Saturday, May 9, 2020



பஞ்சபிரம்மோபநிஷத்


1.     ஓம் பின்னர், அனாதிதொட்டு நிலையாக நிற்பது எது வெனப்பகவானை நோக்கிப் பிப்பலாதமுனிவர் கேட்டனர்.

2. சத்யோஜாதம், பகவானே அஃதென்ன? அகோரம், பகவானே அஃதென்ன? வாமதேவம், பகவானே அவையென்ன? தத்புருஷம், பகவானே இவையென்ன? எல்லாவித்தைகட்கும் தேசிகனாகிய ஈசானம்.

3. அவர் பூதபவுஷியங்கட்கும் ஈசானனாயிருக்கிறார்.

4. எல்லா இரகசியங்கட்கும், எல்லாதேவர்கட்கும் அவைகளின் எவ்வகையான நிறங்கட்கும், பாகுபாடு கட்கும், முயற்சிகட்கும் பிரபுவாகிய மகேச்சுரரே கதி.

5. மகாதேவருக்கும், மகாருத்திரருக்கும் நமஸ்காரம்.

6. ஓ சகலனே! உலகில் எவ்வகையான இரகசியங்கட்கும் இரகசியமானவற்றை என்னிடம் கேள்.

7. சத்யோஜாதம், இது விரும்புகின்ற எல்லாவற்றையும் அது கொடுக்கிறது. அது பூமி, பூஷா (சூரியன்), இலட்சுமி, பிரமா, திரிவிருத்ஸ்வர (சப்தம்), இருக்கு வேதம், காருகபத்யம், ஏழு சுரமுள்ள மந்திரங்கள், பீதநிறம், கிரியாசக்தி இவைகளைக் குறிக்கிறது.

8. அகோரம், அது எல்லாப்பாவங்களின் திரள்களையும் அழிக்கிறது, அது துன்பங்களையெல்லாம் சாந்தப்படுத்துகிறது, எல்லா செல்வங்களையுங் கொடுக்கிறது, அது ஜலம், சந்திரன், கௌரி, எஜுர்வேதம், மேகநிறம், சாந்தரேஸ்வரம், தட்சணாக்னி, ஐம்பது அசைகளுடன் கூடிய மந்திரங்கள், இரட்சிப்பு, இச்சாசத்தி இவைகளைக் குறிக்கிறது.

9. வாமதேவம், அது பெரு ஞானத்தைக் கொடுக்கிறது. அக்னி, வித்யாகலை, சாமவேதம், எட்டுக்கானங்களையுடைய சுரம், தீரஸ்வரம், ஆகவனீயம், அறிவு, விஞ்ஞானம், முயற்சி இருள் கலந்த வெண்மை நிறம்இவைகளைக்குறிக்கிறது. அவர் ஜோதி கோடி சூரியர்களுக்குச் சமமாகவிருக்கிறது, முழுசை தன்னியராய் மூவசைநிலைமைக்கும் தலைவராக விருக்கிறார், மனிதர்கட்கு எல்லா செய்கைகளின் பலன்களைத் தக்கவாறு கொடுக்கிறார். மூவகை சைதன்னியங்களாய் விளங்குகிறார், அவர் கட்கு எல்லாபாக்கியத்தையுமளிக்கிறார். அவர் மந்திரம் எட்ட சைகளுடன் கூடியது. (இதயமாகிய) எட்டிதழ் தாமரைமத்தியில் விளங்குகிறார்.

10. தத்புருஷம், அவர் காற்றினையும், பஞ்சாக்கினியையுமுடையவரா யிருக்கிறார். மந்திரங்களின் சத்திகளை நடத்துகிறார், அவர் ஐம்பது அட்சரங்களையும் அவற்றின் சுரங்களையும், அதர்வவேதத்தையும் உடையவராயிருக்கிறார், கோடிஞானங்கட்குத் தலைவராகவிருக்கிறார், அவர்மேனி எல்லாவுலகுமாம், அவரது நிறம் விரும்பு கிற கோரிக்கைகளை முடிக்கிற சிகப்பு, எல்லா வகையான நோய்கட்கும் சர்வரோக அவுஷதமாக விருக்கிறார், சிருஷ்டி திதிசக்மாரமுதலியவைகட்குக் காரணமாகவிருக்கிறார், சர்வசத்திமானாகவிருக்கிறார், மூவகைசைதன்ய நிலைகட்கு மேற்பட்டிருக்கிறார், அவர் நாலாவது (சதுர்த்தம்), சத்தாய், சைதன்னியராய், கருணையாகவே யிருக்கிறார், பிரமன் விஷ்ணு முதலியவர்களால் வணங்கப்படுகிறார், எல்லாருக்கும் பரமபிதா.

11. ஈசானம் பரமாதிகாரியெனவும், எல்லா அறிவினுக்கும் சாட்சியெனவும் தெரிந்துகொள்ள வேண்டியது, அவர் ஆகாயம், அவதரிப்பவரல்லர், ஓங்காரசுரத்தால் துதிக்கப்படுபவர், சாந்தாதீதர், அகரத்திலேயும், இதரசுரங்களிலேயு மாதிக்கமுடைய தேவமூர்த்தி, அவர்மேனி ஆகாயமே, பஞ்சகிருத்தியங்கட்குக் காரணர், பஞ்சபிரமங்களின் பெரிய உருவத்திலுள்ள ஐந்து காரியங்கட்குக் காரணராகவிருந்து அவற்றின் மேற் பட்டு மிருக்கிறார், அவரிடத்துள்ள மாயையால் எல்லா அவதார ங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு அவர் மாத்திர மிருக்கி றார், பஞ்சபிரமங்களில் ஊடுருவிப்பாய்ந்த அவர் சொந்த ஜோதியால் எப்போதும் பிரகாசிக்கிறார். ஒரு ஆதாரமின்றி முக்காலத்திலும் அவரே விளங்குகின்றார்.

12. மகாதேவராயும், உலககுருவாயும், காரணங்கட்கெல்லாம் காரணமாகவுள்ள சம்புவின் மாயையால் கலக்குண்டு எல்லாத் தேவர்களும் அவருண்மையைத் தெரிந்து கொள்ளுவதில்லை.

13. அவர் ஆகிருதி ஒருவர் முன்னில்லாது, உயர்வுக்கெல்லாமுயர்வானவர், உலகத்திற்கும், புருஷனுக்கும் ஆதாரமாயிருக்கிறார், அவரிடத்தில் உலகமுண்டாகிறது, அவரிடத்தில் உலகம் ஒடுங்குகிறது, பிரமம், சாந்தர், அவர் பரமோட்சவீட்டினர், அந்தப் பிரம்மம் நானே.

14. சத்தியோஜாதமும், மற்றெவையும் மகாபஞ்சபிரம்மமென அறியவேண்டியது, இது ஒரு பிரமத்தின் பகுதிகள். ஒன்றேயைந்தெனத்தெரிந்து கொண்டவர் ஈசானத்தையடைகிறார், பஞ்சபிரமங்களினுருவமாக விருக்கிற எல்லாவற்றிலும் நானே இருக்கிறேனெனவறிகிற வறிஞன் பிரமத்தையடைந்து நித்தியனாயிருக்கிறான், அவன் மலத்தினின்றும் விடுபடுகிறான், இதற்குச் சந்தேகமில்லை.
15. சம்பு பஞ்சாட்சர சொரூபியாக விருக்கிறார், அவர் பரபிரம்மம், நகரமுதல்யகரமீறாயுள்ளது பஞ்சாட்சரமெனத் தெரிந்துகொண்டு ஜெயிக்கவேண்டியது.

16. பஞ்சபிராமங்களின் இயற்கை பஞ்சாட்சரமென ஒருவன் உலகத்தையனுபவிக்க வேண்டியது.

17. பக்தியுடன் பஞ்சபிரமத்தைத் தியானிக்கிறவன் பஞ்ச பிரம்ம நிலையையடைந்து பஞ்சபிரம்மமாக விளங்குகிறான்.

18. இந்தப் பிரகாரம் மகாதேவர் மகானாகியகாலவனைப்பார்த்துக்கூறி அவனையாசீர்வதித்து மறைந்தனர்.

19. ஓ சகலா! முன்னம் கேட்கப்படாதனவும், நினைக்கப் படாதனவும் தெரிந்தன, ஓ கவுதமா! பூமியின் ஒரு பாகத்தை மாத்திரம் அறிவதினாலேயே அது காரியம், அதுகாரணத்திற்கு அன்னியமல்ல, ஒருலோகத்தானாகிய ஆபரணத்தைப் பார்த்ததினாலேயே மற்றைய லோகங்களாக்கப்பட்ட ஆபரணங்கள் காரியமெனத்தெரிகிறது, ஒரு இரும்பினால் செய்யப்பட்ட மற்றையகருவிகள் காரியமெனத்தெரிகிறது, ஆகலின் காரணத்திலிருந்து அதன் சுபாவம் வேறாயிருத்தலினாலேயாம். அவ்வாறே காரணம் காரியத்தினின்றும் வேறல்ல, காரியமானது அதன் காரணரூபத்தில் எப்போதும் நிலைபேறுடையதாகிறது, காரணகாரியம் வேறென்பது உண்மையாகவேதவறு', காரணமொன்றே, அதினின்றுமவன் வேறானவனுமல்ல, காரண காரியங்கட்கு உட்பட்டவனு மல்ல, வேற்றுமையுடைய காரணத்தைக்கண்டு பிடிப்பது கூடாமையாலே வேறென்பது தவறு, ஆகையினால் காரணமொன்றே அது நித்தியம் இரண்டாவதில்லை, இரண்டாவதல்லாத காரணமேசைதன்னியம்.

20. ஓ முனிவனே! தாமரை போன்ற ஒருசிறு வீடு (தேகமாகிய) பிரமபட்டினத்திற் காணப்படுகிறது, அதன் மத்தியில் தகராகாஸமிருக்கிறது, அது சத்து சித்து ஆனந்தம், அவர் முத்திவிரும்புவார் யாவராலும் தேடப்பட்டவர், யாதொருவித்தியாசமின்றி அவர் இருதயகுகையில் வசித்தலினால் சிவன் சம்சாரத்தினின்றும் விடுவிக்கிற இருதயனெனப்படுவன். இங்கனம் உபநிஷத்முடிந்தது.

                                  மணவழகு.

சித்தாந்தம் – 1913 ௵ - மார்ச் ௴

                   

No comments:

Post a Comment