Saturday, May 9, 2020



மனநினைவு.

சிவநேசச் செல்வர்காள்!
இம்மகுட நாமத்தைக் குறித்து ஒருவியாசம் எழுதத்தொடங்கிய எனது அறியாமையை நிந்தியாது விஷய அங்கீகாரர்களாய் ஒழுகும்வண்ணம் திருவருளை முன்னிட்டு யான் உங்களை வேண்டு கின்றேன்.
மனம் என்றால் பகுத்தறிவுக்குக் கருவியாகிய சக்தி என்பதே சிறந்த அர்த்தமாகும். முன்னைய மூதறிவாளர் கருத்தும் இஃதே! நினைவு = எண்ணம், சிந்தனை. எனவே, எக்காலங்களிலும் ஒரே தன்மைத்தாக இராது பலவற்றையுங்கருதி, விரும்பிக் சம்மதங்கொடுத்துப், பின்வருவன உணராவியற்கை யுடையது மனமாகும். மனம் இல்லாவிட்டால் பிரபஞ்ச பிரபாவம் எவ்வகை யினும் விளக்கமுறமாட்டாது. மனம், இன்னத்தன்மை யெனப் புலப்படுதற்கு மனோதத்துவ ஆராய்ச்சியுடையவரே அதனை ஒப் புக்கொள்வர். “பிரபஞ்சத்தோடு மனாதிகளுக்கும் ஆதாரமாயிருப்பவர் சிவபரம்பொருளே'' என்று முண்டகோபநிஷதம் முழங்குகின்றது.
மனம் ஒருநிலையில்லாதது. ஆத்மஞாநத்தைக்கடந்து சிவஞாநமுதிர்வு கண்ட பேரறிவுடையோர் மனதை வெல்லுவார்கள். ஏனையோர் மனவழிநின்றும் புலன்வழிச்சென்றும், அறிவின்னிறைந்த ஆநந்தப்பொருளை யுணராது மயங்குவர்.
மேலோரும், “பாவத்தை நசிக்கச் செய்தவன் பிரம்ம சிற் சொரூபியிடத்து மனதைச்செலுத்தி அதுவே ஆக்மஸ்வரூபமாக அடைந்து, அதனிடத்தே விருப்படைந்து, அதே சிறந்த பதவியென்று வேறு மார்க்கங்களைவிட்டு முத்தியடைகின்றான்'' என்றார்.
இதனாலே மனவுறுதியான பக்தி வழிபாடு முத்திபயக்கும் என்பது பெற்றாம். மனதை அடக்கல் மிக்க அருமையாகும்.
மனதை யடக்கமுடியாது என்பதைத் தாயுமான சுவாமிகள் சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரி.து.'' என்னுந் தொடருட் சூசிப்பித்தருளினார். இங்ஙனங்கூறியது அருமை நோக்கியன்றி எங்களை மனவழியேசென்று தீத்திறனுடைய செயல் களைப்புரியும் பொருட்டன்றாம். மனதின் செய்கை அறிவுவயத் தானே நன்மை தீமைகளை விளைப்பதாகும், நன்மனமே மேன்மையது. அஃது,
ஒடும் பொன்னு முறவும் பகையுமோர்
கேடுஞ் செல்வமுங் கீர்த்தியு நிந்தையும்
வீடுங் கானமும் வேற்ற நோக்குதல்
கூடுந் தன்மை கொளுமன நன்மனம்,''
என்பதனாலே இனிது விளங்குகின்றது.
விளங்கவே, மனதின் சுபாவம் ஒருவழியுறுவதின்றா மாயினும், ஒரு நிலைப்படுத்தல் கூடுமென்பதும், ஒருவழி நின்றால் நின்மலனருள் சேருமென்பதும் ஒருதலையாகும். ஆகவே, மனதை உலகவின்பங்களிலும், பொருள்களிலுஞ் செலுத்தாது நடப்பதே முறைமையாகும்.
சகோதரர்காள்!
இவ்வுலக வாழ்வோ நிலையில்லாதது. எங்கள் சரீரங்களோ அழிந்து போகின்றன. ஆன்மாக்கள் பலவாய் அழியாதுள்ளன. மலையென மன்னியகோபா மாடமாளிகைகளும், மதிப்பரும் பொரு ளும் ஆன்மாக்களின் சுகத்திற்கு ஈடாகா. ஆதலின், கடவுளின் திருவருளே தஞ்சமாகும். திருவருளும் மன நிலையுடைய மாந்தரிடத் தேய்ந்ததாகும். எங்களுடைய வீணான செயல்களும், சொற் களும் பிரயோசனமில்லன.
சிலர், நித்திரை மனிதனுடைய சுபாவமான ஒன்றன்றோ அதுபோல மனநிலையின்மை, கோபம் ஆதியன ஆடவனின் குணம் என்பர். மனிதனால் இவற்றைத் தவிர்த்தல் கூடும் என்பதையும், தவிர்த்து வருதலையும் பிரத்தியக்கமாக அறிக. மனநினைவு ஒரு வழியானால் மரணமும் நீங்கும். மனநினைவு பிறவழிப்பு காதாயின் மதியணி கடவுளின் றிருவருள் சாரும், சுபம்.'
பண்டை வாசனை தொக்க பயிற்சியால்
கொண்ட காயநிலை யெனக் கொள்வரோ
வண்டரேனும் பிறப்புளதா மெனின்
விண்டு காய மிறப்பது மெய்யரோ. "

திங்களணி செஞ்சடையோன் சேவடியைச் சேவிப்பார் தங்கும் மனநிலையாற்றான்.
இங்ஙனம்,
வ. மு. இரத்திநேசுவர அய்யர்,
தமிழ்ப்பண்டிதர்,
காரைக்குடி.

சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment