Saturday, May 9, 2020



ஆறாறு தத்துவங்கள்

[ந. ரா. முருகவேள்]

முன்னுரை

[சைவ சித்தாந்த சாத்திர வகுப்புக் குழு' வின் சார்பில், மே மாதம் 18 - 19 - 20 தேதிகளில் திரு.வி.க. மணிமண்டபத்தில், 'உண்மை விளக்கம்' பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகளில், ஒரு பகுதியின் சுருக்கம்.]

உண்மை விளக்கம்' என்னும் தொடரில், 'உண்மை' என்னும் சொல்லானது, பல பொருள்களை உள்ளடக்கி நிற்ப தொன்றாகத் திகழ்கின்றது. தத்துவம் என்னும் வடசொல், தமிழில் உண்மை எனப் பொருள்படும்.ஆதலின், "பலகலை ஆகமவேதம் யாவையினும் கருத்துப்பதி பசு பாசம் தெரித்தல்'' என உமாபதிசிவனார் அருளிச்செய்தபடி, முப்பொருள் இயல்புகளைக் குறித்து விளக்கத்தலைப்படும் இச்சைவ சித்தாந்த நூலில், தத்துவங்கள் முப்பத்தாறு குறித்த செய்திகளும் இயைபுடைமை பெற்றுத் தெளிவுற விளக்கப்படுகின்றன.

"ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது?' அன்றேதான்
மாறாவினை ஏது? மற்றிவற்றின் – வேறாகா
நான்ஏது? நீஏது? நாதன் நடம், அஞ்செழுத்துத்
தான்ஏது? தேசிகனே! சாற்று''

தத்துவமும் சாங்கியமும்

காணப்பட்ட உலகத்தைக் கொண்டே, காணப்படாத கடவுளின் உண்மையை உணர்தல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவர், மெய்கண்டார் முதலிய சான்றோர்கள் அனைவரும் இம்முறைமை தழுவியே கடவுளுண்மையினைக் கட்டுரைத் தருளியிருத்தல் காணலாம். மாணிக்கவாசகரும் "ஞாலமே கரியாக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் காலமே' என அருளிச் செய்தனர். மனிதன் அறிவு வளரப் பெற்றுச் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இவ்வுலகியற்கையைக் கூர்ந்து நோக்கிப் பலவகைகளில் ஆராய்ந்து பகுத்துணரத் தலைப்படுவானாயினன். அம்முயற்சியில் முதற்கண் தலைப்பட்டு நின்று ஓரளவு வெற்றிகண்டவன் உலகாயதன். அவன் நிலம் நீர் தீ வளி என்னும் நான்கு தத்துவங்கள் வரையில் மட்டுமே ஆராய்ந்து அமைந்தனன். ஆனால் சாங்கியம் என்னும் அறிவுநூற் கொள்கை, இருபத்தைந்து தத்துவங்கள் வரையில் ஆராய்ந்தறிந்த சிறப்பை யுடையது .'எண் 'எனப்பொருள்படும் 'சங்கியை' என்னும் சொல்லினின்று, சாங்கியம் என்னும் சொல் தோன்றியது.

"சாங்கியம் யோகம் என்றிரண்டு தன்மைய
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன;
ஆங்கவை யுணர்ந்தவர்க் கன்றி, அன்னவன்
ஓங்கிய மேல் நிலை யுணரற் பாலதோ?”

எனக் கம்பர் சாங்கிய நூற்கொள்கையினைப் புகழ்ந்து போற்றுவர். பரிமேலழகர் "சுவை யொளியூறோசைநாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே யுலகு'' என்னும் திருக்குறள் உரையிற் சாங்கியக் கொள்கையினைப் பாங்குற விளக்கியுள்ளார். பரிபாடல் என்னும் சங்கநூலும் இச்சாங்கியக் கொள்கையினை,

"பாழ்எனக் கால்எனப் பாகுஎன ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை யூழி எண் நவிற்றும் சிறப்பினை''                          (1)

என்னும் வரிகளாற் குறிப்பிட்டிருத்தல் காணலாம். சாங்கிய நூற் கொள்கையின் சிறப்பினையே ''ஐயைந்தும் ஆய்வது அறிவு" என்னும் பழம்பாடலும் விதந்து போற்றுகின்றது .

(1) பாழ் - புருடன். கால் - ஆகாயம் முதலிய பூதங்கள்ஐந்து. பாகு - பகுக்கப் பெற்ற கன்மேந்திரியங்கள் ஐந்து.ஒன்றிரண்டு மூன்று நான்கைந்து - ஐம்பூதங்களின் சிறப்புப் பண்புகள் ஆகிய ஓசை ஊறு உருவம் சுவை நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்து. ஆறு - ஞானேந்திரியங் கள் ஐந்தும் மனமும். ஏழு - அகங்காரம், எட்டு - மான்,புத்திதத்துவம். தொண்டு - மூலப் பகுதி.'எண்'என்றது ஈண்டுச் சாங்கிய நூலையே குறிக்கும் எனவும்கொள்ளுதல் பொருந்தும்.

இந்தியத் தத்துவக் கொள்கைகள் பலவற்றுள் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்தது சாங்கியம் ஆகும்.  உலக அமைப்பு வளர்ந்து ஓங்கியுள்ள இயல்பினை நன்கினிது கூர்ந்து ஆராய்ந்து, இருபத்தைந்து தத்துவங்களாகப் பகுத்துணர்த்திய பெருஞ்சிறப்பு சாங்கியத்திற்கேயுரியதாகும். சாங்கிய நூல் உலகமைப்பினை உற்றுநோக்கிப் பாகுபாடு செய்து விளக்கியுள்ள திறம், காரண காரிய அடிப்படையில் அறிவு நெறி முறைகளுக்குப் பெரிதும் இயைந்து விளங்குகின்றது. இவ்வாற்றாற் சாங்கியக் கொள்கையானது, மெய்ப் பொருளறிவுத்துறையில் குறிப்பிடத் தக்கதொரு சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது எனலாம்.                                                                 (2)

(2) “The Samkhya is the oldest school of Hindu Philosophy. The unique position of the Samkhya in the history of thought is the fact that it expounds by careful reflection the first systematic account of the process of cosmic evolution which attempts to comprehend the universe as a sum of twenty - five categories. This exposition is no mere metaphysical speculation but is a purely logical account based on the scientific principles...The Samkhya is held to be the most notable attempt in the realm of pure philosophy " - THEOS BERNARD.
சைவ சித்தாந்தத்தின் சால்பு

இத்தகைய சிறந்த சாங்கியக் கொள்கையினும் மிக ஆழ்ந்து நுணுகிச் சென்று, உலகமைப்பின் பொருட் கூறுகளையும், தோற்ற ஒடுக்க முறைகளையும் குறித்துஆராய்ந்து; சைவசித்தாந்தம் திறம்பட விளக்குகின்றது.இவ்விளக்கத்தின் விளைவே ஆறாறு தத்துவங்களைப் பற்றியசெய்திகள் ஆகும். உலோகாயதம் மாத்தியமிகம் யோகாசாரம் சௌத்திராந்திகம் வைபாடிகம் ஆருகதம் தருக்கம்மீமாஞ்சை ஏகான்மவாதம் முதலிய சமயங்கள் பலவும்,தத்துவங்களை ஆராயும் நெறியில் முறையே ஒன்றினொன்று குறைந்து நிற்பனவாய், மூலப்பகுதிக்கு மேற்பட்ட பொருளுண்மையினைக் கண்டறிந்தன அல்ல. இச்சமயங்கள் கூறும் தத்துவப் பாகுபாடுகள் அனைத்தும், சாங்கியக் கொள்கை விளக்கும் இருபத்தைந்து தத்துவங்களுள்அடங்குவனவேயாம். மூலப்பகுதிக்கு மேற்பட்ட பன்னிரண்டு சூக்கும் தத்துவங்களை யெல்லாம் ஆராய்ந்துணர்ந்த சிறப்பு, அகப்புறம் அகம் என்னும் பாகுபாட்டைச் சேர்ந்த சமயங்களுக்கும், இவைகளெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டிலங்கும் சைவ சித்தாந்தத்திற்குமே யுரியதாகும்.

"ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொது என்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி, வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறு, ஐயைந்து மாயா வாதிக்கே

எனவரும் திருமந்திரப் பாடல், ஆறாறு தத்துவங்கள் அருஞ்சைவர்க்கே யுரியன என்று கூறியிருத்தல் அறிந்தின்புறத் தக்கது. இம் முப்பத்தாறு தத்துவங்களும் முறையே ஆன்மதத்துவம் (24) வித்தியாதத்துவம் (7) சிவதத்துவம் (5) என மூன்று வகைப்படும். அவற்றுள் ஆன்மதத்துவம் இருபத்து நான்கும் முறையே வருமாறு:

ஆன்ம தத்துவங்கள்

பூதங்கள் ஐந்து: பிருதிவி அப்பு தேயுவாயு ஆகாசம்.இவற்றை நிலம் நீர் தீ வளி விசும்பு எனவும், மண் புனல் அனல் கால் வான் எனவும் கூறுவர். அண்டம் (Macrocosm) பிண்டம் (Microcosm) என்னும் இரண்டும் இவ்வைம்பெரும் பூதங்களின் கலப்பினால் ஆகிய காரியமேயாகும். பூதங்கள் ஐந்திற்கும் தனித்தனியே வடிவு நிறம் எழுத்துகுணம் குறி தொழில் தெய்வம் என்பன உண்டு. (ஒப்புநோக்குக; சித்தியார் சுபக்கம், 155 - 158) இப்பூதங்கள் ஐந்தும் அகப்பூதம் அகப்புறப்பூதம் புறப்பூதம் என மூன்று வகைப்படும். இந்திரியங்களுக்குப் பற்றுக்கோடு ஆவன பூதங்கள். நம்மனோர் உடலாக அமைவன அகப்புறப் பூதங்கள், உயிருக்கு நுகர் பொருளாகிய விடயமாக இருப்பன புறப்பூதங்கள்.

தன்மாத்திரைகள் ஐந்து: சப்தம் பரிசம் ரூபம் ரசம்கந்தம் என்பன. இவை முறையே ஓசை ஊறு ஒளி சுவைநாற்றம் என வழங்கப்படும். 'சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே யுலகு' என்பது திருக்குறள். பூதங்கள் ஐந்தின் சூக்கும நிலையேதன் மாத்திரைகள் ஆகும். தன்மாத்திரைகளில் இருந்தேபூதங்கள் ஐந்தும் முறையே தோன்றுகின்றன. தன்மாத்திரைகள் பூதாதி யாங்காரத்தில் இருந்து பிறக்கின்றன.தன்மாத்திரையும் ஐம் பெரும் பூதமும், தேர் ஊர்வானுக்குத் தேர்போல இந்திரியங்கட்கு ஆற்றல் விளைவித்து நிற்கும். பெரும்பூதமும் தன் மாத்திரையும் குடமும் குடமேற்பூச்சும் போலும்.

ஞானேந்திரியங்கள் ஐந்து: சுரோத்திரம் துவக்கு சட்சுசிங்கவை ஆக்கிராணம் என்பன. இவற்றை முறையேசெவி தோல் கண் நாக்கு மூக்கு என்பர். இவை ஐந்தும்முறையே ஐம்பூதங்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு,சுவை யொளி யூறோசை நாற்றங்களை அறியும். அறிகருவிகள் ஆகிய ஞானேந்திரியங்கள் தைசத ஆங்காரத்தில் இருந்து தோன்றும்.

கன்மேந்திரியங்கள் ஐந்து; வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்பன. இவை முறையே வாய் கால் கை எருவாய் கருவாய் எனவும் படும். ஐம்பூதங்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு. இவைகள் பேசல் நடத்தல் கொடுத்தல் விடுத்தல் இன்புறல் (வசனம் கமனம் தானம் விசர்க்கம்ஆனந்தம்) என்னும் தொழில்களைச் செய்யும். தொழிற் கருவிகள் ஆகிய கன்மேந்திரியங்கள் வைகாரியாங்காரத்தினின்று பிறக்கும்.

அந்தக் கரணங்கள் நான்கு; மனம் புத்தி அகங்காரம்சித்தம் என்பன. ஒரு விடயத்தைப் புறவிந்திரியம் பொதுவகையான் முன்னுணர, அதன்பின் அவ்விடயத்தை அகவிந்திரியமாகிய மனம் பற்ற. அதன் பின் ஆங்காரம் ஒருப்பட் டெழ, அதன் பின்னர்ப் புத்தி நிச்சயிக்கும். சித்தம் இஃது யாதாகற்பாற்று என ஒரு பொருளைச் சிந்திக்கும். மனம் இது குற்றியாகற்பாற்று மகனாகற்பாற்று என ஒன்றைச் சங்கற்பித்தும், அஃதாமோ அன்றோ எனஐயுற்றும் பற்றி நிற்கும். ஆங்காரமானது குற்றியென்றாதல் மகனென்றாதல் ஒன்றை நிச்சயிப்பேன் யான் என்று எழுச்சி கொள்ளும். புத்தியானது இவன் மகன் இதுகுற்றி இஃதாடை என அவ்வப் பொருள்களைப் பெயர்சாதி கன்மம் குணம் என்பன பற்றிச் சிறப்புவகையால் துணியும். கண்ணுக்குக் காட்டாகிய விளக்குப் போல, ஆன்மாவுக்குக் காட்டாக நிற்பது அந்தக்கரணம், சிந்தித்தல் ஆகிய மனத்தின் செய்கையே சித்தம் என்று கூறப்படுவதல்லது, சித்தம் என்பது ஒரு தனித் தத்துவமன்று. "சிந்தை நினைவு ஐயம் வந்து தரும் மனம் ஒழிய வகுப்பொணாதே'' எனச் சிவப்பிரகாசமும், ''மனமது தைசதத்தின் வந்து ஒரு பொருளை முந்தி நினைவதும் செய்து,அங்கு ஐய நிலைமையில் நிற்கும்'' எனச் சிவஞான சித்தியாரும் கூறுதல் காணலாம்.

உண்மை விளக்கத்தில், மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்னும் முறையில் வைத்து அந்தக்கரணங்களின் பெயர் கூறப்பட்டுள்ளது. அமைச்சு நாடு அரண் பொருள் படைநட்பு என்பதே முறையாயினும், ஆசிரியர் திருவள்ளுவர்

"படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு''
எனச் செய்யுளாகலின் முறை பிறழக் கூறினார்'' எனப்பரிமேலழகர் கொள்ளுமாறு போல, ஈண்டு நாமும் சித்தம்மனம் அகங்காரம் புத்தி எனற்பாலனவற்றையே, திருவதிகை மனவாசகங்கடந்தார் செய்யுள் அமைப்பு நோக்கி முறைபிறழ வைத்தார் என உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் சிவஞான போதப் பேருரையிற் சிவஞான சுவாமிகள் விளக்கியருளினர்.

இது காறும் கூறிவந்த தத்துவங்கள் இருபத்து நான்கும், ஆன்மாவுக்குத் தூலவடிவில் நேரே தொடர் புற்றுப்பயன்படுவன வாதலின், ஆன்மதத்துவங்கள் எனப் பெயர்பெறும். இதனைச் சீகண்டருத்திரர் அதிட்டித்து நிற்பர்.

வித்தியா தத்துவங்கள்

கால தத்துவம்: புத்தர் முதலினோர் காலம் என்றொரு பொருள் இல்லை என்பர், மாந்தளிர் முதலியன இளவேனிற் காலம் முதலிய வற்றினன்றித் தோன்றாமையும்,முல்லைப்பூ முதலியன கார்காலம் முதலியவற்றினன்றி மலராமையும் காண்கின்றோம். இங்ஙனமே உலகத்துப் பொருள்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிப் பிறிதொரு காலத்தில் அழிந்து படுதல் யாவரும் அறிந்த தொன்று. ஏனைக் காரணங்க ளெல்லாம் தொக்கவழியும் இதற்கு முன்னர்த் தோன்றாத ஒரு பொருள் இப்பொழுது தோன்றுதற்கு அமைந்த காரணம் யாது, அது காலம் எனத் துணியப்படும்.

அசுத்தமாயையினின்று அருந்த தேவரால் முறையேகாலமும் நியதியும் கலையும் தோன்றும். கலையினின்று வித்தையும், வித்தையினின்று அராகமும் பின்னர்த்தோன்றும். "மாயையிற் காலமோடு நியதி பின் கலாதி தோன்றும்” என்பது சிவஞான சித்தியார். சிவப்பிரகாசத்தில்உமாபதி சிவம் கலையின் பின் காலத்தை வைத்து, ''அருத்திமிகும் கலை காலம் நியதியுடன் வித்தை அராகம் இவைஅநந்தரால் மாயைதனில் ஆகும்" என அருளிச் செய்தனர். தோற்றம் பற்றிய முறைமை கருதின் காலம் முன்னாகவும்,தொழிற்பாட்டு முறைமை பற்றிக் கருதின் கலை முன்னாகவும் கொள்ளப்படும். இவ்விருவகையினையும் இவ்விரு நூல்களும் உணர்த்தின.

காலம் என்னும் தத்துவமானது செல்காலமான எல்லையும், நிகழ்காலமான பலனும், எதிர்காலமான புதுமையும் ஆக மூன்று வகைப் பட்டிருக்கும்.

"நிகழ்காலம் கழிக்காலம் எதிர்காலம் என்றே
ஓசைதர வருங்காலம் எல்லை பலம் புதுமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே"          - சிவப்பிரகாசம், 40.

நியதி தத்துவம்: பால் ஊழ் தெய்வம் வீதி நியதி என்பன ஒருபொருட் கிளவிகள். அவரவரால் ஈட்டப்படும் வினையின் பயனை அவரவரே நுகருமாறு, அரசர் ஆணைபோல நியமித்து நிறுத்துவது நியதி தத்துவம். ஒருபாற்கோடாது நடுநின்று செங்கோல் செலுத்தும் அரசனின் ஆணையில்லாதவழி எளியோர் பொருளை வலியோர் கவர்ந்து கொள்ளுவது போல, நியதி தத்துவம் இல்லாதவழி ஒருவர் செய்த வினைப்பயன் மற்றொருவர் கவர்வதாய்முடியும். தொல்காப்பியர் திருவள்ளுவர் இளங்கோவடிகள் முதலிய சான்றோர்கள் எல்லாரும் ஊழினைத் தத்தம் நூல்களிற் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளமை காணலாம்.

“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு"

என நாலடியார் கூறுவது போல, ஒருசிலர் அவரவர் வினைப்பயனை நியமித்தற்கு இருவினையே அமையும், நியதிதத்துவம் வேண்டா என்பர். இருவினையானது நுகர்ச்சியைப் பயத்தல் மாத்திரையே யன்றி, அந்நுகர்ச்சி வினைசெய்தவனைச் சென்று அடையுமாறு செய்விக்க மாட்டாது. ஆதலின் முதல்வனது ஆணையாகிய சக்தியை முன்னிட்டுநுகர்ச்சியினை நியமித்து நிறுத்துதற்குக் கருவி நியதி தத்துவமேயாகும். செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நானகாகும் விதித்தபொருள். இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை''  எனப் பெரிய புராணமும் திருவருட்பயனும் கூறுதல் காணலாம். 'நியதி தேசமிகும் அரசர் தரும் ஆணை, செய்தி செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல, நேசமுறும் தம் கன்மம் நிச்சயித்து நிறுத்தும்'' (40)
என்பது சிவப்பிரகாசம்.

கலைத் தத்துவம்: கலை என்னும் தத்துவமானது மூலமலத்தின் மறைப்புண்டு சூனியம் போல நின்ற ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியின் பொருட்டு, மலசத்தியிற்சிறிதே நீக்கி ஆன்மாக்களுக்குக் கிரியாசத்தியை விளக்குவது. 'கலித்தல்' நீக்குதல், செலுத்துதல் எனப் பொருள்படும் ஆதலின் மலத்தை நீக்குதலாற் கலை எனப் பெயராயிற்று. ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்கிப் புத்திதத்துவத்திற் செலுத்துவது கலை. 'அயர்விலாக் கலை பின்தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியாசத்தி தெரிவிக்கும் சிறிதே' (சித்தியார் சுபக் 145). "வைத்த கலை தான் மூலமலம் சிறிதே நீக்கி மருவும் வகைதெரிவிக்கும் வாயில்களின் பயனை" (சிவப்பிரகாசம், 39).

வித்தியா தத்துவம்: கலையினின்றும் தோன்றி ஆன்மாக்களுக்கு ஞானசத்தியை விளக்கி, எவ்வகைப்பட்ட உணர்வும் ஆன்மாவிற் சென்று விடயமாதற்குக் கருவியாய் நிற்பது வித்தியா தத்துவம். புத்தி தத்துவ இயக்கத்தாற் பரந்து நிகழும் உயிரின் ஆராய்ச்சியுணர்வுக்கு அடிப்படைக் காரணமாய், உயிரின்கண் அறிவினை முதன் முதல் எழுப்புதல் இவ்வித்தியா தத்துவத்திற்கே யுரிய சிறப்பியல் பாகும். வித்தை என்பது, அறி - அறிவி எனப் பொருள்படும் வித் என்னும் தாதுவிற் பிறந்த 'வித்யா' என்னும் என்னும் வடசொல்லின் திரிபாகும். 'வித்தை உயர் கலை அதனில் தோன்றி அறிவினை யுதிக்கப் பண்ணும்'' (சித்தியார், 145) 'வாயில்களின் பயனைப் புத்திதர வித்தை இடைநின்று அறிவை உயிர்க்குப் பொருந்தியிடும் வகைபுணர்க்கும் புனிதசத்தி புணர்ந்தே'' (சிவப்பிரகாசம், 39).

அராக தத்துவம்: இச்சை நிகழ்ந்தன்றிப் போகநுகர்ச்சி செல்லாமையானும், இச்சையாவது ஞானவிசேடமே யாகலானும், வித்தியா தத்துவத்தினின்றும் அராகதத்துவம் தோன்றி, ஆன்மாவுக்குப் பொருள்களில் விருப்பத்தை யுண்டாக்கும். அராகம் என்னும் சொல் இச்சை,விருப்பம் எனப் பொருள்படும். "விசசையின் அராகம்தோன்றி வினைவழி போகத்தின் கண் இச்சையைப் பண்ணிநிற்கும்'' என்பது சித்தியார்.

இவ்வாறு காலம் நியதி கலை வித்தை அராகம் என்னும் தத்துவங்கள் ஐந்தும், ஆன்மாவினுடனாய்க் கஞ்சுகம் (சட்டை, போர்வை) போலப் பந்தித்து நிற்றலின், இவைபஞ்ச கஞ்சுகம் என வழங்கப்படும்.

புருட தத்துவம்: மேற்கூறிய பஞ்சகஞ்சுகங்களுடன் அவிச்சை அகங்காரம் அவா ஆசை வெகுளியாகிய பஞ்சக் கிலேசம் என்னும் பும்ஸ்துவ (போக நுகர்ச்சிக்குரிய) மலத்தோடு இயைந்து நின்று, ஆன்மாவானது போகம் நுகர முற்படும் நிலையே புருட தத்துவம் எனப்படும். "ஐவகையால் உறுபயன்கள் நுகரவரும் காலம் அதுபுருட தத்துவம் என்ற றைந்திடுவர் அறிந்தோர்'' என்பது சிவப்பிரகாசம். புருடதத்துவம் உண்மையாற் சித்தும்,உபசாரத்தாற் சடமுமாம் என்பது உணர்தற்குரியது.

மாயைத் தத்துவம்: ஈண்டு மாயை எனப்படுவது மும்மலங்களுள் ஒன்றாகிய மாயையன்று. இது வித்தியாதத்துவங்களுள் ஏழாவதாக நிற்பது. ஆன்மாக்களைப் போக நுகர்ச்சியிற் செலுத்தியும், அவற்றிற்குப் போக்கியப் பொருள்களாக அமைந்தும் மயக்கி நிற்றலின் 'மயக்குவது' என்னும் பொருளில் மூலப்பிரகிருதி ஈண்டு மாயை எனப்பட்டது. மேற்கூறிய காலம் நியதி முதலிய தத்துவங்கள் ஏழும் ஆன்மாக்களுக்கு வித்தையை (அறிவை) எழுப்பும் தத்துவங்களாதலின், வித்தியா தத்துவங்கள் எனப் பெயர் பெற்றன.

சிவ தத்துவங்கள்

மாயை என்பதொன்றே, தூலம் சூக்குமம் பரம் என மூவகைப்பட்டுத் தூலமாய் நின்ற அவத்தையிற் பிரகிருதிமாயை என்றும், சூக்கும் மாய் நின்ற அவத்தையில் அசுத்தமாயை என்றும், பரமாய் (அதிசூக்குமமாய்) நின்ற அவத்தையிற் சுத்தமாயை என்றும் வழங்கப்படும். சுத்தமாயையினின்றே சுத்த தத்துவங்கள் ஆகிய சிவதத்துவங்கள் ஐந்தும் தோன்றுகின்றன.

சுத்த வித்தை: சுத்தமாயையில் தூலகாரியம் தோன்றுதற்கு ஏதுவாக முதல்வனின் ஞானசத்தி மிகுந்தும், கிரியாசத்தி குறைந்தும் நிகழ்வது. உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோர்க்கும் அவர்களின் தனுகரணாதிகளுக்கும் இஃது இடமாகும்.

ஈசுரம்: சுத்தமாயையிற் சூக்குமமாய்க் காரியம்தோன்றுதற்குக் கிரியை மிகுந்து, ஞானம் குறைந்து நிகழ்வது. அநந்ததேவர் முதலிய வித்தியேசுரர் எண்மருக்கும்பிறருக்கும் இஃது இடமாகும்.

சாதாக்கியம்: சுத்த மாயையைக் காரியப் படுத்துதற் பொருட்டு முதல்வனின் ஞானசத்தியும் கிரியா சத்தியும் தம்முள் ஒத்து நிகழ்வது. பிரணவர் அணுசதாசிவர் முதலியோர்க்கும். அவர்தம் தனுகரணாதி கட்கும் இஃது இடமாக அமையும்.

சத்தி தத்துவம்: சுத்தமானய காரியப்படுமாறு முதல்வனது கிரியா சத்தி வெளிப்பட்டு நிற்பது. முதல்வனின் கிரியா சத்திக்கும், நிவிர்த்தி முதலிய பஞ்சகலை கட்கும், மலபந்தம் நீங்கித் தூலலய வாசனை மாத்திரம் உடையமுத்தர்களுக்கும், அவர்களுக்குரிய புவன போகங்களுக்கும் இத்தத்துவம் இடமாக நிற்கும்.

சிவதத்துவம்; சுத்தமாயை காரியப் படுதற்கு ஏதுவாகும் வண்ணம் இறைவன் தனது ஞானசத்தி மாத்திரையால் நோக்கி நிற்கப் பெறுவது. சூக்கும லய வாசனைமட்டும் உடைய முத்தான் மாக்களுக்கும், அவர்களுக்குரியபுவன போகங்களுக்கும். முதல்வனின் ஞான சத்திக்கும்இஃது இடமாக விளங்கும்.

ஆன்மதத்துவம் (24) வித்தியாதத்துவம் (7) சிவதத்துவம் (5) என்னும் இம் மூன்றும் முறையே போக்கிய காண்டம், போசயித்ரு காண்டம், பிரேரக காண்டம் எனக் குறிக்கப்படும். இவற்றுள் சிவதத்துவங்கள் சுத்தமும், வித்தியாதத்துவங்கள் சுத்தாசுத்தமும், ஆன்மதத்துவங்கள் அசுத்தமும் ஆகும்.

“இந்நிலையில் ஐந்துசுத்தம்; ஏழ்சுத்தா சுத்தம்;
எண்மூன்றும் அசுத்தம்; எனும் இவை முப்பத் தாறாம்''  
- சிவப்பிரகாசம், 46.

"தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்,
மூல உடம்பாம் முதல் நான்கும், - மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந் துணர்ந்தார், சேர்ந்த
பவமாம் பரிசறுப்பர் பார்                    - திருக்களிற்றுப் படியார்.

சித்தாந்தம் – 1962 ௵ - ஆகஸ்டு ௴


No comments:

Post a Comment