Monday, May 4, 2020


சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
அதுவது வாதல்.

உலகத்தின் கண்ணுள்ள பொருள் எல்லாவற்றையும் அளவை யாலளந்தறியலாம். அளவைகளுள் காண்டல் கருதல் உரை மிகமேலா னவைகளாம். கண்டவோர் உண்மை கொண்டு அதனுடன் ஒற்றுமையுள்ள மற்றவோருண்மையைக்கருதியறிதலே கருதலளவையாம். ஒழிபளவை (பாரிசேடவளவை) என்பதொன் றுண்டு. அது மூவரில் இருவர்கள்ள பல்லர் எனக்கூறில் ஒழிந்து நின்றமற்றையவன் கள்ள னெனப் பொருள் படநிற்பதாம்.

பொருள் சத்து அசத்து சதசத்து என்னு மூன்றனுள் அடங் கும். சத்து அருவாகிய இயற்கையறிவுடைய பொருள். அசத்து உருவொடு கூடிய அறிவிலாப் பொருள். சத்தினும் அசத்தினும், சார்ந்ததின் வண்ணமாய் அடங்கித் தோன்றுவது சதசத்து :

சத்தே இறைப்பொருளாம் அசத்தே கட்டும் பொருளாம். சத சத்தே உயிராம். இவைகள் தாம் தொன்மையனவாகிய முப்பொருள் களாம். வாக்குக்கும் மனதுக்கு மெட்டாத சிவத்தின் முன்னர் உணருருவாகிய அசத்தெல்லாம் பாழாகலிற் சத்தாகிய சிவம் அசத்தாகிய பிரபஞ்சத்தையறிதல செய்யாது. அசத்தாகிய பிரபஞ்சம் ஜடமாகலின் சத்தாகிய சிவத்தையறிதல் செய்யாது. அதுபற்றி ஒழிபளவையான் சத்தாற்றன்மையும் அசத்தாதற்றன்மையுமாகிய இரண்டு மன்றிச் சதசத்தாயுள்ள தொன்றுண்டெனப் பெற்றாம். அதுவே உயிராம்.

இக்கருத்துப்பற்றியே,

இருதிறனறிவுள திரண்டலாவான்மா” என்றார் பெரியோர். இனி, சிவம் அசத்தையறியாதென்றல் அவனது முற்றறிவிற்கும் சர்வவியாபகத்திற்கும் இழுக்காகாதோ வென்பாரை நோக்கிச் சில கூறுவாம்.

தன்னுள் வியாப்பியம் (அடங்கிய நிறைவு) ஆன பசு (ஆன்மா) பாசங்களோடு (கட்டு) வேற்றுமையின்றி உடனாய் நிற்றலையுடைய முதல்வனுக்குச் சுட்டியறியக் கிடப்பதொன் றில்லை. அத்தன்மை யனான முதல்வன் அசத்தை யறியலு றுவானாயின், அறிந்தாங் கறிவ னன்று நம்மனோர் போல வேறாகச் சுட்டியறிவானல்லன். ஞாயிற்றின் முன் இருட்டுப்போல அம்முதல்வன் எதிரே பிரபஞ்சம் விளங்கி நில்லாது. அறிந்தாங்கழிதல் - செறிவொழியாது நின்று பாவற்றை யும் சுட்டிநில்லாது ஒருங்கே அறிதலாம். அசத்தை விடயிப்பதாகிய ஏகதேச வுணர்வு முற்றுணர்வைத் தடுப்பதாகலான் அஃதில்லாமை முற்றுணர்விற்கு மேம்பாடாவதன்றி இழுக்காகாதென வறிக.

இனி ஞாயிற்றினொளி விடயத்தையநு பவியாது. விடயம் ஞாயிற் றையறியாது. ஆனால் இவ்விரண்டினையுங் கண்டநுபவிப்பது கண். அதுபோல சத்தின் முன் அசத்து நில்லாது. அசத்துச் சத்தையறியாது. இவ்விரண்டினையு மறிவது சதசத்தாமென்க. அவையிரண்டும் இங்ஙனம் அறியப்படாதொழியில் சூனியப்பொருள்களாமென்க.

அவைகளைச் சதசத்தறியு மென்பதற்கு மாறாகச் சிவசமவாதிகள் “அந்தமி லுயிருமறிவா யொன்றும்" எனக்கூறி சிவத்தின் றன் மையே ஆன்மாவிற்குரிய தன்மை யன்றி வேறில்லை என்பர்.

சிவசங்சிதாந்த சைவரோ?

நீங்காதொளிருயிர் விளக்கென நிற்கு, மளப்பறு மறிவின்று” எனக்கூறி ஆன்மாவிற்குத் தன்மையென்பது ஒன்று இன்று என்பர். இவவிருவர் மதமும் “இருதிறனறிவுள திரண்டலா வான்மா'' என்பதால் மறுக்கப்பட்டமை காண்க.

இனி, ''இருதிறனறிவுளது'' என்னுந் தொகைச்சொல் விரியுங் காற்படும் பொருள் வேறுபாடுகள் கூறுவாம்.

1. இரண்டனையு மறிவதாய் நின்ற அறிவு. இஃது இரண் டாம் வேற்றுமைத் தொகைப்பொருள் பற்றி நிகழ்வதாம்.

2. இருதிறனால் விளங்கிய அறிவு, இஃது மூன்றாம் வேற்று மைத் தொகைப்பொருள் பற்றி நிகழ்வதாம்.

3. இருதிறனிலுமுள்ள வறிவு. இஃது ஏழாம் வேற்றுமைத் தொகைப்பொருள் பற்றி நிகழ்வதாம்,

இரண்டனையு மறிவதாய்நின்ற அறிவு சத்து மசத்துமாகிய இரண்டனையு மறியு மறிவு. இருதிறனால் விளங்கிய அறிவு அறிவிக்கப்படுத்தலாலும் அறிவித்தால் அறியுந்தன்மையாலும் போந்த அறிவு. இருதிறனிலுமுள்ள வறிவு நிலைபெற்ற சத்து அசத்து என்னும் இரண்டன் பாலும் அநுபவஅறிவுள தாயுள்ளவது.

இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள் பற்றி இரண்டனையும் அறிவதாய்நின்றவது என்பது சத்து அசத்துக்களின்றன்மை இவ்வாறாயின். இவற்றையறியும் பொருள் வேறு என்னை என்னும் வினாவிற்கு விடைகூறிச் சமவாதி சங்கிராந்தவாதிகளை மறுத்தவாறாயிற்று. அன்றீயும் சமவாத சைவர் ''ஆன்மாதானே யறியுமியல்பிற்று" என்று கூறினமையும், "அறிவுள தாகு முருவுறுவுயிர்கள்'' எனஈசுர அவிகார வாதசைவர் கூறினமையும், "சுத்தமாயறிவாயிருக்கு மான்மா'' என ஐக்கியவாதசைவர் கூறினமையும் இருதிறனால் விளங்கிய அறிவு என்னும் முன்றாம் வேற்றுமைத் தொகைப்பொருள் பற்றிப் போந்தமையால் மறுத்தவாறுணர்க.

இனிப்பாடானவாத சைவர் சுட்டுக்காட்சியும் சுகத்துக்க அது போகங்களும் இல்லை யென்றுங் கூறுவர். பேதவாதிகள் “நித்தமுத்த சுத்தராக வைத்தனர்'' என ஆன்ம லக்ஷனங்கூறுவர். இதனை இரண்டன் பாலுமுளதாயுள்ளவது என ஏழாம் வேற்றுமைத் தொகைப் பொருள் பற்றி மறுத்தவாறு காண்க. அன்றியும் சுத்தசைவர் சத்தி னோடு கூடியவழி ஒன்றாய்ப் போதலேயன்றி யதன்பா லுளதா மாறில்லை என்பதனையும் மறுத்தமை காண்க.

இவை இங்னமாக, சதசத்தானது சத்துக்கு மசத்துக்கும் வேறானதென்றும், தன்னை விளக்குவதாய வியஞ்சகம் (வெளிப்படை) உள்வழிவிளங்குவதோர் தன்மையுடைய தென்பது, சார்ந்ததின் வண்ணமாய் அழுந்துவதோர் தன்மையுடைய தென்றும் உவமை முகத் தால் விளக்குவாம்.

1. கண்ணானது இருளுமல்ல. ஒளியுமல்ல. இவ்விரண்டற்கும் வேறாயது. அதுபோல ஆன்மாசத்துமல்ல. அசத்து மல்ல இவ்விரண்டற்கும் வேறாயதாம்.

2. ஆகாயத்துக்கு ஒலிக்குந் தன்மையுண்டு ஆனால் அதனை விளக் குதற்கோர் வியஞ்சகம் வேண்டும். அவ்வியஞ்சக முள்வழி விளங்கும் அஃதில் வழி விளங்காது. அதுபோல, ஆன்ம அறிவைவிளக்குதற்கு சிவஞானமாகிய வியஞ்சகம் வேண்டும். அஃது விளக்கியவழி விளம்கும் அதுவிளக்காவிடில் விளங்காது.

3. ஓர்படிகம் தான் சாரும்பொருள் எதுவோ அத்தன்மையடையும். அதுபோல ஆன்மா சார்ந்த தன் வண்ணமாய் அழுந்துவதோர் தன்மையுடையதாம்.

ஆன்மா தன்னையறியுமோ அறியாதோ வெனிற் கூறுதும்.

1. ஆன்மா தன்னோடுளப்பட மூன் றனையு மறிவதென்னாது அவ் விரண்டினையு மறிவதெனல் பொருந்தாது, தன்னையறியாதெனில் அறியாத பொருள் சூனியமெனப்பட்டு வழுவாமாலெனின், ஆன்மாவின் உண்மைத்தன்மை சத்துமசத்தும் போல விளக்கித் தோன்றி அவற்றோடு ஒப்பநிற்பது மன்று, விளங்கித் தோன்றாது சூனியமாய் நிற்பது மன்று. மலரின் கண் வாசம் இவ்விருவகையு மின்றி அதன்கண் அடங்கித் தோன்றுமாறு போல சத்தினும் அசத்தினும் சார்ந்ததின் வண்ணமாய் அடங்கித் தோன்றுவதோர் இயல்புடைய தாமாகலான் அஃது (ஆன்மா) அவ்விரண்டனையு மறியுமுகத்தாலறியப் படுவதன்றி அவைபோல தனித்தறியப்படுவ தொன்றன்றென்க. ஆதலால் அவ்விரண்டினையு மறியுமுகத்தாலறியப்படும்.

2. இனி ஆன்மாவிற்கு அறியுந் தன்மை சிவத்தோடொப்பச் சுதர் தரமாயுண்டென்றாற் படுமிழுக்கென்னை என்னுமா சங்கையை நீக்கி உபதேசியாய் என்றதனை வலியுறுத்தி இரண்டலாமையை யுணர்த்து தற்கு எடுத்துக்காட்டு முதாரணம்.

ஆன்மா அறியுமுறைமை எங்ஙனமெனில், அறிவை விளக்குதற்குரிய வியஞ்சகமில் வழி ஒருவிடயத்தையின்ன தென்று அறியமாட்டாது. மயக்கத்தை புற்றும் பசிநோய்க்கு அன்னம்போல அம்மயக்க நோய்க்கு மருந்தாகிய வியஞ்சகமுள்வழி அம்மயக்கம் நீங்கியதனை இன்ன தென நிச்சயித்தும், இங்ஙன மறிவுழியும் ஒருங்கேயறியமாட்டாது. ஒருவிடயத்திற்சென்ற அறிவை மாற்றி மற்றொரு விடயத்தை அறிந்து வருதல் கூடுமாதலின், இவ்வாறு மாறி மாறி ஒன்றொன்றாயுணர்கின்ற ஆன்மா, எல்லாவற்றையு மொருங்கே யோரியல்பானுணர் வதாகிய சத் தின்றன்மை யுடையதில்லை, அற்றேல் வியஞ்சகமுள்வழி யன்றி அறியமாட்டாத ஆன்மா அசத்தின்றன்மையுடைய தாமோ வெனின், வியஞ்சகமுள் வழியும் ஆன்மர் முன்னறிந்து செய்த வினைகளை இப்பொழுது மறிந்து அநுபவிக்குமேயன்றி, அசத்தாகிய பிரபஞ்சம் அறிந்து அறுபவித்தலின்மையின், அவ்வசத்தின்றன்மை யுடைமையுமில்லை

வியஞ்சகமுள்வழி அறிதலொப்புமையால் சத்தாதலும், அஃது இவ்வழி அறிவு நிகழாமை ஒப்புமையால் அசத்தாதலுமாகியதோர் தன்மையுடைய ஆன்மா அவ்விரண்டினும் வேறாகிய சதசத்தானமை யுணர்க.

வியஞ்சகமில் வழித்தலைப்படுவதும் அஃதுள்வழி கீக்கியு நிற்ப தாகிய மயக்கம் உண்டியில் வழிதலைப்பட்டும் அஃதில் வழிநீங்கியும் நிற்பதாகிய பசியோடொத்தலின் அதனைப் பசிநோயாகவும் தீர்த்தலொப்புமை பற்றி வியஞ்சகத்தைப் பசிதீர்க்கும் மருந்தாகவும் உருவகஞ் செய்யப்பட்டன.

3. இம்மயக்கம் ஆன்மாவிற்கேயன்றிச் சிவத்துக்கில்வழி இரண் டற்கும் தம்முள் இயைபு கூடாதாதலின் சிவத்துக்குமது உண்டெனக் கோடல் வேண்டும் என் னுமாசங்கையை உவமைமுகத்தானீக்கி ஆன்மா இரண்டன்பாலு முளதாதலை வலியுறுத்தி இரண்டலாமையை யுணர்த்துவாம்.

முன்னே சொல்லப்பட்ட மயக்கமாகிய அறியாமை வியஞ்சக மில்வழி தலைப்பட்டும் அஃதுள் வழி நீங்கியும் இவ்வாறு நிலை பேறில் லாததாகலான், அஃது எப்பொழுதும் ஒரு தன்மைத்தாய் நிலைபெற்று விளங்கும் ஞானமாகிய சிவசத்தின் கண்ணே நிகழ்தலின்றி அச்சிவம் என்றுளது அன்றேதான் பொருந்துதற்குரிமையுடைய உயிர்களுள்ளனவாக, அவ்வுயிர்களைப்பற்றி நிற்றல், குளிர்ந்த கடலின் கண்மருவாது, கடலிடத்துளதாகிய நீரின் கண் மருவும் உப்புப்போல தான் பொருந்துதற்குரிய சதசத்தா மியல்புடைய ஆன்மாக்களு முள்ளனவாக அவ்வான்மாக்களைப் பொருத்து மாற்றையறிக.

இவ்வறியாமையாகிய அஞ்ஞானம் அசத்தாகலால் மெய்ஞ்ஞா னந்தன்னில் விளையாது. உப்புத்தான் மருவுதற்கு உரிமையில்லாத கடலின்க ணின்றிக் கடலோடியை புடைத்தாயும் தான்மருவுதற்கு உரிமையுண்டாகிய நீரின் கண்ணேயுள தாயினாற்போல, அஞ்ஞான'மும் தான் மருவுதற்கு உரிமையில்லாத மெய்ஞ்ஞானத்தின்கணின்றி அம்மெய்ஞ்ஞானத்தினோடு அநாதியே இயைபுடைத்தாயும் தான் மரு வுதற்குரிமையுடைய ஆன்மாவின் கண் உளவாதலமையுமாலால் தண் கடனீருப்புக்கு உவமிக்கப் பெற்றது. இதனுள் ஆன்மாவிற்கு இரண்டின் கண்ணுமியை புடமை கூறவே அவ்விரண்டின் பாலு முள தாதலை வலியுறுத்திய வாறுகாண்க.

ஈண்டு இரு திறனையு மறியு மறிவுளதெனவே இருதிறனாகிய சத்துமசத்து மெனப்பட்டன வெல்லாம் பிரமேயம் (அறியப்படு பொருள்) என்பதும் அவற்றையறியுமான் மாகவே பிரமாதா, ஆன் மாவினறிவாகிய சிற்சத்தியே பிரமாணம், இவ்வறிவு நிதழ்ச்சியே பிரமிதி என்பதும் பெற்றாம்,

இருதிறனால் விளங்குமறிவுள தெனவே, இரண்டனுள் அசத்தால் விளங்கும்வழி தனக்கு வேறாய் நின்று விளங்குங் காக்ஷியுமறு மானமும் ஆகமமுமெனப்படும். அசத்தாகிய பாசஞான மூன்றும் சத்தானறிவு விளங்கும் வழி அந்நியமின்றி தனக்கு ஆதாரமாய் உடனின்று விளங்குஞ் சிவஞானமும் தனக்கு வியஞ்சகங்களாதலால் அதுபற்றி அவையும் பிரமாண மென்று உபசரித்துக் கூறப்படு மென்க.

இருதிறனிலு மறிவுளதெனவே, ஈரிடத்தினுங்கேடின்றி அசத்தான் விளங்கிய சத்தை யறிவுழி அசத்தின்பாலும் சத்தால் விளங்கிச் சத்தையறிவுழி சத்தின்பாலும் அதுவதுவாய் நின்றுள தென்பதும் பெறப்படும்:

சத்தான் விளங்திய சத்தையறிவது எங்ஙனமென ஒரு சிறிது கூறுவாம்..

நேத்திரமானது இருட்டால் மறைப்பட்டிருந்தாலும் தன்னுடைய பிரகாசமும் கெடாமல் விஷயாபி முகமும் ஆகாமல் தன்னிடத்திலிருக்கிறதோ அவ்வாறே மலசத்தியால் மறைக்கப்பட்டிருக்கிற சிற்சத்தியும் விஷயத்தையு மறியாமல் அறிவுங் கெடாமல் தன்னிடத்தில் தானே ஆணவமலத்துக்குப் பரிபாகம் வருமளவில் அநுக்கிரக ரூபியாயிருக்கிற சத்தியானது பதியும்.

அச்சிவசத்தி பதியுமளவில் ஆன்மாவைச் சிருஷ்டியாதிகளிற் றள்ளும் மலத்தினுடைய சத்தியானது நிவிர்த்தியானபின் ஆன்மாவி னுடன் தோன்றுத துணையாய் நின்று செறிந்து அறிவித்து நின்ற தும், பின்னவைகளை யறியாமல் நிகழ்த்தி அவைகளினின்றும் நீக்கி உன்னை இன்றும் அறியவைத்தது எதுவோ அது தான் அருள் அவ் வருள.. கிய ஞானம் உன்னறிவை நீக்காவறிவாகி நீருமிர தமும் போல நிற்கும்.

அந்த வருளுனக்கிங் காதாரமா யல்லி
னிந்துவென வெறித்திட் டேகமாய் – முந்தி
யுனையுனக்குத் தான் விளக்கி யோவா துணர்த்துந்
தனையுனக்குக் காட்டுமே தான்.

இறையறிவே யுனக்குத்தாரகமாய் ஒன்றாய்ப் பின்னமற உள்ள டங்கிய உள்ளபடி நின்றால் நீ அதுவாவை. அந்த ஞானம் உன்னை நடத்தும். இவையெல்லாம் ஆன்மபோதம் அடங்கிய வழிதோனறும் நிலைகளாம். அந்த ஞானம் நடத்துதல் விளக்கை இருளின் முன்னே பிடித்துப் போவாரைப் போலாமென்றுணர்க. ஈண்டுபதி ஞானமே பிரகாசிக்கும். மற்றைய பசுபாச ஞானங்கள் பிரகாசியாவாம். இதனால் ஆன்மா சத்தின் பால்பதியும் விதங்கூறினாம்.

இதுகாறுங்கூறியவாற்றால் ஆன்மாசத்துமின்றி அசத்துமின்றி நிற்ப தொன்றென்றும், சத்தைச்சார்ந்துழி சத்தாயும் அசத்தைச் சார்ந்துழி அசத்தாய் நிற்பதொன்றென்றும், அதுபற்றி அதுவது வாய் நிற்குந்தன்மையு மொருசிறிது கூறினாம்.

அசத்தைச் சார்ந்து சத்தைச்சார்தலே நமது கடனாம். சத்தைச் சாரும்வழி யெங்ஙனமெனில், " அவனருளால் அவன்றாள் வணங்கி'' என்றபடி.

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன் றன்
கண்ணினைநின் றிருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கியைம் புளன்களா
வந்தனை யாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே.

S - பால்வண்ண முதலியார்.

சித்தாந்தம் – 1915 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment