Monday, May 4, 2020


அதர்வசிகோபநிஷத்.

1.     ஓம். பின்னர், அதர்வணமுனிவரை நோக்கிப் பிப்பலாதர் சந்ததியாரான ஆங்கிரசரும், சனத்குமாரரும் வினவினர். ஓ பிரபுவே ! தியானமென்ப தென்ன? தியானிப்பதற்கு முதல்பிரயத் தனம் யாது? அத் தியானமெது? தியானிப்பவர் யார்? யாரை தியானிப்பது.
2.     அவர்கட்கு அதர்வணமுனிவர் விடைபகருகின்றார். ஓம் என்னு மட்சரமேமுதலாக தியானித்தற்கேது.
3.     இவ்வட்சரமே பபிரம்மம். இவ்வட்சரத்தின் நான் குபாகங்களினின்றும் நான்குவேதங்களும் ஆயின. (ஆகலின்) அட்சரம் நான்குபாகங்களையடக்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே பரபிரம்மம்.
4.     இதன் முதன் மாத்திரை பூலோகத்தைக் குறிக்கின்றது. அகரமானது இருக்குவேதத்தின் மந்திரங்கள், பிரமா, (அஷ்ட) வசுக்கள், காயத்திரி சந்தம், காருகபத்தியம்.
5.     இரண்டாவது மாத்திரை புவர்லோகத்தைக் குறிக்கிறது. உகரமானது எஜுர்வேத மந்திரம், விஷ்ணு, (ஏகாதச) உருத்திரர், திருஷ்டிட்பு சந்தம், தட்சணாக்கினி.
      6.     மூன்றாவது மாத்திரை சுவர்லோகத்தைக் குறிக்கிறது. மகாரம் சாமவேதத்தின் மந்திரம், உருத்திரன், (பன்னிரு) ஆதித்தியர், ஜகதீசந்தம், ஆகவனீயம்.
      7.     பிரணவத்தின் அந்தமாகிய நான்காவது * அர்த்தமாத்திரை சோமலோகத்தைக் குறிக்கிறது. அதர்வமந்திரம், சம்வர்த்தகம், (சப்த) மருத்துக்கள், விராட்,  ஏகருஷி.

* அர்த்தமாத்திரை சர்வனாகிய சிவபெருமானென்பது கோபத பிராமணத்தினும் காண்க.
ஏகருஷி சிவபெருமானே யென்பது, சுவேதாசுவதரம் - 4 - 12 - ற் காண்க.

8.     இவைகள் ஜோதிசொரூபமெனச் சொல்லப்படுகின்றன.
9.     முதலாவது சிவப்பும், சிறிது மஞ்சளும் கலந்த நிறம். இது பிரதம பிரமதேவனைக் குறிக்கின்றது.
10.    இரண்டாவது மின்னல் கலந்த நீல நிறமுடையது. இது விஷ்ணு தேவனைக் குறிக்கின்றது.
11.    மூன்றாவது மங்களமும் மற்ற நிறமுங்கலந்த வெண்மை நிறம். இது உருத்திர தேவனைக் குறிக்கின்றது.
12.    கடைசியாயுள்ள நான்காவதான அர்த்தமாத்திரை எல்லாப்பிரகாசமும் கலந்த நிறம். இது புருஷோத்தமனைக் குறிக்கின்றது.
புருஷோத்தம சப்தம், சிவபெருமானைக் குறிக்குமென்பது தைத்தரீயம் ஆரணியகம் - 10 - 24 - 42 - ற் காண்க.
13.    இந்தப் பிரகாரம் ஓங்காரமானது நான்கு அட்சரங்க ளாய், நான்கு பாதங்களாய், நான்கு சிரங்களாய், நான்கு மாத் திரை களாய், ஸ்தூலமாய், ஒன்று, இரண்டு, மூன்றுமாத்திரை யுச்சரிப்பாயுள்ளது.
14.    ஓம், ஓம், ஓம் எனவொவ்வொன்றினையும் ஒன்று இரண்டு மூன்று மாத்திரைகளாக முறையே உச்சரிக்கவேண்டியது.
15.    நான்காவது பரமசாந்தமான * ஆத்மா.
* ஈண்டு ஆத்துமாவென்பது பரமாத்மாவை
16.    பிரணவத்தினை மூன்றாவது மாத்திரையா லுச்சரிக்கின் உடனே ஆன்மவிளக்கத்திற் செலுத்துகிறது.
17.    ஒருதர முச்சரித்தலினாலேயே மேனோக்கச் செய்யும் ஓங்காரமெனப் பெயர்பெற்றது.
18.    எல்லாப் பிராணிகளையும் இது லயப்படுத்தலின் பிரளய மெனச்சொல்லப் படுகிறது.
19.    எல்லாப் பிராணிகளையும் பரமாத்துமாவி னிடத்துச் செலுத்துகையால் பிரணவமெனச் சொல்லப்படுகிறது.
20.    எல்லா தேவர்கட்கும் வேதங்கட்கும் உற்பத்திஸ்தான மானபடியால் இது நான்காகவகுக்கப் பட்டிருக்கிறது.
21.    பிரணவமானது எல்லாத்தேவர்களுடன் எல்லாவற்றையும் தீர்மானமாகக் குறிப்பிக்கப் பட்டிருக்கிறதெனத் தெரிந்து கொள்ள வேண்டியது.
22.    சர்வபயங்களையும், சர்வதுன்பங்களையுங் கடக்கச்செய்வதால் இது தாரமெனப்பட்டது. (தாரம் - கடத்தல்.)
23.    எல்லாத் தேவரும் இதில் வியாப்பியமாகலின். விஷ்ணு வெனப்பட்டது.
24.    எல்லாவற்றையும் விச்ரிம்பிக்கச் செய்தலின் அது பிரமம்.
25.    தேகத்தினுள்ளே தியானிக்கப்படுவதாய எல்லாவற்றிற்கும் தீபம்போலப் பிரகாசித்தலின் காந்தியெனச் சொல்லப்படுகிறது.
26.    உண்மையான பிரணவமானது சர்வபிரகாசித்தினும் மிகுந்த பிரகாசமாய்த் தேகத்தினிடத்தே அடிக்கடி பிரகாசிக்கிறது. அது மின்னலைப்போல எப்பக்கத்தும் எவற்றினும் ஊடுருவிப்பாய்கிறது. அது சமஸ்தலோகங்களிலும் பரவியிருக்கிறது. அது எல்லாவற்றையும் சூழ்ந்திருத்தலின் சர்வவியாபகனான மகாதேவனேயாம்.
27.    பிரணவத்தின் முதன்மாத்திரை சாக்கிரம், இரண்டாவது மாத்திரை சொப்பனம், மூன்றாவது மாத்திரை சுழுத்தி, நான்காவது மாத்திரை * துரியம் (சதுர்த்தம்.)
* இக்கருத்துப் பரப்பிரமோப நிடதத்தும் காண்க
28.    எல்லாப்பாகங்களினு மடங்கிய மாத்திரைகளை முற்றும் கடத்தலாகிய இயற்கை விளக்கமுடையான் பிரமமேயாவன். இம்மந்திரம்பூர்ணவிளக்கத்தை விளக்குதலின் தியானத்திற்கு முதற்சோபானமாக விருக்கிறது.
29.    கரணத்தொழில்களை விடு கைக்கும், வேண்டுவன் எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருத்தலின் பிரமம் நான்காவது பதார்த்தமாயிருக்கிறது. -
30.    அந்நிலைமையான தியானம் விஷ்ணுவென்று அழைக்கப்படுகிறது. அதில் மனதின் எல்லாக் கரணங்களும் அடக்கப்படுகிறது.
31.    தியேயனாவான் உருத்திரன், மனத்தின் கரணங்களுடன் பிராணனைக் காக்கின்றனன்.
32.    பிராணனையும், மனத்தோடு கரணங்களையும் நிலைநிறுத்தி நாதாந்தத்தின் முடிவிலிருக்கிற ஈசானனொருவனே தியானிக்கத்தக்கவன்.
33.    பிரமன், விஷ்ணு, உருத்திரன், இந்திரன் யாவரும் படைக்கப்படுகின்றனர். இந்திரியங்களெல்லாம் பூதங்களுடனே படைக்கப்படுகின்றன. ஆகலின் அவர்களும் அவைகளும் காரணமில்லை, தியாதாவாகிய அவர்களாலே தியானிக்கப்படும் தியேயனெனும் சருவைச் சுவரிய சம்பன்னனும், சருவேச்சுவரனும் சம்பு சப்தவாச்சியார்த்தனும் பரமாகாச மத்தியத்திலிருப்பவனுமான சிவனே காரணன்,
34.    ஒரு நிமிஷதியானத்தால் நூறு எழுபத்து நான்குயாகதின் பலனும், ஓங்காரத்தின் முழுபலனுஞ் சித்திக்கும்.
35.    சர்வதியானங்கட்கும், யோகங்கட்கும், ஞானத்திற்கும் பலனையறிவார் ஓங்காரம் அல்லது மகத்தான ஈசானரே.
36.    சிவபெருமானொருவனே தியானிக்கத் தகுந்தவன், சிவனே எல்லா நன்மைகளையுங் கொடுக்கத் தகுந்தவன், மற்றெ ல்லாவற்றையும் விடவேண்டும், இந்த அதர்வசி கோபநிடதத்தின் கருத்தே எல்லாவுபநிடதங்களிலு முள்ளது.
37.    இந்த உபநிடதத்தை யாராயும் துவிஜன் முத்தியையடைகிறான். மறுபடியும் கருப்பவாசமுறான், கருப்பவாசமுறான்.
ஓம் சாந்தி.

                                மணவழகு.

சித்தாந்தம் – 1913 ௵ - பிப்ரவரி ௴            


No comments:

Post a Comment