Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
செல்வம்.

செல்வம் - பொருட்செல்வம், கல்விச்செல்வம், அருட்செல்வம், என முத்திறப்படும். அவற்றுள் பொருட்செல்வமாவது இரத்தினம், பொன், வெள்ளி முதலியனவேயாம். அவை இம்மை யின்பத்திற்கு இன்றியமையாதனவாம். ஆகலான் மானுடராய்ப்பிறந்த யாவரும் அத்தியாவசியம் அவற்றைத் தேடல்வேண்டும். தேடுங்காலத்து அறத்தின்வழி யீட்டில் எண்ணில நன்மையையும் உண்டாக்கும். இக்கருத்துப்பற்றியே தெய்வப்புலமை திருவள்ளுவ நாயனாரும்,

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

என்று அருளிச்செய்தார். ஆகலான் அறத்தையும் இன்பத்தையும் விரும்பிய நாம் எல்லோரும் தரும வழியாலேயே அப்பொருளைத் தேடல்வேண்டும் என்பது சித்தித்தவாறு கண்டுகொள்க. நம்மனோ ருள்ளும் இவ்வுலக வின்பத்தைப் பெரும்பாலும் வேண்டி நிற்கும் இல் லறத்தார்க்கேயன்றி மறுமையின்பம் வேண்டி நிற்கும் துறவறத்தார்க்கும் அதுவேண்டும் என்னும் கருத்தால், மாணிக்கவாசக சுவாமிகள் "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்'' என்றும், “வறியார் இருமையறியார்” என்றும் திருக்கோவையாருள் அருளிச் செய்திருக்கிறார். அங்ஙனமாயின் இப்பொருட்செல்வத்தின் பெருமை யென்னாலியம்பலாம் தகைத்தன்று. இச்செல்வமிலார்க்குப் பலவகையினும் இடையூறும் துன்பமும் விளையுமென்பது பிரதியக்ஷம். அதிமதியுடையனேயாயினும் செல்வமிலனேல் அவன்வாக்கை மனைவி மைந்தர் முதலாயினோரும் ஏற்றுக்கொள்ளார். செல்வம் ஒன்றுமாத்திரம் உளனேல் அவன் இழிகுலனாயினும் அறிவிலனாயினும் எல்லோரும் ஏற்று நன்குமதிப்பர். அக்கருத்தினாலேதான் திருவள்ளுவநாயனாரும், ஒளவையும்,

இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – எனவும்

கல்லானே யானாலும் கைப்பொரு ளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கெதிர் கொள்வர் 
இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன் வாயிற்சொல் - எனவும்,
அருளிச் செய்தார்கள். சமணமதத்தவராகிய திருத்தக்கதே வரும் இவர்கள் கருத்தைப் பின்பற்றியே,

பொன்னினாகும் பொருபடையப்படை
தன்னினாகுந் தரணிதாணியிற்
பின்னையாகும் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங்காலை துன்னாதனவில்லையே – எனவும்,

வென்றியாக்கலும் மேதகவாக்கலும்
குன்றினார்களைக் குன்றெனவாக்கலும்
அன்றியும் கல்வியோடழகதாக்கலும்
பொன் துஞ் சாகத்தினாய் பொருள் செய்யுமே. – எனவும்

அருளிச்செய்தார். இத்தகைய செல்வத்தை எத்தகையிடையூறுவரினும் பொருட்படுத்தாது “திரைகடலோடியும் திரவியம்தேடு'' என்பதற்கு இணங்க பெருமுயற்சி செய்து தீவினைவிட்டு ஈட்டி இம்மையின்பத் திற்கும் மறுமையின்பத்திற்கும் ஏதுவாகிய அறங்களைச் செய்துய் வோமாக. அங்ஙனம் செய்யாது,

பாடுபட்டுத்தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் யாரேயனுபவிப்பார்
பாவிகாள் அந்தப்பணம்

என்பதற்கு இலக்கியராய் வாளா ஈட்டி வைத்து இறந்து படுவோமாயின் நம்மிலும் அறிவிலிகளாகிய கீழ்மக்கள் வேறியார்? இக்கருத்தினாலன்றோ பட்டினத்தடிகளும்,

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மே
லிறக்கும்போது கொடுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கு மிச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு. என் சொல்லுவேன் இறைவாகச்சியேகம்பனே - எனவும்

நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார் வயற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங்குளமும் கல்லாவு மென்ன
வீயாமனிதரையேன் படைத்தாய் இறைவாகச்சியே கம்பனே.

எனவும், அருளிச்செய்தார்.
ஆகலான் பாவத்திற்கஞ்சி பொருளைச் சம்பாதித்து இல்லற தருமங்களை லோபமின்றி அப்பொருளுக்கேற்ப விரித்தும் சுருக்கியுஞ் செய்து இருமையின்பத்தையுமடைதலே அறிவுடையார்க்கு அழகா கும் என்பது உணரக்கிடந்தவாறு காண்க.

இனி, கல்விச்செல்வமாவது,

''கற்க கசடறக்கற்றவை கற்றபின் நிற்கவதற்குத்தக"

என்றவாறு கற்றற்குரிய நூல்களை கல்லாசிரியனை யடைந்து நன்கு வழிபட்டுக் கேட்குமுறையிற் கேட்டு ஐயம் திரிபு அறக்கற்றலாம். அந்நூல்களாவன - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்களை யுணர்த்துவனவேயாம். அவற்றைக் கற்றவர்கட்கு அக்கல்வி எல்லாவற்றையும் பகுத்துணர் தற்கும், கொள்ளற் பாலனவற்றைக் கொள்ளுதற்கும், விள்ளற்பாலன வற்றைவிடுதற்கும் கருவியாய் இம்மை, மறுமைவீடு என்னும் மும்மையிலும் இன்பம் பயத்தலினாலும், அவர் பிறவிதோறும் அழிவின்றி ஒருங்கு சேரலானும், அவர் சென்றுழியெல்லாம் அவர்க்கும் பிறர்க்கும் சிறப்பு செய்யலானும், பிறர்க்குக் கொடுக்குந்தோறும் கொடுக்குக் தோறும் ஒரு காலைக்கொருகால் ஓங்கிவளர் தலினாலும் இன்ன பிற வாற்றானும் பொருட்செல்வத்தினும் கல்விச் செல்வமேமிகவும் மேம்பாடுடைத்தாம்,

இக்கருத்துப்பற்றியே,

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவர்க்கு
மாடல்ல மற்றை யவை. எனவும்,

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாதவாறு, எனவும்,

ஒருமைக் கண்தான் கற்றகல்வி யொருவர்க்கு
எழுமையும் ஏமாப்புடைத்து, எனவும்,

தோலா நாவின் மேலோராகிய பொய்யாமொழிப் புலவர் கூறியதுஉம் என்க.

இன்னும் இக்கல்வியின் பெருமையை சிறப்புவகையான் கூறின் மோக்ஷத்திற்கு மிக்கசாதனமாயுள்ளது இதுவே யாம் என்பதனை,

கற்றல் கேட்டல் உடையார் பெரியார்கழல் கைதொழுதேத்தஎனவும், 

கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்” எனவும்,

கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர் தங்களோடும்
உற்றி லேன் ஆதலாலே உணர்விற்குஞ் சேயனா னேன்” எனவும்,

கல்லாத புல்லறிவிற் கடைப் பட்டகா யேனை" எனவும்,

கற்றவர் விழுங்குங் கற்பகக்கனியை
மற்றவரறியாமாணிக்க மலையை'' எனவும்

வரும் மெய்ஞ்ஞானிகளது திருவாக்குகளான் தெற்றென வறிக.

இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய விக்கல்வியை மக்கட்பிறப் பினர் யாவரும் எத்துணைச் சிரமப்பட்டுங்கற்று இம்மையின்பத்திக் கேதுவாகிய பொருட்செல்வத்தோடு என்று மழியா வியல்பினதாகிய மோக்ஷப்பொருளாகிய பேரானந்தப் பெருவாழ்வையும் பெறுதற்கு ஒவ்வொருகணமும் முயலல் வேண்டுமென்பது சொல்லாமலேயமையக் கிடத்தலின், இதனை இவ்வளவில் நிறுத்தியப்பாற் செல்லுகின்றேன்.

இனி முத்திக்குரிய மற்றொன்றாகிய கல்விச் செல்வந்தாலும், "மனமடங்கக்கல்லார்க்கு வாய்என் பராபரமே” என்றவாறு மனதைத் படங்கச் செய்யா தவழி பயனில தாகலானும், "கற்றதினாலாய பயன் என்கொல் வால் அறிவன் நற்றாள் தொழா அ ரெனின்'' என்றபடி வாலறிவன் தாளைத்தொழச் செய்யாத வழி பயனிலதாகலானும், முத்திக்குச் சாதனமான வழியும் சாத்தியமாகிய முத்தி சித்தித்த வழி சாதனமாகிய கல்வி வேண்டாம் என்னும் கருத்தால்,

''உற்றாரையான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையான் வேண்டேன் கற்பவையும் இனியமையும்
குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக்கசிந்து உருகவேண்டுவனே"

என்று சாத்தியமாகிய திருவடிஞானமாம் அருட்செல்வத்தை முடிவாக இறுகப்பற்றி  ''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற் துகபற்றுவிடற்கு" என்றவாறு அருட்செல்வத்தையே கொண்டு மாணிக்கவாசகசுவாமிகள் கல்விச்செல்வத்தை நீத்து விட்டமையானும், அருட்செல்வத்தை நோக்கப் பிறப்பின் உயர்வு தாழ்வை மாற்ற வல்லதும் உயிரினும் ஓம்பப்படுவதாகிய ஒழுக்கத்தைத் தருவதும் முதலிய மேம்பாடுடைய கல்விச்செல்வமும் தாழ்ந்ததேயாம். ஆகவே அருட்செல்வம் தலையாய தென்பது வெள்ளிடைமலைபோல் தெள்ளிதிற் புலப்படக் கிடந்தவாறு காண்க. இவ்வருட்செல்வத்தை யடைந்தமையினாலன்றோ நமது தாயுமான சுவாமிகள்,
அல்லார்ந்த மேனியொடு குண்டுகண் பிறை எயிற்று ஆபாசவடிவான அந்தகா, நீயொரு பொருட்டாற் பகட்டுவது அடாதடா காசு நம்பால் செல்லா தடா என்று பேசவாய் தந்தசெல்வமே''
என்றும், முருகக்கடவுளின் திருவருளை முற்றும் பெற்ற அருணகிரிநாதர் “ஞானச்சுடர் வாள் கண்டாயடா அந்தகா, வந்து பாரடா சற்று என்கைக்கெட்டவே” எனவும் யமனை யொருபொருட்படுத்தாது இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியது உம் என்க, மெய்ஞ்ஞானிகளெல்லாம் செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வமாய், அழியாவியல்பினதாய், பேரானந்தப் பெற்றிய தாய், சிவத்தோடு அத்துவிதமாய் அணையச் செய்வதாயுள்ள இவ்வருட் செல்வமே "எண்ணரிய பிறவிதனின் மானிடப்பிறவி தான் யாதினும் அரிது அரிதுகாண்'' என்ற பிரகாரம் அரியமானுடப் பிறவியை பெடுத்த மக்கட் கெல்லாம் முடிவாய் வேண்டப்படும் சீரிய செல்வமென்று அறிவுறுத்திப் போந்தமையான் நாம் எல்லாம் அதனை விரைந்து பெறுதற்குரிய மார்க்கங்களை தேடல் வேண்டுமென்பது யாவர்க்கும் விளங்கக் கிடந்தமையால், அம்மார்க்கங்களை என் புல்லறி வுக்கு எட்டிய வண்ணம் இங்கு ஒருவாறு சிறிது கூறுகின்றேன். அம்மார்க்கங்கள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சிவபுண்ணியங்களேயாம் என்பது முன்னர்க்கூறியுள்ளாம்.

அவற்றுள் சரியையாவது: - திருநந்தனவனம் வைத்தல், அவற்றி லுள்ள புஷ்பங்களைப் பறித்து மாலை தொடுத்துச் சிவபெருமானுக்குச் சாத்தல், சிவாலயத்தில் திருவலகிதேல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றல், சிவனடியார்க்கு வேண்டிய தொண்டு செய்தல் முதலியனவாம்.

கிரியையாவது: - வாசனைத்திரவியங்கள், தூபதீபம், திருமஞ்ச னம், திருமாலை முதலிய பூசோபகரணங்கள் கொண்டு நற்குணம் மருவிப் பஞ்சசுத்திசெய்து சிவாசன மூர்த்தி மூலங்களினாலே முறையே ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து மூர்த்திமானாகிய பாஞ்சோதியைப் பாவித்து ஆவாகனஞ் செய்து நிருமலமாகிய மெய்யன்பினால் அருச்சனை செய்து விருப்பத்தோடு தோத்திரம் பண்ணி வழிபட்டு நித்தியாக்கினி காரியம் செய்து முடிப்பதாம்.

யோகமாவது: - உச்சுவாசம் நிச்சுவாசம் இரண்டையும் அடக்கி'சுழுமுனா மார்க்கத்திலே பிராணவாயுவைச்சலனமற நிறுத்தி விடயங்களின் வழி மனதைச் செல்ல விடாது மீட்டு மூலாதர முதலிய ஆறு ஆதாரங்களையும் உணர்ந்து அவற்றின் அதிதேவதைகளைத் தியானித்து, விநாயகர் முதலிய தேவதைகளைப் பொருந்திப் பிரம்மரந்திரம் வரையில் சென்று அணைந்து அப்பிரம்மரந்திரத்தின் கண்ணதாகிய தாமரைமுகையை அலர்வித்து அதன் கேசாக்கிரத்திலுள்ள சந்திரமண்டலத்தை மூலாக்கினியினால் இளகப்பண்ணி அதன் வழியாக் வொழுகும் அமிர்தத்தைத் தேகமுழுதும் நிரப்பிப் பூரணப் பிரகாசத்தைத் தியானித்தல் முதலியனவாம்.

ஞானமாவது: - எல்லாக் கலை ஞானங்களும், புராணங்களும் வேதசிவாக மங்களிலுள்ள கர்மகாண்டங்களும், ஏனை நூல்களும், மற்றச்சமய சாஸ்திரங்கள் பலவும் ஆராய்ந்து பலவழிப் படுகின்ற பொருள்கள் முழுதும் கீழெனக்கண்டு கழித்து, மேலானபதி, பசு, பாசம் என்னும் முப்பொருளையும் தடக்கலக்கிணத்தில் வைத்து வகுத்துணர்த்தி, அம்மூன்றனுள் பதிப்பொருள் ஏனை பாச பசுக்க ளுக்கு மேலா தல் இனிது விளங்க சொரூபலக்கணத்தில் வைத்து உணர்தலாகிய நல்வழிக்கு ஏதுவான ஞானகாண்டத்தை ஓதல், கேட்டலுடன் சிந்தித்தல், புறத்தொழில் அகத்தொழில் இரண்டு மின்றி அறிவுத்தொழில் மாத்திரையானே அகண்டகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நிற்கின்ற சிவத்தினிடத்துச்செய்யும் வழிபாடாம், இருந்தவா ற்றான், "ஞான நூல் தனை ஓதல், ஓதுவித்தல். நற்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல், நன்றா ஈனமிலாப் பொருள தனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடை விக்கும் எழில் ஞானபூசை" என சிவஞானசித்தி கூறியதூஉம் என்க, ஆகலான் இறைவனடியாகிய திருவருட் செல்வத்தையடைதற்கு முக்கிய ஏது வாகிய இஞ்ஞான பூசை உலகத்து மக்கள் உயிர்கட்கெல்லாம் இன்றியமையாததாய், உயிரினும் சிறந்ததாய், ஓம்பப்படல் வேண்டுமென்று கரதலா மலகம் போல் விளங்கிக் கிடத்தலின், அவ்வாறாகிய வுபகாரத்தை உயிர்கட்குச் செய்தலினும் மிக்க பேர்அறம் இவ்வுலகத்து எக்காலத்தும் யாண்டும் இல்லை யென்பது முக்காலத்தும் ஆன்றோரால் அங்கீகரிக்கப்படுவதொன்றேயாம். இவ்வுண்மை நோக்கியன்றோ இச்சமாசத்தார் பல தமிழ் நாடுகளினுஞ் 'சென்று வருடந்தோறும் ஞான நூல்களைக் கேட்டல், கேட்பித்தல் ஆதியனவாகிய திருவருட் செல்வத்தை யெய்து விக்கும் அப்போறத்தை அறிந்து உஜ்ஜீவிக்கும்படி போதித்து வருகின்றார்கள். இத்தகைய திருப்பணியைச் செய்தற்கும், தத்தம் சத்திக்கிசையச் செய்பவர் கட்கும் உதவி செய்து தூண்டி விடுதற்கும் மிக்க உரிமை யுடையவர்கள் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்து மகாசந்நிதானம், பரம்பரை தருமபுரஆதீனத்து மகாசந்நிதான முதலிய மடாதிபதிகள் அன்றோ? அப்பெரியாசிய குரு மூர்த்திகளின் சந்நிதானத்தில் நாம் எல்லாம் ஒருங்கு திரண்டு சென்று நம்முடைய உண்மைக் கருத்தை விண்ணப்பம் செய்து கொண்டால் அக்காருண்ய மூர்த்திகள் நமது சமாசத்தின் கருத்து அதிவிரைவில் முற்றுப்பெற்று உலகத்திற்குப் பெரும் பயன் சித்திக்குமாறு வேண்டிய வுதவி புரிந்து ஊக்கிவிடுவார்கள் அன்றோ? அவ்வணம் செய்யாது இது காறும் யாம் தாமதத்திலிருந்தது நம்முடைய குறையேயன்றி பிறிதன்று.

அன்பர்காள்: - செல்வமாவது பொருட்செல்வம், கல்விச்செல்வம்; அருட்செல்வமென மூவகைப்படும் என்பதூஉம், பொருட்செல்வத்தினும் கல்விச்செல்வம் உயர்ந்தது என்பதூஉம், அவ்வருட்செல்வமே உயிர்கட்கு மிக்கப்பேறாய் உள்ளது என்பதூஉம், அதனையடையும் மார்க்கம், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதூஉம், அந்த ஞானத்தையே இச்சபையார் வருடந்தோறும் யாவர்க்கும் போதித்து வருகிறார்கள் என்பதூஉம், அதற்கு உரிமை பூண்டுள்ளார் மடாதிபதிபதிகளே என்பதுஉம், அத்தகைய பெரியோரையடுத்து அவர் உதவி பெற்று நாம் இதனை விர்த்தி செய்யக் கருதலே அதிசீக்கிரம் நம்முடைய கருத்து முற்றுப் பெறுதற்கு ஏது என்பதூஉம், அதனை விரைந்து செய்தல் வேண்டுமென்பதுஉம் கருத்து.

W. T. கோவிந்தராஜ் முதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment