Saturday, May 9, 2020



ஆன்மா
[வ. ம. உருத்திரசாமி ஐயர்]
(தலைமை ஆசிரியர், ஸ்ரீமத் ஞானியார் கலாசாலை, புலிசை)

சீடன்: - சுவாமீ, வந்தனம், சமயம் என்பதன் இயல்பு யாது?

சைவ சித்தாந்தி: - கடவுள், உயிர், உடல் இம்மூன்றின் உண்மை இயலை உணரும்படிச் செய்வதே சமயம்.

சூன்யான்ம வாதி: - உடலை யறிகிறேன். உடலினும் உயிர் வேறு உண்டோ? உயிரைக் காண்கிலேன். உயிர் என்பது இல்லை.

சைவ சித்தாந்தி: - உயிர் இல்லை என்கிறீரே ! அது ஏன்?

சூன்யான்ம வாதி: - உடம்பைக் காண்கின்றேன். உயிரை யான் கண்டிலேன்; ஆதலால் உயிர் இல்லை என்கிறேன்.

சைவ சித்தாந்தி: - உயிர் இல்லை என்றது கொண்டு உயிர் உண்டு என்கின்றேன்.

சூன்யான்ம வாதி: - முயற்குக் கொம்பு இல்லை என்றால் அது கொண்டே முயற்குக் கொம்பு உண்டு என்பீர் போலும் !

சைவ சித்தாந்தி: - இல்லாத தொன்றை மேற்கொண்டு இல்லை என்பது உலகில் இல்லை. ஒருவன் அறிந்ததொன்றை மற்றவன் அறியாமையால் இல்லை என்பார்கள். அன்றியும் மற்றொன்று உளது.

சூன்யான்ம வாதி: - அதனையும் அறிவித்தல் வேண்டும்.

சைவ சித்தாந்தி: - முயற்குக் கொம்பு இல்லை என்றதனாலே உண்டு என்கின்றேன். நீவீர் உரைத்ததில் முயல், கொம்பு என இரண்டு பொருள்கள் இருக்கின்றன. முயலும் உண்டு. கொம்பும் உண்டு. கொம்பு இல்லை என்பது இல்லை. முயற்கு இல்லையே அன்றி, கொம்பு என்னும் பொருள் உண்டு. நீர் அறிய உயிர் இல்லையே அன்றி, உயிர் என்பது ஒன்றுண்டு.

சூன்யான்ம வாதி: - உடம்பை உடையேன். உடம்பின் அகத் தும், அகப்புறத்தும், புறத்தும் உயிரில்லை. அகத்தில் மன முதலியன இருக்கின்றன. அவை உயிரல்ல. அகப்புறத்தே கண் முதலியன இருக்கின்றன. அவையும் உயிரல்ல. புறத்தே விடயம் உருவம் முதலியனவாக இருக்கின்றன. அவையும் உயிர் அல்ல. ஆதலால் உயிர் இல்லை.
சைவ சித்தாந்தி: - இது உயிரல்ல, இது உயிரல்ல என்று அறி கின்ற பொருள், இருக்கின்ற தன்றோ? அதுவே உயிர்.

சூன்யான்ம வாதி: - அங்ஙனம் அறியும் அறி பொருள் இல் லையே.

சைவ சித்தாந்தி: - என்னை யீன்றவளை மலடி என்பவனை ஒக்கின்றாய்.

தேகாத்ம வாதி: -  அறியும் பொருள் உடலில் உண்டு என்பது உண்மையே. அது நான்கு பூதக் கூட்டத்தால் ஆய உடம்பின் கண் அன்றி நிகழக் காணாமையாலும் நான்கு பூதமும் அறிவற்ற பொருளாயினும், பாக்கும் வெற்றிலையும் சுண்ணாம்பும் கூடிய வழிப் பிறந்த செல்வன் ணம்போல, அப்பூதங்களின் கூட்டத்தில் ஓர் அறிவு உடாதல் பொருத்தமே. யான் பருத்தேன், யான் சிறுத்தேன்.'யான் மனிதன், யான் பார்ப்பான் என உடம்பினையே நான் என்று வழங்கப் பார்க்கிறோம். ஆதலால் உடம்பையே உயிர் என்பது எனது கருத்து.

சைவ சித்தாந்தி: - ஒருவன் தன்னின் வேறாய தனது மாட்டை எனது மாடு என்கின்றான். அப்போது மாடு வேறு அவன் வேறு. எனது உடல் என்று நீவிரும் கூறுகிறீர். யானும் கூறுகிறேன். வேறு பலரும் கூறுகிறார். உனதுடல் என்கிற போது உடல் வேறு உயிர் வேறு என்று அறிகிறோம். ஆதலின் உடலே உயிர் என்பது பொருந்தாது.

தேகாத்ம வாதி: -  எனது உயிர் என்கிறார்களே?

சைவ சித்தாந்தி: - அப்போது உயிர் என்று சொல்லுவது, உயிர்க்கும் அதாவது வெளிவிடுகிற பிராணவாயுவை.

இந்திரியான்ம வாதி: -  உடல் சடம் - அறிவற்றது. ஆக லானும் வேறு பிற காரணங்களானும் தேகம் ஆன்மா. அன் றென்பது ஒத்துக்கொள்ளத் தக்கதே. ஐம்பொறிகள் ஐம் புலன்களையும் அறியும் என்பது எல்லார்க்கும் ஒத்ததே. ஆதலின் இந்திரியமே ஆத்மா என்பது எனது கொள்கை.

சைவ சித்தாந்தி: - சப்த, பரிச, ரூப, ரச கந்தங்களாகிய ஐம் புலனையும் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறி கள் அறியும் என்பது உண்மையே. அதுகொண்டு ஐம் பொறிகளே உயிர் என்பது பொருந்தாது.
இந்திரியான்ம வாதி: -  ஏன்? அன்ப !

சைவ சித்தாந்தி: - ஒரு இந்திரியம் அறிந்ததொன்றை மற்றொரு இந்திரியம் அறியக் கண்டிலேம். ஒரு இந்திரியம் அறிந்த தொன்றை மற்றொரு இந்திரியம் அறியும் என எவ்வகையி லேனும் சாதிப்பின் ஒரு இந்திரியமே போதியது. மற்றது வீண் அன்றோ?

இந்திரியான்ம வாதி: -  பின்னை என் நும் கொள்கை?

சைவ சித்தாந்தி: - ஐம்புலனையும் ஐம்பொறிகளைக் கொண்டு தனித்தனியே அறிவதாக. இந்திரியங்களைக் காட்டிலும், வேறாக ஒன்று இருத்தல் வேண்டும் அதுவே ஆன்மா. சூக்கும

தேகாத்ம வாதி: - ஒரு இந்திரியம் அறிந்த தொன்றை ஒன்று அறியவில்லை. நாம் எல்லாம் அறிகி றோம். ஆதலின் ஐம்புலனையும் ஐந்து இந்திரியங்களைக் கொண்டு அறிவதாக வேறொன்று இருப்பதென்பது சரி.

சைவ சித்தாந்தி: - பேசற் கெழுந்த நும் கொள்கைதான் யாது?

சூ. தே. வாதி: - ஒரு பழத்தின் உருவத்தினுள் சுவை இருப்பது போல, இவ்வுடம்பினுள் சூட்சும சரீரம் ஒன்று இருக்கின்றது. அது ஐம்புலன் மனம் அகங்காரம் புத்தி ஆகிய எட்டினால் ஆக்கப்பட்டது. அதனால் அதற்குப் புரியட்டகம் என்றும் பெயர். அது புறத்து விளங்காது. அகத்தே நின்று இந்திரியங்களைச் செலுத்தியறியும், ஆதலின் சூக்கும தேகமே ஆன்மா என்பது தான் சரி.

சைவ சித்தாந்தி: - விழித்துக் கொண்டிருக்கும் இந் நனவில் சூக்கும தேகமே அறிகிறது என்கிறீர். கனவில் அறிவது யாது?

சூ. தே. வாதி: - சூக்கும தேகமே அறிகிறது.

சைவ சித்தாந்தி: - அங்ஙனமாயின் முதல் நாள் இரவு கண்ட கனவினை அதிகாலை ஏதோ கனவு கண்டேன். இப்போது தெரியவில்லை என்று சிலர் சொல்வானேன்? வேறு சிலர் ஒருவாறு தெரிகிறது. திட்டமாகத் தெரியவில்லை என்பானேன்? சிலர்க்கு முற்றும் தெரிவானேன்?

சூ. தே. வாதி: - நீர் சொல்லிவந்தது கொண்டு என்ன நிச்சயிக்க வருகிறீர்.

சைவ சித்தாந்தி: - கனவிலும், நனவிலும் அறிவது தூல உடம்பி னும் சூக்கும உடம்பினும் வேறாக ஒன்றிருக்கிறது. அதுவே உயிர்.
பிராணான்ம வாதி: - நனவிற் கண்டதைக் கனவில் மறந்தும், கனவிற் கண்டதை நனவில் எண்ணுங்கால் மயங்கியும் அறுதலின் சூக்கும தேகம், உயிர் அல்ல என்பது ஒத்துக் கொள்ளத் தகுந்ததே.

சைவ சித்தாந்தி: - நும் மதந்தான் யாது?

பிராணான்ம வாதி: - பிராண வாயுவின் தொழில் கனவிலும் உண்டு; நனவிலும் உண்டு. அதுவே அடங்குதல் விடுதல் செய்து அறிகின்றது. ஆதலின் அப்பிராண வாயுவே உயிர்.
சைவ சித்தாந்தி: - பிராண வாயு கனவிலும் நனவிலும் இருக் கின்றதென் றியம்பினீர். நல்லது. அங்ஙனமாயின் ஏன்னன நனவில் இன்ப துன்ப அனுபவம் இருக்கிறது. கனவில் இல்லை. நனவில் உடம்பு தொழிற்படுதல் இருக்கின்றது. கனவில் உடம்பு தொழிற்படுதல் இல்லை.

பிராணான்ம வாதி: - யாது தான் முடிவு கட்டுகிறீர்?

சைவ சித்தாந்தி: - பிராண வாயு இரு அவஸ்தையினும் வேறுபா டின்றி இருந்தும் அனுபவம் தொழில் இவைகளில் வேறுபாடு காண்கிறோம். இவ்வனுபவத்திற்கும் தொழிலுக்கும் காரண மாய்ப் பிராணவாயுவினும் வேறு ஒன்றுண்டு. அதுவே உயிர் என்பது பெறப்படும். –

பிராணான்ம வாதி: - தூல உடம்பு, இந்திரியம், சூக்கும உடம்பு, பிராண வாயு இவைகள் சடம். அறிவற்றது ஆத லின் இவற்றை உயிர் என்றல் பொருந்துவது அன்று.

சைவ சித்தாந்தி: - பின் எதனை உயிர் என்கிறீர்?

பிராணான்ம வாதி: - பிரமம் சித்தாதலின் அதுவே உயிர்.

சைவ சித்தாந்தி: - பிரமம் என்றது எதனை?

பிரமவாதி: - அது எக்காலத்தும் எவ்விடத்தும் மாறு பாடு இன்றி அறிவிப்பார் இன்றி அறியும் முழு ஞான மய மான பொருள்.

சைவ சித்தாந்தி: - அங்ஙனமாயின் பிரமம் உயிர் அல்ல.

பிரமவாதி: - எது கொண்டு?

சைவ சித்தாந்தி: - உயிர் ஒரு நிலையில் அறியும். ஆற்றல் இன்றி இருக்கவும் அறிவிக்கவும் முற்றும் அறியாது. சிறிது தெரிந்தும் அறிவித்த அறிவு அறிந்தும் இருக்கக் காண்கிறோம். அப்படி இருக்க அறிவிப்பாரின்றியே அறியும் முழுஞானப் பொருளாகிய பிரமமே உயிர் என்பது எங்ஙனம் கூடும்.

பிரமவாதி: - வேறென்ன கூறுகிறீர்.

சைவ சித்தாந்தி: - பிரமத்தினும் வேறு உயிர் என்பேன்.

சமூகாத்ம வாதி: - முழு அறிவுமயமாகிய பிரமத்தினும் உயிர் வேறே. தூல உடம்பு முதலியவற்றுள் ஒவ்வொன்றை உயிர் அல்ல என்றது நியாயமே. அவற்றுள் ஒன்று குறையினும் அறிவு நிகழவில்லை. எல்லாம் கூடிய வழி அறிவு நிகழக் மா - காண்கிறோம். ஆதலின் உடம்பு முதலிய அனைத்தும் கூடிய சமுதாயமே உயிர்.

சைவ சித்தாந்தி: - மேற் கூறியவற்றுள் பிரமம் ஒழிந்த மற்றையன அழிந்துவிடுவன. உயிர் என்றும் உள்ளது. அதுவன்றியும் அவைகட்கெல்லாம் வேறு வேறு பெயர் உள்ளன. சமுதாயத்திற்கு ஆன்மா என்ற பெயரும் இல்லை. ஆதலின் சமுதாயமே ஆன்மா அல்ல.

அந்தக்கரணான்ம வாதி: - உடம்பு முதலியவற்றிற்கு ஆன்மா என்று பேரில்லை. சமுதாயத்திற்கும் ஆன்மா என்ற பேரில்லை என்று கூறினீர். அது ஒக்கும். மனம் முதலிய அந்தக்கரணங்கட்கு ஆன்மா என்ற பெயர் இருக்கின்றது ஆதலின் அந்தக்கரணத்தை ஆன்மா என்கிறேன்.

சைவ சித்தாந்தி: - நெருங்கிய அன்பரே வருக ! அந்தக்கரணங் கள் என்றீர்களே அவை எவை?

அந்தக்கரணான்ம வாதி: - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

சைவ சித்தாந்தி: - மனம் முதலியவற்றின் செயல்யாது?

அந்தக்கரணான்ம வாதி: - ஐம்பொறிகள் அறிந்த ஒரு விடயத்தை சித்தம் சிந்தித்தறியும். மனம் அதனை சங்கற்ப விகற்பம் செய்து அறியும். அகங்காரம் ஒருப்பட்டு எழுந்து அறியும். புத்தி நிச்சயித்தறியும்.

சைவ சித்தாந்தி: - சித்தம் சிந்தித்தேன் என்று அறியுமா?

அந்தக்கரணான்ம வாதி: - அறியாது.
சைவ சித்தாந்தி: - மனம் சங்கற்ப விகற்பம் செய்தேன் என்று அறியுமா?

அந்தக்கரணான்ம வாதி: - அறியாது.

சைவ சித்தாந்தி: - அகங்காரம் யான் ஒருப்பட்டெழுந்தேன் என்று அறியுமா?

அந்தக்கரணான்ம வாதி: - அறியாது,

சைவ சித்தாந்தி: - புத்தி யான் நிச்சயித்தேன் என்றறியுமா?

அந்தக்கரணான்ம வாதி: - அறியாது.

சைவ சித்தாந்தி: - யான் சிந்தித்தேன், பற்றினேன், எழுந்திருந் தேன், நிச்சயித்தேன் என்று அறிகிறோமா?
அந்தக்கரணான்ம வாதி: - ஆமாம்.

சைவ சித்தாந்தி: - அப்போது சிந்திக்கும் சித்தத்தினும், பற்றும் மனத்தினும், எழுந்திருக்கும் அகங்காரத்தினும், நிச்சயிக்கும் புத்தியினும் வேறு ஒரு பொருள் உளது. அதுவே உயிர்.

அந்தக்கரணான்ம வாதி: - அது எத்தகையது?

சைவ சித்தாந்தி: - ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய்ப் பாசத்தடையுடையவைகளாய் சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனு பவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைக ளாய் சார்ந்ததன் வண்ணமாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருப்பன.

[சிவஞானபோதத்தின் மூன்றாவது நான்காவது சூத்திரங்களின் கருத்து. - பத்திராசிரியர்.]

சித்தாந்தம் – 1943 ௵ - ஏப்ரல் ௴            


No comments:

Post a Comment