Saturday, May 9, 2020



திருமுறைத் தொடர்களின்: பொருள் கோள்
[க. வச்சிரவேல் முதலியார், காஞ்சிபுரம்.]

சைவத்திருமுறைகள் மெய்யுணர்ந்த பெருமக்கள் திருவருள் வயப்பட்டு நின்று அருளிச் செய்தவை; ஆதலால் அவற்றின் உண்மைப் பொருளை உள்ளவாறு உணர்தல் நம்மனோர்க்கு அரிதே. ஆயினும், அவ்வருளாசிரியன் மார் திருக்குறிப்போடு ஒன்றி அவற்றின் பொருளை உணர்ந் தறிய முயலுதல் தவறன்று. உணர்ந்தறியலுறும் போது நம் போக்கும் நோக்கும் வேறுபட நேரின், கொள்ளும் பொருளும் வேறுபடும். இந்நிலையில் சில சொற்றொடர் களின் பொருள் பலதலைப்பட உரைக்கப்பட்டு வருதலின் அவற்றை எடுத்துக் கொண்டு, " பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்'என்னும் உத்திபற்றி என் அறிவிற்கு நல்ல எனத் தோன்றும் பொருளைக் குறிப்பிடுதல் இக்கட் டுரையின் நோக்கம்.

திருநாகைக்காரோணம் பற்றி நம்பி ஆரூரர் பாடியருளிய திருப்பதிகத்தின் இரண்டாம் பாட்டின் முதல் அடி,

"வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீர்த்தீர்.
விருத்தி நானுமை வேண்டத் துருத்தி புக்கங்கிருந்தீர்"

என்னும் வடிவில் அச்சிடப்பட்டு வழங்குகின்றது. அதன் பொருள்  'வேம்பு போலவும் இனிமையான கரும்பு போலவும் என்னுடன் கலந்து என்னைத் தூய்மை செய்தீர். விருத்தி - அடிமை'' என விளக்கப்படுகின்றது.

இதன் முற்பகுதியைச் சிவஞான சுவாமிகள், தமது மாபாடியத்தில், பசுபுண்ணியம், சிவ புண்ணியம் என்னும் பாகுபாடு நல்வினைகளைச் செய்வோரது கருத்து வகை பற்றியே கொள்ளப்படும் என விளக்கியபின், "வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத்தீற்றி என்றோதிய தூஉம் இவ்வியல்பு நோக்கி யென்க என எடுத்துக் காட்டியருளுகின்றார்கள். தீர்த்தீர் எனப்பாடங்கொள்ளாது தீற்றி எனப் பாடங் கொண்டமை கருதத்தக்கது. திரு. சதாசிவ செட்டியார் அவர்கள் கொண்டதும் 'தீற்றி' என்னும் பாடமே

சுவாமிகள் திருவுள்ளக்கிடையை ஒருவாறு உய்த்து உணரின், அவ்வடியின் பொருளைப் பின் வருமாறு கொள்ளுதல் தகும் எனக் கருதுகின்றேன்:

"பெருமானே, கசப்பான மருந்தோடு சர்க்கரையைக் கலந்து சேய்க்கு ஊட்டி நோய் தீர்க்கும் தாய்போல, பொது நீக்கி நின்னை முழுமுதல் என உணரும் உணர் வோடு நின்னை எனக்குத் தோழன் என உணரும் உணர்வைக் கலந்து நிகழ்வித்துச் சிவபோகத்தை நுகர்விக்கின்றாய்; அங்ஙனம் நுகர்ந்துவரும் அடியேன், என் உடல் வளர்ச்சி கருதி ஊதியத்தை வேண்டவும் அதனை உடனே கொடாமல் துருத்தியிற் சென்று அங்கிருந்தனை " தீற்றி உண்பித்து; விருத்தி சீவித்தற்கு வேண்டிய பொருள், உஞ்சவிருத்தி என்றதிற் போல. 'பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக விளைவித்து நுகர்விக்கும் பெருமான் நீ. அத்தகைய நீ, யான் விருத்தியை வேண்டிக் கேட்கும் போது, வேறிடஞ் சென்று மறைந்து, கொடாமல் இருந் தால் விடுவேனோ'  என்பது கருத்து. துருத்தி - திருத் துருத்தி, குற்றாலம். ஆற்றிடைக் குறையிற் சென்று இன் பமாய் அமர்ந்திருந்தனை என்பது தோன்ற நின்றது.

இனி, 'வேம்பு என்றது உலக வினையை எனவும் தீங்கரும்பு என்றது முதல்வன் அடியை உணரும் உணர்வு எனவும் கொண்டு, உலக வினைகளில் அடியேன் ஈடுபடும் போது அவற்றோடு நின் திருவடியை உணர்ந்து நிற்கும் நிலையினைக் கலந்து உளதாக்கிப் பரபோகத்தை நுகர்வித் தருளி' என்பதும் முதற்பகுதிக்குச் சுவாமிகள் திருவுளங் கொண்ட பொருளாதல் கூடும். அன்பர்கள் மேலும் சிந்திக்க.

இனி, அவர் அருளிய திருவாரூர்த் திருப்பதிகத்தில்,  இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு - பறை கிழித்தனைய போர்வை பற்றியான் நோக்கினே ற்கு'' என்பதிலும் “இறைகளோடு இசைந்த இன்பம்'' என்பதற்கு 'இறைவனோடு கலந்து அனுபவிக்கும் பேரின்பம்' எனப் பொருள் கொள்ளுதல் நல்லதாகத் தோன்றவில்லை. அப்பதிகத்தில் பின்வரும் பாட்டுக்களில் "ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் - மான்மறித் தனைய நோக்க மடந்தைமார் மதிக்கும் இந்த - மானுடப்பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்''  என்றாற் போலப் பொதுவாக வாழும் மனித வாழ்க்கையின் இயல் பையே குறிக்கின்றார் ஆசிரியர். ஆதலால், " இறைகளோடு இசைந்த இன்பம் " என்பதற்கு 'அற்பமாய பொருள்களோடு சார்தல் பற்றி உள்ளதாகிய (அற்ப) இன்பம்' எனப் பொருள் கோடலே பொருத்தமாக இருக்கும். இறை - அற்பம்; இறைகள் - அளவாலும் காலத்தாலும் தன்மையாலும் அற்பமாகிய நுகர்ச்சிப் பொருள்கள் "தினைத்தனை உள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே" என எழுந்த திருவாசகம் ஒப்பு நோக்கத்தக்கது.

இனித் திருவாசகத்தில் வரும் 'சேர்ந்தறியாக்கையானை' என்பதற்குப் பெரும்பாலோர் “பிறரை வணங்குதற் பொருட்டுக் கைகளைச் சேர்த்து அறியாத முதல்வனை" என்றே பொருள் விளக்கம் செய்கின்றனர். இப்பொருளை விழுமிய பொருள் என்று கொள்ள என்உள்ளம் ஒருப்படவில்லை. புராணங்களில் சில இடங்களில் சிவபிரானது விச்சுவ சேவியத்தன்மையை வலியுறுத்த வேண்டிச் சிவபிரானைத் தேவர் முனிவர் முதலாக யாவரும் வழிபட்டுள்ளனர்; அவ்வாறு சிவபிரான் பிறர் யாரையும் அருச்சித்து வழிபட்டதாக வரலாறு இல்லை என வருதல் உண்டு. திருமுறைகளில் ''தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுத பின்னர்த் - தொழப்படுந் தேவர் தம் மாற்றொழு விக்குந்தன் தொண்டரையே" என்றாற் போல உடன் பாட்டாற் கூறுதலன்றி வேறு வகையாற் கூறுதல் காணப்படவில்லை.

அத்தொடர்,  

"செய்யானை வெண்ணீ (று) அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லா தார்க் (கு) அல்லாத வேதியனை
ஐயா (று) அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய்."

என்னும் இடத்தில் பொருள் முரண் தொடை அமைய வந்திருத்தல் கருதத்தக்கது.

இடம் அறிந்து உய்த்துணரின், ''சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை" - என்பதற்கு "உலகப் பொருள் களிற் சேர்ந்து அவற்றை அனுபவியாத செயலினை (இயல்பினை) உடையானை, ஆயினும் எங்கும் நிறைந்து கலந்துள்ளவனை" எனப்பொருள் கொள்ளுதலே சிறப்பாகும். சேர்ந்து அறிதல் - அது அதுவாய்ச் சார்ந்து அனுபவித்தல், இஃது உயிரின் இயல்பாவதன்றி முதல்வன் இயல்பாகாது. கை - ஒழுக்கம், செயல், இயல்பு "யாவையும் சூனியம் சத்தெதிராகலின் - - சத்தே அறியாது'  என்னும் சிவஞான போதப் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. திருநெல்வேலி கா. சுப்பிரமணியபிள்ளை, M. A., M. L. அவாகள் இவ்விழுமிய பொருளையே கொண்டுள்ளனர் என்பதை அவரியற்றியுள்ள உரையீற் காண்க.

முத்து நற்றாமம்பூ மாலை தாக்கி
முளைக்குடந் தரபநற் றீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடுபல் லாண்டிசைமின்;
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கை
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தனை யாறனம் மானைப்பாடி
யாடப்பொற் சுண்ணம் இடித்து நாமே.

என்னும் திருப்பொற் சுண்ணத்தில் சுண்ணம் இடிக்கும் மகளிர்க்குள் ஒருத்தி பிறர் பலரை நோக்கி, 'நீவீர் இன்னது இன்னது செய்ம்மின்'' என ஏவுவதாகவருதலின், சத்தி, சோமி, பார்மகள், நாமகள், சித்தி கௌரி, பார்ப்பதி, கங்கை என்பவை உடன் உள்ள மகளிர்தம் இயற்பெயர்களாகக் கூறப்பட்டவை என்பது தெளிவு. இவற்றிற்கு ரௌத்திரி, திருமகள், நிலமகள் என்றார் போலச் சத்தியின் பல்வேறு அம்சங்களைப் பொருளாகக் கொள்ளுதல் இயைபின்றி விலகிச் சென்று வேண்டாதவற்றைக் கொணர்ந்துரைப்பதாக முடியும்.

இனி, பிரசங்க சங்கதி என்னும் இயைபு பற்றி ஒரு விசித்திர உரையைக் குறிப்பிட விரும்புகிறேன்:

1 பலகலையும் 2 எண்ணரிதும் பார்க்கிலருஞ் 3 செறிந்திடுமே மல நிலையால் வரும் 4 எண்ணே 5 மருவியவும் 6 காட்டிடுமே சொலவரிதாம் 7 பன்னிறமுந் 8 தன்னறிவும் 9 சொற்புகலும் பிலமுள 10 பொற் 11 றீங்கண்டம் 12 பேர் முதலாப் பன்னிரண்டே.

என்னும் பண்டார சாத்திரப்பாட்டு ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் சிவப்பிரகாசம் பன்னிரண்டு சூத்திரங்களாகப் பிரிக்கப்படும் முறையைத் திருவிருத்தங்களின் முதற்குறிப்புப் பற்றி நினைவூட்டச் செய்தருளியது. பலகலை எனத் தொடங்கும் திருவிருத்தம் முதலாக முதற் சூத்திரம்; எண்ணரிது முதல் இரண்டாஞ் சூத்திரம்; செறிந்திடு முதல் மூன்றாஞ் சூத்திரம்; எண் முதல் நான்காஞ் சூத்திரம்; மருவிய முதல் ஐந்தாஞ் சூத்திரம்; காட்டிடும் முதல் ஆறாஞ் சூத்திரம்; பன்னிறம் முதல் ஏழாஞ் சூத்திரம்; தன்னறிவு முதல் எட்டாஞ் சூத்திரம்; புகல் முதல் ஒன்பதாஞ் சூத்திரம்; 'பொற்' முதல் பத்தாஞ் சூத்திரம்; தீங்கு முதல் பதினொன்றாஞ் சூத்திரம்; அண்டம் முதல் பன்னிரண்டாஞ் சூத்திரம் - என்பதே பாட்டின் கருத்து. சிவப்பிரகாசப் பதிப்புக்களைப் பார்த்தால் இது விளங்கும். இப்பாட்டிற் கூறியபடி முற்றும் இராமல் இறுதிச் சூத்திரங்கள் ஒவ்வொரு திருவிருத்தம் முன்னோ பின்னோ அமையப் பிற்காலத்து வகுக்கப்பட்டு வருவதும் விளங்கும்.

இதற்கு "பாசஞானங்களாகிற அறுபத்து நான்கு என்றும், அதற்கு மேற்பட்டு எண்ணற்றனவுமாயும் உள்ள நூல்களைப் பார்க்காதவர்களும், மலமாயாதிகளை அடைந்திருக்கிற நிலைமையால் பொருந்தி வரும் எண்ணங்களையும், அதனால் அவர்கள் சார்ந்திருக்கின்ற அகச்சார்பு புறச்சார்புகளையும் அறியத் துணை செய்து நிற்கும் சொல்லுதற்கு அரியனவாகிற பல நிறங்களையும் ஆன்ம போதமாகிற பசு ஞானத்தையும் மிக ஆழமான பிலத்து வாரத்தில், உள்ளன போல பலவேறு கண்டங்களுடைய நாமரூபமாதியவற்றைப் பன்னிரண்டாம் சூத்திர அனுபவம் பெற்றவர் தம் முறையாற் புகல்வர் என்றவாறு'' என உரை அசசிடப்பட்டுளளது.

"மூன்று நான் கேழு மூன்றே முடிந்தபின் இரண்டிரண்டே
மூன்று நான் மூன்றினன்றாய் முடிந்த பின் இரண்டிரண்டே
ஏன்ற நான் கீறுதாமே இவையீராறிலக்கத்துள்ளே
ஏன்ற முப்பானொன்பானை எனக்கரன் இரங்கினானே.?

என்னும் பாட்டுச் சிவஞான போதத்தில் பன்னிரண்டு சூத்திரங்களில் முப்பத்தொன்பது அதிகரணங்களும் முறையே 3, 4 7 3, 2, 2, 3, 4, 3, 2, 2, 4 என அமைத்துள்ளன எனக் குறிப்பிக்க எழுந்ததே. இதற்கும் மேலே காட்டியவாறு விசித்திர உரையும் விசேடக் குறிப்புக்களும் எழுதப்பட்டு வழங்குகின்றன.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
என்னும் பொதுமறை சைவநன் மக்களை விபரீத உரைகளினின்றும் காக்க.

இன்னும், இக்காலத்துச் சிலர் திருமுறைகளுக்கு திவ்விய பிரபந்த வியாக்கியானங்களைப் பார்த்து அவற்றைப் போல எழுதவேண்டும் என்று விரும்புகின்றனர். அங்ஙனமே இயற்ற விரும்புவோர் முதற்கண் பெரிய புராணத்தையும் சிவஞான மாபாடியத்தையும் நன்குகற்று ணர்ந்து பின் இயற்றப் புகுதல் நன்று. இல்லையேல், பிரபந்த வியாக்கியானங்களில் இலக்கியச் சுவைதோன்றவும் கேட்போர் மனக்கற்பனையைப் பிணிக்கவும் எழுதிய வற்றை அனுபவங்கள் எனக்கொண்டு திருமுறைகளின் மரபுக்கும் நோக்கிற்கும் திருக்குறிப்பிற்கும் பொருந்தா உரை வகுக்க நேரும். திருவெம்பாவைக்கு இக்காலத்து வழங்கி வரும் உரைகள் இப்பிழையை மேற்கொண்டு வருதல் இதற்குச் சான்று. இதனைச் சமயம் நேரின் விளக்கக் கருதுகிறேன்.

[குறிப்பு: -

திருமுறைகளில் பாடம் தேர்வதிலும் பாடத்திற்குப் பொருள் கொள்வதிலும் ஏற்பட்டுள்ள சில பிழைகளை சித்தாந்தப் பேராசிரியர் மேலே எடுத்துக் காட்டினார். சில, நகையை விளைவிக்கும் தன்மையனவாகவும் உள்ளன. சுந்தரர் தேவாரத்தில் செந்தில் வேல் முதலியார், இராம சாமிப் பிள்ளை போன்ற பல பெரியார்கள் பதிப்புக்களில் தீற்றி என்ற பாடமே காணப்படுகிறது. சமாஜப் பதிப்பில் எவ்வாறோ பிழை புகுந்து விட்டது. தீற்றி என்றால் உண்பித்து என்பது பொருள். "அடித்தடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே'' என்பது திருவாசகம்.

"இறைகள், சேர்ந்தறியாக் கையான்'' என்ற சொற்களுக்குக் குறிப்பிட்டுள்ள பொருள்கள் கருதத்தக்கவை; இவைகளே கொள்ளத்தக்கன. சத்தி, சோமி முதலியோர் அவ்வவ்வியற்பெயர் உடைய தோழிமார் என்றே பொருளாகும்.

இனி பலகலை, மூன்று நான்கு என்ற பாடல்களைப் பற்றி ஆசிரியர் எழுதி இருப்பது நகையினை விளைவிக்கும் அல்லவா? வேறு விதத்தில் இப்பிழைகளை நாம் பொறுத் கொள்ளுதல் இயலாது.                - ஆசிரியர்]

சித்தாந்தம் – 1964 ௵ - ஏபரல் ௴


No comments:

Post a Comment