Saturday, May 9, 2020



சைவ சித்தாந்தம்

ரெளரவ ஆகம தத்துவபடலத்தின் மொழி பெயர்ப்பாகிய சதாசிவரூபம்

''உயர்மறைபுகழ் சிவன் ஓங்கு சதாசிவன்
      இயலுமகேசனென மூன்றாயவை
      அருவே அருவுரு வுருவாயடைவே
      ஒருதொகை முப்பத்தொன்றாகும்மே.''
      
இச்செய்யுளின் என்னுதலிற்றோவெனின் சிவன் சீவர்களின் மலனோயவுடதபஞ்ச கிருத்தியத்துக்கான, உருவநாமம் முதலிய தத்துவங்கள் நுதலிற்று.

நிட்களம், அருவம், இலயம்; நிட்கள சகளம், அருவுருவம், போகம்; சகளம், உருவம், அதிகாரம், இவை முறையே ஒரு சொற்பன் மொழியாம்.

       நிட்களம்,               ஒன்று.            1
       நிட்களசகளம்,           ஐந்து,             5
       சகளம்,                 இருபத்தைந்து     25
       தத்துவம் ஆகக்கூடிய தொகை,             31
      
இவ்வுலகமனைத்தும், ஒரு காலவெல்லையிலே, தோன்றி நின்று அழியுங்காரிபப்பாட்டினை யுடையனவா யிருத்தலால், இவற்றை இங்கனம் காரியப்படுத்துகின்ற ஒரு பொருள் இவற்றின் வேறாக உண்டென்று அனுமானிக்கப்படும். அப்பொருள் இவ்வுலகம் போலத் தான் முத்தொழிற்படாமையினாலே அராதி நித்தியவஸ்த்துவாயும், எல்லாவுலகையுந் தன்கீழ் வைத்துக்காரியப்படுத்துதலினாலே தானே சர்வகர்த்தாவாகியும், எல்லாவுலகினும் நிறைந்து நின்று காரியப்படுத்துதலினாலே சர்வபரிபூரண முடையதாயும், எல்லாவுயிர்களுக்கும் பந்த நீக்கிப்போக மோகங்களைக் கொடுத்தலினாலே சர்வகாருண்ணிய முடையதாயும், அவ்வவ்வான்மாக்கள் செய்த வினைப் பகுதிகளையுணர்ந்து அவ்வவ்வினைப் போகங்களை அவ்வவ்வர்க்கு அவ்வவ்வக்காலத்து வழுவாது ஊட்டுவித்தலினாலே சர்வ சுதந்திரமுடையதாயும், எல்லாக்காரியங்களையும் ஒருங்கேவைத்துத் தொழிற்படுத்துதலினாலே சர்வசத்தியையுடையதாயும், இன்னும் அளவில்லாத பல மகிமைக்குணங்களுள்ளதாயும் விளங்கும், அந்த மகா உன்னதமுள்ள வஸ்துவே நம்மால் கடவுள் என்று சொல்லப்படுவது. அக்கடவுள் தோற்ற நாசங்களில்லாதவராதலினாலே அவருக்கு ஓர் உருவமிருக்குமென்று சொல்ல இடமில்லை. உருவமில்லாலையினாலே ஒரு பெயருண்டென்னவும் இடமில்லை. உருவும் பெயருமில்லாமையினாலே அவருக்கென ஓர் ஊர் உண்டென்று கூறவுமிடமில்லை. இவை இல்லாமையினாலே அவருக்கென ஒருதொழிலிருக்குமென்று சொல்லவுமிடமில்லை. அவர் அங்ஙனந் தமக்கென ஓர் ஊரும் பேரும் உருவுந் தொழிலும் இல்லாதவராயினும் ஆன்மாக்களிடத்து வைத்த பெருங்கருணையினாலே அவ்வான்மாக்களைப் பந்தித்த பாசத்தையொழித்து உய்வித்தல் ஏதுவாக ஊரும் பேரும் உருவுந் தொழிலும் கொண்டருளுவர். அதனால் அவருடைய நிலை சொரூபமென்றுந் தடத்த மென்றும் இருவேறு வகைப்படுவதாயிற்று.

            சொரூபம்   =     தடத்தம்
      இயற்கை    =     சேற்கை
      அநாதி      =     ஆதி
            மெய்        =     பொய்
நித்தியம்    =     அநித்தியம்
காரணம்     =     காரியம்
சூக்குமம்    =     தூலம்

இவ்வேழும் ஒரு சொற் பன் மொழியாம். யாதினுந் தோய்வின்றி நிருபாதிகமாய்ச் சொயம்பிரகாசமாய் நிற்கும் அவ்வுண்மை நிலையே சொரூபமெனப்படும். உயிர்கள் பொருட்டு ஊரும் பேரும் உருவுந் தொழிலும் கொள்ளும் அந்நிலை தடத்தமெனப்படும். நிருபாதிக வஸ்துவாகிய கடவுள் அங்ஙனங்கொள்ளுமிடத்தும் தம்மில் நீக்கமற நின்ற சாத்தியினிடமாகக் கொள்வரேயன்றி, ஏனையுயிர்த்தொகுதிபோல மாயையிடமாகக் கொள்ளமாட்டார். ஆகலின் அவருடைய உருவம் சிவசத்தி வடிவினதேயாம். கரணங்களும் சிவசத்தி வடிவினதேயாம். புவனமும் அன்னதேயாம். போகமும் அன்னதேயாம்.
      
அவர் தம்முண்மை நிலையிற் சிவமெனப்படுவர். ஆன்மாக்களின் ஆணவமல உபாதியை நோக்கிச்சகியாமையாற் பிறந்த அச்சிவத்தின் இரக்கமே பராசத்தியென்று சொல்லப்படும். அச்சத்தியிலடங்கி அபின்னமாக நிற்கும் அவதரத்தில் அவர் பரன் எனப்படுவர். அப்பராசத்திக்கு ஆன்மாக்களின் ஆணவமலத்தைத் தீர்ப்பதற்கு நம்மையன்றி வேறொருவரு மில்லையென்று நின்ற அவதரம் ஆதிசத்தியெனப்படும். அம்மலத்தை நீக்கும் இச்சையுற்று நின்ற பொழுது இச்சாசத்தி யெனப்படும். அம்மலத்தின்றரத்தையும் பிரார்த்த கன்மத்தின் சுபாவத்தையும் அறிந்து நின்றது ஞானசத்தியெனப்படும். அப்பராசத்தி ஆன்மாவின் சகசமாகிய ஆணவமலத்தை யொழித்தற்கு ஆகந்துகமாகிய பிரார்த்த கன்மமலம், திரோதமலம், சுத்தமாயாமலம், அசுத்தமாயாமலம் என்னும் நாலையுங் கூட்டவேண்டுமென்று நின்ற அவதரம் கிரியா சத்தியெனப்படும். இந்தப்பஞ்சசத்தி மூர்த்திமானான பரனுக்கு அருவமாகிய பரநாதமென்றும் ஆதிசத்திமுதலான நான்கு சத்தியையும் உடையதாய் நின்ற பராசத்திக்கு அருவமாகிய பரவிந்துவென்றும் பெயருண்டாம். இப்பரநாதமும் பரவிந்துவும் ஞானிகளுக்குத் தரிஸனமாம். பராசத்தி ஆன்மாக்களுக்கு ஆகந்துக மலத்தைக் கூட்டுவிக்குந் தரமாக நிற்க வேண்டுமென்று நின்ற அவதரத்திற்றோன்றிய அருவமாகிய சிவத்துக்கு அபரநாதமென்றும் இதற்கு அபின்னமாகிய சத்திக்கு அருவமாகிய அபரவிந்து வென்றும் பெயருண்டாம். இவ்விரண்டும் யோகிகட்குத் தரிசனமாம். இந்த அபாசத்தி ஆன்மாக்களுக்கு ஆணவ மலந்திரப் பிரார்த்த கன்மத்தைக் கொடுக்கவேண்டுமென்று நின்ற அவதரத்தில் தோன்றிய சிவமும் சாத்தியும் அநுக்கிரக கிருத்தியத்தையும் அருவுருவத்தையு முடைய சதாசிவமும் மனோன்மணியும் எனப்படும் அச்சத்தி பிராரத்த கன்மத்தை ஒவ்வொன்றாக மறைத்து மறைத்துக்கொடுக்க வேண்டுமென்று நின்ற அவதரத்திற்றோன்றியது திரோத கிருத்தியத்தையும் உருவத்தையுமுடைய மகேசுரனும் மகேசுரிசத்தியுமாம். அச்சத்தி உயிர்கட்கு இளைப்பொழித்தலே துவாகப் பிராரத்த கன்மத்தை மாற்றி மாற்றிக்கொடுக்க வேண்டுமென்று நின்ற அவதரத்திற்றோன்றியது சங்காரத்தொழிலையும் உருவத்தையுமுடைய உருத்திரனும் உமையுமாம். ஆன்மாவினறிவிலே இந்தப்பிராரத்த கன்மம் அறியப்படுந்தொழில் நிகழ்வதற்கு அந்தக்கரணத்தை நிறுத்தவேண்டுமென்று நின்ற அவதரத்திற்றோன்றியது திதி கிருத்தியத்தையும் உருவத்தையுமுடைய விஷ்ணுவும் இலக்குமியுமாம். பிராரத்த கன்மத்தை அறியுந்தொழிலை நிறுத்துதற்குத் தாரகமாக அறிகருவிகளாகிய இந்திரியங்களைக் கொடுக்கவேண்டுமென்று நின்ற அவதரத்திற்றோன்றியது சிருட்டித்தொழிலையும் உருவத்தையுமுடைய பிரமாவும் சரஸ்வதியுமாம். இவ்வைந்தும் தேவர்க்குத் தரிசனமாம்.
        
இவையே அவருடைய சொரூப தடத்த நிலையெனப்படும். தடத்த நிலையனைத்தும் சத்தி காரியமாதல் மேல்வகுத்துக்காட்டிய வாற்றாலுணர்ந்து கொள்க.
        
தடத்த நிலையில் தென்மொழியில் கடவுள் என்னும் தொழிற் பெயர் பகுபதத்தின் முதற்கண் நின்ற கட என்னும் பகுதிக்கும் வடமொழியில், பிரம்மம் என்னும் பதத்தின் முதற்கண் நின்ற பிருக, பிரஹ என்னும் பகுதிக்கும் ஓங்கி இருத்தலெனப் பொருளுண்மையில் அவ்விருமொழிகளும் ஒரு பொருள் மேலன (அதாவது) கடவுள் என்பது கட - பகுதி, வுள் - தொழிற்பெயர் விகுதி -
எல்லாவற்றையுங் கடந்தவன் என பொருளை நன்கறிவுறுத்துகின்றது.
      
இனி உயிர்கள் பொருட்டு அவராலே செய்யப்படுகின்ற கிருத்தியங்கள் சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அதுக்கிரகம் என ஐந்து வகைப்படும். அவற்றுள் அறிகருவிகளாகிய இந்திரியங்களைக் கொடுத்தலே சிருட்டி. அறிகருவிக்காதியாகிய மனமுதலிய கரணங்களை நிலை நிறுத்தலே திதி. அறிகருவியை நீக்குதலே சங்காரம். அறிதற்றொழில் நிகழுமிடத்து இன்ப துன்பங்களைக் கொடுத்து அதில் அறியாமையைச் செய்தலே திரோபவம். அறிதற்றொழில் நிகழ்வித்தலே அநுக்கிரகம்.
      
கடவுள் இங்ஙனம் ஐந்தொழிலியற்றல் யாதுக்கெனின், உயிர்களைப்பந்தித்த ஆணவமலம் ஒழிதற்பொருட்டாம். மலநோயைத் தீர்க்குங்கடவுள் ஒரு வைத்தியராவர். மலபந்தத்தால் வருந்தும் உயிர்கள் பிணியாளராவர். ஆணவ மலபந்தமே பிணியாகும். அப்பிணிக்கு மருந்தாயுள்ளது பிரார்த்த கன்மம். அம்மருந்தை வைத்துண்ணும் பாத்திரமாயுள்ளது மாயையினாலாகிய சரீரம். அம்மருந்தையுண்பித்துப் பிணியை நீக்கும் வைத்தியமே பஞ்சகிருத்தியமா மென்றறிக.
      
அவர் இங்ஙனம் செய்யும் ஐந்தொழினாலே மலவலி குன்றி மடங்கும். அதனாற் சிவபுண்ணியமேறும். அதனால் இருவினையொப்பு மலபரிபாகங்களுளவாம். அதனாற் சத்திநிபாதம் பிறக்கும். அதற்கேற்பக் கடவுள் ஆசாரிய மூர்த்தியா யெழுந்தருளிச் சமயவிசேட நிருவாண தீக்ஷைகளைச் செய்து சரியை, கிரியை,
யோகம் ஞானங்களில் நிறுத்தி, சாலோக்கிய, சாமீப்பிய, சாரூப்பிய, சாயுச்சியங்களாகிய அபரபரமுத்திகளைத்தந்து, மலநீக்கமும் சிவப்பேறும் உதவிச் சுத்தாத்துவித முத்திநிலையில் இருத்தி என்றும் அழியாப் பேரின்பவாழ்வாகிய பரமானந்தவைபவத்தை ஆன்மாக்களுக்கு அளித்தருளுவர்.
      
ஆதலால் இத்துணைப்பெருங் கருணாசமுத்திரமாகிய கடவுளை நாம் என்றென்றைக்கும் மறவாது மெய்யன்போடு வழிபட்டு அவர் அருளிச்செய்த வேதசிவாகமவழியொழுகி, அவருடைய திருவருளைப்பெற்று, அவராலே தரப்படுகின்ற திருவடிப்பெரும் பேறாகிய முத்திநிலையை எய்துதல் அறிவுடைமையும் ஆவசியமுமாம்.

சுபம்.
                           சு. நடேச தேசிகன்.
                               தமிழ்ப்பண்டிதர்,
                           கவர்ன்மெண்டு ஸ்கூல், நிரவி.

சித்தாந்தம் – 1914 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment