Saturday, May 9, 2020



சேக்கிழாரும் தேவாரமும்
புலவர்மணி, வித்துவான். தி. கி. சுந்தரமூர்த்தி

தெய்வத் திருவருள் கைவந்து, தமிழ் மணமும் சிவ மணமும் கமழப் பத்திச்சுவை சொட்டப் பன்னிரண்டாம் திருமுறையை அருளியவர் சேக்கிழார் பெருமானாவார். இவரருளிய திருத்தொண்டர் புராணம் செப்பரிய செந்தமிழ்ப் பாக்களால் திகழ்கின்றது. பயன் கருதாத அடியார்களின் வரலாறு கூறுவதாய், இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பெற்ற பெருமையுடையதாய், தமிழ்ப்புராண நூல்களில் முதல் நூலாய் மிளிர்கின்றது. பைந்தமிழ் நூல்கள் பலவற்றுள்ளும் சிவஞான நெறி சேர்க்கும் தலை நூலாய்த் திகழ்கின்றது. இந்நூற்பாக்க ளெல்லாம் தொடக்க முதல் இறுதிவரை சிவனருள் நிறைவே பெற்று விளங்குவதால் ஏனைப் புலவரியற்றிய இயற்றமிழ் வளத்திற்கு மேற்பட்டதாக விளங்குகின்றன.

சேக்கிழார் தமக்கு முன்பிருந்த பெரியோர் திருவாக்குக்களைப் பெருவாக்காகப் பேணித் தம் நூலுள் அமைத்துள்ளார். திருக்குறள், திருவாசகம் முதலிய பனுவல்களின் அரிய கருத்துக்களும் சொற்றொடர்களும் பல இடங்களில் ஒளிர்கின்றன. சிறப்பாகத் திருமுறையாசிரியர்களின் செம்மொழியும் பொருளுமே கொண்டு, தம் அருள் நூலை அருள் மொழித் தேவராம் சேக்கிழார் இயற்றியுள்ளார் என்பது அறிவுடையார் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தேவாரம் என்ற பெருங்கடலினுள்ளே குதித்துத் திளைத்து அதனுட் பெறும் பயன் யாவும் தேர்ந்து எடுத்துக் கூறியுள்ளார். பற்பல தேவாரங்களின் முதற்குறிப்பையும் உட்குறிப்புக்களையும் ஆங்காங்கே எடுத்துக் காட்டி யுள்ளார். பதிகம் தோன்றிய வரலாற்றையும் விளக்கியுள்ளார், அஃதே போன்று தேவார ஆசிரியர்கள் பாடியருளிய பண்களையும் தக்க இடங்களில் அமைத்துப் பண்ணொன்றப் பாடியுள்ளார்.

இக்கட்டுரையில் சேக்கிழார் எடுத்தாண்ட பலபண்களை விளக்கமுடன் காணலாம். அவை பொருத்தமாக உள்ளனவா என்பதனைத் தேவார இசைவல்லுநர்கள் இசைத்துப் பார்த்துத் தெளிய வேண்டுகிறேன். என் சிற்றறிவுக் கெட்டிய வரையில் சில பண்களே இதில் குறிக்கப் பெற்றுள்ளன. பிறவற்றையும் ஆய்ந்து காணின் சைவ உலகம் நற்பயன் பெறும் என்பது என் கருத்தாகும்.

தேவாரத் திருமுறைகளில் காணப் பெறும் பண்கள் 21 ஆகும். (அவை பகற்பண் 10. இராப்பண் 8. பொதுப் பண் 3) முறையே அவற்றைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.



பண்கள்

#
நாழிகை
பகற்பண் 10
தற்காலம் பாடும் இராகம்
1
0 - 3
புறநீர்மை
ஸ்ரீ கண்டி, பௌளி
2
3 - 6
பியந்தைக்கந்தாரம்
பிலகிரி, இச்சிச்சி
3
6 - 9
கௌசிகம்
பயிரவி
4
9 - 12
இந்தளம், குறுந்தொகை
நெளித பஞ்சமி
5
12 - 15
தக்கேசி
காம்போதி
6
15 - 18
நட்டராகம், சாதாரி
பந்துவராளி
7
18 - 21
நட்டபாடை
நாட்டைக் குறிஞ்சி
8
21 - 24
பழம் பஞ்சுரம்
சங்கரா பரணம்
9
24 - 27
காந்தாரபஞ்சமம்
கேதார கௌளை
10
27 - 30
பஞ்சமம், இராப்பண்
ஆகிரி
11
30 – 30 3/4
தக்க இராகம்
கன்ன காம்போதி
12
38 ½
பழந்தக்க ராகம்
சுத்த சாவேரி
13
47 ½
சீகாமரம்
நாதநாமக்கிரியை
14
45
கொல்லி, கொல்லிக் கௌவாணம், நேரிசை, திருவிருத்தம்
சிந்து கன்னடா
15
48 ¾
வியாழக் குறிஞ்சி
சௌராஷ்டிரம்
16
52 ½
மேகராகக்குறிஞ்சி
நீலாம்பரி(சாவேரி)
17
56 ¼
குறிஞ்சி
மலகரி
18
60
அந்தாளிக்குறிஞ்சி
பொதுப்பண் 3
செவ்வழி
செந்துருத்தி
திருத்தாண்டகம்
சைலதேசாட்சி. சாமா


எதுகுல காம் போதி
மத்தியமாவதி
பியாகடை

தேவாரத்திருமுறை ஆசிரியர்களாகிய திருஞானசம் பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூவரும் அருளிய பண்களைப் பலகாலும் பாடிப்பழகிய சேக்கிழார், தாம் பாடிய திருத்தொண்டர் புராணத்திலும் ஏற்ற இடங்களில் பல பண் முறைகளைக் கையாண்டுள்ளார்.

கொல்லி:

திருநாவுக்கரசர் சூலை நோய் நீங்கப் பெற்றதும், திரு வதிகை வீரட்டானத்திலருளிய 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்'' என்னும் தேவாரப் பாடலின் பண்கொல்லி ஆகும்.

சேக்கிழார் இப்பண் முறையிலேயே, நாவுக்கரசர் தமிழ் மாலைசாத்தும் உணர்வு பெற்றவுடன் பாடியதாகக் கூறுமிடத்துப் பாடுகிறார்.

"நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறை அன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியரை மருளும்பிணி மாயை அறுத்திடுவான்
கூற்றாயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம்
போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனராய்''

காந்தாரம்! அப்பர் திருவையாற்றில் கண்ட சிவன் திருக்கோலத்தை 'மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி” எனவருளிய திருப்பதிகம் போன்றே சேக்கிழாரும்,

மாதர் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்டமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர்ஐ யாற்றில் விரவுஞ் சராசரம் எல்லாம்
காதல் துணையோடுங் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்'',

காந்தார பஞ்சமம்: நாவுக்கரசரைச் சமணர்கள் கல்லி னோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தள்ளிய காலத்து அருளிய "சொற்றுணை வேதியன்" எனும் காந்தாரப் பஞ்சமப் பண்ணை

"சொற்றுணை வேதியன் என்னுந் தூய்மொழி
நற்றமிழ் மாலையாம் நமச்சி வாயஎன் (று)
அற்றமுன் காக்கும் அஞ் செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்''                   - திருநா126

எனப் போற்றி இம்முறையிலேயே பல பாடல்கள் பாடினர்.

திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தங்கள் மிகச்சிறப் புடையன. அவற்றின் சொல்லையும் பொருளையும் இசை யொன்றச் சேக்கிழார் பல இடங்களில் அமைத்துள்ளார். சான்றாக ஒன்றை மட்டும் காணலாம். நாவரசர் விருத்தங்களுள் கற்பார் மனத்தை உருக்கும் இயல்பிற்றாய "ஈன்றா ளுமாய் எனக்கெந்தையுமாய்" என்பதனை,

"ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாகி எனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங் கட்கென்று
வான் தாழ் புனற்கங்கை வாழ்சடையானை மற்றெவ் வுயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே''
எனப் பாடி யுருகியுள்ளார் சேக்கிழார்.

மேகராகக் குறிஞ்சி: சம்பந்தர் பெருமானின் மேகரா'கக் குறிஞ்சியைப் பின்பற்றிச் சேக்கிழாரின் பல பாடல்கள் அமைந்துள்ளன. ''மாதர் மடப்பிடியும்'' என்ற யாழ் மூரிப்பண் எந்த இசையில் பாடப்பெற்றது என்பதைக் குறிப்பிக்கும் சேக்கிழார் பாடல், இப்பண் வந்த வரலாற்றைக் கூறுமிடத்து மேகராகக் குறிஞ்சி முறையில் அமைத்துள்ளதால் 'மாதர் மடப்பிடி' என்ற பண்ணும் மேகராகக் குறிஞ்சியே என்பதைத் தெளியலாம், யாழ்மூரி என்பது பண்ணின் வகையில் ஒன்றன்று என்பது தெளிவு. அப்பண்ணைப் பல ஓதுவாமூர்த்திகளும் அடாணா இராகத்தில் பாடி வந்தனர். சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பே திருகுருசாமி தேசிகர் என்பவர் அடாணா சரியன்று என்றும், நீலாம்பரியிலேயே பாடவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் கருத்தையும் இதுநிலை நாட்டுகின்றது.

இந்தளப் பண்:

இனி சுந்தரமூர்த்தி சுவாமிகளை இறைவன் தடுத்தாட் கொண்டு, அவர் இசை கேட்கத் தொடங்கிய பகுதியில், சுந்தரர் முதன் முதலில் இறைவனைப் "பித்தா பிறை சூடி பெரு மானே யருளாளா" எனத் தொடங்கிப் பாடியுள்ளார். அதனைச் சேக்கிழார் விளக்குமிடத்தில் இந்தளப் பண்ணையே கையாளுகின்றார்.

"கொத்தார் மலர்க் குழலாளொரு கூறாய் அடியவர்பால்
மெய்த்தாயினும் இனியானையவ் வியன் நாவலர் பெருமான்
பித்தா பிறை சூடி எனப் பெரிதாந் திருப்பதிகம்
இத்தாரணி முதலாம் உலகெல்லாம் உ (ய்) ய எடுத்தார் "

"முறையால் வருமருதத் துடன் மொழியிந்தள முதலிற்
குறையா நிலை மும்மைப்படி கூடுங் கிழ மையினால்
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும்புகழ்:
இறையான் மகிழ் இசைபாடினன் எல்லாம் நிகர் இல்லான்.''

இந்தளப் பண் பகற்பண் பத்தனுள் ஒன்றாகும். இது, காலை பத்து நாழிகை முதல் பன்னிரு நாழிகைக்குள் பாடத்தக்கது. சேக்கிழார் இவ்விடத்தில் இந்தளத்தை எடுத்தாள்கின்ற முறையை ஆராயின், நம்பிகளை இறைவன் ஆட்கொண்ட நேரமும் அதுவே என்பதனை அறியலாம்.

பண் இலக்கணம் 11இல் மருதத்தின் பிரிவாக அமைந்த பண் இந்தளம் ஆகும். எனவே "மருதத்துடன் மொழி இந்தளம்" என்பதே பொருந்தும். சில பதிப்புக் களில் ''மதுரத்துடன் மொழி இந்தளம்" எனக் குறிப்பிட்டுள்ளனர். அது பொருந்தா தென்பதை இவ்விசை இலக்கண வகையால் உணரலாம். வலிவு, மெலிவு, சமம் எனப் படும் மூவகைத்தான நிலை பொருந்தத் தாளவகை ஒன்ற இசையொடு பாடி ஆளானார் சுந்தரர் என்பதைக் காணலாம்.

சேக்கிழார் பெருமான் திருவாக்கால் பல உண்மைகளை அறியலாம். குறுந்தொகை, நேரிசை முதலியன அப்பர் திருப்பணி செய்யும் போது பாடப் பெற்றவை என்பதைப் பெரிய புராணப் பாடல்கள் கொண்டு (நாவுக்கரசர் 169, 171) அறிய முடிகிறது.

திருத்தாண்டகங்கள் எல்லாம் இறைவன் திருமுன்பே பாடப் பெற்றவை எனக் கொள்ளலாம். இம்முறையில் சேக்கிழார் பல பண்முறைகளைக் கையாண்டு பாடி. மகிழ்ந்த நிலைமையை ஓர்ந்தாயினும், தேவாரப்பண்களை நம் சமய மக்கள் முறையாகப் பாடி மகிழ்வார்களாக.

சித்தாந்தம் – 1962 ௵ - ஆகஸ்டு, செப்டம்பர் ௴


No comments:

Post a Comment