Saturday, May 9, 2020



சேக்கிழாரும் சித்தாந்தமும்
[திரு. நல். முருகேச முதலியார், B. A.,]

சேக்கிழார் சைவத்திற்குச் செய்த பணிகள் பல திறத்தன. சைவ சமயவாலாற்றிலேயே அவருக்கு ஒப்பானார் ஒருவரும் இலர் என்று சாற்றுவது மிகையாகாது. முதலாவதாக எண்ண வேண்டிய தொண்டு, அநபாய சோழனின் அவைக்களத்தில் சீவகனது வரலாற்றுக் கதைக்கு முதலிடம் பெற ஒட்டாது உண்மை நாயன்மார்கள் சரிதைகளை விளக்கியது. இல்லையேல் சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப் பெற்ற திருத்தொண்டத் தொகையின் பெருமையும், இராசராச சோழனால் பாராட்டப்பட்ட திருத் தொண்டர் திருவந்தாதியின் பெருமையும், விளக்கமடைந் திருக்கமாட்டா. நாயன்மார்கள் சரிதைகளும் செயற்கரிய செய்த பெருந் தொண்டுகளும் மறைந்தோ, குழறுபட்டோ போயிருக்கும். எனவே நாடாண்ட மன்னனை அச்சரிதையில் ஈடுபடுத்தியதும், அரசியல் உதவி கொண்டு சமயத்தை வளர்த்ததும், தலையாய தொண்டு. இரண்டாவது, சேக்கிழார் நாயன்மார்கள் சரிதைகளைத் திருவருள் வலி கொண்டு தம் அளவிலா உழைப்பினாலும் அன்பினாலும் உருவாக்கியது ஒரு தெய்வீகச் செயலாகும். எந்நாட்டு வரலாற்றிலும் சுமார் 1000 ஆண்டுகளில் பற்பல காலங்களில் வாழ்ந்த அடி யார்களின் வரலாற்றை உள்ளபடி, உணர்ந்தபடி, இறைவன் உணர்த்தியபடி எழுதிய வேறு ஆராய்ச்சியாளரைக் காண் கிலோம். ஆராய்ச்சி மட்டுமல்லாமல், அச்சரிதைகளை ஒரு பெரும் காப்பியமாக, உயர்ந்த சிவக் கவிதையாக்கியது ஒரு பெரிய தொண்டாகும். சைவத்தின் குலக்கவிஞராகிய சேக் கிழாருக்கு மேலாக ஒருவரையும் சொல்லல் இயலாது. மூன்றாவது சேக்கிழார் சைவசித்தாந்த உண்மைகளைத் தெளிவுபடப் பெரிய புராணத்தில் உணர்த்தியது. இது முன்னிரண்டையும் விட மிகச் சிறந்த தொண்டு. இப்பொருளைப் பற்றி ஈண்டுச் சிறிது சிந்திப்பாம்.

சேக்கிழார் காலம் சைவ சித்தாந்த ஞானசூரியனான மெய்கண்டாரின் காலத்துக்குச் சுமார் 70 ஆண்டுகள் முந்தியது. ஆனால் இராமாநுசர், மத்துவர், பராசரர் பசவேசுவார் முதலியவர்களுக்குச் சிறிது பின்னோ சிறிது சமமாகவோ இருக்கும். அடியார்க்கு நல்லார் போன்ற இலக்கிய ஆசிரியர்கள் காலமும் ஏறக்குறைய அதுவே. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மறையாகிய தேவாரத் திருமுறைகள் இருந்த போதிலும், ஞானாமிர்தம் முதலிய சைவசித்தாந்த சாத்திர நூல்கள் இருந்த போதிலும், சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளைத் தத்துவ நூலாக மட்டும் இயற்றாமல் அனுபவம் சான்ற உண்மை அடியார்களின் சரிதைகள் வாயிலாகவும் அவர்கள் திருவாய் மலர்ந்த தெய்வீகப் பாடல்கள் மூலமாகவும் விளக்குவது அவசியமாயிற்று. முதலில் சமயத்தை வலுப்படுத்தித்தான் சமயக் கோட்பாடுகளை நிலைநாட்ட வேண்டும். சேக்கிழார் பெருமான் தேவாரப் பாடல்களின் உண்மைப் பொருள்களைப் பெரிய புராணத்தில் ஆங்காங்கே எடுத்து ஓதி இறைவனின் பஞ்சகிருத்திய அருட்டிறத்தினை அடியார்கள் சரிதைகளில் விளக்கிக் காட்டவில்லையேல், வேதாகமங்களின் ஞானசாரமான சைவ சித்தாந்தம் 'இராசாங்கத்தில்' அமர்ந்திருக்க முடியாது. எனவே சேக்கிழார், மெய்கண்ட தேவ நாயனார் பின்னர் அருளிய சிவஞான போதம் என்ற பெருஞ் சாத்திரத்திற்கு அடிகோலினார் என்பது உண்மை.

இந்த உண்மையை விளக்கப் பெரிய புராணத்தில் எடுத்த இடமெல்லாம் சான்று காட்டுவது எளிது. அவைகளையெல்லாம் விடத் தலைசிறந்தது சேக்கிழார் திருப்பாசுரத்துக்குத் தந்துள்ள விளக்கமேயாகும். இப்பாடல்களைச் சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கு ஒப்பாகவும் ஒரு முறையில் உயர் வாகவும் சொல்லலாம். திருஞான சம்பந்தரது திருப்பாசுரத்தைச் சிவாகமங்களின் ஞானபாத முடிவாய்ச் சிவஞான போதத்துள் வடித்துக் காட்டப்படும் பன்னிரண்டு சூத்திரங்களின் மூலபாடமாக உணரலாம். முதல் மூன்று பாட்டுக்கள் பொது வகையிலும் பின்பாட்டுக்கள் சிறப்பு வகையிலும் அமைந்துள்ளன. இவைகளுக்குச் சேக்கிழார் பெருமான் இருபத்திரண்டு பாட்டுக்களில் மெய்ப்பொருள் முடிவுகாட்டும் வகையில் பேருரை அருளியுள்ளார். முதல்பாட்டாகிய வாழ்க வந்தணர்' என்ற பாட்டின் விளக்கத்தில் சங்காரக் கடவுளாகிய சங்கரனே முதல்வன் என விளக்கி எல்லாச் சந்த வேள்விகளும் அர்ச்சனையும் வழிபாடும் அவர்க்கே உரியன எனக் கூறியுள்ளார். இரண்டாவது அருமைப் பாட்டாகிய 'அரிய காட்சியராய்' என்ற பாட்டின் விளக்கம் சித்தாந்தத்தின் அரிய கொள்கையான இறைவனது சொரூப தடத்த இலக்கணங்களைக் கவின் பெற விளக்குகிறது. அப்பாட்டு

“அரிய காட்சிய ரென்பதவ் வாதியைத்
தெரியலா நிலையாற் றெரியா ரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினர்."

என்பது. முன்பாட்டில் கூறிய பதி, பாச, பசுஞானங்களால் தெரியப்படாத நிலைமையுடைமை காரணமாக அரிய காட்சியர். அவ்வாறு பாச பசு ஞானங்களால் தெரியமாட்டாதவர். காண்பதற்கு உரிய அன்பின் திறத்தாலே காணும் பக்குவ முடைய 'அடியார்கள் காண உள்ளன்பான நல்லடையாளங்களால் இறைவன் அருளுகின்றான் என்று அழகாகச் சேக்கிழார் விளக்கியுள்ளார். இதை, "அறி பொருள் அசித்தாம், அறியாத தின்றாம்" என்று சாத்திரம் கூறுகிறது. இறைவன் காட்சிப்படும் நிலை  'ஊனக்கண்பாச முணராப் பதியை, ஞானக் கண்ணிற் சிந்தைநாடி'' (9 - சூ) என்ற போதமும், அதைத் தொடர்ந்த சித்தியார் பிரகாசம் முதலியவைகளின் வாக்குகளும், காழிப் பிள்ளையாரும் குன்றைக் குலக் கவிஞரும் சொன்னதை வலியுறுத்துகின்றன. முந்திய நூல்களாகிய உந்தியார் "அகளமா யாரு மறிவரிதப் பொருள்“ அகளமாய் நின்றவம் பலத் தெங்கூத்தன்" என்றும் சொல்லிப் போயின. சேக்கிழார் பதியுண்மை, பதி யிலக்கணம் இவைகளை நன்கு கூறியுள்ளார்.

போதம் எட்டாம் பாட்டின் சூத்திரப் பொருளைப் பின் வரும் சேக்கிழார் பாட்டில் எளிமையாகக் காணலாம்.


"தம்மையே சிந்தியா வெனுந் தன்மைதான்
மேய்ம்மையாகி விளங்கொளி தாமென
இம்மையே நினைவார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவா ரென்றதாம்.

தியான உறைப்பினாலே இருவினை ஒப்பும் மலபரிபாகமும் வரச் செய்து மலத்துன்பத்தினின்றும் நீங்கலாம் என்ற செய்தியை "அவையே தானே யாயிருவினையிற் போக்குவாவு புரிய ஆணையில் நீக்கமின்றி நிற்குமன்றே" என்ற போதம் (சூத்திரம் 2) நினைவு படுத்துகிறது. சேக்கிழாரின் இத் திருப்பாட்டு பொய்ம்மையைப் போக்கி மெய்ம்மையை அடைவிக்கும் சாதனத்தையும், பாச நீக்கத்தின் பயனையும் குறிக்கின்றது.

"ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம்''

"ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்" என்ற திருப்பாசுரப் பாட்டுக்களுக்குச் சேக்கிழார் தந்துள்ள விளக்கங்களைப் போதம் எட்டு ஒன்பது சூத்திரங்களும், சித்தியார் பாட்டுக்கள் பலவும் உள்ளடக்கியுள்ளன.

"போதித்த நோக்குற் றொழியாமற்பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் னெறிபேர்மி னென்றாம்''

என்ற சேக்கிழார் பாட்டு. "தம்முதல் குருவுமாய்த் தவத் தினில் உணர்த்த" என்ற போதத்தின் கருத்தை நினைவு படுத்துகின்றது. சித்தாந்தத்திற்கு உயிர் நாடியாக உய்வை உறுதிப்படுத்தும் இந்தக் கொள்கையைத் திருத்தொண்டர்களுக்கு இறையன் எப்படி நிராதாரமாகவும் சாதாரமாகவும் பக்குவத்திற்குத் தக்கபடி குருவடிவாய்த் தோன்றி அருளுவர் என்பதனை உணர்வதே முன்னை வல்வினையை முடிப்பதற்கு வழியல்லாது வேறு ஆராய்ச்சி தேவையில்லை யென்பதும், ஆதலினாலே தாம் எழுதப்புகுந்த திருத் தொண்டர் புராணம் இந்தச் சாதனத்துக்கு உதவி என்பதும் உணர்த்தச் சேக்கிழார் பின்வருமாறு அருளியுள்ளார்.

''... .. ... . ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே யேற்ற கோட்பாலவும்
முன்னைவல் வினையும் முடிவெய்துமத்
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்.''
சித்தாந்தத்திற்குச் சப்தப்பிரமாணம் உடன்பாடு என்பதைக் குறிக்கப் பாசுரம் ஏழாம்பாட்டில் சண்டீசர் முக்கண்மூர்த்தியடி சேர்ந்த வண்ணம் "அறிவார் சொலக் கேட்டும்" என்பதைச் சேக்கிழார் மறுபடியும் ஒரு முறை "தக்கோர் பெரிதும் சொலக்கேட்டனம்'' என்றார். சித்தாந்தத்தின் முழுஉண்மையை இறைவன் உணர்த்தினாலன்றி உணர முடியாது என்பதைச் 'சண்பையர் வேந்தர் மெய்ப்பாசுரத் தைக் குறியேறியவெல்லை அறிந்து கும்பிட்டேனல் லேன் சிறியேன் அறிவுக்கு அவர் தம் திருப்பாதம் தந்தநெறியே சிறிதுயானறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்" என்னும் பாட்டால் தெரிவிக்கின்றார்.

சேக்கிழார் பெருமான் சைவசித்தாந்த சம்பிரதாயத்தைத் தெளிவுற விளக்குதலை மகாவித்வான் மீனாட்சிகந்தரம் பிள்ளையவர்கள் தம் பிள்ளைத் தமிழில் பாராட்டியுள்ளார்கள்.

“பேர் கொண்டசைவபரிபாடை யரிவறிய சம்
பிரதாயம் முதலிய யாவும்
பிறங்கத் தெரித் தெம்மையாண்ட குன்றத்தூர்ப்
பிரானைப் புரக்க வென் றே.''

என்பது காப்புப் பருவப் பாட்டிலொன்று. பிள்ளையவர்கள் சேக்கிழாரின் பக்திச் சுவை நனி சொட்டும் கவிதையை மட்டும் வியந்ததில்லை. அவர் சித்தாந்த நெறியை விளக்கிய சீர்மையையும் புகழ்ந்து பாடியுள்ளார்கள்.

இன்னொரு பாட்டில் சேக்கிழார் மூவர் அருள் மறைப் பொருளைத் தெரிவித்துள்ளார் என மகாவித்வான் கூறியுள்ளார். அது

"அருண் மூவரருண் மறைப் பொருடெரிய முன்னொருவ
ரருண் மறைப் பொருள் விளக்கு
நம்பறா வித்தியா ரணிய முனிவரன் உளம்
நயப்ப யாப் புற விரித்த
நாவலர் பிரான்............ என்பது

வேதத்துக்குப் பாடியம் கண்ட வித்தியாரண்யரின் உளம் நயப்பச் சேக்கிழார் சைவ மூவர் அருள் மறைக்குப் பொருள் தெரித்தார் என்பது வெகு அரிய செய்தி. மிக உயர்ந்த பாராட்டு. வித்யாரண்யர் மனம் உவந்த குறிப்பின் விளக்கத்தை நம்மவரில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்வது மிகவும் வேண்டற் பாலது.

தமிழ்மறையில் அடங்கிய பல இரகசியங்களைச் சேக்கிழார் விளக்கியுள்ளார் என்று மகாவித்வான் கூறியுள்ளார். அது பின்வருமாறு.

"தவாப் பொருளணிச் சிறப்பும்
தமிழ்மறை யடங்கு பல மந்தணமும் வெள்ளிடைத்
தவிரும் வெற்பென விளங்க'' என்பது.

சைவசித்தாந்தத்தில் காணப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நாற்பாதங்களையும் சேக்கிழார் பெருமான் உலகறியச் சாற்றினர் என்பதை மகாவித்துவான் செங்கீ ரைப் பருவம் 9 ஆம் பாட்டில் அழகாகக் கூறியுள்ளார்.

சைவ சமயத்தின் தனிச்சிறப்பான மலத்தை மாற்றும் தீக்கையின் பயனைத் தாலப்பருவம் 6 ஆம் பாட்டில் மகாவித்வான் குறிப்பிட்டுள்ளார். 7 ஆம் பாட்டில் அடியார்களின் அன்பு அத்தனையும் சேக்கிழார் கண்காணும்படிச் செய்தார் என்பதையும், அவர்களுடைய தமிழ்மான்மியம் சைவப் பயிரைத் தழைக்கச் செய்தது என்பதையும் மகாவித்துவான் பாராட்டியுள்ளார்.

முக்கியமாகச் சேக்கிழார் திருப்பாசுரத்துக்கு உரை அருளியதன் பெருமையைச் சப்பாணிப்பருவம் 9 ஆம் பாட்டில் மகாவித்வான் வெகு அற்புதமாகப் பாராட்டியுள்ளார். சேக்கிழார் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் போத கா சிரியராகவும் ஞானாசிரியராகவும் திகழ்கின்றார் என்கிறார் மகாவித்வான். சித்தாந்த ஞானம் தலைக் கட்டச் செய்த ஞானகுரு சேக்கிழார் என்பதில் ஐயமுண்டா? அவர் சித் தாந்தப் புகழ் என்றும் நின்று நிலவுக!

''தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி னாற்சொல்ல வல்லபிரான் எங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழான் அடி சென்னி இருத் துவாம்''             - சிவஞானசுவாமிகள்.

சித்தாந்தம் – 1962 ௵ - ஆகஸ்டு ௴


No comments:

Post a Comment