Saturday, May 9, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சைவ சித்தாந்த மகா சமாஜம்
58 - ஆம் ஆண்டு நிறைவு விழா, புதுவை
(27-12-1963)
தலைமை உரை
[கா. இராமநாதன், பி. ஏ., பி, எல். கோலாலம்பூர்]

திருச்சிற்றம்பலம்

மெய்யடியார் போல மிகநடிப்பேன்; மெய்யடியார்
செய்யடிமைத் தொண்டேதும் செய்திலேன்; -  பொய்யடியேன்
உன்னாட் கமலபதத் துள் நிறையப் போரூரா!
எந்நாட் கிடைக்கும் எனக்கு?

திருச்சிற்றம்பலம்

மெய்யன்பர்களே!

இன்று இங்கு நடைபெறும் ஐம்பத்தெட்டாவது ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்க சைவ சித்தாந்த மகா சமாஜத்தார் பணித்தமைக்கு நான் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் பேசும் பணியில் ஈடுபடுத்திய திருக்கோவலூர் ஆதீனம் அருள் திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சுவாமிக ளும், இலங்கையில் பேரறிஞராகத்திகழ்ந்த சர் பொன்னம் பலம் இராமநாதன் அவர்களும், “ இவரை விட யாரால் சமாஜத்திற்கு அதிகப்பணி செய்ய முடியும்'' என்று வியக்கத்தக்க முறையில் பலவாண்டுகள் பணி செய்த திரு. மா. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்களும், மகாமகோபாத்தியாயர் என்ற பட்டம் பெற்ற பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் முதலிய பேரறிஞர்களும் ஏற்ற தலைமைப் பதவியை, சைவம் திகழும் நாட்டிலிருந்து இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் மலேயாவில் கிடக்கும் யான் வகித்தற்குத் தகுதியற்றவனாயினும் உங்கள் பேரன்பால் இங்கு நிற்கிறேன். முன்பு அயல் நாடாக விருந்த பாண்டிச்சேரியில் ஆண்டுவிழா நடக்கும் போது வேறொரு அயல் நாட்டில் உறையும் ஒருவர் தலைமை வகிப்பது பொருத்தமென்று நீங்கள் எண்ணியிருக்கக் கூடும். பழமையான சரித்திரம் நிறைந்ததும், கிரேக்கர் களும் ரோமானியர்களும் ஆதிகாலத்தில் விரும்பிக் குடி யேறியதும் தாயொடு முரண்பட்ட தனயர்களுக்குப் புகலிடமானதும், இன்றும் அறிஞர்களும் நாடுவதுமாய இச் சிறந்த நகரத்தில் இவ்வாண்டு சமாஜம் நடப்பது எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்கு நீங்கள் தந்த பெருமை மலேயா சைவசித்தாந்த சங்கத்திற்கும், என்னுடன் மலேயாவில் சைவத்தொண்டு புரியும் நண்பர்களுக்கும் உரியது. உங்கள் பூரண ஒத்தாசையைக் கொண்டு என் பணியைச் சிறப்புறச் செய்ய முயல்வேன்.

சைவ சமயத்தின் சிறப்பு

சைவசமயம் ஒப்பற்ற சிறந்த சமயம். பழமையானது. (Mahenjodaro and Hindu Civilization Preface page 7 : Scripts of the Indus Valley Seals page 25) யாவும் நன்மைக்கே (Optimistic) என்று கொள்வது இச்சமயம். "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்'' என்று உறுதி கூறுவது. (திரு ஞான சம்பந்தர் 3 : 24 : 1) அம் முதல்வனது பேரானந்தம் பெருஞ் செல்வம் முழுதும் தனதேயாகக் கொண்டு அநுபவிக்கும் சுதந்திரம் (சிவஞான பாடியம் சூ. 8) நமக் குண்டு. நமக்கு வரும் துன்பம் நம் கெடுதலுக்கல்ல; அது நம்மைத் திருத்துவதனால் அதுவும் நம் நன்மைக்கே: (சித்தியார் 2 : 15 : 16) சைவம் பரந்த நோக்கமுடையது. ''எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கேயென்று அருள் புரியும் எம்பெருமான்" (திருஞான சம்பந்தர் 2: 40: 6) என்றருளினார் சம்பந்தப் பெருமான் எல்லாச் சமயங்களையும் தெளிந்து சென்றால் சைவத் திறத்தடைவர் (சித்தியார் 8: 10) ''பிணக்கின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நின்றது (சித்தி யார் 8: 13) சைவ சமயம்.

மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் போல்வன சோபான முறையிலமைந்த பல சமயங்கள். சைவம் பழரசமாம் தேனமுது. (குமரகுருபர சுவாமிகள் பண்டாரமும் மணிக்கோவை). விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாகும் (திருநாவுக்கரசர்). சித்தாந்தம் செயலுக் குரியது (Pragmatic). நமக்கு மாயை மாயமல்ல; சாதனை படித்தரமுள்ளது. நம் சமயம் விஞ்ஞானத்தை ஒட்டியது (Scientific). மாயை அழிவதில்லை. (Indestructability of matter) உலகம் கூம்புதலும் (Involution) விரிதலும் (evolution) அமைந்துள்ளது. காரண காரிய வழி உடையது. (universal causation). சைவ நூல்கள் கடல் போல்பரந்தவை; கடல் மணல்போல் எண்ணில; கடலில் எழுந்த அமுதம் போலச் சிறந்தவை. G. U. போப்பையர் M. A. D. D. J. N. பார்குவார், சர் சார்ல்ஸ் எலியட், பேராசிரியர் L. D. பார் னெட். குட்வில் பாதிரியார், W. F. கெனடி, ஜான் எச். பியட் முதலிய மேலை நாட்டறிஞர் சைவத்தை வானத்தில் வைத்து வாயார வாழ்த்தியுள்ளார்கள்.

சைவத்தின் தற்கால நிலை

சைவ உண்மைகள் ஓரளவு பரவிவருகிறது உண்மை யாயினும் விரைந்து செல்லும் காலப்போக்குடன் ஒப்பிட்டுப்பார்க்கின் நாம் பின்தங்கிப் போவதை அறிவோம். சைவம் துடிப்பு இழந்துவிட்டதென்றும், திரு ஞான சம்பந்தர் காலத்தில் சைவம் அடைந்த பிரகாசம் இப்பொழுது மங்கிவிட்ட தென்றும், சிறு கூட்டத்தினரே இதில் ஈடுபட்டவர்களென்றும் கூறுவதுண்டு. இவை மிகைப்படக் கூறியதாயினும், நம் சைவ சமய வாழ்க்கை உன்னத நிலையை அடைய நாம் செய்யவேண்டிய பணிகள் எண்ணில என்பது யாவரும் ஒத்துக் கொள்ளக்கூடியதே.
தேவாரத்து மூவரும் ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடியும் பரவியும், மக்களை வாழ்த்தியும் வழி காட்டியும் உலகில் கஷ்டம் வந்தபோதெல்லாம் கரவாது உதவியும் சமயத்தைப் பரப்பினர். அவர்களைப் போல தளராத ஊக்கமும் இடையறா உழைப்பும், மனத்திட்பமும் (dynamic) உடையவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவதும் அருமை. அவர்கள் தோன்றும் வரை உலகத்திலுள்ளவர்கள் தான் அப்பணியைச் செய்ய வேண்டும். அப்பெரியார்கள் பணியை இப்பொழுது இயங்கிவரும் ஸ்தாபனங்கள் செய்யவேண்டும். இத்தாபனங்களில் சைவ மடங்களும், நம் சமாஜமும் முன் அணியில் நிற்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமே. மடங்கள் யாவும் அவ்வக்காலத்தில் அருளாட்சி செய்யும் மடாதிபதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றன; ஆகையால் மடங்கள் செய்யும் ஆக்க வேலை மடாதிபதிகளின் உள்ளப்பாங்கை ஒட்டியது. சைவப் பணியை அவர்கள் விரிக்கமுடியும், ஒழுங்கு பெறச் செய்யமுடியும் அல்லது சுருக்கமுடியும். சில துறைகளில் பணிகள் நன்கு நடை பெறுவதைக் காண்கிறோம். ஆனால் சமாஜத்தொண்டு பெரும்பாலும் ஒருவரை மட்டும் பொறுத்ததல்ல. நம் சமாஜம் ஒரு பொது ஸ்தாபனம்; அதில் சைவர்கள் யாராக இருந்தாலும் சேரலாம். சமாஜத்தின் ஆர்வம் உறுப்பினர் ஆர்வத்தையும் அவர்கள் தேர்ந்தெடுத்த உத்தியோகத்தினர் ஆர்வத்தையும் கொண்டது. ஆகையால் இப்பொதுச் சபை சைவ உலகத்தின் படம். சமாஜம் வேலை செய்யவில்லையாயின், எந்த சைவருக்கும் அதில் சேர்ந்து பணியாற்றும் உரிமை உண்டு. தனி நபராக தன் நன்மைக்கோ பிறர் நன்மைக்கோ செய்யக் கூடிய சாதனச் செயல்களை இங்கு கூறுவது என் நோக்கமல்ல. நம் சமாஜம் போன்ற ஸ்தாபனங்கள் செய்ய வேண்டிய பணிகளை ஆராய்வோம். இப்பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம் (1) அறிவுப் பணி (2) அன்புப் பணி (3) உடல் பணி.

அறிவுப் பணி

நம் சமாஜம் பல நூல்களை அடக்க விலைக்கு வெளியிட்டு வருவதும் பல இடங்களில் கூட்டங்களும் வகுப்புகளும், மகா நாடுகளும் நடத்தி வருவதும் போற்றுதற் குரியன. இப்பணிகளில் மடங்களும் ஊக்கம் காட்டுகின்றன. அவர்களுக்கும் நம் பாராட்டுதல் உரியதாகும். அறிவுப் பணியில் இரண்டு உட்பிரிவு (1) ஆழமாகச் செல்லுதல் (2) அகலமாகச் செல்லுதல். முன்னது ஆராய்ச்சி (Research). பின்னது பரப்புதல் (Propaganda).

ஆராய்ச்சி"

ஆராய்ச்சித் துறையில் பல நூல்களும் சித்தாந்தம் முதலிய சஞ்சிகைகளில் பல கட்டுரைகளும் அறிஞர் பலர் எழுதி வருகிறார்கள். இவை யாவும் தனிப்பட்ட பெரியார்களின் கருத்தாகும். அவைகள் மிக உபயோகமானவை. ஒழு குழுவினர் சேர்ந்து ஆராய்ந்து முடிவு கட்டுவது மிக நன்மை தரும். சில விஷயங்களில் ஒத்த முடிவுக்கு வரமுடியவில்லையானாலும் இருதரப்பிற்கும் எடுத்துக்கூறக்கூடிய யாவற்றையும் சேர்த்துக்கூறி முடிக்கலாம். "இத்தை விளைவித்தல் மலம்'' என்பது போன்று நூலுக்குள் (textual) துருவி ஆராயும் விஷயத்தையோ, சைவத்தை வழக்கிலிருக்கும் கிறிஸ்துவம், இஸ்லாம் முதலிய பழைய மதங்களுடன் அல்லது பிராக்மாடிஸம் (Pragmatism) முதலிய புதிய மதக் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் விஷயத்தையோ, அல்லது தற்கால சமுதாய எண்ணங்களாகிய (Socialism) சமவுரிமைக்கொள்கை, (Marxism) மார்க்கிஸம், (Communism) பொதுவுரிமைக் கொள்கை முதலியன சைவத்தோடு எவ்வளவு ஒத்தும் வேறுபட்டுமிருக்கிறதென்ற விஷயத்தையோ ஆராயலாம். கிறிஸ்துவ அறிஞர் பலர் நம் சமயத்தை ஆராய்ந்து நாமும் படிக்க விரும்பும் முறையில் எழுதியிருப்பது போல, நம்மில் சிலரும் பிற மதங்களை நன்கு ஆராய்ந்து எழுதலாம்.

கண்ணும் மற்ற இந்திரியங்கள் போல தனக்கு வரும் அலைகளைக் (vibration) கொண்டே அறிகிற தென்றுஆசிரியர் வகுப்பில் கூறிய போது கேட்பவர்களிடையே பரபரப்பு உண்டாயிற்றென்று ஒரு அறிஞர் எழுதுகிறார். ஆசிரியர் கூறியது தவறென்றோ, அல்லது பரபரப்பு தவறென்றோ அவர் கூறவில்லை. பிற சமயத்தார் சைவத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் போது பல குற்றங்களைக் கூறுவதைக் காணலாம். அவர்களுக்கு மரியாதையுடன் தெளிவான மறுப்புக் கூறவேண்டும். மெய்கண்டார் தந்த சிவஞானபோதத்தில் காரண காரியத் தொடர்ச்சி பவழ மாலை போலக் கோவையாக அமைந்திருக்கிறதென்று சொன்ன ஆசிரியர் ஜான் எச். பியட் கூறுகிறார். "There are seven assumptions in this philosophy, which Siddhanta logic can never prove but which it must accept by faith.” அதாவது "இந்தத் தத்துவ ஞானத்தில் தக்க காரண மின்றி ஏழு விஷயங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; அவைகளைச் சித்தாந்த நம்பிக்கையால்தான் ஏற்க வேண்டும்.'' இவைபோன்ற கருத்துக்களை அவ்வப்போது ஆராய்ந்து விரிவான மறுப்புக்கூற வேண்டியது அவசிய மன்றோ?

ஆராய்ச்சிக் குழுவினர் சித்தாந்த Bibliography ஒன்று தயாரிக்கவேண்டும். அதில் சைவ சித்தாந்தம் சம்பந்தமாக தமிழ், வடமொழி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வந்த நூல்களையும் சஞ்சிகைகளில் வந்த சிறந்த கட்டுரைகளையும் சேர்க்கவேண்டும். முதலில் சித்தாந்தப் பத்திரிகையில் அப்பட்டியலைச் சேரச் சேர வெளியிடலாம். பிப்ளியாகறபி வெளிவந்ததும் சித்தாந்தக் களஞ்சியம் ஒன்று வெளியிடுதல் அவசியம்.

புள்ளி விவரங்கள் தயாரிப்பதும் அவசியம். சைவ சம்பந்தமான ஸ்தாபனங்கள், பத்திரிகைள், மக்கள் எண்ணிக்கை முதலியவற்றைக் கணக்கெடுக்கலாம். அதற்கு இந்துமத அறநிலையம் மிகுந்த உதவி செய்யக் கூடும்.

பரப்புதல்

சைவ சமய அறிவு இப்பொழுது பரவிக்கொண்டு வருகிறது. சமயப் பேச்சுக்களில் சில விஷயங்கள் கவனிக்கப்பெறுதல் நலம். பேசப்பெறும் விஷயம் எப்படிவாழ்க்கைக்கு உதவுமென்று (practical application) காட்டவேண்டும்.
வாழ்க்கைக்குத்தூரமான சம்பந்தமுடையனவற்றைப் பொதுக்கூட்டத்தில் பேசாது, அவைகளை அறிஞர்கள் தனிக்கூட்டத்திற்கு வைத்துக்கொள்ளலாம். உதாரணங்கள் காட்டும் போது தற்கால உதாரணங்களாக அமையின் நலம். எளிய நடையில் பேசுவது தான் அதிகப் பயன் தரும். பரம்பரையாக உபயோகப்படுத்திய சமயச் சொற்களுக்குப் பதிலாக மனதை ஈர்க்கும் புதிய சொற் களைப் பாவிக்கலாம். Unfortunately, familiarity with traditionally hollowed writing tends to breed, not indeed contempt, but something which, for practical purposes, is almost as bad - namely a reverential insensibility, a stupor of the spirit, an inward deafness to the meaning of the sacred words. (Aldous Huxley, Perennial Philosophy)" பரம்பரையாக புனிதமாகக் கருதப்பெறும் நூல்களின் நெருங்கிய பழக்கம் ஒரு மனப்போக்கை வளர்க்கிறது. அது அலட்சியமல்லவாயினும், அது பயனில் அலட்சியம் போன்றதே. மரியாதையிருப்பினும் பொறியியங்காத்தன்மையும், ஆத்மீகவுணர்ச்சி யிறப்பும், புனிதமான வார்த்தைக்கு உள் செவிடும் வந்துவிடுகின்றன.

வெளிநாடு

சமயத்தைப் பரப்புவதில் வெளிநாடுகளை மறந்து விடலாகாது. நான் மலேயாவிற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் முதலில் புறப்படும்போது நான் மலேயாவில் சைவத்தொண்டு செய்யவேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகவும், மலேயாவில் நான் பிரசாரத்திற்காகச் செய்யும் பிரயாணங்களுக்குச் சமாஜத்திலிருந்து பணம் தருவதாகவும் சமாஜ செயல் குழு தீர்மானித்தது. சமாஜத்தின் பணஉதவி எனக்குத் தேவைப்படவில்லை யாயினும், சமாஜம் அன்று என் மேல் வைத்த நம்பிக்கையையும் தந்த உற்சாகத்தையும் என்றும் மறவேன். உயர் திரு சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும் மற்றசைவப் பெரியார்களும் என்னை வாழ்த்தி வழியனுப்பினர். சமாஜத்தின் ஆசியால் மலேயாவில் ஓரளவு சைவப்பணிசெய்ய முடிந்தது. மலேயாவில் அரசியல் சமயம் இஸ்லாம்; ஆயினும் மற்ற சமயத்தார் தங்கள் சமயத்தை வளர்த்துக் கொள்வதற்கு அரசியலார் தடைசெய்வதில்லை. சில வகையில் அநுகூலமும் செய்கிறார்கள். கிறிஸ்துவ சமயத்திற்கு வேறு நாடுகளிலிருந்து பணம், படித்தவர் உதவி, நூல்கள் கிடைக்கின்றன. ஆகையால் சைவ சமயம் அதன் தாயகமாகிய தமிழ் நாட்டிலிருந்து பல உதவிகளை எதிர்பார்த்து நிற்கிறது. ரொட்டியைக் கேட்பவனுக்குக் கல்லைக் கொடுப்பது வழக்கமில்லை.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடு வலி குன்றி சீர்குலைந்தது. மலேயா, சுமத்ரா, மேற்குச் சாவா அடங்கிய ஸ்ரீ விஜயா என்ற நாட்டுடன் தமிழ் நாட்டுத் தொடர்பு அற்றது. பதினான்காம் நூற்றாண்டு இருட்டுக்காலம். இருள் தொடங்குமுன் நாம் பார்க்கும் கடைசி வெளிச்சம் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் செய்த சங்கற்ப நிராகரணம். இது பிறமதங்களின் கொள்கைகளை ஆராய்ந்து சைவத்தை ஸ்தாபிப்பது. இது சுவாமிகளது கடைசி நூல் என்பர். இது 1313 - ம் ஆண்டு செய்தது. சரியாக 101 ஆண்டு கழித்து மலேயாவில் ஆண்ட தமிழ் மன்னனாகிய பரமேஸ்வரன் இஸ்லாம் மதம் மாறி இஸ்கந்தர்ஷா ஆனான். இது ஆண்டு 1414, மலாக்காவில் இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் தமிழ்நாட்டுத் தொடர்பில்லாமல் தமிழ் மொழியை மறந்து, மலாய் மொழி பேசத் தொடங்கினர். ஆயினும் சைவத் தெய்வங்களையே வணங்கி வந்தனர். இந்நிலைகள் ஏற்பட்டதற்குக் காரணம் தமிழ் நாட்டுத் தொடர்பை இழந்ததுதான். மகளைக் கட்டிக் கொடுத்தனுப்பி விட்டுப் பின்னர் அவளைக் கவனிக்காத தாய் போலிருந்து விட்டோம். பழங்காலத்துத் தமிழன் திருவெம்பாவையை சயாமுக்குக் கொண்டுபோனான். இன்னும் அங்கு இது மன்னர் முடிசூட்டு விழாவில் படிக்கப்பெறுகிறது. இடைக்காலத்துத் தமிழன் தன் சமயத்தைப் பரிசுத்தமாகத் தானே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தாலோ, வெளிநாட்டிற்குப் பிரசாரகர் அனுப்பும் துணிவு குறைந்தோ பிறநாடுகளைப் புறக்கணித்தான். இக்காலத்தில் ஆகாயக் கப்பல்கள் விரைவாகச் சென்றாலும், நாடுகளுக்கு இடையே போக்கு வரத்தைத் தடைசெய்து பெருஞ்சுவர் எழுப்பப்படுகிறது. இச்சூழ்நிலையில், நாம் என்ன செய்ய வேண்டு மென சைவ உலகம் யோசிக்க வேண்டியது அவசியம்.

இலங்கை, பர்மா, பீஜி, மாரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இந்தியர் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கு மேல். அவர்களில் பெரும் பாலோர் தமிழர்கள். சைவர்கள். அவர்கள் தங்களைச் சைவர்களென்றே மறந்து விட்டார்கள். அவர்களுக்கு நூல்கள் அனுப்பியும், அந்நாடுகளில் சமாஜக்கிளை ஸ்தாபனம் செய்தும் ஒத்தாசை செய்யவேண்டும். இக்கடமைகள் மறக்கப் பெறுமானால், நாம் அந்நாட்டு மக்கள் சைவத்தை மறப்பதற்கு ஒத்தாசை செய்வதாகும். பிறமொழி பயிலும் நாடுகளிலும் சித்தாந்த சாஸ்திரம் பரவவேண்டும்.

அன்பு

சைவ சமயம் அன்பை அதிகம் பெருமைப்படுத்தும் சமயம். ''அன்பே சிவம்” என்பது நம்கொள்கை. இடத்தாலோ ஏனைய காரணத்தாலோ அன்புக்கு வரம்பு கட்டுவது ஆரம்பநிலையாக விருக்கலாம். அன்பு ஊறி, ஊறி, உள்ளே நிறைந்து, வெளியே வழிந்து பெருகி, முன்புமாய்ப் பின்புமாய், எங்குமாய் முழுதுமாய்ப் பரந்து நிற்கவேண்டும். அங்கு சாதி சமய மொழி தேசக்கட்டுக்கள் சிதைந்தொழியும். பழந்தமிழன் உள்ளம் பரந்து நின்றது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்று எண்ணினான். "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்'' என்பது அவன் கொள்கை. அடியார்கள் உலகெல்லாம் உய்ய வேண்டுமென்பதே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். அன்பு ஆண்டவனிடமும், எல்லா உயிர்களிடமும் செல்லவேண்டும். எம்பெருமானிடம் அன்பு பெருகக் கீழ்க்கண்ட சில வழிகள் கவனிக்கப் பெறலாம்.

(1) ஆலயத்தில் கூட்டு வழிபாடு
(2) பிரார்த்தனைக் கூட்டங்கள்
(3) தலயாத்திரை

இம்மூன்றும் ஓரளவு நடைபெற்று வருகின்றன. இவைகள் ஒருவர் தலைமையில் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி கட்டுப்பாட்டுடன் நடைபெறவேண்டும். சமய போதனைகளுக்கு இதில் இடம் இருக்கவேண்டும். நற் குணமும் நல்ல பழக்கமும் படிய வழியிருக்கவேண்டும்.

இறைபணி.

அன்பைப் பெருக்கச் சிறந்த வழி இறைபணி. கோயிலுக்குள்ளே விக்கிரகங்களுக்குச் செய்வது மட்டுந் தான் இறைபணி என்று எண்ணுவது தவறு. இதில் தவறான அபிப்பிராயங்கள் ஏற்படாமல் நான்கு விஷயங்களை நன்கு உணரவேண்டும்.
      (1) இறைபணியைக் கோயிலுக்கு வெளியிலும் செய்யலாம்.
      (2) உயிர்களை இறை உறை கோயிலாகப் பாவித்து அவர்களுக்குச் செய்யும் பணியும் இறைபணிதான்.
      (3) மனப்பான்மையுடன் உயிர்களுக்குச் செய்யும் பணி சிவலிங்கத்திற்குச் செய்யும் வழிபாட்டிலும் சிறந்தது.
      (4) உடலால் செய்யும் பணிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இவைகளைப் பல சமயத்தில் தோன்றிய பெரியார்வாக்குகளாலும் உதாரணங்களாலும் அறியலாம்.

தேவாரம் அருளிய மூவர் கோயிலுக்கு உள்ளும், வெளியிலும், இறைபணி செய்தனர். மற்ற அறுபது நாயன்மாரில் கோயிலுக்கு வெளியே தொண்டு செய்தவர்களே அதிகம். அன்ன தானம் செய்தவர் 8. பொருள் தானம் செய்தவர் 6.
சேவை தானம் செய்தவர் 5. தீங்கு செய்தாரை ஒறுத்து அடியார் சேவை செய்தவர் 2. பாடும்பணி செய்தவர் 2. குழலூது தல், பூவெடுத்துத் தொடுத்துக் கொடுத்தல், உருத்திர ஜபம், பசுமேய்த் தல், இல்லறம், தண்ணீர்ப்பந்தல், குளம் வெட்டுதல்,தியானம், சைவம் வளர்த்த ல் 9. ஆக 32. ஏனைய 28 நாயன்மார்களில் சிலர் பணி நன்கு தெரியவில்லை. சிலர் பணி கேயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்தது.

மக்களுக்குச் செய்யும் சேவையை தரித்திரநாராயண சேவை என்பர் இராமகிருஷ்ண பரமஹம்ஸர். தீண்டப்படாதார் என்று கருதப்பட்டவர்களுக்குச் செய்யும் தொண்டுகளை ஹரிசன சேவை யென்று கூறுவர் மகாத்மா காந்தி. உயிர்களுக்கு உதவுவதை "தயா மூலத் துவம்' என்பர் புத்தர். "தாயினும் சிறந்த தயாவான தத்துவன்'' இறைவன். (சிவபுராணம்). சைவர்கள் ஏழைகளுக்கு அன்னமிட்டு அவர்களையே மகேஸ்வரர்களாகக் கருதி, அதனை மகேஸ்வர பூஜை எனப் போற்றுவார்கள். பசுவையும், பாம்பையும், குருவையும், கணவனையும், போற்றித் தொண்டு செய்து வணங்குகிறவர்களுக்கும் மாதொரு பாகனார் வந்து அருள் புரிவார் (சித்தியார் 2 : 26)  "அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே.''

இறையுணர்ச்சியுடன் செய்யும் மக்கள் பணி மாதேவன் பணியைவிடச் சிறந்தது. பகவானுக்குச் செய்யும் கைங்கர்யமும், பாகவதர்களுக்குச் செய்யும் கைங்கர்யமும், ஒன்றிற்கொன்று முரண்படுமானால் பகவானுக்குச் செய்யும் தொண்டை ஒத்தி வைத்துவிட்டுப் பாகவதர்களுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யத்தை முதலில் செய்கவென்று வைணவம் கூறும். உனக்கும் உன் அடுத்த வீட்டுக்காரனுக்கும் மனக்கசப்பு இருக்குமானால் நீ சுவாமிகளுக்குக் கொண்டு போகும் நைவேத்தியத்தை கோயிலுக்கு வெளியே வைத்துவிட்டு நீ உன்னுடைய அடுத்த வீட்டுக்காரனுடன் சமாதானம் செய்துகொள் ளென்று கூறுகிறது கிறிஸ்துவ வேதம். (மாத்யூ 5 : 23 - 24)  "தான் கடவுளை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு தன் சகோதரனை வெறுப்பானாயின் அவன் பொய்யன்; தான் நேரில் பார்க்கும் சகோதரனை நேசிக்காதவன் தான் பார்க்காத கடவுளை எப்படி நேசிக்க முடியும்?' (ஜான் 4: 20 - 21) இறைவன் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் மக்கள் பணி செய்யாதே யென்று  கூறுவது மடத்தனம். அமெரிக்காவிலிருந்து பெரும் புகழோடு திரும்பிய விவேகானந்தர் இராமேஸ்வரத்தில் செய்த தன் முதல் சொற்பொழிவில் சொல்லிய வாசகம் ஒன்று இராமநாதபுரம் அரசரது விருந்தினர் மாளிகையில் கல்லில் எழுதியிருக்கிறது, He who helped one poor man seeing Shiva in him, with him is Shiva more pleased than with the man who sees Him only in Temples. Selfishness is the chief sin; unselfishness is the test of religion. கோவிலில் மட்டும் சிவனைப் பார்க்கும் ஒருவனை விட, ஒரு ஏழையில் சிவனைக் கண்டு அவனுக்கு உதவி செய்யும் ஒருவன் பேரில் சிவனுக்கு அதிகப் பிரியம். சுய நலமே தலையாய பாவம், தன் நலமின்மையே சமயப் பரீட்சையில் தேர்வு. ஈசன் பணியிலும் மக்கள் பணி எவ்வாறு சிறந்ததெனக் காரணத்துடன் திருமூலர் கூறுகிறார்.

படமாடக்கோயில் பகவற்கொன்று ஈயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கங் காகா;
நடமாடக்கோயில் நம்பர்க்கொன்று ஈயில்
படமாடக்கோயில் பகவற்க தாமே.     (திருமந்திரம்:1857, சமாஜப்பதிப்பு)

இக்கொள்கைகளைத் தேவாரத்து மூவரும் தம் வாழ்க்கையில் நடத்திக்காட்டியுள்ளார்கள். வணிக மங்கையின் அழுகுரல் கேட்ட திருஞான சம்பந்தப் பெருமான் கோயிலுக்குப் போவதைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்து விட்டு அவளுக்கு ஆறுதல் தரப்போனார். சீர்காழிக்குத் தோணியப்பரை வணங்கச் செல்வதைக் காட்டிலும், பஞ்ச நிவாரண வேலையில் ஈடுபடுவதே கடமையென்று சிவபெருமான் சம்பந்தப்பெருமான் கனவில் தோன்றிக் கூறினார். இப்போக்கை நாம் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். இறைவனை எங்கும் எவரிலும், கங்குல் பகல் இன்றி எப்பொழுதும் காணுவதே நாம் அடையவேண்டிய உன்னத நிலை. ஆசாரம் அன்பைப் பெருக்க உதவியாக வேண்டும், அன்பு, வளர்ச்சிக்குத் தடையாகக் கூடாது. தேவார மூவரும் பதிகம்பாடிப்பரமனை வணங்குவதுடன் நின்றுவிடவில்லை. அல்லல் படையை எதிர்த்து, மக்கள் துன்பம் துடைக்க ஒரு பொழுதும் தவறியதில்லை. ''அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக் கடை" (திருக்குறள் 315). சிவபெருமான் கட்டமுது தந்தார்; விறகு சுமந்தார்; தண்ணீர்ப் பந்தல் வைத்தார்; நள்ளிரவில் தூது சென்றார். செம்மனச் செல்விக்காக மண் சுமந்தார்; சம்பந்தப்பெருமான் முயலகன் நோய் தீர்த்தார்; குளிர்ப்பிணி நீக்கினார்; பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்த்தார்; விஷம் தீர்த்தார்; பசிப்பிணி போக்கினார். ஆளுடைஅரசர் தொண்டுகளாவன : பசிப் பிணி தீர்த்தல், விஷம் தீர்த்தல், உழவாரப்பணி. சுந்தரர் நெல் கொடுத்தார்; விருந்து செய்வித்தார். ஞாலம் உய்ய, நாடு உய்ய, அடியார்கள் செய்த பணிகள் எண்ணில.

உடல் தொண்டிற்குத் தனிப்பெருமை தரவேண்டு மென்பது மங்கைபங்கன் திருவுளம். வாகீசருக்குத் திரு வீழிமிழலையில் வட்டமிலாக் காசு கிடைத்தது. "கைத் தொண்டாகும் படிமையினால் வாசியில்லாக் காசுபடி பெற்றுவந்தார் வாகீசர்” (பெரிய புராணம் 27: 260).

அறிவுத் தொண்டினால் தாழ்வெனும் தகைமையில்லை யாயின், ஆணவம் எளிதில் ஏற வழியுண்டு. மெய்த் தொண்டில் தற்பெருமைக்கு அதிக இடமில்லை.

முன்னோர் வகுத்த வழியைத் தற்கால உலகம் தவறான கோணத்திலிருந்து (wrong perspective) பார்க்கிறது. சைவத்தின் உயிர்நாடியை அறிய வேண்டுமானால் தொண்டு பெருகவேண்டும். இப்பொழுது சைவர்கள் ஸ்தாபித்து நடத்தி வரும் பள்ளிக்கூடங்கள் எத்தனை? அனாதை விடுதிகள் எத்தனை? மருத்துவ நிலையங்கள் எத்தனை? சைவர்கள் ஜனத்தொகையையும், அவர்கள் நடத்தும் ஸ்தாபனங்களின் எண்ணிக்கையையும், வேறு மதத்தார் எண்ணிக்கையையும், அவர்கள் நடத்தும் ஸ்தாபனங்களின் எண்ணிக்கையையும் ஒன்றிற்கொன்று ஒப்பிட்டுப் பார்த்தால், நம்மவர் ஸ்தாபனங்கள் எவ்வளவு அம்சம் இருக்கும்? இவைகளில் எவ்வளவு நிலையங்களுக்கு சைவக் கடவுள் பெயர் அல்லது சைவ அடியார் பெயர் சூட்டியுள்ளார்கள்? இவைகளில் சைவர்கள் சேர்ந்து நடத்தும் நிலையங்கள் எத்தனை? தொண்டிலும் வாழ்க்கையிலும் பலருடன் சேர்ந்து நிற்பது அவசியம். மனிதன் தனித்திருப்பது கேவலம்: கைவல்யம் அல்லது (மோட்சம்). கூட்டு வழிபாடு போன்றது தொண்டைச் சேர்ந்து செய்வது.

நம் பெயரைச் சொல்லும்போது ஒரு நிலையத்தின் பெயர் ஞாபகத்திற்கு வரும் அளவு நாம் அந்த நிலையத் துடன் தொடர்புகொண்டு உழைக்கவேண்டும். தனித்து நிற்றல் (Isolation) ஆணவத்தின் அடையாளம். ஆணவத்தை Isolationalism என்றே கூறலாம். ஆசிரியர் கார்டன் மாதியூஸ் (Gordon matthews) ஆணவத்தை Principle of Individualation என்றார். "மோட்சத்தை அடைவதிலும் சுயநலம், கூடாதென்பர் சுவாமி விவேகாநந்தர். “You would go to hell if you seek your own salvation. Seek the salvation of others if you want to reach the highest. Kill out the desire for personal mukti.'' உன்னுடைய விடுதலையை மட்டும் நாடினால் நீ நரகத்திற்குப் போவாய். நீ உச்சிக்குப் போகவேண்டுமானால், பிறர் விடு தலையை நாடு. சொந்த முத்தியில் வைத்த ஆசையைக் கொல்லு. ஆகையால் எல்லாத் துறைகளிலும் சைவர்கள் கூடி நின்று ஆக்க வேலைகளைச் செய்யவேண்டும்.



சித்தாந்தம்

நம் சமயம் வேறு சமயங்களோடு பிணக்கின்றி நிற்பதால், நம் சமயத்திலுள்ள கருத்துக்கு ஒத்த கருத்து பிற சமயங்களிலும் பிற தத்துவங்களிலும் காணலாம். அவற்றில் மேல் நாட்டுத் தத்துவங்களில் சிலவற்றை இங்குக் காண்போம். மெய்காட்டும் மெய்கண்டார் சித்தாந்தத்தைக் கருதல் அளவையால் எடுத்துக் காட்டுகிறார். மேற்கு நாட்டில் முதல் தத்துவ ஞானியாகக் கருதப் பெறும் சாக்ரத்தர் "அறிவு கொண்டு ஆராய்க; ஆராய்க” என்ற ஒரு கொள்கையைத்தான் கூறிப்போந்தார். சற்காரிய வாதத்தைப் பற்றிச் சில மொழிகளைக் காணலாம். There is a transition from the potential to the actual - Aristotle. மறைந்திருக்கும் சக்தியிலிருந்து நடப்பிலிருக்கும் சக்தி வெளிப்படுகிறது. The passage is from the implicit to the explicit, Hegel. தொக்கு நிற்பதிலிருந்து தெளிவானதற்கு வழியுளது. வேறொருவர் கூறுகிறார். Identity between the cause and effect is fundamental, while difference is only practical. காரண காரியத்தின் ஒற்றுமை அடிப்படையானது; ஆனால் அவைகளுள் வேற்றுமை அநுபவத்தை மட்டும் ஒட்டியது. Ex nihilo nihil fit என்பது லத்தின். இல்லாததிலிருந்து தோன்றுவது ஒன்றுமில்லை. பாரத நாட்டிலுள்ள தரிசனங்களிலும் வேறு நாட்டு தரிசனங்களிலும் கடவுள் உண்மையை நிலைநாட்டச் சொல்லுங் காரணங்கள் பல. இது சம்பந்தமாக அரிஸ்டாட்டல் கூறுவது சித்தாந்த சாஸ்திர நூலில் எடுத்த ஒரு பக்கம் போல் தோன்றும். அவர் கூறுவதன் சுருக்கமாவது; 'கடவுள் உண்டென நிலைநாட்டலாம். உலகம் அசைகிறது; மாறுகிறது; ஓடுகிறது. இதனை இயக்க ஒருவன் வேண்டும். அவன் யார்? அது ஜடமாக இருக்குமா? ஜடம் ஆதி என்பது உண்மை. ஆனால் ஜடத்தின் அசைவும் ஆதி யென்று கொள்ள முடியாது. ஜடத்தின் அசைவே அதற்கு உருவத்தைக் கொடுப்பது. ஜடம் அசையாத காலமிருந்தது. அசைவு அனாதியன்று. ஆகையால் ஜடம் அசைவது எப்படி யென்று காண வேண்டும். அதனை இயக்குகின்றவன் யாரென அறியவேண்டும். தேடித் தேடிப்போனோமானால் கடைசியாகத் தானசையாமல் பிறவற்றை அசைவிக்கும் பொருள் உளதென்று உணரலாம். அதுவே கடவுள். மேலும் அவர் கடவுள் படைப்பைப் பற்றிக் கூறுவது மிக மகிழ்ச்சியைத் தருகிறது. கடவுள் படைப்பதில்லை; அவர் உயிர்களை இயக்குகிறார். எப்படி? ஒரு அழகான பெண் வீதியில் நிற்கிறாள். அவள் காம வலையை வீசவில்லை; அவள் எதையோ நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்தவர்கள் அவளைக் கண்டு மயங்குகிறார்கள். அவ்வாறே கடவுளும் உலகத்தை ஆட்டி வைக்கிறார். கடவுள் ஒன்றும் செய்வதில்லை. அவரது அசைவு அளவிலாச் சுத்தம் உள்ளது. ஆகையால் அது அசைவேயில்லை. அவர் விரும்புவதொன்றில்லை; ஆகையால் செய்யவேண்டுவதொன்றில்லை; செல்வ தொன்றில்லை, கடவுளைப் பற்றி மேலும் கூறுகிறார்; அது காண முடியாதது, பகுக்கப்படாதது, இடமற்றது, அது ஆணல்ல, பெண்ணல்ல, ஆர்வமற்றது, மாறாதது, பூரண மானது, என்று முள்ளது.

ஆன்மா உண்டென்பதற்குச் சித்தாந்தம் கூறும் காரணமும் பிரெஞ்சு ஞானியார் தேகார்டே (Descartes) கூறும் காரணமும் ஒன்றே எனலாம். முப்பொருளுண்மையைப் பிற நாட்டில் முதலில் ஆராய்ந்தவர் அவர் தான். அவர் கூறுகிறார். 'உலகத்தில் நாம் காணும் பொருள்" உண்மையா? பொய்யா? உண்மையெனத் தோன்றுகிறது; சில சமயம் பொய்யெனத் தோன்றுகிறது; எனக்கு வந்த சந்தேகம் உண்மையா? பொய்யா? பொருள் உண்மையானாலும் பொய்யானாலும் எனக்குச் சந்தேகம் தோன்றியது மெய்யேயல்ல; உண்மை. அதில் சந்தேகமில்லை. ஐயம் உண்மையானால் ஐயப்படுபவனும் உண்மை. ஐயம் ஏற்படுவதால் நினைப்பு ஒன்று உண்டென ஏற்படுகிறது. ஆகையால் நான் நினைக்கிறேன் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை, Cogito, ergosum நான் இருக்கிறேன். பிரெஞ்சு ஞானியின் இவ்வார்த்தைகள் சிவஞான போத மூன்றாம் சூத்திரத்தின் முதல் இரண்டு சொற்களாகிய "இலது என் றலின்” என்றதற்கு விரிவுரை போல அமைந்திருக்கின்றன.

உலகத்திற்கு மூலப்பொருள் ஒன்றிருக்கவேண்டு மென்று கிரீஸ் தேசத்துத் தத்துவ ஞானிகளாகிய தேல்ஸ் (Thales) அனாக்ஸிமெனெஸ் (Anaximenes) ஹெராக்லிட்டஸ் (Heraclitus) கி. மு. ஆறாவது நூற்றாண்டிலும் ஐந்தாம் நூற்றாண்டிலும் முடிவு கட்டினர். ஆனால் அந்த மூலப் பொருள் யாதென்பதில் அவர்களுக்குள் மாறுபட்ட கருத்திருந்தது.

செய்யும் அறத்திற்குத் தகுந்த பயன் கிடைக்கு மென்று வற்புறுத்தும் காந்தே (Kant) கூறுகிறார். ''மேடையில் காணும் நாடகங்கள் போல் வாழ்க்கை முடிவதில்லை. அக்கூத்துகளில் துஷ்டன் தண்டிக்கப்படுகிறான். அறச்செயல் நற்பயன் தருகிறது. ஆனால் உலகத்தில் அவ்வாறு காண்கிறோமா? அறிவுடைய பாம்பு கடித்துவிட்டுப் புற்றில் மறைந்து தப்புகிறது. தீமை ஒன்றும் எண்ணாத ஒருவனுக்குத் தீங்கு நேரிடுகிறது. எளியவன் பிறர் பொருளைக் கைக்கொண்டால் அது திருட்டு. பணக்காரன் அவ்வாறு செய்தால் அது சம்பாத்தியம் அல்லது சாமர்த்தியம். அதிகமாகத் திருடினால் குற்றத்திலிருந்து தப்பிக்க வேண்டிய பொருளும் கிடைத்து விடுகிறது. உலகத்தில் லாபத்திற்கும் தன்னலத்திற்கும் அறம் தடையாவதைப் பலமுறை கண்டும் தீமைக்குப் பலன் நிச்சயம் உண்டென நம் உள்ளம் கூறுகிறது. அறவழி நன்மை பயக்குமாயின், அது எப்பொழுது பயக்கும்? இப்பிறப்பில் இல்லையானால், அதனைப் பெற மறுபிறப்பு உண்டென்பது உறுதி

அநுபவத்திற்கு வேண்டியதையே ஆராய்க என்று கூறும் வில்லியம் ஜேம்ஸ் தன் முக்கிய முடிபுகளாகக் காட்டுவன யாவை? (1) சமயம் ஒரு அனுபவம். (2) பார்க்கும் உலகம் ஒரு ஆத்மீக உலகத்தின் ஒரு பகுதி. (3) உயர்ந்த ஒரு பொருளுடன், அது எதுவெனக்கொள் ளினும் சரி, நாம் சேருவதே சமயத்தின் நோக்கம். (4) பிரார்த்தனையால் நம் சக்கி அதிகப்படுகிறது. (5) சமையமொன்றே அன்பைப் பெருக்கும்; கஷ்டத்தைக் குறைக்கும்.

ஆதிமனிதன் (Super-man) ஆவதே சமயத்தின் நோக்கமென்பர் நிட்சே. ஆண்டவனது சக்தி நமது உரிமை. ஆனால் வழி நேராக இருக்க வேண்டுமென்று நிட்சே வற்புறுத்த வில்லை.

பெத்த நிலையிலும் முத்தி நிலையிலும் ஆண்டவனோடு ஆன்மா கலந்து நிற்பதைக் கூறும்போது ஒரு தத்துவஞானி கூறுகிறார். “எப்பொழுதும் கடவுளும் நானும் பிரிந்த தில்லை. நான் உலகத்திலிருக்கும்போது அவன் என் னோடு கூடியிருக்கிறான்; மோட்ச நிலையில் நான் அவனோடு கூடியிருக்கிறேன்.''  

இவ்வாறு நாம் ஏனையோர் கருத்துக்களுடன் ஒப் பிட்டுப் பார்க்கும்போது நம் சமயக் கருத்துக்கள் நம் மனத்தில் தெளிவடையும்.

இரண்டு கேள்விகள்

மலேயா மக்கள் அடிக்கடி என்னை இரண்டு கேள்விகள் கேட்பதுண்டு. அக்கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். முதல் கேள்வி "நான் இந்தி யாவுக்குச் செல்லுகிறேன். அங்கே ஒரு பெரியவரிடம் உபதேசம் கேட்க விரும்புகிறேன். யாரிடம் கேட்கலாம்?'' இக்கேள்வி சமாஜத்திற்கு முன்னர் எழுந்தது. சைவர்களுக்குத் தீட்சை செய்யவும் சடங்குகள் செய்யவும் யார் தகுதியென்று தீர்மானிக்கச் சைவப் பெரியார் கூட்டம் 1929ம் ஆண்டில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழு கூடியதா, என்ன முடிவு செய்தது என்பது தெரியவில்லை. இவ்விஷயம் ஆராய்ந்து முடிவு செய்யப் பெறின் மிக்க பயன் தரும்.

இரண்டாவது கேள்வி. தக்க பெரியார்களுடன் தங்குவதில் பலருக்கும் பிரியமுண்டு. அப்பெரியார் படித்தவராய், மதிப்புக்குரியவராய், பழகுவதற்கு எளியராயும் இருக்கவேண்டும். அம்மாதிரி ஆச்ரமம் எங்கிருக்கிறதென்று மலேயாவிலிருந்து இந்தியா வருகிறவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அத்தகைய சைவ ஆச்ரமங்கள் எவை?

வேண்டும்

சீர்திருத்தங்களைச் சொல்வது எளிது; செய்வது அரிது. பல ஆண்டுகள், பல அறிஞர்கள் பல திருத்தங்களைச் சொல்லியுள்ளார்கள். அவைகளில் பல அமுலுக்கு வரவில்லை. எண்ணம் சொல்லாகி, சொல் செயலாவது எளிதானால், குடிசைகள் மாளிகைகளாகவும், மாளிகைகள் பெருங் கோயில்களாவும் மாறி யிருக்குமென்றார் ஷேக்ஸ்பியர். சீர்திருத்தம் செயல்படவில்லை என்பதற்குக் காரணம், செயலில் கொண்டு வருவாரில்லை, அல்லது செயலில் கொண்டுவரச் செய்வாரில்லை. “செய்வோர் பேசுவதில்லை'; பேசுவோர் செய்வதில்லை." என்பதில் உண்மை ஓரளவு உண்டு. பணிக்கு ஓய்வும், தியாக புத்தியும் ஆற்றலும் பொருந்திய, ஊதியம் கருதாத சிலர் வேண்டும். சன்னியாசிகள் இரண்டொருவரும், குடும்பத் தொடர்பு, மிகக் குறைவாகவுள்ள சில வானப்பிரஸ்தர் களும் வேண்டும். அரும்பு கொம்பிலிருக்கலாம்; பிஞ்சும்; காயும் கொம்பிலிருக்கலாம்; பழம் பின்னரும் கொம்பி லிருந்தால் வெம்பிப் பழுத்து வீணாகும். அதேபோல நம் வாழ்க்கை இளமையிலும், நடுவயதிலும், குடும்பத் தொடர்புடையதாக இருக்கலாம், பூரண வாழ்க்கை வாழ விரும்புகிறவன் சுற்றம் அனைத்தையும் துறந்தொழிய வேண்டும். வெள்ளரிப்பழம் கொடியை விடுவது போலவும், பிறக்கும் குழந்தையின் கொப்பூழ் அறுபடுவது போலவும், பொதுமக்கள் நன்மைக்காகச் சிறுகுடும்பத்தை வயதான சிலராவது விடவேண்டும். பேரின்பத்திற்காகச் சிறு, சிறு இன்பத்தை விடவேண்டும். இரண்டொரு பிரமச்சாரித் தொண்டர்கள் வேண்டும். இவர்கள் இல்லறத்தார் தயவை எளிதில் பெறுவர்.

எனது கனவு

சைவமும் சமாஜமும் செழித்தோங்கவேண்டும்.
சமாஜத்தின் அங்கத்தினர் தொகை அதிகரிக்க வேண்டும்.

ஆண்டுக் கூட்டங்களுக்குப் பல நாட்டு மக்களும் வர வேண்டும். கீழ்க்கண்ட பேச்சுக்கள் அங்கு காதில் பட வேண்டும். "அப்பேச்சாளர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர். சித்தாந்த மகாநாடு டப்ளின் நகரத்தில் நடந்த பின், அவர் சைவத்தில் மிக ஆர்வம் கொண்டுள்ளார்." "இப்பொழுது உணவு படைத்துக் கொண்டிருப்பவர் சமாஜம் நடத்தும் ஏழை மாணவர் விடுதியின் தலைமை ஆசிரியர்.” 'மாதர் மகாநாட்டில் தலைமை வகிக்கும் அம்மையார் ஒரு டாக்டர், அப்பர் சிகிச்சை இல்லம் நடத்துகிறவர், நோயாளிக்குப் பக்கத்தில் நின்று ஒரு தேவாரம் பாடிய பின்னர் தான் ரண சிகிச்சை தொடங்குவார்.” இம்மாதிரி பேச்சுக்கள் கூட்டத்தில் எழவேண்டும்.

என் கனவு உங்கள் கனவாகவேண்டும். நம் கனவெல்லாம் விரைவில் பலிக்க வேண்டுமென்று எம்பெருமான் அருள்புரிவானாக.

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீய தெல்லா மரன்நாமமே
சூழ்க வையகமுந் துயர் தீர்கவே.

சித்தாந்தம் – 1964 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment