Saturday, May 9, 2020



ஆணவமல நீக்கமும் ஒடுக்கமும்

புலவர்மணி - சித்தாந்த வித்தகர்
முரு. பழ. இரத்தினம் செட்டியார்
(355 - ஆம் பக்கத் தொடர்ச்சி

மலம் தன்னளவில் எப்பொழுதும் போல் தனக்குள்ள ஆற்றல்கள் குன்றாமலே இருக்கும். ஆனால் முத்திநிலையில் திருவருளைச் சார்ந்து நிற்கும் உயிர்களிடம் அதன் ஆற்றல் பலிப்பதில்லை. இதனையே  'சத்தி கெட்டது'  என்று சொல்கிறோம். ஆகவே ''அழிந்திடும் சத்தி" என்பதற்கு ''ஆற்றல் அழிந்து போகிறது'' என்று பொருள் கொள்ளக் கூடாது; ''ஆற்றல் பலிக்காமற் போகிறது'' என்றே பொருள் கொள்ளல் வேண்டும். எனவே முத்தான் மாக்களை நோக்க மலம் ஒடுங்கியதே அன்றி உண்மையில் ஒடுங்கியதன்று.

"கெட்டது" "அழிந்தது' என்னும் சொற்கள் மயக்கம் தரும் எனக் கருதியே, சிவஞான சுவாமிகள் சிவஞான போதம் 11ஆம் சூத்திரம் 2ஆம் அதிகரண உரையில், "மலம் நசித்தலாவது தனது மறைத்தற் சத்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையே பிறி தன்று'' என விளக்கமாகக் கூறியிருக்கிறார். இதற்குப் பின் வருமாறு திரு. பொ. முத்தைய பிள்ளை அவர்கள் தாம் எழுதிய, 'சிவஞான போதச் சிற்றுரை விளக்கத்தில் தெளிவுரை கூறியிருக்கிறார்கள்:

''மலம் நசித்தல் என்றது மலத்தினுடைய மறைத்தற் சத்தி மடங்கிக் கீழ்ப்படு தன் மாத்திரையே அன்றிப் பொருள் கெடுதல் இல்லை. எதனால் எனின், மலத்தோடு கூடிய ஆன்மாக்களும் இறைவனோடு அத்துவிதமாய்க் கலந்து நிற்கின்றன; நிற்பினும் உயிரைப்பற்றி நிற்கும் அம்மலசத்தி இறைவனைப் பற்றுதலில்லை; இறைவனைப் பற்றாது சத்தி மடங்கி உயிர்களைப் பற்றிப் பொருள் கெடாதவாறு போல, இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் முத்தர்களைப் பற்றாது சக்தி மடங்கி ஏனைப் பெத்தர்களைப் பற்றிப் பொருள் கெடாதுநிற்கு மாதலால் என்க; இவ்வாறன்றி முத்தரிடத்தும் மலம் சத்தி கெட்டுப் பொருள் இருக்கும் எனின் மேலை வெண்பாவில் மலம் நசித்து என்றதனோடு முரணாவதன்றியும் குணம் இல்லாத குணியும் உண்டெனப்பட்டு வழுவாம்.

"திரு. பொ. முத்தைய பிள்ளை அவர்கள் எழுதியிருக் கும் இவ்விளக்கம்,'நீக்கம்'' ஒடுக்கம்' என்னும் சொற்களுக்குள்ள சைவ சித்தாந்தப் பொருளைத் தெளிவு செய்கிறது."

மலம் இறைவனைப் பற்றாது சத்தி மடங்கி உயிர்களைப் பற்றுதல் போல் முத்தரைப் பற்றாது சத்தி மடங்கி பெத்தரைப்பற்று தலையே அருணந்தி சிவாசாரியார் கூறியருளுகின்றார். ஆகவே, "நீக்கம்" என்பது மலம் முத்தரைத் தொடக்குறுத்த முடியாமற் போகும் நிலையைக் குறிக்கின்றதே அன்றிப் பொருள் அளவில் ஒன்றை விட்டு ஒன்று நீங்கி நிற்கும் நிலையைக் குறிக்க வில்லை என்பது தெளிவு.

முத்தரைப் பற்ற முடியாது சத்தி மடங்கிக் கீழ்ப்படுதலையே' " சத்தி அழிந்தது'' என்றும், ''சத்தி கெட்டது'' என்றும் குறிக்கின்றோம். உமாபதி சிவாசாரியார் கூறியருளும், 'ஒடுக்கம் ' "இங்ஙனம் முத்தரைப் பற்ற முடியாது சத்தி மடங்கி நிற்கும் நிலையையே'' உணர்த்துகின்றது என அறிதல் வேண்டும்.

"நீக்கம்'' "ஒடுக்கம்'' என்னும் சொற்களுக்கு இவ்வாறு பொருள் விளக்கம் செய்து கொண்டோமானால், முத்தி நிலையில் பாசம் உண்டா? இல்லையா? என்னும் வினாவிற்கு விடை கூறுவது எளிதாகும்.

"முத்தியிலும் பாசம் உண்டு; ஆனால் பந்தம் இல்லை'' - இதுவே பதி, பசு, பாசம் மூன்றும் நித்தியம் எனக் கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைக்கு ஏற்ற விடையாகும்.

சுவாமிகள் அவர்கள் இச்செய்யுளில் வரும் " மலம் என்பது ஆணவமலத்தை மட்டும் குறிப்பதன்று; மாயை, கன்மங்களையும் குறிக்கும் என்னும் கருத்தில்,''பாசம்'' என்னும் பொருளுடையது எனப் பக்கம் 155ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

முத்தியில் ஆணவமலம் மட்டுமன்று; மாயை, கன்மங்களும் உண்டு. வியாபகப் பொருள்களாகிய அவை இல்லாமற் போக முடியாது. சிவஞான பாடியத்தில் பிரமாண இயல் 2ஆம்சூத்திரம் 2ஆம் அதிகரண உரையில், சிவஞான சுவாமிகள், "ஆன்மாப் பசு வென்னும் பெயர் நீங்கி முத்தனாய் அருளோடும் கூடி நின்ற வழி, அவ்வான்மா வின் வியாப்பியமான மாயை முதலியனவும் திரோதான சத்திபோலப் பாசமென்னும் பெயர் நீங்கி அருளேயாய் நிற்கும் என்க.'' என்று கூறுவதால் மாயை, கன்மங்களும் முத்தியில் நிற்பது பெறப்படும். "மாயை மா மாயை' என்னும் சிவப்பிரகாசச் செய்யுளும் இதனை உறுதிப் படுத்தும். எனவே முத்தியில் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் உண்டு என்பது தவறன்று; அவற்றின் தொடக்கு உண்டு என்று கூறுவது தான் தவறாகும்.

''மலம் சாய அமுக்கி'', "மும்மலத்தை மோசித்து" “ஆதிமலம் இரண்டும்", "சித்தமலம் அற்றார் செறிந்திடுவர்'' எனச் சுவாமிகள் அவர்கள் தம் கட்டுரையில் நிறைய எடுத்துக் காட்டும் திருவாக்குகள் அனைத்தும் "பாசத்தொடக்கு அறு தலையே" குறிப்பனவாதலால், "முத்தியில் மும்மலங்களும் உண்டுஎன்னும் கருத்துக்கு மாறானவை அல்ல என்றே நாம் கருதுகின்றோம்.

இனி இங்கு ஆராய எடுத்துக் கொண்ட  'முத்தி தனில் மூன்று முதலும் மொழியக் கேள்" என்னும் திருவெண்பாவிற்குப் பொருள் காணும் முன்னர் அடியிற் கண்ட மூன்று கருத்துக்களைக் கவனிக்க வேண்டும் எனக் கூறவிரும்புகின்றோம்.

(1)

இச்செய்யுள் முத்தியில் அல்லது முத்திக் காலத்தில் முப்பொருளும் நித்தியம் என்பதைச் சாதிக்க எழுந்ததாதலால், “மலநீக்கம்'', ''மலமின்மை" ஆகியவை பற்றிக் கூறுதல் தவறாகும். முத்திக் காலத்திலும் மலம் நித்தியம் என்பதை நிலைநாட்டும் வகையிலேயே பொருள் காண வேண்டும்.

(2)

உபசாரப் பொருள் கூறுவது இவ்விடத்தில் பொருந்தாது. மலம் நித்தியம் என்பது உபசாரம் அன்று. அது சைவ சித்தாந்த அடிப்படை உண்மைகளுள் ஒன்றாகும். எனவே அஃது உண்மையிலேயே நித்தியம் என்பதை இச் செய்யுள் சாதிக்க வேண்டும். உபசார விளைவைக் கூறி அதனால் அது நித்தியம் என்பது வலிமையுற அதனைச்சாதிப்பதாகாது. சைவ சித்தாந்திகள் பாசம் எக்காலத்திலும் நித்தியம் என்பதைச் சாதிக்க முடியாமல் உபசார விளைவு கூறித் தப்ப முயல்கிறர்கள் என ஏனையோர் நினைக்க இடம் தரக் கூடாது. ஒரே செய்யுளில் பசு, பதி இரண்டுக்கும் உண்மை நிலை கூறிவிட்டு அவற்றைப் போலவே நித்தியமாக உள்ள பாசத்திற்கு மட்டும் உபசார நிலையோ, விளைவோ கூறுவது நியாயமாகாது. “இன்பத்தை விளைவித்தல் மல ஒடுக்கம்" என்பது முத்திக் காலத்தில் மலம் நித்தியம் என்பதை மட்டும் புலப்படுத்து கின்றதே அன்றி அஃது எவ்வாறு நித்தியம் என்பதைப் புலப்படுத்த வில்லை, இதனால் அது பயனற்ற வெறும் உபசாரப் பொருளாகப் போய் விடுகிறது. முற்றிலும் உபசாரமாக இல்லாமல், ஓரளவு முத்திக்காலத்தில் மலம் நித்தியமாக இருப்பதால் உண்மையிலேயே என்ன நேர்கிறது என்பதைக் கூறக் கூடிய உரையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.

"இன்பத்தை விளைவித்தல்'' எனப் பொருள் கொண்டமையால் தான் உபசாரப் பொருள் கூறவேண்டியதிருக்கிறது. ''விளைவித்தல்'' என்பதற்கு 'நிகழ்வித்தல்" எனப் பொருள் கொள்ள இடமுண்டு. எனவே மலம் நித்தியமாக இருப்பதால் முத்திக் காலத்தில் உண்மையிலேயே என்ன நேர்கிறது? என்பதைச் சிந்தித்து இதற்குப் பொருள் காணலாம். எப்படியேனும் உண்மை விளைவைக் குறிப்பிடுவதே சிறப்பு.

(3)

பாசம் நித்தியம் என்பதற்காகப் பாசத் தொடக்கு இருப்பதாகக் கூறுவது பெருந்தவறாகும். "தன்னுணர்வைப் பயப்பிக்கிறது'', ''ஆன்மா உலகத்தை அறியாதவாறு மறைத்துச் சிவபோகத்தை இனிது அனுபவிக்கத் துணை செய்கிறது'' எனக் கூறப்படும் உரைகள் முத்தியிலும் ஏதோ ஓரளவு பாசத்தொடக்கு இருக்கிறது எனக்கருத இடம் தருகின்றன. மலவியாபகம் பற்றிக் கருத்து வேற்றுமை உடையவர்களும் ஆன்மா முத்தியில் முழுவியாபகம் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றனர். இதனால் ஆன்மா எதனையும் பொருள் அளவில் விட்டு நீங்க முடியாதாயினும் கருத்தளவில் மும்மலப்பற்றையும் விட்டு இறைவனையே பற்றி நிற்க முடியும் என்பதிற் சந்தேகம் இல்லை. முத்திநிலையில் ஆன்மாவின் அறிவு, இச்சை, செயல்கள் முற்றிலும் இறைவனின் அறிவு, இச்சை, செயல்களால் வியாபரிக்கின்றனவாதலால் மும்மலங்களின் தொடக்கு மிகச் சிறிய அளவில் கூட இருக்க இடமில்லை. எனவே பாசத்தொடக்கு இல்லாத நிலையிலேயே பாசம் நித்தியம் என்பதை நிறுவ வேண்டும்.

இம் மூன்று கருத்துக்களையும் மனத்திற் கொண்டு பொருள் காண்பதே பொருத்தமாகும்.

மலம் தன்னளவில் நீங்கவோ, ஒடுங்கவோ இல்லை. இறைவனைச் சார்ந்திருக்கும் முத்தரிடம் அதன் ஆற்றல் பலிக்காமற் போகிறது என்பதே உண்மையாகும். இறைவனை எவ்வாறு மலம் பற்ற முடியாமற் போகிறதோ, அவ்வாறே அவன் மயமாக நிற்கும் முத்தரையும் அது பற்ற முடியாமற் போகிறது. இறைவன் இன்ப உருவினன். உண்மை இன்பம் இறைவனிடத்தன்றி வேறெங்கும் விளையாது. ஆசிரியர் மனவாசகம் கடந்தார் "இன்பம் கொடுத்தல் இறை'' என்பதால், இன்பம் இறைவனாலேயே விளைகின்றது என்பது தெளிவு. அப்புறம் அவ்வின்பம் எங்ஙனம் விளைகின்றது? என ஏன் ஆராய வேண்டும்? எனவே "இத்தை விளைவித்தல்'' என்பதற்கு மீண்டும் 'இந்த இன்பத்தை விளைவித்தல்' எனப் பொருள் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

"இன்பம் துய்த்தல் பசு'' "அதனைக் கொடுத்தல் பதி'' என ஆசிரியர் கூறுகின்றார். கொடுப்பானும் பெறுவானுமாய் இருக்கின்ற நிலை சமமற்ற நிலையாகும். இந்த நிலை ஏன் ஏற்பட வேண்டும்? மலபந்தம் நீக்கப்பெற்ற உயிர் ஏன் சிவசமமாகி ஐந்தொழில் ஆற்றக் கூடாது?  "முத்தி பெற்ற உயிர் சிவசமம்'' என்னும் சிவசமவாதக் கொள் கையை மறுத்து, முத்தியிலும் ஆன்மா சிவனுக்கு அடிமையே என்றும், சிவானுபவம் ஒன்றினுக்கு மட்டுமே அஃது உரியதென்றும், ஐந்தொழிற்கும் உரியவன் இறைவன் ஒருவனே என்றும் சைவ சித்தாந்தம் ஏன்வரையறை செய்து கூறவேண்டும்? பரம கருணாநிதியாகிய இறைவன் தன்னைப் போல ஆன்மாக்களைச் சமமாக்கி ஐந்தொழில் ஆற்றுமாறு செய்யாமல், அடிமையாகவே வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

மலம் அநாதியே உண்டு என்பதைச் சைவசித்தாந்தம் பல ஏதுக்களால் நிறுவியிருக்கிறது. இதனால் அது வியாபகமாகவும் நித்தியமாயும் உள்ள பொருள் என்பது தெளிவாகிறது. பெத்த காலத்திலும் சரி, முத்திக் காலத் திலும் சரி, அஃது தன்னளவில் ஆற்றல் குன்றாது வியாபகமாயும் நித்தியமாயும் இருக்கவே செய்யும். முத்தி நிலையில் ஆன்மா இறைவனைச் சார்ந்து நிற்பதால் மலத்தின் ஆற்றல் பலிக்காமற் போகிறது. ஆனால் ஆன்மா இறை வனையே நோக்கி நிற்காது, சிறிதளவு வேறொன்றை நோக்கினாலும் சார்ந்ததன் வண்ணமாகும் அதன் தன்மையால் வியாபகமாயும் நித்தியமாயும் உள்ள மலத்தினால் தொடக்குண்டு, அறியாமையும் துன்பமும் எய்தவே செய்யும், இதனாலேயே ஆன்மா முத்தி நிலையில் இறைவனைப் போலச் சமமாக நின்று செயலாற்ற முடியாதென்றும், இறைவனையே சார்ந்து அவனுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்றும், பேரின்பத்தைத் துய்ப்பதோடு அமைந்து கிடக்க வேண்டியதைத் தவிர அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாதென்றும், மலம் நித்தியப் பொருள் என்பதையும், ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையது என்பதையும் உணராமல் ஆன்மா சிவசமமாகி ஐந்தொழில் ஆற்றும் எனச் சிவ சமவாத சைவர் கூறுவதால், அவர் கொள்கை தவறென்றும் சைவ சித்தாந்தம் முடிவு கட்டியிருக்கிறது. எனவே ஆன்மா முத்தியிலும் சிவசமமாகாமல் அடிமையாக இருப்பதற்கு இறை காரணம் அன்று; மலம் நித்தியப் பொருளாக இருப்பகே காரணமாகும்.

இதுகாறும் கூறியவாற்றால் இறைவன் இன்பத்தைக் கொடுக்க, ஆன்மா அதனைத் துய்ப்பதோடு அமைந்து கிடக்க வேண்டியதான ஒரு நிலை மலம் நித்தியப் பொரு ளாக இருப்பதால் தான் நேரிடுகிறது என்பது நன்கு விளங்கும். பெறுவானும் கொடுப்பானுமாய் இருக்கின்ற இந்த நிலையைச் சமமற்ற நிலை என்றோ, அடிமை நிலை என்றே கூறலாம். இந்த நிலை விளைவதற்கு மலம் நித்தி யப் பொருளாக இருப்பதே காரண மாதலால், " இத்தை விளைவித்தல் மலம் " - " இந்த நிலையினை விளைவித்தல் மலம்'' என ஆசிரியர் கூறிப்பாசம் நித்தியம் என்பதை நிலை நாட்டுகிறார் என்று சொல்லலாமா? என நினைக்கின் றோம். ஆனால் இவ்வாறு கூறுவதே சரி என நிலைநாட்ட நாம் விரும்பவில்லை. அறிஞர்கள் தம் சிந்தனைக்கு இதனையும் எடுத்துக் கொண்டு ஆராயலாம் என எண்ணியே இங்கே குறிப்பிடுகின்றோம். 

முத்தி நிலையில் ஆன்மா உலகத்தை அறியாதவாறு மலம் மறைக்கிறது; ஏனையவற்றை அறிய வொட்டாமல் மலம் மறைப்பதால், ஆன்மா சிவம் ஒன்றையே அறிந்து, சிவானுபவத்தை நன்கு அனுபவிக்க முடிகிறது'' என்று கூறினால், முத்திநிலையில் மலத்தொடக்கு உண்டெனக் கொள்ள வேண்டியது வரும் என மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே இங்ஙனம் கூறாமல் இதனையே சிறிது மாற்றி, 'ஆன்மா முத்தி நிலையில் ஏனையவற்றை அறிய முயன்றால், நித்யப் பொருளாக இருக்கும் மலத்தால் தொடக்குண்ண நேரிடும். இதனால் அஃது ஏனையவற்றை அறிதல் முத்திப் பெரும் பயனுக்கு இடை யூறாகும். ஆகவே அஃது வேறொன்றையும் அறிய முயலாமல், சிவத்தையே நோக்கி அமைந்து கிடக்க வேண்டியதான ஒரு நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் அதற்குத் தாழ்வொன்றும் இல்லை. ஏனெனில் சிவானுபவத்தை அது நன்கு நுகர முடிகிறது; இதனினும் மிக்க பேறு வேறு இல்லை'' எனக் கூறல் வேண்டும். சிவஞான சுவாமிகள் சிவஞான பாடியத்தில் எழுதியிருக்கும் உரைக்கு இவ் வாறு ஏற்ற பெற்றி அமைதி காண்பதே சிறப்பு. சிவ ஞான பாடியத்தில் சிவசமவாத மறுப்பில் முத்தியிலும் ஆன்மா அடிமையே அன்றிச் சிவசமமாகி ஐந்தொழில் ஆற்ற முடியாது என்பதை நிலைநாட்டப் பல காரணங் களையும் கூறிச் செல்லும் இடத்திலேயே சிவஞான சுவாமிகள் இதனை எழுதியிருக்கிறார். "மலம் முத்தி நிலையில் ஏனையவற்றை அறிய வொட்டாமல் மறைந்து நிற்கிறது'' என மலத்தின் மீது ஏற்றிக் கூறாமல், "தன்னால் அறியற் பாலது சிவம் ஒன்றே என்பதும் உணராது....... அதுவது வாய் நின்று அனுபவிக்கும் ஆன்மா ஏனையவற்றையும் அறிவுழிச் சிவானுப விளைவிற் குறைபடுமாகலின் ஏனையவற்றை அறிதல் முத்திப் பெரும்பயனுக்கு இடையூறு என்பதும், ஏனையவற்றை அறியாமையே முத்திப் பெரும் பயனுக்குச் சிறந்த காரணம் என்பதும் உணராது. இக்கருத்தே பற்றியன்றே “ இன்பம் கொடுத்தல் இறை; இத்தை விளை வித்தல் மலம்'என்று ஓதியதென்பதும் உணராது.........” என ஆன்மாவின் மீது ஏற்றியே கூறுவதால் இங்ஙனம் அமைதி காண்பது தவறாகாதென்றே கருதுகிறோம். இதன்படி ஆன்மா முத்திநிலையில் வேறொன்றை அறிய முயன்றால், வியாபகமாயும் நித்தியமாயும் உள்ள மலத்தால் தாக்குற வேண்டியது வருமாதலால், சிவம் ஒன்றையே அறிந்து அமைந்து கிடக்க வேண்டியதாகிற தென்றும், இதனால் அது சிவானுபவத்தைக் குறைவின்றி நன்கு நுகர முடிவதால், 'இன்பத்தை விளைவித்தல் மலம்'' என உபசாரமாகக் கூறப்பட்டதென்றும் கொள்ள வேண்டியது வரும், "இன்பத்தை விளைவித்தல்' என்பது உபசாரமாக இருப்பினும், முத்திக் காலத்திலும் மலம் நித்தியம் என்பது உண்மையிலேயே நிலைநாட்டப்பட்டு, அதனால் நேரும் உண்மை நிலையும் தெளிவு செய்யப்பட்டுச் செய்யுள் எழுந்த நோக்கத்தை நிறைவு செய்வதாலும் பாசத்தொடக்கு உண்டெனக் கருதுவதற்கு இடமில்லாமற் போவதாலும், இவ்வாறு கூறப்படும் உரையினையும் ஏற்றதோர் அமைவுரை எனக் கருதலாம் என்று நினைக்கின்றோம்.

எங்ஙனம் இருப்பினும் நல்லதோர் உரையைச் சுவாமிகள் அவர்களும், சித்தாந்த அறிஞர்களும் காணவேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இதனை முடிக்கின்றோம்.

அடிக் குறிப்பு: -

(1) பெத்த நிலையில் ஆன்மாவிற்கு மலத்தால் ஏற்பட்ட துன்ப அநுபவம் முத்தியில் அது சிவபோகத்தை மிகுதியும் அநுபவிக்க ஏதுவாக இருப்பதால் "இன்பத்தை விளைவித்தல் மலம்” எனக் கூறப்பட்டதென்றும், இதனால் முத்தியில் மலம் இல்லை எனக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் உரை கூறலாமா? என்று சிந்தித்துப் பார்த்தால் அதில் ஓர் இடர்ப்பாடு இருப்பது புலனாகும். முத்தியில் மலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெத்த நிலையில் மலத்தால் ஏற்பட்ட துன்ப அநுபவம் இன்பத்தை மிகுதிப்படுத்த ஏதுவாகவே இருக்கும்.இதனால் மலம் இல்லை எனக் கொள்ள வேண்டியது எப்படி அவசியம் இல்லையோ, அது போலவே முத்தியில் மலம் இருந்தே தீரவேண்டும் எனக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமற் போகிறது என்பதைக் கூறவேண்டுவதில்லை. எனவே இவ்வுரையைக் கொண்டு முத்தியிலும் மலம் சித்தியம் என்பதை உறுதிப் படுத்த முடியாது. ஆனால் “இத்தை விளைவித்தல் மலம்” என்னும் தொடரோ மலம் முத்திக் காலத்தும் நித்தியம் என்பதை உறுதிப்படுத்த எழுந்ததாகும். ஆகவே முத்திக்காலத்தும் மலம் எவ்வாறு நித்தியம் என்பதைப் புலப்படுத்தும் வகையில் உரை காண்பதே பொருத்தமாகும்.

(2) 'மலம் பற்றுமே என்னும் அச்சத்தால் முத்தர்கள் இறைவனையே பற்றிக் கிடக்கவேண்டியவர்களாகின்றனர் என்பது முத்தர்கள் நிலை நோக்கிக் கூறப்பட்டது அன்று. பெறுதற் கரிய பேரின்பத்தில் திளைக்கும் முத்தர்களிடம் மலம் பற்றிய நினைப்போ, மலத்தால் ஏற்பட்ட துன்ப அநுபவம் பற்றிய நினைப்போ இருக்க முடியாது. பாசத்தின் ஆற்றலையும் நித்தியமாக உள்ள அதன் தன்மையையும் நோக்கி, “முத்தர்களும் இறைவனை அன்றி வேறொன்றை அறியலுறின் மலத்தால் தொடக்குறுவர்'' என்னும் கருத்தை வலியுறுத்தவே இங்ஙனம் கூறப்பட்டதாகும். சீவன் முத்தர் மலம் பற்றுமே என்னும் அச்சத்தால் வழிபாடு செய்வதில்லை; வழிபாடு செய்வது அவர்கள் இயல்பாகும். அவர்கள் வழுக்கி விழுவதும் இல்லை. இங்ஙனம் இருந்தும், "சீவன் முத்தரும் வழிபாடு செய்தல் வேண்டும்; இல்லையேல் மலம் பற்றும்” என விதியாகவும் வைத்துச் சிவ ஞான போதம் 12ம சூத்திரம் 4ம் அதிகரணம் கூறுகின்றது. காரணம் என்ன? 'சீவன் முத்தர் வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை; வழிபாடு செய்வோர் சீவன் முத்த நிலைக்குக் கீழ்ப்பட்டவர்” எனக் கூறுவோர் உண்டு. அவர்க்கு மல ஆற்றலை எடுத்துக் காட்டிச் சீவன் முத்தரும் வழிபாடு செய்ய வேண்டும்; இல்லையேல் தொடக்குறுவர்” என்று விதியாகவும் கூறப்பட்டது என அறிய வேண்டும். இதுபோலவே பரமுத்தரும் இயல்பாகவே வேறொன்றையும் நோக்காராயினும், நோக்குதல் கூடாது; நோக்கின் மலம் பற்றும் " என அவர்க்கும் விதியாக வைத்துக் கூறி, முத்தியில், ''உயிர் சிவசமம்; ஆன்மாவே பிரமம்'' எனக் கூறுவோரை மறுத்து, "முப்பொருளும் எக்காலத் தும் நித்தியம்" என்னும் சைவ சித்தாந்த உண்மையை நிறுவுகிறோம் என அறிதல் வேண்டும்.

சித்தாந்தம் – 1964 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment