Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஆலய வழிபாடு.

"ஆலயந்தொழுவது சாலவுநன்று'' என்று நம் மூதாட்டியாராகிய ஒளவையார் அருளிச்செய்த அரியவாக்கியத்தின் கருத்தைச் சற்று ஆராய்வோம்.

சகல ஆன்மாக்களுக்கும் உறுதியைத் தரக்கூடியவைகள் புகழும், புண்ணியமும், ஞானமுமாம். இவைகள் மூன்றும் பயன்படுதல் இம்மையிலும், மறுமையிலும், வீட்டிலுமாம். இம்மையில் அனுபவிக்கக்கூடியது புகழ் ஒன்றேயாம். இப்புகழுக்கேதுவாகிய செலவம் மறுமைக்குச் செல்லாது; ஆகையால் மறுமைக்கு வேண்டுவது புண்ணிய மொன்றேயாம். அப்புண்ணியம் வீட்டுநெறிக் கமையாது; ஆனதுபற்றி வீட்டு நெறிக்கு வேண்டுவது ஞானமொன்றேயாம்,

மேல் விவரித்த புகழும், புண்ணியமும், ஞானமும் ஆன்மாக்கள் சுதந்திரமாக அடையக்கூடியவைகள் அல்ல "அவனன்றி ஓரணுவு மசையாது'' அவற்றைக்கூட்டுவது அனந்தகல்யாண குணநிதியாய் விளங்கும் சர்வ சுதந்தரனாகிய இறைவனாகும்.

"அவையே தானே யாயிரு வினையிற்
போக்கு வரவு புரிய வாணையில்
நீக்க மின்றி நிற்கு மன்றே''

அதாவது அவனவள துவாய்க் காணப்படும் பிரபஞ்சமேயாய். தன்னுடைய வாணையினால் ஆன்மாக்கள் முன்பு செய்த பாவ புண்ணியங்களுக் கீடாக இறந்தும் பிறந்தும் வர, அவ்வாணையில் நீக்கமின்றி நிறைந்து நிற்பன்.

அவ்விறைவனோ இந்தனத்தின் எரி, பாலில் நெய், பழத்தில் இரதம், எள்ளின் கண் எண்ணெயும் போல் எங்குமுளான். அங்ஙனம் கண - பனம சர்வவியாபியா யுள்ளவனாயினும், தாதமார்க்கம், சகமார்க்கம், சன் மார்க்கம், என்கிற சரியை, கிரியை, யோக ஞானங்களினின்றும் வழிபடுவோர்க்கு, 'உருக்காண வொண்ணாதபால் முலைப்பால் விம்மி ஒழு குவதுபோல் வெளிப்பட்டருளுவ னன்பர்க்கே'' என் பேடி அருள் செய்யக்கூடியவனாகவிருக்கின்றான். பசுவினது சரீரமுற்றும் வியாபகமாயிருக்கிற பாலைத் தன்னை நினைத்துக் கூவும் கன்றைத்தாலும் நினைந்துருகி முலைக்காம்பின் வழியே கன்றுக்கு ஊட்டுதல் போல, இறைவன் எங்கும் நிறைந்துள்ளானாயினும் தன்னை அன்பால் வழிபடுவார்க்குச் சிவலிங்க மூர்த்தியினின்றும் வெளிப்பட்டு வேண்டியாங்கருள் புரிவனென்பது பெறப்பட்டது. இதற்குச் சான்று சைவசித்தாந்த சமயாசாரியர்களே.

எப்படியெனில் பசுவை நினைத்து மனமுருகிக்கூவும் கன்றைப் போலும் தேவார திருவாசகங்களால் பெருமானை யழைக்கப் பெரு மான் அக்கணமே வேண்டியாங்கு வெளிப்பட்டருளுவதேயாம். அவ்வாறருளியது தாம்கோயில் கொண்டெழிந்தருளி யிருக்கும் திருத் தலங்கள் தோறுமன்றோ.! –

“மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங் கினற்கோர்
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே.

என்றும் நம்முன்னோர் கூறியுள்ளார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என் னும் மகிமைகள் அமைக்கப்பெற்ற திருத்தலங்களின் சிலவற்றையும் ஆங்கு வழிபட்டு முத்திபெற்றவர்களின் சரித்திரத்தையும் இங்கு எழுதுவாம்.

திருக்கோயில் (சிதம்பரம்): - முனிசிரேஷ்டராகிய மத்தியந்தினர் புத்திரப்பேறு வேண்டிச் சிவபிரானைநோக்கி அநேக நாட்கள் அரிய தவஞ்செய்தனர். பரமேஸ்வரன் அவருடைய தவத்துக்கிரங்கி விருஷபாரூடராய்த் தரிசனந்தந்துயர் துவேண்டுமென்ன முனிவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவனாயும் தேவரீரிடத்திற் சிறந்தபக்தி யுடையவனாயும் சதாதேவரீரது பூஜையையே விரும்புகின்றவனாயும் சகல தர்மங்களை யறிந்தொழுகுவானாயு முள்ள ஓர் புத்திரனை நல்க வேண்டுமென்ன, பகவான் அவ்வாறே ஆகுகவென்றாசீர்வதித்துத் திருவுருக் கரந்தனன். பரமேஸ்வரர் அருளியபடியே அம்முனிவருக்கு ஓர் புத்திரன் பிறந்தான். முனிவர் ஆனந்தமடைந்து அக்குழந்தைக்குச் செய்யவேண்டிய சடங்குகளைத்தவறாமற் செய்து தகுந்தவயதில் முறையாக உபநயனம், வேதசாஸ்திர இதிகாச புராணங்கள் யாவுங்கற் பித்துக் குமாரனை கோக்கி இனிநீ வேண்டுவது யாதென்ன? அச்சிறுவன் யானுணர்ந்த நூல்களில் தவமே எல்லாவற்றையுங் கொடுக்கு மென்று சொல்லக்கண்டேன். அத்தலங்களில் மேலான தவம் எதுவோ அதை அறிவிக்க வேண்டு மென்ன, மத்தியந்த முனிவர் குமாரனை நோக்கி இவ்விளமையிலேயே தவத்தை நீ விரும்பியபடியால் தெரிவிக்கின்றேன். தவம் இருவகைப்படும். போகத்தைக்கொடுப்பதொன்று. முத்தியைக்கொடுப்பதொன்று. போகத்தைக்கொடுக்குந் தவம் சாந்தராயண முதலிய விரதங்கள், அஸ்வமேத முதலியயாகங்களாம். முத்தியைக் கொடுக்குந்தவம் சிவார்ச்சனையாமென்று கூறவும் பழமுனிவர் சிவார்ச்சனை செய்தற்குரிய இடம்யா தென்ன, இப்பரதகண்டத்தில் தில்லையென்னும் பெயரையுடைய வனமொன் றிருக்கின்றது. அதில் சிவசொரூபமான சிவகங்கையென்னும் தீர்த்தமுள்ளது. அததீர்த்தத்திற்கு தெற்கே சுயம்பு மூர்த்தமாகிய திருமூலநாசர் என்னும் சிவலிங்கமொன்றிருக்கின்றது. அவ்விடம் நீ சென்று நாள்தோறும் சிவகங்கையில் ஸ்நானஞ் செய்து திருமூலநாதரைத் தரிசித்து பற்பஞ்சாக்கரத்தை ஜபம் செய்து கொண்டிருப்பையாயின் அச்சாம்பமூர்த்தி கடாட்சத்தினால் அதிசீக்கிரத்தில் உன் அபீஷ்டம் நிறைவேறி முடிவில் சாயுச்சியபதத்தையுமடைவாய் என்றனர்.

பழமுனிவர் தந்தையிடம் விடைபெற்று, தில்லைவனம் புகுந்து, ஆங்கு தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களைக்கண்டு ஆனந்த பரவசமடைந்து சிவகங்கையில் மூழ்கி நானாவித பரிமள புஷ்பங்களால் திருமூலநாதரை யருச்சித்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். ஓர் நாள் ஆரணியத்துட்சென்று புட்பங்கொணர்ந்து திருமூலநாதரைப் பூஜை செய்யும்போது, அப்புட்பங்களில் சில பழுதாயிருக்கக்கண்டு மனங்கசிந்துருகிச் சிவத்தியானஞ்செய்து கொண்டிருக்கும்போது பரமேஸ்வரன் பிரசன்னமாகி யாதுவேண்டுமென்ன, மழமுனிவர் ஆனந்தபரவசமடைந்து “ஆகமவிதிப்படி சூர்யோ தயத்திற்கு முன் அர்ச்சித்தற்குரிய மலர்களைக்கொய்வதற்குப் பனியினால் மரங்களிலேறக் கூடாமையாயிருக்கிறது, உதயமானபிறகு புஷ்பங்கள் வண்டுகளால் கடிக்கப்பட்டுப் பரிமளம் சூனியமாயிருக்கின்றது ஆகையால் அடியேனுக்குக் கால்களுங்கைகளும் புலிக்கால்களும் புலிக் ணகைகளுமாகவும் இருப்.பொழுதில் புழுவெட்டு முதலிய குற்றமுள்ள மலர்களை நீக்கி நல்ல மலர்களைக் கொய்வதற்கு அக்கைகால்களி னகங்களே கண்களாகவும், மற்ற அகெங்களெல்லாம் மானுடஅங்கங்களாகவும் இருக்கவேண்டும்" எனறு பிரார்த்தித்தார். பரமேஸ்வரன் மிகவும் சந்தோஷித்து அவர் வேண்டியபடியே அநுக்கிரகஞ்செய்து மறைந்தனர், கணநாதர்களெல்லாம் மழமுனிவரை வியாக்ரபாதரென்று வாழ்த்தினர். வியாக்ரபாதர் களிப்படைந்து பரிமள நீங்காத மலர்களைக் கொய்து பகவானை யர்ச்சித்து வந்தார்.

ஒருநாள் வியாக்ரபாதர் சிவயோகத்திலிருக்கையில் தாருகவன ரிஷிகளுக்குக் காட்சி தந்த நடனகோலம் தமதறிவிற்சிறிது தோன்றியது; தோன்றவும் மிகவும் மனம்வருந்தி' அந்தோ! நமது பிதா திருமூலத்தானமாகிய இவவிடத்தில் பரமேஸ்வரனை அருச்சனை செய்யச்சொன்னவர் தாருகாவனத்தில் அருச்சனை செய்யவிதித்திருப்பராயின், நான் அந்த நடனகோலத்தைக கண்டிருப்பேனல்லவா' என்று நினைத்தனர். பரமேஸ்வரன் கருணை கூர்ந்து இச்சிதம்பரத்தின் கண் நீ அதனைத்தரிசிக்கலாமென்று அவரறிவில் விளக்கினார். அவ்வளவில் வியாக்ரபாதர் மகிழ்ந்திருந்தனர்.

இதுநிற்க, திருப்பாற்கடலில் ஆதிசேஷசயனத்தில் திருமால் யோக நித்திரை செய்து கொண்டிருக்கையில் ஒருநாள் அவருக்குத் தேகம் நிஷ்காரணமாய் அசைவுற்றது. ஆதிசேஷன் ஆச்சரியமடைந்து அப்படி அசைந்ததற்குக் காரணம் என்ன வென்று மிகுந்த பயபக்தியுடன் விஷ்ணுவை வினவினன் - விஷ்ணு அதுமிகவும் இரகசியமானது ஆயினும் நீ என்னுடைய அந்தரங்க பக்தனாகையால் உனக்கு விளம்புகிறேன் கேள் நான் சிவதரிசனைக்காக கைலாயத்திற்குப் போயிருந்தபோது பரமேஸ்வரன் தாருகவனத்து ரிஷிகளின் ஆணவமலத்தையொழிக்க வேண்டியும் அவர்களுடைய தவநிலையைச்சோதிப் பதற்காகவும் தான் பிக்ஷாடன வேடந்தரித்து என்னை மோகினிவடி வெடுத்து வரும்படிக் கட்டளையிட்டனர். அவ்வாறேநான் மோகினி யாகித்தாருகாவனத்திற்கு பிக்ஷாடனவேடங்கொண்ட சிவபெருமானுடன் போயினேன். பிக்ஷாடனர் அம்முனிவர்களுடைய பத்தினிகளிடத்திற் சென்று பிச்சைகேட்க, அவருக்கு பிச்சைச் கொண்டு வெளியே வந்த முனிபத்தினிகள் அவருடைய சவுந்தரியத்தைக் கண்டு காமவிகாரங்கொண்டு அவர் மேல் கந்தபுஷ்பாதிகளைச்சொரிந்து தங்களுக்கு உடையவிழ்ந்ததும் தெரியாது அவர் பின் தொடரத்தலைப் பட்டனர்.
நான் அந்த முனிவர்கள் தவம் செய்துக்கொண்டிருக்கும் இடத்தில் நுழைந்து அங்குமிங்குமாய் திரிந்துக் கொண்டிருந்தேன். அந்த முனிவர்கள் என்னைக் கண்டவுனே தவநிலையை விட்டெழுந்து என்னைப் போகமாதெனக்கருதி என்பின் தொடர்ந்தார்கள். அந்த சமயத்தில் அந்த முனிவர்களில் விருத்தாப்பியராயிருந்த சிலர், முனிபத்தி னிகள் காமமீதூர்ந்து பிட்சாடனர் பின்தொடர்ந்து போவதைக்கண்டு அவரைக் கொல்ல வெண்ணி அபிசாரயாகஞ் செய்து அதிலெழுந்த மான், அரவம், முயலகன் முதலிய எல்லாவற்றையும் ஏவியும் இறவா திருக்கக்கண்டனர். பிறகு அந்த முனிவர்கள் பிட்சாடனரைப் பரமேஸ்வரனெனத் தெரிந்து பலவாறு ஸ்தோத்திரஞ் செய்ய, பரமேஸ்வரன் அம்முனிவர்களை நோக்கி இந்த அரணியத்தில் சிவலிங்க ஸ்தாபானஞ் செய்து என்னை ஆராதிப்பீராயின் உங்களுக்கு மோக்ஷம் கைகூடுமென்று கட்டளையிட்டு அவர்களுக்கு ஆநந்தநடன தரிசனம் காட்டி யருளினார். அச்சமயத்தில் ஆங்கு வந்திருந்த பிரமாதிசகல தேவர்களும் அந்த நடன தரிசனத்தைக்கண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கினார்கள். அவ்வானந்தத் தாண்டவம் எனக்கிப்போது நித்திரையில் தோன்றினபடியால் அசைவுற்றேன்'' என்றனர்.

இதைக் கேட்ட ஆதிசேஷன் மிகவும் ஆச்சரியமடைந்து தானும் அந்தநடன தரிசனத்தைக் காண வேண்டுமென்று, நாராயண மூர்த்தியை நோக்கி நமஸ்கரித்து " சுவாமி! அடியேனுக்கும் அந்தநடன தரிசனம் கிடைக்கும்படி அனுக்கிரகம் செய்யவேண்டும்'' என்று கேட்டுக்கொள்ள, ஸ்ரீவிஷ்ணு மூர்த்தி ஆதிசேஷனை நோக்கி'' நீ சிவதரிசனத்தைக் கேட்டமாத்திரத்தில் உனக்கு சிவபக்தியுண்டாகி நடன தரிசனத்தில் அத்தியந்த அபேட்சை மேலிட்டிருப்பதால் சிலகாலம் வரையில் நீ சிவாராதனைச் செய்வையாகில், நீ சிவகடாக்ஷம் பெற்று அந்நடன தரிசனத்தைக் காணப்பெறுவாய் என்று தெரிவித்தனர்.

ஆதிசேஷன் விஷ்ணுமூர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டு அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரஞ் செய்து அவருடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டு சைலயங்கிரியைக்கு வடபாற் சென்று அவ்விடத்தில் பரமேஸ்வரனை நோக்கி அரிய தவம் செய்து கொண்டிருந்தனன். கைலாசபதி பிரமனைப்போல உருவெடுத்து ஆதிசேஷனுக்கு முன்தோன்றினர் ஆதிசேஷன் அங்குக் காட்சி தந்தவர் பிரமதேவ ரெனவே நினைத்து நமஸ்கரித்தனன். பிரமதேவர் ஆதிசேஷனை நோக்கி  'நீ இது காறும் சரீரம் வருந்தச் செய்த தவத்தை மெச்சி னேன் உனக்கு வேண்டியது இந்திராதியோகங்களோ? அல்லது நம் முடைய சாலோக முதலிய பதங்களோ? அல்லது அஷ்டமாசித்திகளோ? உனக்கு எது தேவை''  என்றனர்.

ஆதிசேஷன் பிரமதேவரை நோக்கி  ''சுவாமி! எனக்கு வேண் டியதைக் கொடுக்க கைலாசபதி ஒருவரேயன்றி, ஏனையோரல்லர். ஆகையால் உம்மால் எனக்குக் கிடைக்கத்தக்க தொன்றுமில்லை'' என்றான். பிரமனாய் வந்தசாம்பவ மூர்த்தி ஆதிசேஷனுடைய பக்திக்கு மிக்க வியந்து உடனே விருபாரூடராய் காட்சிதந்தருளினர். ஆதிசேஷன் மிகவும் பயந்து சாஷ்டாங்க நமஸ்காரஞ்செய்து வேத வாக்கியத்தால் ஸ்தோத்திரஞ் செய்து, தான் பகவானுடைய மகிமை தெரியாமல் பிரமதேவரென்று நினைத்து உதாசினமாய் பேசிய குற்றத்தை க்ஷமித்தருள வேண்டுமென்றும், தன்னபீஷ்டத்தை நிறை வேற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்.

"ஓ! அன்பனே! நீ வியாகூலப்படாதே. நீ என்னுடைய நடன தரிசனத்தைக் காண அபேட்சித்திருப்பதால், மேருமலைக்குத் தெற்கே சமுத்திர தீரத்தில் தில்லைவன மென்றோர் ஆரணியமுளது; ஆங்கு வியாக்ரபாதர் என்னும் பக்தன் அநேகநாளாக சுயம்பு மூர்த்தமாகிய திருமூல நாதருக்கு நித்திய ஆராதனை செய்துகொண்டிருக்கின்றான். நீயும் உன் ஆயிரம்பணாமுடிகளை மறைத்து ஐந்து முடிகளுடன் அத்திரி மகாரிஷியின் பத்தினியாகிய அனுசூயா தேவியினிடமாகப் பிறந்து பதஞ்சலி என்னும் நாமதேயத்தைப் பெற்று, தில்லைவனம் அணுகி, வியாக்கிரபாதருடைய நேசத்தைக்கொண்டு திருமூல நாதரை அருச்சித்து வருவையாயின் தைமாதம் பூச நட்சத்திரம் குருவாரம் கூடிய குருபுஷ்ய புண்ணிய தினம், மத்தியான காலத்தில் சமஸ்ததே வர்களுடன் பிரசன்னமாய் நீயும் அவ்வியாக்கிரபாதரும் காணும்படி தரிசனம் கொடுப்போம்' என்து பரமேஸ்வரன் சொன்னதும் ஆதிசேஷன் ஆனந்தமடைந்து, பின்னும் பகவானை நோக்கி, '' சுவாமி! அடியேன் தில்லை வனத்திற்குச் சர்ப்ப ரூபத்தோடு போகும் போது வழியில் கருடனால் உபத்திரவம் சம்பவிக்காமலிருப்பதற்கு ஓர் மார்க்கம் அருள் செய்யவேண்டும்'' என்று விண்ணப்பம் செய்து கொண்டான்.

சாம்பவமூர்த்தி அங்கு ஒரு பிலத் துவாரத்தைக் காண்பித்து நீ இப்பிலத்துவாரத்து வழியாகச் செல்லுவாயாகில் அவ்வனத்தை யடை வாயென்று சொல்லித் திருவுருக்காந்தனர். ஆதிசேஷன் ஐந்து சிரசுடன் அனுசூயாதேவியின் புத்திரனாய்ப் பிறந்து, பிலத்துவாரத்து வழியாக நுழைந்து பாதாள மார்க்கமாக தில்லைவனத்தையடைந்து, அங்குத் தவஞ்செய்துக் கொண்டிருந்த வியாக்கிரபாதரைக்கண்டு அவருக்கு நமஸ்காரஞ் செய்தனர்.

ஐந்து சிரசுடன் தன்னைப்பணிந்தவர் இன்னாரென்று வியாக்கிர பாதருக்குத் தெரியாமையால் ஆச்சரியமடைந்து அவருடைய வரலாற்றை வினாவினர். பதஞ்சலியார் நடந்த சவிஸ்தாரத்தைச் சாங்கோ பாங்கமாய் மொழிந்து பரமேஸ்வரன் இத்தில்லை வனத்தில் ஆனந்த நடன தரிசனத்தைக் காட்டப்போகின்றமையால் அதுவரையிலும் வியாக்கிரபாதருடன் திருமூல நாதரை வழிப்பட்டு வரும்படி ஆக்கியபித்ததைச் சொன்னமாத்திரத்தில் வியாக்கிரபாதர் ஆனந்தமடைந்து பதஞ்சலியாரைக் கட்டித்தழுவி திருமூலநாதருடைய சந்நதிக்கழைத்துக் கொண்டுபோய், திருமூலநாதரைத் தரிசிப்பித்து, பின் தன்னாச் சிரமத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வியாக்கிரபாதர் தான் பிரதிஷ்டை செய்து பூஜித்து வரும் வியாக்கிர பாதேஸ்வரர் என்னும் சிவலிங்க மூர்த்தியை பதஞ்சலிக்குக் காட்டி அவ்விலிங்க மூர்த்திக்குப் பூஜைசெய்யச் சொல்லினர், பதஞ்சலி அவ்வாறே துதித்துப் பிறகு அவ்வாச்சிரமத்துக்கு மேற்கில் அநந்த தீர்த்தமெனத்தன் பேரால் ஒரு தீர்த்தமுண்டாக்கி அதன் தீரத்தில் அநந்தேஸ்வர பென்னும் ஒரு சிவலிங்க மூர்த்தியை ஸ்தாபித்து, அம்மூர்த்தியைப் பூஜித்துப் பிரதிதினமும் வியாக்கிரபாதருடன் சிவகங்கையில் ஸ்நாநஞ்செய்து திருமூலநாதர், வியாக்கிர பாதேஸ்வரர், அநந்தேஸ்வார் ஆகிய மூர்த்திகளையும் பூஜித்துக் கொண்டு நடன தரிசனத் தைக்காணத் தவஞ்செய்து கொண்டிருந்தனர்.

முனிவர்களிருவரும் இவ்விதஞ் தவஞ்செய்து கொண்டிருக்கையில், ஆங்குவந்த சில முனிஸ்ரேஷ்டர்களால் அவ்விடம் ஒரு ஞானசபை யுண்டென்று சொல்லக்கேட்ட வியாக்கிரபாதரும், பதஞ்சலி முனிவரும் அவ்வெல்லையைச் சித்தத்தினாலே நமஸ்கரித்து, அவ்விடம் சென்று ஆனந்த நிருத்தத்தை ஞானத்தினாலே வணங்கிப் பாவனாதரி சனத்தினாலே தேகம் புளகிக்க எண்ணிறந்த நாட்களைப் போக்கினார்கள்.

முன்கைலாசகிரியில் பதஞ்சலி முனிவருக்கு நடன தரிசனத்தைக் காட்டுவதாக பரமசிவன் சொல்லியிருந்த புண்ணியதினம் சமீபித்த படியால் வியாக்கிரபாதரும், பதஞ்சலி முனிவரும் அதிக ஆவலுடன் அத்தரிசனத்திற்கு யாதொரு விக்கினமும் நேராதபடிக்கு அத்தினத்திற்கு முந்தின தினம் விநாயகருக்குப் பூஜைசெய்து நடன தரினத்திற் காக எதிர்பார்த்திருந்தனர். மறுநாள் குருவாரம் பூசநட்சத்திரம் சித்தயோகத்தில் சகல ஆன்மகோடிகளுக்கும் சுபசகுனங்கள் உண் டாகவும், ஆகாயத்தில் துந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கவும், அங்கு நடன தரிசனத்தின் பொருட்டு வந்திருந்த மூவாயிரம் பிரம ரிஷிகளுடன், தேவர், தானவர், யக்ஷர், கின்னரர், கிம்புருடா திகள் தோத்திரஞ் செய்யவும் பிரவணசொரூபியாகிய பரமசிவன் தன் ஜோதி ஸ்வரூபத்தைப் பதஞ்சலியும், வியாக்கிரபாதரும் கண்டு தரிசிக்கும்படி, யான ஞான திருஷ்டியை அவர்களுக்குக் கடாட்சித்து ஏனையோர்க் கெல்லாம் அவரவர் பரிபாகத்துக்குத் தக்கபடி கண்டு தரிசிக்கும்படியான திருஷ்டியைக் கொடுத்து யாவரும் காணும் படியான ஒருஜோதி தோன்றியது. அச்சோதியின் மத்தியில் பரமேஸ்வரன் சிவகாம சுந்தரியுடன் திவ்வியாபாணாலங்காரத்தோடு பேரி, மிருதங்க, வீணா வேணு தாளவாத்திய கோஷத்துடன் ஆனந்தத்தாண்டவஞ் செய்தனர். இந்த நடன தரிசனத்தைச் சமஸ்த தேவர்களும், ரிஷிகள் முதலிய யாவருங்கண்டு பிரம்மானந்தத்தில் மூழ்கினர். பரமேஸ்வரன் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்கு அவரவர் கோரியவரங்களை யளித்தனர். தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர். பரமேஸ்வரன் தேவர்களை நோக்கி "பிரஞானமானது நமக்கு விளங்கப்பட்ட அதிஷ்டானமாம், நம்மிடத்தில் பிரிவின்றி ஒன்றானது சித்தும் சத்துமாயு முள் ளது. அச்சொரூபம் அமரப்பட்ட இப்பூவுலகத்தைவிட்டு அகலாதது. எவ்வாறெனில், உடலில் உட்பட்டிருக்கும் உயிரினிடத்தில் எவ்வாறு ஞான சொரூபமா யிருக்கின்றோமோ, அப்படியாகவே யிருப்போம். ஆகையால் இந்த இடத்தைச்சுற்றி அம்பலமாக்க கோலுங்கள்'' என்றார்.

"ஞான நமக்குத் திகழ்விடநம்மிற் பிறிவின்னொன்
றான துசித்துச் சத்தமர்ஞாலத் தகலாது
தானுடலுட்பட்டிடு முயிரிற்றங்குதல் போல்போம்
வானவர் சுற்றிக் கோலுமினென்றான் மன்றாடி''

தி. அரங்கசாமி நாயுடு,
லிகிதர் – சைவசித்தாந்தம் மகாசமாஜம்.

சித்தாந்தம் – 1915 ௵ - செப்டம்பர் / நவம்பர் ௴


No comments:

Post a Comment