Sunday, May 10, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
விசுவாசம்.

இந்த நிலவுலகத்தின்கணுள்ள சீவதோற்றங்கள் அனைத்தினும் சிறந்தது மானுட தோற்றம். மானுட தோற்றம் எடுத்தார்க்கெல்லாம் மிக முக்கியமாயுள்ளது சமயம். இந்தச் சமயத்துக்கு இன்றியமையாச் சிறப்பினதாயுள்ளது விசுவாசம். இந்தவிசுவாசம் சமயஞானங்களின் மாத்திரமல்ல, லௌகிக விஷயங்களிற்றானும் எமக்கு அத்தியா வசியகமாக வேண்டப்படுவதொன்று. ஆனால் இந்த விசுவாசம் சமயத் துறைகளில் நிகழுமிடத்து, இதனை இக்காலத்திலுள்ள அறிவுப் பிரியர் சிலர் நகையாடத் தொடங்கிக் கொண்டார்கள். இதுவும் கலிகால வலி என்றே சொல்லத்தக்கது. மக்கட்பிறவி எடுத்தார் அனைவர்க்கும் விசுவாசம் என்பது இன்றியமையாச் சிறப்பிற்றாயதோர் அணிகலம், ஆதலின் அதனைக் குறித்து ஆராய்ச்சி செய்வது பெரும் பிரயோசன மாமெனக் கருதினேம்.

விசுவாசம் இன்னதென்பது.

விசுவாசமாவது உண்மை எனக் கொண்டதொரு கொள்கையில் உறைப்புற்று நிகழும் உள்ளத் துணர்ச்சி. இந்த உணர்ச்சி ஆன்ம சிற்சத்தியின் ஓர் இயற்கைக் குணம். இதுநமது சுயேச்சையால் அமையுந் தகுதியுடைத்தல்ல. நமக்கு விசுவாம் பிறத்தற்கமைந்த ஏதுக்கள் இல்லாவிடத்து, நாம் எங்ஙனம் முயன்றாலும், விசுவாசம் பிறக்குமா றில்லை. அது பிறத்தற்கமைந்த ஏதுக்கள் நிகழுமிடத்து, எமது முயற் சியின்றித்தானே பிறக்கும். நமது சைதன்னிய ஆற்றலின் கண் யாதொரு உண்மை புலப்படுமிடத்து, அப்புலப்பாடு காரணமாக, அவ்வுண்மையைக் குறித்து நமது மனத்திலே ஓர் உணர்ச்சி தோன்றும். இவ்வுணர்ச்சியே விசுவாசம் எனப்படுவது. எமது சைதன்னிய சொரூபமே இவ்வுணர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

அறிவதும் உணர்வதும் ஆகிய இரண்டும் எமது சிற்சத்தியின் தொழில்களே யாயினும், இவை இரண்டற்கும் பெரிதும் பேதமுண்டு. உணர்தற்றொழில் (அறிவுபற்றி நிகழுமிடத்து), அறிதற் றொழிலுக்குப் பின்னர் நிகழ்வது. அறிதற்றொழில் எமது சைதன்னிய ஆற்றலின் புறத்தொழிலும், உணர் தற்றொழில் அதன் அகத்தொழிலுமா மென்று கொள்ளத்தக்கன. அறிதற்படி ஒன்றும், உணர்தற்படி பிறி தொன்றுமா மென்று கொள்ளினும் இழுக்காகாது,

விசுவாசந் தோன்று முறை.

விசுவாசந் தோன்று முறையினை நாம் ஆராயுமிடத்து, அது இயற்கை முறையும் விளக்க முறையுமென இருகூற்றதாம் என்று கொள்ளத் தக்கது. இயற்கைமுறையாவது எமது அறிவின் சகாயம் பெரிது. மின்றி, இயற்கைச் சார்புகள் காரணமாக எம்மிடத்துண்டாகும் உணர்ச்சி. இந்த உணர்ச்சியை நாம் ஆராயுமிடத்து, இதனுக்கேதுவாகிய கருவி மானுட தோற்றத்தின் மாத்திரமல்ல, சீவதோற்றங்கள் அனைத் தினும், அவ்வத் தோற்றங்களின் இயற்கை மரபளவாக அமைந்திருக்கக் காணலாம். தாவரங்களின்கணுள்ள பரிச உணர்ச்சியும், மிருகங்களின் கணுள்ள இயக்க உணர்ச்சியும் போல்வன இக்கருவி காரரணமாகவே பிறக்கும். மனிதனிடத்திலும், அறிவாற்றலைச் சாதிக்கும் பக்குவம் வந்தெய்துமளவும், இந்தக் கருவிகாரணமாகப்பிறந்த இயற்கை உணர்ச்சி மாத்திரமே உள்ளது. அறிவாற்றல் சாதிக்கும் பக்குவம் எய்தியபின், அச்சாதனை காரணமாக இவன்பாற் பிறக்கும் உணர்ச்சியே விளக்க உணர்ச்சி என்று கொள்ளப்படுவது. இந்த விளக்க உணர்ச்சிக்கு முக்கிய காரணமாய் உள்ளது இவனது அறிவுவிளக்கமாம். இந்த விளக்கமும் பிரத்தியட்சக் காட்சி சாட்சியக் காட்சி என்று இருதிறப்படும். இவற்றுள், பிரத்தியட்சக் காட்சியாவது தானாக ஒன்றனை நேரே காண்பது. சாட்சியக் காட்சியாவது தான் காணாத தொன்றைச் சாட்சியவாயிலாகக் கேட்டறிவது. இவ்விருதிறக்காட்சி களும் மாந்தர்க்கு அறிவு பிறக்கும் வாயில்களாம். இந்த விஷயத்தை நாம் நுணுகி ஆராய்வதுண்டெனின், உலகத்திலே மனிதர் எல்லாம் அறிவு பெறுவது அனேகானேகமாகச் சாட்சியக்காட்சி வாயிலாற்றா னே என்பது நன்கு போ தரும். நாம் எமதுபாலப் பருவத்திலே எமது பெற்றார் முதலிய சாட்சியங்கள் வாயிலாகவும், அதன் பின்னர் ஆசிரியர் முதலிய சாட்சியங்கள் வாயிலாகவும், அதன் பின்னர் அயலார்,உறவினர், நட்பாளர், அறிஞர் என்றின்னோரது சாட்சியங்கள் வாயிலாகவும் நாம் அறிவின் விருத்தியுறப் பெறுகின்றோம். மனுஷன் கிஞ்சிஞ்ஞன் ஆதலின் அவன் எல்லாக் காட்சிகளையும் பிரத்தியட்சமாகக் கண்டறிதல் கூடாது. சாட்சியக்காட்சி இவனது அறிவு விருத்திக்குப் பெருங்காரணமாகும். சாட்சியக் காட்சிகளைத் தள்ளிவிடுவதுண்டென் றால், நாம் மிருகவர்க்கங்களோடு வைத்தெண்ணப்படுவதே முடி.பாகும். அன்றியும் பிரத்தியட்சக்காட்சி வாயிலாக அறிதல் கூடாத உண்மைகள் அநந்தம் உண்டு. பூர்வ இதிகாசங்களைக் கற்பதெல்லாம் சாட்சி யக்காட்சி கொண்டேயாகும். நாம் எல்லாம் பிறத்தற்கு வெகுகா லத்துக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களை இப்போது நாம் பிரத்தியட்ச மாகக் காணுதல் சிறிதும் கூடாது. ஆகவே சாட்சியைக் காட்சியை நாம் தள்ளிவிட்டால், இதிகாசங்களைக் கற்றல் ஒருங்கே கூடாதாகும். இதிகாசங்கள் மாத்திரமல்ல, பொதுப்பட வித்தைகள் அனைத்தும் ஆசிரியனை நம்பி, அவனது சாட்சியங்கொண்டே கற்கப்படுனவாம். இங்ஙனங் கற்குமுறைதானே எமது அறிவு விருத்திக்குச் சிறந்த சாதனமாயுமுள்ளது. இந்தச் சாட்சியக்காட்சியை நாம் சீர்தூக்குவ துண்டாயின், இது எமக்குப் பிரத்தியட்சக்காட்சியினும் சிறப்புடைத் தென்பது தெற்றெனப்புலப்படும். பிரத்தியட்சக்காட்சி எமது அல்ப அனுபவத்தின் மாத்திரமே தங்கிநிற்பது. சாட்சியக் காட்சியோ எனின், எம்மினும் பன்மடங்கு சிறந்த ஆப்தரது அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இங்ஙனஞ்சிறந்த சாட்சியக்காட்சி காரணமாக நம்மிடத்தே சிளரும் விசுவாசமாகிய உணர்ச்சி எமக்குப் பெரிதும் சிறப்புடைத்தாம் என்பதையும், அவ்வுணர்ச்சி எமக்கு இயற்கை மாபாகக்கிளர் தலின், அதனை நாம் கொள்ளாதொழிதல் கூடாதென்பதையும், இங்ஙனம் எமக்குச் சாலச் சிறப்புடையதும், இயற்கைவழிவந் தமைவதுமாகிய விசுவாசத்தின் வழி நாம் ஒழுகுதல் பற்றி எம்மேற் குற்றம்பாரித்தல் பெருங்குற்றமா மென்பதையும் இக்காலத்தே அறிவான் மயங்கி அழியும் விஞ்ஞானவாதிகள் கவனித்தாற் பெரிதும் நன்மையுண்டாம்.

இனி இந்தப் பிரத்தியட்சக்காட்சி சாட்சியக்காட்சிகளைக் கண்ட அளவிலே நம்மிடத்தே விசுவாசமாகிய உணர்ச்சிதானாகத் தோன்று மாறு போலவே, நம்மைச் சார்ந்துள இயற்கைச் சார்புகள் காரணமாக, நமது அறிவுவிளக்கம் இன்றியும், நம்மிடத்தே ஓர் ஓர் உணர்ச்சி தோன்றுவதும் உண்டு, இது எம்மிடத்தமைந்து, எம்மை எல்லாம்தனது ஆஞ்ஞைவழி நடாத்தும் எமது இயற்கைத் தருமத்தின் வழித் தாகும். இந்தத்தருமத்தைக் கடத்தல் எவராலும் ஏலாது. அது மட்டோ! இவ்வியற்கைத் தருமத்தின் வழி ஒழுகுதல் தானே எமது விருத்திக்குப் பெரிதும் அனுகூலமுடையதோர் மரபாகும். நாம் இயற்கைக்கு மாறு கொண்டு ஒழுகுவதுண்டென்றால் நாம் விருத்தி யுறுதல் சிறிதும் கூடாதென்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை. ஆகவே இயற்கை வழிப்பிறக்கும் உணர்வாகிய விசுவாசத்தையும் நாம் பெரிது போற்றுதல் வேண்டுமென்பது நன்றாக நாட்டப்படும். உண்மை பேசுதல்வேண்டும் என்னும் விசுவாசம், எம்மிடத்தே, எமது பாலப்பருவத்தே, எம்மைச் சார்ந்துள இயற்கைச் சார்புகள் காரணமாகப்பிறக்கும். இந்த விசுவாசமாகிய உணர்ச்சி எமது அறிவுவிளக்கம் காரணமாக - அதாவது, உண்மைபேசுவதால் எய்தற்பாலதாகிய நன்மை இது என்று அறிந்து, அவ்வறிவு காரணமாக - நம்மிடத்துப் பிறப்பதல்ல, அங்ஙனமாயினும், அவ்வுணர்ச்சிவழி ஒழுகுவதே எமது கடனும், எமது விருத்திக்குரிய உபாயமுமாகும். இவ்வுணர்ச்சியைக் குறித்து நாம் சற்றே நுணுகி ஆலோசிப்பதுண்டெனில், இது வே நாம் இவ்வுலகத்திலே இயங்கும் இயக்கத்துக்கெல்லாம் முக்கிய மான கருவியென்பது நன்றாக நாட்டப்படும். நாம் எல்லாம் எங்கள் எங்கள் பாஷைகளைப்பயிலுமுறை அனைத்தும் இந்த இயற்கை உணர்ச்சி வாயிலாகவேயாம். பாஷைப்பயிற்சி மாத்திரமல்ல, எமது பழக்கங்கள் ஒழுக்கங்கள் முதலிய அனைத்தும் இவ்வுணர்ச்சியை ஆதாரமா கக்கொண்டே நம்பால் அமைவன. இங்ஙனஞ் சிறந்த இயற்கை உணர் ச்சியினது இன்றியமையாச் சிறப்பையும், அதன் வழி நாம் ஒழுகாதொழிதல் கூடாமையையும் ஒருசிறிதும் சிந்தியாது, அவ்வுணர்ச்சி வழிநிற்பாரை எல்லாம் பழித்துரைக்கும் தற்கால விஞ்ஞான வாதிகளது அறிவின் காலத்தை நாம் யாதுக்கொப்பிடுவோம்.

கண்டதையன்றிக் காணாததொன்றையும் உண்மையென்று நம்புதல் மரபாகாதென்பது, இக்காலத்துள்ள நவீன கல்வியின் பயனாய்க் கொண்டது. நாம் பிரத்தியட்சமாகக் கண்ட காட்சிகள் தாமும் பிழைபடுதலை நமது விஞ்ஞான அபிமானிகள் அறிகிலர் போலும்! இவைகள் பிழைபடுதலுங் கூடுமென்பது பற்றி இக்காட்சிகளை நாம் தள்ளாது கொள்ளுதல் போலவே, நமது அறிவுக்கு வருவாய்களாக இயற்கைமரபால் அமைந்துள்ள ஏனைத் துறைகளாற் பெறப்படும் காட்சிகளையும் நாம் கைக்கொண்டு ஒழுகுதல் வேண்டும். இங்ஙனமின்றேல், நாம் அறிவு பெறுவதும், இந்தப் பிரபஞ்சத்திலே சீவிப்பது தானும் ஒருசிறிதும் கூடாவாம். மனிதர் எல்லாம் அபூரணர் ஆத லின் அவர்களது காட்சி பிழைபடுதலுங் கூடும். இது கொண்டு நமக்குப் புலப்படுங் காட்சிகள் அனத்தையும் தூரம் போக்கிவிட்டு நாம் மௌட்டிக சிரேட்டராய் வாழ்வதோ மானுஷ்ய தருமம்! மனிதவர்க்கம் அனைத்திலும் சாதாரணமாக அமைந்துள இயற்கைத் தருமத்தை அனுசரித்தாலன்றி, எமக்கு விருத்திக்கிரமம் வாய்ப்பது சிறிதும் கூடாதென்பதையும், இந்த இயற்கைத் தருமத்தின் வழி நம்மால் அமையும் விசுவாசத்தை நாம் அலட்சியஞ்செய்வதுண்டென்றால், நாம் எல்லாம் நமக்கே துரோகஞ் செய்வதாய் முடியுமென்பதையும் நமது விஞ்ஞானாபிமானிகள் எல்லாம் சிந்தித்தல் பெரும்பிரயோசன முடை த்தாகும்.

விசுவாசத்தின் பிரயோசனம்

உண்மை உணர்வு தலைப்படவேண்டியது மக்கட்கெல்லாம் இன்றியமையாது வேண்டப்படும். உண்மையை அறிதன்மாத்திரையால் பயன் பெறுவது கூடாது. அதனிடத்தே விசுவாசமாகிய உணர்வு பிறந்தாற்றனே அவ்வறிவால் நாம் பயன் பெறுவதாகும் உணர்ச் சியே எமக்கு அனுபவத்தைப் பயப்பது அறிவு எமது நினைவுமாத் திரையில் நின்றுவிடுமன்றி, யாதொரு உண்மையின் விசிட்டத்தை எமக்கு அனுபவத்திற் காட்டாது. பொய் பேசுதல் குற்றமென்று அறிந்த மாத்திரையால் எமக்கு அவ்வறிவால் எய்துதற்குரிய பயன் சித்திக்கமாட்டாது. பொய் பேசுதல் குற்றமென்று உணர்ந்தாற்றானே எமக்கு அப்பயன் சித்திக்கத்தக்கது நாம் எமது சிற்சத்தி ஆற்றலின் இயற்கை நெறியினைக் குறித்துச் சிறிது ஊன்றிச் சிந்திப்பதுண்டெனின், உணர்ச்சியே எமது இயக்கம் அனை ததினுக்கும் காரணம் என் பது செவ்விதிற் போதரும், அறிவுவிளக்கம் இல்லாத மிருகதாவரங்கள் தாமும், இந்த உணர்ச்சியாற்றானே இயங்குகின்றன. மனிதன் தானும், அறிவின் விருத்தியுறுங்காறும் உணர்ச்சி ஒன்று கொண்டே இயங்குவன். அறிவின் விருத்தி அடைந்தபின்னரும், அவன் பெறும் அறிவு அவனது உணர்ச்சியிற் சென்று உறைத்தாற்றானே நாம் அவனைப் பிடித்தற்கு முயல்கின்றேம். ஆகவே உணர்வே எமக்கு அறிவினுஞ் சிறந்ததாகும். அறிவு உணர்வின்றிப் பயன்படமாட்டாது உணர்வு அறிவின்றியும் பயன்படும். அறிவினது சகாயம் சிறிதும் இல்லாமலும், உணர்ச்சிமாத்திரத்தானே எமக்கு வேண்டிய அநேக தொழில்களை நாம் பல முறையும் செய்வதுண்டு. நாம் எமது கண்களை இமைப்பதெல்லாம் அறிவு கொண்டல்ல. உணர்வு மாத்திரை யானேயாம். எமது அறிவு நிகழாமை பற்றிக் கண்களை இமைத்தல் குற்றமென்று யாரும் சொல்லமாட்டார். இவ்வுணர்ச்சியின் மாட்சியை நாம் உள்ளவாறு எடுத்துச் சொல்லப்புகின், இது எம்முண் மறைந்து நின்று எம்மை இயக்கும் ஓர் அற்புதயந்திரம் என்பது நன்குதுணியப்படும்.

இவ்வுணர்ச்சிக்குக் காரணமாகிய எமது இயற்கை விவேகம் (Instinct) எனப்படும் புத்திதத்துவமானது எமது சிற்சத்தியாற்றலுக்குரியதோர் கருவியாகும். இந்த இயற்கைக்கருவி, எம்முண் மறைந்து நின்று, எமது அறிவின் வியஞ்சகம் இன்றியும் எம்மை இயக்குவது. இந்தக் கருவியின் கண்ணே நாம் ஈட்டும் அறிவுசென்று உறைக்குமிடத்து, அவ்வுறைப்பளவாக இக்கருவியும் விருத்தியுறும். இக்கருவியை நாம் சமயஞானங் கொண்டு ஆராய்வதுண்டெனின். இதன் கண்ணே சிவசத்தியின் அதிட்டானம் விசேஷமாக அமைந் திருத்தலை செவ்விதிற் காணலாம். கடவுள் எம்மை உணர்வுக்குணர் வாய்நின்று இயக்குவர் என்று சமயசாத்திரங்கள் சாதிப்பதும் இக்கருத்துப்பற்றியேயாம். எம்மைத் தொழின்முறைகள் அனைத்தினும் இயக்குவர் கடவுளேயாயினும், அவர் அங்ஙனம் இயக்குவ தெல்லாம் இவ்வுனர்ச்சி வாயிலாற்றானேயாகலின், இவ்வுணர்ச்சி சிவச்செயலுக்கு மிக அணிமையிலுள்ள தோர்படி எனக் கொள்ளத்தக்கது. கடவுள் ஆன்மாக்களை எல்லாம் அவரவர் தகுதிப்படி உணர்ச்சியைக் கிளர்த்தி, அவ்வுணர்ச்சி வாயிலாக அவர்களை இயக்குவராதலில் இவ்வுணர்ச்சி எமக்கு எத்துணைச்சிறப்புடைய தென்பதும், இதன் வழி நாம் ஒழுகாதொழிவது கூடாதென்பதும் இனிது போதரும். அலா மலும், இவ்வுணர்வாற்றல் இல்லாவழி எமக்கு அறிவுதானும் பயன் படுவது சிறிதும் கூடாதாதலின், இங்ஙனம் சிறப்புடைய உணர்வை நாம் அலட்சியம் செய்து அறிவைமாத்திரம் பொருட்படுத்துவது, எமது அறிவின் சிறுமையைக் காட்டி நிற்கும் என்க.

இனி இவ்வறிவின் மேற்கொண்ட பேரபிமானங் காரணமாக, அறிவின்றி நிகழும் உணர்வே விசுவாசம் என்று சிலர் வாதிப்பர். இது பெருந்தவ றுடைத்தாம். என்னை? அறிவோடு கூடிய காட்சியிற்றானே எமக்கு விசுவாசம் பெரிது முண்டாதலின். ஆனால் அறிவின் வியஞ் சகம் இல்லாமலும் எம்மிடத்தே உணர்வு பிறத்தலும் உண்டு. இவ் வுணர்வு தானும் எம்மாற் பெரிதும் போற்றப்படத்தக்கதேயாம். அறிவோடு கூடிய காட்சியில் எமக்கு இயற்கை முறையாக விசுவாசமுண்டாதல் போலவே, உணர்வோடு கூடிய காட்சியினும் உண்டாவது. ஆனபின், அறிவோடு கூடியவழி எழுந்த விசுவாசத்தை மாத்திரம் கைக்கொண்டு, உணர்வோடு கூடியவழி எழுந்தவிசுவாசத்தைப் புறங்காண்பது எங்கனம் மரபாகுமோ? விசுவாசத்தின் விசேடத்தை, அது அறிவோடு கூடியவழி நாம் இனிது காணத்தக்கதாக இருக்க, அறிவு வியஞ்சகப்படாமைபற்றி அவ்விசுவாசத்தை நாம் அலட்சியஞ் செய்தல் விவேக தருமமாகுமோ? விசுவாசம் எங்கனம் தோன்றுமாயினும் அது எம்மால் ஆக்கப்படுவதல்ல, அது தோன்று தற்கியைந்த தகுதி காணப்படுமிடத்துத் தானே தோன்றுவது. இது மானுட இயற் கைத் தருமம், இவ்வியற்கைத் தருமத்தை நாம் விலக்குதல் கூடுமோ கூடுமெனின் இத்தருமத்தின் விலகி நாம் இயக்குமாறெங்ஙனம்? நாம் விருத்தி பெறுவதெவ்வாறு? மனிதர் எல்லாம் சிற்றறிவுடையராதலின், அவர்கள் எல்லாத் துறைகளையும் ஒருங்களந்து தமது அறிவிடைக் காண்டல் கூடாது, கூடாதாயினும், அவரிடத்தே அவா துவாழ்வுக்கு முக்கிய சாதனமாக அமைந்துள்ள உணர்வின் வழி ஒழுகுதலே அவர்க் கெல்லாம் இன்றியமையாப் பெருங் கடனாகும்.

இனி எமக்கு உண்மையாவது தான் யாது? எமது உணர்ச்சியில் உண்மையாகப் புலப்படும் ஒரு பொருளே எம்மால் உண்மை என்று கொள்ளப்படுவது. எமது உணர்ச்சி தவறுடைத்தாயினும் ஆகலாம். எமதுணர்ச்சிவழி நிற்றலே எமக்கெல்லாம் கடனாதலின், எமதுணர்வுக் காட்சிக்குச் சத்தியமாகத்தோன்றும் தோற்றத்தின் வழி ஒழுக வேண்டுவதே நாம் செய்யத்தக்கது. ஒரு தோற்றம் எமது சோத்தி பேந்திரியக் காட்சிக்கு விடயமாதன் மாத்திரையால், அது எமக்கு உண்மையாகமாட்டாது. அத்தோற்றம் எமது உணர்ச்சியிற் சென்று உறைத்தாலே நாம் அதனை உண்மை என்று கொள்வது கானற்சலம் எமது சோத்திரேந்திரியத்துக்கு விடயமாயினும், அது உணர்ச்சியிற் சென்று உறையாமையினால், அதனை நாம் உண்மை என்று கொள்வதில்லை. ஆகவே உணர்வு தானே எமக்கு அறிவினும் மிகச்சிறந்ததோர் சாதனம் என்பது எல்லாரும் ஒத்துக்கொள்ளத்தக்கது.

அறிவு நமக்கெல்லாம் பெரிதும் சிறப்புடைய தென்பதை நாம் சிறிதும் மறுப்பதில்லை. அறிவோடு கூடாத உணர்வினும், அறிவோடு கூடிய உணர்வு சாலச்சிறப்புடைத்தேயாகும். இது கொண்டு அறிவோடு கூடாத உணர்வை நாம் புறக்கணித்துவிடுவது கூடாது. அறிவு எமக்கு எப்போதும் வாய்க்கமாட்டாது, நாம் எல்லாம் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையேமாதலின், சர்வஞானமுடையராய் எல்லாக் காட்சிகளையும் ஒருங்கே காணுதல் ஒருபோதுங்கூடாது. அக்காட்சிகளும், அறிவு சென்று தீண்டுதற்கரிய கடவுள் விஷயத்திலென்றால் எமக்கு எவ்வளவுக்கு சகித்திருக்கத்தக்கதென என்பதை நாம் நமது சிந்தையிலே நன்றாக அழுத்துதல் வேண்டும். அறிவு நிகழுமிடத்தும், அது நிகழாவிடத்தும், நாம் நமது உணர்வு கொண்டே ஒழுகுவது. இந்த உணர்வை நீக்கிவிட்டால், நாம் எவ்வளவு அறிவுடையராயினும் அவ்வறிவால் எமக்குச் சிறிதும் பிரயோசனமில்லை. இந்த உணர்வு எம்மிடத்துள்ளதோர் இயற்கைமரபாக அமைந்து எம்மை எல்லாம் இந்தப் பிரபஞ்சத்திலே வழிகாட்டி நடத்துதலின், நாம் அவ்வுணர்வின் வழிச்சென்றாலன்றி நாம் இங்குச்சீவித்தல் தானும் கூடாது,

இங்ஙனம் சிறந்த உணர்வுகட்கெல்லாம் தாயகமாகிய விசுவாசத்தைப் பழித்துரைத்து நமது விஞ்ஞானவாதிகள் தொடுத்து நிற்கும் விதண்டை உலகுக்கெல்லாம் பெருங்கேடாகுமென்பதை விவேகிகளானோர் ஒரு சிறிதும் மறக்கலாகாது.

உலகத்திலே பொருள்கள் எல்லாம் சமத்துவ முடையனவல்ல. அவைகள் ஒன்றினொன்று ஏற்றமுந் தாழ்வுமுற்றிருப்பது சகசம், இதுபற்றித் தாழ்வுடையன வனைத்தையும் தள்ளிவிட்டு ஒழுகினால் நாம் உலகத்திலே வாழ்வது கூடாது. அறிவோடு கூடிய உணர்வு, அறிவோடு கூடாத உணர்வினும் ஏற்றமுடையதாதல் பற்றி, அறி வோடு கூடாத உணர்வை நாம் கைக்கொள்ளுதல் மரபாகாதென்று உலகியலை உள்ளவாறு அறிந்தார் ஒருவரும் சொல்லத் துணியார். பாலோடு கூடிய அன்னம் பாலோடு கூடாத அன்னத்தினும் ஏற்ற முடைத்ரததல் பற்றிப் பாலோடு கூடாத அன்னத்தை உண்ணுதல் கூடாதென்று நமது விஞ்ஞானவாதிகள் தாமும் சொல்லமாட்டார். குருட் லுக்குக் காட்சி அறிவு நிகழாதாயினும், அவன் இன்ன பொருள் இன்ன இடத்துண்டென்னும் உணர்வுபற்றி அவ்விடத்தை நோக்கிச் செல்வன். இவனிடத்தே காட்சி அறிவு நிகழாமைபற்றி அவன் அங்ஙனம் செல்வது மரபாகாதென்று மந்தமதியினரும் சொல்லமாட்டார். எமக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள உணர்ச்சி வழிச்செல்லுமாற்றை இழித்துரைப்பது விஞ்ஞானம் எனப்படுமாயின், அந்த விஞ்ஞானத்தை அஞ்ஞானம் என்று பெயர் கொண்டழைப்பதே தக்கதாகும்.

இந்த உணர்வுக்கிரமத்தை, அது அறிவுகொண்டு தோன்றுமிடத்து நாம் ஆராய்வதுண்டெனின், அறிவு தடித்தே உணர்வு பிறத்தலையும், உணர்வு தடித்தே விசுவாசம் பிறத்தலையும், விசுவாசம் தடித்தே பத்தி உண்டாதலையும் நாம் செவ்விதிற் காணலாம். அறிவு விளக்க மின்றி உணர்வு நிகழுமிடத்தும், அறிவு நிகழாமையாகிய ஒன்றுமாத் திரமேயல்லாமல், மற்றைக்கிரமங்கள் எல்லாம் மேற்சொன்ன முறை யேயாகி ஒன்று மற்றொன்றாகத் தடித்து, இறுதியிற் பத்தி விளைவுறும், ஆகவே, அறிவு நிகழுமிடத்துத் தோன்றும் பத்தியை அபிமானித்த லும், அறிவு மறைந்துழித் தோன்றும் பத்தியை அலக்ஷியம் செய்தலும் மரபாகுமோ? காரியத்தளவிலே ஒன்றாகிய இருதிற நிகழ்ச்சிகளுள், காரணம் அறிந்ததை மாத்திரம் கைக்கொண்டு, காரணம் அறியாததைப் புறந்தந்து ஒழுகுவது மானுஷ்ய விவேகத்துக்கு ஏற்புடைத்தாகுமோ? காரணம் அறியப்பட்ட நிகழ்ச்சிகொண்டே காரியத்தின் மகத்துவம் எமக்குப் புலப்படத்தக்கதாக இருக்க, காரணம் புலப்படாத இடத்து நாம் அதேகாரியத்தைத்தானே இழித்துரைக்கத் தலைப்படுவம் என்றால் எமது விவேகம் விவேகம் எனப்படமாட்டாது.  

இனி இந்த உணர்ச்சி எமக்குப் பரமபுருஷார்த்தமாய் அமைந்துள்ள தெய்வக்கொள்கையில் நிகழுமிடத்து, அங்கே அதுபத்திமையாக விளைவுற்று, அன்பெனப்படும் பிறிதோர் உணர்ச்சியும் சேர்ந்து மிகப்பெலமுற்றிடும். இங்ஙனம் பெலமுற்ற உணர்ச்சி கடவுளது மகத்துவபரிசுத்தங்களைப் பற்றிய உணர்ச்சியோடு கூடுமிடத்துப் பின்னும்பெலமுற்றுத் திரம் பெறும். இங்ஙனம் திரமுற்ற உணர்ச்சியாகிய எமது விசுவாசம், எமது சுவானுபவங் காரணமாகவும், அவ்வனுபவத்தையுடையார் பிறரோடு - நாம் பயில்வது காரணமாகவும் பின்னும் ஒருமடங்கு திரமுற்றுவயியம் படைத்திடும். இந்தக்கிரமங்கள் எல்லாம் மானுடவிருத்திக்குரிய சற்சாதனங்களாய் இயற்கை மரபால் அமைந்துகிடத்தலின், இவற்றின் பயனாக எம்மிடத்தே வயிரன் கொண்டு விளைவுற்றமைந்துள விசுவாசத்தை நாம் எத்துணைவிநயத்தோடு போற்றிடல் வேண்டும் என்பது மனுஷீகதருமத்தை ஒரு சிறிது உற்றுநோக்குவார் எவர்க்கும் நன்கு புலப்படும்.

இத்தெய்வக் கொள்கையின் கண்ணே நாம் முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது எமது அறிவாற்றலின் அதி யல்ப புல்லிய நீர்மையைக் கடவுளது அகண்டபரிபூரண அறிவாதீத போருணிலைமையை எமது புல்லறிவால் ஆளக்கத் துணிதல் நரிவால் கொண்டு கூவல் ஆழம் கண்டமை போலாகும். அவரை நாம் ஒருவாறு அறிவதுண்டென்றால், அங்ஙனம் அறிதற்குரிய வாயில் எமது உணர்வேயாம், இந்த உணர்வால் நாம் அவரை எவ்வளவு அண்மையிற் காண்கின்றேமோ, அவ்வளவாக எமது அறிவும் விரிவு 2ம். ஆகவே இந்த விஷயத்தில் எமது அறிவு விருத்தி பெறுதற்கும் சிறந்த உபாயமாயுள்ளது எமது உணர்வேயாம். இங்ஙனம் சிறந்த உணர்வை நாம் பொருட்படுத்தாது இவ்வுணர்வாற் பெறத்தக்க அறிவையே பொருட்படுத்தி நிற்பது அரிச்சுவடியை அலக்ஷியம் செய்து விட்டும் காவியங்கற்கத் துணிதல் போலாம்.

எமது உணர்ச்சிதானும், மற்றைவிஷயங்களிற் போலவே, கடவுள் விடயத்தினும் பிழைப்படுவதுண்டு. இங்ஙனமே எமது அறிவும் பிழைப்பவெதுண்டு. ஒருகாற்பெற்ற உணர்வை, அது பிழை என்று காட்டும் பின்னோர் உணர்வாலன்றி நீக்குதல் மரபாகாது. தெய்வங் கொள்கை அளவிலே எவ்வெவரும் தத்தம் உணர்வின் வழியே விருத்தியுற வேண்டும். தெய்வமானது எல்லா இயற்கையையும் தன்பால் அடக்கி நிற்பதோர் பேரியற்கை. இந்த இயற்கையை எமது இயற்கையுணர்வின் வழிச்சென்று காண்பதன்றிச் செயற்கை அறிவுகளால் காண்பது அரிதினும் அரிதாகும். லௌகிகங்களிற்றானும் நாம் எமது இயற்கையை அனுசரித்து விருத்தியுறுவதன்றி அதனை அலக்ஷியம் செய்து விருத்தியுறுவது சிறிதும் கூடாது.

இந்த இயற்கைக் கிரமமாகிய உணர்ச்சி முறையை நாம் பின்னும் பரீட்சை செய்வதுண்டென்றால் இதன் சிறப்பு எமக்கு மேலும் புலப்படும். எம்மிடத்தே அறிவுக்குரிய கருவி விருத்தி அடை தன் முன்னர், உணர்வுக்குரிய கருவி விருத்தி அடைந்து கிடக்கின்றது. ஆகவே இவ்வியற்கை முறைதாமன, நாம் அறிவைச் சாதித்தற்கு முன்னும் உணர்வைச் சாதித்தல் வேண்டும் என்பதற்குத் தக்க சான்றாகும். இந்த இயற்கைக் கிரமத்தின் வழி நின்று நாம் எமது சிறுவர்களுக்கு இளமையிற்றானே கடவுளைப்பற்றிய உணர்வை ஊட்டுதல் வேண்டும். இவ்வுணர்ச்சி அவரிடத்தே இளமையிற்கிளர்ந்து அவரைத் தெய்வங் கொள்கையிற் செலுத்தாதாயின் அவர் பிற்காலத்தே எத்துணை அறி வைப் பெறுவதுண்டெனினும், அவ்வறிவால் அவர் உள்ளத்தின்கண்ணே தெய்வச்சார்பு சித்திக்கமாட்டாது. அறிவாலும் உணர்வு சித்தி க்கத்தக்கதாயினும், அவ்வுணர்வு இயற்கை முறையால் இளமையில் அமைந்த உணர்வுபோல அத்துணைச் சிறப்புடையதாக மாட்டாது. விளக்கமுறையாற் பெறும் உணர்வு இயர்கைமுறையாற் பெறும் உணர்வுபோல நிலைபெறுதலும் அரிது. விளக்கமுறையாற் பெறும் உணர்வும் இயற்கைமரபாகிய அனுடவங்கொண்டு அப்பியசிக்கப்பட்டாலன்றி எமது உள்ளத்தின் கண்ணே அழுத்தமுறுதலுங் கூடாது. இன்னமும் விளக்கமுறைக்குரிய அறிவைச் சாதிக்கும் பக்குவம் எய்தும்காறும் நாம் சிறுவர்களை உணர்ச்சி வழியாற்றானே பயிற்றுதல் வேண்டும், அறிவு நிகழ்தல் கூடாமைபற்றி நாம் உணர்வையும் அவரிடத்திற் கிளர்த்தாதொழிவது நாம் அவர்களுக்குத் துரோகஞ் செய்வதாய் முடியும். நாம் நன்மை என்று கண்டதொன்றை நமது சிறுவர் களுக்கு அவர்களிடத்திலே அமைந்துள்ள ஆற்றல் அளவுக்குத்தக்கதாக ஊட்டுதல் எமற்கெல்லாம் பெருங்கடனாகும். பொய்பேசுதல் ஆகாது என்று நாம் அறிந்தநன்மையை, பொய்பேசுதல் ஏன் ஆகாது என்று பகுத்தறியும் அறிவு நமது சிறுவர்க்கு உண்டாந்தனையும் காத்திராது. நாம் உணர்ச்சிவாயிலாக ஊட்டுதல் வேண்டும். இவ்வுணர்ச்சி அவர்களுக்குப் பல்லாயிரகலை ஞான அறிவினும் சாலச்சிறப்புடைத் தாகும். உணர்ச்சிகள் எவற்றினும் கடவுளைப்பற்றிய உணர்ச்சியே மக்கட்கெல்லாம் மிக மேலாகிய தொன்றாதலின், அவ்வுணர்ச்சியையும் இளமையிற்றானே ஊட்டுதல் மானுஷ்ய விருத்திக்கு இன்றியமையாது. வேண்டப்படுவ தொன்றாம்.

இந்த உணர்ச்சி இயற்கைமரபாற் தோன்றுவதாயினும், இது எமது செயற்கைமரபாற் பெரிது சேட்டிக்கப்பெறும். இவ்வுணர்ச்சியை நாம் எமது செயற்கைமுறையால் நாள்தோறும் போஷித்து வருவ துண்டாயின் இது பிரவிருத்தியுறும், இங்ஙனமின்றி இதனை நாம் அலக்ஷியம் செய்வதுண்டாயின், இது படிமுறையே வலிகுன்றி இறுதியில் ஒருங்கே மறைந்துவிடும். இவ்வுணர்ச்சியைத் துர்ப்பலஞ் செய்தற்கியைந்த சந்தேகக்களிலும் வீண்நினைவுகளிலும் எமது மனதைச் செலுதுவதுண்டாயின், இது முகிற் படலத்தான் மூடுண்ட சூரிய ஒளியைப்போல எமது மனத்தின்கண் பிரகாசங் குன்றி மறைந்துவிடும், இவ்விசுவாசத்தைக் கைக்கொள்ளாரோடு நாம் பயிலுதலானும், இவ்வுணர்ச்சி வலிபெறும், இந்த உணர்ச்சி எமக்கு மிக மேலாகியதோர் சாதனமென்பதும், அவ்வுணர்ச்சியோடுதானே எமது மனத்தின்கண்ணே உடனிகழ்தலின் நாம் அவ்வுணர்ச்சியை எவ்வாற்றானும் போற்றிடல் வேண்டும். இது பழுதுடைத்தென எமக்கு உணர்ச்சிவாயிலாற்றானே புலப்படுமாயின் நாம் அதனைத் தடையின்றி மழுக்கிவிடலாம். காமம், கோபம் பொறாமை முதலிய உணர்ச்சிகளை நாம் ஏற்ற ஏற்றமரபால் அடக்கி ஒடுக்கிவிடுதல்போல, இக்கடவுள் விசுவாசமாகிய உணர்ச்சி யும் குற்றமுடையதாக எமக்குப் புலப்படுமேல் நாம் அதனை எம்மால் இயன்ற உபாயங்களை எல்லாம் செய்து தூரம் போகிவிடுவது எமது கடமையேயாகும், இங்ஙனமின்றி அது எமக்கு மிகச் சிறப்புடைய தாசுப் புலப்படுமிடத்து, அதனை நாம் எமது உள்ளத்திற்கிளரும் சீவ காருண்ணியம் உண்மை அபிமானம் முதலிய உணர்ச்சிகளைப்போல எப்போதும் பரிபாலித்தல் வேண்டும்.

இங்னம்,

யாழ்ப்பாணம் : S. சபாரத்தின முதலியார்.

சித்தாந்தம் – 1915 ௵ - மார்ச்சு / ஏப்ரல் / மே ௴


No comments:

Post a Comment