Saturday, May 9, 2020



காயும் கனியும்
[ந. வீ. செயராமன் எம். ஏ.,]
விரிவுரையாளர், தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

நீரார் கெடில வடநீள்கரையில் நீடுபெருஞ் சீரோடும் சிறப்போடும் நின்று பொலியும் திருவதிகைத் திருப்பதி, திருகின்ற செம்மையே செம்மையாக் கொண்டொழுகிய திருநாவுக்கரசர் வாழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர் புடையதாகும். ஒன்னார்புரங்கள் செற்றவர் வாழும் அத்திருவதிகைப் பதியில், 'கூற்றாயினவாறு விலக்ககிலிர்' என்று நாவுக்கரசர் பாடிய முதல் பதிகத்தை வழியொற்றிதாள் இணைகொள் ஏழெழுநூறு இரும்பனுவல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்தன. அலகில் கலைத் துறை தழைப்ப, அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில்வரும் இருள் நீக்க வந்த மருணீக்கியார், நாவுக்கரசர் என்று நாமம் பெற்றுச் சிறந்ததும் இத்திருப்பதியில் தான்.

'தென் திசைக் கங்கை' எனப் போற்றப்படும் செல்வப் புனல் கெடிலநதி சந்தினோடு காரகில் சுமந்து. தடமா மலர்கள் கொண்டு வந்து பாய்கின்ற வளம் பொருந்தியது இத்திருப்பதி. மேலும் அட்ட வீரட்டங்கள் எனக் கூறப்படுபவற்றுள் ஒன்றாக இத்திருப்பதி இலங்குகின்றது.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம் காமருசீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர் திக்கிடமாங்
கோவல் நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டை குடி வீரட் டானமிவை கூறி
நாவில் நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன் தமரென் றகல்வர் நன்கே.

என, நாவுக்கரசர் அட்டவீரட்டானங்கள் இன்னின்னவை என ஒரு பாடலில் அழகாகக் குறிப்பிட்டுள்ளது ஈண்டு அறியத் தக்கது. இவற்றுக்கெல்லாம் மேலாக, நடுநாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் இருபத்து இரண்டனுள், அதிக எண்ணிக்கையுள்ள பதிகங்களால் - பதினெட்டுப்  பதிகங்களால் பாடப் பெற்றது இத்திருவதிகைத் திருப்பதி ஒன்றேயாகும்.

இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய திருவதிகைத் திருப்பதியில் தான் நாவுக்கரசர் சைவ சமயத்திற்குச் சார்ந்தார். அன்னையும் அத்தனும் அகன்ற பின்னர், தம்பியார் உளராக வேண்டும் என வைத்த பெருங்கருணையினால் திலகவதியார் வாழ்ந்தார். தம்பிக்காக உயிர் தரித்த அத்தவச் செல்வியால் தம்பியின் புறச்சமயச் சார்பைத் தடுக்க இயலவில்லை. நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாத காரணத்தால் கொல்லாமை மறைந்துறையும் அமண சமயத்தைச் சார்ந்தொழுகிய நாவுக்கரசர், அச்சமயத்து நூல்களைக் கற்றுணர்ந்து, தேரர்களை வாதில் வென்று தருமசேனர் என்ற சிறப்புப் பெயரோடு சிறப்பாகத் தான் வாழ்ந்திருந்தார். ஆனால் அச்சிறப்பு வாழ்வெல்லாம் போலி வாழ்வு என்ற உண்மையை உணர பெருஞ்சூலை'நோய் வேண்டியிருக்கின்றது. வடவனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம் கொடிய எலாம் ஒன்றாகுல எனறு சூலைநோய் நாவுக்கரசரின் குடலைக் குடைந்த போது தான் தன் நல்வாழ்விற்காகவே வாழ்ந்துவரும் தமக்கையார் நினைவு வருகின்றது நாவுக்கரசருக்கு. புலர்வதன் முன் திருவலகு பணிமாறிப், புனிறகன்ற நலமலி ஆன்சாணத் தால் நன்கு திருமெழுக்கிட்டு, மாலைகள் தொடுத்தமைத்துப் பணி செய்த தவச்செல்வியைத் திருவதிகைப் பதியிலே நாவுக்கரசர் சந்திக்கின்றார். தொண்டர் பிழைபொறுப்பது இறைவனுக்குரிய சீரிய பண்பன்றோ?

'பழையதம் அடியார் செய்த பாவமும் பிழையுந் தீர்ப்பார்'
என்பிழை பொறுப்பானைப் பிழையெலாந்தவிரப் பணிப்பானை'

என்றெல்லாம் இறைவனின் அடியார் பிழை பொறுக்கும் பண்பை நாயன்மார்கள் நாவாரப் போற்றுகின்றார்கள். பிழை செய்த நாவுக்கரசருக்கும் நல்வாழ்வளிக்கின்றான் இறைவன்.

திருவதிகை இறைவனைக் கண்டு மகிழ்ந்தார் நாவுக்கரசர். இறைவனின் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால்வெண் ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கண்ட நாவுக்கரசர், இறைவனின் தோற்றப் பொலிவிலே இதயத்தைப் பறிகொடுத்தார். காதலாகினார்; கசிந்தார்; 'கூற்றாயினவாறு விலக்ககிலிர்' என்று கண்ணீர் மல்கப்பாடினார். நாவுக்கரசரின் நோய் தீர்ந்தது. நல்லாறு கண்டுணர்ந்த நாவுக்கரசர் இறைவனின் பொருள் சேர் புகழினைப் பாடிப்பரவுகின்றார்.

நாவுக்கரசர் பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றி வருங்காலையில் திருவாரூர் நகருக்கும் அவர் வருகை கிடைத்து. தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும் கொண்டு நகருக்குள் புகுந்தார் நாவுக்கரசர். அன்னம் வைகும் வயற்பழனத்தணி ஆருரனைக் கண்ட நாவுக்கரசர் இறைவனின் தோற்றப் பொலிவிலே சிந்தையைப் பறிகொடுத்துப் பாடிப் பரவுகின்றார். மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனி யானைக்கண்டு மெய்யெலாம் புளகமுறப் போற்றுகின்றார். அந்நிலையில் இறைவனின் பெருமையை இதுவரை எண்ணாது தன் வாழ்நாளைக் கொன்னே கழித்த நிலை பற்றி நாவுக்கரசர் மனம் கவல்கின்றார்.

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்றெண்ணி உறி தூக்கி
உழிதந்தெ னுள்ளம் விட்டு
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ
மயிலாலு மாரூரனைக்
கையினால் தொழாதொழிந்தே கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வனேனே.

என்று நாவுக்கரசர் உள முருகப் பாடுகின்றார். தான் சமண மதத்தைச் சார்ந்து தருமசேனர் என்ற பெயரோடு வாழ்ந்த நிலையைக் காய் என்றும், தற்பொழுது சைவ சமயத்தைச் சார்ந்து நாவுக்கரசா எனற பெயரோடு வாழ கின்ற நிலையைக் கனி என்றும் இப்பாடலில் அவர் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாவுக்கரசர் ஆரூர் இறைவனை இப்பாமாலை கூறிப் பாடிப் பரவியதைக் குறிப்பிடுகையில்,

செய்யமா மணி ஒளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலா மலர்ச் சோலைக் குயில் கூவ
மயிலாலும் ஆரூரனைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வனேன் என்று
எய்தற்கரிய கையறவால் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.

எனச் சேக்கிழார் பெருமான் தித்திக்கும் செந்தமிழில் குறிப்பிட்டுள்ளது அறியத் தக்கதாகும். எய்தற்கரிய கையறவால் நாவுக்கரசர் இத்திருப்பதிகத்தைப் பாடினார் எனச் சேக்கிழார் சுவாமிகள் மிக அழகாக நாவுக்கர சரின் உளநிலை அறிந்து கூறுவது உவகை தருவதாகும்.

நாவுக்கரசர் கனியும் காயும் என்ற தொடரை திருக்குறள் பயிற்சியால் பெறமுடிந்தது என்று கூறலாம். திருவள்ளுவர் இனியவை கூறலின் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகின்ற பொழுது,

இனிய வுளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

என்று கூறியுள்ளது அறியத்தக்கதாகும். அறம்பயக்கும் இனிய சொற்களும் தனக்குளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல் இனிய கனிகளும் தன்கைக் கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாதகாய்களை நுகர்ந்தனோடொக்கும் என்று அதற்கு உரை கூறுவர். மேலும் இக்குறளின் விளக்கவுரையில் இனிய கனிகளென்றது ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தானவற்றை என்றும் இன்னாத காய்களென்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை என்றும் பரிமேலழகர் விளக்கம் கூறியுள்ளார். வள்ளுவர் ஆண்ட சொற்றொடரை மிகச் சிறந்த இடத்தில் வைத்து வாகீசர் போற்றுகின்ற பெற்றி, அறிந்து இன்புறத் தக்கதாகும்.

இறைவனின் உண்மை நிலையை உணர்ந்து பாடுகின்ற நாவுக்கரசரின் இப்பாடலிலே அனைத்து நலங்களும் சிறக்கக் காண்கின்றோம். நவிறொறும் நவிறொறும் இப்பாவின் நயம் மேலும் மேலும் சிறந்து விளங்குகின்றது. பொருள் நலமும் அணிவளமும் பொதிந்து கிடக்கும் இத்தகைய பாடல்களைக் கற்றுணர்தல் வேண்டும்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment