Saturday, May 9, 2020



சைவத்தின் தொன்மையும் சமரசமும்
[வித்துவான் மா. நடராசன், M. A., B. O. L., விரிவுரையாளம்,
பழனியாண்டவர் கீழ்த்திசைப் பண்பாட்டுக் கல்லூரி, பழனி.]

உலகில் வாழும் உயிரினங்கள் பல. அவையாவும் இன்பத்தையே விழைகின்றன. மக்களல்லாத உயிரினங்கள் உண்பதும் இனத்தைப் பெருக்குவதுமே தொழிலாகக் கொண்டு தாம் பெறும் இன்பத்தை வளர்க்கவும், ஏனைய துன்பத்தைத் தவிர்க்கவும் வழியறியாது ஒழிகின்றன. ஆனால் மக்கள் இனம் மட்டும் தனது பகுத்தறிவு கொண்டு தான் பெறும் இன்பத்தை வளர்க்கவும் ஏனைய துன்பத்தைத் தவிர்க்கவும் வழி வகுத்துக் கொள்ளுகிறது. அவ்வாறு வகுத்துக் கொள்ளும் வழி அல்லது நெறியாது? அதுவே அறநெறி அல்லது சமய நெறியாகும். சமயம் எனும் சொல்லுக்குப் பலர் பலபொருள்கள் கொள்ளினும், இன்ப நெறியாய இறைவனையடைய உயிர்கள் செல்லும் அற நெறியே 'சமயம்' என்பது இவண் முற்றும் பொருந்தும். வள்ளுவரும் 'அறத்தான் வருவதே இன்பம்' என்றும்,

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு' என்றும் கூறிப் போந்தார்.

எனவே இறையருளைப் பெறுதற்கு ஏதுவாய சமயத் தைத் துன்பநிலைக்குப் பயன் படுத்துவது சமயம் ஆகாது. சமயத்தின் பெயரால் போரிடுவோர் அறவழி நிற்போரல்லர். பிற உயிர்களிடத்துப் பற்றுக் கோடும் பிணிப்பும் கொண்டு ஒழுகுவதே சமயமாகும். இவ்வுண்மையைப் பின்வரும் செய்யுள் நமக்கு அறிவுறுத்துகின்றது

..... .... .......... ......... ....... ..... யாம் இரப்ப வை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும் அறனும், மூன்றும் 
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!
என்னும் செய்யுட் கருத்தைக் காண்க.              [பரி - 5 : 78 – 81]

மக்கட்குச் சமயம் இன்றியமையாததெனில், எச்சமயத்தைக்  கைக்கொள்வதென்ற வினா எழும். உலகத்தில் பல்வேறு சமயங்கள் இருக்கின்றனவே, எச்சமயத்தை விடுப்பது எச்சமயத்தை ஏற்பது என்ற ஐயப்பாடுகள் வருவது இயல்பே. உலகில் உள்ள எல்லாச் சமயங்களும் ஒரு கடவுளையே பல பெயர்களால் புகழ்கின்றன. சமயங்களுள் ஏற்றத் தாழ்வு கருதுதல் ஏற்புடைத் தன்று. அதனாலன்றோ மணிவாசகப் பெருமான்,


'தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்றும் திருமூலர்,

''ஒன்றது பேரூர் வழியாறு அதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே

என்றும் கூறிப்போந்தனர். இக்கருத்தோடு பலசமயங்களையும் உற்றுணர்ந்தால் சமயத்தில் சமரச மணம் கமழுவதைக் காணலாம். சமரச நோக்கில்லாத சமயம், சமயமா காது, சமரச நோக்குடைய சமயம் சாதி, மத, நாடு, இன மொழி வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஒரு குலம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்னும் திருமூலாது திருமந்திர உரையும் காண்க.

இன்று நாம் பங்கு கொண்டுள்ள சைவ சமயம் 'சமரசத்திற்கு எத்துணை அளவு பொருத்தமாக உள்ளது என்பதை நோக்குதல் இன்றியமையாததாகிறது. சைவசமயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்டது என்று கூறுவது மிகையாகாது. மக்கள் தங்கள் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதைப் பேராற்றல் 'என்றும்' இறை' என்றும் 'செம்பொருள்' என்றும் போற்றுவாராயினர். செம்பொருள் காட்சியினையே 'சிவம்' என்று அழைக்கலாயினர். 'சிவம்' என்ற சொல்லுக்கு 'இருளைப் போக்கி அருளைத் தருவது' என்பது பொருளாகும். காலப் போக்கில் சிவம் என்ற சொல்லின் ஈறாகிய 'அம்' விகுதி மறைந்து 'அன்' விகுதி ஏற்று 'சிவன்' எனவழங்கலாயிற்று. 'சிவன்' என்னும் சொல் 'சிவந்தவன்' செங்கதிர் உடையவன் என்று பொருள் படநின்றது. இத்தகைய 'சிவன்' என்ற சொல்லும், ‘சிவப்பயன்' என்பது போன்ற சொற்களும் நமது நாட்டினும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வழங்கி வரலா யிற்று என்பதைக் கீழ்க் காணும் சான்றுகளால் அறியலாம்.

(பின்வரும் சான்றுகள் திரு. ந. சி. கந்தையா பிள்ளை அவர் களது,'சிவன்'என்னும் நூலிலிருந்து எடுக்கப் பெற்றன.)

1. 'பிலிப்பைன் தீவுகளில் சிலவற்றில் இன்றும் மக்கள் சிவனைச் சிவப்பயன் என வழங்குவர்

2. "எகிப்திலே இலிபிய வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. அமன், ரா, ஓசிறிஸ் என்னும் பெயர்கள் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பன. இக்கடவுளுக்கு வாகனம் இடபம். யூபிதர் என் னும் பெயரும் ஞாயிற்றுக்கடவுளைக் குறிப்பதாகும். கிரேக்கரது சியஸ் என்னும் கடவுட் பெயரும் 'சிவன் 'என்பதன் திரிபே. சிவன் பாலை-நிலப்பசுந்தரையில் இன்றும் அமன்' கடவுளின் கோயில்களில் வழிபாடுகள் காணப்படுகின்றன"

3. பாபிலோனரின் கடவுளுக்கு எல்சடை என்பதும் மற்றொரு பெயர். எல்சடை என்பது சிவபிரானைக் குறிக்க வழங்கும் சடையன் என்னும் பெயரை ஒத்திருக்கிறது.

4. வட அமெரிக்காவிலே கொலரடோ என்னும் ஓர் ஆறு உள்ளது. இவ்வாறு நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் பக்கத்தே மேற்பாகம் தட்டையாகக் காணப்படும் குன்றின் உச்சி சிவன் ஆலயம் என நீண்டகாலம் ஆங்குள்ள மக்கள் 'ஞாபகத்திலிருந்து வந்தது. இவ்விடத்தை ஒருவரும் ஏறிக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. 1937ஆம் ஆண்டு அமெரிக்கப் பழம் பொருள் ஆராய்ச்சியாளர் இவ்விடத்தைக் கண்டு பிடித்துத் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இச்சிவன் ஆலயத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டதென்று சிலரும்; இஃது இன்னும் மிகப் பழமை உடையது என்று வேறு சிலரும் தமது கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். இதனால் வட அமெரிக்காவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் சிவன் ஆலயமும், சிவன் வழி பாடும் இருந்தன வென்று நாம் துணிந்து கூறலாம்.

5. கிரேத்தாவில் சிவலிங்க வழிபாடு, சங்கு வாத்தியம் முதலியனவும் காணப்பட்டன.

6. பின்லாந்தில் வாழும் மக்கள் துரானிய வகுப்பைச் சேர்ந்தோர் - இம் மக்களின் காத்தற் கடவுள் சிவன்.

7. விவிலிய மறையின் பழைய ஏற்பாடு சிவன் என்னும் கடவுளைப் பற்றிக் கூறுகின்றது. ஞாயிற்றைக் குறிக்க ஆங்கில மொழியில் வழங்கும் 'சன்' என்னும் சொல் 'சிவன்' என்பதன் திரிபு எனக்கருத இடமுண்டு.

8.அக்கேடிய மக்களின் ஏழு முக்கிய விண்மீன்களில் மூன்றாவது 'சிவன்' எனப்பட்டது.

9. யப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்றாகிய 'சிவோ' என்னும் பெயர் 'சிவன்' என்பதன் திரிபு ஆகலாம் என நாம் உய்த்துணரலாகும்.

10. இலிங்க வணக்கம் ஆசியாவில் தோன்றி அயல்நாடுகளில் பரவிற்று எனச் சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பேக்கஸ், தயோனிசன் வழிபாடுகள் தொடர்பில் சிவலிங்கங்கள் வழிபடப்பட்டன. கிரீஸில் பேக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிவலம் செய்யப்பட்டது. இலிங்கம் எனும் சொல் 'இலங்கு' என்னும் அடியாகப் பிறந்தது.

இம்முறையில் உலகெங்கும் போற்றப்படும் 'சிவன்' என்னும் செம்பொருளைச் செம்மேனி எம்மா'னாகத் தமிழகம் போற்றுகிறது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் - பிறவாயாக்கைப் பெரியோன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.' "சிவ' வழிபாட்டு முறையினைச் சைவம் என்றும், சிவனை வழிபடும் மக்களைச் சைவர் என்றும் மக்கள் கூறுவாராயினர். இத்தகைய வழிபாட்டைப் பலரும் பலவழிகளில் கைக்கொண்டு ஒழுகலானார்கள். எவர் எம்முறையில் வழி பட்டாலும் இறைவன் ஒருவனே. இறைவனை வழிபட 'அன்பு நெறி' ஒன்றே போதும். அதனாலன்றோ திருமூலரும் 'அன்பே சிவம்' என்று கூறிப்போந்துள்ளார். முதன் முதலாகத் தோன்றியது சைவம். சைவமானது, பிற்காலத்தில் தோன்றிய சமணம், பௌத்தம் முதலிய சமயங்களோடு உறவு கொண்டு வடமொழிக் கலைகளோடு அளவளாவி ஏனைய சமயங்களோடு கலந்து உலகில் அருள் நெறியாக வளர்ந்து வருகிறது. நம் நாட்டு மொழியாகிய தமிழ் மொழி தனித்து நின்று இயங்குவதோடு ஏனைய மொழிகளோடு உறவு கொண்டு விளங்குதல் போன்று, முழுமுதற் சமயமாகிய சைவசமயமும் தனித்தியங்குவதோடு எல்லாச்சமயங்களிலும் ஊடுருவித் திகழ்கின்றது. காரணம் எல்லோருக்கும் இறைவன் ஒருவனே ஆதலின். இக்கருத்தினை,

''பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினு மோர்
எல்லையறு பரம் பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்

என்னும் அடிகளால் சுந்தரம் பிள்ளை அவர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றார். ஆதலால் எல்லாச் சமயங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு மிளிர்கின்றது சைவ சமயம் என்று கூறலாம். சைவசமயத்தில் வேற்றுமை உணர்வு காணமுடியாது. சைவ சமயவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் பால் வேற்றுமை உணர்வு இருக்கலாம். ஆனால் சைவ சமயக் கொள்கையில் வேற்றுமை உணர்வைக் காண இயலாது. இவ்வுண்மையை,

'ஓது சமயங்கள் பொருளுணரும் நூல்கள்
ஒன்றோடொன்று ஒவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாது சமயம் பொருள் நூல் யா திங்கென்னில்
இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்கதின்றி
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நிற்பது யாதொரு சமயம் அதுசமயம் பொருணூல்
ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே
அடங்கி யிடும் அவையிரண்டும் அரனடிக் கீழ் அடங்கும்
எனவரும் அருணந்தி சிவாச்சாரியார் திருவாக்கானுணர்க.
இவ்வாற்றால் சைவ சமயத்தின் நுண்மை சமரசக் கொள்கையாகும். சமரசக் கொள்கை வளரத் தன் முனைப்பு அகலவேண்டும். எங்கு தன் முனைப்பு இல்லையோ அங்கு சைவ சமயம் பொலிவுறும். எந்நாட்டினராயினும் எம்மொழியினராயினும் எவ்வினத்தவராயினும் ஆகுக. ஆங்காங்கே தன்முனைப்பு இல்லையேல் சைவமணம் கமழுவதைக் காணலாம். சேக்கிழார் பெருமான்,


'எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருள்

என்று கூறியுள்ளதும் இங்கு உன்னற்பாலது.

இம்முறையில் இறைவனை வழிபடுவதே ஏற்புடைத்தாகும். இறைவன் எங்கும் நீக்கமற நின்று நிலவுகிறான் என்பதைப் பலர் பல துறைகளில் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒவ்வொருவரும் தன் முனைப்பு அற்றுக் காணும் பொருள்களிலெல்லாம் இறைமையைக் காணவேண்டும் என் பதே அவர்களது கருத்தாகும். இறைவன் எங்கும் நிறைந் துள்ளான் என்ற கொள்கையைச் சமய குரவர்களில் ஒருவ ராகிய திருநாவுக்கரசர் மனமுருகிப் பாடியுள்ள

இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாயெறியுங் காற்றுமாகி
அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாசமாயட்ட மூர்த்தி ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறவுருவுந் தம்முருவுந் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே',
என்ற பாடலாலும், மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய

'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே'
என்னும் அருள்வாக்காலும் அறியலாம்.

சைவ சமயக்கொள்கைக்கும், தமிழ்நாட்டு வைணவக் கொள்கைக்கும் அடிப்படைக் கருத்துக்கள் ஒருதன்மையவே என்பதை ஆழ்வார்கள் பாசுரங்களால் நன்கு அறியலாம். இறைவனைப்பற்றி நம்மாழ்வார் பாடிய பாடல்கள் பின் வருமாறு:

'யாவையும் எவருந்தானா யவரவர் சமயந்தொறும்
தோய்விலன் புலனைந்துக்கும் சொலப்படா னுணர்வின் மூர்த்தி
ஆவிசேர் உயிரினுள்ளா லாதுமோர் பற்றிலாத
பாவனை யதனைக்கூடி லவனையுங் கூடலாமே'

'ஒளிமணி வண்ணனென்கோ? வொருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையனென்கோ? நான்முகக் கடவுளென்கோ?
அளிமகிழ்ந்துலக மெல்லாம் படைத்தவை யேத்தநின்ற
களிமலர்த் துளவனெம்மான் கண்ணனை மாயனையே!.
இப்பாடல்களாலும் இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதும் வேறு பாடில்லாதான் என்பதும் நன்கு புலனாகின்றன அன்றோ?

இங்ஙனம் எங்கும் கலந்து யாவற்றிலும் நிறைந்திருக்கின்ற இறைமையாகிய செம்பொருளை வழிபடுதல் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். அத்தகைய இறைவனை வழிபடும் முறையாது? ஏனைய உயிரினங்களில் இறைவன் நிறைந்திருத்தலின் உயிரினங்களைப் போற்றுதலே இறைவனை வழிபடுவதாகும். உயிரினங்களைப் போற்றுதல் வேண்டும் என்பது பல்வேறுபட்ட சமயச் சான்றோரின் கொள்கையுமாகும். சைவம், சமணம், பௌத்தம், வைணவம் ஆகிய சமயத்துறைத் தலைவர்களும் பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும் என்றும், அதுவே இறைவனுக்கு விருப்பமாகுமென்றும் கூறிப்போந்துள்ளார்கள். அன்னார் பாடியருளிய பின்வரும் பாடல்கள் அவ்வுண்மையை மெய்ப் பிக்கின்றன.

'நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே                        (அப்பர்)

தன்னுயிர் தான் பரிந் தோம்பு மாறுபோன்
மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமேல்
இன்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப் பிறந்துயர்ந்து போகுமே.               (சிந்தாமணி)

'வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்
திருந்து முகங் காட்டுமென் தெய்வக் கடிஞை             (மணிமேகலை)

வன்பெருவா னகமுய்ய வமரருய்ய
விண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்யத்
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்
சுகம் வளர அகமகிழும் தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளிகொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்துடனே யென்றுகொலோ இருக்கு நாளே           (குலசேகரர்)

உன்னைப் போலப் பிறரை நேசி - (கிருஸ்து)

'உலகம் வாழவேண்டும் - உற்றாரும் மற்றாரும் வாழவேண்டும் அவர்கள் இடையில் தானும் வாழவேண்டும், (குர் - ஆன்)


எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன் றறியேன் பராபரமே.                          (தாயுமானவர்)

'அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்'     (இராமலிங்கர்)

இவ்விதமாகச் சமயப் பெரியார்கள் யாவரும் அன்பு நெறியையே கைக்கொண்டொழுகி அழியாப் பேரின்ப நிலை எய்தியுள்ளார்கள். அக்தகைய நன்னிலையுறுதலே ஒவ்வொரு உயிரினத்தின் தலையாய கடமையாகும். அதற்கு வழி அன்பு நெறியைக் கைக்கொள்வதேயாம். சமயநெறி முழுதும் அன்பு நெறியாதல் வேண்டும். சமயத்தின் அடிப்படை யிலேதான் அன்புநெறி வளர்தல் முடியும். அன்பு நெறி ஓங்க வேற்றுமை உணர்வு நீங்க வேண்டும். உன்னத நிலை யில் ஒருகாலத்திலிருந்த சைவசமயம் முழுதும் மாறியுள்ள மைக்குக் காரணம் சமயத்துறையில் ஏற்றத்தாழ்வு உண்டானதேயாகும். சமயத்தில் ஏற்றத்தாழ்வு உணர்வு கொள்ளுதல் சைவசமயக் கொள்கைக்கு முற்றிலும் மாறு பாடுடையது. பிறப்பில் ஏற்றத்தாழ்வு எந்தக் காலத்திலும் எந்த அளவிலும் இருந்த தில்லை. இஃது தெய்வப்புலவர் திருவாக்காகிய

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்னும் திருக்குறட்பாவிலும் அறிக. வரலாற்றுக் காலத்துக்கு முன்னோ வேதகாலத்திலோ, பழைய உபநிடதங்களிலோ இதிகாசங்களிலோ ஏற்றத்தாழ்வு இருந்ததாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்தில் சாதியில் ஏற்றத்தாழ்வு காணப்படவில்லை. சைவ வைணவப் பெரியார்களும் சாதியில் ஏற்றத்தாழ்வு கூறியுள்ளதாக இல்லை. ஆனால். எப்படியோ சாதியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு நாட்டில் நுழைந்து சமயத்தைக் குலைக்க ஆரம்பித்து விட்டது. அதனை ஆதரிப்போரும் மலிந்து விட்டனர். இவ்வாறு இன்னும் தொடர்ந்து நடைபெறுமானால் சமயத்தின் புனிதத் தன்மையே மறைந்துவிடும். உயிரினங்களும் இன்பநிலை எய்த வாய்ப்பில்லாது போய்விடும். இதனை உணர்ந்த சமயப் பெரியோர்கள் இடையில் நுழைந்த சாதியின் ஏற்றத் தாழ்வை ஒழிக்கப் பெரிதும் முயன்றுள்ளார்கள் என்பதைப் பின்வரும் பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

'சங்க நிதி பதுமநிதி இரண்டுந்தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.               (அப்பர்)
'பாதியா யழுகியகால் கையரேனும்
பழிதொழிலும் இழி நிலையும்படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்ப ராகில்
அவரன்றோ யாம்வணங்கும் அடிகளாவார்?
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதினான் முகன்பணியப் பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே
(திருவரங்கக் கலம்பகம்) 

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந்
தம்முயிர்போல் எண்ணியுள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தெரிந்தேன்
அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்ததாலோ '                     (இராமலிங்கர்)

இதுகாறும் கூறியவாற்றால் உயிரினங்கள் இன்பவாழ்வு எய்தச் சமயநெறி இன்றியமையாததென்றும், சமயங்கள் யாவும்ஒரு கடவுளையே பல வழிகளில் போற்றுகின்றன என்றும், தொன்மை மிக்க தமிழர்கள் சிவமாகிய சைவநெறியைக் கைக்கொண்டு பெருஞ் சிறப்புற்று வந்தனர் என்றும், இடை யிலே சிலர் சாதி ஏற்றத்தாழ்விற்கு அடிமைப்பட்டு உண்மை நிலையிழந்து இடருற்றுச் சாதிச்சகதியில் உழன்று வருகின்றனரென்றும், அதனின்றும் நீங்கி உய்யச் சமரச நோக்கம் வேண்டுமென்றும், அதற்கு ஒவ்வொருவரும் முயலுதல் வேண்டுமென்றும், அதற்கு அன்பு நெறியே சாலச் சிறந்ததென்றும் கண்டோம். ஆதலின் எல்லோரும் இன்புற்று வாழ அன்பு நெறியாம் சைவநெறியைக் கைக்கொண்டு ஒழுகுவோமாக.

'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே.’              

திருச்சிற்றம்பலம்.

சித்தாந்தம் – 1962 ௵ - செப்டம்பர் ௴





No comments:

Post a Comment