Saturday, May 9, 2020



சைவ சித்தாந்த மகா சமாஜம்
58 -ஆம் ஆண்டு நிறைவு விழா - கொடியேற்றம்

புதுவை (27 - 12 - 63)
[இராவ்பகதூர் - சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார்]

சைவசித்தாந்த மகா சமாசத்தின் ஆண்டு விழாப் பேரவையில் கொடியேற்றி வைக்கும் அருட்பணியை அடியேனுக்குச் சமாசத்தார் தந்த கருணைக்கு உள்ளங் கலந்த நன்றியைத் தெரியப்படுத்துகிறேன். ஒரு நற்செயல் தொடங்கி வைப்பதற்கும் அதனை வெற்றியுடன் முடித்து வைப்பதற்கும் அதற்கேற்ற கொடியைக் கட்டி ஏற்றி அதனைத் தம் குறிக்கோளாகக் கொண்டு வழங்குவது உலகில் எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயத்தார்களிலும் எல்லா மொழியாளர்களிலும் ஏற்பட்டிருக்கும் ஒரு பண்டைய வழக்கம். நமது பாரதத்திலும் சிறப்பாகத் தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு செயலிலும் இது விளக்கமாகப் பங்கு கொண்டுள்ளது. அரசியலிலும், வாணிபத்திலும் போர் முறைகளிலும் கொடியேற்றம் ஒரு சிறந்த செயலாக இருந்த போதிலும் அறச் செயல்களிலும் சமயச் செயல்களிலும் மிகச் சிறந்து விளங்குகின்றது.

உலகியல் விழாக்களில் கொடியேற்றம் ஒரு சிறந்த நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் சமய விழாக்களாகிய கோயில் விழாக்களிலே அது இன்றியமையாத ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமயத் திருக் கூட்டங்களிலும் கொடியேற்றம் இல்லாமல் எதுவும் தொடங்குவதில்லை. நமது தற்கால அரசாங்கம் சமயச் சார்பற்றது என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டபோதும் அதன் கொடியாகிய மூவண்ணக் கொடி, சமயச் சார்புள்ளதாகக் கலைமகள் அலைமகள் மலைமகள் என்ற முத்தேவியரின் வண்ணங்களாக வெண்மையாகிய தூய்மை, சிவப்பாகிய பொருண்மை, கருநிறமாகிய ஆற்றன்மை என்ற பண்பு கொண்டுள்ளது. அதுபோன்ற நமது சைவ சமயக் கொடியாகிய வெள்ளேறும் தூய்மை, பொருண்மை, ஆற்றன்மை என்ற பண்புகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. அக்கொடியை ஏற்றி அதனையே நம் குறிக்கோளாகக் கொண்டு வழிபடுவோமாக.

மற்ற எந்தச் சமயத்திலும் கண்டிராத ஒரு பெருமை சைவ இலக்கியத்திற்கு உண்டு. அது சமயக் கொடியைப் பற்றியது. இன்றைக்கு 750 ஆண்டுகளின் முன் சைவ இராசதானியாகிய தில்லைச்சிற்றம்பலத்தில் சந்தானாசிரியராய் விளங்கி மெய்கண்ட சாஸ்திரங்களில் எட்டு அரிய நூல்களை அருளிச் செய்த கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள், சமய சம்பந்தமாகக் கொடி கட்டும் திருச்செயலை நான்கு பெருமை பொருந்திய பாசுரங்களில் அருளிச் செய்திருக்கின்றார். அது மெய் கண்ட சாத்திரங்களில் ஒன்றாகிய கொடிக்கவி என்ற அற்புத நூல் ஆகும். சித்தாந்த பரமாக முதல் முதலில் எழுந்த கொடியேற்ற நூல் அதுவாகும். சைவ சித்தாந்தக் கருத்துக்களை வெகு நுட்பமாகத் தன்னுள் அடக்கிக்கொண்டு கொடிகட்டும் குறிக்கோளை அது விளக்குகிறது. அவ்வடியார் ஏற்றி வைத்த சைவக்கொடி இன்றைக்கும் நமது நாட்டில் ஓங்கி விளங்கிக்கொண் டிருக்கிறது.

அந்நூலில் முதற்பாசுரத்தில் தானே கொடி கட்டினதாகவும் அதனை எதன்பொருட்டுக் கட்டினேனென்றும் கூறுகிறார்.

“ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும்படிக் கொடிகட்டினனே''

என்பது அப்பாசுரம். இதில் ஒளி - ஞானம், இருள் - ஆணவம். ஆணவத்திற்கும் ஞானத்திற்கும் இடம் ஒன்றே; ஞானம் மேலிட்ட காலத்து ஆணவம் ஒளித்து நிற்கும். ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒளித்து நிற்கும். ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளித்து நின்றாலும் ஞானத்தை ஆணவமலம் பொருந்தாது. பூர்வ வாசனையினால் சிவஞானம் சற்று விளங்குமானாலும் மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்குமே அல்லாமல் அது கொண்டே நீங்க மாட்டாது; இப்படி மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கின்ற ஆன்மா, அருள் கூடும்படி தீக்கையினால் மலங்களைப் போக்கக் கொடிகட்டினேன் என்பது கருத்துரை..

ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றாயிருக்கத் தனது காரணம் கெடாமல் இருக்கிற மலத்தைத் தீக்கையினால் போக்கி மோட்சத்தை அடைவிப்போம் என்பது நுட்ப உரை. ஆகவே ஆசிரியர் சீடனுக்கு உபதேசம் செய்து தீக்கை கொடுக்கும்போது வீடு பேற்றினை அருளுவதாகக் கொடிகட்டி நிற்கிறார்.

இனி இரண்டாம் பாசுரத்தில் ஆசிரியர் அழியாத பொருள் (கர்த்தா), சக்தி (பொது), ஆன்மா, அஞ்ஞான மாகிய கேவலமலம் இவைகள் எவை எவை என்று விளக்கிக் கோபுரவாயிலில் கொடிகட்டி நிற்கிறார். மூன்றாம் பாசுரத்தில், மனம், வாக்கு, காயம் இவைகளால் எக்காலமும் தாக்காதவன்; ஆன்ம போதத்தால் அறியப்படாதவன்; எவ்வாறு தீக்கையால் அறிவிக்கப்படுவன் எனக் கூறிக் கொடி கட்டுகிறார்.

நான்காம் பாசுரத்தில் ஐந்தெழுத்து முதலிய மந்திரங்களை உச்சரித்து அதன் சொரூபத்தை அறிந்து சக்தி சிவான்மீகமாகிய எழுத்தை நெஞ்சிடை வைத்தால் சத்தி சிவனை இரண்டறக் கலப்பிப்பன் என்று கூறி ஐந்தெழுத்தால் வீட்டை அடையும்படிச் செய்யக் கொடி கட்டினதாகக் கூறுகிறார்.

ஆகவே சைவ சமயக் கொடி கட்டின ஆசிரியர் சித்தாந்தப் பொருள்களின் முடிவான ஞானத்தை விரித்துக் கூறி அதனால் ஆன்மாக்கள் உய்யும் வழியைக் கற்பித்து உறுதியுடன் கோபுர வாசலில் கொடி கட்டுகிறார். அதனை முன்னிட்டு ஒவ்வொரு சமயத் திருக்கூட்டங்களிலும் நாமும் கொடியேற்றிக் கட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அறிவுபெறும் வகையில் பற்பல சாதனங்களையும் நாம் கொள்ளவேண்டும். சிவனடியார்கள் அச்சாதனங்களைச் செய்து உலகத்திற்கு வழிகாட்டிகளா யிருக்கிறார்கள். சைவத்தைப் பரப்புவதற்கு அச்சாதனங்களே நமக்கு வழி காட்டுவன. நால்வர் சமயாசாரியர்கள் சென்றவழி, அறுபத்து மூவர் சிவனடியார்கள் காட்டியவழி, திருமுறைகளை அருளிய ஏனைய அடியார்கள் வாழ்ந்தவழி, மற்ற மெய்யடியார்கள் தோற்றியவழி, இவைகளை காம் கடைப்பிடிக்க முயலவேண்டும்.

பண்டைக்காலம் முதற்கொண்டே கோயில் வழிபாடு நமது நாட்டில் இருந்தபோதிலும், முறையாகப் பொதுமக்கள் கோயில் வழிபாடு செய்யவேண்டும் என்றும் கோயில்களில் கூட்டு வழிபாடு நடத்துவதற்கு இன்கனிசை அருட்பாக்கள் பாடவேண்டும் என்றும், நால்வர் சமயாசாரியர்கள் பல்லவர் காலம் முதற்கொண்டே ஏற்படுத்திச் சமயப்பரப்பு செய்தார்கள். தேவாராதிகள் ஓதப்பட்டன. மக்களுக்கு இறை வணக்கம் வற்புறுத்தப்பட்டது. திருமுறைகள் ஓதப்பட்டன. சோழர்களால் பெருங்கோயில்கள் கட்டப்பட்டுப் பெருந் திருவிழாக்கள் வகுக்கப்பட்டு அரசர்களால் அவைகள் ஆதரிக்கப்பட்டன. பிறகு மெய்கண்ட தேவர் முதலிய ஆசாரியர்கள் தோன்றித் தத்துவஞான நூல்களை வகுத்தார்கள். பொதுமக்கள் சமய ஞானம் பெறவே அன்னார் ஆன்மாக்கள் உய்வதற்கு வழிகள் கற்பிக்கப்பட்டன. அந்தக் காலம் முதற்கொண்டே சமயஞானம் ஊட்டப்பெற்று வழிபாடு ஒழுக்கம் முதலிய சீலங்கள் நாட்டில் தோன்றின. இந்த ஒழுக்க முறை தமிழர் தன்னுரிமை இழக்கும் நாள்வரை இருந்தது.

நாட்டில் தன்னுரிமை போய்ப் பிறமதங்கள் உள்ளே புகுந்து வரவே, மக்கள் சமயப் பயிற்சி இழந்தும் சமய ஞானம் போயும், வெறும் உலகாயதத்துள் சேர்ந்து சமய வழிபாட்டினைக் கைவிட்டார்கள். ஏனைய மதங்களாகிய இசுலாமும், விவிலியமும் இளைஞர்களையும் கல்லாதவர்களையும் தம் வயப்படுத்தின. ஆங்கிலர் ஆட்சிக்குப் பிறகு சமயச் சார்பற்ற ஆட்சிதோன்ற நாட்டில் பண்டைச் சமயங்களுக்கு யாதொரு ஒத்துழைப்பும் இல்லாமற் போய்விட்டது. அரசாங்கம் சமயச் சார்பு அற்ற தெனினும், நாட்டுச் சமய நிலையங்களுக்கு வரிவிடுத்தும் வெளிச்சமயங்களுக்கு வரியில்லாமலும் செய்துவர, - நாட்டுச்சமயங்களின் வளர்ச்சி தடைப்படுகிறது. இதனால் - அநீதி ஏற்பட்டு நாட்டுச் சமயங்களுக்குப் பெருங்கேடும் குறைவும் தோன்றுகின்றன. இந்த மாறுபாடு வெளிப் படையாகத் தென்படாவிட்டாலும் அரசியலார் வெளி விட்டு இருக்கும் புள்ளிவிவரங்களால் தெரிகிறது.






1951 முதல் 1961 வரைக் காணும் சமய நிலவரம் அடியிற்காணும் மாறுதல் கொண்டுள்ளது –

#
சமயங்கள்
1951
1961
% விவரம்
காரணம்
1
சமணம்
-
-
20% அதிகம்

2
பௌத்தம்
1.81
32.5
1671 இந்துக்கள் புத்தமதப் பிரவேசம்
3
கிருத்துவம்
83.92
107.26
மத மாற்றப் பிரசாரம் – மலைச் சாதியரில் சேர்ப்பு
4
இசுலாம்
364.14
469.39
25.61
பாகிஸ்தானின் கள்ளக் குடியேற்றம்
5
சீக்கியம்


70% அதிகம்
6
பிற
-
-
13% குறைவு


இந்தக் கணக்குகளை ஆராயும்போது பொதுவாக உள்ள மக்கட் பெருக்கத்தொகை கழிக்கவேண்டும்... கிருத்துவம் செய்துவரும் பெரும் பிரச்சாரத்தினால் மிக முன்னேறியிருக்கிறது. இசுலாம் பாகிஸ்தானிகள் நுழைந்து வருவதினால் அதிகமாகியிருக்கிறது. பௌத்தர்கள் ஹரிஜனத் தலைவர்களுடைய போதனையினால் பெருகி இருக்கிறார்கள். இந்து மதமோ பலவிதமான தாக்குதல்களினால் மிகக்குறைந்து வருகிறது. இவ்வாறு குறைந்துகொண்டே போனால் சில பத்தாண்டுகளில் சிறுபான்மையராகி விடுவார்கள். இதனை அறிந்து தீவிரப் பிரசாரம் செய்யவேண்டாமா?

நமது சமயப் பிரசாரம் காலத்திற்குத் தக்கபடி மாறுதல் அடையவேண்டும். ஏனையோர்கள் செய்கிறாற் போல சமயக் கல்வி நிலையங்கள் வைக்கவேண்டும். பகுத்தறிவு மீறியிருக்கும் இளைஞர்களிலும் பெண்களிலும் கோயில் செல்க'' என்ற வெறும் கட்டளை பயனளிக்காது. சமய அறிவு புகட்டும் வார வழிபாட்டு நிலையங்கள் அமைத்துத் தீவிர போதனை தரவேண்டும். கல்விச் சாலைகளில் இறைவணக்கம், சமய அறிவுப் பாடம் ஏற்படுத்துவதோடு மருத்துவ உதவிச் சாலைகள், சமூக சேவைச் சாலைகள், உணவு விடுதிச் சாலைகள், சமய நூல கங்கள், சமயப் பரிசுகள், சமய நூற்பிரசுரங்கள், ஓவிய சிற்ப விழாக்கள் முதலிய இயக்கங்கள் பரவவேண்டும். இளைஞர்களின் உள்ளங்களை நல்வழிப்படுத்துவதற்குத் தக்க போதனா முறைகளை இயக்கவேண்டும். இவைகளைத் தக்க குறிக்கோள்களாக அமைத்துக்கொண்டு பிரசாரம் செய்தால் அவைகளே சமயப்பணி ஆகி நன்மைகள் தரக்கூடும்.

நாட்டுச் சமுதாய இயக்கங்களைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள். சங்கத்தார் காலத்தில் புலவர் சங்கங்களும் சமூக விழாக்களும் இருந்தன. சோழ பாண்டிய காலங்களில் சமயச் சங்கங்களும், திருவிழாக்களும், சமயப் பாடல் ஓதும் இயக்கங்களும் இருந்தன. பிற ஆட்சியாளரின் அடிமைக் காலத்தில் தற்காப்புக்காகக் கொடி கூடங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு சிற்றூரிலும் பயிற்சிச்சாலை கூத்துச்சாலை முதலியன இருந்தன. - - பிறகுபஜனைக்கூடம் ஏற்பட்டது; தெருக்கூத்தும் தோன் றியது. தற்காலப் படிப்பு ஏற இவற்றில் இளைஞர்களின் ஆர்வம் குறைந்தது. ஏனைய சமயத்தார் போல சமய போதனைச் சாலைகள் ஏற்படுத்தல் வேண்டும். இராமகிருஷ்ண மிஷன்கள் செய்துவரும் சேவா நிலைய வேலைகள் ஏற்படல் வேண்டும். படித்தவர்களையும் செல்வர்களையும் இளைஞர்களையும் கவரக்கூடிய வழிபாட்டு நிலையங்கள் வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொன்று அமைக்கப்படல் வேண்டும். அதனால் தான் சமயத்தில் குறைவு நேராமல் பாதுகாக்க முடியும்.

உலகில் உள்ள எல்லாச் சமயக் கோட்பாடுகளையும் அறியவேண்டிய எண்ணத்தில் எல்லாச் சமய நூல்களையும் படித்திருக்கிறேன். இன்னும் படித்துக்கொண்டும் இருக்கிறேன். என் ஆராய்ச்சியின்படி நமது நாட்டுச் சமயங்களில் காணும் உண்மைகளும் தத்துவ ஞானமும், அன்பு நிலையும், கடவுட் கொள்கையும், மக்கள் ஈடேற்றமும் வேறெந்த வெளிச் சமயங்களிலும் இல்லை என்று அறிவேன். ஆராயாத குறையே நமது மக்களை வேறுசமயங்களுக்கு ஓட்டுகிறது. ஆராய வைக்காத குறையே நமது பழியாக நிற்கிறது. ஆகவே தவறுகளை நமது தலை களில் ஏற்றிக்கொண்டு, இனிமேலாவது நன்னெறியில் பாடுபடுவோமாக. அதனையே நமது குறிக்கோளாகக் கொண்டு வழிபடுவோமாக. இந்தப்படி சமயப் பணி நாம் செய்து வெற்றியடைவோம் என்று கூறிச் சைவ சமயக் கொடியை ஏற்றுகிறேன். நமது முயற்சி வெல்க! சைவம் வெல்க! தமிழ் மொழி வாழ்க!

சித்தாந்தம் – 1962 ௵ - ஜனவரி ௴


No comments:

Post a Comment