Sunday, May 10, 2020



சைவ சித்தாந்த ஆராய்ச்சி வல்லுநர்
ஜெ. எம். நல்லசாமி பிள்ளையவர்களின் வரலாறு
[நல். முருகேச முதலியார்]

சைவ சித்தாந்தத்தின் கருத்துக்களை ஆங்கிலத்தில் எழுதி உலகெங்கும் பரவச் செய்தவர் காலஞ்சென்ற உயர் திரு. ஜெ. எம். நல்லசாமி பிள்ளையவர்களே ஆவர்.


மேனாட்டு தத்துவ அறிஞர்கள் ஆகமங்களைப் பற்றியும், பாசுபதம், பிரதியபிஞ்ஞை, சைவ முதலியவைகளைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். ஸ்ரீகண்டபாடியத்தைப் பற்றியும் அறிந்திருந்தார். ஆனால் ஸ்ரீமெய்கண்டதேவர் முறைப்படுத்திய வேதாகமோக்த சைவ சித்தாந்தத்தை அறிந்திலர். டாக்டர் வின்டர்னிட்சு 1 தம் நூலில் சில தந்திரசாத்திரங்களை மட்டும் குறிப்பிட்டார். டாக்டர் பால் டாய்சன் 2 சைவ சித்தாந்தத்தைப்பற்றிக் கூறும்போது சில ஆகமங்களை மட்டும் தான் குறிப்பிட்டார். டாக்டர் மாக்ஸ் மூலர் 3 தமது 'இந்திய அறுவகைச் சமயத்தைப் பற்றிய நூலிலிருந்து வடமொழி தென்மொழியிலிருந்த சிவாகமங்களின் ஞானபாத நூல்களைப் பற்றி அவர் சிறிது அறிந்திருக்கக் கூடுமென்று ஊகிக்க முடியுமானாலும், அவைகளைப்பற்றி சிறிதளவேனும் விரிவாகக் கூறவில்லை. டாக்டர் எல். டி. பார்னட் 4 ஒருவர் தான் மெய்கண்டாரின் சுத்த சைவத்தைப்பற்றி அறிந்திருந்தார். பின்னால் வடமொழி சிவஞான போத சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

1 Geschichte der Indischen Litteratur
2 Das System Les Vedanta, etc.
3 Six Systems of Indian Philosophy
4 Heart of India. 

பின்பு மேனாட்டுப் பாதிரி மார்களில் சிலர் தமிழ் சாத்திரங்கள் சிலவற்றை மொழி பெயர்க்கத் தொடங்கினார்கள். அவர்களுள் டாக்டர் கார்ல் கிரால், ரெவ். ஹோய்சிங்டன் 4a ரெவ். பூவுக்ஸ் முக்கியமானவர்கள். பேராசிரியர்கள் கோவெல்லும் கோவ்வும் 1878 ம் ஆண்டில் பதிப்பித்த சர்வ தர்சன சங்கிரகத்தில் 5  சைவதரிசனத்தைப் பற்றிய தாம் எழுதிய ஆங்கிலக்குறிப்புகளில் தென்னாட்டுச் சைவத்தைப்பற்றிச் சிறப்பாகக் குறிப்பித்து, தமிழ் 'சிவஞானபோதம்' , 'சிவப்பிரகாசம்' இவைகளைப் பற்றியும் கூறி, அந்நூல்கள் சங்கிரகத்தின் ஆசிரியரான மாதவர் பேசியுள்ள தத்துவத்தை வெகுவாக விளக்குகின்றன என்று எழுதியுள்ளார்கள். ஸ்ரீ சங்கராசாரியார் தமது பிரம்ம சூத்திர பாஷியத்தில் ஓர் இடத்தில் சைவசித்தாந்தத்தைப் பற்றி குறிப் பிட்டிருப்பதாகவும் அது எந்தமதம் (அதாவது பாசுபதமா, பிரதியபிஞ்ஞையா) என்று முடிவாகச் சொல்ல இயலவில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். 6

4a Hoisington H. R., Siva - gnana - potham, Instruction in the Knowledge of God. A metaphysical & Theological Treatise Translated from Tamil with an Introduction and notes.
5 Saiva - Darsana - Sangraha Translated by E. B. Cowell and A. E. Gough - p. 112.
6 Das Gupta, History of Indian Philosophy, Vol V

செவ். ஹோய்சிங்டன் ரெவ். கிரால் முதலியவர்கள் தமது மொழி பெயர்ப்புகளை ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். டாக்டர் போப் “திருவருட்பயனை''  7 மொழிபெயர்த்து தமது “திருவாசக'' மொழி பெயர்ப்பில் பின் சேர்த்துக் கொண்டார். ரெவ். "ஹோய்சிங்டன்' சிவப் பிரகாசத்தையும் ஒருவாறு மொழி பெயர்த்து 1854 ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகையில் வெளியிட்டதாகத் தெரியவருகிறது.8 சுருங்கச் சொல்லின் மெய்கண்ட சாத்திரங்களின் மூலநூல்கள் ஆங்கிலத்தில் அறிமுகமானது சுமார் இந்த அளவுதான் என்று கூறலாம். இவைகளெல்லாம் மேனாட்டவர்களாலேயே செய்யப்பட்டன. 8a தமிழ்நாட்டவர்கள் அதுவரையாதும் அவைபோல் வெளியிட்டதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினம், முதலியார் சபாபதி முதலியோரின் நூல்கள் (சுமார் 1863க்குப் பின்னால்) மூலங்களின் மொழி பெயர்ப் பல்ல. தமிழ் மூலங்கள் ஏட்டுச்சுவடிகளிலும் மடங்களிலும் மற்றும் கற்றோர் குடும்பங்களில் மட்டும் தான் இருந்த படியால் ஆங்கிலம் படித்த இந்தியர்களுக்குக் கூட கிட்டவில்லை.

7 Pope Rev. GU., Tiruvasagam, 1900 - pp xliv et seq 
8 The American Oriental Soc. Journal, 1854 quoted by Pope, p. xilv ibid.
8a The original translation of Sivagnanabodham & Sivaprakasam by Rev. Hosiengton and that of Sivagnana Siddhiyar by Dr. Graul was published more than forty years ago but they did not seem to have attracted by the attention of European & Indian scholars. Sivagnana Siddhiyar - Tr. by J. M. N. - P. ii of Introduction.

முதன் முதலாக "சிவஞானபோதத்தையும்'', "சிவஞான சித்தியாரையும்" முழுதும் மொழி பெயர்த்துக் குறிப்புரை எழுதிய பெருமை, காலஞ்சென்ற ஜெ. எம். நல்லசாமி பிள்ளையர்களுக்கே உரியது. அவருடைய சிவஞானபோதம் 1893-ல் வெளிவந்தது, பின்னால் சித்தியாரும் திருவருட்பயன் முதலானவைகளும் வெளிவந்தன.

திரு. பிள்ளையவர்கள் நமது சைவ சித்தாந்த மகாசமாஜம் பிறப்பதற்கு ஒரு கர்த்தராயும் இருந்தவர் 8b

8b சைவ சித்தாந்த மகாசமாஜம் பொன் விழா மலர் சமாஜப்பதிப்பு, 1955 - p. 14.

திரு. நல்லசாமி பிள்ளையவர்கள் 9 நல்ல சைவ வேளாளர் மரபில் 24 நவம்பர் 1864ஆம் ஆண்டு அவதரித்தவர். அவர்கள் முன்னோர்கள் தொண்டை நாட்டுக் காஞ்சியிலிருந்து சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் திருசிராப்பள்ளிக்குச் சென்று குடியேறியவர்கள். பிள்ளையவர்களின் பாட்டனார் குமாரசாமிப்பிள்ளை. அவர் நாள் தோறும் திரிசிரபுரம் கோட்டையிலிருந்து புறப்பட்டு காவிரியில் நீராடி திரு வானைக்காவில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ் வரியை வழிபடும் நியமமுள்ளவர். அவர்களது தனித் தவப்புதல்வரான மாணிக்கம் பிள்ளைக்கும் செல்லத்தம்மாளுக்கும் பிறந்தவர் நல்லசாமி. தகப்பனார் அரசாங்க அலுவலில் இருந்தார். சிறுவயதிலேயே மறைந்தார். இளம்பருவத் தில் நல்லசாமி கணக்காயரிடத்தில் பொதுக்கல்வியும், ஒரு ஓதுவாரிடத்தில் தமிழ் மறையும் பயின்றார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவ சாத்திரத்தைத் சிறப்புப்பாடமாகத் தெரிந்து, தமது 19 ஆம் வயதில் பி. ஏ. பட்டம் பெற்றார். பின் சட்டக் கல்லூரியில் பி. எல். பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்து வழக்கறிஞராக ஆனார். தமது 20ஆம் ஆண்டில் இலட்சுமியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வழக்கறிஞர் தொழிலில் பிரசித்திபெற்ற (பின்னர்) சர். சுப்பிரமணிய அய்யரிடம் பயிற்சி பெற்றார். 1893ல் ஜில்லா முனிசீப்பாக நியமிக்கப்பட்டு சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்க நீதித்துறையில் வழுவில்லாமல் பணி செய்தார். பின் உத்தியோகத்திலிருந்து விலகி மதுரையில் 1912ல் வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். மதுரை நகரசபையில் சிறிது காலம் உறுப்பினராகவும் இருந்தார். அலகாபாத்து முதலிய இடங்களில் நடந்த தேசிய காங்கிரஸ் மகாசபைகளுக்கும் விஜயம் செய்தார். தாராளமான மனம் படைத்தவர். விருந்தோம்பல் சுற்றந்தாங்கல் முதலிய பண்புகளுடன் வாழ்ந்தனர். ஆகம ஆராய்ச்சி வல்லுநர். திரு. சமணசாஸ்திரிகள் மாணவராக இருந்தபோது அவருக்கு எல்லா உதவிகளும் பிள்ளையவர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது.

9      வாழ்க்கை குறிப்புகளுக்குமிகவும் உதவியாயிருந்தது. திரு, ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளையவர்கள் “ செந்தமிழ்ச் செல்வி, மே. 1949 (சிலம்பு 23, பரல் 9) யில் எழுதிய கட்டுரை, வேறு தகவல்கள் திரு. ஜெ. எம். நல்லசாமி பிள்ளை யவர்கள் தாமே எழுதிய நூல்களின் முன்னுரைகளிலிருந்தும் யாம் பார்த்த வேறு நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. திருவாசகமணி திரு. கே. எம் பாலசுப்பிரமணியம் ஒரு முழு வரலாற்றை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அது இன்னும் வெளியாகவில்லை - நல். மு.

சிறு வயதிலேயே பிள்ளையவர்களின் கூரிய அறிவும் நினைவாற்றலும் நன்கு வெளிப்பட்டன. ஓயாத உழைப் பாளி. காலை முதல் இரவுவரை சிறிது கோமும் வீணாகக் கழிக்கா தவர். இரவில் வெகுநேரம் படிப்பவர். சிறு வயதி லேயே கந்தபுராணம், சித்தாந்த நூல்கள், இராமாயணம், பாரதம் முதலியவைகளில் ஈடுபட்டவர். திரிசிரபுரத்திலிருந்த போது நாகநாதசுவாமி கோயிலில் சைவ சித்தாந்த சபை யொன்றை நிறுவினார். அக்காலத்தில் சைவ சித்தாந்த சூரியனாய் விளங்கிய சிவத்திரு சோமசுந்தர நாயக்கரைக் கொண்டு பல சைவ சமய சொற்பொழிவுகளை நிகழ்த்துவித் தார். நாயகாவர்கள் தொடர்பும், திரு. மதகண்டன வெங்கட கிரி சாஸ்திரியாரவர்களின் தொடர்புமே பிள்ளையவர்களின் சாத்திர ஞானத்தின் வளர்ச்சிக்கும் கூர்மைக்கும் உதவியாக இருந்தது. அதைத்தாமே பாராட்டியுள்ளார் 10 பிரதி வெள்ளிக்கிழமையும் தம் நண்பர்களுடன் திருவானைக்கா சென்று தரிசனம் செய்து வருவார். வீட்டில் தேவார திரு வாசகப் பனுவல்களைப் பாடிப்பாடி இன்புறுவர். எப்போதும்  திருநீறு அணிந்த இன்முகம் படைத்தவர். சைவ சந்நியாசிகளிடத்தில் அன்பும் பணிவும் உடையவர். இதை விளக்க திரு. வி. க. அவர்களின் வாழ்க்கை குறிப்புகளில் ஒரு செய்தி கிடைக்கிறது. சென்னையில் செங்கல்வராயநாயகர் தோட்டத்தில் சிவத் திரு சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர் முன்னிலையில் பிள்ளையவர்களும் திரு. வி. கவும் 'அத்துவிதம்' என்ற பொருள் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். முடிவில் பிள்ளையவர்கள் சுவாமிகளை அடிவணங்கி விடைபெற்றனர். திரு. வி. க. அது செய்யாது விடைபெற்றார். வழியெல்லாம் அவர் மனம் அவரை வாட்டியது. வீடு சென்றபின் எங்கும் புலால் நாற்றம் வீசுவது போல் தோன்றியது. உறக்கமும் வரவில்லை. மறு நாள் சுவாமிகளை அடைந்து வணங்கி நிகழ்ந்ததைக் கூறினார். சுவாமிகள் புன்னகை செய்து சிவஞான சித்தியாரை எடுத்து முதல் எட்டு சூத்திரம் நம்மை பிரிப்பன. பின் நான்கு நம்மை சேர்ப்பன என்று கூறி விளக்கினார். திரு. பிள்ளையவர்கள் சிவ ஞான போதம் படித்ததின் பயனாக 12 ஆம் சூத்திரத்தை நடைமுறையில் இயல்பாகவே அனுஷ்டித்தார் போலும்!11

10     I may also say that my explanation of the text (Sivagnanabotham) has the full approval of Sri - la - Sri S. Somasundara Nayagar of Madras to whom I am largely indebted by means of his lectures and books and pamphlets for the little knowledge of Saiva religlon and philosophy which I may possess. Of course, I must not omit to mention my obligations, to Brahmasri Mathakandana Venkatagiri Sastrigal, the great Saiva preacher of Malabar, who is a Siddhanti and follower of Srikanta Charya's p. vii,'Sivagnana Botham'Tr. by) M. N. (Dharmapuram 1945)

11 திரு. வி. க.'' வாழ்க்கைக் குறிப்புகள், சென்னை 1944 - p. 102.

பிள்ளையவர்களது சைவ சமய ஆராய்ச்சி சிறு பிராயத்திலேயே தொடங்கியது. ஸ்ரீ நாயகர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இவர்களது நூல்களினால் மிகவும் தூண்டுதல் அடைந்தது. அரசாங்க நீதிபதியாய் இருந்த காலத்தும் அது குறையவில்லை. 1893ஆம் ஆண்டில் திருப்பத்தூரில் ஜில்லா முனிசீபாக இருந்தபோது தமது 'சிவஞானபோத' ஆங்கில மொழி பெயர்ப்பை வெளியிட்டார். பண்டிதர் முருகேசம் பிள்ளையும், சென்னை தண்டலம் பாலசுந்தர முதலியாரும் உரைகளை ஆராய்வதிலும், எழுதினதைப் பார்த்துக் கருத்துகள் வழங்கியும் உதவியதாகத் தெரிகிறது. 12 1897ல் " திருவருட்பயனின்' ஆங்கில மொழிப் பெயர்ப்பும், பின் சிவஞான சித்தியார் மொழி பெயர்ப்பும் வெளிவந்தன.

12 Sivagnana Botham Tr. by J. M. N. Pp. 4 – 5 of Preface.

நூல்களை வெளியிடுவதைப்போல் பத்திரிகைகளும் மிகவும் தேவை என்பதை திரு. பிள்ளையவர்கள் நன்கு அறிந்தார். 1897ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில்'' Siddhanta Deepika' or Light of Truth என்ற பத்திரிகையையும் தமிழில் உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்ற பத்திரிகையையும் ஆரம்பம் செய்தார். ஆங்கிலப் பத்திரிகையில் பிள்ளையவர்கள் திருமந்திரம், சைவசமய நெறிவிளக்கம், முதலிய சித்தாந்த நூல்களை மொழி பெயர்க்கலாயினர். அப்பத்திரிகையில் பிரம்மசூத்திரத்தின் ஸ்ரீ கண்டபாடியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் திரு. மகாதேவ சாஸ்திரி அவர்களினால் வெளிவந்தது. இப்பத்திரிகையில் எல்லா சித்தாந்த ஆகம சாஸ்திரங்களை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்று பிள்ளையவர்கள் ஆசைப்பட்டார் 13 ஆங்கில 'சித்தாந்த தீபிகை' மேனாட்டிலிருந்த கீழ்நாட்டுத் தத்துவத்தில் ஈடுபட்ட அறி ஞர்களுக் கெல்லாம் விருந்தாக இருந்தது. முக்கியமாக தமிழ் சாத்திரங்களின் மூலங்கள் மொழி பெயர்ப்பில் வந்ததைப் பேராசிரியர் மாக்ஸ் மூலர் பாராட்டினார்கள் 14 பல இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தப் பத்திரிகை இடங்கொடுத்தது 15 இப்பத்திரிகை 14 ஆண்டுகள் நடந்தது. அதுசைவ சித்தாந்த மகா சமாஜத்தின் பத்திரிகையென்று கூட கருதப்பட்டது. தமிழ்ப் பத்திரிகை ஓராண்டுதான் நடந்தது. 'சித்தாந்த தீபிகை' யின் முழுப்பொறுப்பும் பிள்ளையவர்களதே என்று தெரிகிறது. அதில் பழந்தமிழ் நூல்களாகிய கலித்தொகை, பத்துப்பாட்டு முதலியவைகளின் மொழிபெயர்ப்புகளும் கூட இடம் பெற்றன.

13 Sivagnana Siddhiar Tr. by J. M. N. p. ii of Introduction " Before I lay down my mortal coil, I hope to make it my proud boast that I and my friends and co - wo kers had translated all the fourteen Siddhanta sastras to gether with other works on Agamanta. "
14 "Unfortunately, few scholars only have taken up as yet the study of the Dravidian languages and literature Such journals as the Light of Truth of the Siddhanta Deepika have been doing most valuable service. What we want are texts and translations and any information that can throw light on the chronology of Indian philo sophy - Prof. Max Muller.

15 "I am glad to say also that I was the means of attracting a large number of students to the study of Tamil Literature, Antiquities and Saiva Philosophy, both in Tamil and Sanskrit and their contributions have found place in the pages of this Journal'- J. M. N -, p. ii of Siddhiyar,

பிள்ளையவர்களது ஆராய்ச்சிக்கட்டுரைகள் பலவற்றைத் திரட்டி 1911ம் ஆண்டில் “Studies in Saiva Siddhanta" 16 என்ற தலைப்பில் வெளிவந்தது. அந்நூலுக்கு டாக்டர் ரமண சாஸ்திரிகள் ஒரு சீரிய முன்னுரை எழுதியுள்ளார்கள். அது பிள்ளையவர்களின் மகன் திரு. ஜெ. என். ராமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.

16 Studies in Saiva Siddhanta Meykandan Press, Madras - 1911.

பிள்ளையவர்கள் பெரிய புராண நாயன்மார்களது சரிதங்களின் உட்கருத்தை "Indian Patriot" என்ற பத்திரிகையில் எழுதலானார். அவைகளை திரு. ராமநாதன் தொகுத்து ஒரு நூலாக 1924ல் வெளியிட்டார். பிள்ளையவர்களின் பல துறைப்பட்ட கட்டுரைகள் Tamilian Antiquary,' ‘New Reformer' முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளிலும் “செந் தமிழ்” "சித்தாந்தம்" முதலிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் வந்தன.

பிள்ளையவர்கள் 1907ல் கல்கத்தாவிலும் * 1911ல் அல காபாத்திலும் நடந்த சர்வ சமய சம்மேளனங்களின் (Convention of Religions) ஆகம அத்துவித சமயத்திற்கு ஆணையாளராகப் பங்கெடுத்துக் கொண்டு அரிய சொற்பொழிவுகளை யாற்றினர். சாத்திர ஞானம் மட்டுமன்றி சொல் வன்மையுமுடையவர். அவர் கட்டுரைகள் Prof. Max Muller (Germany), Prof. Julian Vin - sen (France) Prof Frazer and Dr. L. D. Bar nett (Oxford), Dr. G. U. Pope முதலியவர்கள் கவனத்தை ஈர்த்தன.

* The proceedings of the convention of Religions in India 1909 Published by Vivekananda Society calcutta vol lip. 110 - 136.  

சித்தாந்த சாத்திரங்களில் பிள்ளையவர்கள் மொழி பெயர்த்தவை : சிவஞானபோதம், சித்தியார், திருவுத்தியார், உண்மை விளக்கம், வினா வெண்பா, கொடிக்கவி, திரு வருட்பயன், இருபா இருபஃது. மற்றைய நூல்களையும் ஸ்ரீ கண்டபாடியத்தையும் வெளியிட அவாவுடையவராக இருந்தார் 17 

17 My edition of Sivagnanabodha translation is now out of print and I hope to issue it next together with Sivaprakasam and other minor works after my edition of'Srikanta Bhasya is published'- p. xl, of introduction to J. M. N. - Siddhiyar.
பிள்ளையவர்கள் அந்தக் காலத்திலிருந்த சைவப் பெரியவர்களின் நட்பையும் பாராட்டு தலையும் பெற்றிருந்தார். அவர்களுள் அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார், காசிவாசி செந்திநாதய்யர், தூத்துக்குடி சிவகுருநாதம் பிள்ளை, பொ. முத்தையா பிள்ளை, திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள், இலங்கை முதலியார் சபாரத்தினம், டி. கோபால செட்டியார் 17a திரு. வி. கலி யாணசுந்தர முதலியார், இருக்கம் ஆதிமூல முதலியார் முதலியோர்கள் ஆவர்.

17a D. Gopala Reddi - New Light on Saiva Siddha ntha J. M. Dent London.

முக்கியமாக நாகை திரு. வேதாசலம் பிள்ளை (பின்னர் மறைமலையடிகளார்) அவர்களுடன் நெருங்கிய நட்புடைய வராயிருந்தனர் இவ்விருவரும் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் ஆதரவும் அருளாசியும் பெற்று நமது சைவ சித் தாங்கமகாசமாஜத்தைத் துவக்கிவைத்தார்கள். தமிழ்த்துறையிலும் சேது சமஸ்தானாதிபதி பாஸ்கரசேதுபதி, உ. வே. சுவாமிநாதய்யர், ரா. ராகவய்யங்கார், கதிரேசன் செட்டியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை முதலியவர்களுடைய நட்பைப் பெற்றிருந்தார். டாக்டர் போப்பின் தொடர்பும் பெற்றிருந்தார். சென்னை கவர்னர் ஆம்த்தில் பிரபு ஒரு பேட்டியில் இவரது மதிநுட்பத்தைக் கண்டு வியந்தார். சிகாகோவிலிருந்து திரும்பி வந்த சுவாமி விவேகாநந்தருடன் பிள்ளையவர்கள் சந்தித்து 17b பேசுகையில் சைவசித்தாந்தத்தைப் பற்றிப் பேசியதாகவும் சுவாமிகள் தாம் அதுவரை அம்மெய்ப் பொருள்களைப் பற்றிக் கேட்டதில்லை யென்று கூறினதாகவும் தெரிகிறது. பின்னால் பிள்ளையவர்கள் தமது Studies in Saiva Siddantha என்ற நூலை சுவாமிகளுக்கு அனுப்பின தாகவும் தெரிகிறது. ஆனால் சிறிது காலத்துக்குள் சுவாமிகள் பரகதி அடைந்தார்.   

17b “On February 8 (1897) a deputation came to him - all Saivaite from Truppathur to ask him questions about the fundamentals of the Advaida philosophy Life of Swami Vivekananda - Advaida Ashram edn 1949 - p. 473 - 474.

சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இரண்டு ஆண்டு விழாக்களில் (நாகப்பட்டினம் 1908, சென்னை 1911 பிள்ளையவர்கள் தலைமை தாங்கியுள்ளார். பல சைவ சபைகளை பல்வேறு இடங்களில் நிறுவியும், தலைமை தாங்கியும் சைவத்திற்குத் தொண்டு புரிந்தார். 1913 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த சமாஜ ஆண்டு விழாவில் திரு. வி. க. சிவஞான போத மூலம் வடமொழியல்ல என்று கூறிய போது அதை 'தப்பு, தப்பு' என்று கூக்குரலிட்டதாக எழுதப்பட்டுள்ளது. 18

18 திரு. வி. க. " வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் 602

நல்லசாமி பிள்ளையவர்கள் வாழ்க்கைத் திறனுக்கு அப்பரடிகளே மேல்வரிச்சட்டமானார் 19 என்பது விளங்குகிறது. இறுதி நாள்வரை அவர் படிப்பிலும் தொண்டிலுமே கழித்தார். சிலகாலம் நீர்நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அந்நோய் இறுதியில் பிளவையாகத் தோன்றி ஒரு திங்கள் வாட்டியது. தமது 56ஆம் ஆண்டில் 11-8-1920 அன்று சிவன் சேவடி அடைந்தார். இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் மறைவுக்குக் கற்றவர்களும் மற்றவர்களும் வருந்தினார் கள். அவர் பூதவுடல் மறைந்தது. ஆனால் அவர் புகழுட லாகிய அவர் எழுதிய நூல்கள் இன்னும் ஆவலுடன் அறி வாளிகளால் படிக்கப்பட்டுப் போற்றப்படுகின்றன. சைவ சித்தாந்தத்தைத் தெளிவான முறையில் விளக்கியவர் அவரே. அவர்காலத்தில் தமிழ் மூலங்கள் கூட சுலபமாகக் கிடைத்திராது. சிவஞான மாபாடியமும் சித்தியார் அறுவரு ரைகளும்கூட கிடைத்திராது. நூல்களின் அட்டவணைகிடைக் காததைப்பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். 20 முதன் முதலாக சித்தாந்தத்தைப்பற்றிய அதிகமாக நூல்கள் எழுதியவர் இவ ரே. இவருக்குப் பின்னும் இதுவரை அதையொத்த அளவில் அத்தகைய பணி எவரும் புரியவில்லை. டாக்டர் ராதா கிருஷ்ணன் போன்ற பேராசிரியர்களின் தத்துவப் பெருநூல்களில் சைவத்தைப் பற்றிக் கூறப்படும் இடங்களில் பிள்ளையவர்களின் நூல்களே சில கருத்துக்களுக்கு ஆதாரங்களாகக் காட்டப்பட்டுள்ளன. பிள்ளையவர்கள் வேறு தத்துவங்களை நன்கு கற்றவராகையால் ஒப்புவமையும் வேற்றுமையும் கூறும் திறம் இவர் நூல்களில் மிளிர்கின்றது. “பிரம்மவாதின்' முதலிய பிற பத்திரிகைகளில் கூறிய கருத்துக்களைப் பல விடங்களில் அவர் வாதாடியுள்ளார். அவர் நுண்மாண் நுழைபுலமும் ஆய்வுத்திறனும் வியக்கத்தக்கது. டாக்டர் போப் 21 இவர்களது சிவஞான போதம் என்ற நூல் கையுடனிருக்க வேண்டிய ஒரு நூல் என்று எழுதியுள்ளார். டாக்டர் ரமண சாஸ்திரி 22 இவர்களின் ஆழ்ந்தகன்ற படிப்பை வியந்துள்ளார்கள்.

19 ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை - செந்தமிழ்ச் செல்வி'மே. 1949.
20 "There was hardly any bibliography on the subject in English before I commenced my work - p. ii. of'Studies in Saiva Siddhanta',.
21 “Mr. J. M. Nallaswami Pillai, a learned Saivaite of Madras has recently published a translation of Siva jnana - bodham with valuable notes which is a most useful compendium - p. xlili of “Tiruvasagam''.
22 “One of the most well - informed interpreter of the Tamil development of the great Agamic School of thought " - p. 1 of Introduction to " Studies in Saiva Siddhanta".

திரு. பிள்ளையவர்கள் சைவ சித்தாந்த நூல்களை ஆங்கிலப்படுத்தித் தமிழ்ப்பெருமையையும் சைவப்பெருமையையும் மேல்நாடுகளுக்குத் தெரியும்படி செய்தவர். "அவாது புலமைத் திறனும் ஆய்வுத்திறனும் தமிழ்நாட்டில் வேறெவர்க் குண்டு” என்று கேட்கும் படியான உயர்ந்த நிலையில் திகழ்ந்தவர். அன்னாருடைய ஊக்கம் இல்லாதிருக்குமாகில், சைவ உலகம் தற்போது அடைந்துள்ள மேல் நிலைமை அடைய வாய்ப்பு இருந்திருக்காது.

இந்தப் பெருமகனாரை திரு. சி. எம். ராமச்சந்திரன் செட்டியார் “சைவ மன்னாதி மன்னர்” என்று பாராட்டுகிறார். 23 பிள்ளையவர்களின் புகழ் நீடு நிலவுக! அவர்காட்டிய வழியை நாம் பின்பற்றுவோமாக!

23 சமாஜப் பொன் விழா மலர் - p, 10.
சித்தாந்தம் – 1964 ௵ - நவம்பர் ௴

No comments:

Post a Comment