Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
பதிபுண்ணியம்.

நம் சைவசித்தாந்தமானது எவ்வாறு, பதி, பசு பாசம் என மூன்று விதமாக விளங்குவதோ அதுபோலவே இப்புண்ணியமும் மூவகைத்தாக உளது. அம்மூவகையாவன பதிபுண்ணியம் பசு புண்ணியம், பாசபுண்ணியம் என்பனவாம். இவை முறையே உத்தமம், மத்திபம் அதமம் என்று செல்லப்படும்..

முதலாவது கடைசியாகிய பாசபுண்ணியத்தைச் சிறிது புகலுவோம், மனைவி, புத்திரர், உடன் பிறந்தார் இன்னம் மற்றுமுண்டான சுற்றத்தாரைக் குறித்துத் திரிகரணங்களாலும் அருத்தத்தாலும் செய்யும்படியான விஷயங்களனைத்தும் பாசபுண்ணியமென்று சொல்லப்படும்.

இவை மூவகையாகச் செய்யப்படும். அவையாவன, மனைவி முதலானவர்களுக்கு மேலும் மேலும் ஆகவேண்டிய நற்காரியங்களை நினைத் தலும், அவர்களுக்கு எவ்விடத்திலும் துக்கம் வாராவண்ணம் யோசித்தலே மனத்தின் காரியமாம்.

அவர்களிடத்தில் இனிய சொற்கூறல தன்னாலாகாத காரியங்களையும் பிறரிடம் சொல்லி அவருக்கு முடிப்பித்தல் முதலான விஷயங்கலெல்லாம் வாக்கின் காரியமாம்.

அவர் சொல்லைவேதவாக்கியம் போற்கொண்டு எவ்வளவு தூர - மாயினும் தேகசிரமம் கருதாது போதலும் அவருடன் கலந்து அள வளாவி யிருந்தாலும், காயத்தின் காரியமாம்.

அவர்களுக்கு வேண்டிய வஸ்திரம் பூஷணம், ஆகாரம் முதலான வைகளைக் குறித்துச் செலவழிக்கும் விஷயங்களெல்லாம் பொருட் காரியம்.

ஆனால் இவர்களைக் குறித்து இவ்வளவு சிரமப் பட்டுச் செய்வ தனாலுண்டாகிய பலன்யாதென்று யோசித்தால், இம்மனைவி புத்திர பவ முதலானவர்களெல்லாம் நம்மிடத்தில் அவர் முன் பிறப்பில் கொடுத்த கடனை வாங்கிக்கொண்டு போக வந்தவர்களே. அவர்களால் நாம் மேற்சொன்ன சுகங்களனுபவிப்பதுள தென்றால் அவர் நமக்கு கடன் காரராக இருக்கவேண்டும்.

“பரணமாகிய பெண்டிருஞ் சுற்றமும் பண்டு தங்கையிற்றந்த விரணமானவை கொண்டு மற்றிவரை விட்டியம் பிடா திவணேகு மரணவாதனை யாவராலறியலா மயங்கி யைம்புலனந்தக், காணம் யாவையுங் கலங்கிட வருந்துயர் கடவுளே யறிகிற்பார்"  என்றதனாற் காண்க.

இப்பாச புண்ணியமானது மேலும் மேலும் ஜென்மத்மைதயுண்டாக்கி அந்தந்தப் பிறப்பிலும் ஜீவர்கள் முன்னிலையில் சுகதுக்க போகங்களை அனுபவிப்பதற்கு ஏதுவான பலனைக் கொடுக்கிறது ஆன தாற்றானிதை கடைசியாகச் சொல்லப்பட்டது.

இரண்டாவது இடையாகிய பசு புண்ணியத்தைச் சிறிது சொல்லுவோம். மேற் சொல்லிய வண்ணமே தரும சிந்தையுடையவனா யிருத்தல், தருமங்களைப் பிறர்கேட்கப் போதித்தல், தீர்த்தமாடல், யாகாதி கிர்த்தியம் செய்தல், தான தர்மம் செய்தல் முதலானவைகளாம். ஆனால் இதற்குப் பலன் யாதென்றால் இச்சரீராந்தியத்தில் எமதூதர்கள் பூதசாமதேகமென்று சொல்லும் சரீரத்தில் இந்தச் சீவனைப் பிரவேசிக்கச் செய்வார்கள். உடனே தேவகணங்கள் ஓர் திவ்ய விமானத்திலேற்றிப் பொன்னாட்டுக்குட் கொண்டுபோய் அந்நாட்டுக் கிறைவனாகிய தேவேந்திரனுடனிருந்து பஞ்சதருக்கள் அப்சரஸ்ரீ அமிர் தாதி போகங்களை யனுபவித்தலேயாம்.

ஆனாலிதைவிட மேலான தாகிய சுகம்யா துளதென்று நினைக்கக் கூடும். இந்த வுலகமானது அழிந்து போகக் கூடியதாயும் இந்த உலகத்துக்குத் தலைவனாகிய இந்திரனும் தேவர்களும் பொன்றக்கூடிய வர்களாயும் இவர்கள் திதிகாலத்தில் அனுபவிக்கும் போகங்களுக்கும் இடையிடையே விபத்து அதிகமுண்டாகிப் பெருந்துக்கம் மனுப விக்கிறபடியாலும் இங்குத் தர்மங்களைச் செய்து அங்குச் சுவர்க் கத்தை அனுபவிப்பவர்களுக்கு இங்குச்செய்த தர்மமூலமாக விருக்கு மிவன் பெயர் இங்கு மறையுமானால் அப்பொன்னாட்டார் இவனைபழையபடியே பூலோகத்தில் அனுப்புவர்கள் என்பதும் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்திறந்து துக்கத்தை யனுபவிப்பதும் திண்ணம்.

"தருநிழலும் நல்லமிர்துந் தண்டாத மங்கையரும்
வருமென்று வேள்விசெயு மத்திமர்காள் - தருபரமே
யமிர்தம் பசுவின்பா லாயிழையார் வேசியென
வுமைபங்கனாகம மோதும்''
எனவும்,
ஆனவர் கல்குநதியாயிரஞ் சென்றாடுகிலேன்
றானப்பதினாலுந் தாஞ்செயினெ - னானனங்க
ளஞ்சுடையான் சோணகிரி யண்ண றனை யெண்ணாத
நெஞ்சுடையார் பூதலத்தே நின்று''
எனவும்,
''காடுபோந்தனனிந்திரன் பொன்னகர் கரிந்து
பாடுசேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப்பட்டான்
நாடில்விண்பதச் செய்கையீ தெம்பிரானல்கும்
வீடதேயலாற்றுன் பறுமாக்கம் வெறுண்டோ”
எனவும்,
அண்டர் பொய்வாழ்வையு மயன்பொய் வாழ்வையும்
விண்டுவின் வாழ்வையும் வெஃகிலேனியான்
றண்றடகளணிந்த நின்சரணத்தன்பையே –
கொண்டிட வேண்டுவனென்று கூறினான்'

எனவும் வருவன வற்றாற் காண்க,

எனமேலோர்கள் கூறியுள்ளாராகையினாலும் இப்போகம் ஒரு கணத்தில் மாறிப்பிறப்பைக் கொடுக்கக் கூடியதாகையால் இதனை மத்திமமென்று சொல்லப்பட்டது.

மூன்றாவது தலையாகிய பதி புண்ணியத்தைச் சொல்லுவாம்.

சிவபத்தி, அடியார் பணி, ஞானசாஸ்திரம ஓதல், ஓதுவித்தல் மெய்யன்பர் சேவை முதலானவைகளாம். சிவ்பத்தியானது மனோ வாக்குக் காயங்களினால் செய்தல் வேண்டும். தான் கட்டியிருக்கும் வேட்டியில் அழுக்கேறுவதுபோல் இவ்வுலகத்துத் துர்வாசானையால அவை மூன்றுக்கும் அழுக்குண்டாகிறது. ஆடையிலுள்ள அழுக்கைச் சுத்தஜலத்தைக் கொண்டு போக்குவது போல அவை மூன்றுக்குண்டான வழுக்கைத்தியான தோத்திர அருச்சனை யென்னும் ஜலத்தைக் கொண்டு போக்கவேண்டும்.

முதலாவது மனதுக்கு, அழுக்கு, பொறாமை, ஆசை கோபம், இரண்டாவது வாக்குக்குப் பொய் புறங்கூறல், தீச்சொல், மூன்றாவது காயத்துக்குப் பிறரையடித்தல், பர ஸ்ரீ கமனம்பண்ணல், கூத்துப் பார்த்தல் முதலாயின.

மனத்தால் இறைவனது திருநாமமாகிய ஐவகைப் பஞ்சாக் கரத்தைத் தியானித்தல் தேவாரதிருவாசகம் முதலாகிய திருமுறை 12 - ம் பாராயணம் செய்தல் காயத்தால் பத்திரபுட்பங்களைக்கொண்டு சிவபெருமானைப் பூசித்தல். சிவாலயம் வலம்வருதல் முதலானவைகளைச் செய்தல்.

“திருக்குறுமழுக் காறவாவொடு வெகுளி செற்றமாகிய மன வழுக்கைத் தியான மென்புனலால் பொய்புறங்கூறல் தீச்சொலென், கின்றவாய பூக்கை, யருட்கிளர்நினது துதியெனும் புனலா லயத்தொழிலொன்று மெய்யபூக்கை யருச்சனையெனும் புனலினாற் கழுவா வசுத்தனேனுய்யு நாளுளதோ, விருப்பொடு வெறுப்பிங்கி லா தவனென்னவெண்மதியோடு வெண்டலையு விரைவழி புகுந்து வண்டினம் பசுந்தேன் விருந்துணுங்கொன்றை மேல்மலரோடுமெருக்கையு மணிந்து மின்றொளி கடந்த வீர்ஞ்சடைப்பரந்தணாணுடைய விட்ட நன்குதவி யென்கரத்திருக்கும் ஈசனே மாசிலாமணியே "  என்ற தாற் காண்க.

அல்லாமலும் இப்படி சொல்லப்பட்ட புண்ணியத்திலும் ஒன் றுக்கொன்று மேலாகவும் சொல்லப்பட்டுள்ளது. அறமானது உலகத் தில் மேலான தென்றும், அதைக்காட்டிலும் சிவாலயம் கட்டுவித்தல் முதலான சிவபுண்ணியம் மேலான தென்றும், அதனினும் சிவால யத்து அபிடேகா திகள் அர்ச்சனை முதலானது செய்வித்தல் மேலான தென்றும், அதனினும் அடியவர் பூசையதிகமென்றும் சுருதிகளிற் சொல்லப்பட்டுள்ளது..

"அதிகநல்லற நிற்பதென்றறிந்தனை யறத்துள்
அதிகமாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனையவற்று
ளதிகமாஞ் சிவபூசையுளடியவர் பூசை
யதிகமென்றறிந் தன்பரையருச் சனை புரிவாய்”
என்றதனாற் காண்க.

பசு தர்மமானது தலையானடந்து மோட்சமடைதல் போலும் சிவசரிதம் கேட்டு முத்தியடைதல் காலால் நடந்தடைதல் போலும், சிவபூசையால் வீடடைதல் பறந்து போதலை யொக்கும், மெய்யடி யார்கட்கு அமுதுபடைத்தல் முதலான பூசையாலடைதல் பிரசண்ட வாயு வேகத்தைப் போலும், ஞானத்தால் வீடடைதல் மனோவேக மென்றும் கூறப்பட்டுள்ளது.

''தலையால் நடந்து முத்தி நிலஞ்சார் தலொக்கும் பசுதர்மம், கலை யார் கரத்தார் சிவசரிதை காலால் நடத்தல் பறந்தடைதற், றொலையே யொக்குஞ் சிவபூஜை தொண்டர் பூசையாலடைதல் மலையாவாயு வேகத்தால் மனோவேகத்தால் ஞானநிலை”
என்றதனாற் காண்க.

ஆகையால் இப்பாவினங்களாற் சிவபூசை சிவதரிசனம் இவைகளினும் அன்பர் பணிசெய்தல் அமுதளித்தல் அவர்களை த்தரிசித்தல் முதலானவை மேலென விளங்குகின்றது.

ஆனால் சிவனடியார்களென்று போலியாகத்தானே விபூதி ருத்ராக்கங்களை மேல் தரித்து உள்ளத்தின்கண் காமக்குரோத முடையராய்ப் பஞ்சமாபாதகங்களைச் செய்தொழுகும் வஞ்சகரை யெப்படி அடியவரென்று சொல்லப்படும். ஆனால் அவர்கள் பெரியவர்கள் தரித்தற்குரிய விபூதி, ருத்ராக்கம், காவி முதலானவைத்தரித்திருந்தாலும், பசுவானது புலித்தோலைப் போர்த்து வஞ்சகமாக பயிரை மேய்தலொக்கும்.

வலியினிலமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல்
போர்த்து மேய்ந்தற்று'' என்றதாலறிக.

பெரியவர்களுக்குரிய சின்னம் தரித்துப் பெரியவரைப் போல் பார்வைக்கு விளங்கினும் அவர் நடைகுணம் அவருக்கு வாராது.
"கற்பூரம் போலக்சடலுப் பிறந்தாலுங்
கற்பூரமா மோ கடலுப்பு - பொற்பூறும்
புண்ணியரைப் போலவிருந்தாலும் புல்லியர் தாம்
புண்ணியராவாரோ புகல்' என்றதனாற் காண்க.

ஆகையால் திரிகரண சுத்தியுடைய மெய்யன்பர் பணியை மேற் கொண்டே சொல்லப்படுவது. இங்கு இவ்வுலகத்து மானிட சரீர மெடுத்தவர்கள் சிவனடியார்களுக்கு அமுது செய்வித்தல் அவர் திருவுருவத்தைத் தரிசித்தலே அவரடையும் பயனென்பது சத்தியம் என நூல்கள் கூறியுள்ளன.

"மண்ணினிற் பிறந்தார் பெருப்பயன் மதிசூடு
மண்ணலாரடியார் தமையமுது செய்வித்தல்
கண்ணினாலவர் நல்விழாப் பொலிவு கண்டார்த
லுண்மையா மெனி லுலகர் முன் வருகெனவுரைப்பார்.''
என்றதனாற் காண்க.

அல்லாமலும் ஆயிரம் அக்கிராரம் கட்டிப் பிராமணர்களுக்குத் தானஞ் செய்வதும் ஆயிரக்கணக்கான சிகரங்களையுடைய கோயில் முதலானவைகளைக் கட்டுவதும், உச்சிகாலத்து ஒரு சிவஞானிக்குப் பிச்சைபண்ணு விக்கும் பகலூ ணுக்கு நிகர் ஆகாது.

''அகரமாயிரம் மந்தணர்க் கீயிலென்
சிகரமாயிரஞ் செய்து முடிக்கிலென்
பகருஞானி பகலுண்பலத்திற்கு
நிகரிலையென்பது நிச்சயந்தானே" எனலாற் காண்க,

சிவாலயத்தில் சிவபெருமானுக்கு நைவேத்யமாயின் அடியார் கட்குத் திருப்தியாகாது. அடியார்க்கு மாகேஸ்வரபூசை நடத்தில் அது சிவபெருமானுக்குத் திருப்தியாகும்.

"படமாடக்கோயில் பரமற்கொன்றீயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கங்காகா
நடமாடக்கோயில் நம்பர்க்கொன் றீயிற்
படமாடக் கோயில் பரமர்க்கங்காமே" எனலாலறிக.

சிவஞானமிக்க பெரியவர்களுக்கு அவர் வேண்டிய பொருளை சிறிதளவு கொடுத்தவர்களுக்கு அப்புண்ணியமானது நிலத்தைப் போலப்பாவியும் மலையைப்போலுயர்ந்தும், பிறவியாகிய சமுத்திரத் தழுந்தா வண்ணமெடுத்து மேலாகிய போகத்தைக் கொடுத்து மீண்டும் பாசத்தை பொழிக்க இந்தவுலகத்து உயர் குலத்துதித்துச் சரியை முதலிய மூன்று படியுங்கடந்து அற்புதமாகிய உண்மை ஞானத்தையடைந்து சிவபெருமானுடனிரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய பதவியைக் கொடுக்கும்.

''சிவஞானச் செயலுடையோர் கையிற்றானந்
திலமளவே செய்திடினு நிலமலைபோற் றிகழ்ந்து
பவமாயகடலினழுந் தாதவகை யெடுத்துப்
பரபோகந்துய்ப் பித்துப்பாசத்தை யறுக்க "

“தவமாரும் பிறப்பொன்றிற் சாரப்பண்ணிச்
சரியைகிரியா யோகந்தன்னினுஞ் சாபாமே
நவமாகுந் தத்துவ ஞானத்தை நல்கி
நாதனடிக் கமலங்க ணணுகவிக்குந் தானே.''

"தாளாற்றித் தந்தபொரு ளெல்லாந்தக்கார்க்கு வேளாண்மை செய்தற்பொருட்டு"

''உறக்குந் துணையதோ ராலம் வித்தீண்டி
யிறப்பநிழற் பயந்தால் கறப்பயனுந்
தாஞ்சிறி தாயினுஞ் தக்கார்கைப் பட்டக்கால்
வான் சிறிதாய்ப் போர்த்துவிடும்.''

இதுவரையில் மெய்யன்பருக்கு அமுதுபடைத்தல் அவருக்கு வேண்டியதைக்கொடுத்தல் சொல்லப்பட்டது. இதன் மேல் பெரியோர்கள் தரிசனையின் பலன் சொல்லுவாம்.

ஒர்காலத்தில் நாரதமுனிவர் தமது ஆசாரியராகிய சனற்குமார மகாமுனிவரிடம் சென்று அவரது பாததாமரைகளில் விழுந்து நமஸ்கரித்து நின்று, சுவாமி பெரியோர்கள் தரிசனைக்குப்பலன்யாதெனக் கேட்க, அவர் அதற்கு அதோசெல்லும் நரியைப் போய்க் கேளென்று சொல்ல, அவரதிசீக்கிரமாகத்தானே நரியிடம்சென்று ஓ சம்புவே! பெரியோர்கள் தரிசனைக்குப் பலன்யாதென்று வினவ உடனே அந்தரி தொட்டென விழுந்து பொட்டென விறந்து போயிற்று.

அதைக்கண்ணுற்ற முனிவர் மனக்கிலேச முடையவராய் ஆசாசியர் சமுகம் செல்லாது, திரிலோக சஞ்சாரியாய்ச் சிறிது காலங்கழித்து மீண்டும் குருசமுகம் வந்து முன் பிரசனையைக்கேட்க, அதோசெல்லும் மானிடஞ்சென்று கேளென, அவர தனிடஞ்சென்று ஓ சாரங்கமே! பெரியவர் தரிசனைக்குப் பலன் யாதென்று வினவிய பாத்திரத்தில், சாரங்கம் விழுந்து வேறங்கத்தில் புகுந்தது.

இதைக் கண்ணுற்ற முனிவர் கவலைமிக்குளராய்க் காலவரையறை சிறிது கழித்து இறைவனிடம் வந்து வணங்கிச் சுவாமி பெரியவர் தரிசனை பலன் அருள் செய்யவேண்டுமென, அதற்குத் குருசுவாமி அப்பா அதோ தெரியும் பதியில் ஓர் கிருகத்தில் ஓர் பசு கன்றுபோடப் போகிறது அக்கன்றைக் கேளது சொல்லுமென, உடனே அவர் அவ்வூருக்குப்போய் அவ்வீட்டை யடைந்து அப்போது பிரசவித்த அவ்விளங் கன்றைக் கண்ணுற்று ஆவின் கன்றே! அரனடியார் தரிசனைக் குப்பலனறையென அட்சணமே தட்சணம் சேர்ந்தது. அதுகண்ணுற்ற முனிவர் கவலையுந் துக்கமு மிக்குள்ளவராய், குருசமுகம் வந்து பாதத்தில் விழுந்து நமஸ்கரித்துச் சுவாமி! அடியேன் பெரியவர்கள் தரிசனை க்குப்பலன் கேட்டகாலத்துச் சம்பு மான் ஆன்கன்று முதலான மூன்றையும் கேட்கும்படி கட்டளையிட்ட வண்ணம் யான் கேட்ட மாத்திரத்திலவைகளிறந்து போயின். எனது சங்கை நிவாரணமாக வில்லை யென, குரு ஆனால் இந்தப் பட்டினத்தரசனுக்குப் புத்திரனில்லை அவனுக்கு விபூதி கொடுத்துத் தம்பதிகளை ஆசீர்வதித்து வா அவனுக்குப் புத்திரன் பிறக்கும் அப்பிள்ளையைக் கேளது சொல்லுமென உடனே நாரதர் அரசனிடஞ்செல்ல அரசன் முனிவரைக்கண்டு வணங்கித் தங்குறைகூறத் தம்பதிகளுக்கு விபூதி கொடுத் தாசீர்வதிக்க முனிவரருளால் கருவுற்று, மதியம்பத்துஞ் சென்றுமைந்தனைப் பெறுந்தருவாயில் அங்குநாரதர் எழுந்தருளி அக்குழந்தையைப் பூசம்பந்தப் படாமல் பொற்றாம்பாளத்தில் ஏந்தச்செய்து நடுவே திரையிடுவித்து அரசன் முதலானோர் தன்னைச் சூழ்ந்திருக்க முனிவர், மன்னவன் மைந்த! மகான்கள் தரிசனைக்குப் பலன்யாதென, உடனே அக்குழந்தையானது மகாமுனிவரே, நான் தாழ்வாகிய நரிசன்மத்தில் தேவரீரைத்தெரிசித்த பலன் சிறிது உயர்வாகிய மான் ஜென்மம் வந்தது. மீண்டுமப்போது தரிசித்தபலன், மிருகங்களுக்கும் உத்தமாகிய பசுஜென்மம் வந்தது. சுவாமிகளை அப்போது தரிசித்தபலன் அனேக சம்குணங்களும் நிறைந்து உலகமெல்லாமொருகுடையில் அரசாளும் அரசன் மகனாய்ப் பிறந்தேன். இன்னும் பெரியவர்கள் தரிசனைக்குப் பலன் யாது சொல்லப் போகிறேனென்று சொல்லி அக்குழந்தை வாயை மூடிக்கொண்டது. நாரதமுனிவர் கிலேசந்தீர்ந்து பேருவகையுற்றனர்.

ஆகையால் முன்சொன்ன இரண்டு புண்ணியத்திலும் இப்பதி புண்ணியமே சிவஞானத்தையளித்துச் சிவபெருமான் பாத்தாமரையிலிரண்டறக் கலப்பிக்கச் செய்வது ஆகையாலிப்புண்ணியத்தையே சைவசமயப் பற்றுள்ள நாமெல்லாம் கடைப்பிடித் தொழுகல்வேன்டும்.

பாசபுண்ணியமானது மனைவிபுத்திரர் முதலியோரைக்குறித்துச் செய்வது. அப்படி செய்தலாலடையும்பயன் யாதென்றால் ஜென்மங்கள் தோறும் மாறிமாறிப்பிறந்து துக்கங்களை யனுபவித்தலேயாகும்.

பசுபுண்ணியமானது யாகாதிகிருத்தியஞ் செய்தல். தானதருமஞ் செய்தல் அதற்குப்பலனாவது சரீராந்தியத்தில் சுவர்க்கமனுபவித்தலேயாம். அந்தச் சுவர்க்கலோகமும் அங்குற்ற தேவர்கள் வாழ்வும் போகமும் அநித்தியம்.

அப்படி சுவர்க்கத்தை யடைந்தவன் இவ்வுலகத்து எவ்வளவு காலம் உடல் உளதோ அவ்வளவுதான் அங்கீகரிக்கக்கூடும். மீண்டும் மண்ணுலகம் வந்து பிறக்கிறதே பலனாகும்.  
பதிபுண்ணியம் சிவபெருமானைக் குறித்தும் அவனடியார்களைக் குறித்தும் செய்வது. ஆனால் சிவபெருமானைக் குறித்துச் செய்யும் புண்ணியத்தினும் அடியவர்களைக்குறித்துச் செய்யும் புண்ணியமதிகம், இதற்குப்பலன் சிவஞானத்தை யடைந்து சிவபெருமானுடனிரண்டறக் கலத்தலாகிய சிவசாயுச்சியத்தை யடைதலேயாம்,

கா. வேதாசல முதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - பிப்ரவரி / ஏப்ரல் ௴


No comments:

Post a Comment