுரபதங்களும் என்று உண்டாயினவோ, அன்றேயுண்டாயின வென்று கொள்ள வேண்டும். முப்பத்தாறு தத்துவங்களும் புவனரூபங்களாயிருக்கு மென்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன. புவனங்களுண்டெனில், அவற்றில் போகங்களுமிருக்கும். போக்தாவின்றிப் போகங்களிரா. ஆதலின், அப்புவனபோகங்களையடையும் ஆன்மாக்களுண்டென்னு முண்மைதானே விளங்கும். கன்மபரிபாக பேதத்தால் அந்தந்தத்தத்துவ புவன நிலைகளையடைந்து ஆன்மாக்கள் போகந்துய்க்கையில், அத்தத்துவபுவனங்களே அவ்வான்மாக்கட்கு முத்திகளாகும் என்று ஔபசாரிகமாகச்சாத்திரங்கள் கூறும். யதார்த்தத்தில் அம்முத்திகள் நிஜமுத்தியாகாவாம். அவற்றை “ அபரம் " எனச் சித்தாந்த சாத்திரங்கழிக்கும், அவ்வபாமுத் திகளையடைவித்தற்கு மதங்களுஞ், சாத்திரங்களும், சாதனங்களும் இன்றியமையாது வேண்டப்படுதலால், தத்துவ நிலைகள் ஏற்பட்டவன்றே, பூர்வபக்ஷக் கொள்கைகளும் மதங்களும் உண்டாயிருந்தன, என்னு முண்மை இனிது நாட்டப்படுகின்றது. பூர்வபக்ஷக்கொள்கைகளும் மதங்களும் சிருட்டியில் அடங்கியும் வெளிப்பட்டும் நிலவும். ஆன்மபரிபாக பேதங்கள் முனைக்கும்போது அததற்குரிய கொள்கைகளும் மதங்களும் இயற்கையிலிருந்து வெளிப்படும். முனைக்காதபோது சிருட்டியிலடங்கியிருக்கும். இந்த நியாயத்தினாலேதான், பழைமையாயிருப்பன விருக்க, ஒரோர் காலங்களில் புதியனவாகக் கொள்கைகளும் மதங்களும் தோன்றி விளங்கியும், அருகியும், மறைவதுமானவியல்பு உலகத்திற் காணவருகின்றது. தத்துவ புவனமுத்திகளுண்டென்பதற்கு, அவற்றையடையுமான்மாக்கள், “பூதஸம்ஸித்தர்''  பிரகிருதிஸம்ஸித்தர்,, என்னும் பெயரால் சாத்திரங்களில், முக்கியமாக சிவாகமங்களிற் கேட்கப்படுதலே சான்றாம். அங்நனந்தத்து முத்திநிலைகள் ஏற்படும் இயற்கையுண்மையை முன்னுணர்ந்து தாம் தோன்றிய காலந்தொட்டே, சிவாகமங்கள் தத்துவமுத்திநிலைகளை ஆராய்ச்சி செய்யும் வழியை விளக்கி உண்மை முத்தியை அதாவது, சித்தாந்த முத்திநிலையைவரையறுத்து வைக்குங்க - மை பூண்டதாகத்தெரிய வருகின்றது. இவ்வாறன்றி, மதவாராய்ச்சி முறையானது அவ்வம்மதங்கள் தோன்றிய பிற்காலங்களிலுண்டாயினவாம் என்று மறுக்கில், ஆதியிலேயே சிவாகமங்களில் அவ்வாராய்ச்சி முறைவந்திருத்த ற்கு நியாயஞ்சொல்லல் வேண்டும்.'' சிவாகமங்கள் பிற்காலங்க ளிற்றோன்றியனவாகட்டும்'' என்னில், அதற்குப்பிரமாணமில்லை ஆகமங்கள் சிருட்டிகாலத்திலேயே தோன்றின என்பதற்குப்பிர மாணம் மிருகேந்திரத்தில் வருமாறு.
      சு:கதம்ம ஹேய்வராத்ஏதத்
ஆகதம்ஜ்ஞான முத்தமம் |
      கிஞ்சசேதஸிஸம்ஸ்தாப்ய
      நிர்மமேபகவானிதம் ||
    
இதன்பொருள்: - (நிஷ்கள) சிவனிடத்திருந்து உத்தமமான இந்த ஞானசாத்திரம் எவ்விதமாக வெளிப்பட்டது? அந்தப்பகவான் இதை என்ன நினைத்துச்செய்தருளினர்? என்பதாம். இவ்வினா விற்கு விடை:

     சு:ஸ்ருஷ்டிகாலேமஹேயான:
      புருஷார்த்தப்ரஸித்தயே |
      விதத்தேவி மலம்ஜ் ஞானம்
      பஞ்சஸ்ரோதோபிலக்ஷிதம் ||
    
இதன்பொருள்: - சிருஷ்டியாரம்ப காலத்திலே பரமேசுரன், போக மோக்ஷரூபபப் புருஷார்த்தசித்தியின் பொருட்டு, முன்னம் நாதரூபமாய் நின்மலமாகவும், பின்புசதாசிவரூபத்தால் பஞ்சமுகங்களின் வழியாகப் பிரகாசரூபமாகவும் அதனைச் செய்தருளினார் என்பதாம், இவ்வாறே பௌஷ்கர முதலியவற்றுள்ளுங் கூறப் பட்டிருக்கின்றது,
''ஸர்வாகமமயம்பவ:''
ஸர்வ உபநிஷன்மயப்பரிவ.''          எனவரும் சுருதி

வாக்கியங்களும், சிவாகமங்கள் ஆதிகாலத்திலேயே தோன்றின என்னுமுண்மையை வலியுறுத்தும். சிவாகமங்கள் சிருட்டிகாலத்திலேயேயுண்டாயின வென்றமையால், அவற்றுள் வரும் மதவாராய்ச்சி (Comparative study) முறையும் அக்காலந்தொட்டிருக்கின்ற தெனக்கொள்ளுவதே நியாயமாகும். இதுவன்றியும், பரதகண்டத்தில் (உலகமுழு மையுங்கூட) வழங்குஞ் சகலமான வித்தைகளுக்கும் மூலம் சிவாகமங்களிற் காணக்கிடக்கு மென்பது ஆகமவித்துக்களின் கருத்து.

      ஈசான: ஸர்வவித்யானாம்"

ஸர்வவித்தைகளுக்கும் வக்தா ஈசானர், என்ற சுருதிவாக் கியத்தின் பொருள் ஆகமத்திற்காணவரும். இத்தியாதி நியாய ங்களால் மதவாராய்ச்சியானது வஸ்து நிச்சயம் பண்ணுவதற்கும், உண்மை முத்திநெறியறிந்து ஒழுகிப்பேறெய்துதற்கும் இன்றியமையாதவுத்தமசாதனமா யிருத்தல் விளங்குகிறபடியால் உலகில் மனிதராய்ப்பிறந்த ஒவ்வொருவரும், முன்னரே கொண் டிருக்கும் அபிமானக்கொள்கைகளை விடுத்து, உண்மையொன் றினையே விரும்பி, மதவாராய்ச்சியில் (Comparative study) பயிலவேண்டுவது அதிகாவசியமாவதறிக.

சிவாகமங்கள் ஆதிகாலத்திலேயே மதவாராய்ச்சி செய்யும் வழியைக்காட்டி அக்கடமையினைத் தாமும் வகித்ததனாலே தான் சித்தாந்தம் என்பதொன்று ஏற்பட்டு நிலைபேறடைந்திருக்கின்றது. அச்சித்தாந்த வழிபிடித்து ஏனைமதநிலைகளை அளந்தறியும் வழியும் உலகத்திற்குண்டாகியது. இன்று இச் "சித்தாந்த மகாசமாஜம்''  என்பதொன்று ஏற்பட்டுச் சித்தாந்த வுண்மைகளைப் பரவச் செய்ய வந்ததும், சிவாகமங்கள் தத்துவ முத்திநிலைகளை ஆராய்ச்சி செய்து முடிவு கட்டிய பேருபகாரத்தினாலேயேயாம். ஆதலினால், இம்மகாசமாஜத்தின் கண் சித்தாந்தவுண்மைகள் பல முகங்களாற் பெரிதும் விளக்கப்படவேண்டுவதே அழகும் பொருத்தமுமாகும். அது லோகோபகாரமுமாகுமென்க.
      
இம்மகா சமாஜம் தடையுறா வண்ணம் நடைபெறச் செய்து வரும் மேதாவியரும், அதனை வாக் - சரீர - பொருட் சகாயங்களால் ஆதரித்து வருஞ்சிவ நேசச்செல்வர்களும் பிரபுக்களும் ஸ்ரீசிவானுக்கிரகத்தால் இருமையிலுஞ் சிறந்து வாழ்வாராக எனத் திருவருளைச் சிந்திக்கின்றாம்.

திருச்சிற்றம்பலம்.

                     C. M. அரங்கசுவாமி நாயகர்.

சித்தாந்தம் – 1913 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment