Saturday, May 9, 2020



காசி விசுவநாதர்

[முருகவேள்]

[சென்னை 'ஐயனார்புரம்' காசி விசுவநாதர் கோயிலின் கண் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் அவர்களின் தலைமையில், மாதாந்தர வழிபாட்டின்போது பேசியதனைத் தழுவியது. (26-8-1962)]

முன்னுரை:

இந்நாளில் நாம் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு (National Integration) குறித்துப் பெரிதும் முயன்று வருகின்றோம். அதற்குரிய வழிவகைகளைப் பற்றிப் பெருந் தலைவர்கள் பலரும் ஆராய்ந்து வருகின்றனர். இதனை நம் முன்னோர்கள் சமயத்துறையில் தொன்னெடுங்காலமாகவே வற்புறுத்திக் கடைப்பிடித்து வந்துள்ளனர். நாட்டின் ஒரு பகுதியிலுள்ள மக்கள் பிற பகுதிகளுக்கும் சென்று அங் கங்குள்ள மக்களோடு அன்புடன் கலந்து பழகி, ஒற்று மையை வளர்த்துக்கொண்டு இன்புற்று வாழ்தற்பொருட்டு, நம்முடைய பெரியவர்கள் பல ஏற்பாடுகளைச் சிறப்புற வகுத்திருந்தனர்.

தென்னாட்டு மக்கள் வடக்கேயுள்ள காசி முதலிய தலங் களுக்கும், வடநாட்டிலுள்ள மக்கள் இராமேச்சுரம் முதலிய தலங்களுக்கும் யாத்திரை செய்தலை, ஒரு சிறந்த சமயக் கடமையாகவும் புண்ணியச் செயலாகவும் நம் சமய நூல்கள் வற்புறுத்துகின்றன. இதனால் எத்துணையோ பலவகை நெருக்கடிகளிலும் கூட, இந்திய ஒருமைப்பாடு சிறிதும் குன்றாமல் நின்று நிலைபெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டு வருகின்றது. காசி விசுவநாதர் காசியில் மட்டுமேயன்றித் தமிழ்நாட்டிற் பெரும்பாலான கோயில்களில் எழுந்தருளி விளங்குகின்றார். அங்ஙனமே காசிப்பதியிலேயே இராமேச்சுரம் முதலிய தலங்கள் அமைந்திருக்கும் செய்தியை அதிவீரராம பாண்டியர் இயற்றியருளிய காசிகாண்டம் என்னும் நூலினால் அறிகின்றோம். காசி விசுவநாதர்க்கு இரண்டு தனிக் கோவில்கள் நம் சென்னையிலும் அமைந்துள் ளன. இந்தத் திருக்கோயில் குசராத்தியைச் சேர்ந்த பெரு மக்கள் சிலரின் பொறுப்பில், இத்துணைச்சிறப்புற நன்கினிது விளங்கி வருவது, நம்மனோர் பெரிதும் மகிழ்ந்து பாராட்டு தற்குரியது ஆகும்.

காசி எனும் பெயர்க் காரணம்:

நாம் காசி என்னும் சொல்லைப் பலகாற் கேட்டிருக்கின்றோம். அதன் பொருள் இன்னது என்பதனை நம்மிற் பெரும்பாலோர் அறியோம். கா - தேஜஸ், தேசு, ஒளி. சி - ஸ்ரீ, திருமகள். முத்தித் திருமகள் மிகவும் ஒளியோடு பொலிந்து வாழ்ந்து கொண்டிருத்தலால், 'காசி' என்னும் பெயர் பெற்றது என்பர்.

"தேசொடும் பொலிந்து முத்தித் திருமகள் உறைதல்
காசி என்று உரைப்பர்''

எனவரும் காசிகாண்டச் செய்யுள் இதனையுணர்த்தும்.

முத்தி தரும் தலங்கள் ஏழு என்பர். அவைகள் காசி, காஞ்சி, அவந்தி, மாயை, அயோத்தி, துவாரகை, மதுரை எனப்படும். அவற்றுள் மிகவும் தலைசிறந்தது காசியேயாகும். காசியை அடைவதற்கு ஏதுவாக வுதவுங் காரணம் பற்றியே, பிற தலங்களும் முத்தி வழங்கும் சிறப் தன்னால்யுடையன என்று குறிப்பிடப்பெற்றன. 'காசித்' தலத்தின் அருமை பெருமைகள் கணிப்பரியன.

''காசி மாயாபுரி அவந்தி காஞ்சி மற்று
ஓசைகொள் அயோத்தி வண்துவரை ஒப்பறும்
ஏசிலா மதுரை என்றிசைக்கும் ஏழ்பதி
மாசறு முத்தியை வழங்கும் என்பவே "

காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும்!
காசியை வழுத்தும் நாவே நாவெனக் கழற லாமால்!
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும்!
காசியை இனிது காணும் கண்களே கண்கள் ஆமால்!''

தமிழ் நூல்களில் வாரணாசி:

காசிக்கு வாரணாசி என்றும் ஒரு பெயர் உண்டு. இப் பெயரே (Benares) என ஆங்கிலத்தில் திரிந்து வழங்கு கின்றது. வாரணாசி என்னும் பெயர் மிகப் பழங்காலத்திலேயே தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. சங்க நூல்களுள், கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையின் கண்,

"தெருவின்கட்
காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு
வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில
நீ நின்மேற் கொள்வ தெவன்?''  

என வருதல் காணலாம். இங்ஙனமே ஏறத்தாழ 1800 ஆண்டுகட்கு முற்பட்டன எனக் கருதப்படும் சிலப்பதி காரம், மணிமேகலை என்னும் நூல்களினுள்ளும் 'வாரணாசி' என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. கண்ணகியை மாதரியினிடம் ஒப்படைக்கும் கவுந்தியடிகள், 'தவத் தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் மிகப் பேரின்பம் தரும் அது கேளாய்'  என விளக்கிக் கூறும் பகுதியில்,

"மத்திம நன்னாட்டு வாரணம் தன்னுள்
உத்தர கவுத்தற்கு ஒருமகன் ஆகி
உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றிப்
பெருவிறற் றானம் பலவும் செய்தான்''

என்புழி, வாரணவாசி 'வாரணம்' எனக் குறிப்பிடப் பெறுகின்றது. மணிமேகலையில் 'ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில்,

"வாரனாசிஓர் மறைஓம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்...
வார ணாசி ஓர் மாமறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியான்... "

எனவரும் பகுதிகளால், மிகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டு மக்கள் வாரணாசியைப் பற்றி அறிந்தும், அதனோடு தொடர்பு கொண்டும் இருந்தனர் என்னும் உண்மையினை உணாலாம்.

காசிமா நகரம் வரணை அசி என்னும் இரண்டு ஆறு களுக்கு இடையில் அமைந்து விளங்கும் நகரம் ஆதலின், 'வாரணாசி' என்னும் காரணப் பெயர் பெற்றது. அடைந்தவர்களின் பாவம் நீங்கத் தடுப்பது வரணை. தன்னைச் சார்ந்து சோடியவர்களின் பாவங்களை அறுப்பது அசி. பெரும்பாலும் ஆறுகள் கிழக்கு நோக்கியே ஓடும் இயல்பின. சிறுபான்மை மேற்கு நோக்கியும் ஓடும். ஆயினும் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆறுகள் மிகவும் சிறப்புடையன. வாணையும் அசியும் ஆகிய ஆறுகள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுதலின், மிகவும் சிறப்பாகப் போற்றத்தக்கன.

"சார்ந்தவர் பாவம் நீங்கத் தகைதலான் வரணை என்றும்
ஆர்ந்தநீர் படிந்தோர் பாவம் அறுத்தலால் அசி என்றும்
சேர்ந்தன நாமம், தெற்கு வடக்கதாய் உண்மை தேர்ந்தோர்
ஓர்ந்திடும் முத்தி வைப்பின் காவலாய் ஒழுகும் அன்றே"

''ஆதலின் தீமை யோர்கட்கு அடையொணாது அசியினோடு
மேதகு வரணையாறும் விழைதக ஒழுகு மாற்றால்
மாதவக் கிழமை பூண்ட முனிவர் வளங்கொள் காசிக்கு
ஏதமில் நாமம் வாரணாசி என இசைத்த தாமால் "

சிவபெருமான் பிரிவின்றி இடைவிடாது எழுந்தருளி விளங்குதலின் இதற்கு அவிமுத்தம் (விடப்படாதது) என்றும்; சிவசாரூபம் பெற்ற உருத்திர கணங்கள் பெருந்திரளாக வசித்து வருதல் பற்றி உருத்திரவாசம் என்றும்; உலகங்களெல்லாம் அழிந்தொழியும் கடையூழிக் காலத்தும் அழியாது நிலைபெறுதலின் மகாமயானம் என்றும்; தன்னை யடைந்தவர்கள் முத்திப்பேறு எய்தி ஆனந்தமாகக் கானம் செய்து கொண்டிருக்குமாறு செய்வித்தலின் 'ஆனந்த கானம்' என்றும் பலப்பல பெயர்கள் காசித் தலத்திற்கு வழங்கப்பெறும்.
திருமுறைகளில் வாரணாசி:

காசி இத்துணைச் சிறந்த தலமாயினும், அது நம் சமய ஆசிரியப் பெருமக்களால் திருப்பதிகம் பாடப்பெறவில்லை. ஆயினும்,'க்ஷேத்திக் கோவை'த் திருப்பதிகங்களில் வைப்புத் தலங்களுள் ஒன்றாக அஃது இடம் பெற்றிருக்கின்றது.

"மாட்டூர் மடப்பாச்சில் ஆச்சிராமம்
முண்டீ ச்சரம் வாதவூர் வாரணாசி...''   (சம்பந்தர்)
'' மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி...”        (அப்பர்)

திருநாவுக்கரசர் பெருமான் "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" எனத் திருக்கயிலை யாத்திரையை மேற்கொண்ட போது, திருக்காளத்தியை வணங்கினார். ஸ்ரீசைலம் இறைஞ்சினார். தெலுங்கு நாட்டைக் கடந்தார். கன்னட தேசம் எய்தினார். பின்னர் மாளவம் இலாடபூமி என்பன கடந்து, மத்திய பைதிரம் (Central Provinces) அடைந்து, வாரணாசியை வழிபட்டார். இதனை,

அன்ன நாடு கடந்து கங்கை
அணைந்து சென்று வலங்கொளும்.
மின்னு வேணியர் வாரணாசி
விருப்பி னோடு பணிந்தார்...''                 (353)
எனப் பெரியபுராணத்திற் சேக்கிழார் கூறுதல் கொண்டு தெளியலாம்.

காசியின் மாட்சி:

இத்தகைய சிறந்த காசியின்கண் சென்று சிலகாலம் வாழ்ந்து இறக்கப்பெறும் பேறு பெற்றவர்களை உமையம்மையார் தமது உத்தரியம் கொண்டு வீசிக் களைப்பு நீக்க, இறைவன் அவர்களின் செவியில் பிரணவ உபதேசம் செய்து, முத்திப்பேறு எய்தும்படி அருள் புரிவான் என நூல்கள் பல வும் கூறுகின்றன.  

"இத்தலத் தெய்தி இறக்குநர் யாரும் இளைப்பாற
உத்தரியம் கொடு மாது உமை வீசிட, உமை ஒருபால்
வைத்த அரும்பொருள், மேவரு தாரக மறைதுதி
முத்தி அளித்திடும் இப்பதிசீர்க்கொருமுடிவு உண்டோ?''

காசியம்பதி நமக்கு நெடுந்தொலைவில் எங்கேயோ இருக்கின்றது என்று எண்ணுதல் வேண்டா. "உள்ளத் தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்' என நம் திருமூலர் கூறுதற்கு ஏற்ப, நமது உடம்பின் கண்ணும் காசித்தலம் அமைந்து விளங்குகின்றது. நம் உடம்பில் இடைகலை பிங்கலை என்னும் நாடிகள் இரண்டு உள்ளன. அவற்றிற்கு இடையே சுழுமுனை என்னும் நாடியும் முதுகந்தண்டின் வழியாக ஓடுகின்றது. இடைகலை பிங்கலை என்னும் இரண்டும் வாணை அசி என்னும் ஆறுகளாக அமைய, அவற்றின் நடுவே சுழுமுனை நாடி கூடும் இடமே வாரணாசி என நூல்கள் பலவாறு கூறும்.

'இடைகலை பிங்கலை வாலை சிறந்துடன் இவைகூடும்
முடிவறு வாரணாசி நடுவுயர் சுழுமுனை என்னா
விடையம் அறுத்து உயர் மெய்த்தவம் மேவிய காபாலி
அடைவின் உரைத்தனன் இந்நகருக்கு இணையாதேயோ?''

எவ்வாறு காயத்திரிக்கு இணையான மந்திரமும், சிவ பெருமானுக்கு மேற்பட்ட தெய்வமும் இல்லையோ, அவ்வாறே காசிக்கு மேற்பட்ட தலமும் இல்லை. 'நாங்கள் காசிக்குப் போகப் போகிறோம்' என்று சொல்லிக் கொண்டிருந்தாலே, ஓர் அசுவமேதயாகம் செய்த பலனுண்டு. அங்கன மாயின், அதற்குச் சென்று வழிபட்டவர்களின் பேறு சொல்லும் தகைமையதோ? காசிக்குச் சென்று விசுவநாதப் பெருமானை வணங்கி, அங்குள்ள முத்தி மண்டபத்தில் ஒரு நொடியளவு நேரமாயினும் தங்கியிருந்து தியானித்தவர்கள், சொல்ல இயலாத பெருமை சான்ற தூய வீடு பேற்றை அடைவார்கள்.

விசுவநாதர்:

காசிப்பதியில் எழுந்தருளி விளங்கும் பெருமானுக்கு விசுவநாதர் என்பது பெயர், வீசுவம் என்றால் உலகம், அண்டம் என்பது பொருள். (Universe) என்னும் ஆங்கிலச் சொல் 'விசுவம்' என்னும் பொருளையே உணர்த்து கின்றது. இறைவன் உலகத்துக்கு அப்பாற்பட்டு மேலோங்கி நிற்பவன் (விசுவாதிகன்); இறைவன் உலகத்திற்கு நிமித்த காரணன், உலகங்களெல்லாம் அவன்பால் தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன (விசுவகாரணன்); உலகத்திலுள்ள உயிர்ப்பொருள் உயிரிலபொருள்கள் எல்லாவற்றுள்ளும் கலந்து நின்று, அவற்றை யெல்லாம் இயக்கி வருபவன் இறைவனே (விசுவாந்தரியாமி); உலகங்களையெல்லாம் தனக்குப் பருவடிவமாகக் கொண்டு விளங்குபவன் இறை வன் (விசுவரூபி). இதனை நமது அருள் நந்தி சிவாசாரிபார் தமது சிவஞான சித்தியாரின்கண்,

''உலகினை இறந்து நின்றது அரன் உரு என்பது ஓரார்
உலகவன் உருவில் தோன்றி ஓடுங்கிடும் என்றும் ஓரார்
உலகினுக் குயிருமாகி உலகுமாய் நின்ற தோரார்
உலகினில் ஒருவன் என்பர் உருவினை உணரார் எல்லாம்''

என அருளிச் செய்திருத்தலும், கண்டு அறிந்தின் புறற்பலது. விசுவாதிகன் விசுவகாரணன் விசுவாந்தரியாமி விசுவரூபி விசுவசேவியன் என்பன போன்ற இறைவனின் பலவகை இலக்கணங்களையும், விசுவநாதன் என்னும் ஒரு கொல்லே விளக்கி நிற்கவல்ல மேன்மை சான்றதாகும்.

மறைச்சிகரம்:

காசித் தலத்தின் கணிப்பரும் சிறப்புக்களையும், ஆங்கு எழுந்தருளியுள்ள விசுவநாதப் பெருமானின் அருமை பெருமைகளையும், சைவசித்தாந்தச் சான்றோர்களுள் ஒருவராகக் தலைசிறந்து திகழும் நமது குமரகுருபர அடிகளார், தார் இயற்றியருளியுள்ள காசிக் கலம்பகம் என்னும் சிறந்த நூலின்கண் அழகுற விளக்குகின்றார்.

காசியானது இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவதோடன்றி, மறைகள் எல்லா வற்றாலும் போற்றப்படும் மாட்சிமை பெற்று, அவற்றின் சிகரமாகவும் திகழ்ந்து, ஒப்புயர்வற்று ஒளிர்கின்றது.

"நகர மாய், மறைச்
சிகரம் ஆனதால் !
மகரம் மாயினான்
நிகரில் காசியே''

பிரணவ உபதேசம்:

சிவபிரான் காசியில் இறந்தவர்களுக்குப் பிரணவ உபதேசம் செய்து ஞானம் அளித்து முத்தி நல்கும் சிறப்பினைக் குமாகுருபரர் நயமுறப் பாடுகின்றார். நீரில் எழுதப்படும் எழுத்தைப் போன்று நிலையில்லாத உடலைக் காசியில் துறந்து இறந்தவர்களுக்கு,'நீ கூறுவது ஓரெழுத்து மட்டும் தானே? அவர்கள் எல்லாவற்றையும் எவ்வாறு உணர்ந்து கொள்கின்றனர்'எனக் குமரகுருபரர் வியந்தும் நயந்தும் விசுவநாதரை வினவுகின்றார். ஓர் எழுத்து - பிரணவம்.

"நீர் எழுத்துக் கொத்தவுடல் நீத்தார்க்கு, நீ நவில்வது
ஓர் எழுத்தே ! முழுதும் அவர் எவ்வண்ணம் உணர்வதுவே?''

சிவசாரூபப் பேறு:

காசியில் சென்று இறப்பவர்கள் யாவரும் சிவசாரூபம் பெறுவர் என நூல்கள் கூறும். இதுபற்றியும் குமரகுருபரர் தம் காசிக்கலம்பகத்தில் சுவை பெருகக் குறிப்பிடுகின்றார். சிவசாரூபம் பெறுபவர்கள், சிவபெருமானை போன்றே திரிநேத்திரம் காளகண்டம் சதுர்ப்புஜம் மான மழு முதலிய பல உருவ ஒப்புமைகளைப் பெறுவர். அதனால் சிவபெருமானுக்கும் சிவசாரூபம் பெற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாமல் அடியார்கள் இடர்ப்படுவர். அங்ஙனம் நேராமற் பொருட்டு, அம்பிகை சிவபெருமானின் மார்பில் தன் முலைத் தழும்புகளைப் பொறித்து வைத்து வேறுபாடு செய்தருளினள். அங்ஙனம் அம்பிகை செய்யாமற் போயிருப்பின், நாம் சிவபெருமானைக் காசியல் எவ்வாறு வேறுபிரித்து இறைஞ்சுதல் இயலும்? என்கின்றார் குமாகுருபரர்..
உடையாள் அகிலேசர்க்கு ஓங்குமுலைக் கோட்டின்
அடையாளம் இட்டுவையாள் ஆனால், - கடையில் அவர்
செவ்வண்ணம் பெற்றார் திரளொடு நிற்கின்றாரை
எவ்வண்ணம் கண்டிறைஞ்சு வேம்?"

காசியில் இறப்போர் சிவசாரூபம் பெறுவர் என்பதனை இப்பாடல் நயமுற உணர்த்துகின்றது.

முயலாமலே முத்தி நலம்:

முத்தியடைவது என்பது எளிதான செயல் அன்று. அதற்காக நாம் பெரிதும் பாடுபட்டேயாதல் வேண்டும். Heaven என்னும் ஆங்கிலச் சொல் 'அரும்பாடுபட்டு அடையத்தக்கது' (That which can be attained only by much heaving) என்னும் பொருளுடையது என்பர். செய்தற் கரிய செயல்பலவும் செய்து சிலர் எய்தற்கரிய தனை எய்துகின்றார்'' என்று திருக்களிற்றுப்படியார் கூறுதலும் காணலாம். இத்தகைய அரிய முத்திப்பேற்றினை, நாம் காசியை அடைந்தால் எத்தகைய முயற்சியும் செய்ய வேண்டாமலே, நீண்ட உறக்கத்தில் அழுந்தியே, மிக எளிதில் அடையலாம். புவனங்களைப் படைக்கும் புவனாதிபதிக ளெல்லாம்கூட நமக்குப் பணிவிடைகள் புரிவர் எனக் காசிக் கலம்பகம் கட்டுரைக்கின்றது.

முயலா மலேதவம் முத்தித் திருவை முயங்கநல்கும்
கயலார் பெருந்தடங் கண்ணிபங் கார் அருட் காசியிலே
செயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யும் ! உங்கள்
பயலாக வேபணி செய்வார் புவனம் படைப்பவரே"

சிவமாய்ச் செலும் சிறு செந்துக்கள்:

காசியிலே சென்று சில்லாண்டுகள் இருந்து இறப்பதனால், சிற்றுயிர்கள் எல்லாம் கூட மிக எளிதில் வீடுபேறு எய்தி விடுகின்றன. அதனால் சிவமாந்தன்மைப் பெருவாழ்வு பெற்றுச் சிவலோகம் செல்லும் சிறுசெந்துக்கள், தம்மைப் போலச் சில்லாண்டுகளிலேயே உயர்வு எய்தப்பெறாமல், பல்லாண்டுகளாக ஒரே நிலையில் இழிந்து கிடக்கும் தேவர் களைப் பார்த்துத் தோள் கொட்டி நகைக்கின்றனவாம்.

"பல்லாண்டு தம்மைப் படைத்த அத் தேவரைப் பார்த்துப் பைம்பொன்
வில்லாண்ட தோள் கொட்டி எந்தையர்கோல விடம்பழுத்த
அல்லாண்ட கண்டத்தெம் ஆதிப்பிரான் அவிமுத்தத்திலே
சில்லாண் டிருந்து சிவமாய்ச் செலும் சிறு செந்துக்களே"



உடற்பாரம் ஓம்பும் கேவலம்:

வீடுபேறு அடைய விரும்புபவர்கள் உடலை வெறுத்துப் புறக்கணித்து, அதன் சுமையைக் கழிக்கவே விரும்புவர். “செடியார் உடலைச் சிதையாதது எற்றுக்கு எங்கள் சிவலோகா" எனவும், "தினைத்துனையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண்வலையே'' எனவும் மணிவாசகர் அரற்றுதல் காணலாம். "பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பு மிகை" என்பது திருக்குறள். ஆனால் இதற்கு மாறாக, முத்தி எய்த விரும்புபவர்கள் தமது உடற்சுமையை மிகவும் கருத்தாகப் போற்றிக் கொள்ளும் விந்தையையும் நாம் காண்கின்றோம். காசிக்குச் சென்று இறத்தலால் முத்தியைப் பெற விரும்புபவர்கள், தாம் அங்குச் செல்லுந்துணையும், தமது முடைத் தலையையும் எலும்புகளையும் சாம்பலையும் காசியிற் கங்கையிற் சேர்த்தற்பொருட்டு, உடற் சுமையை வெறாமல் மிகவும் விழிப்போடு ஓம்பிக்கொள்ளுவர். காசி விசுவநாதர் மீது செய்யும் பக்திக்கு, இங்கனம் உடற்சுமையைத் தாங்கிப் பொறுத்துக்கொள்ளும் கேவலம் (இழிவு, முத்தி) தான் இவர்களுக்குப் பலனாகக் கிடைத்தது போலும்! இஃது என்ன வியப்பு?

"முத்திக்கு வேட்டவர் மோட்டுடற் பாரம், முடைத்தலையோடு
அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால்; இவையன்றி அப்பால்
சித்திப்பது மற்றிலை போலும் ! காசிச் சிவபெருமான்
பத்திக்குக் கேவலமே பலமாகப் பலித்ததுவே

விசுவநாதர் பெருந்தகைமை:

விசுவநாதர் பெரிதும் சிக்கனம் மிக்கவர். அளவில்லாத கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ள தமது மனைவியாகிய விசாலாட்சியின் பால் குடும்பம் நடத்துவதற்காக இரண்டு நாழியளவு நெல் மட்டுமே கொடுத்து, அது கொண்டு, 'முப்பத்திரண்டு அறங்களையும் செய்க' என்று கட்டளை யிட்டவர் அவர்! ஆனால் அத்தகைய கடுஞ்சிக் கனக்காரர் ஆகிய விசுவநாதர், கொள்ளையிடும்படி பலருக்கும் முத்திச் சரக்கறை முழுவதையுமே திறந்து கொடுத்து விடுகின்ற பெருவள்ளலாகக் காசியிற் பிறங்குகின்றார்!

"கொள்ளையிடப் பலர்க்கும் முத்திச் சரக்கறையைத்
திறந்து கொடுத்து, அனந்த கோடிப்
பிள்ளைகள் பெற் றுடையபெரு மனைக்கிழத்திக்கே
குடும்பம் பேணுக என்னா
உள்ளபடி இருநாழி கொடுத்து. அதில் எண்ணான்கு
அறமும் ஓம்புக என்றார் !
அள்ளல் வயற் காசி ஆண்டகையார்
பெருந்தகைமை அழகி தாமே!"


முடிவுரை:

இங்ஙனம் குமரகுருபரர் போன்ற சான்றோர்களெல்லாம் புகழ்ந்து போற்றும் காசிவிசுவநாதர் திருவடிகளைப் பணிந்து வணங்கி, நாமும் ஈடேறி உய்ய முயலுவோமாக!

சித்தாந்தம் – 1962 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment