Saturday, May 9, 2020



சித்தாந்தம்

      சித்தாந்தமெனு மிவ்வடமொழியானது சித்தம் அந்தம் எனப்பிரிக்கப்பட்டு, நிச்சயமான முடிபெனப் பொருள்படும். எவற்றின் முடிபெனின், வைதிகர்கள் யாவராலுங் கொண்டாடப்படும் வேதவேதாங்களின் முடிபெனப்படும். அங்ஙனம் முடிபெனக் கூறுவானே னெனின், ஆன்மாக்க ளனைவரு மின்றியமையாது அறிந்தனுபவிக்க வேண்டிய வுண்மையினை முடிவு கட்டியிருத்தலினா லென்க. வேதவேதாந்தங்களில் அங்கன முடிவுகட்டவில்லையோவெனின், இல்லை; என்னை? வேதவேதாந்தங்களில் முடிவுகட்டியிருக்குமேல் அவற்றிற்கே சித்தாந்த மெனப் பெயர்வந் திருக்கவேண்டும். அன்றியும் வேதவேதாந்தங்களுக் கன்னியமாகச் சித்தாந்தமொன்றிருக்க வேண்டியதில்லை. அங்ஙனமாயின் வேதவேதாந்தங்களில் முடிவுகட்டியிருத்த லென்னை யோவெனின், சித்தாந்தத்திலறிந்து கொள்ள வேண்டிய வுண்மையினை பறிதற்குச் சாதனமாயுள்ள விடயங்கள் பற்பலவாம். ஆகவே வேதம், வேதாந்தம், வேதாந்ததரம் அல்லது சித்தாந்தம் என ஆசிரியர் சிவஞானயோகிகள் திராவிட மகாபாடியத்தில் வகுத்துக் கூறினர். இம் மூன்றனுள் வேதத்தில் விளங்கக் கிடக்கு முண்மை யென்னையோ வெனின் கூறுதும். –

வேதம் கன்மகாண்டம் உபாசனா காண்டம் என விரண்டாக வகுக்கப்பட்டு மந்ததரம், மந்தம் எனும் பக்குவமுடையார்கட்கு முறையே பிரயோசனமாம். எங்ஙனமெனின் மந்த தரத்தார் மிக்க மலத்தாற் கட்டுப்பட்டு அறிவு மழுங்கிக் கிடக்க அவர்கட்குச் சிறிது அறிவு விளக்கமாம் பொருட்டு, சோதிட் டோமம், அசுவமேதம், அஜமேத முதலிய யாக கன்மங்களை வகுத்தெடுத்துக் கூறிய கன்மகாண்ட முபயோகமாம். அங்ஙனம் அறிவு சிறிது தெளிந்த மந்தர்கட்குப் பலவகைப்பட்ட தேவோ பாசனைகளை விதந்து கூறி யவற்றா லவரறிவை விளக்கும் உபாசனா காண்ட முபயோகமாம். அதாவது ஆன்மாக்களனைவரும் பலவகைத்தாய கன்மங்களிற் கட்டுப்பட்டுக் கிடத்தலின், அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கபடியே புத்தி பிரவர்த்திக்கு மாகலின், அவரவர்கள் பலாபலன்கட்குத் தக்கவாறும், காலதேச வேறுபாடுக ளனுசரித்தும், பலதெய்வ வழிபாட்டினைச் சோபான முறையில் விரித்துக் கூறும். அங்ஙனங் கூறவே  எந்தெந்த ஆன்மாவிற்கு எவ்வளவு தூரங் கன்மம் வழிவிடுகிறதோ அவ்வளவு தூரஞ்சென்று விசாரித்து, அதிகார பேதம் பற்றிக் கூறியிருக்கும் தெய்வ வழிபாடுகளிலொன்றைப் பற்றிக் கொண்டு திருப்தி யடையும். வேதத்தில் இங்ஙனஞ் சோபான முறையிற் கொள்ளவே அதிகார தாரதன்மியத்தால் மேலுள்ள சமயம் கீழுள்ள சமயத்தினை மறுக்கு முகத்தால் ஒன்றுக் கொன்று மாறுபட்டன போலத் தோன்றினும் எவை மொருவாற்றாற் பிரயோசனமேயாம்.

நிற்க: வேதாந்தத்தில் விளங்கிக் கிடக்கு முண்மை யென்னையோ வெனின், தீவிரபக்குவ முடையார்கட்கு உபநிடதங்கனைத் தினிலு மெடுத்து விரித்துக் கூறுங் காரண வாக்கியங்களிற் குறித்த இரணியகருப்பன், நாராயணன் முதலிய தெய்வப் பெயனைத்தும் சாகபசு நியாயத்தால் முதல்வனையே யுணர்த்த ஞானகாண்ட முபயோகமாம். இதனால் மந்ததரம், மந்தம் எனும் பக்குவ முடையாரின் பொருட்டு வேதத்திற் கூறும் கன்ம காண்டமும், உபாசனா காண்டமும், தீவிரம் எனும் பக்குவ முடையாரின் பொருட்டு வேதாந்தத்திற் கூறும் ஞான காண்டத்திற்கு ஏதுக்களாம். அதாவது அனாதியாயுள்ள ஆன்மாக்கள் பஞ்சமலக் கொத்தினை நீக்கி யவற்றினைக்கடந்த  முதல்வனைப்பற்றி அனாதி யாணவத்தை யடக்கி, தனையறிந்து
அம்முதல்வ னுருவாக்கண்டு தன்னைப் பந்தித்த மலங்கெடவே முதல்வனுந்தானுஞ் சிவோகம் பாவனையிலிருத்தலேயாம்.
   
இனி, வேதாந்ததரத்தில், அதாவது, சித்தாந்தத்தில் விளங்கிக் கிடக்கு முண்மை யென்னையோ வெனின், தீவிரதர பக்குவ முடையாரின் பொருட்டுச் சிவாகமத்திற் பிரதி பாதிக்கப்படு  முதல்வனுடைய சிறப்பிலங்கணங்களை நியாயப் பிரமாணங்  கொண்டு கரதலாமலகமாக விளக்கி வச்சிரலேபமாக முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இதனால் வேதாந்த ஞானம் சித்தாந்த ஞானத்திற் கேதுவாம். அதாவது வேதாந்த ஞானத்தாற் சோகம்பாவனை யடைந்த ஆன்மா மனமுதலிய வந்தக்கரணங்களும், சத்த முதலிய தன்மாத்திரைகளும் ஏனைத் தத்துவங்களும் இருவிதமாயைகளும் தன்னை யடராதவகை திருவருண்மயமாயிருந்து முதல்வனுட னிரண்டறக் கலந் திருத்தலேயாம்
   
இதனாற் சிவோகம் பாவனையளவும் வேதாந்தம் எனப்படும். சிவமாய் நின்ற விடம் சித்தாந்தமாம். அதாவது முதல் வனறிவும் ஆன்மவறிவுங் கலந்த சிவோகம்பாவனை "தானான'' வேதாந்தமாம். ஆன்மவறிவின்றி முதல்வனறிவு மாத்திரையா நிற்பது "தானென்னுஞ்" சித்தாந்தமாம்.

இது காறுங் கூறியவாற்றால், வேதாந்தம் பிரமாணம், சித்தாந்தம் பிரமாணமன்றெனப் பிணங்குவாரும், சித்தாந்தம் பிரமாணம் வேதாந்தம் பிரமாண மன்றெனப் பிணங்குவாருமாகி வாழ்பவர் கூற்றனைத்தும் அழகன்றெனத் தீர்மானித்து, வேதாந்தமும், வேதாந்ததரமுமாகிய சித்தாந்தமும் பரிபாகிகள் பேதத்தாலிரண்டாகி வேதாந்தம் சிவோகம் பாவனையோடிருக்கும் - சீவன் முத்தர் நிலையினையும், சித்தாந்தம் முதல்வனுட னிரண்டறக் கலந்து அனுபவிக்கும் சுத்தாத்து விதானுபவாதீத ஆனந்த நிலையினையும் விளக்குமெனக் கொள்க. நீலகண்ட சிவாசாரியர் அப்பய தீட்சிதர் முதலிய சிவாத்துவித சைவாசாரியர்கள் நீலகண்ட பாடியம், சிவாதித்தமணி தீபிகை சிவதத்துவதீபிகை முதலியவற்றில் வேதாந்தத்தை மறுத்துச் சித்தாந்தப் பிரமாணியம் வலியுறுத்துரைத்தார். அரதத்தசிவாசாரியர், உமாபதி சிவாசாரியர் முதலிய வைதிகாசாரியர்கள் சதுர்வேததாற் பரியசங்கிரகம், பவுட்கர விருத்தி முதலியவற்றில் வேதசித்தாந்தப் பிரமாணியம் வலியுறுத்துரைத்தார்கள்.
     
முதல்வன் பெருங்கருணையாளனாகலின், உலகத்தா ருய்யும்  பொருட்டும், சத்திநிபாத முடையா ருய்யும் பொருட்டும் பொரூள் பலபடத்தோன்றுஞ் சூத்திரமும், அதனை யவ்வாறாக வொட்டாது தெளித்துரைக்கும் பாடியமும் போல முறையே வேதாந்தமும், சித்தாந்தமும் செய்யப்பட்டனவாகலான் அவை முறையே யிரண்டும் பொது நூல் சிறப்பு நூ லெனப்பட்டுச் சூத்திரமும் பாடியமும் போல வேறு வைத் தெண்ணப் பட்டன. ஏனைய நூலனைத்தும் இவை யிரண்டினின்றும் விரிந்த நூல்களேயாம், ஆகலின் இவை முதலாயபலகாரணம் பற்றி வேதாந்தம் சித்தாந்தத்திற்குச் சோபான மென்பது சர்வ சம்பிரதி பன்னமாயிற்று.
     
சித்தாந்தம் எனினுஞ் சைவம் எனினுமொக்கும் ஒன்றற் கொன்று பரியாயப் பெயராம். இது பற்றியே சைவசாத்திரங்கள் சித்தாந்த சாத்திரமென்ற போது வேறு சமயசாத்திரங்களைக் குறியாது. மற்றைய சமயங்களைக் குறிக்க வேண்டுமாயின் அவ்வச்சமயங்கட் குரிய சொல்லினை யடையாகக் கொடுத்துக் கூறவேண்டும். எங்ஙனமெனின், அத்துவித மென்ற சொல்லுடன் கேவலம், விசிஷ்டம், மறுதலை என்னும் அடை மொழிகளைக் கொடுத்துக் கூறவே அவ்வச் சமயங்களையும்,  அத்துவிதம் என்ற மாத்திரத்தானே சித்தாந்தத்தினையுந் தெரிவிக்குமாறு போலாம். சித்தாந்தத்தினைக் குறிக்கும் அத்து விதத்தினுக்குச் சுத்தம் என்ற அடைமொழி யொன்று காணப்படுகிறதே யென்பாராயின், அது “சுத்தம் என்றது யாதானு மொன்றான் விசேடிக்கப் படாது நிற்றலை அது ‘சுத்தசத்தை' எனத் தார்க்கீகர் கூறும் வாய்பாட்டானறிக'' என ஆசிரியர் சிவஞான சுவாமிகள் திராவிடமா பாடியத்திற் கூறியிருப்பதனால் அடைமொழி யாகாது. இரத்தினத்திரயத்தில் சைவா சாரதுல்யராகிய அப்பயதீட்சிதர் "சித்தாந்தம். முதல்வன ஊர்த்துவ சுரோதோற்பவங்களாக மேன்முகத்திற் பிறந்தது. இருக்காதி. முதல்வனது மற்றைமுகங்களிற் பிறந்தன. முதல்வன் கைலையிலே சநகர் முதலிய முநீந்திரர்கட்குத் திரிபதார்த் தங்களினாலே சம்மிதமாகியும், இரகசியமாகியும் ஆகமாந்தமென்னும் பெயர்த்தாயுள்ள சித்தாந்தத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்'' என்னும் புராணரத்தினமாகிய மகாஸ்காந்தம். ஆன்மாக்களின் அதிகார பேதம்பற்றி முதல்வன் சகலநூல்களையும் பூர்வ பட்சமாகச் சொன்னார் என்னும் ஆகமங்களிற் றலைமை பூண்ட காமிகம். ஆகலின் எல்லா நூல்கட்கும் சித்தாந்தமே மூலமாம். வேதவேதாந்தம் சித்தாந்தத்திலடங்கும். சித்தாந்தம் வேத வேதாந்தங்களி லடங்காது. ஆகையினா லன்றோ சித்தாந்த  ஞானம் பரஞான மென்றும், வேதாந்த ஞானம் அபரஞான மென்று மழைக்கப்படும்.

     ''சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே"

என்ற அருமைத் திருவாக்கினால், அனந்த கல்யாணசுந்தர குண சம்பன்னனான வகண்ட சச்சிதானந்த கநீபூதனாஞ் சிவபெருமான் சித்தாந்த வீதியிலேயே உலாப் போதருவா னென்பது திண்ண மாகி வேத வேதாந்த வீதிகளில் வாரானென்பது  சொல்லாமே யமையும். மனந்தூயராய் முக்குணவவத்தை முற்றக்கடந்து மிக்க தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்துப் பரம ஞானானுபூதி கைகண்ட உண்மை நாயன்மார்கள் அனுபவித்தது ''நவமாய செஞ்சுடர் நல்கலுமே நாமறந்து சிவமாய வாபாடி'' “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட - வத்தன்'” “சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே”'' ஆனாதி சிவரூப மாகிய வாறே” “ஏகனாகி யிறைபணி நிற்க” “ஏகமாய் நின்றே யிணையடிகடா முணர'' என்றற்றொடக்கத் துபசரித சுத்தாத்துவித வைக்கிய சிவசாயுச்சியப் பேற்றினை யளிக்குஞ் சித்தாந்த மென்பது சத்தியம். ஆகவே “சைவத்தின் மேற்சமயம் வேறில்லை யதிற்சார் சிவமாந் தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான்மறை” எனு முண்மை கடைபிடிக்க சித்தாந்தமே சித்தாந்தம்.
சுபம்.
மணவழகு.
சித்தாந்தம் 1912 ௵ - ஜனவரி


No comments:

Post a Comment