Saturday, May 9, 2020



காயத்ரி மகாமந்திரம்.
     
வேதசம்பந்தமான நித்திய கர்மங்களாகத் துவிஜர்களுக்கு ஏற்பட்டிருப்பனவற்றுள் காலை மாலை சந்தியாவந்தனம் முக்கியமான கர்மமாம். சந்தியாவந்தனம் என்னப்படுவது ஈஸ்வர ஆராதனையேயல்லாமல் மற்றொன்றுமல்ல. பிற கர்மங்களைப் போலவே,  சந்தியாவந்தனத்திலும் அங்கி அங்கம்; முக்கியம் கௌணம்; உயிர்ப்பாகம், உடற்பாகம் என்பன உண்டு. அர்க்கியம், அபித்தியாகம், ஜபம், உபஸ்தாநம் என்பவை முக்கியமானவை யென்றும், ஆசமநம், சங்கல்பம், மார்ஜநம், தர்ப்பணமாதியவை கௌணமானவை யென்றுஞ் சொல்லப்படுகின்றன. கௌணம் என்பது உபயோகமற்றது என்று பொருள்படுவதாகக் கொள்வது பிசகு. மற்றதை நோக்கி இது அமுக்யமென்று கொள்வதே சரியாகும்.
    
காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னும் அரிஷட்வர்க்கங்களாகிய மந்தேஹர்கள் என்னும் அசுரர்கள், ஆன்மாவாகிய ஞானசூரியனை யோட்டியப்புறப்படுத்துவதற்காக காயத்ரீ மந்திரத்தைத் தியானித்து உச்சரித்து அம்பு எய்வதின் அறிகுறியாக ஜலத்தைக் கையிலேந்தி எறிவது அர்க்கிய பிரதானமாகும். இது மார்ஜநம், ஆசமநம், பிராணாயாமம் முதலிய கிரியைகளினால் பிராணன், வாக்கு, காயங்களைப் பரிசுத்தப்படுத்திப் பிறகு காயத்ரீ மந்திரத்தால் மனத்தூய்மை யெய்தச் செய்து கொள்வதாம்.
    
மனத்தூய்மையெய்தி, மன அலைகள் ஓய்ந்தபின் (சித்தவிர்த்திகள் ஒடுங்கியபிற்பாடு), ஆதித்தன் முதலான வெளிப்பிரபஞ்சத்தில் அந்தர்யாமியாயுள்ள பரமாத்மாவும், சந்தியா உபாசகருடைய அன்னமய, பிராணமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களுக்குள்ளிருக்கும் ஆன்மாவும் ஒன்றே, இரண்டல்ல வென்னும் உள்ளுணர்வடைதல் அபித்தியாநமாம்.
    
ஜெபமாவது - மேலே தெரிவித்தபடி ஒன்றான உள்ளுணர்ச்சியுண்டாக, அவ்வுணர்வின் பொருளாகிய ஈசுவரனைத் தியானிப்பது. இதுவே காயத்ரீ ஜெபம். இம்மகாமந்திரத்தின் கருத்து சர்வஜீவர்களுக்கும் தேஜஸ் அளிப்பவரும், பிரபஞ்சமெல்லாஞ் சிருஷ்டிக்கின்றவரும், எவராலும் பூசனை செய்யப்படுபவரும், எமது புத்தியைப் பிரேரணை செய்கிறவரும், நன்னெறியில் நடத்துகின்றவரும் ஞானப்பிரகாசருமாகிய அந்த ஈசுவரனைத் தியானம் செய்கிறோம் என்பதே. பிரபஞ்சத்திலுள்ள சர்வவித்தைகளும் வேதங்களில் அடக்கமாயிருக்கின்றன. வேதங்களோ காயத்ரி மந்திரத்துளடக்கம். காயத்ரியோ பிரணவத்துளடக்கம். இதுவே உபநிஷத்துக்களின் துணிபாகும்.
      
காயத்ரீ மந்திர உண்மையுணர்ந்த குருவானவர் உபநயன சம்ஸ்கார காலத்தில் சிஷ்யனுக்கு உபதேசிப்பார். இதற்கு பிரம்ஹ வித்யை யென்று பெயர். பூர்வகாலத்தில் இஃதுபதேசிக்கப்பட்ட ரகசிய முறையைக்காட்டும் வண்ணம், தற்காலத்திலும், உபதேசிக்குஞ் சமயத்தில் பட்டையேனும் அல்லது வேறு சுத்த வஸ்திரத்தையேனும் ஆசாரியனும் சிஷ்யனும் போர்த்துக்கொண்டு, ஆசாரியன் சிஷ்யனுடைய காதில் உபதேசிப்பதுண்டு. இப்பட்டுப் போர்வையானது, பிரம்ஹ வித்யையை உபதேசிக்கப் பெறுபவன் துவிஜனாகின்ற வாற்றால், அந்த கர்ப்பப்பையைச் சூசிப்பிக்கிறதேன்றுங் கொள்ளலாம்.
      
காயத்ரி மந்திரமானது மந்திரங்களுக்குள் மிகச்சிரேஷ்டமானது. இதைக் கிரமப்படி உச்சரித்திடுவோர் தாம் நலம்பெறுவதோடு உலகமுழுவதும் நலம்பெறச் செய்கின்றவராவர்.  

"எங்களுடைய புத்தியைப் பிரேரணை செய்து நடத்துகின்ற பிரகாசமான அந்த ஞானசூரியனுடைய திவ்வியஜோதியைத் தியானிக்கின்றோம்'' - என்பதே காயத்ரீ மந்திரத்தின் சுருக்கமான அர்த்தம். இதைத் தியானிப்பவன் சர்வஜீவராசிகளுடைய நன்மையும் பிரார்த்திக்கின்றானென்பது பன்மைகளினால் வெளிப்படும்.
      
இம்மந்திரத்தை உச்சரிப்பதற்குமுன் மூன்று அல்லது ஏழு வியாகிருதிகளை உச்சரிக்கவேண்டும். இவை மந்திர உண்மைகளைக் காட்டுந் திறவுகோல்களாகும். பூ : புவ : ஸுவ - என்பனவே மூன்று வியாகிருதிகளாகும். இவை மனிதனுடைய ஸ்தூல, சூக்கும, காரண மாகிய வியஷ்டி சரீரங்களையும்; வைஸ்வாநரன், ஹிரண்யகர்ப்பன், ஈஸ்வரன் என்ற சமஷ்டி சரீரங்களையும்; ஜாக்ரத ஸ்வப்ன, ஸுஷூப்தியாகிய மூன்றவஸ்தைகளையும் பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்னும் மூன்று லோகங்களையுங் குறிக்கின்றன. பூ : புவ : ஸுவ : மஹ : ஜந : தப : ஸத்யம் - என்பவையே ஸப்தவியாகிருதிகளாகும். இவை மனிதனுடைய ஸப்த அம்சங்களையும், பிரகிருதியின் ஸப்த நிலைமைகளையும், ஸப்தலோ கங்களையுங் குறிக்கின்றன.
    
ஜபஞ்செய்யுங்காலத்தில் உபாசகனானவன் விராட்புருஷனிடம் ஒருமைப்பட்டு மூன்று அல்லது ஏழு லோகங்களுடன் தன் மூன்று சரீரங்களை அல்லது ஏழு அம்சங்களை முறையே சாந்தமாகவும் நேர்மையாகவும் பொருந்தும்படி செய்து கொண்டு, தன் இருதயத்துள்ள ஆன்மாவாகிய ஞானசூரியனிடத்தி லிருந்து சர்வலோகங்களிலு மிருக்கும் ஜீவராசிகளுக்கு ஸந்துஸ்டி, ஞானம். சாந்தமிவையுண்டா கவேண்டுமென்று ஒரே மனோநிலையில் நின்று சிதறாது தியானஞ் செய்யவேண்டும். இங்ஙனம் பக்தியுடன் உண்மையுணர்ந்து சூரியனை யுபாஸிக்கின்றவனே பிராம்மணனாவான்.
    
பிருஹதாரண்ணிய, சாந்தோக்ய, ஸூர்யோப நிஷத்துகளில் காயத்ரீ உபாசனாமுறை நன்கு சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீசப்தம் ஸ்திரீலிங்கமாவதால் ஈஸ்வரப் பிரதிபாதகமான மந்திரமாயிருந்தாலும், தேவியாக உபாஸிக்கப்படுகிறது. இம்மந்திரத்தியானம் - காலையில் சிவப்புவஸ்திரமணிந்த காயத்ரீ தேவதையாக, மூலாதாரத்தின் கண்லக்ஷியம் வைத்தும்; மத்தியானத்தில் வெள்ளை வஸ்திரமணிந்த சாவித்ரி தேவதையாகப் புருவமத்தியிலும்; சாயங்காலத்தில் நீலவஸ்திரமணிந்த சரஸ்வதிதேவியாக இருதயத்திலும் - நிகழ வேண்டும், (மாத்தியாந்நிகம் வேதத்தில் விதிக்கப்பட்டதல்ல, ஸ்மிருதிப்புரோக்தமாம்.)
    
சாதாரணமா யுபதேசிக்கப்படும் காயத்ரிக்கு மூன்று பாதங்களுள. இதை த்ரிபாதகாயத்ரி என்பதுண்டு : இது சகுணம் மூன்றும் முறையே பூலோக, புவர்லோக ஸுவர்லோகமென்று உபலக்ஷணமாகக் கூறப்பட்ட திரிபுடி சம்பந்தமுடையன. இந்தக் காயத்ரியுபாசனை செய்வோன் கர்மயோகி : என்றால், சகல கர்மங்களையும் தனக்கெனச் செய்யாமல் பிறருடைய நலத்தைக்கோரி ஈஸ்வரார்ப்பணமாகச் செய்கின்றவன். பிரம்மச்சாரி, கிருகஸ்தன், வானப்பிரஸ்தன் என்னும் முதல் மூன்று ஆஸ்ரமிகளும் இந்த காயத்ரி உபாசனைக்கு அதிகாரிகளாவர். நான்காவது ஆஸ்ரமத்தனாகிய சந்நியாசி திரிபுடியையும் திரிலோகங்களையுந் தாண்டினவனாதலால் த்ரிபாத காயத்ரியுபாஸனை அவனுக்கு முக்கியமல்ல. அவன் சதுஷ்டிபாத காயத்ரிக்கு அதிகாரியாவான்.

காயத்ரியை ஸ்திரீரூபமாக உபாசிப்பதில் ஈஸ்வரனுடைய அபின்ன பராசக்தியா யுபாசிக்கவேண்டும். கேனோபநிஷத்தில் உமாதேவியே காயத்ரியெனப் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

   திருமந்திரம்:-

காயத்திரியே கருது சாவித்திரி
      யாய்தற் குவப்பர் மந்திரபாங்குன்னி
      நேயத்தேரேறி நினைவுற்று நேயத்தாய்
      மாயத்துட்டோயா மறையோர் கடாமே.

என்று கூறுகிறது. ஸ்வேதாஸ்வதரோப நிஷத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தேவாத்மசக்தியும், கீதையில் ஏழாவது அத்தியாயம் ஐந்தாவது ஸ்லோகத்திற் கூறப்பட்டுள்ள பரப்பிரகிருதியும் காயத்ரியேயாம்: -

விஸ்வகர்மன்.

சித்தாந்தம் – 1913 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment