Saturday, May 9, 2020



சைவ சித்தாந்த மகா சமாஜம்
56 - ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனி
சைவ மங்கையர் மாநாட்டுத் திறப்புரை

[க. ர, ஆதிலட்சுமி அம்மையார்]
(31-12-1961)

சைவமணம் பரப்பும் தகைசான்ற மெய்யன்பர்களே!
உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.

பழந்தமிழ்ப் பெருமை வாய்ந்த திருவாவினன் குடியாம் இப்பழனியம் பதியிலே, சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாஜம் முதல் தடவையாகக் கூடி, அதன் 56 - ஆம் ஆண்டு விழாவினையும், மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது மிகவும் பொருத்தமானதே. இந்த 56 ஆண்டுகளும் சமாஜம் உள்நாடு வெளிநாடுகட்குச் சென்று, சமயத்தைப் பரப்பி வருவதோடு, சைவத் திருமுறைகள். சாத்திரங்கள், சங்க இலக்கியங்கள், திருப்புகழ் முதலிய நூல்களை அச்சிட்டு அடக்க விலைக்கு அன்பர்கள் இல்லங்கள் தோறும் புகுத்தி, உயிர்க்குறுதி பயக்கும் அருளைப் பரப்பிவருவதைப் பொது வாகத் தமிழுலகும் சிறப்பாகச் சைவவுலகும் நன்கறியும். சமாஜம் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியாரடிகளார் மடத்தில் தோன்றிச் சமயப் பெரியார்களால் சில ஆண்டுகள் நடத்தி வந்த பின்னர், மங்கையர்க்கும் இளைஞர்க்கும் பங்கு தந்து, மூன்று அங்கமாகப் பல ஆண்டுகளாய் நடந்து வருகின்றது. இதிற் பல ஆண்டுகள் எங்கள் குடும்பத்திற்கும் தொடர்பு உண்டு. இவ்வாண்டும் சமாஜத்தார் மங்கையர் மாநாட்டைத் தொடங்கிவைக்கும் பணியை எனக்களித்த மைக்காக, அவர்கட்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

பெண்மை: "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?'' என்ற வினாவினால், பெண்மை நலம் அனைத்தையும் காட்டாமல் காட்டினார் வள்ளுவப் பெருந்தகையார். அண்ணல் காந்தியடிகளும், திரு. வி. க. போன்ற தமிழ்ப்பெரியார்களும், பெண்ணின் பெருமையைப் போற்றினர். புரட்சிக் கவிஞர் பாரதியார் புதுமைப் பெண்ணைக் காவியத்தில் படைத்தார். அவர் தம் கனவும் நனவாகி நாட்டில் பெண்கள் பட்டங்கள் பெறுவதும், சட்டங்கள் செய்வதும், ஆண்களோடு சரிநிகர் சமானமாக வாழ்வதும் ஆன நிலை ஏற்பட்டுச் சங்ககாலப் பெண்டிரே போன்று விளங்குகின்றனர்.

சமயமும்-பெண்களும்: பெண்கள் கல்வித்துறையில் வேகமாய் முன்னேறினாலும், சமயப் பணியில் தங்கள் பங்கைப் பலர் மறந்திருப்பதாகவே எனது தாழ்மையான கருத்து. கலையறிவோடு, சமயவுணர்வும் ஒன்றினால் தான் பெண்மை நலம் சிறந்து, மனிதசமுதாயமே ஈடேறவகையுண்டு.

பிற சமயத்தார்: வாலறிவன் நற்றாள் உணர்தலே கற்றதனாலாகிய பயன் என்று நமது தமிழ்மறை கூறுகின்றது. கிறிஸ்தவப் பெரியார்கள் இதைப் பெரிதும் பயன் படுத்துகின்றனர். தமது அன்றாட வாழ்க்கையில் கூட்டுமுறை யிலோ தனித்தோ, இறைவணக்கம் செய்த பின்னரே பணி யாற்றத் தொடங்குகின்றனர் மருத்துவமணியென விளங்கிய "டாக்டர் ஸ்க்கட்டர் அம்மையார். ஒவ்வொரு நாளும் அறுவைச் சிகிச்சை தொடங்கு முன்னர் முழந்தாளிட்டு இறைவனை வணங்கிய பின்னரே, அறுவை நிலையத்திற்குள் செல்வதைக் கண்டுள்ளேன். டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையார் தம் வாழ்நாள் முழுவதும் சமரச சமயமாகிய "பிரம்ம ஞான சமாஜத்தை நம் நாட்டில் தொடங்கிப் பிற நாடுகளிலும் பரவச் செய்யத், தன்னை அர்ப்பணித் தார்கள்.

சைவ மங்கையர்: நம் சமயத் தவமணிகளும் பெண்ணினத்துக் கெல்லாம் எடுத்துக் காட்டாய் - நாம் வணங்கும் தெய்வமாய் விளங்குகின்றனர். பிறந்து மொழி பயிலத் தொடங்கிய போதே இறைவன் காதலில் சிறந்து விளங்கியவர் காரைக்காலம்மையார். திருமணம் பூண்ட கணவன் கருத்து மாறுபட்டதுமே, அவருக்கென்று தாங்கியிருந்த புறஅழகை உதறித்தள்ளி அகத்தே ஊறிக்கிடந்த இறையுணர்வில் ஒன்றிய பின் தம் தெள்ளிய அறவுரைகளைத் தீந்தமிழில் "அற்புதத் திருவந்தாதி' யாகப் பாடினார்கள்.

மணிமுடிச் சோழன் மகள் மானியார், பாண்டிமாதேவியான பின், அன்பு நெறியாம் சிவநெறி துறந்து அவநெறிப்பட்டு நிலைகுலைந்த மன்னனையும் மக்களையும், பக்குவமாய் மீட்டுப் பாண்டி நாட்டில் மீண்டும் சைவ ஒளி பரவச் செய்தார்கள். மெய்யுணர்வு பெற்ற இவ்வம்மையாரை ஞான சம்பந்தப் பெருமான் தன் பதிகத்தில் ''மங்கையர்க்கு அரசி" எனப் போற்றினார்.

பெண்ணியல்புக் கேற்ப அன்பையும், தன்னுரிமைக் கடமையையும் தன் வாழ்வின் பெரும் பகுதியிலே தியாகம் செய்த பெருமை, நம் திலகவதியாருக்கு வாய்த்தது. அவர்களது மகத்தான தியாகமும் தொண்டுள்ளமுமே நமக்கு நாவுக்கரசரெனும் நல் முத்தை ஈந்தது.

இன்னும் அடியார் பெருமை பேசப்படுகின்ற இடமெல்லாம், அவர் தம் வாழ்க்கைத் துணைவியரது தொண்டும் தியாகமுமே பின்னிக் கிடக்கின்றன. அவ்வணங்கனையாரின் பண்பும் திறமும், மேன்மைகொள் சைவ நீதியை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. இவை யெல்லாம் பெண்ணினங்கள் சிந்திக்க வேண்டியவை.

மங்கையர் மாநாட்டைத் தொடங்குமுன்னர். தலைவியாரைப் பற்றியும் பேச்சாளர்களைக் குறித்தும் சில வார்த்தைகள் கூறக் கடமைப்பட்டுள்ளேன். தலைவியார் திருமதி புஷ்பம் அம்மையார் பண்பட்ட குடியிற்றோன்றிக் கண் போன்று மதிக்கும் கணவனாருடன், கறைக்கண்டன் கழ லடியே கருத்துட்கொண்டு ஆடம்பரமற்ற குடும்பவாழ்க்கை நடத்துபவர்கள். தன்னலமேயன்றிப் பிறநலமும் பேணுவதே பிறவியின் நோக்கம் எனக்கொண்டு, பெண்கள் சேமநலத் துறையில் ஈடுபட்டு அல்லலுறும் பெண்ணினத்திற்கு அருந்தொண்டாற்றி வருவதோடு, ஆலவாயண்ணல் கோயில் திருப்பணியும், தருமகர்த்தர் குழுவிலிருந்து கொண்டு ஆற்றி வருகின்றார்கள். இது பெண்குலமே பெருமைப் படத்தக்க எடுத்துக்காட்டு.

பேச்சாளர்களும் கலையறிவோடு, சமய அறிவும் பெற்றவர்கள். திருமதி இராஜேஸ்வரியம்மை தன் கணவனாருடன் தென்னாட்டுத் தீபகலபமாய் விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஞானியாரடிகளிடம், இளமை முதல் பழகிப் பயின்றவர். திருமதி குழந்தையம்மாள் இளமையிலேயே அதாவது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவியாய்ப் பயிலும் போதே, சமயச்ப் சொற்பொழிவுகள் ஆற்றும் பழக்க முள்ளவர். கல்லூரி ஆசிரியப் பணியுடன் இப்போது அரசியல் துறையில் ஈடுபட்டிருப்பினும், சமயப் பணியை மறவாமல் சமாஜத்தினர் அழைத்த போது இசைந்து பணியாற்றுவது போற்றுதற் குரியது. திருமதி சிவகாமியம்மையாரை என்க்கு அறிமுகமில்லா விடினும் ஆசிரியப் பயிற்சியுடன் சமயப் பயிற்சியும் பெற்றுள்ளார்கள் என்பது இங்கு ஆற்ற இருக்கும் பணியால் அறியக்கிடக்கின்றது. ஏனைய துறைகளிலும் ஆசிரியத் துறையில் அநேகம் மாணவர்க்குச் சமயவுணர்வைத் தூண்டவல்ல வாய்ப்பு உண்டு. அவர்கள் அனைவரது நல்லுரைகளையும் கேட்டு, சிந்தித்து, செயலாற்ற முயல்வோம்.

சகோதரிகளே! நம்முன்னே இன்று பல கடமைகள் உள்ளன. குழந்தை வளர்ப்பு அவற்றுள் முதன்மையானது. விழிப்போடு சிறுவர்கள் நலத்திலும் ஒழுக்கத்திலும் கண்ணும் கருத்துமாயிருப்பதோடு, வாய்த்த போதெல்லாம் தேனூறும் தேவார திருவாசகத் திருப்புகழ்களை நாம் கொடுக்கும் உணவோடும், சொல்லும் கதையோடும் பாடும் பாட்டோடும் இலசாகப் புகுத்திவிட்டால், அவர்கள் எதிர்கால வாழ்வில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமுடையவராய் விளங்குவார்கள் என்று சொல்லி விடை பெறுகின்றேன்.

வாழ்க சிவநெறி! வளர்க சமாஜம்!










சைவ சித்தாந்த மகா சமாஜம்
56 - ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனி
சைவ மங்கையர் மாநாட்டுத் தலைமையுரை
[திருமதி புஷ்பம் நடராஜன், மதுரை]
(31-12-1961)

அன்புசால் பெரியோர்களே!
சிவநேசச் செல்வர்களே! சகோதரிகளே!!

யாவருக்கும் எனது வணக்கம். ''சிரிப்பார், களிப்பார். தேனிப்பார், திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார், கேட்பார், மெச்சுவாராக'' விளங்கும் அன்பர் திருக் கூட்டத்து நடுவே என்னையும் வாவென்றழைக்கும் வான் கருணைத் திருவருளுக்கும், சமாஜ நிர்வாகிகளுக்கும் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இல்லற நெறியில் பெண்களுக்குத் தனிப்பங்கு உண்டு என்பதை உணர்த்தும் பொருட்டு, வள்ளுவர் இல்லற இயலில் வாழ்க்கைத் துணை நலம் என்று, ஒரு தனி அதிகாரம் வகுத் துத்தந்தார். அதேபோன்று சமயநெறியிலும் பெண்களுக்கு முக்கியப் பங்கு உண்டு எனக் கருதியே சமாஜத்தில் மாதர் மாநாடு தனியாக நடத்த ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்.

உலக அமைதியை அணுக்குண்டு போன்ற போர்க்கருவி களினாலோ, மிரட்டல்களாலோ, கூட்டு உடன்படிக்கை களாலோ, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களினாலோ நிசுந்தரமாக நிலை நாட்டமுடியாது. அன்பின் அடிப்படையில், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை சான்றாண்மை என்ற உயர்ந்த பண்புகளினால் தான் நிலை நாட்டமுடியும் என அறிஞர் உலகம் கண்டு கொண்டது.'

எனவே ஞானபூமி எனப்படும் பாரதபூமியே உலக சமாதானத்திற்கு ஒளி விளக்காக வழிகாட்டு மெனப் பிறநாடுகள் எதிர்பார்க்கின்றன. இத்தகைய நெருக்கடியான நிலையில் பன்னெடுங்காலமாகச் சமயத்துறையில் அரிய பணியாற்றி வரும் சமாஜம் போன்ற ஸ்தாபனங்கள் செய்ய வேண்டிய பணி மிகவும் முக்கியமானது.

சமயத்தின் பெயராலும், பழக்க வழக்கம் காரணமாகவும் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்டுதல் கூடாது; வீட்டை விட்டுப் பெண்கள் வெளியேறிப் பல காரியங்களில் ஈடுபடுதல் தகாது என்று எண்ணிய காலம் மலையேறிவிட் டது. சட்டங்கள் செய்யவும், பட்டங்கள் ஆளவும், பெண்கள் முன்வந்தது மாத்திரமல்லாமல், சாதம் படைக்கும் கைகள் தெய்வச் சாதிபடைக்கவும் முடியும் என்பதை நிரூபித்துக்காட்டி வருகிறார்கள். எனவே உலகில் ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும், அன்பையும் வளர்க்க, கருணை உள்ளம் படைத்த மெல்லியரின் உதவியும் ஒத்துழைப்பும் மிக இன்றியமையாதன ஆகின்றன.

பைந்தமிழ் நாட்டுப் பெண்மணிகள் சமயநெறியில் அன்றும், இன்றும் அக்கறையுடன் ஈடுபட்டு ஒழுகுவது கண்கூடு. தென்னர்குலப் பழிதீர்த்து, இருந்தமிழ் நாட்டின் இடர் நீக்கி, திருநீற்றின் ஒளி பரப்பியவர் மங்கையர்க் கரசியார். எனவே அவர் ஆளுடை பிள்ளையாரின் மலர் வாயால் 'எங்கள் தெய்வம்' எனப் பாராட்டப்படுகிறார். அவர் மங்கையர்க்குத் தனி அரசி மாத்திரமல்ல, முன்னோடியுங் கூட. அவரைப் பின்பற்றி, பெண்கள் செல்வந்தராகவோ, பெரிய பட்டம் பெற்றவராகவோ, வேறு தனிச் சிறப்புப் பெற்றவராகவோ இருந்த போதிலும் எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். கணவனாருக்கு மதியமைச்சராக விளங்கி, அவர் மனங்கோணாது இல்வாழ்க்கையைச் செவ்வனே நடத்தி, அவர் பிறவழி சென்றால் செந்நெறி செலுத்தும் திறம் பெற வேண்டும். தாம் இன்புறுவது போல் உலகம் இன்புற வேண்டுமென்ற பெருநோக்கம் கொள்ள வேண்டும்.

தனக்கென வாழாது பிறர்க்குரிய தொண்டுகள் செய்து வாழும் பண்பாளர்களாலே தான் மேன்மைகொண்டு விளங்கும் சைவ நீதி உலகில் தழைத்து வருகிறது. திலகவதி என்ற தவவிளக்கு அத்தகைய தண்ணளியாளர்களில் தலை சிறந்தவர். அவருடைய தவவலிமை, அன்புப்பெருக்கு, அருள் சக்தி இவற்றினாலே நாவுக்கரசரைச் சைவ உலகம் பெற்றது; பெருமை கொண்டது. தொண்டின் அவசியத் தையும், பெருமையையும் நமக்கு விளக்கிக்காட்டுவது, தூண்டா விளக்கனைய திலகவதி அம்மையாரின் வாழ்க்கை. "நித்தலும் எம்பெருமானுடைய கோயில் புக்கு, புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்குமிட்டு, பூமாலை புனைந்தேத்தி, தலை யாரக் கும்பிட்டு, வாழ்த்திய அவரது புனித வாழ்க்கை யாவரையும் சேவையில் நாட்டம் கொள்ளத் தூண்டுகிறது.

குழந்தைகளை இளம் வயதிலேயே பெற்றோர்கள் தெய்வ வழிபாடு செய்யவும், பிறரிடம் அன்பு காட்டவும் பழக்க வேண்டும். தற்காலம் தாய்மார்கள், குழந்தைகள் உடை அலங்காரத்தில் காட்டும் அக்கறை அளவிலாவது உள்ள வளர்ச்சியில் காட்டாதது மிகவும் வருந்தத்தக்கது.

காரைக்காலம்மையார் பிறந்து மொழி பயின்ற காலம் முதலாகச் சிறந்த தெய்வ நெறியிலே வளர்க்கப்பட்டார்; உயர்ந்த கல்வி புகட்டப்பட்டார். எனவே அவர் எப் பொழுதும் அன்பர் பணிசெய்வதிலேயே ஆனந்தங் கொண் டார். கணவனார் அவரைப் புரிந்து கொள்ளாது விடுத்த போதும், அவரிடம் இறை அன்பு எள்ளளவும் குன்றவில்லை; மேன்மேலும் பெருகியது.


இடர்களையா ரேனு மெமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனுஞ் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு"

"எத்தகைய இன்னல்களிலும் இறைவனிடம் அன்பு சிறிதளவும் குறையமாட்டாது என் நெஞ்சில்" எனப் பெருமிதத்துடன் பாடினார். இறைவனாலே அம்மையே' என்று அருமையாக அழைக்கப்படும் பேற்றினையும் பெற்றார். இன்பத்திலும் துன்பத்திலும் தளராத உள்ளமும், தனது கொள்கையில் உறுதிப்பாடும் அவசியம் என்பதை, அம்மையார் செம்மையாக நமக்கு உணர்த்தியுள்ளார்.

"மங்கலமென்ப மனைமாட்சி'' என்றபடி மனையறம் மங்கலமாக நடைபெறப் பெண்கள் சோர்விலாது உழைத்து வந்தார்கள். அவர்களது உயரிய கற்பினாலே இல்லறத்தை மேன்மையுறச் செய்தார்கள். தம்மில் தம்மக்கள் அறிவுடையராக விளங்கும் வகையில் மக்களைப் பயிற்று வித்தார்கள். தம்மகன் சான்றோனாக விளங்க வேண்டும் என்பதே தாயின் பெருநோக்காக இருந்து வந்துள்ளது.

தற்சமயம் மேனாட்டு நாகரிகத்தால் இல்லறத்தின் புனிதத் தன்மை, தெய்வ அம்சம் முதலியன குன்றிவரு வதைக் காண்கிறோம். மட்டமான சினிமாக்களும், கதைகளும் பெண்களின் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், கற்பு நெறியையும் குலைக்கக் காரணமாக இருக்கின்றன.

பெண்கள் தொன்று தொட்டு வந்த நமது ஒழுக்க மேம்பாட்டைச் சிறிதும் மறந்து விடுதல் கூடாது. சீதையும், கண்ணகியும், மணிமேகலையும் நாம் படித்து இன்புற வேண்டிய காவியப் பெண்கள் மாத்திரமல்ல; பார்த்துப் பின் பற்றவேண்டிய குன்றின் மேல் விளங்கும் குல விளக்குகள் ஆவர். இளையான்குடிமாறநாயனார், திருநீலகண்டநாயனார், அப்பூதிநாயனார், கலயநாயனார் முதலிய அடியார்களின் வாழ்க்கைத் துணைவியர்கள் கணவரின் வழி நின்று தொண்டு புரிந்து இன்புற்ற சரிதங்கள் நமக்கு ஊக்கம் தருவனவாகும். இசை ஞானியார், மாதினியார், பகவதி அம்மையார் போன்று, உலகம் பாராட்டும் உத்தம மக்களைப் பெற்று வளர்த்துப் பெருமை அடைவதே, தாய்மைக் குலத்தின் தனிப் பெருங் கடமையாகும்.

நாகரிகத்தின் பெயரால் பலர் தெய்வ வழிபாடுசெய்தல், சமய நூல்களைப் படித்தல் முதலியன மூட வழக்கங் கள் என்று ஒதுக்கி வருகிறார்கள். காலத்திற்கு ஒவ்வாத.பழக்க வழக்கங்களை விலக்கிவிடுதல் அறிவுடைமை. ஆனால் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொரு ளான இறைவன், பின்னைப் புதுமைக்கும் புதியவன் அல்லவா? புதுமையை நாடும் புதுமைப் பெண்கள் இந்தப் புதுமையைப் புரிந்துகொள்ளாதது என்ன விந்தையோ !

இங்ஙனம் பெண்கள் தெய்வ வழிபாட்டில் கவனம் கொள்ளாமையால் வீட்டில் ஆடவர், குழந்தைகள் யாவரும் கடவுளை நாள்தோறும் வழிபடுவதை அறவே மறந்தனர். பிற சமயங்களில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் எல்லோ ரும் குறித்த காலத்தில் கட்டுப்பாடாக வழிபாடுகள் செய்து வருகிறார்கள். இந்து சமயத்திலோ பெரும்பாலான குடும் பங்களில் காலை, மாலை முறையாக வழிபடுதல், ஆலயங்களுக் குச் சென்று தொழுதல் முதலியன அருகி வருகிறது.

இந்த மாதர் மாநாட்டின் முக்கிய நோக்கமே "பெண்களிடையே சமயஞானம், தெய்வ வழிபாடு வளரவேண்டும்; அதன் காரணமாகக் குடும்பத்தில் அனைவரும் ஒருமுகமாகச் சமய நெறியில் ஈடுபட வேண்டும்; நாட்டில் அன்புப் பணி கள் மலர்ந்து, அருளாட்சி ஏற்பட வேண்டும்" என்பனவே யாகும்.

எனவே அதற்கான திட்டங்களையும், முறைகளையும், வகுத்து அவைகளை மக்களிடையே பரப்ப ஆவன செய்ய வேண்டும்.

புதுமையில் எப்பொழுதும் யாவர்க்கும் ஆர்வம் அதிகம். ஆகையால் சமய உண்மைகளையும் நெறிகளையும் பரப்பவும் புதிய முறைகளைக் கையாளுதல் சிறந்த பயனை விளைவிக்கும். சமயம், மக்களது வாழ்க்கையோடு இணைந்து அவர்களைச் சான்றோராக்கவும், மேலோராக்கவும் சிறந்த சாதனமாக உள்ளது. ஆகையால் நமது முன்னோர்கள் குழந்தைப் பிறப்பு முதல் மரணம் வரை, உள்ள எல்லாக் காரியங்களையும் சமயத்தை ஒட்டியே நடத்திவந்தார்கள்.

தற்சமயம் சமயத்திற்கும் மக்கள் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. காரணம் யாது? காலத்தையும், சூழ்நிலையையும் ஒட்டிச் சமயப் பழக்க வழக் கங்களையும், புறச் சடங்குகளையும் மாற்றிக் கொள்ளாதது; சமயத்தின் அடிப்படை உண்மைகளை உணர்ந்துகொள்ளா தது; அவற்றைப் பொதுமக்களிடையே சரியான முறையில் பரவச்செய்யாதது முதலியனவாகும். உதாரணமாக ஒருவர் கோவிலுக்குச் சென்று ஏதோ அர்ச்சனைகள் செய்து விட்டாலோ, பொருள் செலவு செய்து கோயில் குளம் கட்டி விட்டாலோ, அல்லது திருப்பணி செய்துவிட்டாலோ தாம் பெரிய பக்திமானாகி விட்டதாக நினைத்துக் கொள்கிறார். உள்ளத்திலே பொய்யும் களவும் மிக்க ஒருவர் வெளிக்கு நீறு பூசி, மலர் எடுத்துப் பூசித்து விட்டால் தனக்குச் சுவர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம் என்றெண்ணி இறு மாந்திருக்கிறார். இத்தகைய "பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு இறைவனே நக்கு நிற்பர்'' என்று வாகீசர் கூறும் போது சமயத்தின் பெயரால், மேலும் பொய்யும் தீங்கும் நிகழ்த்துதல் தகாது.

''அன்பே சிவம்'', ''என் கடன் பணிசெய்து கிடப்பதே'', "அன்பர் பணி செய்வதே இன்பநிலை" இவைகளே சைவத்தின் உட்பொருளாகும். அயரா அன்புடன் அரன்கழல் துதிக்கவேண்டும் என்பதே சைவ சித்தாந்தம்.

ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவர், கல்லாதார்க்குக் கல்வி புகட்டுபவர், திக்கற்றவருக்குத் துணை செய்பவர், நோயுற்றவர்க்கு உதவுபவர், நொந்தவருக்கு ஆறுதல் அளிப் பவர் ஆகியவர்களே உண்மையில் சமய நெறியில் ஊன்றி நிற்பவராவர். பிற சமயத்தவர் முக்கியமாகக் கிறிஸ்தவர்கள், இத்தகைய பணிகளைத் தேவ ஆராதனையாகக் கருதி முறை யாகச் செய்வதைக் காண்கிறோம். இந்து சமயத்திலோ மேற்கண்ட பணிகளை நல்ல முறையில் செய்யும் ஸ்தாபனங் கள் மிகக் குறைவு.

நமது சமாஜம்போன்று 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து சமயத் தொண்டு செய்து வரும் ஸ்தாபனங்கள் இத்தகைய தொண்டுகளை மேற்கொண்டும், ஆதரித்தும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வந்துள்ள கன்னியாகுலப் பெண்கள் சமூக சேவைகளைப் பக்தி சிரத்தையுடன் செய்வதையும், பள்ளிகளும், வைத்தியசாலைகளும் அமைத்து மக்கள் துயர் துடைப்பதையும் பார்க்கிறோம். இத்தகைய பணிகளைச் செய்யப் பெண்களுக்கு ஆற்றலும், அவகாசமும் உண்டு. எனவே சைவ மங்கையரும் அத்தகைய பொதுப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட ஆவன செய்ய வேண்டும்.

முற்காலத்தில் திருக்கோயிலைச் சார்ந்து பள்ளிக்கூடங்கள், குருகுலம், வைத்தியசாலைகள், கலை அரங்கங்கள், பட்டி மண்டபங்கள் முதலியன அமைந்திருந்ததாக அறிகிறோம். நமது கோவில்கள் இல்லாத ஊர்களே கிடையாது எனலாம். ஒவ்வொரு கோவிலையும் ஒட்டி ஒரு மாதர் சங்கம் அமைத்து அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவாரம் திருவாசகம் கற்பித்தல், சமய நூல்களைக் கற்பித்தல், பாலர்பள்ளி (Nursery School) நடத்துதல் முதலியன ஆரம்பிக்கலாம். நல்ல வருவாயுள்ள கோவில்களைச் சார்ந்து ஏழைக் குழந்தைகள் அன்பு இல்லம், பாடசாலை வைத்தியசாலை முதலியன ஏற்படுத்தலாம். தருமபுர ஆதீனக் கோயில்கள் சிலவற்றிலும், நெல்லையப்பர் கோயில், பழனிக் கோயில் முதலியவற்றிலும் இத்தகைய பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவையைப் பொதுமக்களுடன் தொடர்புள்ள ஸ்தாபனங்கள் நன்றாக எடுத்துச் செய்ய முடியும். முக்கியமாகப் பெண்கள் இத்தகைய சேவைக்குத் தகுதியுடையவர் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. ஆகையினால் அரசாங்கம் பெண் உறுப்பினர்களைக் கொண்டு மத்திய சமூகநல போர்டு, மாகாண சமூகநல போர்டு, இவற்றை நிறுவியுள்ளது. மேற்படி போர்டுகள் சமூக சேவை செய்யும் ஸ்தாபனங்களுக்கு மானியம் கொடுத்து உற்சாகமூட்டி அவர்கள் சேவையை வளர உதவி செய்கிறார்கள். அத்தகைய அரசாங்க உதவிகளையும் நாம் பயன்படுத்திக்கொண்டு, சமயத் தொடர்புடன் சமூகம் வளர ஒன்றுபட்டு முயலவேண்டும்.

சமீபகாலத்தில் தமிழகத்தில் பழுதுபட்டுக் கிடந்த கோயில்கள் பல செப்பனிடப்பட்டுத் திருப்பணிகள் நிறை வேறியுள்ளன. அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள உதவி செய்த அதிகாரிகள், மடாதிபதிகள், பொதுமக்கள் முதலி யோரை நாம் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கி றோம். மேலும் இன்னும் பல கோயில்களிலும் திருப்பணி கள் விரைவில் ஆரம்பிக்கப் பெரியோர்கள் முன்வர வேண்டும்.
காலத்திற்கேற்ற வகையில் கோவில் சட்ட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுக் கோவில் நிர்வாகம் திறமையாக நடைபெற்று வருவதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஆகும். பெண்களுக்கு விசேஷப் பொறுப்புக் கொடுக்கும் போது அவர்கள் சேவை மேலும் வளர ஏதுவாகும். எனவே எல்லாக் கோவில்களின் தர்மகர்த்தா குழுவிலும் பெண்களுக்கு இடம் கொடுப்பது அவசியமாகும். நிர்வாகத்துறையிலும், முக்கியமாக ஆலயங்களின் துப்புரவு, தூய்மை இவற்றைப் பேணுதலில் பெண்களையும் பங்கு கொள்ளச் செய்யலாம். ஆலய நிர்வாகத்தில் இன்னும் நாம் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் மிக உள்ளன.

ஆலயங்களைத் தூய்மையாக வைப்பதில் கோயில் அதிகாரி களுடன் பொதுமக்களும், கடை முதலியன வைத்திருப்பவர்களும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். பெரியகோவில்களில் விழாக் காலங்களில் திரண்டு வரும் ஏராளமான கூட்டத்தினருக்குத் தகுந்த வசதிகள் செய்து தர வேண்டும். விழாவிற்கு வந்தவர்கள் ''பொருளைச் செலவழித்துக் கொண்டு வந்தோம். அருளைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறோம்'' என்று மனநிறைவோடு செல்லும் வகையில் விழா ஏற்பாடுகளைச் செவ்வனே அமைத்தல் சிறந்தது. விழாக் காலங்களில் மக்கள் மனத்தைக் கவரும் சமயச் சொற்சு பொழிவுகளுக்கும், தேவாரம் முதலிய அருட்பாடற் கச்சேரி களுக்கும் எல்லாக் கோவில்களிலும் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

எத்தனை கூட்டத்தின் நடுவிலும் ஒவ்வொரு வரும் சில நிமிடமாவது இறைவனைக் கண்குளிரத் தரிசித்து, அமைதியாகச் சிந்தித்துச் செல்லக் கோவில்களில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகத் தேவை. அர்ச்சகர்களும் பூஜை செய்வோரும் இதில் ஒத்துழைக்க வேண்டும். திருப்பதி, பழனி முதலிய சில ஆலயங்களில் இத்தகைய ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து விரைவில் அமைதியாக வழிபாடு செய்து செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏனைய ஆலயங்களிலும் இம்முறையில் சைவ இளைஞர்களைக் கொண்டு தொண்டர்படை, அமைத்து, அமைதியுடன் வழிபட உதவி புரிதல் நன்று.

தற்காலத்தில் மக்களின் கருத்துக்களையும், கொள்கை களையும், திட்டங்களையும் பரப்புவதற்குப் பத்திரிகைகள் சிறந்த சாதனமாக உதவுகின்றன. ஆகையால் சைவர்கள் நடத்தும் எல்லாப் பத்திரிகைகளிலும் சமய உண்மைகள் புராண வரலாறுகள், திருவிழாக்களின் உட்கருத்துக்கள், அடியார்களின் அறிவுரைகள், பாடல்கள் முதலியன வெளி வரவும் அவற்றைப்பற்றி விமரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யலாம். சித்தாந்தம் போன்ற சமயப் பத்திரிகையிலும் எளிய தமிழில் இறைஞானம் வளர்க்கும் கட்டுரைகள், சிறு கதைகள், பாடல்கள் முதலியவற்றை அதிகமாக வெளியிடு தல் நல்லது. பெண்கள் யாவரும் இவற்றை விரும்பிப் படிப்பதுடன், தங்கள் குழந்தைகளும் அவற்றில் நாட்டங் கொள்ளுமாறு ஊக்குவித்தல் மிக மிக அவசியம்.

சினிமா யாவருக்கும் ஒரு முக்கிய பொழுது போக்காக அமைந்துவிட்டது. வாழ்க்கையை வளமாக்குவதும், தாழ்மையாக்குவதும், ஓரளவிற்குச் சினிமாக் காட்சிகளின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது. மட்டரகமான கதைகள், உரையாடல்கள், பாடல்கள் மூலம் மக்கள் மனதில் தெளிவு ஏற்படாமல் போவதுமட்டுமல்லாமல் உள்ளத்தில் கீழானஉணர்ச்சிகளும், எண்ணங்களும் வளர ஏதுவாகிறது. எனவே பண்பு பொதிந்த - கருத்துச் செறிந்த கதைகள், அறிவூட்டும் புராண வரலாறுகள், தெய்வீக நலம் விளக்கும் சரிதங்கள், அருளாளர்களின் பாடல்கள் இவற்றினை எல்லோரும் விரும்பிப் பார்க்கும் படங்களாகத் தயாரிக்க மெய்யுணர்வாளர்களும், அறிவாளிகளும் துணை செய்யவேண்டும். தமிழகத்துக் கலைஞர்களும், நடிகர்களும் நமது சமய வளர்ச்சிக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இக்கால மாணவர்களே எதிர்கால ஆட்சியாளர்கள். அவர்களைச் சமய வழியில் உருவாக்க நாம் முழுமுயற்சி எடுக்கவேண்டும். அவர்களுக்கு ஒவ்வொரு கோவிலிலும் விடுமுறை நாட்களில் வந்து படிப்பதற்கு வசதியான சமய வகுப்புகள், நூல் நிலையங்கள் ஆரம்பித்து நடத்தவேண்டும். அத்துடன் அவ்வப்போது சமய - நூல்களில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் முதலியன நிகழ்த்தியும் சிறு சிறு பரிசுகள் வழங்கியும் ஊக்குவிக்க வேண்டும். மாணவர் சமய முகாம் அமைத்தல், பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் முதலியன விரைவில் நல்ல பலனைத்தரும். இவற்றிற்கு இந்து அறநிலையப் பாதுகாப்பிலிருந்து ஆதரவும் உதவியும், மற்ற வசதிகளும் செய்து தருவார்களாக.

இங்ஙனம் மக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழவும், இம்மை மறுமைப் பயன்களைக் குறைவின்றி எய்கவும் சமய ஸ்தாபனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எவ் வளவோ உள்ளன. சைவ மங்கையர் ஒன்றுபட்டு இத்திருத் தொண்டில் ஈடுபடுவோமாக! ஈன்றாளுமாய் எந்தையுமாய் விளங்கும் இறைவன் நமக்கு ஆற்றலையும் வெற்றியையும் அன்புகூர்ந்து அருள் புரிவாராக. சமாஜத்தின் சேவைகள் அங்கையற்கண்ணியின் தண் அருளால் மேன் மேலும் வளருமாக!

வாழ்க சைவம்! வளர்க நமது தொண்டு!!











சைவ சித்தாந்த மகா சமாஜம்
56 - ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனி
சைவ இளைஞர் மாநாட்டுத் துவக்கவுரை
[கருமுத்து - தி. சுந்தரம் செட்டியார்]
(31-12-1961)
சைவ இளைஞர்களே, தாய்மார்களே,

பழனி நகரில் நடைபெறும் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழாவின் இளைஞர் மாநாட்டைத் துவக்கி வைக்கும் பெருமையை, எனக்கு அளித்துப் பாராட்டிய உங்கள் அன்புக்கு நான் மிக்க நன்றியறிதல் உடையேன். வாணிகத் துறையில் கருத்தூன்றியிருக்கும் என் மனத்தை, நம் உயிர்க்கு உறுதி நல்கும் சிவநெறிக் கண் செலுத்தி, என் சிந்தையில் எழும் எண்ணங்களை உரைப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்த சைவ சித்தாந்த மகாசமாஜத்தை நான் ஒருகாலும் மறவேன். மேலும் என் கருத்துக்கு இசைந்த வழிபடு கடவுளாகிய பழனியாண்டவன் அருள் நீழலில் கூடும் சைவ இளைஞர்களைக் காண்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியுண்டாகிறது.

மக்கள் வாழ்க்கையில் இளமைதான் யாவரும் கருத்தோடு பேண வேண்டிய தொன்று கண், காது, முதலிய ஐம்பொறிகளாலும் நாம் வாழும் உலகின் பலவகைக் கூறு களையும் கண்டறிந்து, வளம் செய்து கொள்ளுவதற்கு, இளமைதான் மிகவும் சிறந்தது. பண்டைச் சான்றோர் களும் அது பற்றியே ''இளமையில் சிறந்த வளமையில்லை" என்றனர். இளமை கழிந்தமை எண்ணிய தொடித்தலை விழுத்தண்டினார் என்ற சான்றோர், "தொடித்தலை விழுத்தண்டு ஊன்றிப் பெருமூதாளரேம் ஆகிய எமக்கு இளமையை இனி நினைந்த வழி இரக்கமாகின்றது என வருந்துகின்றார்.

இத்தகைய இளமையின் வளமைக் கேற்பவே நமது எதிர்கால வாழ்வின் சிறப்பு அமைகிறது. இளமையில் உடல்வளமும் மனவளமும் பெற்றோர், பிற்கால வாழ்க்கையில் பெருஞ் செயல்களை வெற்றியுற முடித்துப் பெரும் செல்வமும் பெரும் புகழும் பெற்று மேம்படுகின்றார்கள். அது பற்றியே பேரறிஞர்கள், இன்றைய இளைஞர்களேநாளைய வாழ்க்கையை இன்பமயமாகக் காணும் நன்மக்களாவர் என்று வாயாரக்கூறி வாழ்த்துகின்றனர்.

இளமையுடம்பில், ஒவ்வொரு அணுவும் மிக்க விறு விறுப்புடன் வேலை செய்கிறது. நரம்புகள் முருக்கேறி வன்மையுறுகின்றன. குருதியோட்டம் மிக்க விரைவில் நடைபெறுகிறது. கண் முதலிய கருவிகளின் வாயிலாக, மனமும் தான் அறிய வேண்டியவற்றைத் தயங்காது அறி கின்றது; கை கால் முதலிய கருவிகளும் தளர்ச்சியுறாது செயல்படுகின்றன. கண் முதலிய புறக்கருவிகள் நிகழ் காலத்தை நோக்குகின்றன. மனமோ முக்காலத்தையும் நோக்குகிறது; பருப்பொருளை நுண்ணிய அருவப் பொருள் ஆக்கித் தனக்குள் அமைத்துக் கொள்கிறது. இவ்வகையில் மக்களுடைய அறிவுக் கூறுகளும் செயற் கூறுகளும் சுறு சுறுப்புடன் இயங்குவதால், இளைஞர், அறிவு பெறுவதில் ஆர்வமும், செயல் வகைகளில் ஈடுபடுவதற்கு ஊக்கமும் மிக்குள்ளனர்.

மரத்தின் அடிப்பாகம், வன்மையும் வளமையும் கொண் டிருந்தாலன்றி, அது பெருங்கிளைகளைப் பரப்பித் தண்ணிய நிழலும், பசிய இலையும், நறிய பூவும், இனிய காய்கனியும் தாங்கி உலகினுக்கு உதவியாக முடியாது. அது போல் இளைஞர் வாழ்வும், மனத்திட்பமும், வினைத்திட்பமும் நிறைந் தாலன்றி, எதிர்கால வாழ்வில் அறம் வளர்ந்து பொருள் காய்த்து இன்பம் பயவாது.

பசுமையான ஒரு மரத்தை நோக்குவோமாயின், அதன் ஒவ்வோர் இலையும் அம்மரத்தின் உதவியைப் பெறுவதும், அதற்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதும், புலனாகும். அது வெறிதே தோன்றி யுலர்ந்து வீழ்வதில்லை. அது அப்பெருமரத்தோடு பிணிப்புண்டு அகன் இருப்புக்கு ஆவன் உதவுவதும், அழகு செய்வதும் காண்கின்ற நமக்கு. அவ்விளந்தளிர் போல, இளைஞர்கள் மக்களினத்தின் இருப்புக்கும் சிறப்புக்கும் இன்றியமையாதவர் என்பது நன்கு விளங்கும். மக்கட் சமுதாயத்துக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பைத் தாவர நூல் அறிவு நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இலையின் வாழ்வு மரத்தின் வாழ்வோடு பிணிப்புண்டிருப்பது போல. இளைஞர் வாழ்வு, மக்கள் சமுதாயத்தின் பெருவாழ்வோடு பிரிப்பறப் பிணிப்புண்டிருப்பதை உணர்த்துவதுதான், இன்றைய விஞ்ஞான அறிவால் நாம் பெறும் பெரும்பயன்.

இன்றைய இளைஞர்கள், தாம் பயிலும் விஞ்ஞானம் தொழில் முதலிய துறைகளில் பெறும் பருமை யறி (Objective Knowledge) வோடு அமைந்து விடுகின்றார்கள். அவர்களுடைய அறிவுள்ளத்தில், பருமையறிவுக்கும், நுண்மையறிவுக்கும் ஆக இரண்டு நிலையுண்டு. நுண்மையறிவு (Subjective Knowledge) நிரம்பாத வழி, குறையுள்ள இடங்களில் தவறான கருத்துக்கள் புகுந்து அவர்களுடைய அறிவையே குழப்பி விடுகின்றன. அதன் பயனாக, அவர்கள் உள்ளத்தில் கடவுள் உணர்வும் சமய ஞானமும் ஒழுக்கமும் பற்றிய நுண்மையறிவு புகுத்தாமையால், அவற்றின் பால் பலர்க்குப் புறக்கணிப்பும் வெறுப்பும் நிறைந்துள்ளன. அவர்கள் கற்கும் கல்விப் பொருளும், வேற்றுமொழிப் போர்வையில் இயலுவதால், உள்ளீடாகிய நுண் பொருள் அவர்கள் நெஞ்சில் நேரே ஆழப் பதியாமல் மேலோட்டமாய்ப் போய்விடுகிறது. அதனால் திருந்திய மனப் பயிற்சி உண்டாகிறதில்லை. அவர்கள் சிந்தனையும் குறையறிவால் உண்மை காண்பதற்கு ஏற்ற அமைதியும் ஆற்றலும் இன்றிக் களர் நிலத்தில் நட்ட நெற்பயிர் போல வளமின்றியுள்ளது.

இன்றைய வாழ்வில் விஞ்ஞானத்துக்கு முதலிடம் வந்துள்ளது; விஞ்ஞானம் தொழிலையும், தொழில் செல்வத் தையும், செல்வம் உலகியல் சிறப்பையும், ஏற்றத்தையும் தருகின்றன. ஆனால், விஞ்ஞானம் தன்னிலையில் உண்மை காணும் நற்கல்வி யென்பதில் தடையில்லை. ஆயினும் அது நல்கும் அறிவும் இன்பமும் மக்களிடையே ஆசையைப் பெருக்கித் தன்னலம் தன் இன நலம் என்ற இருளுணர்வை எழுப்புவதால், சமுதாயம் இன்று அச்சமும் அவலமும் உற்று அலமருகிறது. புராணங்களில் அரக்கருடைய மந்திர வலியைக் கண்டு அமரர் கூட்டம் அஞ்சியதுபோல. இன்று அணுவாராய்ச்சியின் வன்மை விளைவு கண்டு உலக நாடுகள் பேரச்சத்தால் உறக்கமின்றி உள்ளம் நடுங்கிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

அச்சத்தின் நீங்கி அமைதியும் தெளிவும் எய்தினாலன்றி, இனி மக்களுலகுக்கு உய்தியில்லை. மக்களறிவு, இன்று, தன்னினும் மேம்பட்ட ஆற்றலுடைய பொருள் வேறே இல்லை என்ற செருக்கில் ஆழ்ந்துவிட்டது. மண் முழுதும் அடிப்படுத்திய நாம், இனி விண் முழுதும் அடிப்படுத்தி விண்ண வரை ஏவல் கொள்ளலாம் என்று வீறு பேசுகிறது.மக்களின் மனம், விண்ணில் திரியும் மீன்களையும் கோள் களையும் நோக்கி அவற்றுல் குடியேற முயலுகிறது, மண் ணகம் தந்த இன்பக் களிப்பால். விண்ணகத்துக்குத் திரியும் அண்டங்களில் பெறலாகும் இன்பத்தை நுகர வேட்கை மீதூர்ந்து துடிக்கிறது.

"உள்ளுவ வெல்லாம் உயர்வுள்ளல் என்பது திருக்குறள். உயர்வு உள்ளுதல் உயர்வுதான்; வேண்டியது தான். உயர்ந்த பொருளை உள்ளும் மக்கள், "வினைவலியும் தன் வலியும், துணைவலியும்" தூக்கியறிய வேண்டியது கடமை யாகும், விஞ்ஞானத்தின் இன்பமயக்கம் அவர்கள் அறிவை மறைக்கின்றது. அதுபற்றியே அதனைச் சைவ நூல்கள் பாசஞானம் என்று கூறுகின்றன. மாயா காரியமாகிய உலகியல் நுட்பஞானம், விஞ்ஞானமாதலால், மாயை மயக்கமும் செய்யும் அன்றே" என்ற சிவஞானசித்தியார் கூற்றின் படி மக்களை மயக்கிவிட்டது.

வினைவலி, மாற்றான்வலி என்ற இரண்டையும் அறிந்து கொள்வது எளிது. தன்வலியறிவதும் துணைவலியறிவதும் ஆகிய இரண்டும் சமயவுணர்வால் பெறக்கடவனவாகும். உயிராகிய தனது அறிவாற்றலையும், தனக்குத் துணையாகிய உடல் கருவிகளின் ஆற்றலையும் எண்ணியறிதல் வேண்டும். விஞ்ஞானிகளின் வரலாற்றைக் காணுமிடத்து, ஒவ்வொரு வனும், தன் கருவி கரணங்கள் ஓய்ந்து அயர்ந்து அவசமடைந்து வீழ்வதும், முடிவில் உள்ளிருந்து ஓர் உணர்வு தோன்ற அதனைப்பற்றி முடிவு காண்பதும் அவனுடைய பொது இயல்பாக உள்ளன. உடம்பும் உள்ளமும் ஓய்ந்து இந்லது ஊனுடம்பின் வலிசுருங்கிய தன்மையைக் காட்டுகிறது. உள்ளிருந்து ஓர் புத்துணர்வு தோன்றி ஒளிகாட்டி வெற்றி பெறுவிப்பது உயிரறிவின் குறைபாட்டையுணர்த்து கிறது. உள்ளுணர்வு நல்கும் ஒளி வெற்றியும் இன்பமும் தருவதால், அது தவிர நமக்குப் பெருந்துணை வேறு இல்லை.

அந்த அறிவொளியை நல்குவது யாது? எனின். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து,'இன்புறுத்தும் சிவ பரம் பொருளாகும். அந்த உள்ளொளி சிவத்தின் திருவருள் ஒளி எனப்படும். அதனைப் பெறுவது தான் சைவ வாழ்வு; சிவநெறியின் சிறந்த பயன்,

நான் அண்மையில் ஒரு முறைக்கு இருமுறை அமெரிக்க நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உலவி வந்தேன். ஆங்காங்கு வாழும் மக்களைக் கண்டேன்: அவருள் கல்வி பயிலும் மாணவர்களையும் தொழில் புரியும் கட்டிளங்காளைகளையும் கண்களிக்கக் கண்டேன். அவர்கள் அனைவரும் உழைப்பின் வடிவமாகத் தோன்றுகிறார்கள். ஒவ்வொருவரும், காலத்தின்மேல் கண்ணும் கருத்துமாய், ஒரு நொடியும், வீண்போகாதபடி கழிப்பது எனக்கும் வியப்பும் இன்பமும் தந்தது. அவர்களுடைய மனமும் மொழியும் மெய்யும் பொருள் பற்றிய எண்ணமும் சொல்லும் செயலுமே மேற் கொண்டுள்ளன. 'பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.", என்ற கருத்து அவர்கள் குருதியில் இரண்டறக் கலந்திருக்கிறது.

பொருளும் கூரிய அறிவு இல்லையானால் இல்லை என்ற உணர்வும், பிறரொடு கூடிப் பழகினாலன்றி அவ்வறிவுக்கு வளர்ச்சியில்லை என்ற தெளிவும், அவர்கள் உள்ளத்தில் நிற்கின்றன. உணவுப் பசியிலும் அறிவுப் பசிதான் அவர்களிடம் மிக்கு நிற்கிறது. ஆயினும், அணுவாராய்ச்சியால் விளைந்த அச்சம் அவர்கள் நெஞ்சில் கணப்பொழுதும் மறவா.மல் இருந்த வண்ணம் இருக்கிறது.

அச்சத்தைப் போக்கி அமைதியும் இன்பமும் பெறுவிக்கும் அருளறிவு அவர்கட்கு நல்குவாரில்லை; அறிஞர் பலருடைய நோக்கமும், உலகியலிலும் பொருளிலும் மூழ்கிக் கிடப்பதுதான் காரணம். ஆயினும் அருள் நெறிக்குரிய சமய வுணர்வு அவர்களிடையே இப்போது இடம் பெற்றிருக்கிறது. ஆனால், அறிவாராய்ச்சிக்கு ஒத்த நிலையில் அவர்கள் பெறும் சமயக் கல்வி இல்லை, வெறும் நம்பிக்கையையே அடிப் படையாகக் கொண்டிருப்பதால், அவர்களது சமயவுணர் வும் ஒழுக்கமும் இக்கால இளைஞர் மனவேட்கையைத் தணித்து மகிழ்விக்கும் தகுதியுடையனவாக இல்லை, உல கியல் விஞ்ஞானமும் அருள் ஞானத்தின் விளக்கமே என்பதை உணர்த்தும் திறம் அவர்களுடைய சமயத்தில் காணப்பட வில்லை. விஞ்ஞானத்தைத் தலைதூக்க வொட்டாமல் அடக்கிதடுக்கும் வகையில் அவர்கள் சமயம் வாழ்ந்து வந்தமையே அதற்குக் காரணம். அதனால், மேலை நாடுகளிலும் அமெரிக்க நாடுகளிலும், விஞ்ஞானமும் சமயஞானமும் வேறு வேறு திசையில் போய்க் கொண்டிருக்கின்றன. இரண்டும் வலக்கண்ணும் இடக்கண்ணும் போல நின்று, 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற ஒருமை நோக்கம் பெற்று இயங்களும், சமய அறநாட்டு இளை நெறிகளில் ஈடும் நாட்களில், குதல் வேண்டும் என்பது நமது சைவம் ஒன்றில் தான் காணப் படுகிறது.

இப்போது அமெரிக்கரும் ஐரோப்பியரும் சமயவுணர்வு ஒழுக்கங்களில் பேரார்வம் கொண்டு இருக்கின்றனர். நாத்திகம் சிறந்து நின்ற நாடுகளில் கூட, இப்போது கோயில்களும், சமய அறநிலையங்களும் தோன்றிச் சமயப் பணிபுரி கின்றன. அந்த நாட்டு இளைஞர்கள் சமய நெறியில் நின்று இறை வழிபாடு முதலிய ஒழுக்க நெறிகளில் ஈடுபட்டு விழுப்பம் பெற்று வருகின்றனர். வழிபாட்டுக்குரிய நாட்களில், அழகு திகழும் உடையும், அமைதி நிலவும் உள்ளமும், அன்பு கனியும் முகமும் கொண்டு கோயிலுக்குச் செல்வதும், இறைவன் நல்லருளை நினைந்து மலர்ந்த முகத்துடன் இருக்கை நோக்கி மீளுவதும். காணுந்தோறும் நினைக்குந்தோறும் இன்பம் உண்டாகிறது. அத்தகைய ஆர்வமும் ஒழுக்கமும் அமைதியும் நம் இனத்து இளைஞர்களிடம் இல்லாதிருப்பதைக் காணும்போது, நெஞ்சம் நெருப்பில் தோய்ந்தது போல் வேதளை எய்துகிறது.

இளைஞர் உள்ளங்கட்கு ஏற்றவகையில் சிவபரம் பொருள், என்றும் இளைஞனாய், முருகனாய், இனிய காட்சி வழங்குகிறது. முருக வழிபாடு இளமை வழிபாடு; முருகன் திருவுருவம் விஞ்ஞானமும் சிவஞானமும் ஆகிய உண்மை ஞானவடிவம். அதுபற்றியே முருகனை அருணகிரிநாதர் "ஞான பண்டிதசாமி,' என்று பாராட்டுகின்றார்.

சைவ இளைஞர்களே, நான் இது காறும் இளமையின் வளமையும், அதன் கண் இக்காலத்தே மிக்கிருக்கும் விஞ்ஞான வேட்கையையும் அதனால், இளமையுள்ளத்தில் தோன்றும் குறைபாட்டையும், அதனை நிறைக்கும் தகுதி படைத்த திருவருள் ஞானத்தையும், அதனை நல்கும் சமயத் தின் சிறப்பையும், அமெரிக்க ஐரோப்பிய நாட்டு இளைஞர் களிடையே காணப்பட்ட சமய நிலையையும், இளைஞர் இளமையுள்ளத்துக்கு ஏற்ப அமைந்த முருக வழிபாட்டின் மேன்மையையும் எடுத்துரைத்தேன், 'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்'' என்ற சிவநெறிப்படி எல்லாம் சிவ வழிபாடும் சைவமுமாம் என்று கூறி, இவ்வாறு எல்லாமாம் எவற்றையும் தனக்குள் அடக்கித் தழுவி நிற்கும் சைவம் தழைக்க. சைவ இளைஞர் உளம் தழைக்க, இம்மாநாட்டைத் தொடங்கி வைக்கிறேன்.

வாழ்க சிவநெறி! வளர்க சமாஜம்!













சைவ சித்தாந்த மகா சமாஜம்
56 - ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனி
சைவ இளைஞர் மாநாட்டுத் தலைமையுரை
[திரு. நா. ப. தணிகை அரசு, வாலாஜாபாத்.]
(31-12-1961)

சைவ சித்தாந்த மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ள
பெருமக்களே! தாய்மார்களே!

தோற்றுவாய்: அன்பும் அருளும் பண்பும் நிறைந்த சான்றோர் அருள் திரு. ஞானியார் அடிகளார், மறைத்திரு. மறைமலை அடிகளார், சிவத்திரு. ஜெ. எம். நல்லசாமிப் பிள்ளை ஆகிய நல்லுள்ளம் வாய்ந்த பெருமக்களால் தோற்று விக்கப்பெற்று, 56 ஆண்டுகளாகச் சைவ உலகத்திற்கும், அதுகாரணமாகச் செந்தமிழ் மொழிக்கும், சைவ மக்களுக்கும் பெருந்தொண்டாற்றி வருவது நமது சைவ சித்தாந்த மகா சமாஜம். அதன் சார்பில் திருமுருகப் பெருமான் திருக்கோயில் கொண்டருளிய பழநிப்பதியில், மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் சைவ மகாநாடுகளில் ஒன்றாகிய இளைஞர் மாநாட்டிற்குத் தலைவனாக இருந்து தொண்டாற்றும் பணியினை, அளித்த திருவருளுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

சமயாசிரியர் நால்வர் பெருமக்கள் அருளிச் செய்த தேவார திருவாசகங்களை உயிரினும் மேலாகக் கொண்டு, அவற்றை உள்ளன்போடு கல்விச் சாலைகள் தோறும் திருக் கோயில்கள் தோறும் ஓதி வருவதற்கு ஏற்பாடுகள் செய்தும், நம் சமாஜத்தின் கட்டிட நிதிக்கு ரூபாய் இருபதாயிரம் முன்வந்து கொடுத்தும், சமாஜத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்துவரும் அதன் தலைவர், உயர்திரு. அ. சோம சுந்தரம் செட்டியார், எம். ஏ. அவர்களுக்கும், கலைத் தலைமைப் பட்டம் பெற்றுக் கல்வியின் பயன் வாலறிவன் நற்றாளைத் தாம் தொழுவதோடு, பிறரைத் தொழுவிப்பதும் எனக் கொண்டு சமாஜத்தின் செயலராக அமர்ந்து இரவு பகலாகச் சிவத்தொண்டு புரிந்துவரும் உயர்திரு. ஜி. கலியா ணப், எம். ஏ., டிப். எக் அவர்களுக்கும், அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாலாஜாபாத் தில் 46 - ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் செந்தமிழ் ஆர்வத்தையும், சைவசித்தாந்தச் செந்நெறிப் பயிற்சியையும் ஊட்டிவரும் இந்துமத பாடசாலையையும், அதன் சார்பில் உள்ள வள்ளலார் மாணவர் இல்லத்தையும் தோற்றுவித்து, இன்று வரையில் உயர்ந்த குறிக்கோளுடன் அவற்றை இனிது நடத்திவரும் அடியேனது தந்தையார் திரு. வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்கள் திருவடிகளுக்கும், வாலாஜாபாத் பாடசாலைக்கு எழுந்தருளி அடியேனுடன் வேறு சிலரையும் அம்பலவாணர் வழிபாட்டில் ஈடு படுத்திப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற வழிகாட்டி யருளிய அடியேனது ஞானத் தந்தையார் சைவ சித்தாந்த சரபம் மகாமகோபாத்தியாய ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாசாரிய சுவாமிகள் திருவடிகளுக்கும், சைவ சித்தாந்த சமாஜத்தைத் தம் உயிரெனப் போற்றி வருபவரும், அடியேன் சைவ சித்தாந்தம் பயிலக் காரணராயிருந்தவரும், இருப்பவருமான ஓய்வு பெறும் டிப்டிகலெக்டர் பழநி இராவ்பகதூர் க. அரங்க சாமி முதலியார் பி. ஏ. அவர்கள் திருவடிகளுக்கும், அடி யேன் உளமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு பணிமேற் செல்லுகின்றேன்.

சென்ற நூற்றாண்டில் நம் செந்தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர், வடலூர் இராமலிங்க அடிகளார் ஆண்டவனை “ அப்பா” என்று அழைத்து ஒரு வரம் கேட்கிறார்.

"அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்'' என்று தொடங்கித் தாம் வேண்டும் வரமாகிய எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகிய ஒரு நிலையை வேண்டுகிறார். உயிர்கட்கு அன்பு செலுத்துதலினும் சிறந்தமுறை எது என அவர் சுட்டிக்காட்டுவதை அடுத்தவரி தெரிவிக்கிறது.

நாம் ஓர் உயிரிடம் அன்பு பாராட்டுவோமானால் அவ்வுயிருக்கு எது நன்மை விளைவிக்குமோ அதனையே செய்வோம். அவ்வாறு நன்மை பயக்கும் செயல்களில் மிகச் சிறந்தது நமக்கு எல்லா நலன்களும் புரியும் ஆண்டவனைப் பற்றி அவர்கள் அறிந்து வழிபடச் செய்தலே என்பார்.

''எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்''

என்று கூறுவதைக் காண்கிறோம். எனவே வாலாஜாபாத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆயிரவருடன் இருந்த அடியேனை ஈண்டு வரும்படிச் செய்து எந்தை பெருமான் திருவருளைப் பற்றிப் புகழ்ந்து பேசி அதனால் ஆருயிர்கட்கு அன்பு செய்ய வாய்ப்பளிக்கின்ற அருஞ் செயலுக்கு என்ன கைம்மாறு இயற்றவல்லேன்?

சமாஜம் ஆற்றிவரும் பணிகள்: சென்ற 56 ஆண்டுகளாக நம் சமாஜம் ஆற்றிவரும் நற்றொண்டுகள் பலவாகும். அவற்றுள் முதன்மையானது தமிழ்நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியிலும் ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தி நம் சமயத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகெலாம் உணரும்படிச் செய்து வருவதாகும்.

வட இந்தியாவில் ஹாப்பா, மொஹொஞ்சோதரோ என்ற இடங்களிலும் தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தவை களால், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் எல்லாப் பகுதிகளிலும் சைவ நன்னெறி பரவியிருந்தது என்பது வெளியாகின்றது.

உயிர்கள் பல பிறப்புக்களை எடுக்கின்றன என்று கூறுகிறது நம் சித்தாந்தம். ஆணவ மலத்தில் அழுந்திக் கிடந்த உயிர்களை ஆண்டவன் கருணையினால் எடுத்து உடம்புகளைக் கொடுக்கிறார். ஓர் உடம்பில் சிலகாலம் இருந்த பின் அவ்வுடம்பிலிருந்து பிரித்து மீண்டும் ஓர் உடலில் வைக்கிறார். இப்படிப் பல பிறப்புக்கள் எடுத்து வருவதால் எல்லா உயிர்களும் ஒத்த அறிவு பெற்றிருக்க முடிவதில்லை. மக்களுக்குள் அறிவு, திறமை முதலியவை வேறுபட்டிருக்கக் காரணம், அவைகள் எடுத்த பல்வேறு பிறப்புக்களின் தொகையே யாகும்.

ஒரே தந்தையின் இருபிள்ளைகளில் ஒருவன் தன் தந்தையைத் தெய்வமாகப் போற்றுவதையும், இன்னொருவன் இழிமொழி கூறியும் இன்னல்கள் விளைவித்தும் தன் தந்தைக்கு இழிவைத் தேடித் தருவதையும் காண்கிறோம். பிள்ளைகளின் உண்மை நிலையை அறிந்த தந்தையார் அவர்கள் நிலைக்கு இரங்குவாரேயன்றி அவர்கள் மீது சினங்கொண்டு வெறுக்கமாட்டார். இந்த நிலையில் முழுமுதற் கடவுள் எல்லா உயிர்களையும் அன்போடு அணைத்து அவரவர்க்கு ஏற்ற முறைகளைக் கையாண்டு அவர்களை மலத்தினின்று நீக்கி இறுதியில் தம்பால் சேர்த்துக்கொள்வர் என்று நம் சமயம் கூறுகிறது.

பிள்ளைமைப் பருவத்து மடமையால் வேடருட்பட்டுப் பரதந்திரனாய்த் தன் சாதிக்குரிய பெருந்தகைமை யிழந்து இழிதொழில் பயின்று வருந்தும் மன்னவ குமாரன் ஒருவனுக்கு அவன் தந்தை செய்யும் உதவியை எடுத்துக் காட்டாகக் கூறுகிறது சிவஞான சித்தியார் செய்யுள்.

மன்னவன்றன் மகன் வேட ரிடத்தே தங்கி
வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப்
பின்னவனு மென்மகனீ யென்றவரிற் பிரித்துப்
பெருமையொடுந் தானாக்கிப் பேணுமா போல்
துன்னியவைம் புலவேடர் சுழலிற் பட்டுத்
துணைவனையு மறியாது துயருறுந்தொல் லுயிரை
மன்னுமருட் குருவாகி வந்தவரினீக்கி
மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்"

எங்கள் சமயமே உயர்ந்தது. நான் சொல்லுகின்றபடி கேள். அப்பொழுது தான் உய்வு பெறுவாய்; பிற சபயங்களெல்லாம் அஞ்ஞானிகள் செயல்கள்'' என்பன போன்ற சொற்களுக்கே இடம் இல்லாமல் சமரச சன்மார்க்கமாக அமைந்துள்ளது நம் சமயம். இவைகளையெல்லாம் திங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தியும், ஆண்டுதோறும் மாநாடு கூட்டியும் எத்திறத்தவரும் உணர்ந்து உய்யுமாறு விளக்கி வருவது நம் சமாஜம்.

சமாஜம் செய்து வரும் தொண்டுகளில் இரண்டாவது இடம்பெறுவது நூல் வெளியீடாகும். நூல்கள் ஒப்புயர்வற்ற செல்வம். அறிவிற் சிறந்த நம் முன்னோர்கள் நமக்கு வைத் துள்ள கருவூலம் அவைகள். நம் அருளாசிரியர்கள் உலகின் மாட்டுக் கொண்ட பெருங் கருணையால் அருளிச் செய்த பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் போன்ற தெய்வத் திரு நூல்களைப் பெற்றுள்ள பேறு உலகில் யாருக்கும் கிடைத்திலது. இந்நூல்களின் பெருமையை உணர்ந்து அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர். நடுநிலமை யுள்ள பிற சமய அறிஞர்களும் அவற்றைப் புகழ்ந்து பேசு கிறார்கள். டாக்டர் ஜி. யூ. போப் அவர்கள் "உலகிலேயே மிகப் பழையதும் மிகச் சிறந்த கொள்கைகளையுடையதுமான சைவ சித்தாந்த உண்மைகளை உலக மக்கள் அறிந்து நலம் பெறவேண்டும்" என்று கூறுவது நினைவு கூரற்பாலது. இத் தகைய சிறந்த அருள் நூல்களை அடக்கவிலைப் பதிப்புகளாக வெளியிட்டுதவுகிறது நம் சமாஜம்.

பத்திரிகையின் பயனை இக்காலத்தில் அறியாதார் இலர் உயிருக்கு நலம் பயக்கக்கூடிய உயர்ந்த கருத்துக்களைத் தாங் கிக் கொண்டு திங்கள் தோறும் வெளிவரும் இதழாக உள்ளது'சித்தாந்தம்'செந்தமிழ் மொழியையும், சைவ நன்னெறியையும் நன்கு பயின்ற நல்லாசிரியர்கள் ஆசிரியர் களாயிருந்து அதனை முப்பத்து நான்கு ஆண்டுகளாக நன்கு வளர்த்து வருகிறார்கள் பத்திரிகையின் நல்ல தோற்றம் கண்ணுக்கும், அதனுள் வரும் பொருள் கருத்துக்கும் நலம் செய்கின்றன. அதனை விடாது நடத்தி வருவது நம் சமாஜம். –

இளைஞர் கடமை: சைவ உலகிற்குப் பெரு நன்மைகள் புரிந்துவரும் நம் சமாஜத்திற்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் பல உள. ஒவ்வொரு இளைஞரும் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் மூன்று செலுத்தி முதலில் சமாஜ உறுப்பினராதல் வேண்டும். சமாஜ உறுப்பினர்களுக்குச் சித்தாந்த இதழை இலவசமாக அனுப்புகிறார்கள். அதனால் சைவர்கள் வாழ்கின்ற இல்லந்தோறும் சித்தாந்த மணம் கமழ வேண்டும்.

சைவ சித்தாந்த சமாஜத்தார் ஆண்டுதோறும் நடத்தும் மாநாடுகளேயன்றித் திங்கள் தோறும் ஆங்காங்குக் கூட்டங்கள் நடத்தவும் விரும்புகின்றார்கள். இன்னும் கிழமை தோறும் கூட்டங்கள் நடத்தினாலும் நல்லதே. ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு ஒருமுறை சமாஜத்தினரை வரவேற்றுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால், கிழமைக் கூட்டம் நடை பெறுவது எளிதாக நடைபெறும். இளைஞர்கள் எழுச்சி கொண்டு ஆங்காங்கு சமாஜக் கூட்டங்களை நடத்த முன் வருதல் வேண்டும்.

அறிவின் சிறந்த பயனைத் திருவள்ளுவப் பெருமான்,

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு

என்னும் குறளால் அறுதியிட்டுக் கூறுகின்றார். அவ்வுயர்ந்த பயனைத்தரவல்ல சிறந்த அறிவைத் தரவல்லது பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களுமேயாம். எந்த நெறியினரும் - அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், செல்வர், வறிஞர் முதலிய எவ்வகுப்பினரும் - அறிவுவடிவான ஆண்ட வனை அணுகலாம் என்ற உண்மையைப் பெரிய புராணத்தைப் போல் உணர்த்தும் நூல் வேறு உளதோ? இறைவனைப் பற்றியும், உயிர்களைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் எச்சமயத்தினரும் மறுக்க முடியாத பேருண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தாந்த சாத்திரங்களை யொத்த நூல்கள் உள்ளனவோ? எனவே நம் திருமுறைகளையும், சாத்திரங்களையும் படிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.

இளைஞர்கள் முன் வந்தால் ஆண்டுதோறும் மாவட்டந் தோறும் சித்தாந்த வகுப்புக்கள் நடைபெறவும், அதில் இளைஞர்களுக்குச் சைவ சித்தாந்தப் பயிற்சி அளிக்கவும், அப்பயிற்சியால் ஊர்கள் தோறும் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றும் உரிமை பெற நற்சான்றிதழ்கள் வழங்கவும் சமாஜம் ஏற்பாடு செய்யும். ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சைவ சமயச் செல்வர்கள் உளங்கொண்டால் இவ்வகுப்புக்கள் செம்மையாக நடைபெறும்.

எந்தப் பொருளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே நம் கருத்தைக் கூற உரிமை உண்டு. எனவே ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டு பிழையில்லாது பேசவும், எழுதவும், பின் பணியாற்றவும் இளைஞர்கள் முன்வர வேண்டும்.

சேய்மையிலிருந்து நோக்கும் போதே பரம கருணாநிதியாகிய ஆண்டவனின் உயர்வை நமக்கு உணர்த்தி நமது ஆணவச் செருக்கை விட்டொழித்துப் பணிவுடன் நடந்து பெருமையடைவற்குத் துணையாயிருக்கும் உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட திருக்கோயில்கள் பல நாம் பெற்றுள்ளோம். அத்திருக்கோயில்களின் அமைப்புகளையும், அவைகளுக்காக மிகுந்த பொருளையும் உழைப்பையும் செலவிட்ட நம் முன்னோர்களின் ஆற்றலையும் எண்ணிப் பார்த்தால் நம் உள்ளம் குழைகிறது. மெய்ப்பொருள் காண முயலாது கோவிலுக்குச் செல்லாது கடவுளையும் வணங்காது இளமையைப் பாழாக்கும் சிலரைப் பற்றி வருந்த வேண்டியுள்ளது. திருமுறைகளையும், சாத்திரங்களையும் ஒரு முறையேனும் கற்பது இளைஞர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

எது எவ்வாறாயினும் வயது வந்த ஒவ்வொருவரும் சமாஜத்தின் உறுப்பினராகிச் சமாஜம் பணிக்கிறபடி பணியாற்ற வேண்டுமெனப் பணிவன்போடு வேண்டிக் கொள்ளுகின்றேன்.

இளைஞர்கள் பெருமை: இளைஞர்களால் எந்தச் செயலையும் நன்றாய்ச் செய்ய முடியும். இளைஞர் இயக்கங்கள் பல உலகில் இருக்கின்றன. இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், கிறிஸ்தவர் இளைஞர் சங்கம், சாரணர் சங்கம் முதலியவை பற்றி நாம் அறிவோம். அவைகள் உலகிற்குச் செய்து வரும் நற்றொண்டுகள் பலவாகும்.

சந்தான ஆசிரியர்களில் முதல்வர் மெய்கண்ட தேவரும், சமயகுரவர்களில் முதல்வர் திருஞானசம்பந்தரும், பால் மணம் மாறாச் சிறுவயகிலேயே சிவனடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானத்தை - பவமதனை அறமாற்றும் பாங் கினில் ஓங்கிய ஞானத்தை - உணர்வரிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்றார்கள் என்று படிக்கின்றோம்.

போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்"
எனவும்,

மானினேர் விழிமாதராய் வழுதிக்கு மாபெருந்தேவிகேள்
பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி வெய்திடேல்

எனவும், வருகின்ற தேவாரஅடிகள் அகச் சான்றுகளாய் நின்று, இவ்வுண்மையை வலியுறுத்துகின்றன. சேய்ஞலூர்ப் பிள்ளையாரிடம் பெருமானே அன்பு கொண்டு,  

"அடுத்த தாதை இனி உனக்கு நாம்

என்று கூறினார். காரைக்காலில் தோன்றிய புனிதவதியைச் சிவபெருமான் தன் மகளாக ஏற்றுக்கொண்ட உண்மையை,

வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்
அங்கணன் அம்மையே யென்றருள் செய அப்பா என்று
பங்கயச் செம்பொற்பாதம் பணிந்து வீழ்ந்தெழுந்தார்

என்ற சேக்கிழார் திருவாக்குகள் காட்டுகின்றன.

நிலவுலகில் தோன்றி வைதிகத் திருவும், மன்னவர் திருவும் பொருந்த வளர்ந்து, தந்தையார் ஏற்பாடு செய்த திருமணம் ஆண்டவனால் தடுக்கப்பெற்றுப் பெருமானுடைய திருவருள் துணையோடு, இரு ஞான மங்கையரை மணந்து இறைவனுடைய தாள் நமக்கு எல்லாம் தரவல்லது என்னும் பேருண்மைக்கு இலக்கியமாய் வாழ்ந்த, நாவலூர்ப் பெருமானும் பதினாறு ஆண்டு இளைஞர்தானே?

நம் சைவ சித்தாந்தச் செந்நெறியின் உயர்வை இளைஞர் கள் அறிந்து, அதனை யாவர்க்கும் அறிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது என் ஆவல். "அறிவும் ஆற்றலும் அமையுமானால் இளைஞர்கள் மதிக்கப் பெறுவார்கள். அறிவாற்றல் மிக்க இளைஞர்களுக்கும் ஏற்றம் கொடுக்க வேண்டும்" என்பன பேன்ற கருத்துக்கள் நமக்குப் புதியனவல்ல.

இடையூறு நீக்கும் யானைமுகப் பெருமானையும், முன்னியது முடிக்கும் முருகப் பெருமானையும், மூத்தபிள்ளையார், இளைய பிள்ளையார் என்றே அழைக்கின்றோம். இளைஞர்களுக்கு ஏற்றம் தரவேண்டும் என்ற தத்துவத்தையே, சிவ பெருமான், முருகப் பெருமானிடம் உயர்பொருள் கேட் டார் என்ற வரலாறு விளம்புகிற தென்றால், இளைஞர் மாநாட்டின் சிறப்புப் பெரிதன்றோ?

வாலாஜாபாத் குருகுலம்: இனிச் சைவப்பற்றுடன் சமயப்பணி புரிந்து வரும் பெருமக்களுக்கு அடியேனுடையவும், அடியேனுடன் தொடர்புடையவர் களுடையவுமான அனுபவங்களிற் சிலவற்றை நினைவுபடுத்த எண்ணுகின்றேன். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாலாஜாபாத்தில் 46 ஆண்டுகளாக நடந்து வருகிற தமிழ்க் குருகுலமாகிய இந்துமத பாடசாலையில் இருபத்தெட்டு ஆண்டுகளாகப் பணிபுரியும் பேறுபெற்ற காரணத்தால் உங்கள் முன் சிலவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். செந்தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் ஆயிரவர் அங்கு உள்ளனர். அவர்கள் பாலாற்றங் கரையில் உள்ள அக் குரு குலத்தில் வறியர் - செல்வர்; உயர்குலத்தோர் - தாழ்குலத்தோர் முதலிய எவ்வகை வேற்பாடுமின்றி மகிழ்ச்சியோடு வளர்ந்து வருவதையும், அன்றாடம் நான்கு வேளைகளிலும் ஆண்டவனை வழிபட்டு விட்டு உணவு கொள் வதையும், அவர்களிற் பலர் கடவுள் நம்பிக்கையில் சிறிதும் பிறழாத உயர்ந்த நற்குடி மக்களாக வெளியிற் செல்லுவதையும் கண்டு களிக்கும் பேறு அடியேற்குக் கிடைத்துள்ளது.

இந்து மத பாடசாலையில் வழிபாட்டுக் கூடத்தில் அம்பலவாணர், சிவகாமி, மாணிக்கவாசகர் திருவுருவங்கள் மஞ்சக் கொல்லை சைவத் திரு. ராம. ச. சம்பந்தமூர்த்தி முதலி யார் அவர்கள் குடும்பத்தினரால் எழுந்தருளச் செய்யப் பெற்று, ஞானத் தந்தையார் சிவத்திரு. ஈசான சிவா சாரிய அடிகளாரால் திருக்குடமுழுக்குச் செய்யப்பெற்று நாங்கள் அன்றாடம் வழிபாடு செய்து வருகிறோம். ஆண்டு தோறும் ஆறு திருமுழுக்குகளும் செம்மையாகச் செய்து வருகிறோம்.

எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் வழிபாட்டில் கலந்து கொள்வதைக் கட்டாயமாக வைத்துள்ளோம். ஆசிரியர்கள் யாவரும் வழிபாடு புரிவது மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்துகிறது. இறை வனிடத்துப் பற்றையும் அஃது உண்டாக்குகிறது.

ஐந்துவயதே நிரம்பிய சிறுவன் ஒருநாள் என்னிடம் வந்தான். அன்று காலை அம்பலவாணர்க்குத் திருமுழுக்கு நடந்தது. திருமுழுக்கு நடந்தபோது அவன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தைப் பாருங்கள்.'' நாங்கள் எல்லாம் சிறுவர்கள். தண்ணீரில் குளிக்கிறோம். நீங்கள் பெரியவர்கள் வெந் நீரில் குளிக்கிறீர்கள். சாமி உங்களைவிடப் பெரியவராயிற்றே. அவர் ஏன் வெந்நீரில் குளிக்கக் கூடாது? தண்ணீரில் குளிக்கிறாரே? " என்பது அச்சிறுவன் கேள்வி.

நாளாறில் முத்திபெற்ற கண்ணப்பர் நினைவு வந்தது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாது இருந்தேன். பிறகு ஒருவாறு பதில் சொல்லிவிட்டேன். அடியேனுடைய விடை பின்வருமாறு:

"தண்ணீரில் குளிப்பது தான் சிறந்தது. என் உடம்பு நன்றாயிராமையால், தண்ணீரில் குளித்தால் ஏதேனும் நோய் வரும் என்று அஞ்சி வெந்நீரில் குளிக்கின்றேன். உங்கள் உடம்புகளெல்லாம் நல்ல உடம்புகள். ஆகவே நீங்கள் தண்ணீரில் குளிக்கிறீர்கள். ஆண்டவனுக்கு நோயே வராது. எனவே எப்பொழுதும் தூய நீரில் ஆடுகிறார்.''

அந்த அன்புச் சிறுவன் மகிழ்ச்சியுடன் சென்றான். பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த மற்றோரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ஒருநாள் மாலை வழிபாட்டுக் கூடத்தில் ''திருவாரூர்ச் சபாபதி வள்ளலார்க்கு உடல் நலம் குறைந்து மருத்துவச் சாலையில் ஒரு வாரமாக இருக்கிறாராம். நீங்கள் அவர் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றேன். எல்லோரும் பிரார்த்தனை செய்தார்கள். வழிபாடு முடிந்ததும் ஒருமாணவன் என்னிடம் வந்தான். அவனுடைய முகத்தில் வருத்தக் குறிகள் தோன்றின. வருத்தத்துடன் சினமும் கலந்திருந்த அவன் கேட்ட கேள்வி என்றைக்கும் என்னால் மறக்க முடியாதது. ''ஏன் முன்னமேயே எங்களுக்குச் சொல்லவில்லை? எப்பொழுதோ பிரார்த்தனை செய்திருக்கலாமே?'' என்று கேட்டான். பிரர்த்தனையில் சிறுவனுக்கிருந்த நம்பிக்கையை உணர்ந்து கொண்டேன். அவன் நம்பியபடி பெரியார் நலமும் அடைந்தார்.

பள்ளிக்கூடங்களில் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் பணிபுரிய வேண்டும். மார்கழித் திங்களில் குருகுலத்தில் விடியற்காலை 4 - 30 மணிக்கு எழுந்து, நீரில் முழுகி அம்பலவாணர் முன் அமர்ந்து, திருப்பள்ளி எழுச்சி பாடுவதில் பெரியவர்கள் ஈடுபட்டால் சிறுவர்களை அவ்வாறு செய்ய வேண்டுமென வற்புறுத்த வேண்டியதில்லை என்பதை நேரிற் பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாளும் வழிபாட்டின்போது சிறிதுநேரம் நம் சமய உண்மைகளை மாணவர்கள் உளங்கொள்ளுமாறு சொல்லி வருகின்றோம். பெரிய புராணத்து நாயன்பார்கள் வரலாறுகளை அவர்கள் திருநாட்களில் எடுத்துச் சொல்லுகிறோம். பண்டிகை நாட்களை நாங்கள் முறைப்படி கொண்டாடுகிறோம். அதிகாரத்தைப் பயன்படுத்தாது அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்கிறோம். இவற்றால் வருங்காலத்தில் திருவருள் உணர்ச்சியுடன் வாழ வல்ல சமுதாயத்தை உருவாக்க முடிகிறது என்பதைத் தெரி வித்துக்கொள்ள அடியேன் மகிழ்கிறேன்.

பெருமக்களுக்கு விண்ணப்பம்: இளைஞர்கள் சார்பில் பெரியோர்களுக்கு ஒரு வேண்டுகோள். அறிவிலும் ஆற்றலிலும் மிகுந்த மேன்மக்களே! ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்து பழகிய பெருமக்களே! அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகளை யெல்லாய் ஓதியு ணர்ந்த உத்தமர்களே! தோத்திரங்களைப் பாடித் துதித் தும், சாத்திரங்களைப் படித்துத் தெளிந்தும் எண்ணம் சொல் செயல்களில் ஏற்றம் பெற்றுள்ள ஏந்தல்களே! இளைஞர்களாகிய நாங்கள் சைவ ஒழுக்கத்துடன் வாழ வழிகாட்ட வேண்டுகிறோம். இளமை காரணமாகத் தவறு செய்ய நேருங்கால் எங்களைத் தடுத்தாட்கொள்ள வேண்டுகிறோம். சாத்திரங்களை நாங்கள் கற்றுத் தெளிய ஆர்வங்கொண்டுள்ளோம். முதன்மையான நகரங்களிளெல்லாம் சாத்திர வகுப்புக்கள் நடத்தி நாங்கள் ஆண்டவனை அணுகும்படிச் செய்ய வேண்டுகிறோம். உயிர், உலகம், இறை என்னும் முப்பொருள்களைப் பற்றியும் சிறு சிறு நூல்கள் எழுதி நாங்கள் எளிமையாக ஆனால் மறக்காமல் கற்றுத் தெளிய அருள் செய்யுங்கள். சேக்கிழார் பெருமான் செய்யுள் நடையிலே அருளிச் செய்த புராணத்திற் சொல்லப் பெறும் நாயன்மார்கள் வரலாறுகளைத் தனித் தனியே சிறு சிறு நூல்களாகப் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம். முழுமுதற் பெருமானை வழிபடும் முறைகளையும் வழிபட்டால் அடையக் கூடிய நலங்களையும் நாங்கள் அனுபவித்து அடையுமாறு எங்களை வாழ்த்தியருளுமாறு வேண்டிக் கொள்ளுகிறோம்.

சைவ சித்தாந்தப் பெருமக்களாகிய தங்கள் பொன்னார் திருவடிகளில் இவ்விண்ணப்பங்களைச் சேர்த்து என் உரையை இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.

வணக்கம்.
சித்தாந்தம் – 1962 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment