Saturday, May 9, 2020



திருக்கச்சூர்
அம்பை இரா. சங்கரனார்

இடம்: செங்கற்பட்டுமாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோயில் புகைவண்டி நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து திருப்பெரும்புதூர் போகும் வழியில்பேர்லாங்கு தூரம் சென்று திருக்கச்சூருக்குக் கிளைப் பாதையில் மேலும் 6 பர்லாங்கு தூரம் செல்ல வேண்டும். இத்தலத்தின் வேறு பெயர்கள் ஆதி காஞ்சிபுரி, நட்டவிநோத நல்லூர்.

கோயில்கள்:

1 மருந்தீச்சுரர்கோவில்: - இங்குள்ள குன்றின் மீது மருந்தீச்சுரர் கோயில் உள்ளது. அம்மை யார் பெயர் அந்தகார நிவாரணி. தமிழில் இருள் நீக்கித் தாயார் என்று கூறுகிறார்கள். மேற்கு பார்த்த சுவாமி சந்நிதியும் அம்மன் சந்நிதியும் உள்ளன. சுந்தர விநாயகர் முதலில் சுற்றுப் பிராகாரத்தில் காட்சியளிக்கிறார். மேலும் பிராகாரத்தில் யாகசாலை, சண்டிகேச்சுரர், கபால மூர்த்தி, சிவசூரியன் ஆலயங்களும் உள்ளன. சிவசூரியன் ஆலயம் பழைமையான கோயில்களில் தெற்கு, தென்கிழக்குத் திசைகளுக்கு மத்தியில் இருப்பது மரபு. அந்த நிலையில் இங்குள்ள சண்டேச்சுரர் உருவம் நான்கு முகங்களும் நான்கு கைகளுமுடைய அமர்ந்த திருக்கோலத்திலுள்ள அற்புத உருவமாகும்.

மேலும் மூலத்தான வெளிப் புறச்சுவர்களிலேயே விநாயகர், தக்கணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகிய ஐவருருவங்களும் கோஷ்ட விக்கிரங்களாக உள்ளன.

அண்மைக் காலத்தில் நவக்கிரகங்களின் கோயிலையும் தாபித்திருக்கிறார்கள். கோயில் பெரிதாயுமின்றிச் சிறிதாயு மின்றி மிக அடக்கமாயிருக்கிறது. குன்றின் மீது இக்கோவில் அமைந்திருக்கும் காட்சி கண்கவர் வனப்பினதாய்த் திகழ்கிறது. இதன் முன்புறத்தில் அமர்ந்து சுற்றுப் புறக் காட்சியைக் கண்ணுற்றுக் கொண்டே மிக இன்பமாக இறையருளின் இயற்கை யாற்றலை நினைந்து இறும்பூது எய் தலாம். இக்கோயிலின் அண்மையில் ஓஷதிதீர்த்தம் உள்ளது. தலவிருக்ஷம் - வேர்ப்பலா, ஆலவிருக்ஷம்.

2 கச்சபேசசுரர் கோயில்: - இக்கோயிலுக்கு ஆலக்கோயில் என்றும் வேறு ஒரு பெயர் உண்டு. இது ஊரின் நடுவே உள்ளது. சுவாமியின் பெயர் கச்சபேச்சுரர். அம்மையின் பெயர் அஞ்சனாட்சி. பெரிய கற்றுப் பிராபாரமும் கோயி லினுள் மூலத்தானத்தை ஒட்டி ஒரு பிராகாரமும் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் மடைப்பள்ளி, சுந்தர விநாயகர், வள்ளி தேவசனா சமேதராய சுப்பிரமணியர், சண்டேச்சுரர், விருந்திட்ட ஈச்சுரர், பைரவர் கோயில்களும் யாகசாலையும் சரக்கறையும் உள்ளன. உள் சுற்றில் சிவசூரியன், விநாயகர், நான்கு இலிங்க உருவங்கள், உமாதேவி, மூன்று நாகப்பிர திஷ்டைகள், வள்ளி தேவசேனா சமேதரர்ய சுப்பிரமணியர், சண்டேச்சுரர், நடராஜர், மணிவாசகர், சுந்தரர், சம்பந்தர், அப்பர் என்ற வரிசையில் நால்வர் திருவுருவங்கள் உள்ளன. கோஷ்ட விக்கிரகங்கள் ஐந்தும் முறையே உள்ளன.

இங்குச் செப்புவிக்கிரகங்களாகச் சனகாதிநால்வர் உருவங்களுமுள. சித்திரை பௌர்ணமியை ஒட்டிய ஆண்டுப் பெரு விழாவில் ஒன்பதாம் திருநாளன்று உபதேசக் காட்சி மிகவும் சிறப்புடையது, கண்டின் புறத்தக்கது மாகும். இக் கோயிலினருகில் கூர்மதீர்த்தம் உள்ளது. தலவிருட்சம் - கல்லால மரம் ஆகும்.

கச்சபேச்சுரர் கோயிலிலிருந்து மலையிலுள்ள மருந்தீச் சுார் கோயிலுக்குப் போகும் வழியில் தால மூல விநாயகர், (கருக்கடி விநாயகர் என்றும் கூறுவர்) இரந்திட்ட ஈச்சுரர் கோயில்களும் ஐயனார் கோயிலும் ஒரு துறவியின் சமாதி யும் இருக்கின்றன.

கச்சபேச்சுரர் ஆலயத்துக்குள் கச்சபேசர் சந்நிதிக்கு வலப்பாகத்தில் அமிர்த தியாகேச்சுரர் ஆலயம் உள்ளது. இங்கு இத்தியாகர் நடனம் அஜபா நடனம் என்று கூறப்பெறும். இது மிகவும் பார்த்துக்களிகூரத்தக்கது. திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் ஆகிய மூன்று தலங் களும் தொண்டை நாட்டில் தியாகருக்குரிய சிறந்த பதிகளாகும். இந் நடனம் ஆடும் கலையே ஒரு தனிக் கலையாகவே மிளிர்கின்றது.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கழுக்குன்றத்தை வணங்கிய பின் இவ்வூருக்கு எழுந்தருளினார்கள். இங்கு வந்ததும் பசித் துன்பம் வருத்திய போது பெருமானே வேதியராய் வந்து ஊரில் யாசித்து அவர்க்கு உணவூட்டியதாக வாலாறு உள்ளது.

காதல் செய்து களித்துப்பிதற்றிக் கடிமா மலரிட் டுனை ஏத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்ள அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே

என்றும்

மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே  

என்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் மிக உருக்கமாகப் பாடியிருக்கிறார்கள்.

இங்கு சித்திரா பௌர்ணமியை ஒட்டி நிகழும் ஆண்டுப் பெருவிழாவில் தியாகர் நடனம் மிகவும் விசேடம். ஒவ்வொரு பௌர்ணமியிலும் உற்சவம் உண்டு. புரட்டாசி நவராத்திரி, ஐப்பசிப் பௌர்ணமி, கார்த்திகை தீபம், மார்கழித் திருவாதிரை விழாக்களும் உள. மலைக்கோயிலில் மாசி மாதத்தில் ஆண்டுப் பெருவிழா நிகழும். மாசி மாதத்தில் தீர்த்தவாரி உண்டு. இதற்குத் திருக்கச்சூர் ஆலக் கோயில் புராணம் என்ற ஒரு தலபுராணமும் உள்ளது. காஞ்சிபுரம் பச்சையப் பன் உயர்பள்ளித் தமிழாசிரியரும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணாக்கருமாகிய வெண்பாப் புலி வேலுசாமிப் பிள்ளை அவர்கள் இப்புராணத்தை இயற்றியுள்ளார்கள். திருக்கச்சூர் நொண்டி நாடகம் என்ற ஒரு சிறு பிரபந்தமும் இவ்வூரைப் பற்றியுள்ளது. அது மிகவும் படித்தின்புறத்தக்கது.

இங்கு மருந்தீச்சுரரை அசுவினி தேவர்கள் வழிபட்டுச் சிறந்த மருத்துவர்களாயினர் எனவும் ஆலக் கோயிலில் மர்ந்த பெருமானை திருமால் ஆமையுருவெடுத்து வழிபட்டுப் பெருமையடைந்தார் எனவும் இவ்வூர்ப் புராணம் கூறும்.

இங்கு மலை மீதுள்ள மருந்தீச்சுரர் கோயில் ஒரு பிரார்த்தனைத் தலமாகப் பொது பட்டு வருகிறது. மக்கள் தாவரங்கள் பிற உயிர்கள் யாவற்றிற்கும் நோய் வராமல் தடுக்க இங்குள்ள இறைவனிடம் உள்ளன்புடன் நேர்ந்து வழிபட்டால் அவனருளால் அந்நோய்கள் நீங்கப் பெறுகின்றன. பயிர் முதலியனவும் ஒன்று ஆயிரம் விளையுட்டாக நல்விளைச்சலைப் பெறுகின்றன.

குழந்தை வேல் சாமியார் என்ற ஒரு பெரியவர் இத்தலத்தின் பெருமையை உணர்ந்து நல்ல கல் திருப்பணி செய்ய மனம் கொண்டார். அதற்காக அவர் மிகவும் முயற்சி கள் பல செய்து திருப்பணிக்குரிய ஆயத்த வேலைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சாமியாரிடம் பணம் நிறைய விருப்பதாகத் தவறாக உணர்ந்த சில துன்மார்க்கர்கள் அநியாயமாய் அவரை ஒரு நள்ளிரவு கொன்று தம் எண்ணத்திலும் மண்ணிட்டவராய் ஏமாந்தனர். அக்கெட்டோர்களின் செயலால் மருந்தீச்சுரர் கோயில் கல் திருப் பணி நடப்பதற்கு இயலாது போயிற்று.
    
தற்போது இம்மலைக்கோயிலும் தாழக் கோவிலும் தர்மகர்த்தர்களாட்சியின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. அன்பர்கள் வந்த சமயத்திலோ அல்லது காலை மாலை நேரங்களிலோ பெருமானை வழிபடப் போதிய வசதியில்லை.  குருக்கள்மார் வழிபாட்டுக்குச் செல்லும் சமயத்தில் தான்  இறைவனை வணங்கலாம். ஊர் மக்கள் கவனமும் தர்மகர்த்தர்கள் கவனமும் போதியவாறு இல்லாததால் இச் சிறந்த கோயில்கள் மிகவும் தாழ் நிலையுற்றுள்ளமை வருந்தத்தக்கது. இருக்கிற சொத்துக்களையும் நன்முறையில் போற்றி கோவில் காரியங்களுக்கும் பயன் படுத்துவதாகத் தெரியவில்லை. இவ்வாறு நம் சமயத்தாபனங்கள் இழி நிலையுற்றிருந்தால் நம் சமயம் எவ்வாறு முன்னேறும்? அதிகாரிகளும் நம் சமயப் பெருமக்களும் கவனித்து அவற்றின் முன்னேற்றத்துக்கு ஆவன செய்வார்களா?

சித்தாந்தம் – 1964 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment