Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சந்தான குரவர்.

சித்தாந்த பத்திராசிரியரவர்களுக்கு: -

ஐய,

சைவசமயத்தில் சந்தான குரவர்களெனப்படுவார் திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவரும், திருத்துறையூர் அருணந்திசிவாசாரியரும், திருப்பெண்ணாகடத்து மறைஞானசம்பந்த சிவாசாரியரும், கொற்றவன்குடி உமாபதிசிவாசாரிய ருமன்றே? இவர்க்கு முன்னும் பின்னும் ஆசாரியர் பலர் இருப்பினும் உலகத்தில் சந்தானாசாரியரென்று பலராலுங் கொண்டாடப்படுபவர் இந்நால்வருமே யாவர். இதற்கு வேறு சாட்சி வேண்டியதில்லையாயினும் சில கூறுவேன்.

திருவாரூர்ச் சுவாமிநாத தேசிகரென்ப வரியற்றிய சந்தானாசாரிய புராண சங்கிரகத்தில் கூறப்படுவது இந்நால் வருடைய சரிதமேயாகும். காஞ்சிப்புராணத்தின் முகத்தில் சிவஞான யோகிகள் வரலாறெழுதிய இராமநாதபுரம் இராமசுவாமிப் பிள்ளையும் திருக்கைலாச பரம்பரை ஆசாரியர்களாக இந்நால்வரையுமே முதலிலெடுத்துக் கூறுகின்றனர். இந்நால்வருள் ஒருவராகிய கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியரும் தாமியற்றிய சிவப்பிரகாசத்துள்

''தேவர்பிரான் வளர்கயிலைக் காவல்பூண்ட
திருநந்தியவர் கணத்தோர் செல்வர்பாரிற்
பாவியசத் தியஞான தரிசனிக ளடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியாம் வெண்ணெய்
மேவியசீர் மெய்கண்ட திறலான் மாறா
விரவுபுக ழருணந்தி விறலார் செல்வத்
தாவிலருண் மறைஞான சம்பந்த ரிவரிச்
சந்தானத் தெமையாளுந் தன்மையோரே”

என்று தமக்கு முன்னிருந்த மெய்கண்ட தேவர் முதலிய மூவரையும் நீ சந்தான குரவரென்றனர். இங்ஙனமாகவும் சிற்றம்பல நாடிகள் மாணாக்கராகிய தத்துவப் பிரகாச சுவாமிகளென்பவர் தாமியற்றிய தத்துவப் பிரகாசத்தில் சந்தான குரவர் வணக்கம் கூறுமிடத்து

“நந்தி சனற்குமரன் சத்தியஞானி யடிசேர்
நாதனாம் பரஞ்சோதி மெய்கண்ட தேவன்
முந்து சண்பையர் தலைவன் கொற்றவன் குடியே
முதுபதியா முமாபதி யிம்முறைமையிலே யாண்ட
செந்திருவின் பயன் சிற்றம்பல நாடினான் மெய்ச்'
சிவஞான வடிவான திருமேனி யடைவாய்த்,
தந்தவிவர் சந்தான குரவரிவர் மலர்த்தாள்
தப்பாம லென் மனத்தி லொப்பாக வைப்பாம்"

என்று உமாபதிசிவாசாரியருக்குக் குருவாகிய திருப்பெண்ணாகடத்து மறைஞான சம்பந்த சிவாசாரியரை நீக்கியும் உமாபதி சிவாசாரியருக்குப் பின் வந்தவரும் தமக்குக் குருவுமாகிய சிற்றம்பல நாடிகளைச் சேர்த்தும் துதி சொல்லினர். சிற்றம்பல நாடிகள் மெய்கண்டதேவர் சந்தானத்தில் வந்தவராதலால் அவரைச் சேர்த்ததில் குற்றமுளதாக்க் காணவில்லை; மறைஞானசம்பந்த சிவாசாரியரை நீக்கினது யாது காரணத்தால் என்பது விளங்கவில்லை.

பத்திராசிரியரே, நீங்களாவது உங்கள் பத்திரிகையை வாசிக்கும் மற்றைய சித்தாந்திகளாவது அன்புகூர்ந்து எனக்கு நிகழ்ந்த இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பீர்களென்று உங்களிருதிறத்தாரையும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இந்த விஷயத்தில் இன்னுமொரு சந்தேகமெனக்குண்டு. அஃதென்னெனில், கூறுவேன்: மேலெடுத்துக்காட்டிய ‘நந்தி சனற்குமாரன்' என்றற் சொடக்கத்துச் செய்யுளில் தத்துவப்பிரகாசர் அருணந்தி சிவாசாரியரைச் 'சண்பையர் தலைவர்' என்கின்றனர். இப்பாட்டில் மாத்திர மன்று,

நற்பொருளாம் பரன் பாலி னந்தியரு ணூலும்
நல்வழியா மெய்கண்டான் சண்பையர்த நாதன்
அற்புதமா முமாபதிதா மிவருரைத்த நூலும்
ஆகமத்தி னுட்பொருளு மளப்பில் பர்சமயம்
புற்புதமா நிலையில் பொரு ளனைத்தும் பார்த்துப்
பொருண்மைப் பாலறியாத மருண்மைப் பாலுடையேன்
சொற்பொருளாற் றத்துவப் பிரகாசமெனச் சொன்னேன்
சொல்லிரவி யொளியை மின்மினி தொடரு நெறியே"

என்று தமது நூல்வந்தவழியும் நூற்பெயருங் கூறுமிடத்தும் அருணந்தி சிவாசாரியரைச் 'சண்பையர் நாதன்'' என்கின்றனர். சண்பைய நாதன் என்பது சண்பை நகரத்தார்க்குத் தலைவன் என்று பொருள்படும் சண்பை நகரமென்பது சீகாழி. அருணந்தி சிவாசாரியார் சீகாழியிற் பிறதவரென்றாவது சீகாழியைச் சார்ந்தவரென்றாவது வேறெங்குஞ் சொல்லப்படவில்லையே. அவருடையவூர் திருத்துறையூரன்றோ?

இன்னு மொன்று. சிற்றம்பல நாடிகளைப் பலரும் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவர் மாணாக்கரென்பர். மேற்கூறிய சந்தானாசாரி. புராணசங்கிரக முடையாரும் மெய்கண்டதேவர் புராணத்தில்,

மெய்புணர்ந்தார் புகழுமரு ணந்தியோடு
மேவதிகை மனவாசகங் கடந்தார்
பொய்யகல் சிற்றம்பல நாடிகண் முன்னாகப்
புகழுறு மாணாக்கர் நாற்பத்தொன் பதின்மர்
மையகலும் பரிபாக நன்குணர்ந்து
மன்னுசிவ தீக்கைமுறை மருவச்செய்து
தெய்வவருண்மே விடமுப்பொரு ளுணர்த்திச்
சின் மயராந் தன்மையினைச் செய்து பின்னர்"

எனச் சிற்றம்பல நாடிகளை மெய்கண்ட தேவருக்கு மாணாக்கராக்வர். ஆயினும் மேலெடுத்துக் காட்டிய “நந்திசனற் குமரன்" என்ற றொடக்கத்துத் தத்துவப் பிரகாசச் செய்யுள், சிற்றம்பல நாடிகள் நேரே மெய்கண்டதேவர் மாணாக்கரல்லரென்றும் அம்மெய்கண்ட தேவர் சந்தனத்தில் உமாபதி சிவாசாரியருக்குப் பின் பல தலை முறைகழித்து வந்தரென்றும் நன்குதெரிக்கும். இவ்விருகூற்றில் சிற்றம்பலநாடிகளோடொ காலத்திருந்தவராகிய தத்துவப்பிரகாசர் கூற்றன்றிப் பல நூற்றான்களுக்குப் பின் வந்த சந்தானாசாரியர் புராணசங்கிரக முடையார் கூற்று கொள்ளத்தக்கதன்று.

தி. த. கனகசுந்தரம் பிள்ளை

சித்தாந்தம் – 1916 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment