Saturday, May 9, 2020



சித்தர் கண்ட சித்தாந்தம்
[திருமதி. அ. காமாட்சி குமாரசாமி, M. A.]

[பழநியில் நிகழ்ந்த சமாஜ ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு 5-12–1961]

சித்தர்:

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை ''உண்மை, அறிவு. ஆனந்த" வடிவமாக்கிச் சச்சிதானந்தம் (சத் + சித் + ஆனந்தம்) என்றே அழைப்பது சைவ மரபு. சித்' என்ற வடசொல் தமிழில் அறிவு என்றே பொருள் பெறும். சித்தர் என்போர் 'அறிவர் என்றே தொல்காப்பியர் காலத்தினின்றும் வழங்கப் பெற்றனர். எனவே பழந் தமிழ் நாட்டு அறிவர் மரபில் தோன்றியவரே இடைக் காலச் சித்தரும். சித்தர் கண்ட கலைகள் பைந்தமிழ் நாட்டின் பழம்பெருங் கலைச் செல்வங்கள். உடலையும் உயிரையும் ஒன்றுபடுத்தி, இரண்டையும் இயற்கை முறையிற் பேணி, உடலைக் கொண்டே, ஆன்ம வித்தையை இயற்றி இறைவனை உள்ளுக்குள்ளே கண்டு பேரின்ப முற்றவர் இதுபற்றியே நீண்ட ஆயுளைத்தேடியவர். அதற்கான இயற்கை மருத்துவ முறைகளை நாடியவர். ஆன்ம முன்னேற்றத்திற்கான இவ்வுடலைப் பேணத் துணை புரிந்த இம் மருத்துவக்கலை வெறும் மருத்துவக்கலையள் விலே இன்றும் நின்று நிலவப் பார்க்கின்றோம். மருத்துவத்தின் ஒரு கூறாய் அமைந்த ரசவாதம் முதலியனவும் இடையிற் புகுந்து அருமையான சித்துக்கலை நம் நாட்டிவ் அடியோடு மறைவதற்கே அடிகோலிவிட்டது. அக்கலைச் செல்வத்தின் உயிர்நாடியான - ஆன்மக் கலையும் நமக்கு விளங்காப் புதிராகவே நின்றுவிட்டது. எனினும் அவர்கள் கண்ட ஆன்ம வித்தையும், அதனை மிக எளிய தெளிய நடையிலே எடுத்துரைக்கும் நயத்தினையும் அவரது பாடல் களிலே காண்கிறோம் பற்பல பாடல்களின் பொருள் விளங்கவில்லையாயினும் சிற்சில பாடலகளேனும் பொருள் விளங்குமாறு திகழ்கின்றன.

சித்தாந்தம்:

இனி, சித்தாந்தம் என்ற சொல், அறிவின் எல்லை, அறிவின் முடிவு, முடிந்த முடிவு என்று பொருள் படும் (சித்தம் + அந்தம்) மனமொழி மெய்க்கெட்டாத பரம் பொருள் நிலையை, மெய்யுணர்வாம் உள்ளுணர்வு கொண்டு உணர்தலையே இச்சொல்குறிக்கும். மக்களறிவின் முடிவும் இறைவனை யறிதலேயாகும் என்ற கருத்துத் தோன்றத் திருவள்ளுவரும்,

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்

எனக் கூறினர். சைவ சமயத்திற்காக இத்தொடர் பின்னர் சைவத்தின் முடிந்த முடிபு அல்லது சைவ சமயத்தின் கொள்கைகள் - உண்மைகள் எனப் பொருள் பெற்றது. இதனை விளக்கப் பதினான்கு சைவ சித்தாந்த சாத்திரங்களும் எழுந்தன. சைவத்தின் பெருமையைப் பக்திச் சிறப்பைச் சைவத்திருமுறைகளாம் தோத்திர நூல்கள் ஒருபுறம் விளக்க, சைவத்தின் தத்துவங்களை இச்சாத்திர நூல்கள் அறிவுத்திறத்தால் விண்டு விண்டு உலகத்திற்குப் பறைசாற்றின. சைவமெனுஞ் சமயமான இலக்கியத்திற்குச் சைவசித்தாந்தமெனும் இலக்கணம் தோன்றிற்று எனலாம். பதினான்கு சித்தாந்த சாத்திரங்களுள் உந்தி, களிறு, போக ஏனைய பன்னிரண்டும், பன்னிரண்டு சூத்திரங்களாலாய (தமிழின் உயிரெழுத்தே போன்று) மெய்கண்டாரின் "உயர் போத" மாய சிவஞானபோதமும். அதனையே பெரிதும் விளக்கவந்த பெருநூல்களே யாகும். எனவே சிவஞான போதத்தினையே சைவ சித்தாந்தத்தின் சாரமாகக் கொள்ள வேண்டும்.

இடைக்காலச் சித்தர் பதினெண் சித்தர் எனப்பெறுவர். இவரது பெயர்ப்பட்டியலில் அகத்தியர், திருவள்ளுவர், திருமூலர் என்ற பெயர்கள் காணப்படினும் இவர் பழங்காலத் தலைவரல்லர் என்பது புலப்படும். திருமந்திரம் பாடிய திருமூலரும் இவ்வரிசையில் வைத்து எண்ணப் பெறுவது முண்டு. சித்தர்கலையறிவு அவரது பாடல் களில் மிகச் சிறந்து விளங்கக் காணலாம். இன்னும், படிக்காத பாமரர்க்கும் புலனாகும் எளிய தெளிய நடையில் அரிய பெரிய ஆன்மச் செய்திகளை அடக்கிக் கூறிய பாம்பாட்டி, குதம்பை, அழுகணி, கடுவெளி, அகப்பேய்ச் சித்தர் போன்றவர்களும் இடம் பெறுவர்.

இச்சித்தர்கள் சித்தாந்தக் கருத்துக்களை எங்ஙனம் எடுத்துரைக்கின்றனர் எனக்காண்போம். சைவசித்தாந் தத்தின் அடிப்படைக் கருத்தான பதி, பசு, பாசமெனும் முப்பொருள் உண்மையினை அவர்கள் முற்றிலும் உணர்ந் திருந்தனர்.

"பாசத்தை நீக்கிப் பசுவைப் பதியில்
நேசத்தி னுள்ளே நினைத்திருப்ப தெக்காலம்"

எனப் பத்திர கிரியார் புலம்புவார். திருமூலரும் தமது திருமந்திரத்தில்,

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசுபாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப் பசுபாசம்
பதியணுகிற் பசுபாசம் நிலாவே,''

எனச் சின்முத்திரைக்கே விளக்கங் கூறுவர். ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலக் காரியமாகவே உயிரின், தோற்ற நிலை, அழிவுக்குக் காரணம் எனுங் கருத்தை,

"மும்மல முஞ் சேர்ந்து முளைத் தெழுந்த காயமிதை
நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்பதெக்காலம்,
செம்பினிற் களிம்பு போல் சிவத்தை விழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறு செய்வதெக்காலம்"
என்ற பத்திரகிரியாரின் வாக்கு புலப்படுத்தும்.

ஆன்மா என்ற ஒன்று இல்லை என்பதனாலேயே உண்டு எனும் கருத்தை,

''இல்லை இல்லை யென் றியம்புகின்ற வேழைகாள்
இல்லை யென்று நின்றதொன்றை அல்லையென் னலாகுமோ
இல்லையல்ல வென்றுமல்ல விரண்டு மொன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்ட போரினிப்பிறப்ப தில்லையே''

என்ற சிவவாக்கியரின் வாக்கால் அறியலாம்.

மண்ணுலக வாழ்வினையும், மானிட உடம்பினையும் மிகப் பழித்தவர் சித்தர் என்ற கருத்து பலருக்குண்டு. ஆயினும் ஆன்ம நெறிக்குப் பயன்படாத உடலையும் வாழ்வையுமே வெறுத்தனரேயன்றி, பெறுதற்கரிய இம்மானிட உடலை உண்மையில் மாயா இயந்திர தனுவாகவே கருதினர். அதனுள்ளே இறைவனைக் கண்டனர். அவ்வுடலின் கூறுகளையும், உள்ளே இயங்கவல்ல குண்டலி சுழுமுனை, கலை, நாடி, என்பவற்றையும், முக்கோண, அறுகோண, எண்கோண மென்ற குறிப்புக்களையும் நோக்குமிடத்து இப்பூதவுடல் உண்மையிலேயே வியத்தகு ஆற்றலும் அமைப்புங் கொண்ட அதிசயப் பொறியா? (மாயா இயந்திரதனு) என்ற எண்ணமே தோன்றும். இவ்வுடலுக் குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மவாற்றலை யோகம் நிட்டை, முதலியவற்றால் அவர்கள் இயக்கி, செயற்கரிய செயல்களையும், சொல்லொணா ஆற்றலையும் பெற்றிருந் தனர் எனவறிந்து, இவ்வாறு இம்மாயாவியந்திரத் தனுவை இயக்கமுடியாது தவிக்கின்றவர். 'உண்மையிலேயே அருமையாய்ப் பத்துத் திங்களிலே புனையப்பெற்ற இப்பாண்டத்தைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைப்ப தாகவே தோன்றும்."

தேகமெனுஞ் சிவாலயமாம் - அதிற்
சென்னிசிறுவாயில் கோபுரம்
பூட்டைத் திறப்பதும் கையாலே - மனப்
பூட்டைத் திறப்பதும் மெய்யாலே''

என இம்மெய்யெனும் உடலின் சிறப்பைக் குறிப்பர். ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பயன்படும் உடம்பின் சிறப்பைத் திருமூலரும் தமது திருமந்திரத்தில்

''உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே''

என்று கூறுவார். அத்தகைய உடம்பின் சிறந்த உறுப்புக்களாய ஐம்புலன்களையும் அடக்குதல், ஓடுக்குதல் என்றெல்லாம் அவர்கள் குறிப்பது, அப்பொறிகளைத் தம்வசம் விடாமல் தன்வசமாக்கி நன்னெறிப் படுத்தலையே குறிக்கும். (Sublimation of senses) புரண்டோடுகின்ற வெள்ளத்தை அடியோடு தடுப்பதைக் காட்டிலும் அதன் போக்கை மாற்றி, அழிவு நீக்கி ஆககத்தைத் தேடுவதை நீரின் மடைமாற்றம் எனக் குறிப்போம். இக்கருத்தமைந்த திருமந்திரச் செய்யுள் அறிவுப்புலனுக்கே அருவிருந்தாயமைவது.

"தானே புலனைந்தும் தன்வசமாயிடும்
தானே புலனைந்தும் தம் வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான் தனைச் சந்தித்தே"

சுந்தரர் தில்லைப் பெருமானைக் கண்டு சுவைத்த நிலையினைக் குறிக்கும்,''ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள எனத் தொடங்கும் பெரியபுராணச் செய்யுள் இத்திருமந்திர மாய இலக்கணத்திற்கோர் இலக்கியமாகும். நமது இறை வழிபாட்டிற்கு மிக இன்றியமையாப் பொருளான ஐஞ்சுடர்க் குத்து விளக்கு ஐம்புலத்தூய்மையினைக் குறிக்கும். ஐம்புவனும் இறைவழிபாட்டிற்கான பெருவிளக்கு. (அகண்ட விளக்கு அல்லது காளவிளக்கு) என்ற கருத்தையே பின்வரும் திருமூலர் திருமந்திரமும் உணர்த்தும்.

"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே

ஐம்புலனடக்கம் எளிதன்று பெருமுயற்சியாலும் இறை வனைச் சார்வதாலும் பெறப்படுவது என்பதனை,

ஐந்து தலை நாகமடி - அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விஷந் தீர்க்கும் - அகப்பேய்
எம்மிறை கண்டாயே
என்ற அடிகளாற் குறிப்பர்.

உடலைப் பற்றிய சித்தர்களின் கருத்தைப் போன்றே சிற்றின்பத்தையும், பெண்களையும் பற்றிய அவர்தம் கூற்று தவறாக மதிக்கப்படுகின்றது. மேற்கூறிய வாறே ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடையாய் நிற்கக் கூடிய பெண்களையும் அத்தகைய மயக்கும் சிற்றின்பத்தையும் இழித்துப் பழித்துக் கூறினரேயன்றி ஆன்மத்துறைக்குத் துணையாக நிற்கும் பெண்மையைப் பெரிதும் போற்றியவர் ஆடவரின் ஆன்ம முன்னேற்றத்திற்கு அருந் துணையாய் நிற்கும் பெண்களைப் போன்ற பெருந்துணையும் வேறுண்டோ? மேலும் சிற்றின்பத்தைத் தக்கமுறையில் சுவைத்தவர்களன்றோ அதுபோன்று, ஆனால் ஆயிரமாயிரம் அதிகமாயும் அழியாததாயும் அமைந்த பேரின்பத்தைத் துய்க்க விழைவார்! இதுவே தமிழர் கண்ட தெய்வ நெறி - இல்லறத்தின் முடிவாய துறவு நெறி - இதனாலன்றோ மணிவாசகரது திருக்கோவையாரும் அகத்துறையில் அமைந்தது. சித்தர் பாடலுள்ளும், குதம்பை, அகப்பேய், அழுகணி, சித்தர்களின் பாடல்களும், வாலைக்கும்மி ஞானக்கும்மி போன்ற நூல்களும் பெண்களை முன்னிலைப் படுத்தியே (மகடூஉ முன்னிலை) அமைந்துள்ளன. பீர் முகமது என்பவர் இயற்றிய ஞானரத்தினக் குறவஞ்சியில் (முகம்மதியரும் சித்தர் கலையால் ஈர்க்கப் பெற்றனர் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு) சிங்கனது வினாக்களுக்கு விடையிறுத்து அவனைத் தெளிவிப்பவளே சிங்கி தானே! சித்தத்தைச் சிவன் பால் வைத்து எதைச் செய்யி னும் அத்தனையும் இறைபணியாகவே கருதப்பெறும். அந்நெறியும் இறை பணி நிற்றலாகவே கருதப்பெறும். அழுகணி சித்தரின் கண்ணம்மா பாட்டிற் சிலவரிகள் மேற் கூறியவற்றை நன்கு விளக்கும்.

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேதகுடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் - என் கண்ணம்மா! கண்விழிக்க வேகாதோ.

ஈண்டு, கண்ணம்மா தெய்வத்தின் வடிவாகவே கருதப் பெறும்.

பக்குவ மடைந்த ஆன்மாவாகிய இரும்பினைக்காந்தம் போன்ற இறைவன் இழுத்துக் கொள்வான் எனுங் கருத்தை

“காந்தம் வலித்திரும்பைக் கரத்திழுத்துக் கொண்டது போல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக் காலம்
             
என்ற பத்திரகிரியார் பாடல் குறிக்கும்.

ஐம்புல வேடரின் அயர்ச்சி நீங்க அன்பர்க்கு அருள் நெறி காட்டவரும் குருவரவும் சித்தர்க்கு உடன்பாடே,

"அருவா யுருவாகி ஆதியந்த மாகி நின்ற
குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம்''

என்பார் பத்திரகிரியார்,

ஊனக்கண்ணால் உணரமுடியாப் பதியினை ஞானக் கண்ணால் சிந்தையில் நாடிக்கண்டவர் சித்தர் என்பதைப் பின் வரும் பகுதிகள் நன்கு விளக்கும்.

கட்புலனாற் காண வொண்ணாய் - பசுவே
கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் - பசுவே
உன்னதம் எய்வாயே
சுட்டியுங் காண வொண்ணா - பசுவே
சூனியமான வஸ்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் - பசுவே
உன்னை நிகர்ப்பார் யார்.

என்பவை இடைக்காட்டுச் சித்தர் பாட்டு. இடையர் பசு வையும், கோனாரையும் முன்னிலைப் படுத்திப் பாடுவதும் இயல்புதானே? கானல் நீராகப் பற்றினை நினைத்து நீக்கித் துறந்தவர் சித்தர்.

"தாமரை யிலையினில் தண்ணீர் தங்காத
தன்மை போல் சகத்தாசை தள்ளிவிட்டு"
என்றும்

''சொல்லும் புளியம் பழத்தின் ஓடு போலவே''

உவமைகளால் பற்றற்ற நிலையினைத் தெற்றென விளக்குவர். இங்ஙனம் பற்றறுத்துப் பதியின் தண்ணிழலை ஆன்மா அடைவதற்கு உறுதுணையாகும் ஐந்தெழுத்தின் சிறப்பைச் சிவவாக்கியர் பின்வருமாறு பாடுவார்.

ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ துற்றதே.

சித்தர், அவனே தானேயாகிய அந்நெறியினைக் கடைப்பிடித்து ஏகனாகி (இரண்டறக் கலந்து இறைவனுடன் ஒன்றிவிடல்) இறைபணியிலும் நின்றவர் என்பதைப் பத்திரகிரியார் தெளிவாய்க் கூறுவர்.

"என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்தபின்
தன் மயமாய்க் கொண்ட நிலை சார்ந்து நிற்பதெக்காலம்
வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி யெக்காலம்,''

காணும் கண்ணுக்குக் காட்டும் உள்ளொளியைப் பாம்பாட்டிச் சித்தர்.

"கண்ணுக்குக் கண்ணான வொளி கண்டு கொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திட நின்றாடாய் பாம்பேஎனப்பாடுவார்,
சித்தர்கள், அயரா அன்பின் திறத்தை நன்குணர்ந்து அனபுமலர்களையீட்டு இறைவனை அருச்சித்தவர்கள்.
“அன்பெனும் நன்மலர் தூவி - பர
மானந்தத் தேவனடியிணை மேவி''
மேல் நிலையை அடைந்தவர்கள்.

மேற்கூறிய வாறு சிவனெனும் செம்மேனியம்மானின் செம்மலர் நோன்தாளைச் சேரவொட்டடாது தடுக்கும் மும்மலம் நீக்கிப் பற்றுத்துச் சிவநேயச் செல்வருடன் கூடியும் மகிழ்ந்தவர், நல்லாரிணக்கம் நாடியவர் என்பதை,

"நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு''

என்ற கடுவெளிசித்தரின் வாக்கு புலப்படுத்தும். அவ்வாறு கூடிய அம்மெய்யடியாரையும், அருள் பற்றி ஏழை எளியோரையும் நடமாடும் தெய்வங்களாகவே நடமாடுங் கோயில்களாகவே கண்டவர். கோயிலுக்கு அளிக்கப்படும் பொருள் ஏழை எளியோர்க்குப் பயளளிக்காமற் போகலாம். ஆனால் ஏழை எளியோர்க்கு இடப்பெறும் பொருள் அவர் தம்முள் உறையும் இறைவனுக்கும் ஒருங்கே இடுவதாகும் எனும் புரட்சிக் கருத்தை,

படமாடக் கோயில் பகவற்கங் கீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாடக் கோயில் பரமற்கங் காமே
என்ற திருமந்திரச் செய்யுள் உணர்த்தும்.

சிவஞான போதத்தின் இறுதிச் சூத்திரமான பன்னிரண்டாம் சூத்திரத்தின் இறுதிப் பகுதியிற் குறிக்கப் பெறும் ஆலய வழிபாடும் உருவ வழிபாடும் கூட சித்தர் கட்கு உடன்பாடேயாகும். இதற்கு முரணான கருத்தை யுடையவர் அதற் கெடுத்துக் காட்டாகப் பின் வரும் சிவ வாக்கியரின் பாட்டைக் குறிப்பது முண்டு.

"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட் பஞ்சார்த்தியே
சுற்றிவந்து மொண மொணென்று சொல்லுமந்த்ர மேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங் கறிச்சுவை யறியுமோ''

இப்பாட்டும், நாதனுள்ளே இருக்கிறான் என்ற அடிப் படைக் கருத்தினால் பாடப் பெற்றது ஆலய வழிபாடும் உருவ வழிபாடும் உள்ளேயிருக்கும் இறைவனைக் காணத் துணைப் பொருள்களேயாகுமன்றி அவையே அச்சமயத்தின் முடிவுகளல்ல என்ற கருத்தைப் பாட்டில் வரும் உவமை நன்கு விளக்கும். சமைத்த சட்டியும், சட்டுவமும் கறிச் சுவையை அறியாவிட்டாலும் அவ்விரண்டுமில்லாது கறியைச் சமைக்க முடியுமா?

இதுகாறும் கூறிய வற்றால் மெய்கண்டாரின் சிவஞான போதச் சூத்திரக் கருத்தனைத்தும் சித்தர் பாடல்களில் இருக்கக் கண்டோம். எனவே சித்தர்கள்,

தித்திக்கும் தெள்ளமுதைச் சித்தாந்தத் துட்பொருளை
முத்திக்கு விததை முதனினைப்ப தெக்காலம்

என்றவாறு சிவனைச் சித்தாந்தத்தின் உட்பொருளாய்க் கொண்டவர்கள்.

முத்தமிழ் கற்று முயங்கு மெய்ஞ்ஞானிக்குச்
சத்தங்க ளே துக்கடி - குதம்பாய்
சத்தங்க ளே துக்கடி

என்று தமிழ் முழக்கம் செய்தவர். ''சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம்'' எனப் புரட்சி புரிந்தவர். அறநெறியே ஆன்மநெறி என வற்புறுத்தியவர்.

"மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்தவேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே''

என்று விளக்கியவர்.

“அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே''

என எல்லாச் சமயங்கட்கும் பொதுவான அன்பு நெறியைப் புகட்டியவர்கள். சுருங்கக் கூறின் "சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்.'' அன்னார் தமிழர்க்குத் தந்த அழியா ஆன்மக்கலைச் செல்வம் மேன் மேலும் வளர்வதாக.

சித்தாந்தம் – 1962 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment