Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சைவசமயமும் சைவத்தலைவர்களின் கடமையும்.

முகவுரை.

உலகத்தில் ஒவ்வொரு சமயத்தவரும் தங்கள் சமயமிதுவெனவும், அதற்குரிய கடவுள் இவரெனவும், அவரை ஆன்மாக்கள் வழி படு முறைமை யிதுவெனவும், அறிந்து அறிந்தபடி ஒழுகிவருகின்றார்கள். சைவர்கள் மாத்திரம் “சைவமாம் சமயஞ்சாரும் ஊழ்பெற லரிது” என்ற சுருதிப்படி அநேகபிறவிகளிற் செய்த தவவலியால் எல்லாச்சமயங்களையும் தன்னகத்தடக்கி அவைகளுக்கு மேம்பட்டு விளம்கும் சைவசமயத்தை அடையும்படியான ஊழைப்பெற்றும், அச்சமயம் இன்னது, அச்சமயக்கடவுள் இத்தன்மையர், அச்சமயாசிரியர் இன்னார், எனத் தெரிந்துகொள்ளாது மயங்குகின்றனர். சிலர், உயிர்ப் பலியேற்கின்ற காடன் மாடன் முதலிய பிசாசுகளைத் தெய்வங்களாக வும் கொண்டாடுகின்றனர். சிலர், சைவவேடங்களைப் பூண்டு வேதாந்திகளெனத்திரியும் வஞ்சப்பேய்கள் கையிற் சிக்குண்டு, தப்பவழி தெரியாமல் திகைக்கின்றனர். சிலர், மாயாவாதமென்னும் சுழல்காற்றினால் தாக்குண்டு கரை தெரியாமல் தத்தளிக்கின்றனர். சிலர், சைவ சமயத்தின் உண்மைகளையுணர்ந்து, தாம் அனுசரிக்கும் வழக்கங்கள் தப்பென்று அறிந்திருந்தும், இவற்றைக் கைவிடுதற்கு வேண்டியதிட ஞானம் இல்லா தவராய்ப் பயந்து தம்பழைய தப்பான வழிகளிலேயே சென்று வருந்துகின்றனர். அந்தோ! பெறுதற்கரிய மானிடப்பிறவியைப்பெற்றும், மிகமேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும், இவ்வாறு அறிவீன மென்னும் அந்தகார இருளில் நம் சைவசமயிகள் அழுத்திக்கிடப்பது யாவராலும் மிகவும் பரிதபிக்கதக்கதாம், ஆதலின் சைவசமயத்தின் உண்மைகளை ஆராய்ந்தறிந்து அவற்றைச்சைவ சமயிகள் யாவருக்கும் பரவச்செய்வது முதற்கண் சைவமடாதிபதி களையும், பின்னர்ச் சைவப்பிரபுக்களையும் பொறுத்த (முக்கிய) முதற் கடமையாகும். இவ்விஷயத்தில் நம்சைவசமயிகள் ஒவ்வொருவருமே தங்களாலியன்றவரை சிரத்தையெடுக்கக் கடமைப்பட் டுள்ளாராதலின், அவ்விதம் யாவர்களையும் தூண்டும் பொருட்டு இச்சிறு வியாசம் எம்மாலியன்ற கடமையாக வெளியிடப்பட்டது. இதில் சொந்த மென்பது வெகுசொற்பம், சைவசமயத்தையும் சைவசாஸ்திரங்களையும் ஆராய்ச்சி செய்வதில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துப் புகழ்படைத்த பெரியோரிடமிருந்து எடுத்தெழுதப்பட்டதே மிகுதியாகக் காணப்படும்.

சமயங்களின் பொது இயல்பு.

சமயங்களெல்லாம் கடவுள் ஒருவர் உண்டென்றும், அவருக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தம் இன்னதென்றும் காட்டப்புகும். கட வுள் ஒருவர் உண்டென்று ஒப்புக்கொள்ளாத சமயங் கிடையாது. கடவுள் இல்லையென்று சொல்லும் சமயங்களெல்லாம் சமயமெனப் பெயர் பெறா. மதம் என்னும் பெயரே அவைகளுக்குத் தகுந்த பெய ராகும். ஒவ்வொரு சமயமும் அத்தற்குரிய கடவுள் எத்தன்மையர், அவருக்கும் ஆன்மாக்களுக்குமுள்ள சம்பந்தம் எவ்விதம், அவரை ஆன்மாக்கள் வழிபடு முறைமை யெது என்ற விஷயங்களைப் பற்றித் தங்கள் தங்கள் சமயத்துக்குரிய கொள்கைகளையே நிலை நிறுத்திமற்றச் சமயங்களின் கொள்கைகளைக் கண்டித்துப் பேசும் வித்தியாசமிருந்தால் மாத்திரம் சமயங்கள் வெவ்வேறாகப் பேசவேண்டுமே தவிர, கடவுளின் பெயரைமாற்றியழைப்பதினால் சமயபேதம் உண்டாகமாட் டாது. அவ்விதம் யோசிக்குமளவில் சைவசமயத்திற்கும் வைஷ்ணவ சமயத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. * ஆனால் சங்கராச்சாரியரை குருவாகக்கொண்டொழுகும் ஸ்மார்த்தருடைய பதத்திற்கும் மேற் சொன்ன சமயங்களுக்கும் நிரம்ப வித்தியாக முண்டு இதுநிற்க.

* வைணவர்கள் சைவர்களைப்போலத் தம்மை உடைப் பொருளெனக் கொள்ளினும், உடைப்பொருளாகிய தமக்கு அணுப்பரிணாமமும், உடையா னுக்குப்பரிணாமமும், உடையானல்லாதானை உடையானெனவும் மயங்கும் வித்தியாசமேயுண்டு, பா ர்.

சைவசமயத்தின் சிறப்பு இயல்பு.

இனிச் சைவசமயத்தின் கொள்கைகள் என்னவென்பதைப் பற்றிச்சற்று ஆராய்வாம். சைவசமயமானது அதன்கடவுளாகிய “சிவம். அன்பின் வடிவம் சிவமும், அன்பும் ஒன்றே" என்னும் துணிபுடையதாம்.

"அன்பும் சிவமு மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவ தாருமறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே''           -      திருமந்திரம்.

ஆரியர் எழுதிய புராணக்கதைகளில் கலந்தமையால் சிவமென் னும் சொல்லின் இந்த அருமையான பொருள் சாமானிய சனங்களுக்குத் தெரியாவிட்டாலும் தமிழ்ப் பாஷையிலுள்ள சமய நூல்களில் காப்பாற்றிவைக்கப்பட்டிருக்கிறது. சிவம் அன்பின் வடிவாதலால் தாயுமானவர் என்று பெயர். நாமெல்லோரும் அவருடைய நேர்பிள் ளைகள், கடவுளுக்கு நேர் பிள்ளைகளாம் உரிமையையும் இந்தத் தெய்வீக சம்பந்தத்தையும் குறிக்கவே வேளாளரின் பொதுப்பெயராகிய பிள்ளை யென்னும் பட்டம் எழுந்தது. ஞானப்பால் குடித்த பிள்ளையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையாரும் இந்தப் பட்டத்தையே தாங்கிநின்றார். திராவிட வைஷ்ணவாசாரியர்களும் இப்பட்டத்தையே கௌரவ மெனக் கொண்டொழுகினார். பெரியவாச்சான் பிள்ளையென வருவன வற்றைக்காண்க. இதுநிற்க.


தமிழ்வேத சிவாகமங்களின் வரலாறு.

இனிச் சைவசமயத்திற்கு ஆதாரமாயுள்ள தமிழ் வேதத்தின் வரலாற்றைப் பற்றிச் சற்று விசாரிப்பாம். ஆதியில் அநாதிமுத்த சித்துருவாகிய சிவபெருமான் சர்வ ஆன்மாக்களும் தன்னையறிந்து உய்யும்பொருட்டு ஞானமயமாகிய வேதத்தைத் தமிழில் வகுத்தருளி அதனைத் தமது பிள்ளையாகிய முருகக்கடவுளுக்கு அநுக்கிரகித்தருளினார். அவர் தமது மாணாக்கராகிய அகத்தியர் முதலிய நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது முனிவர்களுக்கு அத்தமிழ் வேதத்தை உபதேசித்து அதற்கு அங்கமாயுள்ள முத்தமிழ் இலக்கண நூல்களையும் அவர்களுக்குப் போதித்துத் தமிழ்மொழியைப் பரிபாலித்து வந் தனர், பின்னர் அகத்தியர் தமது மாணாக்கராகிய தொல்காப்பியர் முதலாக நானூற்று நாற்பத்தொன்பது புலவர்களுக்குத் தமிழ் வேதத்தையும் அதற்கங்கமாய தம்மாலியற்றப்பட்ட அகத்தியமென்னும் இலக்கண நூலையும் போதித்து அவர்களால் அளவில்லாத பல அரிய நூல்களையும் இயற்றுவித்துத் தமிழ்மொழியை வளர்த்துப் பாதுகாத்து வந்தனர்.

அதன் பின்னர் நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்கள் மதுரையிலிருந்து தமிழ் ஆராய்ந்து அநேக அரிய நூல்களை இயற்றித் தமிழ் மொழியைப் பரிபாலித்து வந்தனர். இதன் மத்தியில் அந்நியதேசத்தவராகிய ஆரியர்களும், பௌத்தர் சமணர் முதலிய அந்நியமதத்தினர்களும் வந்து இத்தமிழ் நாடெங்கும் பரவி, தமிழ்மறையாகிய திராவிடவேதத்தையும், அதற்கங்கமாயுள்ள இயலிசை நாடகமென்னும் முத்தமிழ் இலக்கண நூல்களையும் பயின்று, அவற்றுள் அருமையாயுள்ளன வற்றை யெல்லாம் தங்கள் பாஷைகளில் மொழி பெயர்த்துக் கொண்டு அதன் முதனூலாகிய தமிழ்வேதத்தையுமழித்து, தங்கள் பொய்ம்மதங்களைப் போதிக்கும் அநேக தமிழ் நூல்களையும் அநேக ஆரிய நூல்களையுமியற்றி அவற்றால் நம் தமிழ் நாட்டரசர்களையும் நம் தமிழ் மக்களையும் மயக்கித் தங்கள் மதத்தினராக்கி நம் தமிழ் வேதத்தையும் சைவசமயத்தையும் மங்கும்படி செய்து வந்தனர். அஃதுணர்ந்த கருணாநிதியாகிய சிவபெருமான் நம்மேற்கிருபை கூர்ந்து ஞானசம்பந்தர் முதலிய சமயாசாரியர் நால்வர்களையும் மெய்கண்ட சிவா சாரியர் முதலிய சந்தனாசாரியர் நால்வர்களையும் நம் தமிழ்நாட்டில் அவதரிக்கும்படி செய்து அவர்களால் தமது திருவாக்காகிய திராவிடவேதத்தை மறுபடியும் வெளிப்படுத்தி, அத்திராவிட வேதத்தால் வெளித்தர் களையும் சமணர்களையும் வென்று அம்மதங்களின் கொள்கைகளைப் பரவ பட்சஞ்செய்து தமிழ்வேதத்தின் முடிபாகிய சைவசமயத்தை தொழித் தருளினர். மேற்கூறியவற்றால் பிற்காலத்தெழுந் தேவார திருவாசபாகங்களுக்கு முன்னும் தமிழ் வேதங்கள். இருந்தனவென உணர்க. இதனை

"சதாசிவந் தத்துவ முத்தமிழ் வேத
மிதாசனியா திருந்தேன் நின்றகாலம்
மிதாசனியா திருந்தேன் மன நீங்கி
யுதாசனியா துடனே யுணர்ந்தேமால்"
என சைவத் திருமுறைகளிலொன்றாகிய திருமந்திரத்தின் கண் திருமூலர்வாக்கானு மறிக 

அநாதியாய் ஞானமயமாயுள்ள இத்தமிழ்வேதத்தின் கருத்துக்களை விரித்துணர்த்தும் நூல்கள் சிவாகமங்கள் எனப்படும். இச்சிவர்கமங்கள் ஆதியில் தமிழில் மட்டுமேயிருந்தன. இதன் உண்மை “ஏனைய வேளாளரும் ஆகமங்களாலும் அப்பொருளைக்கூறிய தமிழானும் உணர்க” எனப்பண்டை நூலாசிரியர் நச்சினார்க்கினியர் உரைத்தமையானும் நன்கு அறியப்படும். அவை பிற்காலத்தில் தென்தேசத்துட் புகுந்து சைவசமயத்தைத் தழுவி அங்குக் குடியேறியிருந்த சில ஆரியர்கள் பொருட்டு ஆரியத்திலும் எழுதப்பட்டன. ஆதலின் ஆகமங்களைப்பற்றி கூறுமிடத்து மட்டிலும், திரு மூலர் “தமிழ் சொல் வடசொல்லெனு மிவ்விரண்டும் உணர்த்துமவனை யுண ரலுமாமே” என்றனர் தமிழ்வேதம் சிவாகமம் இவ்விரண்டு முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானால் அருளிச்செய்யப்பட்ட முதல் நூல்கள். பின்னர் சிவபெருமானை வழிபட்டுப் பதஞ்சலி கபிலர் உபமந்யூ கிருஷ்ணன் முதலிய பலமுனிவர்கள் அநேக வழிநூல்களும் சார்பு நூல்களும் செய்தனர். அவை உபநிடதம் பகவத்கீதை முதலியனவாம்.

இனிப்பிற்காலத்து அவதரித்த சைவசமயாசாரியர்க ளெனப்படும். 1 ஞான சம்பந்தர் 2 அப்பர் 3 சுந்தரர் 4 மாணிக்கவாசகர் முதலியோர் தமிழ்வேதத்தின் உண்மைப் பொருளை உலகம் எளிதில் தெரிந்து உய்யும்படி தோத்திரரூபமாக வெளியிட்டனர். அவை தேவாரம் திருவாசகம் திருக்கோவையார் திருமந்திரம் முதலிய பன்னிரண்டு திருமுறைகளெனப்படும். திருக்கயிலாச பரம்பரையில் வந்த சந்தனாசாரியர்களாகிய மெய்கண்ட சிவாசாரியர் அருணந்தி சிவாசாரியர் மறைஞான சம்பந்த சிவாசாரியர் உமாபதி சிவாசாரியர் என்ற நால்வரும் தமிழ்வேதத்தின் ஞானபாதப்பொருளைச் சாஸ்திரரூபமாக வெளியிட்டனர். அவை சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாச முதலிய பதினான்கு சித்தாந்த சாஸ்திரங்களாம்.

தமிழ்வேதமும் சித்தாந்தமும்: -

தமிழ்வேதத்தின் முடிவே சித்தாந்த மெனப்படும். சிவபெருமானருளிய ஆகமங்களின் முடிவும் இச்சித்தாந்த மாதலால் இதற்கு ஆகமாந்த மென்று பெயர். சைவமுனிவர்களால் ஆரியரிஷிகளுக்கு உபதேசிக்கப்பட்ட மொழிகள் தாம் உபநிடதங்கள். உபநிடதங்கள் யாவும் சைவமுனிவர்களால் ஆக்கப்பட்டன வென்பது அந்த நூல்கள் பலவிடத்தும் சிவநாமத்தையே எடுத்துத்துதித்தலால் நன்கு அறியப்படும். இவ்வுபநிடதங்களையே ஆரியர் வேதாந்த மென்று கூறுவர். பலபடக்கிடந்த உபநிடதங்களைச் சுருக்கி வியாசர் இயற்றிய சூத்திரம் வேதாந்தசூத்திரமெனப்படும். வேதாந்தமும் சித்தாந்தமும் பதி, பசு, பாசம் என்னும் திரிபதார்தத்தின் இலக்ஷணங் களையே கூறப்புகுந்தவையாயினும், வேதாந்தமாயாவாதிகள் பலருக்கும் அவரவர் கன்மானுகுணமாகக் கிடைத்த அறிவிற்குத் தகுந்தபடி விபரீதப் பொருள்படக்கிடக்கும். சித்தாந்தமோ அவ்வாறாகாது ஆகமவிதிப்படி ஓதி யுணர்ந்தார் எவர்க்கும் உண்மைப்பொருள் தெரிய உணர்த்தும். சமயம், விசேடம், நிர்வாணம் என்ற மூன்று தீக்கைகளையும் செய்யப்பெற்றுச் சைவாகமத்தின் முறைப்படி ஓதியுணர்ந்தார்க்கன்றி, வேதத்தின் உண்மைப் பொருள் ஒருவாற்றானும் தெரிந்து கொள்ளுதல் முடியாது. ஜனகர் முதலிய முனீந்திரர் நால்வரும் வேதங்களையும் உபநிடதங்களையும் நெடு நாள் வரை ஓதியும் ஞானம் நிலைபெறாதவராய்ப் பின்பு ஆகமாந்தமென்னும் பெயரை யுடைய சித்தாந்தத்தை ஓதி ஞான நிலை பெற்றனரென்று ஸ்காந்தத்தில் சங்கர சங்கிதையில் கூறியவாற்றால் இவ்வுண்மை தெளிக. இவ்வுண்மைப்பொருள் தெரிக்கும் சைவசித்தாந்தத்தையே “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை'' எனத்தாயுமானவரும் “வேதாந்தத்தெளிவாம் சைவசித்தாந்தம்' எனப் பிறசான்றோரும் குறிப்பித்திருக்கின்றனர். வியாசர் இயற்றிய வேதாந்த சூத்திரத்திற்கும் தமிழ்வேத சிவாகமங்களின் உண்மைப் பொருள் நன்குணர்ந்த நீலகண்ட சிவாசாரியர் சைவசமயபரமாக முதன் முதல் ஓர் பாஷ்யம் செய்தனர். பின்னர், சங்கராச்சாரியர், இராமானுஜ் சாரியர், மாத்துவாசாரியர்மூவரும் முறையே மாயாவாத, வைணவ, மாத்துவசமயபரமாக மூன்று பாஷ்யங்கள் செய்தனர். சைவர்களால் ஒப்புக் கொள்ளப்படுவது நீலகண்டபாஷ்யம். இதனையே சுத்தாத்துவிதம் * யென்பர்.

* சுத்தாத்துவித மன்று அறுவகைச் சமயத்து ளொன்றாகிய சிவாத் துவிதமாம் ப-ர்

ஸ்மார்த்தர்களால் ஒப்புக்கொள்ளப்படுவது சங்கரபாஷயம். இதனை கேவலாத்துவிதம் அல்லது மாயாவாதமென்பர். வைஷ்ணவர்களால் கொள் ளப்படுவது இராமானுஜபாஷ்யம். இதனை விசிட்டாத்துவிதம் என  மாத்துவர்களால் கொள்ளப்படுவது மாத்துவபாஷ்யம். இதனைப்பேத பத்து விதமென்பர். துவிதம் என்றால் இரண்டு எனப் பொருள்படும். அத்து விதம் என்ற சொற்கு இரண்டல்லாதது என்பது பொருள். சித்தாந்தத்தில் அத்துவித நிலையாவது ஆன்மபோதமும் கண்ணொளியும் போலச் சிவமும் ஆன்மாவும் தம்முள் இரண்டற ஒன்று பட்டுநிற்றல். பிரமமும் ஆன்மாவும் எனப்பொருள் இரண்டில்லை ஒன்றேயெனக்கூறுவர் மயாவாதிகள். பிரமும் ஆன்மாவும் வெவ்வேறு பொருளெனவும் அவ்விருபொருளே இரண்டென வேற்றுமைப்படாது அது இதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றலும் உண்டு. அந்நிலைதான் அத்துவித நிலையெனக்கூறுவர் சைவ சித்தாந்திகள். அத்துவிதம் என்ற சொற்கு “இரண்டு இல்லை'' எனப் பொருள் கொள்வர் மாயாவாதிகள். "இரண்டல்ல" (இரண்டு அல்லாத நிலை) எனப்பொருள் கொள்வர் சைவசித்தாந்திகள். கடவுளும் ஆன்மாவும் ஒன்றே. அகம்பிரமம், நான் தான் கடவுள் என அகங்கரித்து வாதிப்பது மாயாவாதம் போலி வேதாந்தம். வேதாந்தத்தின் மெய்ப்பொருள் நீலகண்ட சிவாசாரியார் பாஷ்யத்தால் மட்டும் நன்கு விளங்கும். மற்றை யோர் உரைத்த பாஷ்யங்களும், அவர் வேதாந்தமெனப் பெயரிட்டியற்றிய நூல்களும் சிவபெருமான் அருளிய ஆகமங்களுக்கு விரோதமான (அந்நியசமயக்) கொள்கைகளையுடையன வாதலால் அவற்றை மெய்யெனக் கொண்டு மயங்காதொழிக.

விசிஷ்டாத்துவித பிரயோகம் நூற்றெட்டு உபநிடதங்களிலு மில்லை. இப்பிரயோகம் பாஞ்சராத்திரிகள் கற்பித்தது. பா - ர்.

சைவசமயமானது ஆன்மாக்களுக்கு வேறாய்க்கடவுள் ஒருவர் உண்டென்றும், ஆன்மாக்கள் கடவுளைச் சரீரமாகிய ஆலயத்தில் பூஜிக்கவேண்டு மென்றும் அவ்விதம் பூஜிக்கு முறை எக்காலத்தும் யாவரிடத்தும் உண்மை பேசுதலும் மனதைப்பற்றும் அழுக்குகளையெல்லாம் நீக்கி எல்லாஜீவரிடத்தும் இரக்கமும் அன்புஞ் செலுத்தி, தனதென்று ஒன்றையும் பாராட்டாது தன்னை முற்றிலும் கடவுளுக்கே ஒப்புவித்து, பரோபகாரத்திற்குப் பாடுபடு தலாமென்றும், அங்ஙனம் செய்தல் கடவுளின் அருளைப் பெற்று முத்தியடைதற்கு வழியென்றும் சொல்லும்.

மாயாவாதமானது ஆன்மாவே கடவுளென்றும், தாமே கடவுளாத லால், வழிபடு முறை யாதொன்றும் வேண்டப்படுவதில்லை யென்றும், அவித்தையினின்று நீங்கித் தன்னைக் கடவுளென்று அறிதலே முத்தியென்றும் அவ்விதம் அறிதலே மாயையை நீக்கி முத்தியையடைதற்கு வழியென்றும் கூறும். சைவசமயமானது கடவுளிடத்தில் சகல திவ்விய குணங் களும் பூரணமாய் நிரம்பியிருத்தலால், ஒரு ஸ்திரீ தன் நாயகனை அனுபவித்தல்போல, முத்தியில் ஆன்மாவானது சிவனை எல்லாத் தன்மையிலும் அனுபவிக்குமெனக் கூறுகின்றது. மாயாவாதமோ, ஆன்மாக் கடவுளேயாதலால் முத்தியில் ஆன்மா கடவுளுடன் சேர்ந்து ஒழிந்து போகின்றதென்று சொல்லுகின்றது. சைவசமயம் ஜீவஹிம்சை முற்றிலுங்கூடாதென்று மறுக்கின்றது. மாயாவாதத்திலோ சிரார்த்தம் யாகம் முதலிய காரியங்களுக்கு மாமிசம்வேணுமென்று வற்புறுத்துகின்றது, சைவநூல்களில் சைவசமயத்தை நோக்கிச் சமயங்களெல்லாம் (புறச்சமயம் அகச்சமயம்) அந்நிய சமயம், இனச்சமயம் என இருவகைப்படுத்தப்பட்டு அப்புறச்சமயம், அகச் சமயம் ஒவ்வொன்றும் தனித்தனி தம்முள் வேறுபாடு நோக்கி அறுவகைச் சமயங்களாகப் பிரிக்கப்படும். புறச்சமயங்களாகிய உலோகாயதம் பௌத் தம், சமணம் முதலிய சமயங்களைப்போலச் சுங்கராசாரியர் மதமாகிய மாயாவாதமும் இவ்வறுவகை அந்நிய சமயங்களில் ஒன்றாம். இவ்வந்நிய சமயங்களையும், ஏகதேசம் சைவசமயத்தோடு இயைபுபட்டு நிற்கும் இனச் சமயங்களையும் கடந்து மேல் நின்றது சித்தாந்த சைவம். ஆகவே சைவ சமயத்திற்குப் புறம்பாகவுள்ள சங்கராசாரியரும் அவரது சிஷ்யராகிய ஸ்மார்த்தர்களும், சிவ தீக்ஷைபெற்றுச் சைவராக்கிக் கொள்ளாதிருக்கும் வரை சைவசமயிகளெனப் படுவதற்காவது சைவசமயிகளால் தொடுதற்கா வது அருகரல்லர். உண்மை இங்ஙனமாகவும் தற்காலத்துச் சைவசமயிக ளுட்பலர் அந்நியசமயத்துள் ஒன்றாகிய மாயாவாதத்திற்குரிய ஆசாரியரை வேட ஒற்றுமைபற்றித் தமது ஆசாரியரென மயங்கிவழிபடுதலும் மாயா வாதத்திற் குரிய நூல்களைத் தமது சமய நூல்களெனப் பாராட்டுதலும் என்ன அறியாமை ! எவ்வளவு பேதமை ! இவ்வுண்மைகளை நமது சமய சந்தான ஆசாரியருள் ஒருவராகிய அருணந்தி சிவாசாரியரும்


“புறச்சமய நெறி நின்று மகச்சமயம் புக்கும்
புகன் மிருதி வழியுழன்றும் புகலுமாச்சிரம
அறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ்
சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேதச்
சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவ
திறத்தடைவரிதிற் சரியை கிரியா யோகஞ்
செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்"

என விளக்கிக்கூறியுள்ளாரதலின் அந்நிய சமயத்தினுள் ஒன்றெனக் கருதப்படும் மாயாவாதி குருவாகிய சங்கராசாரியரும் அவரது சிஷ்யர்களாகிய ஸ்மார்த்தர்களும் சுத்தசைவ சீலர்களுக்கு எவ்வளவு தாழ்ந்த பதத்திலுள்ளவர்களென்பதைச் சைவசமயிகள் ஒவ்வொருவரும் உய்த்து உணரக்கடவர். உணர்ந்து அவர்களது வேஷ ஆடம்பரங்களினால் ஏமாந்து போகாது தமது சமயப்பெருமையை அவர்களுக்கு உபதேசிக்கக் கடவர்.

தமிழ்வேதத்தின் சிறப்பு.

தமிழ்வேதமானது ஆரியவேதத்தைப்போல தோற்றம், இடையீடு முடிவு என்பனவின்றி அநாதியாய் இறைவன் அருள்வெளித் தோற்றமாய்த் தெய்வமொழியாய் என்றைக்கு முள்ளது.

இது இறையனார் முருகவேள் முதலிய கடவுளராலும், அகத்தியர் முதலிய பிரமரிஷிகளாலும் முதல் இடை கடை என்றமூன்று சங்கத்தினராலும் ஆராயப்பட்டுள்ளது. அன்றியும் இத்தமிழ்வேதம் சிவருெமானது திருக்கரங்களால் எழுதப்பட்டதும் அழகிய திருச்சிற்றம்பல முடையாரெனக் கையொப்பமிடப் பெற்றதுமாம். இத்துணைப் பெருமைவாய்ந்த நம் தமிழ்வேதங்கள் சைவசமயத்தில் எவ்வளவு பெருமையோடு போற் றிக் கொண்டாடத்தக்கன. சிவாலயங்களில் எத்துணைப் பயபக்தியோடு பூஜிக்கப்படவேண்டு மென்பதை சைவசமயிகள் நுணுகி ஆராயவேண்டும். –

உலகமுய்யும்படி தமது பெருங்கருணையினால் இவற்றையருளிச்செய்த நம் தமிழ் முனிவர்கள் "நம் செயலற்று நாமற்று அறிந்தவர்” ஆகலின் அவர்களருளிய தமிழ் வேதங்களும் சித்தாந்தங்களும் பதிவாக்கெனவே துணியப்படும். இவ்வுண்மையை உலகன்னையாகிய ஔவையும்

“தேவர் குறளுந் திருநாண் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசக மென்றுணர்.''

என விளக்கிக்கூறியுள்ளனர். ஈண்டு முனி என்றது வாதவூர் முனிவர் முனிமொழி என்றது வியாசர்செய்தவேதாந்த சூத்திரமென * மயக்கப்பொருள் கொண்டால், திருநான் முறை முடிவு என்றது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் கண்படும்.

* இச்சூத்திரத்தை மாயாவாத நூலெனச் சர்வாத்ம சம்புசிவர்சாரியரும், மாதவச்சிவஞான யோகிகளும் தீர்மானித்துள்ளார்.

திருநான் மறை முடிவு என்றது தமிழ்வேதத்திலுள்ள நான் மறையின் முடிவை. அன்றியும் இச்செய்யுளின் கண் குறித்த நூல்களியாவும் தமிழ் நூலென அருத்தா பத்தியாலுணர்க. தேவாரம், திருவாசகம், இந்நூல் களின் கண்ணுள்ள ஒருமைப்பட்ட பொருள்களும், ஒற்றுமையான கருத் - துக்களுமே ஈண்டுக் குறிக்கப்பட்ட நூல்களாம்.

தென்கலையும் திராவிடவேதமும் அநாதியாய் இறைவன் அருள்வழித் தோன்றியவை யாதலால், இவைக்கு மற்றேனைய வேதங்கள் ஒருசிறிதும் நிகராகமாட்டா.

இத்துணை மகிமை வாய்ந்த நம் தமிழ்வேதத்தை சைவர்கள் சிவாலயங்களில் ஓதிவருகின்றனர். அன்றியும் ஆரியவேதங்கள் இந்தியாவினுள் தலைக்காட்டு தற்கு முன்னுள்ளதும் திராவிடர் சிவாலயங்களில் ஆதிகால முதல் தொன்று தொட்டுப்பூஜிக்கப்பட்டு வந்ததும் இத்தமிழ்வேதங்களே. இவ்வுண்மைகளை நன்குணர்ந்த திருமுறைகண்ட சோழர் முதலிய தமிழ் நாட்டரசர்களும் நமது முன்னோர்களும் நம் தமிழ்வேதத்தையும் தமிழ் சித்தாந்தத்தையும் படித்தற்கும் பரவச்செய்தற்கும் அநேக கல்விசாலை களும் மடங்களும் ஏற்படுத்தி அவற்றைப்போற்றிப் பரிபாலித்து வந்தனர். அம்மடங்கள் தாம் இப்பொழுது நம்திராவிட வேதத்தையும் சித்தாந்தத் தையும் எவ்வளவு தூரம் பாதுகாத்துப் பரவச்செய்துவருகின்றன வென்ப தூம், தமிழ்வேதத்தையும் வைதிக நிலையையும் மறந்து லௌகீக இன்பங்க ளுள் எவ்வளவு திடமாய் மூழ்கிவருகின்றன வென்பதும் யோசித்துப் பரர்த்தால் பரிதபியா தவர் யாவர்? அஃது அங்ஙனம் நிற்க, தற்காலம் நம் தமிழ்மக்களும் மிக்கசெல்வமும் சிறப்பும் படைத்துச் சைவசமயத்தில் நிறைந்தபற்றும், சிவபுண்ணியங்களைத் தேடுவதில் நிறைந்தபற்றும், சிவ புண்ணியங்களைத் தேடுவதில் மிகுந்த ஆர்வமுடைய நாட்டுக்கோட்டையர் முதலிய திராவிட பிரபுக்கள் ஆதரிப்பாரின்றி கைவிடப்பட்ட நம் தமிழ் வேதத்தையும் சைவசாஸ்திரங்களையும் ஆதரியாது, தங்களுக்கு யாதொரு பயனும் சம்பந்தமுமில்லாத அந்நியபாஷைகளுக்கும் அந்நிய வேதங்களுக் கும் பாடசாலை முதலியன ஏற்படுத்துதல் தமிழ் மக்க ளியாவராலும் பெரி தும் விசனிக்கத்தக்கதாம், சைவசமயத்திற்கு ஆதாரமாயும் அடிப்படை யாயுமுள்ளது தமிழ்வேத சிவாகமங்கள். அவ்வாகமங்களின்றிச் சிவாலய ங்களில் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நித்திய பூஜை முதலிய யாதொரு கிரியைகளும் செய்தல் முடியாது.

ஆதலின் சிவாகமப் பாடசாலைகள் ஒவ்வொரு தேவஸ்தானங்களிலும் ஸ்தாபிக்கப்படவேண்டும். பட்டர் குருக்கள் முதலிய சைவாசாரியர்களு டைய பிள்ளைகளுக்கு உணவு முதலியன கொடுத்து ஆகமங்கள் சைவசாஸ் திரங்கள் முறையாய்க் கற்பிக்கப்படவேண்டும். தேவஸ்தானங்களின் நன் னிலைக்கும் பாதுகாப்புக்கும் ஏற்படுத்தப்பட்ட சிவமதக் கமிட்டியார்களும் பஞ்சாயத்தார்களும் இவ்விஷயத்தின் முக்கியத்தையும் உணர்ந்து அக்குறை வை நிவர்த்திக்கும்படிக்கு வேண்டப்படவேண்டும். சைவசாஸ்திர ஆரா ய்ச்சிமடங்களும், ஆகமப்பாடசாலைகளும் தமிழ்வேத பாராயணசாலைகளும், ஏற்படுத்தல், கோயில்களின் மதில்கள் கோபுரங்களையும் எடுத்துப் புதுப் பித்தல், கும்பாபிஷேகம் பிராமணபோஜனம் செய்தலையும் விட எவ்வளவு ஆவசிகமும் அருமையுமான தருமமென்பதை திராவிடப் பிரபுக்கள் கருத வேண்டும். இனியேனும் சிவதருமங்களைத் தலைமேற்கொண்ட மடாதிபதிக ளும் திராவிட பிரபுக்களும் இவற்றைச் சிந்தித்து வேண்டியவற்றைச் செய் வார்களாக.

சிவாகமங்களினியல்பு.

சிவபெருமானால் ஸ்தாபிக்கப்பட்டது சைவம். அச்சைவ சமயத்திற்கு ஆதாரமாயுள்ளது சிவபெருமானருளிய ஆகமங்கள். ஆகமம் என்றால் உறுதிப்பத்திரம் என்பது பொருள். எப்படி உண்மைப்பிரமான மென கிருஸ்தவர்கள் அவர்கள் விவிலிய நூலையும், மகம்மதியர்கள் அவர்கள் கொரானையும் ஒப்புக்கொள்கிறார்களோ அதுபோலச் சைவசமயிகளால் உண்மைப் பிரமாணமாகக் கொள்ளப்படுவது இச்சிவாகமங்கள் காமிக முதல் வாதுளமிறுதியாக இருபத்தெட்டாம். இவைஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் எனத் தனித் தனி நான் குபாதங்களை யுடையனவாயிருக்கும். ஆதலின் நான் மறை எனப்பழைய தமிழ் நூல்களில் கூறப்பட்டது. இவற்றுள் ஞானபாதம் இறைவனது சொரூபம் அவன் அருள் சக்தி ஆன்மாக்களின் லட்சணம் ஆன்மாக்கள் இறைவனை யடையும் வழி இவற்றைப்பற்றிக் கூறும். யோகபாதம் முப்பத்தாறு தத்துவங்கள் ஜகத்துக்குக் காரணமான மாயை, மாமாயை இவைகளைக் காணுமுறைமை, இயமம் நியமம் முதலிய யோகசாதனங்கள், மூலாதாரம் முதலிய ஆறா தாரங்கள் இவற்றைப்பற்றிக்கூறும். கிரியாபாதம் மந்திரங்கள், அவற் றின் உச்சாரணம். சந்தியாவந்தனம், சிவபூஜை முதலியனவும் புத்தி முத்திக்கு உபாயமான தீக்ஷை ஜெபம் முதலியவற்றைப் பற்றிக்கூறும். சரியாபாதம் சிரார்த்தம் முதலிய கிரியைகள், இல்லறத்தில் ஒழுகவேண் டிய ஆசாரம் தருமம் இவற்றின் விதிகள் ஆகிய இவைகளைப் பற்றிக்கூறும்.

சைவசமயிகள் அனுசரிக்கும் சகலவிதமான கருமங்களையும் 'அனுஷ் டானங்களையும் விதிக்கும் நூல்கள் இச்சிவாகமங்களே. இன்னுந் தென் னிந்தியாவிலுள்ள சிதம்பரம் முதலிய சகல சிவாலயங்களிலும் செய்யப்படும் நித்திய பூஜை, நைமித்திய பூஜை உற்சவம் முதலிய கிரியைகள் யாவும் இச்சிவாகமங்களில் விதித்தபிரகாரமே இன்றைக்கும் நடைபெறுகின்றன. அன்றியும் அகத்தியர், கபிலர், பதஞ்சலி, உபமன்யு முதலிய இம்முனிவர்கள் பால் இராமர், கிருஷ்ணர், அருச்சுனர், முதலியோரும் இச்சிவாகமங்களில் விதித்தவாறே சிவ தீக்ஷை முதலியன செய்யப்பெற்று முத்தியடை ந்தாரென மகாபாரதம் பாத்மபுராணம் கூர்மபுராணம் முதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இச்சிவாகமங்களில் கூறப்பட்ட ஞானமே ஞான மென்றும் சொல்லப்படும். உபநிஷதம் பகவத்கீதை முதலிய நூல்களெல் லாம் சிவாகமத்திற் கூறப்பட்ட ஞானப்பொருளைச் சிரசில் தாங்கி யிருப்ப தால் விசேஷமாக உபசரிக்கப்பட்டன. இச்சிவாகமங்கள் தாம், உண்மைப் பொருளை (தெரிந்துகொள்ளாது மயங்கிநின்ற) முனிவர்களுக்கு தெளிவு படுத்தற் பொருட்டுச் சிவபெருமானால் அருளிச்செய்யப்பட்ட முதனூல் கள். ஆதலின் வேதம் உபநிடதம் முதலிய சகலசாஸ்திரங்களும் சிவாகமத்திற்கு விரோத மில்லாத வழியே பிரமாணமாகக் கொள்ளப்படும். இச்சிவாகமங்களை உண்மைப்பிரமாண மெனக்கொண்டு அவற்றின் வழிநிற்ப வர்களே சைவசமயிகளெனப்படுவர். அவற்றின் வழி நில்லாதவர்களும் அவற்றையே பிரமாணமென ஒப்புக்கொள்ளாதவர்களும் சைவர்கள் ஆக மாட்டார்கள். அங்ஙனமாகவும் தற்காலம் பல அந்நியமதஸ்தர்களும், அசைவர்களும் சைவர்கள் போல் பாவனை செய்தலும் சைவர்களுக்குமுள்ள உரிமைகளைப் பெறமுயலுதலும் எவ்வளவு மோசமும் வஞ்சகமுமான செய்லென்பதைச் சைவமயிகள் அனைவரும் தம்மனத்தில் ஊன்ற ஆலோசிக் கக்கடவர்.

இச்சிவவாக்கிய சிவாகமங்களை ஸ்மார்த்தர்களும் அவர்கள் குலகுரு வாகிய சங்ராசாரியரும் உண்மைப் பிரமாணமல்ல மெனமறுக்கின்றனர். இவர்கள் உண்மையில் சைவர்களல்லர். வைஷ்ணவசமயத்தைச் சம்பத்தித்த மாயாவாதிகளாவர். இவ்வுண்மை, இவர்கள் மிகுதியாய்க் குடியேறியுள்ள ஊர்களிலும் இவர்களிருக்கும் கிராமங்களின் மத்தியிலும் விஷ்ணு கோவில் ஸ்தாபித்திருத்தலாலும், இவர்கள் வீடுகளில் சாலிக்கிராமத்தையும் துளசி யையும் வைத்துப் பூஜித்தலாலும், சந்தியாவந்தன காலங்களில் சிவநாமத்தைச் சொல்லாது விஷ்ணு நாமத்தையே துதித்தலாலும் நன்கு உணரப்படும். அன்றியும் இவர்கள் தமது சாதி ஆசார வொழுக்கங்கள் ஒவ்வெருள்றிலும், சைவசமயர்களைப்போல ஆகமத்தை யனுசரியாது, ஸ்மிருதிகளையே தழுவி நடக்கின்றனர். ஆதலின் ஸ்மார்த்த ரெனப்பட்டனர். சாதி வேற்றுமைகளையும் மாமிச பக்ஷணத்தையும் அநுமதிக்கும் ஸ்மிருதிகள் ஆகமிகளாகிய சைவர்களுக்குச் சிறிதும் உடன்பாடல்ல. சிவாகமத்தை'உண்மைப் பிரமாண நூலென ஒப்புக்கொள்ளாதவர்களும், தழுவி நடவாதவர்களும் தங்களைச் சிவமதஸ்தரெனச் சொல்லிக் கொள்வதற்குக் கிஞ்சித்தும் நியாயமில்லை. அவர்களும் சிவசம்பந்தமுடையவர்போல் சைவ வேஷங்களைப் பூண்டு கொள்ளுதல் கழுதைகள் சாம்பலில் புரளுவதுபோலன்றி உண்மையிற் சைவராக முடியாது. மகமதுவாக்கியத்தை ஒப்புக்கொள்ளாதவன் மகமதிய னாகமாட்டான். கிருஸ்துவ வாக்கியத்தை ஒப்புக்கொள்ளாதன் கிருஸ்துவ னாகமாட்டான். அதுபோலச் சிவவாக்கியமாகிய சிவாகமத்தை ஒப்புக்கொள்ளாதவன் சைவனாகமாட்டான். முற்றறிவுடைய சிவபெருமானருளிய ஆகமங்கள், சாதிக்கு ஒரு நீதி வகுக்கும் ஸ்மிருதியைப் போலல்லாது, எல்லா மனிதர்க்கும் எல்லாவருணத்தார்க்கும் ஒரே தருமங்களும் ஒரேவிதமான ஆசிரமங்களும் விதிக்கும் இச் சைவ நூல்கல். (முன்டகோபநிஷத்) “சண்டாளனெனும் சிவனெனுமொழியைச் செப்புவானாகில் அவனோடு பேசுக, அவனோடு வசிக்க, அவனோடு உண்ணுக'' என விதிக்கப்பட்டிருக்கிறது இக்கட்டளையைப் பின்பற்றி இன்றைக்கும் சந்நியாசி என்று யார் வந்தாலும் சைவசமயிகள் அவர்கள் சாதி குலம் இன்னவென்பதை விசாரியர்து உபசரிப்பார்கள். நமது சித்தாந்த சைவத்திற்கு இலக்கியமாய் அவதரித்துச் சைவடயத்தை ஸ்தாபித்த அறு பத்து மூன்று நாயன்மார்களும் பற்பல சாதிகளிற்றோன்றி சாதிவித்தியாசம் இனிதும் பாராட்டாது சிவனடியாரிடத்தெல்லாம் பேரன்பு பூண் டொழுகினர்.

இறைவன் அருளிய இந்தச் சுத்தசைவாகமங்கள் எல்லார்க்கும் கொடுக் கத்தக்கனவுமல்ல விளக்கத்தக்கனவுமல்ல. இவை உண்மையில் நிலையுடை யோனாய், சிவபக்திமானாய், தீக்ஷை பெற்றவனாயுள்ளவனுக்கே விளக்கத் தக்கன. ஆதலின் சிவ தீக்ஷை பெற்றே சிவாகமங்களை யோதவேண்டும். சிவ தீக்ஷையின் உயர்வைப்பற்றி வாயுசங்கிதை முதலிய நூல் பின் வருமாறு கூறுகின்றனன்.

“சைவ நூல்களில் கூறப்பட்டதும், பாசமூன்றையும் தவிர்ப்பதும் மேலான துமாகிய தீக்ஷையைத் தவிர வேறுயாதொரு ஆசிரமும் இவ்வுலகத்தில் மாந்தர்க்கு மேன்மையன்று. தீக்ஷையினாற்றான் மோக்ஷம். ஆசிர, மங்களினாலும் மோக்ஷமில்லை. மனஅழுக்கு நீங்கப்பெற்று அத்துவ சுத்தியடைந்தாலொழிய மோக்ஷத்துக்கு வழிகிடையாது. ஆதலின் மனச்சுத்த முண்டாக்கும் தீக்ஷையின்றி முத்தியடைய விரும்பும் மனிதர் கோலின்றி நடக்கவிரும்பிய குருடர்போல்வர். தோணியின்றிக் கடலைக்கடக்கத் தொடங்கியது போலாம். ”இச்சிவ தீக்ஷையை ஆரியப் பிராமணர் உள்ளிட்ட எவ்வருணத்தார்க்கும் செய்துவைக்க அதிகார முடையவர்கள் தற்காலம் ஆதிசைவரென்றும் பட்டரென்றும் அழைக்கப்படும் சைவாரிசயார்களே. இவர்கள்தாம் தமிழ்நாட்டில் பூர்வீகமாயுள்ள திராவிடக் குருக்கள்களே.  சிவாலயங்களின் பிரதிஷ்டை உற்சவம், பிராயச்சித்தம், அர்ச்சனை முதலிய எவ்விதக்கிரியைகளும் சிவ தீக்ஷை முதலிய உபதேசங்களும் செய்துவைக்க அதிகாரமுடையவரென சிவாகமங்களிற் கட்டளை யிடப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாகச் செய்யப்படும் பிரதிஷ்டை, கும்பாபிஷே.கம் முதலிய கிரியைகளியாவும் சைவக்கிரியைகள் ஆகமாட்டா. சைவாசாரியர்க்கேயுரித்தாயுள்ள சிவாலயப்பிரதிஷ்டை, அர்ச்சனை, கும்பாபிஷேகம் முதலிய கிரியைகளை அவர் நீங்கலாக, அந்நியசாதியார் செய்யப் புகின் கேட்டை உண்டு பண்ணு மென்பதே சிவாகமங்களின் கருத்தாம். இதனை,

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டிற்குப் பஞ்சமுமா மென்றே
சீர்கொண்ட நந்திதெளிந் துரைத்தானே.''

என்ற திருமூலர் திருமந்திரத்தானுமறிக. மேற்சொன்ன சிவாகமங்களின் கருத்தை யநுசரித்தே சிவாலயங்களின் 'மூலஸ்தானத்துக்கருகில் ஆரியப் பிராமணர் போகக்கூடாதென்ற வழக்கம் இன்றைக்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிவாலயங்களின் கர்ப்பக்கிரகம் மத்திய மண்டபம் மூலஸ்தானம் இவற்றுள் பிரவேசிக்க ஆதிசைவர் ஒருவருக்கே அதிகாரமுண்டு. ஆதிசைவரைத் தவிர ஆரியப்பிராமணர் முதலிய யாவர் பிரவேசித்தாலும் மற்று ஏனைய கீழச் சாதிகளை யொப்பவே பிராயச்சித்தம் முதலிய பரிகாரங்கள் அக்கோயில்களில் செய்யப்பட வேண்டுமென சிவாகமங்கள் விதிக்கின்றன. தற்காலம் ஸ்மாத்தர்களுட்சிலர் தங்களைத் திரரவிடசைவக்குருக்கள்களிலும் உயர்ந்தவரெனச் சொல்லிக் கொள்ளுதல் உண்மையாயிருந்தால் அச்சிவாகாரியரால் பூஜிக்கப்படும் கோயில்களுக்கு இந்த ஸ்மார்த்தர்கள் போதலும், அவர் சிவதரிசனஞ் செய்துவைக்கத் தரிசித்தலும் அவரிடமிருந்து விபூதி பிரசாதம் முதலியன பெறுதலும் கூடாவொழுக்கமன்றோ? அங்ஙன சிவாலயங்களின் புறவாயில்களில் காத்திருந்து திராவிடக் குருக்கள்களால் கொடுக்கப்படும் பிரசாதங்களை ஆவலுடன் பெற்றுப் போகும் இந்த ஸ்மார்த்தர்கள் தங்களை அவர்களினும் மேலெனச் சொல்லிக் கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும். சிவாலயங்களில் எவ்விதமான கிரியைகளும் நடத்த சைவா சாரியரே உரிமையுடையவராதல் போல், சைவர்கள் கிரகங்களிலும் எவ்விதமான கிரியைகளும் செய்துவைக்க சைவாசாரியர்களே அதிகாரமுடையவர்கள். அவ்வாறாகவும் சிவ தீக்ஷை கூட இல்லாத ஸ்மார்த்தர் அநேகர் இக்காலத்தில் விபூதிருத்திராக்ஷங்களைத் தரித்துக்கொண்டு சைவ ஆசாரியர் போலப் பாவனை செய்து திரிகின்றனர். இவர்கள் இச்சைவ வேஷங்களைத் தாங்கிய வயிறு வளர்க்கவேயன்றி வேறல்ல, இவர்களின் வஞ்சகச்செயல்களை யறியமாட்டாத சாமான்ய ஜனங்கள் இவர்களையே சைவாசாரியரென மயங்குகின்றனர். சிவ தீக்ஷைகூட இல்லாத இப்பிராமணர்கள் சைவகிரகங்களில் சைவக்கிரியைகள் செய்ய முயல்வது 'குருடனுக்குக் குருடன் வழிகாட்டல் போலாம். இவர்களைக்கொண்டு, சைவர்கள் வைதிகக்கிரியைகள் செய்து கொள்வது சிவாகமத்துக்கு முற்றிலும் விரோதமாகையால் அவைகள் ஒருவிதப்பயனையும் தரமாட்டா. கிருஸ்தவர்களையும் மகம்மதியர்களையுங் கொண்டு சிவகிரியைகள் செய்வதையே ஒக்கும். இவ்வுண்மைகளைச் சிறிதும் நோக்காது, தற்காலம் சைவசமயிகளுட்பலர் ஆதிசைவர் முதலிய சைவர்களை அவமதித்துத் தள்ளிவிட்டு, அதீக்ஷிதர்களாய், அசைவர்களாய் சிவாகம தமிழ்வேத நிந்தகர்களாய், அந்நியமதஸ்தர்களாயுள்ள ஸ்மார்த்தர்களை, சிரார்த்தம் விவாகமுதலிய கருமங்களுக்குச் சற்பாத்திரரென மதித்து அவர்களுக்கு அன்னதானம் முதலியன செய்தல் புண்ணிய மென மயங்குகின்றனர்.

“வைதிகப்பிராமணர் ஆயிரம்பேருக்கு அன்னதானஞ் செய்தபலனும் சமய தீக்ஷை பெற்ற ஒருசைவருக்கு அன்னதானஞ் செய்தபலனும் ஒக்கும். வைதிகப்பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்தபலனும் விசேட தீக்ஷை பெற்ற ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலனும் ஒக்கும். வைதிகப்பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்தபலனும் நிர்வாண தீக்ஷைபெற்ற ஒருவருக்கு அன்ன தானஞ் செய்தபலனும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்தபலனும் சைவாசாரியர் ஒருவருக்கு அன்ன தானஞ்செய்த பலனும் ஒக்கும். வேதாந்த மகாவாக்கியத்தையறிந்த கோடி பிராமண சன்னியாசிகள் கூடினும், நிர்வாண தீக்ஷை பெற்று, சித்தாந்த நூல்களாகிய சிவஞான நூல்களை யோதி, பதி பசு பாச மென்னும் திரிபதார்த்தத்தின் லட்சணங்களை யறிந்த ஒரு சைவருக்குச் சமமாகார்கள்'' இது சிவவாக்கிய சிவாகம நூற்றுணிபு. அன்றியும் சிவாகமத்தின்படி ஒழுகி, தமிழ்வேதத்தைத் தென்னாடெங்கும் பரவச் செய்து, சைவசமயத்தை ஸ்சாபித்து, சிவமாந்தன்மைப்பேறும் பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். இவ்வுண்மை, நாயன்மார்களின் 'சரித்திரஞ் செய்தருளிய தெய்வச் சேக்கிழார் என்ற வேளாளரை அநபாய சோழமகாராஜா, யானைமீதேற்றித் தாமே வெண்சாமரம் வீசி நகர்வலஞ் செய்வித்தபொழுது தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும் வேதபாராயணஞ் செய்து கொண்டு வந்தார்களென்று, அத்தில்லைவாழ் அந்தணரில் ஒருவராகிய உமாபதிசிவாசாரியார் தமது சேக்கிழார் புராணத்தில் கூறியிருக்கிறார். அங்ஙனமாகவும் இக்காலத்தில் ஸ்மார்த்த பிராமணருட்பலர் இவ்வறு பத்து மூன்று நாயன்மார்களை வழிபடக்கூசுகின்றனர். அவர்கள் உற்சவங்களில் வேதபாராயணஞ் செய்யாது மறுக்கின்றனர். அவர்கள் அருமை பெருமைகளைச் சிறிதுஞ்சிந்தியாது அவர்களை வேண்டியவாறே நிந்திக்கின்றனர். உலகமுய்யும்படி அவர்கள் அருளிய தமிழ்வேதங்களை அவமதிக்கின்றனர். இது எவ்வளவு அதிபாதகம்! விபூதிருத்திராக்ஷங்களைத் தரித்துக்கொண்டு அச்சின்னங்களுக்குரிய சிவபெருமானோடு பசுக்களை (ஆன்மாக் களை) சமமெனக்கூறியும், சிவவாக்கிய சிவாகமங்களை நிந்தித்தும், அச்சிவபெருமானுக்குத் துரோகிகளாய் ஒழுகும் இவர்கள் மற்றெப்பாதகந்தான் செய்யக்கூசுவார்கள்.

ஐயையோ! இச்சிவத்துரோகிகளை நம்சைவசமயிகள் வணங்குதலும் இவர்களிடத்தே புசித்தலும் இவர்களை விவாகம் சிரார்த்த முதலிய தானகருமங்களில் சற்பாத்திரமென வரித்துப் பூஜித்தலும் எவ்வளவு பெருங் கொடும்பாவம். சைவசமயிகளே ! நீங்கள் பெறும் சமயம் விசேடம் முதலிய தீக்ஷைகளும் நீங்கள் அனுஷ்டிக்கும் சந்தியாவந்தனம் சிவபூஜை முதலிய கிரியைகளும் உங்களுள் இறந்தவர் பொருட்டுச் 'செய்யப்படும் அந்தியேஷ்டி முதலிய கிரியைகளும், நீங்கள் சேவிக்கும் தேவாலயங்களில் செய்யப்படும் பிரதிஷ்டை உற்சவம் பிராயச்சித்தம் முதலிய சகலவிஷயமான கிரியைகளும் விதித்த நூல்கள் சிவாகமங்களே. இச்சிவாகமங்களின் உயர்வையும் அவற்றில் விதிக்கப்பட்ட சிவதீக்ஷை சைவானுஷ்டானம் முதலியவற்றின் மேன்மையையும் சிவமந்திரமாகிய ஸ்ரீ பஞ்சாட்சரத்தின் மகிமையுமே சகல வேதாகம புராணங்களிலும் பேசும்

இவ்வுண்மைகளையுணராது, இச்சிவாகமங்களையும், அவற்றின் படி ஒழுகிச் சிவமாந்தன்மைப் பேறுபெற்ற உண்மைநாயன்மார்களையும், அவர் கள் உலகமுய்யும்படி அருளிய தமிழ் வேதங்களையும் நிந்திக்கும் ஸ்மார்த்தர் களை, அச்சிவாகமங்களை உண்மை நூலெனக்கொண்டு அவற்றின்படி ஒழுகப்புகுந்த நீங்கள் யாவர்களாகக் கருதியொழுகல் வேண்டும்?

உலகத்துட் சாதிபேதம்போல, சற்சமயமாகிய சைவசமயத்தினும் சமயநடைபற்றி முதற்சாதி, இரண்டாஞ்சாதி, மூன்றாஞ்சாதி, நான்காஞ்சாதி, நீச்சச்சாதியென ஐந்து சாதிகள் கொள்ளப்படும். சிவாகமத்தில் விதிக்கப்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவாது நடந்து சிவானந்தப் பெரும் பேறு பெற்ற சிவஞானிகளீலே முதற்சாதி, சிவயோகிகள் இரண்டாஞ்சாதி, சிவகிரியையாளர் முன்றாஞ்சாதி, சிவசரினாயாளர் நான்காஞ்சாதி, இந்நெறிகளிலுள்ளவர்களையும் அவர்கள் சாஸ்திரமுதலிய வற்றையும் நித்திப்பவர்கள் சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி (தொடுதற் குரிய அருகரல்லாத நீச்சச்சாதியெனப்படுவர்.) –

சமயப்பிரவேசம்.

சைவாசாரியரை அடைந்து, சமய தீக்ஷை பெற்றுச் சமயப்பிரவேசம் செய்து கொண்டாலொழிய ஒருவன் சைவனாக முடியாது. சமயதீக்ஷைபெறாதவன் எச்சாதியைச் சேர்ந்தவனாயிருந்தாலுஞ் சரி, சமயத்தில் அசைவனாகவே கருதப்படுவான்.'சூதசங்கிதை முதலிய நூல்களில் சைவர் கள் தமது சமய ஆசாரங்களில் பிறழாமலிருக்க வேண்டுமெனவும், அந்நிய சமயர் ஆசாரங்களை அனுசரிக்கக்கூடாதெனவும், அனுசரிப்பவர்களைத் தொடவுஞ் செய்தல் கூடாதெனவும் கூறியிருக்கிறது. சுத்த சைவ சமயமானது கேடுணாதிருந்த காலத்தே பிளவுபட்டுப்போன வீரசைவர்கள் இன்றைக் கும் ஆரியப்பிராமணர் முதலிய அசைவர்களை மேற்கண்டவிதமே நடத்தி வருகின்றனர். சைவமயத்தை மெய்யெனக் கருதுகின்றவர்கள் சைவாகமங்களை ஆராய்ந்தறிந்து அதன் வழி நின்றாலன்றி அதன் உடையார்களெ னப்படுதலும் அதனாற் பெறப்படும்பயனும் இல்லையாம்.

சைவசமயிகளே! நீங்கள் இவ்வுண்மைகள் யாவற்றையும் நன்றாக வாராய்ந்து சிவாகமவிதிப்படி பத்தி செய்து ஒழுகக்கடவீர்கள். இவ்வுண்மை நிலைக்கு மறுதலைப்பட்டவர்களைக் கண்டால் அவர்கள் பொருட்டு இரங்கி அவர்களுக்கு நல்லறிவுச்சுடர் கொளுத்தக் கடவீர்கள்.

இனிச்சிவாலயங்களையும் சிவ தருமங்களையும் போற்றும் சுதந்திரமும் உரிமையுமுடையவர் யாவரென்பதைச் சற்று ஆராய்வாம்.

சிவாலயங்களில் “எக்கோயில் எவ்வாகமத்தின் முறைபடி கட்டப்பட்டது அக்கோயில் அவ்வாகமத்தின் முறையே பூசைவிழா நடத்துக, மாறிச் செய்யிற் குற்றமாம்” எனக்கட்டளை யிடப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள சிவாலயங்கள் யாவும் சைவ ஆகமிகளால் கட்டப்பட்டன. இவ்வாலயங்களிற் கொடிஸ் தம்பம், பலிபீடம், கட்டிடவமைப்பு முதலிய யாவும் சிவாகமங்களில் விதித்த பிரகாரமே நிருமிக்கப்பட்டிருக்கின்றன. இஃதொன்றே இக்கோயில்கள் யாவும் ஆகமிகளாற் கட்டப்பட்டு ஆகமிகளுக்கே சுதந்தரமாயுள்ள தென்பதை எக்காலத்தும் நிலைநிறுத்தும் சாக்ஷியாயுள்ளது. இவ்வாலயங்களில் பூஜை நைமித்தியம் முதலிய நித்தியகிரி யைகளும் பிரதிஷ்டை உற்சவம் முதலிய சகலகருமங்களும் சிவாகமங்களில் விதித்தபடியே இன்றைக்கும் நடைபெறுகின்றன.

அன்றியும், இக்கோயில்களில் வேளாளர்க்கேயுரிய ஏர்நாட்டல், நாட்கதிர் கொள்ளல், முளைகொட்டல் முதலிய திருவிழாக்கள் பூர்வகாலந் தொட்டு இன்று வரை நடத்தப்படு தலால், இக்கோயில்கள் பூர்வத்தில் வேளாளராற் கட்டப்பட்டவை யென்பதை ஸ்தாபிக்கும். ஆதலின் இச்சிவாலய தருமங்களை மேற்பார்த்து நடத்துவதற்குச் சைவ ஆகமிகளாகிய வேளாளரே தகுந்த யோக்கியதையும் சிறந்த பாத்தியதையு முடையவர்கள். அங்ஙனமாகவும் சிவாகமத்தை "அநாதரணியம் பிரமாணமல்ல" வெனத் தமது பாஷ்யத்தில் இகழ்ந்தும் மாயாவாதத்தை உண்மையெனச் சாதித்துமிருக்கிற சங்கராசாரியரைக் குருவாகக்கொண்டொழுகும் அந்நிய மதஸ்தராயுள்ள ஸ்மார்த்தரைச் சைவக்கோயில்களுக்குத் தருமகர்த்தர்களாகவும் சிவமதக்கமிட்டிமெம்பர்களாகவும் நியமிப்பது மிகவும் அநீதியான காரியம்.

விஷ்ணு கோயில்களுக்கு மகம்மதியரையும், மகமதியர் கோயில்களுக்குக் கிருஸ்துவர்களையும் நியமிப்பதைவிடக் கேவலமான செய்கை. ஏனெனில் கடவுள் ஒருவர் உண்டென்று ஒப்புக்கொள்ளும் மகம்மதியரிடம் சைவக்கோயில்களையும் வைஷ்ணவக்கோயில்களையும் ஒப்புவித்தல் ஏகதேசம் சற்று நியாம் நடக்கலாம். கடவுள் இல்லையென்பதோடு நில்லாமல் தாங்களே கடவுளென்று சாதிக்கும் மாயாவாதக்காரர்களாகிய ஸ்மார்த்தரிடம், கடவுள் அன்பின் வடிவமெனக் கடைப்பிடித்திருக்கும் சைவர் கோயில்களை ஒப்புவித்தல் ஆட்டுக்குட்டிக்கு ஓநாயைக்காவல்வைத்தது போலாம். இப்பொழுது நம்மவர் கோயில்களிருக்கும் பரிதாபமான நிலைமை மேற் சொன்ன உபமானத்திற்குப் போதுமான சான்றுபகரும். ஆகமிகளல்லா தார்க்கு ஆகமிகள் கோயில்களில் ஒருவிதமான பாத்தியதையும் கிடையாது,

சைவக்கோயில்களில் தருமகர்த்தர்களாகவிருக்கும் பெருமையும் செல்வாக்கும் விரும்பும் ஸ்மார்த்தன் எவனும் முதலில் சங்கராசாரியரைக் குருவென வொப்புக்கொள்ளாது தள்ளிவிட்டு, திருக்கைலாய பரம்பரையில் வந்த சைவசமயாசாரியராயுள்ள (திருவாவடு துறைமுதலிய ஆதீன) மடாதி பதிகளின் காலில்விழுந்து சைவனாகவேண்டும். அவ்விதஞ்செய்துகொள்ளு முன்னர் அவன் சைவவேஷங்களைப் பூண்டு சைவக்கோயில்களுட் புகுதல் அடாதசெய்கையாம். வைஷ்ணவர்களும் மகமதியர்களும் தங்கள் சமய காரியங்களில் அந்நியர்களைப் புகவிடமாட்டார்கள். அவர்கள் அவ்விதக் கண்டிப்பும் வைராக்கியமும் செலுத்துவது மூடபக்தி என்றாவது மதவெறி என்றாவது இகழத்தக்கதன்று. ஒரு சமையத்தை வெளிப்படையாகத் தழுவிக் கொள்ளாதவர்களுக்கும் அச்சமயத்தில் நுழைய இடங்கொடுத்தல் எண்ணிறந்த தீங்குகளை விளைவிக்கும். சைவக்கோயில்களநேகவற்றிற்குத் தருமகர்த்தர்களாகவும் கட்டளை தாராாகவும் இருந்து வரும். மடாதிபதிகளும் சைவப்பிரபுக்களும் இவ்விஷயங்களைக் கவனித்து இதன் நியாயங்களை நமது காருண்யமுள்ள ஆங்கில துரைத்தனத்தாருக்கு எடுத்துக் காட்டுவாராகில், அவர்களுடைய உதவியும், தற்காலம் சிவமதக் கமிட்டிகளுக்கும் அதன் மூலமாய் சைவக்கோயில்களுக்கும் இனந்தெரியாமல் ஸ்மார்த்தர்களை நியமிக்கும் ஆங்கில ஜட்ஜுகளுக்கு அவ்விதம் நியமியாதிருக்கும்படி கண்டிப்பான வுத்தரவும் நிச்சயமாய்ப் பெறுவார்க ளென்பதிற் றடையில்லை. இவ்விஷயங்களில் சைவப்பிரபுக்கள் தாமே முயற்சி செய்யவும், மடாதிபதிகளை முயற்சி செய்யும்படித் தூண்டவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவ்விதம் செய்துகொள்ளாமல், அந்நியர் புகுந்து கொள்ள நம்சமயத்திலிடங் கொடுக்கும் பட்சத்தில், சைவசமயம் அருமையாகக் கொண்டிருந்த கொள்கைகளும் கருத்துக்களும் நாளடைவிற்பேதப்பட்டு அச்சமயம் முடிவில் நாசத்தையடையும்.

உதாரணமாக, ஸ்மார்த்தர்கள் மாத்திரம் தனியாக மேற்பார்க்கும் கோயில்களிலெல்லாம் தமிழ்வேதம் அவமதிக்கப்படுவது மல்லாமல் சிவபெருமானுக்குச் சோடசவுபசாரங்களில் ஒன்றாகிய தேவாரப்பணிவிடை முறைப்படி நடத்தப்படவில்லை. மாணிக்கவாசக சுவாமிகளின் திருவெம்பாவைத் திருநாள் சீராக நடைபெறவில்லை. இன்னும் கொஞ்சநாளில் இவைகளை முற்றிலும் ஒழித்துவிட முயல்வார்கள் போலும் இவற்றை யெல்லாம் நம் சைவசமயிகள் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருத்தல் இன்னும் பெருங்கேடுகளுக்குக் காரணமாகும், சமயவுண்மைகளில் ஒருவருக்குள்ள.. அபிமானமே சமயவைராக்கிய மெனப்படும்.

நம் சைவசமயிகள் ஒவ்வொருவரும், வைஷ்ணவரையும் மகமதியரை யும் போல், கண்டிப்பும் வைராக்கியமு முடையவராய்த் தங்கள் சமயகாரியங்களில் அந்நியர் நுழைந்து கொள்ளாமலும், அணுவளவும் பேதப்படுத்தாதபடியும் காத்துக்கொளல் வேண்டும். அவ்விதம் செய்யாமலிருப்பது, நம்மவர்களுக்கு நமது சமயவுண்மைகளில் போதுமான உறுதியும் திடஞானமுமில்லை யென்பதைக்காட்டும். –

சமயஞானமும் அநுஷ்டானமும்.

நாம் உண்மையெனவும் சரியெனவும் அறிந்ததை நமது அநுஷ்டானத்திற்குக் கொண்டுவருதல் நாம் உலகத்தாருக்குச் செய்யவேண்டிய தருமங்களிலெல்லாம் மிக மேலாகிய தருமமாம். அங்ஙனம் 'அநுஷ்டித்துக் காட்டுதல் ஆயிரக்கணக்காண பிரசங்கங்களையும் வெற்றுரைகளையும் விட பிறறை நல்வழிகளில் நடக்கும்படி தூண்டுதற்கு வலியுடைத்தாதலால், அது நாம் உலகிற்குச் செலுத்த வேண்டிய கடமையுமாகும், இஃதன்றியும் நாம் கற்ற அறிவைப்பயன் படுத்தவேண்டுமானால் அவற்றை நாம் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவராத அறிவையுடைத்தாயிருப்பதைக் காட்டிலும் அறிவில்லாத மிருகஜா திகளாய்ப் பிறத்தல் நன்று. அளவிறந்த சாஸ்திரங்களைக் கீற்றுத் தேர்ச்சியடைந்தவர்களைவிட அவற்றில் ஒரு சிறிது பாகத்தேயேனும் அனுஷ்டானத்திலுடையவனே மேலானவன். அறிவில்லாத மனிதன் அனுஷ்டானத்திற் கொண்டு வராதிருந்தல் மன்னிக்கத்தகுந்தது. அனுஷ்டானமில்லாத மனிதன் எவ்வளவுக் கெவ்வளவு அறிவும், கல்வியும், அடையப்பெறுகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாகவே இகழப்பட. வேண்டும்.  

நமது தேசத்தில் ஞான சாஸ்திரங்கள் பலவுளவாயினும் அவற்றை ஆராய்வோரும் படிப்போரும் பலர் இருப்பினும், அனுஷ்டானங்கள் - முற்றும் விரோதமாயிருப்பது உயர்ந்தோர் யாவரானும் பரிதபிக்கத்தக்கது. இந்து ஒருவன் எத்தனை சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவனாயிருந்தாலும், அல்லது எவ்வளவு பெரிய தத்துவ ஞானியாயிருந்தாலும், தனது அபிப்பிராயங்களின் உண்மைகளை எவ்வளவு உறுதியாய் அவன் உணர்ந்திருந்த போதிலும், அவற்றின்படி தான் நடந்து தன் பந்துக்களையும் தான் சுற்றத்தவரையும் நல்வழிப்படுத்த முயல்வது அவசியமான கடமையென அவன் ஒருக்காலுங் கருதுவதில்லை. தாம் உண்மையெனவும் சரியெனவும், அறிந்ததைத்தைரியமாய் அனுஷ்டாணத்திற்குக் கொண்டுவருவதாலே திடஞானமெனப்படும். இத்திடஞான நம்மில் யாவரும் எவ்வளவு தாழ்ந்தவர் களும் போக்குப்புகள் சொல்லாதபடி அனுசரிக்கக்கூடிய தருமமு கடமையுமாம். தன் மனதில் உண்மையெனவும், சரியெனவும் அறிந்ததைத் தான் செய்யும் ஆற்றலில்லாதவன் புருஷத்தன்மை யுடையவனாகமாட்டான். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா முதலிய நாட்டிலுள்ளவர்கள் சிற்சில சாஸ்திரங்களில் தவிர இந்தியர்களை விட அதிகமாய்ப் படித் தவர்களெனச் சொல்ல முடியாது.. இந்தியர்களை விட ஐரோப்பியரிடத்து மிகுதியாய் விசேஷமாயுள்ளதும் அவர்களை யாவரும் கௌரவப்படுத்தும் படியான மேன்மையடையச் செய்வதும் அவர்களிடத்துள்ள திடஞானமே. இத்திடஞானமே புருஷர்களுக்குரிய குணங்களிலெல்லாம் மிகச்சிறந்ததும். இவ்வொருகுணத்தின் வல்லபத்தினால் ஐரோப்பியர் மற்றெல்லாச்சாதியாரையும் விட அறிவிலும் நாகரீகத்திலும் சிறந்தது. உலகத்தை யெல்லாங் கட்டியாளும் படியான கீர்த்தியும் பெருமையும் சம்பாதித்துக்கொண்டார். ஐப்பானியரைத் தற்கால நாகரீக நிலையில் இவ்வளவு தூரம் உயர்த்தியதும், அவர்கள் ஐரோப்பியரிடமிருந்து கற்றுக்கொண்டதைத் தைரியமாய் அனுஷ்டித்தது திடஞானமே. இத்திடஞானமில்லாத மனிதன் எக்காரியங்களையும் சாதிக்கமாட்டான், இத்திடஞான மில்லாத மனிதன் "கலை யெலாமுணர்ந்தானேனும், கரிசறத்தெளிந்தானேனும், மன மயலகன்றானே னும், மலையென உயர்ந்தானேனும்" மக்களுட் பதரெனவே இகழப்படுவான். ஆதலின் இந்தியாவின் குறைகளை நன்கு உணர்ந்து விவேகானந்தர், யூகித்துச் சொல்லியபடி நமக்கு இப்பொழுது வேண்டுவது ஆண்மகனாகச் செய்யுங்கல்வியே ஆண்மகனாகச் செய்யும் கோட்பாடுகளே நமக்கு வேண்டும். இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளுமே நமக்கு வேண்டும். நம்மனசில் சரியென அறிந்ததைத் தைரியமாய் அநுஷ்டிக்கும் திடச்சித்தமே நமக்கு வேண்டும். மனதிலொன்றும் செய்கையிலொன்று மில்லாத ஒருமைப்பாடும் திடஞானமுமே நமக்கு வேண்டும்,

சைவசமயத்தின் அருமையும்.

இனி, சைவசமயத்தின் அருமையும் அதன் விரிவையும் சிறிது ஆராய்வாம். சைவசமயத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகமேலான கருவி ஞானம், சிவஞானமே முத்திக்கு வாயில் எனக்கூறப்பட்டது. சிவம் = கடவுள், ஞானம் = ஒருபொருளின் தன்மையை உள்ளபடி அளித்தல். கடவுளின் தத்துவத்தைச் சந்தேகம் விபரீதமின்றி உள்ளபடி உணர்வதே முத்தியையடைதற்குச் சிறந்த உபாயமென சைவசமயம் போதிக்கும். எல்லாச் சமயங்களும் இப்பரம் பொருளினியல்பையே தங்களாலியன்ற மட்டும் அறிய முயற்சி செய்கின்றன. சமயகோடிகளெல்லாம் தந்தெய்வம் எந்தெய்வமென்றெங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது ஒன்றேயாத லால், அச்சமயங்களின் கொள்கைகளெல்லாம் சைவசமயத்தினுடன்பாடே, "விரிலிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே. எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கேற்றதாமே” தேவாரச் சைவசமயமானது எல்லாச் சமயங்களையு முண்மையென ஒப்புக்கொண்டு எவற்றையும் பழியாது. அவை ஒவ்வொன்றும் மனிதரது அறிவு சுபாவத்தின் ஒவ்வோர் பகுதிக்கும் ஏற்ற தென்றும் அவர்கள் அப்பகுதியைத் தாண்டி மேற்செல்லும் பொழுது சற்று மேற்சமயங்களை - யநுசரிப்பார்களென்றும், கடைசியில் சித்தாந்த சைவமாகிய சுத்தாத்துவித நிலையையே வந்த சைவர்களென்னும் சொல்லும் சைவசித்தாந்தமே. அந்தச் சுத்தாதுவித நிலையென்பது  “பொய்கண்டார் காணாப் புனித மெனும் அத்துவித மெய்கண்ட நாதன ருள்மேவு நாளெந்நாளோ''  என்ற தாயுமானவர் வாக்காலறிக. ஈண்டுப் பொய்கண்டாரென்றது உபநிஷதங்களின் முடிவுப்பொருள் கேவலாத்து விதம் அல்லது மாயாவாதம் எனவும், விசிட்டாத்துவித மெனவும், பேதாத்துவித மெனவும் விபரீதப்பொருள் கொண்ட ஏனை ஆசாரியர்களை. மெய்கண்டநாதன் என்றது அத்துவிதத்தின் உண்மை நிலையிதுவெனக் காட்டிய சைவசித்தாந்தத் தலைவராகிய மெய்கண்ட சிவாசாரியரை. இவர்தாம் ' திருக்கைலாய பரம்பரையில் வந்த சந்தான ஆசாரியருள் முதல்வர். இவர் வெளியிட்ட சிவஞானபோதமே சைவசித்தாந்த சாஸ்திரங்களுக்கெல்லாம் முதனூல். ஆகமப்பொருள்கள் ஒன்றோடொன்று முரணுவனவாக மலைந்துவினவிய நந்தியம்பெருமானுக்கு அம்மலைவு தீர்தற்பொருட்டுச்சிவ பெருமானால் உபதேசிக்கப்பட்டது இச்சிவஞானபோதமே (திருப்பெருந் துறையில்) இன்னு மலர் தலையுலகில் புறவிருளை நீக்கிப் பொருள்களைக் கண்ணுக்குக் காட்டுதற்கு எழுந்த சூரியன் போல, அநாதி மலமாயுள்ள அகவிருளை நீக்கி, சிவபரம்பொருளை ஆன்மாவிற்குக் காட்டி அநுபூதி நிலைபெறுவதற்கு ஒரு ஞானபாநுவாய் எழுந்ததும் இச்சிவஞானபோதமே, தமிழ் வேத சிவாகமங்களின் உண்மைப்பொருளை விளக்கிக் கடவுளின் தத்துவத்தை உள்ளபடி காட்டுவதும் இச் சிவஞானபோதமே.

தாங்கள் கடவுளின் சொரூபம் என அறிதல் மாத்திரையே ஞானம் என்றும் அஃதேமுத்திக்கு வழியென்னும் சமயங்கள் போலல்லாது சைவ சமயமானது “இலங்கு பொருளனைத்தும் ஈசன் கோயில் எனக்கருதி" எல்லா மக்களிடத்தும் எல்லா ஜீவன்களிடத்தும் பேரன்பும் கருணையுஞ் செலுத்துதலே முத்தி நெறிக்கு ஆதாரமா யுள்ளதெனப் போதிக்கும். எல்லா மனிதரையும் எல்லா ஜீவர்களையும் அளவின்றிப் பெருகும் பேரன் போடு பார்த்தல் ஜீவகாருணிய வொழுக்கமாம். இஜ்ஜீவகாருணிய வொழுக்கமே நம்மை இறைவன் அருளுக்கு ஆளாக்கிப் பேரறிவையும் முத்தியையும் தரும். ஜீவகாருணிய வொழுக்கமின்றி நாம் இறைவன் அருளுக்குப் பாத்திரராகமுடியாது. இறைவன் அருளின்றி முத்தி சித்தியாது.


“கொழுந்தன்பு செய்து அருள் கூற வல்லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே"
அன்போடுருகி யகங்குழைவார்க் கன்றி
என்போன் மணியினை யெய்த வொண்ணாதே"      திருமந்திரம்.

"விறகிற்றீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின் றுளன் மாமணிச் சோதியான்.

(அன்பு) உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் = (ஞானம்)
முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே”  - (தேவாரம்)

என்பிலதனை வெயிற் போலக் காயுமே
அன்பி லதனை யறம்"                            (திருக்குறள்)

''எவ்வுயிரும் என்னுயிர்போ லெண்ணி இரங்கவும் நின் றெய்வவருள் கருணை செய்வாய் பராபரமே” தாயுமானவர்.

சுய நலங்கருதி ஏற்படுத்தும் ஏற்றத் தாழ்வுகளும் சாதி வித்தியாசங்களும் சைவசமயத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாம்.

“ஆதிபேதந் தானிலாமை யறிந்தவர்
சாதிபேதஞ் சிறிதுஞ் சாற்றுவரோ - சாதிகுலம்
நல்லார் தொழத்தக்க ஞான முடையவரே
அல்லார் இழிகுலத்தா ராம்"                 - தத்துவராயர்.

''சாத்திரம்பல பேசுஞ் சழக்கர்காள் = (பொய்யர்)
கோத்திரமுங் குலமும் கொண்டென் செய்வீர்
பாத்திரஞ் சிவமென்று பணி திரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே”        - (தேவாரம்)

சாதி வித்தியாசங்களைத் தான் பாராட்டுவதும் உடந்தையாயிருந்து போதிப்பதும் உண்மையான ஞானியின் லட்சணமல்ல. அவற்றை யெல்லாம் கடந்தவனே துறவறம் பூணுதற்கு யோக்கியதையுடையவன். சன்னியாசியாயுங் கூட தான் தமது சாதி துவேஷ அபிமானத்தை வைத்துக் கொண்டு தாங்களை மகாஞானி என்றும் லோக குருவென்றும் சொல்லிக் கொள்ளுதல் என்ன மடமை ! என்ன வேஷம்!!

இறைவன் லட்சணத்தையும் ஆன்மாவின் சம்பந்தத்தையும் பற்றியுள்ள நுட்பமான உண்மைகளையும் இரகசியங்களையும் அறிவதற்குப் படிப்பும் அறிவும் மாத்திரம் போதா. மன மானது எவ்வித அபிமானமும் அழுக்குமின்றி தூய்மையும் பரிசுத்தமும் பக்குவமடைந்திருந்தா லொழிய 'உண்மையைக் கிரகித்து உட்கொள்ளுதல் முடியாது. இதனையே மலபரிபாக மென்பர் பெரியோர். ஆனதுபற்றிச் சாதிகுலம் சமய பேதங்களைக் கடந்து நிர்வாண தீக்ஷை பெற்றவரே சிவாகமத்தின் ஞான காண்டத்தை ஓதுதற்கு அதிகாரமுடையவ ரெனவும்,

"வையமாச்சிரம மென வைத்தவும்
செய்ய சாதிகுல மெனச் சேர்த்தவும்
ஐயமின்றி யறவிட் டறிந் தார்
செய்ய ஞானத்திரளைச் சிந்திக்கவே"

எனவும், 'நடுவு நின்றார்க்கின்றி ஞானமில்லை' எனவும் சைவ நூல்கள் கூறுவதாயின. தான் தமது என்னும் அகங்காரங்கள் முற்றிலும் அழிந்தாலன்றி மலபரிபாகம் உண்டாகமாட்டாது, ஞானம் உதியாது அகம்பிரமம் நான் தான் கடவுள் என்ற ஆங்காரங்கள் மேலிட அறிவுகுன்றும். பரிபூரணநிலை கிட்டாது. அதனாலன்றோ இம்மாயாவாதிகள் சிவப்பிரக்ஞையே இல்லாமற் போகக் கடவது என முற்காலத்தில் நம் தமிழ் முனிவர்களால் சபிக்கப்பட்டனர். தான் தமது சாதியென்னும் துவேஷங்கள் முற்றிலும் நசித்தாலொழிய அத்துவிதநிலை கைகூடாது. மலபரிபாகம் உண்டாகும் பொருட்டு, இயேசு தமது சிஷியர்களின் பாதங்களைத் தமது கரங்களினால் கழுவித் தமது வஸ் திரத்தினால் துடைத்தனர்.

புத்தர், பள்ளர் பறையர் சேரிகளில் சென்று பிச்சையெடுத்து உண்டனர். இதுதான் உண்மையான ஞானியின் லட்சணம். போலிஞானிகளினின்று உண்மைஞானிகளைக் கண்டறிந்து கொள்வதற்குத் தவறுதலில்லாத உபாயமிதுவே. நம் செயலற்று, நாமற்று நமது சாதி, குலம், சமயபேதங்களற்று, எல்லா மக்களையும் நம் சகோதரர் போலவும் மன்னுயிரெல்லாம் தன்னுயிர்போலவும் பேரன்பு செலுத்தி வாழ்தலே கடவுளின் அருளைப் பெருதற்கு நிச்சயமானவழி. இதுதான் சைவசமயத்தால் போதிக்கப்படும் உண்மையாம். ஊழிபெயரினும் இவ்வுண்மை பெயராது ஆதலின் “சைவத்தின்மேற் சமயம் வேறிலை" எனவும் "சைவநெறியே உய்யுநெறி" எனவும் சான்றோரால் போற்றப்பட்டது.

இன்னும் இச்சமயக் கொள்கைகளை ஆராயுமிடத்து உலகத்திலுள்ள மற்றெல்லாச் சமயங்களும் போற்றத்தகுந்த மிகமேலான கொள்கைகளையும், அவற்றினுக்கு எட்டாத மிக அருமையான கருத்துக்களையும் தன்னுள்ளடக்கித் தான் அவற்றினும் விரிந்து அவைகளுக்கு ஒரு ஆதாரமாகவும் தாயகம் போலவும் நின்று, சாதிகுலம் சமயபேதம் ஒன்றேனுமின்றிச் சுத்த சன்மார்க்க சித்தாந்தத்தைப் போதிப்பதும் இச்சைவசமய மொன்றே என்பது தெற்றென விளங்கும்.

இது பற்றியன்றோ “அந்தோ! ஈது அதிசயம் இச்சமயம் போலின்று அறிஞரெல்லாம். நடுவறிய வணிமாவாதி வந்தாடித்திரிபவர்க்கும் பேசா மௌனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றுமற்றும், இந்திராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இதுவன்றி தாயகம் வேறில்லை யில்லை, சந்தான கற்பகம் போல் அருளைக்காட்டத்தக்க நெறி இந்நெறியே தான் சந்மார்க்கம்" எனத்தாயுமான வரும் வற்புறுத்திக் கூறினாரென்க.

சைவமடாதிபதிகளின் கடமை.

இத்துணைப் பெருமை வாய்ந்து சகல சமயங்களையும் தனக்கு உபகரணமாகக் கொண்டு தான் அவற்றிலும் விரிந்து மேலாக விளங்கும் ஒப்புயர் வற்ற சைவசமயத்திற்குத் தலைவராக விருக்கும் பெரும்பாக்கியம் படைத்தவர் திருவாவடுதுறை, தருமபுரம் முதலிய மடாதிபதிகளே. விலைமதிப் புக்கடங்காத பொக்கிஷமாகிய இச்சைவசமயத்தைக் கேடுணாமல் காத்துப் பரிபாலனம் செய்யும்படி எண்ணிறந்த கோடி திரவியங்கள் மடாதிபதிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றன. அவ்விதம் செய்து கீர்த்தியையும் புகழையுந் தேடிக் கொள்ளுதல் மடாதிபதிகளின் முதற் கடமையாகும், சைவசமயத்தின் உண்மைகளைக் கல்வி அறிவு சைவவொழுக்கம் முதலியவற்றால் மேம்படுத்துதல், சைவபால்யர்களுக்கு அங்கங்கே பாடசாலைகள் ஏற்படுத்திச் சைவசாஸ்திரங்களைச் சொல்லி வைத்தல், உலகத்தாருக்கு விவேகம் உதிக்கும் பொருட்டுச் சைவ நூல்கள் சைவபத்திரிகைகள் அச்சிட்டு வெளிப்படுத்தல் சைவசமயிகள் அந்நியசமயங்களால் இழுக்குப்படாமல் அவர்களைப் பாராட்டிச் சீர்படுத்தல், சைவசமயம் நாளுக்கு நாள் க்ஷணித்து அருகிப் போகாமல் மென்மேலும் தழைத்தோங்கி வளரும்படி உண்டான வழிகள் யாவற்றையும் தேடிச்செய்தல், சைவமடாதிபதிகளின் பெருங்கடமையும் சுதந்தரமுமாகும். அங்ஙனம் மடாதிபதிகள் தமது சமயத்தின் உண்மைகளையும் அதன் பெருமைகளையும் எவ்வளவுக்கெவ்வளவு பிரசித்தப் படுத்துகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தான் அம்மடாதிபதிகளின் கெருமையும் பிரகாசிக்கும்.

அவ்விதம் செய்து கொள்ளாத தோஷத்தால், சைவமடாதிபதிகளும் சைவப்பிரபுக்களும் வைதிகலௌகிகநெறி என்னும் இரண்டினும் தாங்கள் முன்னடைந்திருந்த மகிவுண்ணதமான நிலையினின்றும் தாழ்த்தப்பட்டு அந்நியசமயாசாரியர்களாலும் அந்நியசமயத்தவராலும் அவமதிக்கப்படு கின்றனர். ஐரோப்பியர்களுட் சிறந்த தத்துவ சாஸ்திரிகளும் அதிசயித்துத் தலைசாய்க்கும் வண்ணம் பரமஞானம் போதித்துள்ள தமது சமயப்பெரு மையை அறியாமல், சைவசமயிகள் அந்நியசமயாசாரியர்களை படுத்து அவர்களால் இழிவுறுத்தப் படுகின்றனர். சைவபிரபுக்களோ யானை, குதிரை, 'லோக்குறா” போன்ற டாம்பீகப்பட்டம் முதலியவற்றால் வசிகரிக்கப்பட்டு, அந்நியசமயாசாரியர் கால்களில் பணங்களைக் கொட்டுகின்றனர். அன்றியும் உலகத்திலுள்ள சமயங்களையெல்லாம் தன்னகத்தடக்கித் தான் அவற்றினும் விரிந்து மேம்பட்டு விளங்கும் சைவசமயத்தலைவராகிய மடாதிபதிகளைச் சூத்திரக் குருக்கள் என வாய்கூசாது சொல்லத் துணிந்தனர்.

“பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் கேட்பாரின்றிக்
கீழ்சாதி யானானே."

என்ற பழமொழிக்கிணங்க, முற்காலத்தில் பறையறைக் காட்டிலும் எவ்வளவோ கேவலமான நிலைமையிலிருந்த பார்ப்பார் தங்களைக் கேட்டு நல்வழிப்படுத்த ஆசாரியர் ஏற்பட்ட காரணத்தினால் தற்காலம் வேளாளரோடு சமமாக எட்டிப்பார்க்கும் ஒழுக்கத்திற்கு வந்தபோதிலும், இனி வேளாண் பிரபுக்களும் அவர்கள் சமயாசாரியர்களும் சும்மாவிருந்தால், அவர்களை மித்திரபேதம் முதலிய நானாவித உபாயங்களால் வென்று தங்களிலும் கீழ்ச்சாதியென ஏமாற்றி ஒப்புக்கொள்ளும்படி செய்வார்கள் போலும். வேளாளர் திராவிடரென்பதும், அவர் ஆரியப் பிரமணரில் ஒரு விதத்திலும் தாழ்ந்தவரல்ல வென்பதும் அவரை ஆரியர் செய்த நான்கு வருணங்களுள் ஒன்றாகப் பேசுவது ஆங்கிலேயர் ஐரோப்பியரை அவ்வாறு சொல்லுதல் எவ்வளவு பொருத்தமுடையதோ அவ்வளவே பொருத்த முடைய தென்பதும் சரித்திர ஆராய்ச்சி நிபுணர்களால் நிச்சயிக்கப்பட்ட விஷயங்களிலொன்று. இதன் உண்மை வேளாளரின் சாதியியல்பைப்பற்றி ஆராயுமிடத்து நன்கு விளக்கப்படும். சூத்திரர் என்ற பதம் வடமொழியில் அடிமைகள் எனப்பொருள்படும். சூத்திரர் அடிமை ஊழியத்திற்கே சிருஷ்டிக்கப்பட்டவர்களென்றும், துவிஜர்களாகிய மற்ற மூன்று ஜாதியார்களுக்கும் அடிமைத்தொழில் புரிவதே அவர்களுக்குச் சிறந்த அலுவலென்றும், அவர்களை அவ்விதம் கொண்டூழியம் செய்யும்படி அரசன் கட்டளையிட வேண்டுமென்றும் மனுஸ்மிருதியால் விதித்திருக்கிறது. புத்த கம் 1 அத்தியாயம் 91, 123, 410, 413, 414, இவ்விதம் அடிமைத் தொழில் புரிவதற்குச் சூத்திரர் அடையும் பலன், பிராமணன் தின்று மீந்த சோறும் அவன் உடுத்திக்கழித்த பழந்துணிகளும், சாவியாய்ப் போன தானியங்களும், பழமையாய்ப் போன அவன் வீட்டுச் சாமான்களுமே சூத்திரனுக்குக் கிடைக்கும். புத்தகம் 10. அத்தியாயம் 125. வட இந்தியாவில் சூத்திரர்களை இன்றைக்கும் மற்ற மூன்று சாதியாரும் நடத்தி வருவது மேற்கண்ட முறைப்படியே, இனித் தென்தேசத்தில் “உழுதுண்டு வாழ் வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்ற திருவாக்கின்படி வேளாண்மையே தங்களுக்குச் சிறந்த தொழிலெனக் கைக்கொண்டு  'செட்டிமக்கள் வாசல்வழி செல்லோமே செக்காரப் பொட்டி மக்கள் வாசல்வழி போகோமே, முட்டி புகும் பார்ப்பாரகத்தை எட்டிப் பாரோமே யெந்நாளும் காப்பாரே வேளாளர்காண்" எனக் கம்பரால் புகழும்படி கீர்த்திகொண்ட ஒழுக்கம் அறிவு முதலியவற்றில் தங்களுக் கிணையாகச் சொல்லக் கூடிய சாதி ஒருவரு மின்றி விளங்கும் 'வேளாளரைச் சூத்திரர் என்னில், என்ன அகங்காரம்! என்ன மதம்! என்ன கொழுப்பு! எவ்வளவு அக்கிரமம்! எவ்வளவு பொருத்த முடைய தென்பதை சைவமடாதிபதிகளே? சைவப்பிரபுக்களே? கவனியுங்கள். “யாங்களே கடவுளென்றிடும் பாதகத்தவரென" தாயுமானவரால் இழித்துக் கூறப்படும் இவர்கள் மற்றெப்பாதகந்தான் - செய்யக்கூசுவர்களென்பதை நிதானியுங்கள்.

சூத்திரரென அந்நியர்களாலிடப்படும் இழிவுப் பெயர்களை மறுதலியாது ஏற்றுக்கொள்பவர் அப்பெயர்களாலேற்படும் கேவலத்தையும் இழிவையும் சுமப்பார்களென்பதில் தடையில்லை. தற்காலம் ஆங்கில துரைத் தனத்தாரால் அங்கீகரிக்கப்பட்டு இந்துக்கள் யாவரையும் கட்டுப்படுத்தும் இந்துலாவினுங்கூடச் சூத்திரருக்கு ஒரு சட்டமும் பூணூலணிந்த மற்றச் சாதியாருக்குப் பிரத்தியேகமான அநுகூலச் சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அச்சட்டங்கள் இனந்தெரியாமல் தங்களைச் சூத்திரரென ஒப்புக்கொள்பவர்களை நிரம்பபாதிக்கும். தம் நாடுதேடிப் பிழைக்கவந்த விருந்து அதிதிகளென மரியாதை பற்றி செய்த சில உபசார வழக்குகளை எல்லாம் சுதந்தரம் போல் கொண்டாடுகின்றனர். ஆதலால் உங்களை அநீதியாக, உண்மைக்கு விரோதமாகச் சூத்திரரென்று யார் சொன்னாலும் அதனையுடனே அவர்களுக்கு மாறிச் சொல்லாது பொறுமையோடு பொறுத்துக் கொண்டிருத்தல் நிர்மூடத்தனமே யொழிய வேறல்ல. இதுவரை நம்மவர்கள் தங்களுடைய பெருமையும் அந்தஸ்தும் இயல்பிலே அமைந்திருக்க அதையாவரும் அறிந்திருக்க, அதைப்பற்றி எடுத்துச் சொல்வது அவசர மல்லவெனச் சும்மாவிருந்தனர். ஆனால் தற்காலம் அவ்விதம் அடங்கி யிருப்பது யாதொரு கௌரவத்தையும் உண்டுபண்ணாமல் பெரிய கேட்டை யும் இளப்பத்தையுமே தருவதாயிற்று. உங்கள் பணத்தைக் கொள்ளையடித்ததோடு நில்லாமல் உங்கள் கௌரவத்தையும் கொள்ளையடித்து உங்களை இழிகுலத்தவரெனத் தப்பாக யாவரும் நினைக்கும்படி செய்து வந்தது போல இனியும் உங்களை அவ்விதம் பேச்சிலாவது செய்கையிலாவது எச்சாதியார் செய்ய முயற்சித்தாலும், அவர்கள் பூர்வோத்திரத்தை உலகத்தாருக்கு விளக்கி உண்மையை நிலைநிறுத்துதல் உங்கள் கடமையாகும். அன்றியும், நம் சமயத்துக்குரிய ஆசாரம் அநுஷ்டானங்களை சரியாய்த் தெரிந்து விடுதலும் அவற்றை அழுத்தமாய் அநுசரியாதிருந்ததுமே இவ்விதமாகக் கேடுகளுக்கெல்லாம் காரணமாகும். வேளாண்சாதியும் சைவசமயத்தவரும் எவ்வளவு மதிப்பும் பெருமையும் பெறுகிறார்களோ அம்மட்டு மதிப்பும் பெருமையுமே சைவ மடாதிபதிகளுக்கு முண்டு. ஆதலால் சைவா சாரங்களை மடாதிபதிகள் தம் சமயத்தவர்க்கும் கற்பித்தல் வேண்டும். அவர்கள் எல்லா விதத்திலும் மேம்பாடு அடையும் வழிகளைத் தேடல் வேண்டும்.

உலகத்தில் ஒவ்வொரு சமயத்தவரும் தங்கள் குல ஆசாரியர்களால் ஆதிரிக்கப்பட்டும் சீர்திருத்தப்பட்டும் அதன் பயனாகப் படிப்பு, உத்தியோகம் முதலிய பெருமைகளை அடைந்து தங்கள் சமையாசாரியர்களின் பெருமையையும் கௌரவத்தையும் விருத்தி செய்து வருகின்றனர். சைவசமயிகளோ தங்களைக் கவனிப்பாரும் நல்வழிப்படுத்துவாருமின்றி அறிவீன மென்னும் இருட்கடலில் மூழ்கியிருப்பது அவர் குல ஆசாரியர்களுக்குப் பெரியதோர் இழுக்காம். சைவசமயிகள் கவர்ந்துகொண்டிருக்கும் அஞ்ஞான விருளை நீக்கித் தமது சமயத்தின் பெருமையையும் தமது குலத்தின் மேன்மையையும் உணர்த்துதல் மடாதிபதிகளின் கடமை. அவர்களைக் கல்வியறிவு ஒழுக்கம் முதலியவற்றால் மேம்படுத்தித் தம் சமயத்தின் உண்மைகளையும் உண்மையான சமயாசாரியர்களையும் காட்டுவது மடாதிபதிகளின் கடமை. சைவப்பாட சாலைகள் அங்கங்கே யேற்படுத்தி நூல்களைப் படிப்பித்தல் மடாதிபதிகளின் கடமை.

கிருஸ்துவ சமயத்தவரும் அவர் பாதிரிமார்களும் தற்காலத்தில் தம் சமயத்தவருக்கு மட்டுமேயன்றி அந்நிய சமயத்தவருக்குங் கூட படித்தற்கும் தங்குவதற்கும் பல சௌகரியங்களமைந்த கட்டிடங்களும் கலாசாலைகளும் ஏற்படுத்தித் தமிழுலகைக் கடமைப்படுத்தியிருப்பது யாவரும் அறிந்த விஷயம். அதுபோல, முக்கியப் பட்டணங்கள் ஒவ்வொன்றிலும், சைவபால்யர்களுக்கு மட்டுமாவது தங்குவதற்கும் படித்தற்கும் சௌகரி யுங்களமைந்த கட்டிடங்கள், ஆஸ்டல்கள் அமைத்து அவற்றில் சிறிது பொழுது சமயநெறி போதித்தல் மடாதிபதிகளின் கடமை. சைவசாஸ் திரங்கள் ஆராய்ச்சி செய்வதற்குத் தமிழ், ஆங்கில சமஸ்கிருத கலாசாலை கள் ஸ்தாபித்தல் மடாதிபதிகளின் கடமை. அவ்விதம் சைவசமயிகளை எல்லாவிதத்திலும் முன்னுக்குக் கொண்டுவர சைவமடாதிபதிகள் முயற்சி செய்யவேண்டும். இவையன்றி மடாதிபதிகள் சைவசமயிகளின் நிலைமை யையும் அவர்களின் குறைகளையும் அறிதற்பொருட்டு ஐந்துவருஷங்களுக் கொருமுறை, ராஜப்பிரதிநிதிகளைப் போல், தமது சிஷ்யர்கள் மிகுதியாயுள்ள ஊர்களுக்குச் சுற்றுப்பிரயாணஞ் செய்யவேண்டும். அவ்வித சுற் றுப்பிரயாணங்களில் தமது ஆளுகைக்குட்பட்ட கலாசாலை, புத்தகசாலை, ஆஸ்டல்கள் மடங்கள் இவற்றைப் போய்ப் பரிசோதித்தும் ஆங்காங்குள்ள சைவப்பிரபுக்களால் உபசார மரியாதை செயப்பெற்றும், அவர்கள் குடும்பங்களில் தகுந்த பிள்ளைகளைத் தங்களுக்குப் பின் வாரிசாக நேரில் தெரிந்தெடுத்தும், சமய விருத்தி அறிவு விருத்திக்கு வேண்டிய விஷயங்களைப் பற்றி அப்பிரபுக்களோடு ஆலோசித்தும் தங்கள் தலை நகருக்குத் திரும்ப வேண்டும். தமது சிஷ்யர்களில் தகுந்த பிரபுக்களில் சிலரைத் தமது உதவிக்கு ஒரு ஆலோசனைச் சங்கமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்விதம் செய்யும்படி மடாதிபதிகளைச் சைவப்பிரபுக்கள் தூண்டல் வேண்டும், பிரார்த்திக்க வேண்டும், வற்புறுத்த வேண்டும். எந்த மடாதி பதிகளும் இங்கனம் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து அதற்குக்கக்க நல்ல முயற்சி எடுத்துக்கொள்வார்களே யானால், அவர்களே ஜனங்களால் பூஜிக்கத் தகுந்தவர்கள்.

“பரோபகாரம் ஞானிகள் விவகாரம்” என்பதனையும் தங்கள் கைவச முள்ள பொருள் சமயவிருத்தி கல்வி விருத்தியின் பொருட்டுக் கொடுக்கப் பட்டதென்பதையும் சிறிதும் சிந்தியாமல் தங்கள் சரீர அனுபோகங்களும் உலக இன்பங்களுமே பெரிதென நினைத்து அவற்றிலேயே தங்கள் பூரண கவனத்தையும் முழுமனதையும் செலுத்திக்கொண்டிருத்தல் ஞானிகளின் லட்சணமன்றாம்.

"ஞானியின் ஆட்டமெல்லாம் ஞாலத்தா ருய்வதற்கே
ஞானியின் ஓட்டமெல்லாம் ஞாலத்தார் செழிப்பதற்கே
ஞானியின் நாட்டமெல்லாம் ஞாலத்தார் பருவத்திற்கே
ஞானியின் தேட்டமெல்லாம் ஞாலத்தார்க் கருள்வதற்கே."

கணப்பொழுதில் அழிந்துபோகும் இந்தமானிட உடம்பினால் அநுபவிக்கப்படும் போகயோக்கியங்களே மானுடப்பிறவியின் பயனெனக் கருதி அவற்றிலேயே தங்கள் காலம், வாழ்நாள் முழுவதையும் கழித்துக்கொண்டிருக்கும் மடாதிபதிகள் தமது உன்னதஸ்தானத்தை நிர்வகிக்கத் தகுதி யற்றவரெனக் கருதப்படுவர். தமது உயர்ந்த பதவியும் தம்மைப் பாது காக்க வலியற்றதென்பதை உணரும்படி நேரிடும்.

C. சங்கரராயர் B. A.

சித்தாந்தம் – 1916 ௵
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், ௴


No comments:

Post a Comment