Saturday, May 9, 2020



சைவ சமயத்தின்
இக்கால நிலை
கா. இராமநாதன் B. A., B. L.

[யாழ்ப்பாணத்துக்கு விஜயஞ் செய்துள்ள மலேய சைவ சித்தாந்தக் கழகத் தலைவர் திரு. கா. இராமநாதன் B. A., B. L. அவர்கள் நாவலர் மண்டபத்தில் சமயத்தின் இக்கால நிலை என்னும் பொருள் பற்றி யாற்றிய சொற்பொழிவு.]


மலேயாவில் கிறிஸ்தவ பாடசாலைகளிலேயே சைவச் சிறார்கள் கல்வி பயின்று வருவதாகவும், அவர்கள் பொட்டிட்டு விபூதி தரித்துக் கொண்டு பாடசாலைகளுக்குச் செல்ல முடிவதில்லையெனவும், சமய ஆர்வத்தினால் அங்கனம் அணிந்து கொள்ளினும். பாடசாலைக்குச் செல்லும் பொழுது அவற்றை அழித்துவிட்ட பின்னரே பாடசாலைகளில் அடியெடுத்து வைக்க முடிகிறதெனவும் இக் காரணங்கள் பற்றிச் சைவக் கழகங்கள் மூலம் சமய அறிவு வளர்ச்சிக்கு ஆவன செய்யவேண்டியிருக்கிற தெனவும் குறிப்பிட்ட அப்பெரியார் மேலும் கூறியதாவது!

மலேயா நாட்டுச் சைவமக்களுக்குக் கிடையாத சமயச் சுதந்திரம் இந்நாட்டு மக்களிடையேயிருப்பதை நான் காணமுடிகிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு உள்ள இந்துக் கல்லூரிகள் சைவ சமயத்தையே கைக்கொண்டு ஒழுகி வருகின்றன என்னும் உண்மை மாணவர்களது சைவ அறிவைக் கொண்டு உணர முடிகிறது. ஆயினும், சைவ ஒழுக்கமே அறிவினும் சிறப்புற அமையவேண்டும். அவ்வொழுக்கமும் ஒழுகிக்காட்டுவார் இன்றி யாருக்கும் அமையாது.

பழைய காலத்தில் சைவ ஒழுக்கம் சிறந்து விளங்கியது. சைவ ஒழுகலாறுகளுக்கு நாயன்மார்கள் எடுத்துக் காட்டாக விளங்கினார்கள். அறிவுரை பகருவதிலும் பார்க்கச் 'சேவை' செய்வதே அவர்களது பெருநோக்கமாயமைந்தது. மக்கள் நல்வழியிலே ஒழுகி ஈடேறவதற்குத் தடையானவற்றை நீக்கி உதவுவதே சேவை என்பது.

தாமனென்னும் வணிகன் பணவாசை கொண்டவன். அவனுக்கு ஏழு புதல்வியர். அவன் தன் மருகனிடம் பணத்தைப் பற்றிக் கொண்டு தம் புதல்வியருள் ஒருத்தியை மணமுடித்து வைப்பதாக உறுதி கூறினான். ஆயினும் அங்ஙனஞ் செய்தானில்லை. அதிக பணங் கொடுத்தாருக்கு முதல் ஆறு பெண்களையும் தத்தஞ் செய்தான்; சத்தியந் தவறினான். ஏழாவது புத்திரி தந்தையின் பிழையை நீக்கக் கருதினாள். தன் அத்தானுடன். இரவோடிரவாய் வெளியேறினாள். எனினும் ஒழுக்கத் தவறினாளில்லை. அவள் தன் அத்தானைத் தொட்டு மறியாள். அந்நிலையில் திருமருகலில் இரவை இருவருங் கழித்தனர். அவளது அத்தானை அரவு தீண்டிற்று. அவள் அரற்றினாள் அவனைத் தொட்டெழுப்பினாலோ என்று ஆர்வந்தூண்டினும் கற்பொழுக்கந் தடுத்தது. அவள் துயரை அவளே அறிவள். அத்தகைய பெருந்துயரை அறிந்த ஞான சம்பந்தப் பெருமான் நம்மனோர் போல அவள் விட்ட பிழையிது என்று சுட்டியுரைத்துக் கண்டிக்கவில்லை. கண்டிப்பதனால் மேல் விளையத்தக்கதோர் பயனுமில்லை; கண்டிக்கத் தக்கதோர் சமயமும் அதுவன்று. ஆதலால், அவளது எதிர்கால நிலையைச் சிந்தித்தார்; அவள் தந்தை தாயின் ஆதரவின்றித் தான் நம்பி வந்த அத்தானின் துணையு மின்றி அநாதையாய் அல்லற்படும் அவல நிலை காட்சியளித்தது. எல்லாவுயிருந் தன்னுயிர் போல் எண்ணி இரங்கும் மன நிலை கொண்ட பெருஞான சம்பந்தர் அவளுக்கு அச்சந்தர்ப் பத்திற் செய்தக்க சேவை எது என்று தெளிந்து கொண்டார்; அவளை வாழ்வித்து நற்பயனடைய வைக்க விரும்பினார்; மக்கள் சேவையே மகேசுவர சேவையாகும் என்று துணிந்தார். "சடையாய் எனுமால்" என்றெடுத்து இறைவனை வேண்டிப் பதிகமோதினார்; அத்தானுக்கும் அவளுக்கும் வாழ்வளித்தார். ஏழைபங்காளனாம் இறைவனுக்கு அன்பரான சம்பந்தப் பெருமான் ஏழைக்கிரங்கிச் சேவை செய்த அது அவர் செயலன்று; அவன் செயலேயாம்.  

திருநாவுக்கரசர் வீதி பெருக்கியதும், சுந்தரர் நெல்லுப் பெற்று தவியதும், அப்பர் சம்பந்தரிருவரும் படிக்காசு பெற்றீந்ததும் இன்னோரன்ன பிறவும் சைவ மக்களுக்குத் திரிகாண சுத்தியோடு செய்த பெருஞ் சேவைகளேயாகும்.

பகவானுக்குச் செய்யும் தொண்டு, பாகவதாளுக்குச் செய்யும் தொண்டு ஆகிய இரண்டனுள், முன்னதற்குப் பின்னது முரண்படுமானால் முன்னதைவிட்டுப் பின்னதாகிய பாகவதாளுக்குச் செய்யுந்தொண்டையை செய்க" என்று வைணவ மதக் கொள்கை வலியுறுத்துவதும் சிந்திக்கத்தக்கது.

இன்று பிற மதத்தில் உள்ளவை போல, சைவ மக்களது தொகைக்குத் தக்க சமயஸ்தாபனங்கள் இல்லை; இச்சமய ஒழுக்க முடையார் அருகி விட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய இவர்களிலும் பலர் தம்மைப் பிறர் கனம் பண்ண வேண்டும் என்பதற்காக ஒழுக்கமுடையவர் போல நடிக்கிறார்கள். "யார்'' தம்மை வணங்க வேண்டு மென்று நினைக்கிறாரோ "அவரை வணங்காதே, என்று ஞானியார் சுவாமிகள் கூறுவார்கள். தம்மைத் தாமே கனம் பண்ண முயல்வோராலும், சமய வளர்ச்சி - அறிவு - ஒழுக்கங்கள் தடைப்பட்டு விடுகின்றன.

தன்னறிவு பெரிதென்று எண்ணிச் சமயஞ் சொல் பவனிடம் நல்லொழுக்க மிராது; அவனிடம் சமயங் கேட்டல் கூடாது.

சமய அபிவிருத்தி சைய்யும் பணியில் ஈடுபடுவதற்கு அநுபவத்தாலும் வயதாலும் முதிர்ந்த பெரியவர்களே உகந்தவர்கள். அவர்கள் குடும்ப பாரத்தினின்றும் நீங்கியவர் களாய்ப் பரிபூரண தொண்டாற்றத்தக்கவர்களாவர். வம்பிற் கனிந்தகனி - பிஞ்சிலே பழுத்தபழம் - உதவாது. முற்றிக் கனிய வேண்டும். கனிந்த அக்கனியும் தானிருந்த கொடியிலோ செடியிலோ மேலும் இராது. அதற்கும் உதவாது; அதனை விட்டு நீங்கிப் பிறருக்கே உதவும். இக்கனி போன்றவர்களே சமயாது பவத்தாலும் வயதாலும் முதிர்ந்தபெரியார்கள், ஆதலால் அவர்களே சாபக் கல்வி ஒழுக்க விருத்திகளில் ஈடுபட வேண்டியது இற்றை நிலைக்கு ஏற்றதாகும்

இந்நாட்டின் சமய அறிவை விருத்தி செய்வதற்குச் சிறந்த கழகங்களும் இருக்கின்றன 50, 60, பேர் அடங்கிய சைவப்புலவர் கழகம் ஒன்று நல்ல முறையில் இயங்கிவருவதாக அறிகிறேன். சைவசித்தாந்த சமாசம் அவர்களை வழிப் படுத்துகிறது; அவர்கள் நிரம்பப்படித்தவர்கள்; சமயந் தெரிந்தவர்கள். அவர்களது சேவை இந்நாட்டுக்கு என்றென் றும் தேவை. மேன் மேலும் தம் பணியை உயர்ந்த நோக்கத் தோடு செய்வார்களாக.  

சித்தாந்தம் – 1964 ௵ - மே ௴


No comments:

Post a Comment