Saturday, May 9, 2020



பழந்தமிழுள்
சந்தேகத்தின் ஆராய்ச்சி.

சந்தேகமென்பது துணிவுபிறவாமையால் அதுவோ? இதுவோ? என்று கருதும்படியானதோர் நிலைமை.

அயிர்ப்பு, ஐயம், சகடு, கடுப்பு, கடுத்தல், சங்கை, செத்து, சமுசயம், அநுமானம், மானல், பிராந்தி, விப்பிரமம் முதலியன சந் தேகத்தின் பெயர்களாம்.

இப்பெயர்கள் எப்படி உண்டாயின, அயிர்ப்பென்னும் சொல்லுக்கும் துணிவு பிறவாமையாகிய சந்தேகமென்னும் பொருளுக்கும் எவ்வாறு சம்பந்தமுண்டாயது என மொழி நூல்வல்லார் வினாவுவாராயின் ஆராய்ந்து விடைகூறுவது அவசியமாகின்றது.

அயிர்ப்பு = சந்தேகம்.

அக்காலத்து மழைமிகுதியால் எங்கும் வெள்ள மோடிக் கொண் டிருந்தபடியால், மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போகவேண்டின் இடைவழியில் அவ்வெள்ளத்தைக்கடக்க அதிலிறங் குங்கால் அவ்வழிமுன் பின் சென்றறிந்தவழியல்லாமையாலும், வெள்ளத்துட் கட்புலஞ் செல்லாமையாலும் இங்கே ஆழமுள்ளதோ? இல்லதோ என்று துணிவு பிறவாமையால், மெல்ல மெல்ல அடிவைத்து நிதானமாகப் பரிசவுணர்ச்சியால் அவ்வெள்ளத்தைக் கடந்து போகவேண்டும். இத்துணிவு பிறவாமையாகிய நிலைமை வெள்ளத்திற் செல்லுங்காலுண்டாதலால், வெள்ளமென்பது நீரின் மிகுதியானமை யின் நீரினை யுணர்த்தும் அயமென்பது துணிவு பிறவாமையாகிய நிலைமைக்கு ஓர் பெயராயிற்று.

அயம் - நீர், சந்தேகம்.

அயம் அயிர்ப்பாயிற்று; பிறகு அதுவே ஐயமுமாயிற்று.
அயம் - அயிர்ப்பு = சந்தேகம்
அயம் - ஐயம்
ஐயுறல்

1. கயம்     -      அயம் = நீர்.        ஒற்றினீக்கம்
2. கயம்     -      பயம்  = நீர், குளம். ககரம்பகரமாகும்
3. பயம்     -      பயம்பு = பள்ளம்;   நீர் நிரம்பியது.
4. அயாம்    =     கோழி. (மலேயம்)
அயம் - அயாம் = நீர்க்கோழி, கோழி.

மென்னுஞ் சொற்காரணம் நெடிதுகாலம் புலனாகாமலிருந்து வெள்ளத்தில் நடக்குங்கால் அக்காரணம் இனிது புலனாயிற்று.

(2) சகடு = சந்தேகம்.

சகடென்பது முதல் உரோகணியையும் பிறகு சந்தேகத்தையும் உணர்த்தி நிற்கும்.

''உரோகணி யூற்றால் பன்னிரு மீனாம்''

உரோகணி நட்சத்திரத்தை உச்சத்திற் காணுங்கால் சில விளங்கியும் சில விளங்காமலுமாய்ப் பன்னிருமீனும் உளவோ? இலவோ? எனத் துணிபு பிறவாமைக்கு இடந்தரலின், சகடென்பது சந்தேகத்தை யுணர்த்திற்று.

பன்னிரண்டென்னுந் தொகைக்கு மேற்கோள் ஆதாரமாயிற்று. துணிவு பிறவாமையின் பன்னிரண்டென்னுந் தொகை கருவி கொண்டறிந்தனர் போலும்,

சகடு - திரட்சி, வட்டம், உரோகணி, ஊற்றால்போல் வட்ட மாக இருப்பதென்பது பொருள்.
சகடம் - சகடு.
சகடு - கடுப்பு சந்தேகம்.
கடுப்பு - கடுத்தல் ஐயுறல்.

போற்றினரியணு போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.'' (திருக்குறள் மன்னரைச் சேர்ந்தொழுகல்)

''கடா அவுருவொடு கண்ணஞ்சாது.''
(ஒற்றாடல் - 5).
சகடு – ஷக் = சந்தேகம், (அரபி - இந்து)

(3) சங்கை - சந்தேகம்.

அரசர் முதலோர் பக்கத்தில் ஒருவர் இருக்குங்கால் ஓர்பொருள் காணாமற்போயின் அப்பொருளைப் பற்றிப் பக்கத்தில் இருந்தவரிடத்தில் தான் சந்தேகமுண்டாவதியல்பு. ஆதலால் பக்கத்தை யுணர்த் தும் சங்கமென்பது சந்தேகத்துக்கு ஓர்பெயராயிற்று, அயலவனாகிய ஆண்மகன் பக்கத்தில் பெண் மகளிருப்பினும், பெண்மகள் பக்கத்தில் ஆண்மகனிருப்பினும் சந்தேகமாம்.
1. சங்கம் - பக்கம், சந்தேகம். சங்கம்
2 சங்கை - ஆசங்கை = சந்தேகம்.
3. சங்கம் - பக்கம், தோள்.
4. சங்கதானம் = தோட்கோப்பு.
5. சங்காத்தன் = தோழன்; தோண்மேற் கைபோட்டுப்பேசும் அன்புரிமை யுடையோனென்பது,

(2) செத்து = சந்தேகம்.

சந்து = மூங்கில், புல், புல்லுரு, கம்பங்கொல்லையில் வைத்த மிரளை.
சந்து உட்டுளையுமாம்.

சந்தென்பது முதல் மூங்கிலையும் பிறகு இனமாகிய புல்லையும் புல்லுருவையும் மிரளையையும் உணர்த்தி நிற்கும். புல்லுருவாவது புல்லாற் செய்த மாக்கள் வடிவம்.

வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை புல்லுரு அஞ்சு வபோல்'' (நீதிநெறி விளக்கம்)

கம்பங்கொல்லையில் வைத்த புல்லுருவைக் கம்பு திருடவந்த கள்வர்கண்டு, இரவாதலால் இவ்வுரு புல்லுருவோ? மாக்களுருவோ? எனத்துணிவு பிறவாமையால் சந்தென்பது சந்தேகத்திற்கு ஓர் பெயராக இருந்ததெனத் துணிதல் வேண்டும்.

சந்தென்பதே சந்தேமெனவளர்ச்சி பெற்றது. முதனிலை வளர் ச்சி சொல்வளர்ச்சி பாழைவளர்ச்சி என்பவற்றுள் இதுவே சொல் வளர்ச்சி.

சந்து - சந்தேகம்.

சந்தேகத்தை யுணர்த்தும் செத்தென்பதும் சந்தென்பதின் திரிபு,
சந்து - செத்து. ஒருங்கு திரிந்தது.
சந்தி = மூங்கில், மூட்டு, நாற்றெருக் கூடுமிடம்,

சந்தி - சந்திப்பு,

(5) சமுசயம் = சந்தேகம்.

சஞ்சயமென்பது முதல் கூட்டத்தையும் பிறகு சந்தேகத்தையும் உணர்த்தி நிற்கும்.
கூட்டத்தில் களவு முதலியன நிகழின், கூட்டமா தலால் களவு செய்தோன் இன்னானெனத் துணிவு பிறவாமையின் சஞ்சயமென்பது முதல் கூட்டத்தையும் பிறகு சந்தேகத்தையும் உணர்த்திற்று.

சஞ்சயம் சம்சயமாயிற்று; சம்சயம் சமுசயமாயிற்று. மகரம் சகரத்தோடு மயங்காமையின் சஞ்சயமென்பது முதலுச்சரிப்பாகவே யிருக்கலாம்

சம்சயமென்னும் சொல்லைப்பற்றித் தருக்கம் உண்டாயின், அச்சொல் எவ்வாறு சந்தேகத்தை யுணர்த்திற்று எனவினாவுதல் வேண்டும்.

ஆண்மக்கள் கூட்டத்தில் பெண்மகள் செல்லினும் பெண்மக்கள் கூட்டத்தில் ஆண்மகன் செல்லினும் சந்தேகம் நிகழும். இவ்வாறாகிய சந்தேகம் விலங்கு பறவைக்கும் உண்டு.

(6) அநுமானம் = சந்தேகம்.

அநுமானமென்பது முதல் அநுமானப் பிரமாணத்தையும், அது பிரத்தியட்சம்போல் துணிவுகொள்ளக் கூடாமையால் பிறகு சந்தே கத்தையும் உணர்த்தி நிற்கும்.
அநுமானமாவது காரியத்தால் காரணம் நிச்சயிப்பது.
அநுமானம் - மானல் = சந்தேகம்

(7) பிராந்தி = சந்தேகம்

பிராந்தி = மயக்கம், சந்தேகம்.
மயக்கமாவது துணிபு பிறவாமை,
விப்பிரமமும் அது, வி - உபசர்க்கம்.

சந்தேகத்தின் பெயர்களுள் அயிர்ப்பு ஐயம் சங்கையென்பன முதலுண்டானவை யெனவும், சந்து முதலியன பிறகுண்டானவை யெனவும், சகடு முதலியன அதன் பிறகுண்டானவை யெனவும் கொள்ளலாம்.

இவற்றில் ஏதேனும் சந்தேகமுண்டாயின் பெரும்பாலும் மொழி நூலால் தெரிந்து கொள்ளலாம். மொழிநூல் கல்விமான்களுக்கு ஆவசியகமானது.

இங்ஙனம்,
மாகறல் - கார்த்திகேய முதலியார்,
கெண்டி - சென்னை.
சித்தாந்தம் – 1914 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment