Saturday, May 9, 2020



சிவஞானபோத முதனூல் விளக்கம்.

அத்தீயாயம் 1.
தமிழ்ச்சிவஞான போதம் முதனூல் என்பது.

* ஆதி சைவப் பரம்பரையில் வந்த அச்சுதன் களப்பாளர் என்னும் கோத்திரப் பெயர் பூண்ட ஓர் வேளாளகுல திலகராகிய சிவானுபூதிச் செல்வர் தவப்பயனால் வந்த பொய் கண்டகன்ற மெய் கண்ட சிவாசாரியரால் சொல்லப்பட்ட (repeated by, not originated from) 12 சூத்திரங்களும் தமிழே.
* சைவர்களில் அநேக பேதங்கள் உள - அவர்களில்: - அநாதி சைவர். பரமசிவம், ஆதிசைவர் = பரம்பரைச் சைவர். உலகந் தோன்றி மனித சிருட்டி ஏற்பட்ட நாள் முதல் மதுமாமிச போசனமின்றி, கொல்லாமை, பொய்யாமை முதலிய விரதங்களைப் பூண்டு சிவபெருமானாலும், சிவபெரு மான் வழி வந்தவர்களாலும் (= உபதேசபரம்பரை) தீக்ஷிக்கப்பட்டு, கந் தழி என்னும் இலிங்கவழிபாட்டினையுடையவராதலால் பரம்பரைச் சைவர் (= ஆதிகாலந் தொட்டுச் சைவர்) ஆதிசைவர் எனப்படுவர்.
யாகாதி கிருத்தியங்களினாலும் மதுமாமிசம் சாப்பிடக்கூடாது என்பது தமிழருடைய கொள்கை (அதாவது பரம்பரைச் சைவர் = ஆதிசைவருடைய கொள்கை)
    "அவிசொரிந்தாயிரம் வெட்டலினொன் றன்
      உயிர்செகுத்துண்ணாமை நன்று."
    "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
      எல்லாவு பகுந் தொழும்."
    ஆதிசைவப்பிரிவு ஆரியர்களுக்குள் இல்லை. பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்னும் நான்கு ஜாதிப்பகுப்புக்களே உண்டு. அந்நான்கு ஜாதிகளுள்ளும் ஸ்மார்த்தம், வைணவம், மாத்வம் என்னும் பிரிவுகள் உண்டு. இவை இத்தென்னாட்டிற்கு வந்த பிற்பாடு ஆரியர்களுக்குள் ஏற்படுத்தப்பட்டவை என்பதை யாவரும் அறிவார்கள்.
    தமிழர்கள் ஆரியப்பிரிவுகளில் ஒன்றிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் வைக்கவேண்டும்.
மேலும், சிவபெருமானால் தீக்ஷிக்கப்பட்டவர் யாரோ அவர் ஆதிசைவரெனக் காமிகம் கூறுகிறதாக எனது குருசுவாமிகளாகிய ஸ்ரீ ஞானப் பிரகாச தேசிக சுவாமிகள் கூறுகிறார்.
    ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்குப் பன்னூறாயிரம் வருடங்கட்கு முன்னரே சிவபெருமானால் தீக்ஷிக்கப்பட்ட தமிழர்களாகிய ஜனகர், சனத் குமாரர், சனாதனர், சனந்தனர் என்னும் நால்வரும் நான்கு மடங்களைத் தாபித்துத் தமிழர்களுக்கு உபதேசித்து வந்ததாக ஞானப்பிரகாசரால் சொல்லப்பட்ட 'சைவபூஷணம்' என்னும் கிரந்தம் தெரிவிக்கிறது.
   
ஆகையால், தமிழர்களில் பரம்பரைச் சைவர் சிவபெருமானாலும், சிவபெருமான் உபதேசபரம்பரையில் வந்த அடியவர்களாலும் தீக்ஷிக்கப் பட்டவர்களாதலின் ஆதிசைவரே எனக்கூற யாதொருதடையுமில்லை. பரம்பரைச்சைவர், ஆதிசைவர் ஒரு பொருட்கிளவிகள். சைவபேத வரவாற்றினை யான் எழுதிய "சைவபேதவிளக்கம்என்னும் நூலில் காணலாம்.
   
அப்பன்னிரண்டு சூத்திரங்களும் சிவஞான போதம் எனப் பெயர் பெறும்.

மெய்கண்டார் என்பவர் தாம்பரஞ் சோதி முனிவரிடம் இருந்து முறையாகத் தெரிந்துகொண்ட சிவஞான போதப் பன்னிரண்டு சூத்திரங்களையும் அப்படியே (without any addition, subtraction or alteration) உலகோர் உய்யும் பொருட்டு வழி வழி முறையை அநுசரித்துத் தம்மாணாக்கர்களுக்கும் கற்பித்தார்.
   
மேற் சொன்ன சிவஞானபோதப் பன்னிரண்டு சூத்திரங்களும் சிவபெருமான் தக்கிணாமூர்த்தமாய் கல்லாலின் கீழிருந்து சனகர் முதலிய நால்வருக்கும் சொன்னவைகளே தவிர வேறன்று ஆகையால், சிவஞான போதம் முதனூலே.
     வினையினீங்கி விளங்கிய அறிவின்
      முனைவன் கண்டது முதனூலாகும்.''
   
மெய்கண்ட சிவாசாரியார் தாம் பரஞ்சோதி முனிவரிடம் இப்போது தமிழில் இருக்கின்ற பன்னிரண்டு சூத்திரங்களையும் தெரிந்து கொண்டு, அவைகளின் பொருணுட்பங்கள் தெளிவுறாமையால், தாம் வழிபடு கடவுளாகிய பொல்லாப்பிள்ளையாரை நோக்கித் தவங்கிடந்து, தெளிவு றுத்துமாறு வேண்ட, அப்பொல்லாப்பிள்ளையார் கருணை மீக்கூர்ந்து, தமது அடியார் ஆகிய மெய்கண்டமுனி தெளிவுறும் வண்ணம் அச்சிவஞான போதத்துக்கு 39 சூர்ணிக்கொத்துக்களைச் செய்து கொடுத்துச் சந்தேக நிவிர்த்தி செய்தார். அப்பன்னிரண்டு சூத்திரங்களையும், 39 சூர்ணிக்கொத்துக்களையும் தாம் மிக ஆழ்ந்து, சிந்தித்து மாணாக்கர்களுக்கு இன்னும் நன்றாய்த் தெரியும் வண்ணம் ஏது திருட்டாந்தங்களுடன் வசனரூபமாகவும் பாரூபமாகவும் பொழிப்புரைசெய்தார். அவ்வசனமும் 82 வெண்பாக்களுமே எம்மெய்கண்ட நாதரால் செய்யப்பட்டவை இது,

    "எந்தை சனற்குமானேத்தித் தொழ வியல்பாய்
    நந்தியுரைத்தருளு ஞான நூல் - சிந்தைசெய்து
    தானுரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணர
    ஏது திருட்டாந்தத் தாலின்று.''
   
என்னும் செய்யுளால் அறியக்கிடக்கின்றது.
      (இ - ள்.) எந்தை    = எம் தந்தையாகிய
        சனற்குமன்     = சனற்குமார தேவர்
        ஏத்தி            = தோத்திரம் செய்து
        தொழ           = (ஞானத்தை அறிவுறுத்து மாறு
        நந்தியெம்பெருமானை) வணங்க
        இயல்பாய்       = இயல்பாகவே (யாதொரு பிரயாசையுமின்றித்தாம்
  ஸ்ரீகண்ட பரமசிவத்திடத்துக் கேட்ட வண்ணம்)
        நந்தி            = நந்தியெம்பெருமான்
        உரைத்தருளும்   = சொன்ன
        ஞான நூல்      = சிவஞான போத நூலையும்
        சிந்தைசெய்து    = (பொல்லாப்பிள்ளையார் செய்து கொடுத்த 39
  சூர்ணிக்கொத்துக்களையும்) சிந்தித்து.
        இன்று           = இக்காலத்தில்
        தாரணியோர்     = (யான்பெற்ற வின்பம் பெறுகவிவ்
          தாமுணர        வையகம் என்னும் மொழிக்கிணங்க)
பூலோகத்திலுள்ளார் (செவ்வாய்முதலிய அண்டத்திலுள்ளார் அல்லாஎன்றபடி) தெரிந்து கொள்ளும் வண்ணம்.
எது திருட்டாந்தத்தால்    = ஏது திருட்டாந்தங்களுடன்
மெய்கண்டான்     = மெய்கண்ட சிவாசாரியர்
தானுரைத்தான்    = தாமாக (உரையும் செய்யுளுமாகப் பொழிப்புரையை)
  உரைத்தார்.
   
சிற் சிலர் மேற் கூறிய பாட்டிற்கு வேறு விதமான உரைகூறி ஏது திருட்டாந்தங்களுடன் மெய்கண்டார் செய்தது “ சிவஞான போதமே தான்'' என்று கூறாநிற்பர். அது சற்றும் பொருந்தாது ஏனென்றால், 'நந்தியுரைத்தருளு ஞான நூல் சிந்தை செய்து தானுரைத்தான் மெய்கண்டான்'' என்று கூறினதை உற்றுநோக்கு மிடத்து மெய்கண்டாருக்கு முன்னேயே “ சிவஞான போத " நூல் உண்டென்று புலனாகின்றது.'' நூல்'' என்றதால் அச்சிவஞானபோதம் தமிழென்றே யெண்ணக் கிடக்கின்றது. ஆகவே மெய்கண்டார் செய்தது வேறு என்றும் தெரிகிறது. அவர் எப்படிச் செய்தாரென்றால் ஏது திருட்டாந்தங்களுடன் செய்தார் என்றும் தெரிகிறது. ஆகையால் சிவஞானபோதம்'' வேறு, மெய்கண்டார் செய்தது வேறு என்று அறியக்கிடக்கின்றது.
   
நந்தியுரைத்தது வடமொழிச் சிவஞானபோதம், மெய்கண்டார் உரைத்தது அதன் பொழிப்பாகிய தென்மொழிச் சிவஞான போதம் என்று ஏன் கூறலாகாது எனக்கடாவுவார் சிலர். அதற்கு நந்தியுரைத்தது தென்பொழிச் சிவஞானபோதமே என அடியில் காட்டப்படும் காரணத்தால் மெய்கண்டார் சிந்தித்தது தென்மொழிச் சிவஞானபோதமே தவிர வேறன்று.
   
மேலும், நந்தியுரைத்தருளும் ஞான நூல் என்று சொல்லியிருக்கிறபடியினாலே நந்தியெம்பெருமான் சொல்லும் போதே அச்சிவஞானபோதம் புத்தக ரூபமாய் இருந்ததென்று தெளிவாய் ஏற்படுகிறது. அதல்லாமலும், திருவிளையாடல் 57 - வது வலைவீசினபடலத்தில் சிவபெருமான் பார்வதிக்கு உபதேசிக்கும்போது கையில் சிவஞானபோதப் புத்தகம் வைத்துக் கொண்டிருந்தாரென்றும், அதை வடிவேற் செங்கைப்புனிதன் ஒல்லெனப் பாாமசஙனை லலய பறித்துவல்லே திரைபுக வெறிந்தானென்றும் கூறப்பட்டிருக்கிறது.
   
அதன்றியும், சிவபெருமான் வாதவூரடிகளுக்கு உபதேசித்த காலத்தில் கையில் 'புத்தகத்தெழுதிய சிவஞான மெய்ப் போதங் கைத்தலத்தில்” வைத்திருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
   
ஆகையால், எப்போது சிவஞானபோதம் புத்தகரூபமாய் இருந்ததோ அப்போதே அது தமிழ்தான் என்று திண்ணமாய்ச் சொல்லலாம். எப்படியென்றால், ஆரியத்துக்கு அக்காலத்தில் எழுத்துக்கள் கிடையா என்பது தேற்றம். ஆரியத்துக்குக் கொஞ்சகாலத்துக்கு முன் தான் எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன என்பதை யாவரும் அறிவர். ஆகையால் ஆரியபாடைக்கு எழுத்துக்கள் ஏற்படாத காலத்தில் ஒரு நூல் புத்தகரூபமாய் இருந்ததென்றால் அது தமிழ்தான் என்று உறுதியாய்க் கூறுவ தில் யாதொரு தடையும் இல்லை.

   புத்தகம் என்பது புஸ்தகம் என்னும் வடமொழியின் சிதைவு எனத் தப்பாகக் கருதியிருக்கிறார்கள் சிலர். ஆரியத்தில் எழுத்தில்லாமல் புஸ்தகம் என்ற வார்த்தையுண்டாகுமா? ஆகை யால், மேலே கூறியது (அதாவது புத்தகம்) வடமொழிப்பதம் என்பது) விந்தையினும் விந்தை எனக் கூறாநிற்பர் சிலர். அதனுண்மை இதனடியில் பகருதும் : - -
   
புஸ்தகம் என்பது புத்தகம் என்னும் பதத்தின் திரிபே யொழியப் புத்தகம் என்பது புஸ்தகத்தின் திரிபல்ல. புத்தகம் என்றால் மயிலிறகு என்று அர்த்தம்.
   
ஆதிகாலத்தில் தமிழர்கள் குறிஞ்சிநாட்டில் வசித்தவர்களாதலாலும், குறிஞ்சிக்கருப்பொருள் மயிலாதலாலும் பலநிற வண்ணங்களைக் குழைத்து மயிலிறகால் மூங்கில் பட்டைகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
   
புத்தகத்தால் (மயிலிறகால்) எழுதியதற்குப் புத்தகம் என்னும் பெயருண்டாயிற்று.

தமிழ்மொழியினின்றுமே உலகத்துள்ள எல்லா பாடைகளும் உண்டாயின வென மறுக்க வொண்ணாத முறையில் ஸ்ரீமான் கார்த்திகேய முதலியார் மொழி நூல்' என்னும் தமது நூலின் கண் கூறியிருக்கின்றார். அம்மொழி நூலைப்பார்க்குமிடத்துச் சிவபெருமானுடைய திருவருளின்றி முடியாதகாரியம் என ஒவ்வொருவருக்கும் தோன்றாநிற்கும். சிவபெருமான் இவருக்கு நீண்ட ஆயுளைத்தந்து இன்னும் அநேக நூல்களைச் செயவிப்பாராக. மேற்சொன்ன மொழி நூலும் நம்கொள்கையை வலியுறுத்தும்.
   
ஆகையால், தமிழ்மொழியே ஆதியில் சிவபெருமானால் அளிக்கப்பட்ட தென்றும், தமிழ் வேதாகமங்களே சிவபெருமானால் சொல்லப்பட்டவை யென்றும், சனகாதிகளுக்குத்தென் முகக்கடவுள் கூறியதும் (ஆதியில் வேறு பாழையின்மையால்) தமிழ்ச் சிவஞானபோதமே யென்றும், அச்சிவஞான போதம் வழி வழி முறையாக இப்போது நமக்குக்கிடைத் திருக்கின்றது என்றும், சனகாதிகளுக்கும் ஏனையோர்களுக்கும் தென்முகக்கடவுள் உரைத்தது வடமொழிச் சிவஞானபோதம் என்று சிலர் கொண்ட கொள்கை வலியற்றது என்றும் காட்டினாம்.

அத்தியாயம். IV
இரண்டாவது வினாவுக்கு விடை.
   
இனி இரண்டாவது ஆசங்கையை விவகரிப்பாம்.

வடமொழிச் சிவஞானபோதம் இரௌரவாகமம் பாசவி மோசனப்படலத்தில் உள்ளது என்பது.
   
ஆதியில் சிவபெருமான் வேதாகமங்களைத் தமிழிலேயே சொன்னார் எனமுன்னமே காட்டினாம். ஆகையால், அப்படிச் சிவபெருமான் இரௌரவாகமத்தில் சொல்லியிருந்த போதிலும் அது தமிழில் தான் சொல்லியிருக்க வேண்டும்.
   
ஆரியர்களுடைய வேதமாகிய இருக்கு வேதம் அவர்கள் சிந்து நதி தீரத்தில் குடியேறின பிற்பாடு எழுதப்பட்டது. மற்ற மூன்று வேதங்களும் ஆரியாவர்த்தம் ஏற்பட்ட பிற்பாடு எழுதப்பட்டன. உபநிஷத்துக்கள் தென்னாட்டுத் தமிழருடன் கலந்த பிற்பாடு எழுதப்பட்டன. ஆகமங்கள் அந்த உபநிஷத்துக்களுக்குப்பின் (அதாவது தென்னாட்டிற்கு ஆரியர்கள் வந்து கிரந்தலிபி ஏற்படுத்திக் கொண்ட தன் பின்) எழுதப்பட்டன.
   
ஆரியர்கள் தமிழ் அரசர்களைக் கைவசப்படுத்திக்கொண்டு ஆண்டுவருங் காலத்தில் கோவில்களில் பூசைபுரியவும் வீடுகளில் புரோகிதம் முதலியன செய்யவும் ஆரம்பித்தார்கள். அக்கோவிற்கிரியைகளும் மனைகளில் நடக்கும் கிரியைகளும் தமிழர்களுடைய வழக்கப்பிரகாரம் நடத்திவைத்துப் பொருள் சம்பாதிக்க முயன்ற ஆரியர்கள் தமிழர்களுடைய ஆகமங்களைக்கேட்டு கிரந்தத்தில் எழுதிக்கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். அப்படி எழுதின ஆகமங்களே இப்போது உள்ளன.
    பிறகு, ஆரியர் காலத்தில் ஆரியம் கற்ற தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கிரந்தத்திலேயே ஆகமங்களுக்கு விருத்தியெழுதினார்கள். தமிழில் இந்த மூலா கமங்கள் எல்லாம் இறந்து பட்டன.
   
ஆகையால், இரௌரவாகமம் அப்படி ஆரியர்கள் தமிழாகமத்தினின்றும் மொழிபெயர்த்ததே.
   
ஆகையால், அவ்வாகமக்தில் அப்பன்னிரண்டு சூத்திர மொழிபெயர்ப்பு இருந்தாலும் முதனூல் ஆகமாட்டாது.
   
இரௌரவாகமம் பாசவிமோசனப்படலத்தில் அப்பன்னிரண்டு சூத்திரங்களும் இல்லையென்பது எமது துணிபு. ஏனென்றால், சிவபெருமான் வேதாகமங்களை வெளிப்படுத்தினார். அவ்வேதாகமங்களை யெல்லாம் சனகாதிகள் கற்றவர்களே; கல்லாதவர்கள் அல்ல; அப்படி அவ்வாகமங்களில் ஒன்றாகிய இரௌரவாகமத்தில் அப்பன்னிரண்டு சூத்திரங்களும் இருந்திருந்தால் அவர்கள் கற்றிருப்பார்கள். ஆகையால் இல்லையென்பதேதுணிபு.

சனகாதி முனிவர்கள் வேதாகமங்களைக் குற்றமறக் கற்று அவற்றினின்றும் உண்மை தேறமாட்டாதபடியால் சிவபெருமானை நோக்கித் தவங்கிடக்க அவர்கள் எல்லாரும் எளிதில் உணரும் வண்ணம் சிவஞான போதப் பன்னிரண்டு சூத்திரங்களையும் திருவாய்மலர்ந்தார்.
   
மேலும், பாருங்கள் தென்முகக் கடவுள் கையில் வைத்திருப்பது சிவஞானபோதம் புத்தகமே யொழிய இரௌரவாகமம் அன்று அப்படி இரௌரவாகமம் பாசவிமோசனப் படலத்திலிருந்தால் ஆகமமன்றோ கையில் வைத்திருக்க வேண்டும். சிவஞானபோதப் புத்தகத்தைத் தனியாக வைத்திருக்கக் காரணம் சிறிதும் இல்லையே.
   
ஆகையால் அப்பன்னிரண்டு சூத்திரங்களும் ஆகமத்தில் உள்ளனவல்ல என்பது தெளிவாம்.
   
அல்லது, சனகாதிகள் தாம் ஆகமங்களையெல்லாம் பார்த்தோம், இரௌரவாகப் பாசவிமோசனப் படலத்தையும் பார்த்தோம், அப்படலத்தின் கண்ணுள்ள 12 சூத்திரங்களையும் பார்த்தோம், அச்சூத்திரங்களின் பொருள் விளங்கவில்லை எனக் கூறினார் என்றும் கேட்கிறோம் இல்லை. உண்மையாகவே ஆகமங்களில் அச்சூத்திரங்கள் இருந்திருந்தால் அல்லவோ அத்தன்மையான கடாநிகழும். ஆகையால் இரௌரவாகமம் பாசவிமோசனப்படலத்தில் உள்ளனவென்று கூறுவது தவறு என்பது சித்தாந்தம்.

அத்தியாயம். V
மூன்றாவது வினாவுக்கு விடை.
   
தமிழ்ச் சிவஞானபோதம் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்பு என்பது.

மெய்கண்டாராவது, அவர் மாணாக்கர்களாவது, அல்லது அவர் பரம்பரையில் வந்தவர்களாவது சிவஞானபோதத்தை மொழிபெயர்ப்பு நூலென்றும் அல்லது பரஞ்சோதிமுனிவர் உபதேசித்தது வடமொழிச் சிவஞானபோதம் என்றும் ஓரிடத்தும் ஒருகாலத்தும் கூறவேயில்லை.

அப்படியிருக்கப் பற்காலத்துப் பதிப்பாசிரியர்கள் தங்கள் மனம்போன போக்கெல்லாம் வடமொழியில் முதனூல் உண்டு என்று சொல்லாவிட்டால் அசௌரவம் என்று எண்ணிக் கற்பனையாகக் கூறியதே தவிரவேறன்று.
     
மேலும், மெய்கண்டார் சொன்ன தமிழ்ச்சிவஞான போதம் வடமொழி இரௌரவாகமம் பாசவிமோசனப்படலத்தில் இருந்து மொழிபெயர்த்தது என்று கூறுபவர்கள், அவ்வடமொழிச் சிவஞான போதத்தையேனும் பார்த்தது உண்டோ என்றால் அதுதானும் இல்லை.
     
ஏனென்றால் வடமொழிச் சிவஞானபோதத்தில் கடைசிச் சூத்திரத்தில்
      ''ஏவம்வித்யா சிவஞான போதே
      சைவார்த்த நிர்ணயம்''
     
என்று கூறப்பட்டிருக்கிறது.
     
அதனுடைய தாற்பரியம் என்னவென்றால் மேலே சொன்னசங்கதிகள் சிவஞான போதத்தில் சைவார்த்தமாக நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன'' என்பதே
     
ஸ்ரீமெய்கண்ட சந்தான பரம்பரை ஞானப்பிரகாச தேசிககுரு சுவாமிகள் அவர்கள் திருமடத்தில் உள்ள ஸ்ரீ ஞானப்பிரகாசரால் செய்யப்பட்ட 'சிவஞானபோத விருத்தி' யில் 12ம் சூத்திரத்துக்கு அடியில் வருமாறு கூறப்பட்டிருக்கிறது. (இவ்விருத்தி இன்னும் அச்சாக வில்லை.) : -.
      12 - ம் சூத்திரம். (பொ - ரை.) முத்தியின் பொருட்டு சதாகுருவும் சாதகப்புத்திர சமயிகளாகிய சங்கமரும் என்கிற நல்லோர்களை அடைந்து வேடத்தையும் ஆதாரலக்ஷணையினாலே வேடமெனப்பட்ட வேடதாரிகளாகிய அவர்களையும், ஆதாரலக்ஷணையினாலே இலிங்கத்தையும் பிரதக்ஷிண நமஸ்காரமுதலியவற்றாலே சேவிப்பானாக. இப்படியே சிவஞான போதத்திலே சைவப் பொருட்டுணியை அறிக.
இந்தமாதிரி மேற்படி வடமொழிச்சூத்திரங்களின் இறுதியிலே கூறியிருப்பதால், எந்தச் சிவஞானபோதத்திலே அப்படிக் கூறப்பட்டிருக்கிறது என்று கவனித்தவர்கள் தானும் கிடையாது.
   
இவ்வடமொழிப்பன்னிரண்டு சூத்திரங்களைத் தவிர்த்து வடமொழியில் வேறே சூத்திரங்கள் இல்லை யென்பது தெளிவாம். அப்படி இருந்திருந்தால், வடமொழியை இவ்வளவு தானென்று கரைகண்ட சிவாக்ரயோகிகளாவது, சிவஞான முனிவராவது கூறாது இருக்கமாட்டார்கள். ஆகையால், மேலே சொன்ன 12 சூத்திரங்கள் கிடையா வென்பதே சித்தாந்தம். அப்படி இருக்கிறது என்று சொன்னால் அது கற்பனையே. தற்காலம் நூதன உபநிஷத்துக்கள் ஏற்படுவதைப் போன்றதே.
   
ஆகவே, அச்சூத்திரத்திலேயே சிவஞானபோதத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தால் அச்சிவஞான போதம் தமிழ்ச் சிவஞானபோதம் தவிர வேறேயில்லை என்பது வெளிப்படை. வடமொழிச்சூத்திரங்களே மொழிபெயர்ப்புச் சூத்திரங்கள் என்று சொல்வதில் யாதொரு சந்தேகமும் இல்லை.
   
யாரோ ஒரு ஆரியக்கவிராயர் தமிழ்ச் சிவஞானபோதத்தைப் பார்த்துத் தம்முடைய உபயோகத்துக்காக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டவை அப்பன்னிரண்டு சூத்திரங்களும். பிற்காலத்துப் பதிப்பாசிரியர்கள் வடமொழியில் முதனூல் உண்டென்று சொல்லுவது அதிக கௌரவம் என்று எண்ணி வடமொழியில் ஆதாரம் தேட, தேடினவர்களுக்கு, அச்சூத்திரங்கள் அகப்பட அச்சிட்டு வெளிப்படுத்தினர். அச்சூத்திரங்கள் ஆகமங்களினின்றும் எடுக்கப்பட்டவை என்று கூறாவிட்டால் சைவர்கள் ஒப்பார்கள் எனக்கருகி, அஞராது, இரௌரவாகமம் பாசவி மோசனப்படலத்திலிருந்து எடுக்கப்பட்டவை, அவை களினுடைய மொழிபெயர்ப்புத்தான் தமிழ்ச் சிவஞானபோதம் எனக்கதை எழுது வராயினர்.
     
மற்றவர்களும் குரும்பையாட்டுக் கூட்டமா தலால் மறுத்தற்கு அஞ்சி அதனையே பின்பற்றினர்.
     
அல்லது, ஆரியர் தென்னாட்டிற்கு வந்து தமிழர்களுடைய வழக்க ஒழுக்கங்களைக் கைப்பற்றி ஒழுகிவருங்காலத்தில் (அதாவது கிரந்தலிபி ஏற்படுத்திக்கொண்ட பிற்பாடு,) தற்காலம் ஆங்கிலேயர்களும் தமிழ் சித்தாந்தநூல் தெரியவேணு மெனக்கருதி ஸ்ரீமான் J. M. நல்லசாமிப் பிள்ளையவர்கள் சிவஞான பாதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது போல, தமிழன் ஒருவன் கிரந்தத்தில் மொழிபெயர்த்து ஆரியர்களுக்குப் புகட்டியிருந்தால் கூடாதோ? ''ஏவம் வித்யா சிவஞானபோதே சைவார்த்த நிர்ணயம்'' என்னும் கடைசி அடியில் இக்கருத்தும் தொனிக்கவில்லையா?
     
மேலும், பாருங்கள், மேற்சொன்ன மொழிபெயர்ப்பு வடமொழிச் சூத்திரங்கள் ஆகமத்தினின்றும் எடுக்கப்பட்டது என்று கூறவேண்டு மென்று பதிப்பாசிரியர், எந்த ஆகமத்தைச் சொல்லலாம் என்று யோசித்தபோது " இரௌரவாகமம் பாசவி மோசனப்படலம்'' என்று வாய் கூசாது பதிப்பித்துவிட்டார். ஏனென்றால் உண்மையாமிருந்தால் அல்லவோ சிவபெருமான் உள்ளபடி கூட்டிவைப்பார்.
     
ஆகமங்களில் சிவப்பு ரோக்தம் உருத்ரப்புரோக்தம் எனப் பிரிவுகள் உண்டு. அதில் இரெளாவாகடம் உருத்ரப்புரோக்தம் என்னும் பிரிவில் சேர்ந்தது. சிவபெருமானால் அருளிச்செய்த சிவஞானபோதம் சிவப்புரோக்தத்தில் இருக்க நியாயம் சிறிதும் இன்று..
     
எப்படி பகவத்கீதையை இடையில் யாரோ மகாபாரதத்தில் நுழைத்தார்கள் என்று சொல்லுகிறார்களோ, அப்படியே இப்பன்னிரண்டு வடமொழிச் சூத்திரங்களையும் இரௌரவாகமத்தில் உள் நுழைத்து விட்டிருக்கலாம். அதற்கு அதனுடைய கடைசி அடியே சான்று பகரும்.

(Vide the words of Mr. Dutt: - Every later poet and editor has contributed his mite towards enlarging, altering and distorting the ancient epics. Every new sect has been careful to incorporate its new-fangled tenets in the national work; and Krishna worship, which is of later origin, has been bodily transplanted in the ancient narrative of the Kuru - - Panchala war)

ஆசையால் பின்வந்த பண்டிதர்களும், பதிப்பாசிரியர்களும், மதாசாரியர்களும் தங்களுக்கு வேண்டியவாறு நூல்களைத் திருத்தியும், கூட்டியும், குறைத்தும் உண்மை கண்டறிவது கஷ்டமாகும்படி செய்துவிட்டார்கள்.
   
வடமொழி நூல்களில் பெரும்பான்மை தமிழினின்றும், தமிழின் பிரிவாகிய மராட்டிரம் முதலிய பாழைகளினின்றும் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்தபிற்பாடு டெடாழிபெயர்த்த நூல்களே என்று வி. கோ.. சூரிய நாராயண சாள் திரியார் அவர்கள் கூறி இருக்கின்றார். அது வருமாறு:

    (தமிழ் மொழிவரலாறு பக்கம் 14, 15. 1903ம் வருஷத்திய பதிப்பு.)
  
''வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் (தமிழர்கள்) ஆன்ம நூற் பயிற்சிமிக்குடையராயும் கலையுணர்ச்சி சான்றவராயும் இருந்தமை பற்றித் தமிழரது திவ்யஸ் தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்.......................... தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத்தாம் அறிந்தனபோலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்,
   
தமிழருட் சாமானிய அனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும்புலவராயினார் அவர்களது திருத்தப்பாட்டிற்குப் பெரிது மிணங்கினாரல்லர். ஒழுக்கச்சீர்ப்பாடு ஏற்பட்டபோதிலும், பாஷைத்திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோ ரெழுத்துக்களும் அவ்வாறேயின்றளவும் இருக்கின்றன. சிறிதும் வேறபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி, புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழ் நாட்டிற்கு ஏற்றபடி தமிழ்லிபியை யொட்டிக் கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர். தமிமுரை வரிகரிக்கும் அவ்விலிபியிற் பலநூல்கள் வகுத்தனர்.''

ஆனால், ஆரியர்கள் நூல்களைத் தங்கள் பாஷையில் மொழி பெயர்க்கும் போது இன்னபுத்தகத்தினின்றும் மொழிபெயர்த்தது என்று சொல்லாமலே அதிக தாக்கிரதையாய்த் தாங்கள் சுயமாகவே செய்தது போல எழுதிக் கொண்டு, அதற்குத்தக்கப்பேர்களையும் கதைகளையும் ஆரியா சாரப் பிரகாரம் மாற்றிக்கொண்டு எழுதிவிட்டார்கள். அதனாலேதான் இப்பொழுது கண்டு பிடிப்பது பெருங்கட்டமாயிருக்கிறது.

உத்திரமேரூர் என்னும் க்ஷேத்திரத்தில் நான்கு சிவாலயங்களும் ஒருகுகாலயமும், இரண்டு விண்டு வாலயங்களும் உள. சின்னாண் முன்னர் நான் அவ்விடம் இருக்கும் போது, ஒருவர் விண்டு வாலயங்களைப் பற்றிய புராணம் ஒன்று இருக்கிறது என்றும், அதில், ஸ்ரீராமானவர் இராவணனைக்கொன்ற பாவத்தால் பிரமகத்தியால் பீடிக்கப்பட்டாரென்றும், அதற்காகச் சிவபெருமான் விண்டுவை அத்தலத்தில் பூசித்தாரென்றும் புராணத்தில் இருப்பதாகச் சொன்னார். இது தென்னமரத்தில் தேள் கொட்டப் பனை மரத்தில் நெறி கட்டினது போல் இருக்கிறது. இதையும் தான் தமிழர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். யாராவது ஒரு ஆரியன் கூறிவிட்டால் அது சரியோ இல்லையோ என்பதைக் கவனியாது தலைகுனிந்து போவதால் தான் தமிழர்களுடைய நிலைமை பரிதபிக்கவேண்டிய ஸ்திதியில் இருக்கிறது.
     
அது போல், வடமொழிச் சூத்திரத்திலேயே தமிழினின்றும் மொழி பெயர்த்ததென்று பட்டாங்கமாகக் கூறியிருக்க, தமிழ்ச் சூத்திரங்கள் வடமொழியினின்றும் மொழி பெயர்த்ததென்று யாரோ ஒரு ஆரியன் அபிமானத்தால் கூறியிருக்க அதைச்சற்றும் கவனியாது, வியாசர் கட்டுக்கஞ்சி, குரும்பையாடுகள் மாதிரி ஆம் ஆம் என அதைப் பின்பற்றினார்கள்.

   
மேலும், வியாசர் காலத்துக்குப் பிற்பட்டும் கம்பர் காலத்துக்கு முற்பட்டும் (2000 BC - - 1200 A D) உள்ள வித்வான்களில் சிலர் எல்லாப் பாழைகளும் சமஸ்கிருதத்தினின்றும் உண்டாயின, எல்லா நூல்களும் சமஸ்கிருதத்திலேயே உள்ளன, மற்றப் பாழைகளில் உள்ள நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களே என்று கருதியிருந்தார்கள். இந்த மாதிரி நினைக்கும் வித்துவான்கள் இக்காலத்திலும் அநேகர் உளர். மேற்படி காலத்துக்கு உள்பட்ட வித்வான்களிற் பெரும்பாலார் தாங்கள் சுயமாகப் பாடியிருந்த போதிலும் வியாசர் சூதமுனிவருக்குச் சொல்ல, சூதமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொல்ல அப்படியே வழி வழியாக வந்த சங்கதிகளை யானும் கூறுகின்றேன் என்று கூறியிருக்கின்றார்கள். வடமொழியில் முதனூல் இல்லை யென்று சொன்னால் தமிழுக்கோர் இழுக்கு என எண்ணினார் போலும்.
    
கம்பர் காலத்துக்குப்பின்னிட்டும் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை காலத்துக்கு முன்னிட்டும் (1200 AD - 1850 A D) உள்ள வித்துவான்களில் பெரும்பாலார், ஆரியம் வேறு, தமிழ் வேறு, இரண்டும் தனித்தனிப்பாஷைகள் என்று கருதினார்கள். அதற்குத் தகுந்தாப் போல்
      "ஆரியமுந்தமிழும் உடனே சொலி' என்னும் பாசுரத்தையும்
"ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய்'' என்னும் பாசுரத்தையும்
''வடமொழியைப் பாணினுக்கு வகுத்தருளி''
என்னும் பாசுரத்தையும் கண்ணுறலாயினர்.
    
ஆனாலும், வடமொழியில் முதனூல் இல்லாத நூல்களை அங்கீகரிப்பது கட்டமாக இருந்தது. எப்படியாவது வடமொழியில் முதனூல் உண்டென்று சொல்லவே அவர்கள் மனம் போயிற்று.

பெரிய புராணமும், சிவஞானபோதமும் முத நூற்களாயிருக்க அப்படிக்கூறுவது அவர்களுக்கு யாது காரணத்தினாலோ மனம் எழவில்லை.

ஆனால் ஆரியம் வேறு, தமிழ்வேறு என்று கூறத்தடை இல்லை. வேறு என்று கூறுவதோடு மாத்திரம் நின்றார்களே யொழிய நூல்களும் தனிமுதனூல்களாக இருக்கவேண்டும் என்பதை யோசியாமற் போனார்கள். எப்போது ஆரியம் வேறு தமிழ்வேறு, ஒன்றுக் கொன்று யாதொரு சம்பந்தமுங் கிடையாது என்று ஒப்புக்கொள்ளுகிறார்களோ அப்போதே மேற்படி இரண்டு பாழைகளிலும் தனிமுதனூல்கள் உண்டு என்பது சித்தாந்தம் ஆகையால் அப்படித் தனிமுதனூல்களில் சேர்ந்தது நமது தமிழ்ச் சிவஞானபோதம் என்று ஏற்படுகிறது.
    
மீனாக்ஷிசுந்தரம் பிள்ளைக்குப் பிற்பட்டு உள்ள வித்வான்களிற் பெரும் பாலார் எல்லாப்பாழைகளும் தமிழ்ப் பாழையினின்றும் உண்டாயின. தமிழ்தான் ஆதிபாழை, தமிழ் நூல்களினின்றும் வேறுபாழை நூல்கள் பெரும்பான்மை மொழிபெயர்க்கப்பட்டன என்று தங்கள் ஆராய்ச்சியால் கண்டிருக்கிறார்கள்.
    
ஆகையால், உண்மைகண்டறிய நாளாக வேண்டும் என்று தோற்றுகிறது.
    
(Vide the Indian Review June 1910). Professor Monier Williams, an eminent Sanscrit Scholar says,“ Let me crave leave to remind the great Indian Pandits that the Romanized character will be found, if its history he investigated,' to be neither modern nor European and may possibly turn out to be more ancient than their Sacred Nagari and even more suited to the expression of their sacred sanscrit.

As to the origin of the Indian Scripts, including the Nagari and the Poli, all these alphabets (or rather syllabaries) may be traced back to one single source, the edicts of Asoka. The inscriptions remain on the rocks as Girnar and other places to the present day. All the vernacular alphabets, the Nagari, the Poli are only local varieties of Asoka's letter. Where the Asoka alhhabet came from is a question of 'not yet clearly settled. But it is most probable that some more ancient alphabet was taken and the letters increased and modified to suit the needs of Indian speech and to represent the Indian classification of speech sounds. Such modifications are found in other alphabet. Asoka was only doing what a wise king would do when he modified letters to suit the needs of the speech of his people

என்பது மேனாட்டுக் கவிராயர்களுடைய கருத்து. அதாவது நாகரம், பாளிமுதலிய பாஷைகள் அசோகர் ஏற்படுத்திய பாஷையிலிருந்தும் எடுத்துச் சீர்திருத்தப்பட்டவைகள் என்பது. அசோகபாஷை தமிழ் என்பதற்கு யாதொரு தடையுமில்லை. அசோகா தனக்கு வேண்டியவாறு தமிழைச் சீர்திருத்திக் கொண்டான்.

இப்படியே காலாந்தரங்களில் தமிழ் திருத்தமுற்று வேறு வேறு பாஷைகளாகப் பிரிந்தது என்பது கற்றறிந்தோர் கொள்கை.
    
ஆகையால், தமிழினின்றும் எல்லாப் பாழைகளும் உண்டாயின வென்பது சொல்லாமல் அமையும்.
    
தமிழ் முதலில் உருவ எழுத்து பிறகு கோலெழுத்து, பிறகு வட்டெழுத்து, உடையதாக இருந்து, இப்பொழுது சதுர எழுத்து உடையதாக இருக்கிறது.

தமிழைத்

1. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் சீர்திருத்திய தொரு முறை,
2. குன்றமெரிந்த குமாவேள் சீர்திருத்திய தொருமுறை,
3. பொதிகையிலிருந்த அகத்தியன் சீர்திருத்திய தொரு முறை,
4. ஐந்திரம் செய்த இந்திரன் சீர்திருத்திய தொருமுறை,
5. இராவணீயம் செய்த இராவணன் சீர்திருத்திய தொரு முறை,
6. ஒல்காப்பெரும்புகழ் தொல்காப்பியனார் சீர்திருத்திய தொருமுறை,
7. கடைச்சங்கமிருந்த நக்கீரர் முதலியோர் சீர்திருத்திய தொருமுறை
8. பொன்மதிற்சனகை நன்மதிப்பவணந்தி சீர்திருத்திய தொருமுறை,
9. அவஞானம் போக்கும் சிவஞானமுனிவர் சீர்திருத்திய தொருமுறை,
      இப்படிக் காலங்கள் தோறும் சீர்திருத்தம் பெற்றவாறே, அசோகாவும் தன்னுடைய காலத்தில் தமிழைத் தனக்கு வேண்டியாங்கு சீர்திருத்திக் கொண்டான். ஆகையால் உலகம் தோன்றிய நாண்முதல் வழங்கும் பாஷை தமிழே; மற்றப்பாஷைகளெல்லாம் காலாந்தரங்களில் உண்டாயின என்பது போதருகின்றது.
    
ஆனால் அத்தமிழ் நூல்களெல்லாம் எங்கே எனக் கடாவுவார்க்கு இறுப்பதானது, அந்நூல்களெல்லாம் காலந்தோறும் குமரிநாட்டில் உண்டான பிரளயங்களினாலும், வியாசர், வைதுல்லியர், சமணர், மகமதியர் வைத்த நெருப்பினாலும், செல்லினாலும் இறந்து பட்டன என்பதே.
    
இதுகாறும் கூறியவாற்றால் தமிழ்ச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு அன்று என நாட்டினாம்.
  
ஆனால் சிலர்
''ஏவம் வித்யா சிவஞானபோதே சைவார்த்த நிர்ணயம்''
என்பதற்கு அடியில் வருமாறு அர்த்தம் செய்திருக்கிறார்கள்
  
அதுவருமாறு :
    
"முத்தியின் பொருட்டு சீவன் முத்தர்களை அடைந்து அவர்களுடைய திருவேடத்தையும் திருக்கோவிலையும் வழிபடுக; இவ்விதம் சிவஞானபோதம் என்னும் இந்நூலில் சைவாகமங்களின் பொருள் நிச்சயித்தை அறிக.''
      
சப்தமாதிபத்தி நியாயத்தால் சிவஞான போதே என்பதற்கு சிவஞானபோதம் என்று அர்த்தம் செய்திருக்கிறார்கள்.

இச்சூத்திரர் செய்தவர்கருத்து அப்படி யிருந்திருக்குமா னால் ஏவம் வித்யா சிவஞானபோதே என்னுமட்டும் சொல்லிமுடி த்திருப்பார். சைவார்த்த நிர்ணயம் என்று சேர்த்துச் சொல்லு வதற்கு நியாயம் இல்லை. இதை உற்று நோக்குவார்க்கு இக்கரு த்து வெளிப்படும். மேலும், என்னும், இந்நூலில், அறிக என் னும் வார்த்தைகளுக்குச் சூத்திரத்தில் யாதொரு இடமும் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டியது.

மேலும், இந்தமாதிரி அர்த்தம் செய்தவர், அக்காலத்தில் கிரந்த எழுத்தாவது, நாகர எழுத்தாவது இல்லை என்பது தெரிந் திருந்தால் இந்நூலில், என்று அர்த்தம் செய்திருக்கமாட்டார். ஆகையால் சிவஞானபோதம் என்னும் இந்நூலில் சைவாகமங் களின் பொருள் நிச்சயத்தை அறிக என்று செய்தவுரை வெற்று ரையாயினமை அறிக.

      இவையிற்றினைக் கவனிக்குமிடத்துச் சப்தமாதிபத்தியால் கூறும் அர்த்தம் அபிமானம் பற்றிக் கூறியதே யொழிய வேறன்று. Vide also Siddhanta Sikamani edited by S. Nagi Chettiar உபோத்காதம் page 5 (1910).
    
"இருபத்தெட்டு ஆகமங்களில் ஒன்றாகிய இரௌரவம் 73 படலங்களையுடையது. இவற்றுட் பாபவிமோசனப் படலமென்பதொன்று. இதிலுள்ள சூத்திரங்களில் பன்னிரண்டு சிவஞானபோதத்தைப் போதிப்பதாம். திருவெண்ணை நல்லூர் மெய்கண்ட தேவர் சிறுவயதிலேயே அவ்வூர் பொல்லாப்பிள்ளையார் என்னும் விநாயகமூர்த்தியின் உபதேசத்தால் அதன்பொருளை யறிந்து தமிழில் சிவஞானபோதம் எனப்பெயரிட்டுத் தம் சிஷ்யர்களுக்கு உபதேசித்தனர் என்பர் ஒருசாரார்.

வடமொழிச் சிவஞானபோதத்தின் பன்னிரண்டு சூத்திரங்களின் பொருள் சிவஞான போதமாமென்று பன்னிரண்டாம் சூத்திரத்திலையே கூறப்பட்டிருத்தலான் சிவஞான போதமென்னும் கிரந்தமானது ரௌரவாகத்தில் இல்லை யென்பது பெறப்படும்.
எனவும்.
    
வடமொழிப் பன்னிரண்டு சூத்திரங்களையும் தமிழ்மொழிப் பன்னிரண்டு சூத்திரங்களையும் செவ்வனே ஒத்திட்டுப்பார்க்குமிடத்து மொழிபெயர்ப்பு மாணாகக்காணப்படுதலான் மெய்கண்டதேவர் சிவஞானபோதத்தை வடமொழியினின்று அவ்வாறு முரண்பட மொழிபெயர்த்தனர் என்பது இழுக்காகும் எனவும்,

அதனால் அந்தச் சிவஞானபோதமானது வடமொழியினைத் தழுவாததோர் சாஸ்திரமாமெனத் துணியற்பாலதெனவும்,
      
மெய்கண்டதேவர் அருளிய சிவஞான போதத்தினாலும் அருணந்தி தேவர் அருளிய சிவஞானசித்தியாரிலும் வடமொழியினின்றும் மொழி பெயர்த்ததாகக் காணக்படவில்லை எனவும், கூறுவார் மற்றொருசாரார்.
    
தென்மொழிச் சிவஞான போதத்தையே மொழிபெயர்த்து வடமொழியாகமத்துட் சேர்க்கப்பட்டுள்ளதெனவும் செப்புவர் இன்னொருசாரார். எவ்வாறாயினுமாகுக. உண்மையினைக் கண்டறிதல் அறிஞர் வழக்காம்.
    
ஈண்டு உதாரணமாக இரண்டு சூத்திரங்களை மட்டும் எடுத்துக்காட்டுவாம். அவை வருமாறு: -


அவனே தானேயாகிய அந்நெறி
       யேகனாகி யிறைவணி நிற்க
       மலமாயை தன்னொடும் வல்வினையின்றே.
       செம்மலர் நோன்றாள் சேரவொட்டா
       அம்மலங்கழீ இ அன்பரொ டுமரீஇ
       மாலறநேயம் மலிந்தவர் வேடமும்
       ஆலயந்தானும் அரனெனத் தொழுமே.''
      
ஆகையால் இதுகாறும் கூறியவாற்றால் தமிழ்ச்சிவஞான போதம் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்பு அன்று என்பதை வெள்ளிடை மலைபோல் விளக்கினாம்.

VI. அத்தியாயம்.
நான்காவது வினாவுக்கு விடை.
    
ஆதிமொழி (எல்லா மொழிகட்கும் முந்தினது) தமிழ்மொழி யென்றும், சிவபெருமான் நந்தியம்பெருமானுக்கு உபதேசித்தும், நந்தியம் பெருமான் சனற்குமாரருக்கு உபதேசித்தும், சனற்குமாரர் சத்தியஞான தரிசிகட்கு உபதேசித்தும் சத்தியஞான தரிசிகள் பரஞ்சோதிமுனிவருக்கு உபதேசித்தும், தமிழ்ச்சிவஞான போதமே என முன்னமே கழற்றினோம். ஆகையால் பரஞ்சோதி முனிவர் தாம் கேட்டதைத் தவிர்த்து வேறே மொழிபெயர்த்த நூலைச் சொல்லக்காரணம் சிறிதும் இல்லை.
    
மேலும், பரம்பரைச் சைவராகிய ஓர் ஆதி சைவத் தமிழர் வீட்டில் பிறந்த மெய்கண்டராம் தமிழ்க்குழந்தைக்கு (ஆரிய பாஷைக்குரிய குழந்தையல்ல) பரஞ்சோதிமுனிவர் அக்குழந்தைக்கு இயற்கையாக ஏற்பட்டிருக்கும் பாழையை விட்டுவிட்டுச் சமஸ்கிருதத்தில் சொல்ல நியாயம் சிறிதும் இல்லையன்றோ? மேலும்,

    ''தொண்டர் நாதனைத் தூதிடைவிடுத்ததும் முதலை
     யுண்டபாலனை யழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக்
     கண்டதும் மறைக்கதவினைத்திறந்ததும் கன்னித்
     தண்டமிழ்ச் சொலோமறு புலச்சொற்களோ சாற்றீர்''
    
என்னும் திருப்பாட்டுப் பிரகாரம் தெய்வீகம் பொருந்திய இனிமையான தமிழிருக்க, அத்தன்மையான தெய்வீகம் இல்லாத புலச்சொற்களாகிய மற்றப்பாஷையில் கூறினாரென்றல், கரும்பிரு பக்க இரும்பு கடித்தெய்த்தவாறே யொக்கும்.
    
ஆனால், பாஞ்சோதிமுனிவர் தம்முடைய தபோபலத்தால் மெய்கண்டாருக்குச் சமஸ்கிருத பாஷையை அறியும்படியான சக்தியை உண்டு பண்ணினா எனக்கூறுவார் சிலர் அது சற்றும் பொருந்தாது. ஏனென்றால் பரஞ்சோதிமுனிவர் உபதேசிக்கும் காலத்து மெய்கண்டாருக்கு வயது இரண்டென்றும் சிலர் ஒன்று என்றும் கூறுகின்றார்கள். எப்படி யிருந்தாலும் அவர் மூன்று வயதிற்கு மேற்பட்டவர் அல்லரெனக் கூறலாம். அக்காலத்தில் அவருடைய நா முதலிய க்ருவிகள் சமஸ்கிருத சப்தங்களைப் பிழையற சப்தங்குறையாமல் உச்சரிக்கப் போதுமான உரம் பெற்றில. குழந்தைகள் ''இராம்'' என்பதற்கு'' ஆம்'' என்பதை நாம் பார்க்க வில்லையா? ஆகையால் குழந்தைகளுக்கு ஏற்றபாஷை தமிழைத் தவிற வேறு இல்லை. ஆகையால், அத்தமிழ் பாஷையில் தான் கூறியிருக்கவேண்டும்.

      இதரபாஷை பேசும் ஜனங்களைச் சிறிதும் கண்டறியாத ஓர் ஆங்கிலேயச் சிறுவனிடம் இந்நாட்டு ஆங்கிலங் கற்ற தமிழன் ஒருவன் சென்று அச்சிறுவனிடம் பேச ஆரம்பித்தால் எப்பாஷையில் பேசுவான் என்பதைக் கவனிக்கவேண்டுகின்றேன். ஆங்கில நாட்டில் வளர்ந்த மூன்றுவயதுள்ள ஆங்கிலேயக் குழந்தைக்குத் தமிழ் சாஸ்திரங்களைத் தமிழில் ஓதிவைத்தார் என்றால் எவ்வளவு உண்மையாயிருக்குமோ அவ்வளவு உண்மைதான் தமிழர் நாட்டில் வளர்ந்த மூன்று வயதுள்ள மெய்கண்டார் என்னும் தமிழ்க் குழந்தைக்குச் சமஸ்கிருத சாஸ்திரம் போதித்தார் என்பது.
    
ஆனால், பாஞ்சோதிமுனிவருக்குத் தமிழே தெரியவராது என்றுகூற வருவாரோ என்றால் அவருக்கு இறுக்கும் தண்டம் ஒன்று உளது. அதாவது அவர் சிவஞானம் கைவந்த முனிவராதலால் அவருக்கு எல்லா பாழைகளும் வரும் என்பதே. குமரகுருபரசுவாமிகள் இந்துஸ்தானி பாஷையைக் கல்லாது தெரிந்துகொள்ள வில்லையா?
    
Rev. P. Percival in his 'The land of Veda' says, "Perhaps no language combines greater force with equal brevity; and it may be asserted that no human speech is more close and philosophic in its expression as an exponent of the mind. The language thus specified gives to the mind a readiness and clearness of conception whilst its terseness and philosophic idiom afford equal means of lucid utterance.
    
"தத்துவஞானங்களை மனதுக்குத் தெரியும்வண்ணம் மிகத் தெளிவாக எடுத்துப் போதிப்பதற்கு தமிழ்ப்பாழையே சாலவும் பொருத்தமானது. உலகத்துள்ள மற்றபாழைகள் அவ்வளவு தகுதியானதல்ல." என்று பெர்சிவல்துரை கூறுகின்றார். அதற்கு, திருக்குறளும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்களே சான்று பகரும்

"கடுகைத் துளைத் தெழுகடலைப் புகட்டிக் குறுகத்தரித்த குறள்'' என்றும் “அணுவைத் துளைத்தெழுகடலைப் புகட்டிக் குறுகத் தரித்தகுறள்'' என்றும் போற்றக்கூடிய நூல் எப்பாடையில் உள்ளது? ஆகையால் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கக்கூடிய சக்தி இத்தமிழ்ப் பாஷைக்கே சிறப்புடைத்து.
    
ஆகையால், எல்லா தத்துவஞானங்களையும் 12 சூத்திரங்களில் அடக்கிப் பாஞ்சோதிமுனிவர் கூறினாரென்றால் அது தமிழில் தான் சாத்தியப்படும். ஆகையால் தமிழில் தான் கூறியிருக்கவேண்டும் என்று எண்ண யாதொருதடையும் இல்லை.

முற்றும்.

                   துடிசைகிழார் அ. சிதம்பரனார்

சித்தாந்தம் – 1913 ௵ - ஏப்ரல், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்,


சிவஞானபோத முதனூல் விளக்கம்.

பிரணவம் தான் எல்லாவற்றிற்கும் ஆதியென்றும், அது தேவநாகர லிபியிற் காணப்படும் ஆகிரிதியல்ல வென்றும் பிரமஸ்ரீ காசி வாசி செந்திநாதய்யர் அவர்கள்'' சைவசித்தாந்தத் தத்துவப்பட வினாவிடையில் "நிரூபித்திருக்கிறார். அது எல்லாருக்கும் தெரியும் பொருட்டு இதனடியில் வரைகின்றேன்.
பிரணவம் தேவநாகாலிபியிற் காணப்படும் ஆகிர்தியாய் இருக்க வேண்டுமா? கிரந்தலிபியிற் காணப்படும் ஆகிருதியாயிருக்கவேண்டுமா? என்பது சந்தேகம்.
பூருவபக்ஷம்: - நாகாலிபியிற் காணப்படும் பிரணவாகிருதியா யிருக்கவேண்டும்; ஆரியா தேசத்தில் வழங்கப்படுவதொன்றாகலானும், தேவ என்னும் விசேடணத் தோடியைந்து தேவநாகரி எனப்படுதலானுமாம் எனின்,
சித்தாந்தம் கூறுதும், அது ஒவ்வாது; கிரந்த லிபியிற் காணப்படும் பிரணவாகிருதியே கோடற் பாற்று;
பரை, வாகீசுவரி, வித்தை, மாயை, பராவித்தை, பரவிந்து, பராசத்தி, மகாமாயை, குண்டலி என்பன (பிரணவகுண்டலியின்) பரியாயநாமங்கள்'' என்று சிந்திய விசுவசாதாக்கியத்திற் காணப்படா.
1. “பிரணவம் வில்லு” என்று முன்ட கோபநிடதத்தில் கூறப்படலானும்,
2. “மூலநாடியாயும், வளைந்த சர்ப்பவடிவமாகிய குண்டலியாயும், அம்சத்தொனியுடையதாயுமுள்ளது (பிரணவம்) என்று ஞான சித்தியாகமத்திற் கூறப்படலானும்,
3. "முதலாம் உறுப்பு நக்ஷத்திரவடிவமாயும், இரண்டாம் உறுப்பு தண்டவடிவமாயும், மூன்றாம் உறுப்பு குண்டலாகாரமாயும், நான் காம் உறுப்பு அர்த்த சந்திரவடிவமாயும், ஐந்தாம் உறுப்பு விந்து வோடியைந்ததாயுமுள்ள ஐந்து இலக்கணமுடைய பிரணவம்.'' என் று சிவாகமத்திற் கூறப்படலானும்,
4. "(எழுத ஆரம்பிக்குங்கால்) எதற்குச் சிரசு வடபுறத்தி னும், (முடிக்குங்காற்) பாதம் தென்புறத்தினும் இருக்கின்றதோ, எது எல்லாவற்றுக்கும் மேலாய் உள்ளதோ, அந்த மும்மாத்திரையுடைய சாக்ஷாத் பிரணவம் நான்'' என்று பதுமபுமாண சிவகீதையிற் கூறப்படலானும்,
5. "உலகத்துச் சராசரப்பொருளனைத்தும் மாயையாம் குண்டலியால் வியாபிக்கப்பட்டது'' என்று ஞான சித்தியிற் கூறப்படலானும்,

மூலமெய்யெழுத்தன்ன தோர் முதுவலம்புரியின்
கோலமாகி நோற்றிருத்தியாலுலகருள் குறிப்பால்.

(கந்தபுராணம் - உமைகயிலை நீங்குப்படலம், 47.)

வேதமூலநேர் வால்வளையுருக் கொடு விளங்கி
யேதமில்லதோர் பதும பீடத்தின் மேலிருந்தான்.

            (உமைகயிலை நீங்குபடலம் 51,)

தேனிமிர் கமல மொன்றிற் சிவனிடத்திருந்த தெய்வ
வானிமிர் பணிலம் வைக மற்ற வனது கண்ணுற்றான்.
(காளிந்திப்படலம் - 17.)

6. பிரணவம் வலம்புரிச்சங்கு வடிவினதென்றும் ஸ்காந்தபுரரணம் சங்கரசங்கிதையைச் சார்ந்த தக்ஷகாண்டத்திற் கூறப்படலானும்,
7. “ஓங்கார வடிவானவுன்பாத் தாமரையும்'' என வினாயகர் ஓங்கார வடிவினர் எனது துண்டிவிநாயகர் திருவருட்பாவிற் கூறப்ப உலானும்,
8. “அமிர்தம் என்றும், பிரமம் என்றும், சிவம் என்றும், அக்ஷரம் என்றும், அவிவியயம் என்றும் எதனைக்கூறு கின்றனரோ, அந்த ஒங்காரத்தை விநாயகர் என நமஸ்கரிக்கின்றேன்.'' என விநாயகரை ஓங்காரவடிவாகக் கொண்டு ஸ்தவராஜத்திற் கூறப்படலானும்,
9. “ஓங்காரமே நற்றிருவாசி,'' எனத்திராவிட சித்தாந்த சாஸ்திரம் பதினான்கனுள் ஒன்றாகிய உண்மை விளக்கத்துள் கூறப்ப டலானுமாம்.
பிரணவம் தமிழென்று நான் முன்னமே 2 - வது வாலியம் 173 - வது பக்கத்தில் நிரூபித்திருக்கிறேன், அய்யர் அவர்கள் நிரூபணமும் அதனை வலியுறுத்துகின்றது.
வேதாகமங்கள் பிரணவத்தினின்றும் உற்பத்தியாயின வென் றால் பிரணவம் தமிழென்று நிரூபித்திருக்க வேதாகமங்களும் தமிழே என்று கூறுவதில் யாதொரு சந்தேகமுமில்லை.
மேலும், மெய்கண்டாராவது, அவர் மாணாக்கர்களாகிய சிற்றம் பலநாடிகள் முதலிய நாற்பத்தெண்பதின்மராவது, அல்லது அவர் பரம்பரையில் வந்த சந்தானாசாரியார்களாகிய உமாபதிசிவம் முதலா னவர்களாவது சிவஞானபோதத்தை மொழிபெயர்ப்பு நூலென்று சொல்லவில்லை,
ஆனால் உமாபதிசிவாசாரியார் திருமுறைகண்ட புராணத்தில்
"அருபறையைச் சிச்சிலி பண்டருந்தத் தேடுமது போலன்று இது என்றுமுளதாம் * * * *
என்று தமிழ் வேதம் ஆரியவேதமாகாது, தமிழ் வேதம் நித்தியம் என்று தெளிவாய் வேறுபடுத்திக் கூறியிருப்பதை ஒவ்வொரு வரும் ஞாபகத்தில் வைக்கவேண்டியது.
சந்தனாசாரியர்களில் ஒருவராகிய உமாபதிசிவமே ஆரியவேதத்தைப் போலத் தமிழ்வேதத்தை எண்ணற்க, தமிழ்வேதம் நித்தியமானது, தமிழ் வேதம் அநேக மகிமைகளைச் செய்தது என்று கூறியிருக்க அவருக்கு எவ்வளவோ வருடங்கள் பின்னிட்டவரான சிவஞான யோகிகள் சிவஞான போதத்தை மொழிபெயர்ப்பு நூலென்று கூறியிருக்கின்றார் என்று புஸ்தகங்களில் காணப்படுவதைப் பார்க்கச்சந்தேகிக்க இடம் கொடுக்கின்றது. 'எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான் படித்தவன் பாட்டைக்கெடுத்தான்'' என்ற பழமொழிப்பிரகாரம் நடுவில் எவ்வளவு மாறுதலடைந்ததோ நாம் அறியோம். அதனால் தான் ஒவ்வொரு சங்கதிகளையும் நாலாவிதமாய் ஆராய்ச்சி செய்து அதில் தேறுவதைக் கொள்ள வேண்டும்,
சிவஞான முனிவருக்குச் சிவஞான போதம் மொழிபெயர்ப்பு நூல் என்பதுதான் கருத்து என்று எண்ணுவதற்கில்லை. ஏனென்றால்
"அருமறையை" என்ற பாசுரத்தை அவர்பாராதவர் அல்லர்
மேலும், அவரே தாம் செய்த அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில்
"தெய்வச்சுருதி தமிழோன்றே தீட்டும் பெருமைத்து" என்று தேற்றப்பொருளில் கூறியிருக்கின்றார்.
அதனால் ஆரியம் தீட்டும் பெருமைத்து அல்லவெனக்கொள்ளக் கிடக்கின்றது. இதனானும் சிவஞானயோதம் தமிழென்றே கொள்ள வேண்டியிருக்கின்றது.
சித்தாந்தம் 297 - 299 - வது பக்கங்களில் எழுதியிருக்கும் விஷய ங்களால் நாம் தெரிந்து கொள்வதென்ன வென்றால்:-
1. “பரஞ்சோதி முனிவர் மெய்கண்டதேவர்பால் வந்து சிவ ஞானபோதத்தை நல்கி அதனை ஈண்டுள்ளார் உணர்ந்து உய்தற்பொ ருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புரைக்க " என்று அரு ளினாரென்றும்,
மெய்கண்டதேவர் அவர் கட்டளையின் வண்ணம் மொழிபெயர் த்துச்செய்து பொழிப்புரைத்தார் என்றும் அறிகிறோம்.
இன்னும் சரித்திரத்தாலும் கர்ணபரம்பரையாலும் என்ன அறிகிறோ மென்றால், மெய்கண்டார் தாம் மொழிபெயர்த்த தமிழ்ச் சிவஞான போதத்துக்குப் பொருள் தெரியாததால் பொல்லாப் பிள்ளையாரை வேண்டித் தவங்கிடந்தாரென்றும், -
பொல்லாப்பிள்ளையார் தமிழில் 39 சூர்ணிக்கொத்துச் செய்து கொடுத்தார் என்றும், அதன் பேரில் மெய்கண்டார் பொருள் விளக்கம் எய்தினாரென்றும் அறிகிறோம்.
தமிழர்களே! நான் சொல்லுவதைச் சற்றுக் கவனிக்கவேண்டு கின்றேன். மேற்சொன்ன சங்கதிகளில் முன் பின் முரணுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் 'மொழிபெயர்த்துச் செய்து'' என்ற வார்த்தைகள் இடை நுழைப்பு என்று தோன்றுகிறது.
மெய்கண்டதேவர் பரஞ்சோதிமுனிவரைச் சந்தித்தகாலத்தில் 2 அல்லது 3 - வயதுக்குழந்தை. பேசாமலிருந்த குழந்தை, தமிழர் வீட்டுக்குழந்தை; தமிழன்றி வேறுபாழை அக்குழந்தையின் காதில் பட நியாயம் இல்லை. பரஞ்சோதிமுனிவர் கைலையினின்றும் வந்து மெய்கண்டதேவ ருக்குச் சிவஞானபோதத்தை உபதேசித்து "மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புரைக்க'' என்று கூறினாரென்றால் அக்குழந்தை அவ் வாரிய பாழையிலும், தமிழ் பாழையிலும் எவ்வளவு பாண்டித்திய முள்ள குழந்தையாயிருக்க வேண்டும்; இருபாழைகளிலும் சரியான பாண்டித்தியம் பெற்றிருந்தாலன்றி ஒருபாழையினின்றும் மற்றொ ருபாழையில் ஒரு நூலைப் பொருள் கெடாமல் மொழிபெயர்க்க இயலாது.
மேற்சொன்ன சிவஞானபோதமோ எல்லா சாஸ்திரங்களிலும் மேம்பட்டது.
வேதாகமங்களின் முடிந்த முடிவாயுள்ளது. அதற்குமேல் வேறு சாத்திரங்கிடையாது. இணையற்றது.
அப்பேர்ப்பட்ட நூலை மெய்கண்டதேவர் மொழிபெயர்த்துப் பொழிப்புரைத்தார் என்றால் அவர் தமிழ் ஆரியம் என்னும் இருபா ழைகளிலும் கைவந்தவர். இருபாழைகளிலுமுள்ள சகல சாஸ்திரங் களிலும் நிபுணர், இருபாழைகளிலுமுள்ள வேதாகமங்களையெல்லாம் சரிவர உணர்ந்தவர் என்று சொல்ல யாதொருதடையுமில்லை.
ஆனால், அவர் குழந்தையாயிற்றே அவ்வளவு பாண்டித்தியம் எப்படி வந்தது என்று கேட்டார் சிலர்.
பரஞ்சோதிமுனிவர் சிவஞானம் கைவந்த முனிவர் ஆனதால் மெய்கண்டதேவருக்குத் தீக்கை செய்து சகல சாஸ்திர நிபுணராக்கினார்; வேதாகமங்களை யெல்லாம் ஓதாதுணருப்படி செய்தார்; சிவஞானபோதத்தின் பொருள் விளங்கும்படி செய்து மொழிபெயர்த்துப் பொழிப்புரைக்கச் செய்தார் என்று கூறுவார்.
அப்படி பரஞ்சோதி முனிவர் அனுக்கிரகித்திருந்தால் மெய்கண்டதேவர் சகலமும் ஓதாது சிவஞானபோதத்தை ஆரியத்தினின்றும் தமிழில் மொழிபெயர்த்துப் பொழிப்புரைத்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிக் கொண்டால் பின்னால் கூறின சங்கதிக்கு 'உதைக்கின்றது, அதாவது, பரஞ்சோதிமுனிவர் சிவஞான'போதத்தைச் சொல்லிப்போன பிறகு அதன் பொருள் தெரியாமல் பொல்லாப் பிள்ளையாரை வேண்டித் தவங்கிடந்தார் என்ற வசனத்திற்கு.

ஒருபாழையினின்றும் மற்றொரு பாழையில் மொழி பெயர்த்தார் என்றால் பொருள் தெரியாமலா மொழிபெயர்த்தார்? பொருள் தெரி பயாமலா பொழிப்புரைத்தார்? பொருள் தெரியாமல் செய்த தமிழ்ச்'சிவஞான போதத்திற்கும் பொழிப்புரைக்குமா 'பொல்லாப்பிள்ளையார் சூர்ணிக்கொத்து செய்து கொடுத்தார்?

பரஞ்சோதிமுனிவருடைய தபோபலத்தால் மெய்கண்டார் சிவ (ஞானபோதத்தின் பொருள் தெரிந்து மொழிபெயர்த்துப் பொழிப் யுரைத்தார் என்று கொண்டால் அவர் பொல்லாப்பிள்ளையாரிடம் பொருள் விளங்கவில்லையே என்று தவங்கிடந்தது பொய்யாக வேண்டும்.

மெய்கண்டார் பொல்லாப்பிள்ளை யாரிடம் பொருள் விளங்கவில்லையென்று தவங்கிடந்து, பொல்லாப் பிள்ளையாரிடம் 39 - சூர்ணிக் கொத்துக்களைப் பெற்றுச் சிவஞானபோதத்தின் பொருள் விளக்கம் எய்தினார் என்று கொண்டால் அவர் மொழிபெயர்த்தது பொய்யாகவேண்டும்.
இதில் எதுசரி சரியல்லவென்பதை அறிஞர்கள் ஒவ்வொரு வரும் யோசிக்கவேண்டியது.

திருக்கைலாயபரம்பரை மெய்கண்டார் என்று சொல்லுவதால் பாஞ்சோதி முனிவருடைய மாணாக்கர் மெய்கண்டார் என்பது தேற்றம் என்றும், பரஞ்சோதிமுனிவருடைய மாணாக்கராய் இருந்துவிட்டுப் பிறகு பொல்லாப் பிள்ளையாருடைய மாணாக்கராகஆனார் என்று சொன்னால் பரஞ்சோதி முனிவருக்கு என்ன பெருமை யிருக்கிறது; பரஞ்சோதி முனிவர் என்ன சந்தேகமாகவா சொல்லிக் கொடுத்து விட்டுப்போவார், அவருக்கு என்ன தெரியாதா, அவர் நந்தியெம்பெரு மான் சந்ததியல்லவா என்றும் ஆகையால் பொல்லாப்பிள்ளையாரிடம் சூர்ணிக்கொத்துப் பெற்றதாகச் சொல்லுவது தப்பு என்றும் கூற முன்வந்திருக்கிறார்கள் சிலர். இது "முழுபூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது'' போலாம்

இன்னும் சிலர் சரித்திரத்துக்கும் கர்ணபரம்பரைக்கும் நேர் விரோதமாக பொல்லாப் பிள்ளையார் செய்தது தமிழ்ச் சிவஞான போதத்துக்கு அன்று ஆரியச் சிவஞான போதத்துக்கு என்று கூறுவார்கள்.. இவர்கள் எல்லாம் இது வரைக்கும் கொண்ட பழக்கத்தாலும் ஆரியத்தின் பேரில் வைத்த அபிமானத்தாலும் கூறுபவர்களேயொழிய வேறன்று.

சரித்திரத்தின் போக்கை கவனித்தால் இவ்வாறு கூற இடந்தறாது. பரஞ்சோதி முனிவர் தவம் கைவந்த பெரியவரே. அவருடைய மாணாக்கராய் இருந்த பிற்பாடு ஆசங்கை ஏற்பட்டது என்றால் அவருக்கு ஓர் இழுக்கே. ஆனால் மெய்கண்டார் பொல்லாப் பிள்ளையாரிடம் சந்தேகம் நிவர்த்தி செய்து கொண்டது பொய்யா? என்றால் அதுவும் உண்மைதான், எப்படியென்றால் கூறுதும்,

பரஞ்சோதிமுனிவர் திருவெண்ணெய் நல்லூரிலேயே இருந்து மெய்கண்டாருக்குப் போதித்தார் இல்லை. அல்லது மெய்கண்டாருக்கு உபதேசம் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தோடு திருவெண்ணெய் நெல்லூருக்கு வந்தவரன்று. அவர் திருக்கைலையினின்றும் யாதோ ஒருகாரியமாகத் தெற்குநோக்கித் திருவெண்ணெய் நல்லூர்வழியாகவந்தார். வந்தபோது மெய்கண்டாரைப் பார்த்தார். மெய்கண்டாரைத் திருவெண்ணை நல்லூரில் பொல்லாப்பிள்ளையார் ஆலயத்தில் சந்தித்தார். மெய்கண்டாருடைய பக்குவத்தை நோக்கி உடனே தீக்கையைச்செய்து சிவஞானபோதத்தை உபதேசித்துவிட்டு உடனே புறப்பட்டுக் குறித்த இடம் சென்றார். பரஞ்சோதிமுனிவர் மூன்று காலமும்பாரை அறியக்கூடிய வல்லமையுடையவர் ஆகையால் பின்னால் நடக்கக்கூடிய சங்கதிகளைச் செவ்வனே அறிந்தார் ஆகையால், மெய்கண்டாருக்குத் தமிழ்ப்பன்னிரண்டு சூத்திரங்களையும் தாம் கேட்டவண்ணம் சிந்தித் துக்கொண்டிருந்தார். சந்தோம் நிகழப் பொல்லாப் பிள்ளையாரை வேண்டித்தவங்கிடந்தார். பொல்லாப்பிள்ளையார் 39 - சூர்ணிக்கொத் துச்செய்து சொடுத்தார். 39 - சூர்ணிக்கொத்தும் தமிழ்ப்பன்னிரண்டு சூத்திரங்களுக்கே. வடமொழிக்கல்ல வென்பதை யாவரும் அறிவர். பரஞ்சோதிமுனிவர் அவ்விடம் தங்கியிருந்தால் அவரே சந்தேகமும் நிவிர்த்தி செய்திருப்பார், பரஞ்சோதிமுனிவருக்குப் பொல்லாப்பிள்ளையார் செய்து கொடுப்பார் என்று தெரிந்தவர் ஆகையால் தம்காரி யத்துக்குத் தடை ஏற்படாவண்ணம் உடனே போய்விட்டார் ஆகையால் மெய்கண்டாருக்குச் சந்தேகம் நிகழ்ந்தது பரஞ்சோதிமுனிவருக்கு இழுக்கன்று.

இன்னும் சிலர் மெய்கண்டார் மொழிபெயர்க்கவில்லை மெய்கண்டார் செய்தது தமிழ்ப்பன்னிரண்டு சூத்திரங்களே அவருக்கு முன்சூத்திர ரூபமாக இல்லை; அவர் காலத்தில்தான் சூத்திரங்கள் ஏற்பட்டன; வடமொழிச் சூத்திரங்கள் தமிழினின்றும் மெய்கண்டார் காலத்துக்குப்பின் ஏற்பட்டன என்று கூறுகிறார்கள்.

அப்படி மெய்கண்டார் தான் இப்போது இருக்கிற தமிழ்ப்பன்னிரண்டு சூத்திரங்களைச் செய்தார்; அதற்கு முந்திச்சூத்திரங்கள் இல்லை; சின் முத்திரையைத்தான் சிவஞானபோதம் என்று கூறிவர் தார்கள் என்று கொண்டால், மெய்கண்டார் பொல்லாப்பிள்ளையாரை வேண்டித்தவங்கிடந்ததும், 39. சூர்ணிக்கொத்துக்களைப் பெற்றதும் பொய்யாகும்.

மெய்கண்டாரே தமிழ்ச் சூத்திரங்களைச் செய்திருந்தால் சந்தேகம் நிசழவும், 39 சூர்ணிக்கொத்துக்களைப் பெறவும் நியாயம் சிறிதும் இல்லை. ஆகையால் மெய்கண்டார் செய்யவில்லை என்று தெளியக்கிடக்கின்றது. ஆகையால், நான் மேலே கூறிய பிரகாரம் தமிழ்ப்பன் னிரண்டு சூத்திரங்களும் ஸ்ரீகண்ட பரமசிவத்திடத்திருந்து நந்தியெம் பெருமான் மூலமாய்ப் பரஞ்சோதி முனிவருக்குக் கிடைக்க, பாஞ் சோதிமுனிவர் தாம் ஏகும் அவசரத்தில் மெய்கண்டாருக்கு உபதேசிக்க, பொல்லாப்பிள்ளையார் சூர்ணிக்கொத்துடனும் மெய்கண்டார் பொழிப்புரையுடனும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி திருவந்தா தியும், பெரிய புராணமும் போல, சிவஞானபோதமும், சூர்ணிக்கொத்தும், மெய்கண்டார் பொழிப்புரையும் ஒன்றற்கொன்று விரிவாயிற்று என்னலாம்.

ஆகையால் யொழிபெயர்த்துச் செய்து'' என்று பரஞ்சோதிமுனிவர் கூறினதாகச் சொல்லுவது இடைநுழைப்பு என்று தெளிவாக ஏற்பட்டுவிட்டது. அவ்வார்த்தைகளை எடுத்துவிட்டால் ''பரஞ்சோதிமுனிவர் மெய்கண்டதேவர் பால் வந்து சிவஞான போதத்தை நல்தி அதனை ஈண்டுள்ளார் உணர்ந்து உய்தற்பொருட்டுப் பொழிப் புரைக்க'' என்று சொன்னதாகக் கொள்ள வேண்டும். அப்படிக் கொள்வதுதான் சரியாயிருக்கின்றது,

சந்தான குரவர்களுடைய தோத்திரங்கள் பிற்காலத் தவரால் செய்யப்பட்டவை. அவைகள் இடைநுழைப்பு வசனங்களை யொட்டிப் பாடப்பெற்றவை. ஆகையால் அவை பிரமாணமாகா.

இரெளரவாகமத்தில் இருப்பதானது ''பாவனா தீக்ஷையாலே இவனை (சீடளை) விதிப்பிரகாரம் சுத்தனாக்கி, பத்திய சிந்தனத்துக் குரிய சிவஞான போத சாஸ்திரத்தை (அவனுக்கு) ஆசாரியர் கொடுக்க" என்பதே இப்போது கியந்தாக்ஷரத்தில் உள்ள ஆகமங்களின் பாகங்கள் எல்லாம் ஆரியர்கள் தங்கள் உபயோகத்திற்காக எழுதி வைத்துக்கொண்டவைகளே என்று முன்னமே கூறியிருக்கின்றேன். ஆங்கிலேயன் ஒருவன் சைவமதத்தை அனுட்டிப்பானாகில் சைவாசாரங்கள் தெரிய வேண்டுமானால் தனக்குத் தெரிந்துகொள்ளச் சங்கதிகளை இங்கிலீஷில்தான் குறித்துரைத்துக் கொள்ளுவான். அவன் ''Rouravaganam'' என்ற தலைப்பின் கீழ் ''Vhen the Spiritual Teacher handed over Sivaganam - Botha to his desciple” என்று எழுதியிருந்தால் இங்கலீஷில்தான் முதலில் சிவஞானபோதம் இருந்தது என்று கூறிவிடலாமா? அது போல் 400) - வருடங்கள் முன்னர் இந்நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தென்னாட்டிற்கு வந்து தமிழர்களுடன் கலந்துரைவாசாயங்களை அனுட்டிக்க ஆரம்பித்த போது தமிழிலுள்ளசங்கதிகளை கிரந்தத்தில் எழுதிவைத்துக் கொண்டார்கள், அவைகளே இப்பொழுதுள்ளன, அதனால், சமஸ்கிருதத்தில் தான் சிவஞானபோதம் இருந்தது என்று சொல்லுவது எப்படி. ஆகையால் அந்த ஆதாரமும் வலியில்லாமல் போயிற்று.

வேதாகமங்கள் தமிழிலேயே இருந்தன என்பதற்கு ஆதாரங் கூறுதும். முற்காலங்களில் அதாவது ஆரியர் ஆட்சிக்கு வருவதற்கு முன் கோவில்களில் தமிழ் வேதமே ஓதிக்கொண்டு வரப்பட்டன. இப்போதும் சமயாசாரிகளுடைய தேவாரங்களை (தமிழ்வேதம் மறைந்துபட்ட பிற்பாடு) ஓதுகிறார்கள். ஆரியர்களுடைய ஆட்சியில் ஆரியவேதமாகிய இருக்கு, யசுர், சாமம், அதர்வண வேதங்களையும் கோவில்களில் ஒதத்தலைப்பட்டார்கள். அப்படி ஆரிய வேதங்களை ஓதுவது சைவர்களுக்கு ஒப்பவில்லை. அது திருமாளிகைத்தேவர் திருவிசைப்பாவால் நன்றாய் வெளியாகிறது, அது வருமாறு: -

“திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக்கூத் துகத்து தீய
நசிக்கவெண் ணீற தாடு நமர்களை நணுகா நாய்கள்
அசிக்க ஆரியங்கள் ஓதும் மாதரைப் பேதவாதப்
பிசுக்கரை காணாகண்வாய் பேசாதப் பேய்களோடே."

ஆகையால் இதுகாறுங் கூறிய வாற்றால் இப்போது - கிரந்தலிபிவில் இருக்கும் ரௌரவாகமத்திற்கூறிய சிவஞான போதம் தமிழ்ச்சிவ ஞானபோதமே யொழிய வேறன்று.
இனி, சித்தாந்தம்தொகுதி 3. பக்கம் 100 - முதல் 112 வரையுள்ள விஷயங்களைப்பற்றிச் சிறிது கூறுவாம்.
(தொடரும்.)
துடிசைகிழார் அ - சிதம்பரனார்.

சித்தாந்தம் – 1914 ௵ - ஜூன் / செப்டம்பர் ௴




No comments:

Post a Comment