Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.

நால்வர் முத்தி.

இவ்வுலகத்தில் பொய்யமணையடக்கி நமது சைவசமயத்தை நிலை நாட்டியருளிய காழிவேந்தரென்னும் திருஞானசம்பந்த சுவாமிகள், சமணரால் கல்லிற்கட்டிக் கடலிற் போடப்பட்ட அஞ்ஞான்றுதா மெப்பொழுதும் ஐந்தெழுத்துப்புணைப்பற்றிக்கடக்கின்ற உண்மையை உலகமறிவான் வேண்டி நமச்சிவாயத் திருப்பதிகம் பாடியருளிய திருநாவுக்கரசு சுவாமிகள், முன்கயிலாயத்தில் வாக்கருளியவண்ண மிறைவனால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற திருநாவலூரரென்னும் சுந்தர மூர்த்தி சுவாமிகள், திருப்பெருந்துறையில் குருந்தினீழலில் அடியார் குழாத்தொடுவீற்றிருந்து ஆகமாந்தமென்னுஞ் சித்தாந்த உண்மைப் பொருள்களை யிறைவனாலுபதேசிக்கப் பெற்ற திருவாதவூரரென்னும் மாணிக்கவாசக சுவாமிகள் என்னுஞ் சமயாசாரியர்களாகிய இவர்கள் யான்கூறிய நால்வராவார்.

இனி முத்தியின் பொதுவியல்பு: - முத்தி, வீடு என்பன ஒரு பொருளன. ஆணவபந்தத்தினின்று விடுத்தலே வீடாம். அநாதியே'உயிருடன் சகசமாய்ச் சார்ந்து நின்ற இவ்வாணவ மலத்தின் பலவித சக்திகளை பிறப்பில் தவங்களென்னுஞ் சிவபுண்ணியத்தாற் கெடுத்து இருவினையொப்பு மலபரிபாகம் சத்திநிபாதமெய்திச் சிவஞானத்தாற் சிவப்பேறு ஆன்மா வெய்தும்.

எவ்வாறெனில், காட்டக்காணு மியல்புடைய கண்ணிந்திரியத் துக்கு உயிர் அத்துடனின்று பொருளினைக்காட்டுதல் மாத்திரையே யன்றி, உடன் சென்று அவ்வுருவைக் காணுதலுஞ்செய்து உபகரிக்கு மாறுபோல் உயிர்க்கு முதல்வன் உடனின்றறிவித்தல் மாத்திரையே யன்றி அவ்வுயிருணர்வோடு கூட அத்துவிதமாய்ச் சென்று அவ்விட யத்தை யறிதலுஞ்செய்து உபகரித்து வரும். காரியம் ஒழிந்தாற் சுத் தனாகுவோனாகிய ஆன்மா இவ்வித உபகாரத்தை யறியப்பெறின், அம்முதல்வன் திருவடிகளைத் தலைப்படுதற்கண் இச்சையிடையறாது நிகழும் அறிவு இச்சையிரண்டும் ஒத்து அத்துவிதநிலையொன்றே பற்றி முதல்வன் திருவடிக்கண்ணவாய் ஒருங்கு நிகழவே காயம் ஒழிந்தபின் மலநீங்கிச் சுத்தனாய் நிற்குமுறைமை காயத்தோடு நிற்புழிக்கை கூடப் பெறுதலால், ஏனைக்கிரியையுமே யெல்லாமலங்களையும் நீத்து அவ்வறி விச்சைகளோடு ஒருவழிக்கொண்டு செங்கமலத் திருவடியைக் கூடப் பெற்று மாறுபடாத சிவாநுபூதியே சுவா நுபூதியாகக் கொண்டு வாழ்தல் ஜீவன் முத்தர் நிலையாம். இவர்கள் சிவஞானத்தாற் சிவத்தை நோக்கி யன்பு செய்யப்பெற்றுச் சிவமே கண்டு கொண்டிருப்பர். அன்றியும் இவ்வத்துவித முத்திநிலையின் தன்மையை ஆன்றோர்கள் பல செய்யுட்களாற் சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தலென்னும் அழ.கொடு கூறுவாராயினர். உதாரணமாக,
ஞானசுகாதீத வெண்பா.

சுத்தனே ஞானச் சுடரே கருணையுறு
நித்தனே நின்னுடனா னிற்பதுரை – பெத்தத்தில்
உன்னறிவி னானிருந்த வுண்மைபோன் மாணவகா
வென்னறிவி னீயு மிரு.

சிவபோகசாரம்.

இந்தனத்தி லங்கி யெரியுறுநீர் தேனிரதம்
கந்தமலர்ப் போ துவான் காலொளிகண் – சந்ததமும்
அத்து வித மாவதுபோ லான்மாவு மீசனுமாய்
முத்தியிலே நிற்கு முறை.

இஃதன்றியும் இவ்வத்துவித முத்தியைத் தாடலை யென்னும் வார்த்தையில் டகரத்தை ஓரெழுத்தென்றாவது ஈரெழுத்தென்றாவது கூறமுடியாமல் ஒன்று மின்றி இரண்டு மின்றி ஒன்றிரண்டுமின்றி அத்துவிதமாய் நிற்றலையும் உவமையாக எடுத்துக்கூறுவர். மேற்கூறிய முதற் செய்யுளில் உயிரியல்பு சிறிதுந்தோன்றாது, இறைவனது வியாபகத்துள் ஆன்மாவடங்கிநிற்கு முறைமையையும், பின்னைய செய் யுளில் அத்துவிதமாய்நிற்குந் தன்மையையும் மற்றதோருவமையில் இருபொருள் புணர்ந்து நிற்கு மாற்றையுங் கூறினாம். இம்முத்திநிலையில் ஆன்மா மதுவுண்ட வண்டே போல் நிற்பனென்றும் இறைவன்  ''கரும்பைத் தேனைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் கட் டியை யொத்திருப்பனந்த முத்தியினிற் கலந்தே'' என்றும், ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். இவ்வித அரிய பெரிய முத்தியே சித்தாந்த முத்தியெனப்படும். இம்முத்தி யெய்துதற்கு மேற்கூறப்பட்ட இறப்பில் தவங்களென்னுஞ் சரியை கிரியை யோகங்களைச் செய்துழிச் சன்மார்க்கமென்னும் ஞானங்கைகூடும். மேற்கூறிய இறப்பில் தவங்களாகிய சிவபுண்ணியங்கள பதினாறு வகைப்படும். அவை சரியையிற் சரியை, சரியையிற்கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்திற்சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் ஞானம், ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்பன.

இச்சிவபுண்ணியங்கள் உபாயமென்றும் உண்மையென்றும் இரு வகைப்பட்டு நின்று, உபாயம் புகழையும் உண்மை பத்தியையும் பற்றி நிகழும். இவற்றுள் உபாயம் ஒவ்வொன்று நந் நான்காகி முன்னையதுடன் சேர்ந்து (32) ஆக்குவர். உபாயச்சரியையிற் சரியை முதல் 16 - வகைச் சிவபுண்ணியங்களுக்கும் காலாக்கிநிருத்திரர் புவன முதல் குணதத்துவ மஸ்தகத்தில் ஸ்ரீ கண்ட புவனத்தின் கீழுள்ளருத்திரரீ றான அவ்வப்புவனபதிகளுலகத்தில் சாலோக சாமீப சாரூப சாயுச் சியங்களைப் பெறுதலே பயனும், உண்மையிற் சரியையிற் சரியை முதல யோகத்தில் ஞானம் வரை (12) வகை சிவபுண்ணியங்களுக்கு ஸ்ரீ கண்ட புவன முதல் சுத்தவித்தைக்குங்கீழுள்ள அவ்வப்புவனபதி களுடைய சாலோகமுதவிய பதமுத்திகளைப் பெறுதலாம். உண்மையில் ஞானத்திற் சரியை முதல் மூவகைச் சிவபுண்ணியங்களுக்குச் சுத்த வித்தை முதலிய அதிகாரதத்துவம் போக தத்துவங்களில் வைகும் மந்திரர் மந்திர மஹேசர் முதலியோர் புவனத்துச் சாலோக முதலிய முத்தியைப் பெறுதலாம், எஞ்சி நின்ற ஞானத்தில் ஞானம் ஒன்றுக்கே பரமுத்தி சித்திக்கும், ஏனையவற்றிற்கு லயதத்துவ அபர முத்திகிட்டும். பதமுத்திகட்கு மீட்சியுண்டு ஆனால் சுத்த வித்தை முதலிய தத்துவ புவனங்களிலெய்தினோர்க்குப் பரமுத்தி தலைப்படுமேயன்றி மீட்சியில்லையாம். இனி அவ்வச் சரியைக்கேற்ப அவ் வப்புவனபதியுலகங்களிலெய்தி அகத்தொண்டர்போலத் தடையின்றி யியங்கிப் போகங்களை நுகர்வது சாலோகபதவி. இச்சரியை தாசமார்க்கமெனவும் படும். அவ்வக்கிரியைக்கேற்ப அவ்வப்புவனபதி களிலெய்தி மைந்தர் போல அநுக்கராய் வைகிப் போகருகர்வது சாமீபம் இக்கிரியைப் புத்திர மார்க்க மெனவும்படும். அவ்வவ்யோ கத்திற்கேற்ப அவ்வப்புவன பதியுலகங்களிற் சென்று புவனபதிக களோடொத்த வடிவும் அணியும் போகநுகர்ச்சியும் பெற்றுத் தோழர் போலுரிமை கொண்டு வாழ்வது சாரூபம். இவ்யோகமார்க்கம் சகமார்கமெனப்படும். மேற்கூறிய சரியை முதலியவற்றிற்குரிய சாலோக முதலியன அவாந்தரப் பயன்களாம். ஞான மொன்றுமே அவற்றினுண்மைப் பயனாம். இந்த ஞானத்தாலேயே சாயுச்சியம் வந்தெய்தும். இதுகாறும் கூறியவற்றால் இறப்பில் தவமினைய வென்பதும் அவற்றாலெய்தும் பயன் இனையவென்பதும் முத்திநிலையின்ன தென்பதும் விளங்குமாறு ஒருவாறு சுருக்கிக் கூறினாம். இனி நால்வர் முத்திப் பேற்றைக்கூறுவாம், அங்ஙனங் கூறுதற்குமுன் ஞானத்திற் சரியை ஞானத்திற் கிரியை ஞானத்தில் யோகம் ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு படிகளையும் விளக்கி மேற்செல்வாம்.

ஞானத்திற் சரியை சூக்குமவுடலின் தன்மையும் அவ்வுடலின் கண் புசித்த புசிப்பும் கண்டு பின் தூலத்திற் கூடின முறைமையி னின்று (36) தத்துவமும் சுத்தமாகிறதாகக் கண்டு நிற்றலாம் (2) ஞானத்திற் கிரியை ஞான பூஜை செய்தலாம். (3) ஞானத்தில் யோகம் பஞ்சாக்ஷரம் அடைவிலோதுதலாம். ஞானத்தில் ஞானம் பஞ்ச பூதப்பழிப்பு முதல் பரமானந்த வசம்வரை முப்பது அவசரங்களி லும் நின்று சிவஞானத்துளழுந்து தலாம், இனி இக்கால்வகைப் படியினுள் நால்வர்களில் ஒவ்வொருவரும் எவ்வப்படிகளினின்று எவ்வகை முத்தியெய்தினர் என்பதைப் பற்றியாராய்வாம், திருத் தொண்டர் புராணமென்னும் பெரியபுராணத்தை யருளிச்செய்த சேக்கிழார் பெருமான் திருவருள் பெற்று எல்லாம் வல்ல இறைவன் உலகெலா மென்று முதலெடுத்துக் கொடுக்க அங்ஙனந்தொண்டர் புராணம் அருளிய விஷயம் உலகெலாமறிந்ததொன்றே. அவர் வாக்கினாலருள்வ தெல்லாமிறைவனா லருளியதற் கொப்பாமே யன்றி வேறன்று, ஏனெனில் அவனருள் பெற்றவர் அவன் வசநின்று மொழிகுவராதலின் அவ்வாறு நம்சேக்கிழார் பெருமான் மூவர் தம் முத்தியைக் கூறியாங்குக் கூறுவதேமிகச் சால்புடைத்து. அவ்வாறன்றித் தத்தங்கொள்கை வெவ்வேறிருந்து மனம் போன வண்ணம் அஃதிப்படித்தானிருத்தல் வேண்டும் இஃதிப்படித்தான் முடிந்திருத்தல் வேண்டுமென்னுஞ் செருக்குடன் கூறுவார் கூற்றெல்லாம் ஜீவபோத நிலையேயன்றிச் சிவபோதநெறியின் கண்ணதன்று. சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுள்ள இவர்கள் கூற்றைக்கொள்ளவா? அல்லது சிற்றறிவிற் பேரறிவு நட்ட பெருந் திருவாளர் கூற்றைக்கொள்ளவா? யாதோரையமுமின்றிப் பின்னையர் சார்பிலேயே சார்ந்து அவர்கூற்றையே கொள்ளல் வெண்டும் இவ் வகையாராய்ச்சியாற் போந்ததியாதெனின் அருண்மொழி மழை பொழிதேவர் கூற்றையே கொள்ளத்தக்கது மற்றையர் கூற்றுத்தள்ளத் தக்கது. இதுநிற்க.

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்

முத்தி நிலையை ஆராய்வாம்.

கவுணியர்கோனாகிய நமது ஆளுடைய பிள்ளையார் கலியாணப் பந்தரில் தமது தேவியைக் கைப்பிடித்த அப்பொழுது (மந்திர மறை யாலுய்த்த எரிவலமாக) இந்த இல்லறவொழுக்கம் வந்து தமியேனைச் சூழ்ந்ததே யென்று வெறுத்து, இத்தேவியாரோடு எழுவாயுமீறு மில் லாச்சிவன்றாள் சேர்வனென்னும் ஆசையானது மீதூரத் தொண்டரு றவினர் குழாம் புடைசூழ அளவற்ற மெய்ஞ்ஞானத்தின் எல்லையை யடையுங் குறிப்பால் உலகத்தின்கண்ணுள்ள எவ்வகைச்சார்பும் தன் னைவந்து சாராதபடி நீங்சிச் சிவனோடிரண்டறக் கலத்தல் வேண்டித் திருக்கோயிலை நோக்கிப்போந்தனர். திருப்பெருமணமென்னும் அக் கோயிலினுள் போந்த திருஞான சம்பந்தர் தலைப்படுஞ் சார்புநோக்கி அவர் தமக்கு முன்னாள் ஞானப்பா லூட்டியாண்ட அப்பண்பின் பயன்கூட நல்லுணர்வு நல்க “ கல்லூர்ப்பெருமணம்'' என்றெடுத்துத் திருப்பதிகம் தீதறு பிறவிப்பாசந்தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு நாதனே நல்லூர்மேவும் பெருமண நம்பனேயுன, பாதமெய்ந்நீழல் சேரும்பருவமீதென்று பாடத்தேவர்கள் தேவனாகிய சிவபெருமான் திருவருள் புரிந்து முழுச்சுடர்த்தாணுவாகி நீயும் உன்தேவியும் உன் மணத்தில்வந்தார் யாவரும் இச்சோதியுள் வந்தெய்துக என்று அருள் புரிந்து அச்சோதியுள் ஒருவாயிலை வகுத்துக்காட்ட அப்புகலிப்பிரா னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடி ஞானமெய்ந்நெறிதான் யார்க் கும் அச்சொல்லே யென்று வற்புறுத்திக்கூறி யீனமாம் பிறவிதீர மணத்தில் வந்தார் யாவரும் அச்சோதியுட் புகுகவென்னப் புகுந்த பின்னர் காதலியைக் கைப்பற்றிக்கொண்டு வலஞ்செய்தருளித், தீக கற்ற வந்தருளுத்திருஞானசம்பந்தர், நாதனெழில் வளர்சோதிநண்ணி யதனுட்புகுவார், போதநிலை முடிந்த வழியெனக்கூறுமாற்றால், போத நிலைகள் பலவுளவென்று மவற்றினு ளெல்லாஞ் சென்று சென்று சீழுள்ளனவற்றைக் கழித்து மேல் நிலையெய்தி முடிந்தபின்னர், சிவத் தினுட்புகுந்து இரண்டறக்கலந்து அத்துவிதமாய் நிற்பார் என்னும் கருத்துத்தோன்றப்புக்கு ஒன்றி உடனானார் என்று பொருளாற்றலைச் சொல்லாற்றலி லமைத்து அருளிச்செய்வா ராயினர். ஆகவே நாத னெழில் வளர்சோதி நண்ணிய அக்காலத்தும் ஆன்மபோத நிலைகள் உண்டென்றும் அந்நிலைகள் யாவும் முடித்தவழியே அத்துவிதப்பேறெ ன்றுங் கண்டாம், அவ்வான்மபோத நிலைகளிற் சிற்சில கூறுவாம்.
சிவத்தினுள் ஆன்மா அடக்குதற்குற்றபோது போதங்கொள் ளுதல் ஒருநிலை. இதற்கு இரும்பையும் காந்தத்தையு முவமை கூறுவர். பின் ஆன்மபோதத்தை அடக்கல் இரண்டாவது நிலை, இதற்கு ரசகுளிகையையும் பொன்னையுமுவமை கூறுவர் போத வடிவை மறைத்தல் மூன்றாவது நிலை, இதற்கு உப்பையும் நீரையும் உவமை கூறுவர். ஆன்மபோதத்தைக்கெடுத்துச் சிவபோதமாக்குதல் தாலாவது நிலை, இதற்கு அளத்தையுந் துரும்பையு முவமை கூறுவர். ஆன்மபோத மேலிடாது வைத்தல் ஐந்தாவது நிலை, இதற்கு அக்கினி யின் ஒளியையும் சூரியன து ஒளியையும் உவமை கூறுவர். ஆன்மபோத த்தைத்தன் வசமாக்கிக்கலத்தல் ஆறாவது நிலை, இதற்குக் கண்ணொளி யையுங்கதிரொளியையு முவமை கூறுவர். இவ்வாறு சிவபோதம் ஆன் மபோதத்தை யடக்கி நின்று தான் மேலிட்டுத் தன்னுருவப் பரப்பை யெல்லாங்கொடுபுகுந்து இவன்பாலே பதிப்பன். இதுகாறும் போந்த நிலைகளையும் அஃது முடிந்த வழிப்புக் கொன்று தலையும் ஒருவாறு சுருங்கக் கூறினாம். ஆதலால் அச்சோதியிற் புகுந்த காலத்தும் இப்போத நிலையெல்லாம் முடிந்து அத்துவித மெய்தினாரென்பது பெற்றாம். நமது சுவாமிவடிவொடு சோதியிட் புகுந்தனராதலின் இவர் ஞானத்தில் யோகநிலையில் நின்றவரென்று கொள்ளல் வேண்டும். ஆனால் ஈண்டு அந்நிலை புக்க பின்னரே உடனானாரென்பது தெளிய நின்றமை காண்க, ஞானத்தில் யோகத்திற் கிலக்கணம் பஞ்சாக்ஷ ரத்தை அடைவிலோ தலென்று கூறினாம். அது பற்றியன்றோ நமது சுவாமிகளின் வானமு நிலனுங்கேட்க நமச்சிவாயத் திருப்பதிகத்தை அருள் செய்தனர்.'மெய்ப்பொருளாவது நாதனாம. நமச்சிவாயவே'' என்பது தெளிதல் இத்தெளிதலே ஞானயோகக்குறியாம்.

திருநாவுக்கரசு நாயனார்.

இனி ஆளுடையரசின் முத்திநிலை கூறுவாம். சேக்கிழார் பெரு மான் கூறியருளிய வண்ணம் இந்நாயனார் கடைசியாகச் சென்றிருந்த தலம் திருப்புகலூராம். அத்தலத்திற்குளிவர் முக்தியெய்தினர். அத் தலத்திற் சென்றிருந்த காலத்தும் உழவாரத் திருப்பணியே செய்த தாக விளங்கக் கிடக்கிறது. இந்நாயனார் உழவாரத்திருப்பணியை மிக முக்கியமாகச் செய்தவரான தினால் அதனையே அடிக்கடி வியந்து கூறுவாராயினார். ஆனால் மனமொழி மெய்களென்னு மூன்று வழியாலும் திருப்பணி செய்வதில் பின்னிட்டவரல்லர். அஃது அடியிற் கூறப் படும் தொண்டர் புராணச் செய்யுளால் நன்கு விளங்கும். "மையற் றுறையேறி மகிழ்ந்தலர் சீர்வாகீசர் மனத்தோடு வாய்மையுடன் மெய்யுற்ற திருப்பணி செய்வராய் விரவுஞ் சிவசின்னம் விளங்கிடவே யெய் துற்ற தியான மருவுணர்வு மீறின்றி யெழுந்திருவாசகமுங் கை யிற்றிகழும் முழவார முடன் கைக்கொண்டு கசிந்து கலந்தனரே.

இந்நாயனார் அதிதீவிரபக்குவ விசேடத்தால் சகள நிட்களமாகிய சூக்கும வடிவதனை யுள்ளும் புறம்பும் விதித்தவாறே வழிபட்டன ரென்பது பெற்றாம். அங்ஙனம் வழிபடுதலையே கிரியையாகக் கூறல் சாலும். இனிச்சிவஞான பாஷ்யத்தில் கூறியாங்கு ஞானத்திற்கிரியை சிந்தித்தலாம். மஹாஞானிகளும் ஞானத்தை யடைந்த போதிலும் மற்றையருய்யும் வண்ணம் கீழுள்ள தொண்டுகளையும் ஞானிநாலி னுக்கு முரியனென்றருளிய வண்ணம் செய்யாதொழியார். அன்றியும் அன்புருவாகிய இந்நாயனார் இறைவனது மெய்யருள் தானெய்த வரு மந்நிலைமை யணித்தாகச் சிலநாள் திருப்புகலூரில் அமர்ந்திருந்தார். அப்பொழுது "தன்னுடைய சரணான தமியேனைப்புகலூரன், என்னை யினிச் சேவடிக்கீழிருத்திடு மென்றெழுகின்ற, முன்னுணர்வின் முயற் சியினாற் றிருவிருத்தம் பலமொழிந்தார்', அன்றியும் புகலூரிலெழுந் தருளியிருக்குஞ் சிவபிரானைநோக்கிப் ''புண்ணியாவுன்னடிக்கே போது கின்றேன்' என்னுந் திருத்தாண்டகத்தைக் கூறியருளினார். அத்தாண்டகத்தில் முதற்பாசுரத்தால் "எண்ணுகேன் என் சொல்லி யெண் ணுகேனோ வெம்பெருமான் றிருவடி யே யெண்ணினல்லால்''  என்றருளிச் செய்திருப்பதால் ஞானத்திற்கரியை சிந்தித்தலென்பது நன்கு நாட்டப்பட்டது. அன்றியுமிதனை யாதரித்துச் சேக்கிழார் பெருமானும் மன்னிய வந்தக்கரணம் மருவுதலைப்பாட்டினால் என்றருளிச் செய்வாராயினார். இனிமுத்திகிலை கூறுமிடத்து ‘நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, யண்ணலார் சேவடிக்கீழாண்டவர செய்தினார்''  என்னுஞ் செய்யுளில் சிவானந்த வடிவேயாகி யென்று கூறாமற் சிவா னந்த வடிவாகி யென்று கூறப்பட்டுளது. ஞானமென்பது ஈண்டு இறைவனது ஞானசத்தி. சிவானந்த ஞான மென்பது இறைவனது இன்பசத்தி. இது இறைவன் மாட்டு நின்றுவரும் சுகப்பிரபையாம். அது துகளறுபோ தம் “மாமணியிற்சோதிமலர்ந்த பிரபைபோல் ஆம சன் றன்பாலேயது'. இது சுகரூப மென்றுந் தலைப்பின்கீழ்வருகின்றது ஆதலினாற்றான் சிவானந்த ஞானவடிவெனக் கூறப்பட்டது. அதற்கு மேல் சுகப்பேறு அல்லது சிவப்பேறு முதலிய பல நுணுகிய நிலைகளு முள்ளன, அவை இடையீடின்றி ஒன்றின்பினொன்றாய் நிகழும். இது காறுங்கூறியவாற்றால் இன்னாயனாரடைந்த முத்தி சிவானந்தஞான வடிவேயாம் என்பது பெற்றாம்.

சுந்தரமூர்த்தி நாயனார்.

இந்நாயனார் திருக்கைலாயத்தில் வள்ளல் சாத்து மதுமலர்மாலையும் அள்ளுநீறு மெடுத்தணை வார். அவர்பெயர் ஆவாலசுந்தார். முதல் வன்றனக்கு மலர் கொய்திட நந்தவனச்சூழலிலே சென்றபோது அரிக்திதை கமலினியென்னு மிருசேடியர்மாட்டு இச்சை வைப்பாராயினார். அஃதறிந்த இறைவனும் தென்புவி மீதுதோன்றி அம்மெல்லியலாருடன் இன்ப நுகர்வாயென ஆலாலசுந்தரரும் அஞ்சலியஸ்தராய் உனது திருவடியை நீங்குஞ்சிறுமையேன் மையல்மானுடயாக்கையால் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டருள் செய்யென அங்ஙனம் இறைவர் அருள்செய்வாராயினர். இவர் அவ்விச்சையை நிறைவேற்றுதற்கு மாத்திரம் இவ்வுலகத்திற்கு வந்தவரேயன்றி வேறன்று. அவர் முன் னிருந்தவிடம் சுத்தசாலோக மென்னும் சிவசாலோகமாம். இங்குப் போகத்தி லிச்சையுடையரேல் பிறவிக்கு வரவேண்டுவதும் ஆசையில ரேல் மேலான நிலைகளையடைய வேண்டுவதும் என்பது மிகக்கவனிக் கத்தக்கது. ஆனால் இந்நாயனார் மீண்டுங் கைலாயமெய்தி ஆலாலசுந்தரராய்ச் சிவகணநாதர்க்குந் தலைவராய் நின்றனர். அங்ஙனம் நின்று முன்னை நல்வினைத் தொழிலியற்றுவராயினர், என்று பெரியபுராணங் கூறுமாற்றால் இவர் மீண்டுஞ் சிவசாலோகத்தை யடைந்தனரென்பது பெற்றாம், ஆனால் இவர் மானுட யாக்கையோடு கைலாயத்திற்குப் போன தாகவில்லை, ஏனெனில் " அங்கணோரொளியாயிர ஞாயிறு, பொங் குபேரொளிபோன்று முன்றோன் றிடத், துங்கமாதவர் சூழ்ந்திருந்தா ரெலா, மிங்கிதென்கொலதி சயமென்றலும், "

''அந்தி வான் மதி சூடிய வண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்றிசை
வந்த நாவலர் கோன் புகழ் வன்றொண்டன்
எந்தை யாரரு ளாலணை வாலென.''

உபமந்நியுபகவான் கூறுமாற்றாலுணர்க. இதனை  'ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை யுத்தமனே'' என்ற தேவாரமு மாதரிக்கின்றது. ஈண்டு ஊனை வேறு செய்தலாவது பூதசரீரம்விட்டுத் திவ்யதேஜஸோடு கூடிய சுத்தசரீரம் பெறுதல், உயிர்வேறு செய்தலாவது, மானுடயாக்கையின் மயக்கம் விட்டுச் சிவபோதமேலிடல், சிவசாலோகத்துக்குமேல் வேறு சாலோகங் கிடையாதாதலால் இவர் மேலான சாலோகநிலையை யடைந்தனர் என்பதாயிற்று. அந்நிலையினின்றும் மேலான நிலைகளையடைதல் சாலும். இதுகாறுங் கூறியவாற்றால் சுத்தசாலோக நிலை இந் நாயனாரடைந்தன ரென்பது பெற்றாம். இதுவே ஞானத்திற் சரியை யாம். இதுகேட்டலென்னும் ஞானபூசையுள் அடங்கும், இதனை ஐயனே தடுத்தாண்டருள் செய்யெனக் கேட்டமையா லுணர்க.

திருவாதவூரடிகள்.

இச்சுவாமிகளை நோக்கித் தில்லைவாழந்தணர்கள், "தில்லை பிலெம் பெருமானைச் செப்பியவித்தமிழ் மாலை நல்லவரும் பொருள் கூறவேண் டுமென நவின்றார்கள்''  உடனே சுவாமிகளும் கனகசபைக்கெதிரே போய் இதற்குப் பொருள் சொல்வேன் என்று சொல்லயாவரும்பின் சென்றார்கள். ''ஒன்றிய வித்தமிழ்மாலைப் பொருள் இச்சபாநாயகரே யென்றுரை செய்து மன்ற தனிற் கடிதேகி மறைந்தன" ரென்று வாதவூ மார்புராணமும், ''ஈசன தடிக்கீழெய்தி யீமிலாவறிவானந்த, தேசொடு கலந்து நின்றா'சென்று திருவிளையாடற் புராணமுங்கூறும். ஈண்டுச் சிவஞானத்தையே ஈசன தடியென்று கூறப்பட்டது. சிவஞானத்தை யெய்திய பின்னர் அதனுள் உள்ளொளியாயும் அந்தமாதிக ளில்லாத தாயும், பேரறிவோடுகூடிய ஆனந்த மயமாயுமுள்ள தேசொடுகலந்து நின்றாபென்பதால், இவசெய்திய முத்திஞானத்தில் ஞானத்தாலுறும் பாமுத்தியேயாம்

துகளறு போதம், “உற்ற பரமானந்தத் தொன்றா யதி லுறங்கி போதம் முற்றுவதே முத்திமுடி வென்றுரைக்கு'' மென்று.றியிருத்தலால் இவரெய்திய முத்தி முடிந்த முத்தியாம். இவரடைந்த பேற்றிற்கு மேலடைவதோர் பேறில்லை. அத்துவித முத்தியிது வேயாம். இந்நிலையை யாருமறிதற் கரிதாம் மெய்ஞ்ஞான விளக்கத்தில்,

"அறி யார்களுமறியார் மிக வறிவார்களுமறியார்,
அறியார்களு மறிவார் களு மொன்றே தமிலன்றா,
மறியார்களும் பசுபாசமென்னிருளான் மறைந்தறியார்,
அறிவார்களும் பரமானந்த வொளியானிறைந்தறி யார்''

சுவாமிகள் பத்தியினால் மறவாதேத்தலாகிய சதாரிஷ்டையினால் இறைவனது சீபாதத்தை யடைந்தவமெனக் கொள்க. அது

“முத்திநெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்,
பத்திநெறியறிவித் துப்பழவினைகள் பாறும்வண்ணம்,
சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட,
அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே.''  

இந்நிஷ்டையே ஞானத்தில் ஞானம்,

இதுகாறுங் கூறியவாற்றால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஞானத் திற்சரியையில் நின்றுழிச் சுத்தசாலோகபதவியும், திருநாவுக்கரசுசுவாமிகள் சுகரூபமென்கின்ற நிலையையும், திருஞானசம்பந்த சுவாமிகள் மேற்கூறியாங்குப் பலவிதபோத நிலைகள் முடிந்த விடத்துப்புக்கு ஒன்றி அத்துவித நிலையெய்தினா ரென்பதையுர், மாணிக்கவாசக சுவாமிகள் அறிவானந்த தேசொடு கலத்தலாகிய பரமுத்தியெய்தினாரென்பதையும் வெள்ளிடைமலைபோல் விளங்கக்கண்டாம். இவ்வாறுசொல்லியதெல்லாம் இறைவனார் திருவருள் பெற்ற ஆன்றோர் வாக்கியங்களை வைத்தே ஒருவா றுவிளக்கிக் கூறினேனேயன்றி வேறன்று. இவ்விளக்கத்திற்கு மறுதலையான அபிப்பிராயமுடையார் சிலர் இருக்கினுமிருக்கலாம். அவர்கள் உண்மையீதெனவிறுவரேல், அதுசுருதியுத்தி யனுபவத்துக்கு ஒத்ததாயிருப்பின் அங்கீகாரஞ்செய்து அவர்களுக்கு வந்தனமளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்,

S. பால் வண்ண முதலியார்.

சித்தாந்தம் – 1915 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment