Saturday, May 9, 2020



காமாட்சி திருமணம்*

[ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள்]

* இது தைப்பூசத்தன்று பரிபூரணம் எய்திய ஸ்ரீலஸ்ரீ சிவசண் முகமெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் திரிசிராப்பள்ளியில் நடைபெற்ற திருவளர் செல்வி - ர. காமாட்சியம்மையார் திரு மணத்தில் வழங்குவதற்கெனத் தமது திருக்கரத்தால் எழுதி அச்சிடுவித்த கட்டுரை. சுவாமிகள் கடைசியாக எழுதிய கட்டுரை இஃதேயாகும்.

உலகங்கண்ட அறிவினுயர்ந்தோர் உலகங்கொண்டே இவ்வுலகத்தைப் படைத்துக் காத்து ஒடுக்கும் கடவுள் ஒருவர் உண்டென்று நிச்சயிக்கின்றனர். அக்கடவுள், உண்மை அறிவு இன்பம் ஆம் வடிவுடையார். அவர் எங்கும் இருப்பவர்; எக்காலத்தும் இருப்பவர் : எல்லாஞ் செயவல்லவர்; எல்லாம் அறிபவர். பலவான் சத்திமான் என்று உலகிற் பேசப்படுவதை நிகர்த்துக் கடவுளும் சத்திமான் எனப்படுவர். கடவுள் ஒருவரே சத்திமான் சத்தி என இருகூறாயினர். “பெண்ணாகிய பெருமான்” என்றார் ஞானசம்பந்தர். "பெண்ணாகி அணய்" என்றார் மாணிக்கவாசகர். இன்பங் குறைந்த நிறைந்த துன்பமுடைய உயிர்களாகிய நாம் ஆண் பெண் ஆம் இரண்டுருவம் எடுத்திருத்தலால் நம்மைக் காக்க, அவரும் ஆண் பெண் ஆம் உருவம் இரண்டு கொண்டனர். போகத்தையும் மோக்ஷத்தையும் உயிர் கட்குத் தருபவர். அவர் கோர வடிவங்கொண்டு உயிர் களின் வினையைப் போக்குவர்; யோக வடிவங்கொண்டு யோக ஞானங்களைத் தருவர். அவர் போக வடிவங் கொண்டு போகத்தை யூட்டுவர். உயிர்களாகிய நாம் போகம் அனுபவித்தற்காக அவர் போகி ஆகின்றனர்.

"தொண்டனேன் புணருமா புணரே''
"தொண்டனேன் விரும்புமா விரும்பே'
தொண்டனேன் நினையுமா நினையே''

என்பவை திருவிசைப்பா. 

'போகியா யிருந்துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்''

என்பது சித்தியார்.

"ஒருமுகம்,
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளி யொடு நகையமர்ந் தன்றே"

என்பது திருமுருகாற்றுப்படை காமநுகர்ச்சியில்லாத இறைவன் இங்ஙனம் நகையமர்ந்தான், உலகில் இல் வாழ்க்கை நடத்தற்கென் றுணர்க" என்பது மேற் கண்ட திருமுருகாற்றுப்படை யடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய விசேடவுரை.

"ஒருகை, நீணிற விசும்பின் மலி துளி பொழிய,
ஒருகை, வானர மகளிர்க்கு வதுவை சூட்ட''
என்பது திருமுருகாற்றுப்படை.

மேற்கூறிய அடிகளின் நச்சினார்க்கினியர் விசேட வுரை:'' என்றது, வள்ளியொடு நகையமர்ந்த முகம் உலகிற்கு இல்வாழ்க்கை நிகழ்த்துவித்ததாகலின் அவ்வில் வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை, ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த்தற் பொருட்டு மணமாலையைச் சூட்டிற்று என்றவாறு” ஆம்.

உயிர்களாகிய நாம் திருமணஞ்செய்து சுத்தபோகத்தைத் துய்த்துப் போகத்தின் தன்மை இத்தன்மைத் தென்று உணர்ந்து, மும்மலத்தினின்றும் நீங்கி முழு இன்பத்தையும் பெறுதற்காகவே கடவுளும் ஆணும் பெண்ணுமாகி மணஞ்செய்து கொண்டனன்.
''வியனுலகம் வாழச்
செவ்வண்ணப் பெருமானார் மணவினையிற்
றிருவுள்ளம் பற்றினாரால்''

மண்டா ணவத்தின் தருக்கிரித்து
மாறா இன்பப் பெருவாழ்வு
கண்டார் கதுவ அருள் கொழிக்குங்
கவுரி மணத்தின் திறம்புகல்வாம்''

என்பன காஞ்சிப் புராணம், காமாட்சியம்மையார் தழுவக் குழைந்த படலத்திலும் திருமணப்படலத்து முள்ளவை. எனவே, கடவுள் மணஞ்செய்துகொண்டு நம்மை மணஞ் செய்விக்கின்றார் என்பது பெறப்படும்.

நம் நிமித்தம் ஸ்ரீ ஏகாம்பரநாதனார் செய்து கொண்ட
காமாட்சி திருமணம்

உலகெலாம் உய்தற்காக மந்தரமலையில் பெருமான் எழுந்தருளிய காலத்தில் விளையாட்டாகப் பின்புறம் வந்து பெருமாட்டி, பெருமான் கண்களைப் புதைத்தாள்; உலகங்கள் இருண்டன; கலவியின்பந் தொலைந்தன; நூற்கேள்வி மயங்கின; அறிவின் தேர்ச்சி மறந்தன; கடவுட் பூஜை துறந்தன உலகமெல்லாம். பலர் வேண்ட அம்மை கரங்களை விட்டாள். விழி திறந்தார் ஐயர். அம்மையை நோக்கி “எமது விழியை நீ புதைத்ததால் கடவுட் பூசை முதலிய நல்லவை நிகழவில்லை. அதனால் தீமை நின்னை உற்றது. நீ பிராயச்சித்தம் செய்துகொளல் வேண்டும். எமை யருச்சித்தல், எமை நினைத்தல், எமைத் துதித்தல், எம்பேர் செப்பல், எம்அடியரை வழிபடல் இவைகளே எவ்விதத் தீமையினையும் நீக்கும் பிராயச் சித்தங்கள். ஆதலின் சால நமக்கினிய காஞ்சீபரன் சென்று நம்மைப் பூசித்தல் முதலியன செய்” என்று ஏவ, அம்மையும் தாதிகளோடு காஞ்சியையடைந்தனள். உமாபத்திரம் எனும் தீர்த்தம் அடைந்து முழுகித் திருநீறணிந்து, உருத்திராக்ஷம் பூண்டு, பஞ்சாக்ஷரம் சொல்லி இறைவனையடைந்து தரிசித்தாள்; பூசித்தாள்; முப்பத் திரண்டு அறங்களையும் வளர்த்தாள். இங்ஙனம் நிகழும் நாள்களுளொருநாள் எப்போதும்போலக் கம்பையாற்றின் நடுவில் பூசிப்பாள். ஒரு திருவிளையாடலைச் செய்ய இறைவர் எண்ணினார். உலகிலுள்ள எல்லாத் தீர்த்தங்களும் அக்கம்பையில் வர எண்ணினார். வந்தது வெள்வம். மலையிற் படும் வளங்கள் முதலியவற்றை வாரிவரும் வெள்ளங் கண்டு அம்மை பயந்தாள். “விடையவன் பூஜை மத்தியில் வந்ததே. எம்பிரான்மிசை நண்ணுமே. இனிச்செய்வதென்” என அன்பால் எண்ணி; ஒரு கொடியிலுள்ள இரண்டு கொழுந்துகள் ஒரு மலைச் சிகரத்தை இருபுறமும் தழுவினாற்போன்று பூசாவேதி யில் தன் வல முழந்தாளை ஊன்றி இருகையாலும் ஏகாம்பரநாதராம் தன் கணவரைத் தழுவிக் கொண் டாள் காமாட்சி அம்மை. தழுவவே பெருமான் திருவுரு குழைந்தது. வளைத் தழும்பினோடு முலைச் சுவடு அணிந்தார் ஐயர். உலகமெலாங் களித்தன. அம்மை பூசித்த இலிங்க வடிவத்தினின்று இறைவன் உருக்கொடு தோன்றி அம்மையைக் கண்டு “மகிழ்ந்தனம்" என்றார். இறுகக் கட்டிய இரண்டு கைகளையும் விட்டுக் குவித்துக், கும்பிட்டுத் தோத்திரிப்பாள். இறைவன், "காளீ" (கரிய நிறமுடையவளே) என அழைத்து,“வேண்டியது கேள்" என்றனன். இக் காஞ்சி வசிப்போர் நாற்பயனும் பெறவேண்டும் எனக் கேட்டனள். அங்ஙனமே இறைவன் அருளி, “இன்னும் வேண்டியதைக் கேள்” என்றனன்.

அப்பொழுது அம்மையார் “காளீ என்றழைத்தருளினீர் முன்னே மந்தர மலையில். அங்ஙனமே இப்பொழுதும் அழைத்தீர். காளி (கருநிறமுடையவள். காளம். கருமை) எனும் பெயர் நீங்கக் கவுரி (கவுரம் - பொன். கவுரி - பொன்னிற முடையவள்) என அடியேன் பெயர்பெற அருளல் வேண்டும்" என்றனள். அங்கனமே இறை அருளினன். கருநிறம் நீங்கிப் பொன்னிறம் பெற்றாள். காளி என்பது போய் கவுரி என்றழைக்கப் பட்டாள் காமாட்சி. இறைவர் “முன்பே குறு மூணிவன் வேண்டினான். நாமும் வரந் தந்துளேம். இக் காஞ்சியில் பங்குனிமாத உத்திர நக்ஷத்திரத்தில், கவுரி யாகிய காமாட்சியே ! நின்னை மணப்பேம் " என்று சொல்லித் திருமணத்தில் திருவுளம் பற்றினார். மாயோனை அழைத்தனர். “காமாட்சிக்கும் எனக்கும் மணவிமாச் செய்க" எனக் கட்டளை யிட்டனர். மகிழ்ந்து அங்ஙனமே செய்ய முற்படுவார் மாயவனார். 'கவுரி திருமணம் காமாட்சி திருமணம்' என மணமுரசு அறையச் செய்தனர். அறையக் கேட்டு அகமகிழ்ந்தார் கேட்டார் எல்லாம். ஏகாம்பர நாதர் திருவருள் பெற்றுத் திருவிழா நடத்தி ஒன்பது நாள் ஆன பின்னர் பத்தாம் நாள் ஆம் பங்குனி உத்தரத்தன்று காமாட்சி கலியாணம் நடத்துவாராயினர் மாயவனார். பெருமான், மணக்கோலம் கொண்டனர். அட்ட மங்கலங்களும் அணுக அண்ணலார் கலியாண மண்டபம் வந்தனர். ஆதி இலக்குமியும் தனது கணவனார் கருத்தின்படி காமாட்சியை அலங்கரித்தாள். மேம்பட்டார்க்கு தேவ மங்கையர் சோபனம் பாடினர். அம்மை ஆதி இலக்குமியின் கையைப் பிடித்து, எழுந்து, பூமழை பொழிய, வானவர் மங்கல வாழ்த்தொலி மல்க, குடைநிழற்றக், கொடி, கவரி சாந்தாற்றி யாதியவற்றை மகளிர் ஏந்த பரவிய ஆடைமேல் மெல்ல மெல்ல நடந்து, மணமண்ட பத்திடை வந்து ஓவியக்கொழுந்தென உம்பர் நாதன் பாங்கரில் அமர்ந்தனள். திருமகளாம் ஆதிலட்சுமி தீம்பால் வார்ப்ப, அரங்கசாமியாந் திருமால் குமாரசாமியாம் ஏகாம்பரநாதன் மலரடி விளக்கி மதுப்பருக்கம் ஊட்டி மணமகன் கையில் காமாட்சி கையை வைத்து நீர் பெய்தளித்தான். ஆர்த்தன அளவிலா இயங்கள். பூமழை பொழிந்தது. பிரமன் நூன்முறை செங்கனல்வளர்ப்ப மணமகன் காமாட்சி மிடற்றில் மங்கல நாணினை வயங்கச் சாத்தினன். “திருமணத் திறங் கண்டவர் யாவரும் செழுந்தேன் பருகு வண்டென ஆநந்த வெள்ளத்திற் படிந்தார்." மங்கலம் பாடினர்.

மணமகன். - ஏகாம்பரநாதன். ஏகம் = ஒன்று, ஆம் பரம் = ஒட்டு மாமரம், நாதன் = தலைவன். (வேதமாகிய) ஒற்றை மாமரத்தடியிலுள்ள நாதன்.

காமாட்சி: காம + அட்சி = காமாட்சி. காமம் = நினைத்தவற்றை யெல்லாம் தரும், அட்சி - கண்ணை யுடையவள். அட்சம் = கண்.

காமாட்சி: கா + மா + அட்சி. கா - சரசுவதி, மா - இலட்சுமி, அட்சி = கண்ணாக உடையவள். சரசுவதியை யும் இலட்சுமியையும் கண்ணாக உடையவள். எனவே கல்வியினையும் செல்வத்தினையும் தம் அடியார்க்குக் கண்ணுற்றருள்பவள் என்பது கருத்தாம்.

காமாட்சி: க + அ + ம + அட்சி. க + அ = கா, கா + ம = காம. காம + அட்சி = காமாட்சி, க - பிரமனையும், அ - விஷ்ணுவினையும், ம - உருத்திரனையும், அட்சி = கண்ணால் படைப்பவள்.

சுவர்ணாங்கீம் ரத்நபூஷாட்யாம்
சுகஹஸ்தாம் சுசிஸ்மிதாம் |
காஞ்சீ நிவாசிநீம் வந்தே காமாட்சீம்
காம தார்த்ததாம். ||

பொன்னிற உறுப்புடையவளும் - ரத்நாபரண முடையவளும் கிளி தங்கிய கையுடையவளும் புன்சிரிப் புடையவளும் காஞ்சீபுரத்தில் வசிப்பவளும் வேண்டி னவர்க்கு வேண்டியவற்றைத் தருபவளும் ஆகிய காமாட்சியை வணங்குகிறேன்.

சித்தாந்தம் – 1942 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment