Saturday, May 9, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சைவ சித்தாந்த மகாசமாஜம்
36 - வது ஆண்டு நிறைவு விழா, திரிசிராப்பள்ளி
சைவ இளைஞர் மகாநாட்டுத் தலைமையுரை

(திரு. ரா. சண்முகசுந்தரஞ் செட்டியார்) (26 - 12 - 1941)

திருச்சிற்றம்பலம்

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.

திருச்சிற்றம்பலம்

சகோதர சகோதரிகளே!

சைவ சித்தாந்த மகா சமாஜ முப்பத்தாறாவ தாண்டின் நிறைவு விழாவை யொட்டி இன்று சைவ இளைஞர் மகாநாடு கூட்டப் பெற்றுள்ளது. இம்மகா நாட்டிற்குத் தலைமை தாங்கும் பணியைச் சமாஜத்தினர் எனக்குப் -- பணித்தனர். அதனையேற்குத் தகுதி எனக்குச் சிறிதுமில்லை. ஆயினும், பொய்யுடையொருவன் உண்மைத் திருவேடங் கொண்டு உண்மை யடியவர் குழாத்துட் புகுந்து நின்று அவர்கள் காண்தொறும் பாவகம் முற்றித் திருந்திய அடியவனான நிலைபோலச் சமாஜத்தினர் பார்த்த பார்வையால் தலைமை தாங்குந் தகுதி எனக்கு எய்தியதோ வென்றஞ்சுகின்றேன். (காயமா யெனக்கே தலை கண்ணுமாய், பேயனேனையு மாண்ட பெருந்தகை, தேயநாதன் சிராப்பள்ளி மேவிய, நாயனார்' திருமுன் நிற்கின்றேனாதலின் அவரது திருவருள் துணை கொள்ளும் வேட்கை யுடையவனாய் எனது கடமையைச் செய்ய முயல்வேன்.

இளைஞர் மாநாடுகள் இன்றியமையாதன வென்று இக்காலத்திய உலகம் நன்கறிந்ததே. சிறுவர்களுக்கு ஊக்கந்தங்க. பின்னர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுத்துவதற்கும், அறிவ விளக்கமடைவதற்கும் சிறந்த சாதனமாக இவை விளங்குகின்றன. சமூகத் தொண்டுகளுள் சமயத் தொண்டே சாலச்சிறப்புடையது. பிறதொண்டுகள் பெரும் பாலும் உயிர் ஓம்புதற்குப் பயன்படுவனவல்ல. சமயத் தொண்டு ஒன்றே உயிருக்குப் பேரின்பநிலையுதவுவது. எனவே சமயத்தின் பயன் இன்பநிலை யடைதலாகும்.

இன்னருட் படைப்பாய உயிர்களுள் விசேட அறிவுடைய உயிர்களாய்த் திகழ்பவர் மக்களாவார். அவர்கட்கு இன்றியமையாதது சமயம். அவரவர்கள் அறிவுக் கேற்ற வண்ணம் யாதேனும் ஒருசமயம் பற்றி அவர்கள் வாழ்கின்றனர். சமயம் அவர்கட்கு ஓர் அமைதியைத் தருவதாதலின் அதனிடத்து அவர்கட்குப் பற்று மிகுதியாகவுண்டு. அமைதி யின்மை உயிர்கட்கியல்பா யுள்ளது. அதனை நீக்கி அமைதியைத் தருவது சமயமாகும். எண்ணங்கள் மிகுதிப்பட உள்ளம் கிளர்ச்சியுற்று, முயற்சியிற் புகுந்து, யாதொரு பயனும் கிட்டாதாகிக் கவலையுறுங் காலத்துச் சமயம் சாந்தியைக் கூட்டும். சமயம் என்பது மக்கள், என்றும் மன்னி நிற்கும் இறைவனிடத்துவைக்கும் நம்பிக்கை .'கடவுளே முற்றறிவுடையவன்; அவனே உலகம் யாவையும் படைத்தளித்தழிக்க வல்லவன்; அவனே உயிர்களிடத்துத் திருவருள் பாலித்துத் துன்பக் கடலினின்றும் ஏற்றுங் கருணையன்; அவன் இன்ப வடிவினன்; அவனன்றி யோரணுவும் அசையாது; அவனை யடைதலே பேரின்பநிலை" என்றித்திறங்கோடலே நம்பிக்கையாம். இன்னோரன்ன கருத்துக்கள் சமயக் கொள்கைகளாகும். அவை மக்களை இழிந்த நோக்கங்களினின்றும் தாழ்ந்த உணர்ச்சிகளினின்றும் நீக்கித் தூய்மையுடையவர்களாக்கி இறைவன் பால் அன்பு செலுத்தி யொழுகும்படிச் செய்வன. அங்ஙனம் அவர்கள் ஒழுகத் தலைப்படுவது எந்நாளும் உறுந்துயரம் நீங்கி இன்பம் பெறுவதின் பொருட்டேயாகும். இவ்வின்பமோ தூயவறிவுடையவராய்த் தூயவெண்ணங் கொண்டு துன்பந்தரத்தக்கன விலக்கி நன் முயற்சியில் நுழைந்து விதித்தன புரிந்து நிற்பதால் அநுபவிப்பது. எனவே சமயப் பற்றுடையவர்க்கே அழியா இன்பம் கைகூடும். அஃதில்லாதார்க்கு அவ்வின்பமில்லை யெனலாம். சமயப்பற்றின்றி வாழ்வான் நிலை யந்திரமில்லாத ஒரு கடியாரம் போன்றதென்று ஒரு ஆங்கில முதுமொழி கூறுவது கருதத் தக்கது. சமயம் இன்பந் தருவது என்பது, முடிந்த பொருளாம். 'உலகி னவல மறுப்பது' சமயத்தின் பயன் என்றருளினர் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு ஞானம் பெற்ற சம்பந்த நாயனார்.

இன்பம் விழைவதே உயிர்கள தியல்பு. இன்பம் நுகரும் திறம் பலவாகும். பலதிறப்படுகின்ற காரணத்தால் பல சமயங்கள் விளங்குகின்றன. அவைகளுள் பேதங்களுள வாயின. பேதங்களனைத்தையும் கண்டு கழிப்பித்துச் சிறப்புடைய இன்பநிலை கண்டவர்களே சைவர். அத்தகையவர் கான்முளையாக நாம் யாவரும் திகழ்கின்றோம். இஃது நமது பண்டை நற்றவம் தந்த பாக்கியம் என்றே மொழிதல் வேண்டும். அந்தமிலழியாவின்ப நிலையை அவர்கள் ஆராய்ச்சியாற் கண்டனர். உயிர்கட்குச் சிறப்பாக வேண்டத் தகுவன வராய்ச்சியும் அநுபவமுமாம். ஆராய்ச்சியானும் அநுபவத் தானம் நிறுவிய உண்மைகள் சைவசித்தாந்த நுண்பொருள்களாகும். ஆராய்ச்சியால் இன்பநிலை கண்டமுறை சிறிது அறிவோமாக.

இன்பநிலையைச் சமயவாதிகள் முத்தியென்று மொழிந்தனர். உலகின்கண் நுகரப்படும் பலவகை இன்பங்களுள் தலையாயது மகளிர்போகமென்ப. அதனையே மந்தவறிவினர் முத்தியென்றனர். மந்தவறிவினர் சிறிது சிறிது மேம்பட்டு அறிவு விளக்கமடைந்தவர்களாய்த் தாம் தாம் ஒவ்வொரு இன்ப நிலையைக் கண்டனர். அம்முத்தி பேதங்களை விளக்கிச், சைவவுலகம் செய்தவப் பயனாய்வந்த ஸ்ரீ உமாபதி சிவாசாரியார்,

அரிவையரின் புறு முத்தி, கந்தமைந்தும்
அறுமுத்தி, திரிகுணமும் அடங்கு முத்தி
விரிவுவினை கெடுமுத்தி, மலம் போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி, விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி, சித்தி முத்தி,
பாடாண முத்தி, இவைபழிசேர் முத்தி
திரிமலமும் அகலவுயிர் அருள்சேர் முத்தி
திகழ்முத்தி யி துமுத்தித் திறத்த தாமே. (50)

எனச் சிவப்பிரகாசத்துள் உரைத்ததறிக. பிறசமயங்களின் முத்தியாகிய இன்பநிலைகளை யாராய்ந்து அவையாவும் பழி சேர் முத்தியென மறுத்து, உயிர், ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களும் நீக்கிச் சிவபெருமானது திரு வருள் ஞானத்தைப் பெற்றுச் சிவானுபவமாய் நிற்றலே சைவ சித்தாந்த முத்தி என்னும் முறைமை யுணர்த்தப்பட் டது. ஆராய்ச்சியாற் பெற்றது அநுபவத்திற்கு நிலைக்கள மாயுள்ள இறைவனே யாகும்.

அநுபவமாவது அழுந்தியறிதல் என்பது மாதவச் சிவ ஞானயோகிகள் விளக்கியதாகும். சிவபெருமானிடத்து எங்நனம் அழுந்துவதென்னில் வழிபாட்டால் அழுந்துதல் வேண்டும். வழிபாடு, இறைவன் திருக்கோயில்களிலும், சிவபெருமான் திருவேடத்தினிடத்தும், உண்மைச் சிவனடியாரிடத்தும் செய்யத்தக்கது. திருக்கோயில்கள் யாவும் யாண்டும் வியாபித்திருக்கும் முழுமுதற்கடவுளை விளக்கமாக உயிர்களுக்கு அறிவிக்குந் திறத்தனவாயுள்ள இடங்களாகும். அங்கு அமைக்கப்படும் குறிகளாகிய இறைவனது திருவுருவங்கள் பேரருள் சுரக்கும் பான்மையன. இவை பேரின்பநிலை நாடுவோர்க்குச் சிறந்த துணையாவன. திருஞானசம்பந் தரும், "குறியாற் குறிகொண்டவர் போய்க்குறுகும், நெறி யான் நெல்லிக்காவு ணிலாயவனே'' எனவுரைத்தமை காண்க. குறிகளாகிய திருவுருவங்கள் இறைவன் சிறப்பு நிலையை அறிவிக்கும் சீருடையன. அவையன்றி இறைவன் மாட்டு எண்ணங்கள் எழமாட்டா. திருக்கோயில்களில் செய்யப் பெறும் நித்திய பூசைகளும் திருவிழாக்களும் இறைவனது அருட் டன்மைகளை விளக்குவான் பொருட்டே செய்யப் பெறுகின்றன. இவற்றை யறிந்து வழிபடுதலே மாந்தர் கடனாம். நோயுள்ள ஒருவன் மருத்துவ சாலைக்குச் சென்று அங்கு மருத்துவன்பால் நோயினாலுற்ற குறைகளைச் சொல்லி நோய் தீர்த்தற்கேற்ற மருந்தினையுண்டு நோயற்றவனாதல் போலப் பிறவி நோயுற்ற வுயிர்கள் வைத்தியநாதனாகிய இறை வன் திருமுன் நின்று குறைகளைச் செப்பித் துன்பம் நீக்கிக் கொள்ளுதல் வேண்டும். பிறவி நோய் நீக்கும் சாலைகளே திருக்கோயில்கள். சுந்தரரும்,

'சாலக்கோயிலுள் நின் கோயிலவை யென் றலைமேல் கொண்டாடி
மாலை தீர்ந்தேன் வினையுந்துரந்தேன் வானோரறியா நெறியானே'

எனவருளியதுங் காண்க.

பிறவி நோய் நீக்கும் மருந்து திருவேடம் என்ப. திரு வேடமாவது இறைவனது சின்னங்களாகிய திருவெண்ணீறும் கண்டிகையுமாம். இவை பார்க்குந்தோறும் உயிர்களை வசீகரப்படுத்துமியல்பின. தூய எண்ணங்கள் எழுவது ன கூடு; உலக எண்ணங்கள் ஆசை வயத்தவாய்ப் பிறவி நோய்க்கு மூலகாரணமாகும். அவைகளை மாற்றி இறைவனையறியும் முயற்சியில் ஈடுபடுத்தும் திறம் திருவேடங் களுக்குண்மையின் அவை மருந்தாயின. அப்பர்மூர்த்திகளைக் கண்டமாத்திரத்தே திருவேடம் தொழுத ஆளுடைய பிள்ளையார்,

"மருந்து வேண்டில் லிவை மந்திரங்கள்ளிவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்ளிவை
திருந்து தேவன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழு மடிகள் வேடங்களே''

எனத் திருவேடங்களைப் போற்றிய தூஉங் காண்க. மேலும் அவ்வேடங்கள்

"வீதிபோக்காவன; வினையை வீட்டுவ்வன; ஓதியோர்க்கப்படாப் பொருளை யோர்விப்பன; மானமாக் குவ்வன;  மாசு நீக்குவ்வன; வானையுள்கச் செலும் வழிகள் காட்டுவ்வன; செவிகளார் விப்பன;  சிந்தையுட் சேர்வன; கள கள் பாடுவ்வன;  கண்குளிர்விப்பன; விண்ணுலாவுந் நெறின் வீடுகாட்டுந் நெறி; மண்ணுலாவுந் நெறி; மயக்கந் தீர்க்கும் நெறி; துளக்கமில்லாதன;  தூய தோற்றத்தன; விளக்கமாக்குவ்வன; அருமருந்தாவன''  எனப் பாராட்டப்பட்டுள்ளன.

இவ்வேடங்கள் உண்மை யடியவர் குழாத்துள் புகுத்தும். அவர்கள் யாவரும் தம்மை விடுத்தாயும் பழைய தொண்டர்கள். பூசுகின்ற நீறுபோல உள்ளும் புனிதர்கள். இறைவனையே நோக்கி நிற்கும் நோன்பினர். பதார்த்தம் பாராப் பண்பினர். அவர்களுறவு வினையைப் போக்குந் திறம் வாய்ந்தது. ஞான ஆரமுதுண்ட நாயனாரும்,

விண்டொழிந்தன நம்முடை  வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டிறைஞ்சு வானவர் தமைத்தாங்கிய விறைவனை யுலகத்தில்
வண்டுவாழ் குழன்மங்கை யொர்பங்களை வலஞ்சுழி யிடமாகக்
கொண்டநாதன் மெய்த்தொழில் புரிதொண்டரோடினிதிருந்தமையாலே

எனவரும் திருப்பாட்டினுள் திருத்தொண்டர் இணக்கம் நன்மை பயக்குமென அறிவுறுத்தியதறிக. திருக்கோயில் கள், திருவேடங்கள், நல்லாரிணக்கம் இவை மூன்றும் உயிர்கள் ஊனத்தை நீக்கி இன்பம் கூட்டுவனவென ஒருவாறு கண்டோம். நம்மனோருள் சிலர் இவற்றை யெல்லாம் பழைய பல்லவி யென்பர். எங்ஙனம் கூறினும், ஒரு நோய்க்குத் தேர்ந்த மருந்து என்றும் மாறாதது போல இவையே பிறவி நோய் போக்குவதற்குச் சிறந்த மருந்து என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

சைவ சமய குரவர்களாகிய நால்வரும் இவைகளையே உணர்த்தினர். உண்மைத் திருவேடங்கள் தாங்கி அடியவர் கூட்டம்பற்றி நின்று திருக்கோயில்கள் சென்று சென்று தொழுவதே கருமமாகக் கொண்டனர். பிறரையும் அங் ஙனம் ஏவினர். இறைவனிடத்துத் தங்களுள்ளம் அழுந்தும் வண்ணம் இன்னிசைத் தமிழ்ப் பதிகங்கள் சாற்றினர். அப்பதிகங்களில் இறைவனது பொருள்சேர் புகழ் மிகுந்து மிளிர்வது கண்கூடு. இசை, மக்களை யீர்த்து இறைவனது அருட்குணங்களை யுணரச்செய்தது. அவ்வாறு அறிதற்கு மக்கள் அறிந்த மொழி கருதியே அரிய செந்தமிழிலே திருப்பதிகங்கள் யாத்தனர். அவற்றைப் பண்ணொன்று இசையில் அமைத்தனர். ஆளுடைய பிள்ளையார் நாளுமின் னிசையாற் றமிழ் பரப்பினார் என்றறிவிக்கப் படுகின்றது. அவர்கட்குத் தமிழிசையே வளப்பம் தந்தது. யாழ், குழல் முகலிய இசைக் கருவிகளும் தமிழிசைக்கே பயன் பட்டன என்றறிகின்றோம். ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணபத்திரர், திருமுறைகளுக்குப் பண் வகுத்த பாணினி யார் ஆகிய இவர்களைத் தமிழிசை வளர்த்த பெரும் இசை வாணர்களை நம் தமிழ்நாடு பெற்றிருந்ததல்லவா. கால பேதத்தாலும், பிறகாரணங்களாலும் அவ்விசை குன்றிற்றெனின் தமிழ் நாட்டில் தமிழிசையின்று என்பது பேதமையால் நேர்ந்த வெற்றுரை யென்றே இகழ்தல்வேண்டும். பெருங் கொடையாளர் கனம் - ராஜா - சர். அண்ணாமலை செட்டியாரவர்கள் தமிழிசை யாக்கங்கருதி உவந்தளித்த பெருநிதியைக் கண்டுங் கேட்டும் மனம் பொறாதவர்களாலாகும் இற்றைநாட் கிளர்ச்சி நம் தமிழ் நாட்டில் எற்புத் துளைதொறும் தமிழ் ஊறிய தமிழ் மக்களை மயக்க வொண்ணாத தென்று யானுரைக்கவும் வேண்டுமோ. வேண்டுவதில்லை.

சைவ இளைஞர்களே! இடைப் பிறவரலாகச் சற்று இசை இயக்கத்தில் நுழைந்தேன். இன்னிசைத் திருப்பாட்டுக்கள் இறைவனைக் காட்டும் கைகண்ட மந்திரங்கள். திருப் பாடல்களைக் காதலாற் கசிந்துவோத இறைவனது திருவுருவம் அகத்தே விளங்கி மிளிர்வது ஒருதலை. அகப்புறக் கரணங்கள் ஒன்றுபட்டுப் பெருமகிழ்ச்சி யடைந்து பேரின்ப நிலையில் திளைப்பது உண்மை நாயன்மார்கள் கண்ட அநுபவம். இதுவே சைவ சித்தாந்த முத்தி நிலையாகும்.

அத்தகைய பேரின்ப நிலையில் மக்களனைவரையும் செலுத்திச் சைவவொழுக்கங்களில் நிற்குமாறு செய்வது சைவ இளைஞர்கள் முக்கிய கடமையாகும். உலகம் பலதிறப்பட்டவர்களை யுடையது. அவர்கள் பேசும் மொழிகளால் மாறுபடுவர்; ஒழுக்கங்களால் மாறுபடுவர்; அறிவால் மாறுபடுவர். எத்தகையராயினும் அவர்கட்குச் சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் ஒழுக்கங்களையும் உணர்த்துதல் வேண்டும். பிறமொழி உடையோர்க்கு அவர்தம் மொழி பயின்று, நூலானும் உரையானும் அறிவித்தல் முறைமையாகும். பிறவொழுக்க முடையோர்க்கு அவரது குறைகளை நயமுடன் எடுத்துக் காட்டித் திருத்திச் சைவவொழுக்கங்களில் செலுத்துதல் கடன். அறிவால் மாறுபடுவோர்க்கு அவரவர் கண்ட நுணுக்கங்களையே செம்மைப் படுத்தியமைத்து உண்மைச் சைவநிலை காண அறிவு கொளுத்துதல் வேண்டும். இவையாவும் ஆன்றோர் செய்யத் தக்கபணியாம். பிறர்மொழி கற்றல் இளைஞர்கள் கடமையெனக் கருதியே இதனை இங்குரைத் தேன். வடநாட்டிலிருந்து சைவ சித்தாந்தக் கருத்துக்களை விளக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் யாவை எனப் பல கடிதங்கள் பேரறிஞர்கள் பலருக்கும் வருகின்றன. அக்குறையை நீக்கவே இளைஞர் யாவரையும் பிற மொழிகளைக் கற்குமாறு வேண்டுகிறேன்.

சைவ இளைஞர்களே! சமயவுலகத்தில் நால்வகையான மக்களைக் காண்போம். முதலாவதாக ஒரு கூட்டம் கடவுள் நினைப்பின்றி உண்பதும், உழைப்பதும், உறங்குவதுமாயுள்ள மக்களையுடையது. இரண்டாவதாக முந்தையோர் காட்டிய முறைபோலத் திருக்கோயில் முதலியன வழிபாடு செய்வதும், புராணக்கதைகளைக் கேட்டு மகிழ்வதுமாயுள்ள கூட்டத்தினருண்டு. மூன்றாவதாக இரண்டாவது கூறிய கூட்டத்தினருக்கு மாறுபட்டவராய் இறைவனிடத்து அன்புடையோம் என்று சொல்லி வாழ்பவர். நான்காவதாக ஆடம்பரமின்றி வழிபாடுகளின் உண்மையறிந்து பேரறிவுடைய மாண்பினராய் நின்று வாழ்பவர். இறுதியாகக் கூறப்பட்ட தொகுதியினரோடு இளைஞர்களுக்கு யாதொரு செயலுமில்லை. அன்னவர்களைத் தமக்குப் பயன் படுத்திக் கொள்ளுதல் நலமாம். முதல் மூன்று கூட்டத்தினருக்கே சமயபோதனை வேண்டும்.

இவ்வருமைத் தொண்டினைப் புரிதற்குச் சைவ இளைஞர்கள் தனித் தனியாகச் செய்வது இயலாததே. தத்தமூர்களில் சைவக் கழகங்கள் நிறுவி மேற்கூறிய மக்கட்கு ஏற்ற முறையில் பிரசாரங்கள் நிகழ்த்தல் வேண்டும். வாரத்திற் கொரு முறையேனும் மக்களைக் கூட்டிச் சிறப்புடைய அறவுரைகளும் சமயவுரைகளும் போதிக்க வேண்டும். தமிழ்நாடு மாதவம் செய்தது. நாடெங்கும் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டு புரிகின்ற சங்கங்களும் திருமடங்களுமுள்ளன. கரந்தைத் தமிழ்ச்சங்கமும், மயிலம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலைய சுவாமிகள் திருமடமும் தமிழ்க் கல்லூரி நிறுவி சிறந்த பணி யாற்றி வருகின்றன. பெரும்பாலும் சங்கங்கள் ஆண்டு தோறும் ஆண்டு விழாச் சிறப்பு செய்வதே முறைமையுடை யன. இவற்றால் தமிழுலகமும் சைவ வுலகமும் என்ன பயன் பெறும்? அவர்கள் செயத்தகுபணி சில சிறப்புடைக் கழகங்கள் எத்துணை பணிகள் எவ்வகையாகச் செய்கின்றன என்றறிந்து செய்வதேயாகும். சென்னையில் தமிழுக்கே சிறப்பாகச் சிறந்த தொண்டு புரிவது சென்னை வேதாந்த சங்க மாகும். அதனை நடத்துவோர் தமிழார்வத்தினுருவனைய திருவாளர் - வித்வான். தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், M. A., B. L., M. O. L. ஆவார். அன்னார் நீடூழி வாழ்கவென இறைவனை வழுத்துவன். அவருடன் துணை நின்று வகுப்புகளில் பாடங் கற்பிப்போர் திருப்பனந்தாள் திருமடத்துப் பரிசு பெற்றோரும் பெறாதோருமாயுள்ள புலமை நிரம்பிய பேரறிஞர்கள். அத்தகைய ஆர்வம் யாண்டும் விளங்குமெனின் தமிழுலகம் எத்துணைச் சீர்பெற நிற்கும் என்பது நினைக்கவும் வேண்டுமோ! காஞ்சிபுரத்தில் இரண்டு சங்கங்கள் மேம்பட்ட சமயத் தொண்டுகளைப் புரிகின்றன. ஸ்ரீமத் ஞானியார் சங்கம் ஒன்றாகும். நாடோறும் புராண படனம் செய்வதே அச்சங்கம் கடைப்பிடித்துள்ளது. மெய் கண்டார் கழகம் மற்றொன்று. சாத்திரபாடம் நடத்துவதோடு வாரந்தோறும் காஞ்சியிலுள்ள பல திருக்கோயில்களும் சென்று காஞ்சிப்புராணபடனம் செய்கின்றது. சென்னையில்பல சமயச் சங்கங்களுள்ளன. வாரந்தோறும் சமய போதனையைச் சிறப்பாகச் செய்து வருவது ஸ்ரீ பாலசுப்ரமணிய பக்தஜன சபையாகும். எத்தகைய புலமையுடையோரும் அச்சபையின் சார்பாக ஒருரையேனும் பேசாதிருக்கின்றார்களென்று எண்ணுவதற்கில்லை. சென்னை மல்லிகேசுரர் திருத்தொண்டர் சபையினரும் வாரந்தோறும் புராணபடனம் நிகழ்த்தி வரு கின்றனர். அறநூல்களுணர்த்துவதுவே கடனாகக் கொண்டு மதுரையில் திருவள்ளுவர் கழகமும், வாலாஜாபேட்டையில் திருக்குறள் கழகமும் வாரந்தோறும் திருக்குறள் பாடம் கற்பித்து வருகின்றன. திரிச்சிராப்பள்ளி தூத் துக்குடி பூவாளூர் சைவசித்தாந்த சபையினரும் இயன்ற பணியாற்றி வருகின்றனர். கடந்தைத் தமிழ்ச் சங்கத்தார் கிராமந்தோறும் சென்று சமயத்தொண்டு செய்து வருகின்றனரென்று அவர்களது ஓர் அறிக்கை அறிவிக் கின்றது. அஃது யாவரும் புகழக் கூடியதாகும். நான் அறிந்தவளவிலே இச்சங்கங்கள் செய்பணியை யறிவித்தேன். இன்னும் பல கழகங்கள் இன்ன பணிகளைச் செய்கின்றனவெனில் யான் மகிழ்வேன். நீங்களும் மகிழ்வீர்கள்.

சித்தாந்தம் – 1942 ௵ - ஜனவரி ௴
             

No comments:

Post a Comment