Saturday, May 9, 2020



கன்மம்*

[* இராமநாதபுரத்தில் 1910 - ம் ஆண்டு நிறைவேறிய 5 - வது சைவ சித்தாந்த மகாசமாஜக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.]

அறிவிற் சிறந்த பெரியோர்களால் நிறையப் பெற்ற விம்மகாசபையில் “ நல்லோர் பிறர் குற்றம் நாடார்'' என்ற வாக்கியத்தை நினைந்து என் சிற்றறிவுக் கெட்டியவாறு உபன்யாசிக்கத் துணிந்தனன்.
   
கன்மம் என்பது மும்மலத்தொன்றென்றும் ஆன்மாக்கள் பிறந்திறந்து துன்புறுதற்கும் அவற்றினின்று நீங்கி, உயிர்க்குயிராய் விளங்கும் பரமான்மாவைத் தரித்தின்பு றுதற்கும் ஏதுவாய் நிற்கு மென்றும் விரித்து விளக்குவதே யிவ்வுபன்யாசத்தின் கருத்தாம்.
     
ஆன்மாவினது இச்சா ஞானக்கிரி பாசத்திகளைத் தடைசெய்து நிற்கும் பாசம், ஆணவம், கன்மம், மாயையென முத்திரப்பட்டு பந்த வேறுபாட்டால் முறையே பிரதிபந்தம் அனுபந்தம் சம்பந்தம் எனப் பெயர்பெறும். அவை வருமாறு விடத்தால் மூர்ச்சித்துக் கிடந்த வொருவனுக்கு உணர்ச்சி செயல் முதலியன தடைப்பட்டிருத்தல்போல அநாதி சேவலத்தில் ஆன்மாவின் அறிவு இச்சை செயல்கள் ஒரு சிறிதும் நிகழ வொட்டாது ஆணவமலந் தடை செய்து நிற்கும். எதிர்த்துத் தடுத்தலால் இதற்கு பிரதிபந்த மென்று பெயர்.
     
அவ்வாறு மூர்ச்சித்துக் கிடந்த வொருவனுக்குப் பிறர் தரும் ஒளடதத்தால் அம்மூர்ச்சை நீங்கிச் சிறிதுணர்ச்சி யுண்டாவதுபோலச் செயலின்றி ஆணவ கேவலத்திற்கிடந்த வுயிர்க்குச் சிவபெருமான் இரங்கிக்கலாதி தத்துவங்களைப் புணர்த்த அதனால் மறைப்புச் சிறிது நீங்கி எழுச்சி சிறிதுண்டாம். இவ்வெழுச்சியே கன்ம மலம். ஆணவ மலத்தைத் தொடர்ந்து சிவப்பெருமானாற் றரப்படுதலின் இதற்கு அனுபந்த மென்று பெயராம். எழுச்சிக்குப் பந்த மென்று கூறுதல் பொருந்துமோ வெனின் விடயத்திற்  கட்டுப்படுத்தலாற் பொருந்து மென்க.
   
விடத்தின் உபாதி முற்றும் நீங்குவதற்கு வைத்தியன் பத்தியங் கற்பிப்பது போல மலமறைப்பு முற்றும் நீங்குவதற்குச் சிவபெருமான் இதம் அகிதம் என்னும் விதியை யுணர்த்துவர். இதற்கு வினையென்று பெயர் முற்கூறிய கன்ம மலம் அநாதி நித்தமென்றும் இவ்வினைப் பிரவாகனாதியென்றும் நூல்கள் கூறும்.

பத்தியம் புசிப்பதற்குப் பாகஞ் செய்யும் பாத்திரங்களையும் வைத்தி யன் உணர்த்துவதுபோல இதாகிதத்தைப் புரிவதற்குக் கருவியாய்ச் சுத்த மாயையினின்று வாக்கையும் அசுத்தமாயையினின்று மனதையும் பிரகிருதி மாயையினின்று காயத்தையும் சிவபெருமான்றருவர். வைத்தியன் கற்பித்த விதிகளை நோயாளிக்கு அடிக்கடி பிறருணர்த்துவது போல இதாகிதத்தின் நியமங்களை யுணர்த்தும் வேதாகமங்களையும் சிவபெருமான் றந்தருளுவர். இது மாயா மலம் இதாகிதத்தைப் புரிவதின் சம்பந்தமாய்த்தரப்பட்டதால் சம்பந்த மென்று பெயர் பெறும். பந்தம் என்பதற்குப் பொருள் கன்மத்துக்குக் கூறியவாறே கொள்க.
   
இவ்வாறு கூறப்படும் மும்மலங்களுள் அனுபந்த மென்று கூறிய கன்ம மலத்தின் விசாரணையே யீண்டெடுத்துக் கொள்ளப்பட்டது. மேற் கூறியவற்றுள் கன்ம மலமும் மாயா மலமும் ஆன்மாவைப்பின் வந்து பொருந்துதலால் ஆகந்துக மென்றும் ஆணவ மலம் சகச மென்றும் நூல்களிற் கூறும். அங்ஙனங் கூறுவதால் ஆணவமலம் அநாதி யென்றும் எனைய விரண்டும் ஆதியென்றும் பொருள் கொள்ளல் கூடாது. என்னை?  சூக்கும தேக ரூபமான கன்ம மலம் மாயையில் அடங்கிக் கிடத்தலானும் அங்ஙனம் அடங்கிக் கிடக்காதவழி தோற்றுதற்கு ஏதுவின்றாதலானும் கன்மமும், பரிக்கிரக சத்தியாதலின் மாயையும் நித்தமாதலி னென்க, இறைவனுடைய பரிக்கிரக சாத்தியினின்று அவனால் இருவேறுவகைத்தாய்க் காரியப்படுத்தித்தர வேண்டியிருத்தலின் கன்ம மலமாயாமலங்களாகிய விரண்டும் இறைவனுக்கு உடைமைப் பொருளென்று உண்மை நூல்கள் கூறும்.
   
இக்கன்ம மலங் காரணமாகத் தூல வுடம்பும் அவ்வுடம்பால் இதமகித மென்னும் வினையும் அவ்வினையா லுடம்பும் வித்து மரமும் போல் பின்னர்த் தொடரும். வினை புரிதற்குக் காரணமாக முதலில் உடல்வரு மென்னில் அது "வினைப்போகமே வொரு தேகங் கண்டாய்" என்னும் வாக்கியத்துக்கு முரணாதோ வெனின்? முரணாது. என்னை? வித்து மரமும் போல் வினையும் உடலும் வருமென்று கூறுவதால் இவ்விரண்டில் முற் பிற்பாடு தோன்றாமல் அனவத்தை யென்னும் முடிவின்மை யுண்டாமாதலின் இவ்விரண்டிற்கும் முன் இவ்விரண்டி லொன்று தானுண்டாக வேண்டு மென்றும் அதற்கும் ஏது வின்னதென்றும் நிச்சயிக்க வரும். வரவே தூலவுடல் வினைக்கு முந்தின தென்றும் தூல வுடலுக்கு முந்தினது சூக்குமவுடம்பாகிய வெழுச்சி யென்னுங் கன்மமலமென்றும் நூல்களிற் கூறுவதாலென்க.
   
நல்வினை தீவினையின்றி எழுச்சி மாத்திரமாயுள்ள கன்ம மலத்துக்காக உடல் தந்தாரென்று கூறுதல் விதிக்கு முரணாதோ வெனின்? முரணாது அருள்மேலீட்டாற் செய்யும் சிவபெருமான் செயலவ்வாறாதலினென்க. இவ்வாறே உவமானத்திலும் முதலில் வித்தில்லாமலே மரத்தையுண்டு பண்ணுவரென்பதனை'விச்சதின்றியே விளைவு செய்குவாய்'' என்னும் மணிவாசகப் பெருமான்றிருவாக் காற்றெளிக.
   
இனி வியாதியாளன் விலக்கிய பதார்த்தத்தை விரும்பிப் புசித்தலால் துன்பத்தையும் விதித்த பதார்த்தத்தைப் புசித்தலா லின்பத்தையு மடைவது போலச்சிவபெருமான் உபகரித்த இதமகிதத்துள் அகிதத்தைச் செய்தலாற் றுன்பத்தையும் இதத்தைச் செய்தலாலின்பத்தையும் உயிரெய்தும்.
     
இங்ஙனம் விதியும் விலக்குமாக விரண்டு பத்தியங் கற்பிப்பானேனெனின்? இருவகைப் பதார்த்தங்களிருத்தலினாலும் அவைகளில் விருப்ப முண்டாதல் உயிர்களுக்குச் சுபாவமாதலினாலு மென்க. இவ்வாறே ஆன்மாவின் சம்பந்தமாக விதமும் மாயா சம்பந்தமாக வகிதமுமாக இரண்டுண்டா மாதலானும் அவற்றில் விருப்பம் நிகழ்தல் உயிருக்கியற்கை யாதலானும் இரண்டு விதியைச் சிவபெருமானருளிச் செய்வாராயினர்.
     
அவ்விதி வருமாறு மனத்தின் இதமாவது பிறவுயிர்களுக் கிரங்கல் இயன்றவாறு உதவி புரியவெண்ணுதல் சிவபெருமானைச்சிந்தித்தல் முதலிலாயினவுமாம்.
   
வாக்கின் இதமாவது உண்மை பேசுதல், பிறருக்கு இன்பம் பயக்கப் பேசுதல், ஞான நூல்களை யோதுதல், பஞ்சாக்கர மந்திரங்களை யுச்சரித்தல் முதலியனவாம்.  காயத்தின் இதமாவது பிறருக்கு இயன்றவாறு கொடுத்தல் முதலிய வுபகாரம் புரிதல், ஆலயவழிபாடு செய்தல், சிவனடியாரை வணங்குதல் முதலானவாம்.
   
இவற்றிற்கு மாறான செயல்களெவ்லாம் அகிதம்.
   
இவ்வாறு செய்யும் இதம் அகிதம் பக்குவமாய் அனுபவத்துக்கு வரும்  முறைமையில் ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்துவமெனமுத் திறப்படும்.
     
அவற்றுள் ஆகாமியம் விதியையோ அல்லது விலக்கையோ மனவாக்குக் காயங்களால் விரும்பிச் செய்தல். இவ்விருப்பமே எழுச்சி யுண்டான முதற்கண் ணிகழ்வதாதலானும் உயிருக்குரிய தன் வினையாதலானும் இன்புற வேண்டில் இதத்தையே விரும்ப வேண்டு மென்பது தோன்ற "அறஞ்செய விரும்பு" என்றார் ஔவைப் பிராட்டியாரும். இவ்வா  காமியத்துக்கு வினையென்று பெயர். இது எதுபோலவெனின், பூமியில் வித்தை விதைப்பதுபோ லென்க,
     
அவ்வித்தானது விதைத்தவனுடைய புத்தியில் தன்னுடைய தென்னும் பற்றுக்கோடாக விருந்து நிலத்திற் கிடந்து மழையால் வளர்வது போல மேற்கூறிய இதம் அகிதம் என்னும் செயல்கள் செய்தவனுடைய புத்தி தத்துவம் பற்றுக்கோடாக மாயையிற் கிடந்து திருவருளால் வளர்ந்து பருவ மெய்தும். இதற்குச் சஞ்சித மென்றும் புண்ணியபாவ மென்றும் பெயர்.
   
வித்துப் பலனுக்கு வருவதுபோல் இதமகித மென்னும் வினைகள் இன்ப துன்பமென அனுபவிக்க வருங்கால் பிராரத்துவ மென்று பெயர். 

இப்பிராரத்துவம் சாதி, ஆயுள், போகமென மூவகைப்படும்.
      சாதி: - உயர்ந்த சாதி இழிந்த சாதிகளிற் பிறத்தல்.
      ஆயுள்: - காலமிருத்து அவமிருத்துக்களில் மரித்தல்.
போகம்: - தேவபோகம் மானிடபோக முதவியவற்றைப் புசித்தல்.
     
இவ்வாறு போகம் புசிக்குங்கால் அப்புசிப்பு ஆதி தைவீகம், ஆதியான்மீகம், ஆதிபௌதீகமென மூவகைப்படும்.
     
ஆதி தைவீகம், ஒருவர் முன்னிலையின்றித் தெய்வ முன்னிலையாய் வரும் பால்யம், யௌவனம், நரை, திரை, வியாதி முதலிய சுகதுக்கம்.
ஆதியான்மீகம்: - உயிர்கள் முன்னிலையால் வருஞ் சுகதுக்கம்.
ஆதிபௌதீகம்: - மின்னல் இடி முதலியவற்றால் வருஞ் சுகதுக்கம்.
   
இவற்றுள் ஆதியான்மீகமும் ஆதி பௌதீகமும் முதல்வன் அருள் வழியின்றி வாராதாயினும் நேரே கூட்டிவைக்காமல் உயிரையும் பூதத்தையும் அதிட்டித்துக் கூட்டிவைத்தலால் ஆன்மீகம் பௌதீக மெனப் பெயராயிற்று.
   
இவ்வாறு கன்ம மலத்தால் வினையும் வினையால் புண்ணிய பாவங்களும் புண்ணிய பாவங்களாற் சுக துக்கங்களும் முறையே உண்டாகும். உண்டாகு மென்றதனால் கன்மமே இவ்வாறு பலந் தருமெனல் கூடாது. என்னை? செய்த கன்மஞ் செய்த விடத்துக்கெட்டொழிதலானும், உயிருக்கு அதன்பலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ளும் பேரறிவு இன்முதலானும் கன்ம பலத்தை யிறைவனே கூட்டுவிப்ப னென்க.
   
உயிர்களின் புத்தி தத்துவம் பற்றுக்கோடா விருத்தலின் கூட்டுவிப்பதற்கு இறைவன் வேண்டு மெனல் மிகையாகாதோ வெனின்? ஆகாது என்னை? வித்துப் பற்றுக் கோடாவிருக்கு முளைத் தற்சத்தி நிலமுந் தண்ணீருங் கூடினவழி முளைக்கு மாறுபோல் புத்திதத்துவம் பற்றுக்கோடாயுள்ள புண்ணிய பாவங்களும் மாயையும் இறைவனருளுங் கூடினவிடத்து  இன்ப துன்ப மென்னும் பலனைத் தருமாதலி னென்க.
   
இங்ஙனந் தருங்கால் விதைத்தவா றன்றி வன்மை மென்மைக் கேற்ப வித்து முன், பின்னாகப் பலன்றருவதுபோல் வினைகளும் செய்த முறைப்படியன்றிப் பக்குவத்திற் கேற்ப முன் பின்னாகப் பயன்றரும்.

இங்ஙனஞ் செய்யும் வினையும் மிகச்செய்யலுறுமாயின் அவ்வப்பொழுதும் அல்லுழி காலாந்தரத்தும் பலன்றரும்.
   
மேற்கூறிய இருவினைகளும் அபுத்தி பூர்வம், புத்தி பூர்வமென இரு வகைப்படும். அவற்றுள்,
அபுத்தி பூர்வ நல்வினை: - அகிதம் நினைக்க இதமாக முடிவதும், அகிதஞ் சொல்ல இதமாக முடிவதும் அகிதஞ்செய்ய இதமாக முடிவதுமாம்.
அபுத்திபூர்வ தீவினை: - இதம் நினைக்கவும், இதஞ்சொல்லவும், இதஞ்  செய்யவும் அகிதமாக முடிவதாம்.
புத்தி பூர்வ நல்வினை: - புத்தியிலே பட்டும், மனவாக்குக், காயங்களினால் செய்யப்படும் இதடாம்.
புத்தி பூர்வ தீவினை: - புத்தியிலே பட்டுத்திரிகரணங்களினாலே செய்யப்படும் அகிதமாம்.
   
இவ்வாறு செய்யும் வினையின் பலனாகச் சுகதுக்கம் வருங்கால் இதம் அகித மென்னுஞ் செயல் வழியாகவே வரும் இதனை "பிற் செயாதனுப்விப்பதின்றாம்" என்னும் சிவஞானசித்தி திருவாக்காற் றெளிக.
   
அங்ஙனமாயின் மேல் வினையேறு மாற்றிற்குக் காரண மென்னை யெனின்? முற்செய்வினைக் கீடாக இறைவனருளாற்றன் மாட்டும் பிறர் மாட்டும் நிகழும் செயல்களைக் கன்மத்துக் கீடாக இறைவனால் நிகழ்ந்த தென்று நினையாது தன்னாலும் பிறராலும் நிகழ்ந்ததென்று நினைக்கும் நினைப்பாலுண்டாகும் விருப்பு வெறுப்பினாலேயா மென்க.
   
இவ்வாறு வினையின் பலனாக வின்ப துன்பங்களை யனுபவிக்குங்கால் இவ்விருவினைக்கு வேறாகிய சிவபுண்ணிய காரணத்தாற் சிவபுண்ணிய  முண்டாகும்.
   
சிவபுண்ணிய காரணமாவது அநாதி கேவலத்திற் கிடக்கும் பசுக்களுக்காகப் பதி ஆதி சிருட்டி செய்யுங்காலத்துப்பதி தாமே தலம் தீர்த்த மூர்த்தியாகவும் திருமேனி கொண்டருளுவர். அவற்றுள் விசேட தீர்த்தத்தில் புழு முதலானவைகளாய்ச் செனித்தாலும் வசித்தாலும் மரித்தாலும் விசேட தீர்த்தத்தில் மீன் முதலியவைகளாய்ச் செனித்தாலும் வசித்தாலும் மரித்தாலும் நாற்கால் விலங்கு முதலானவை குடித்தாலும் மூழ்கினாலும் அத்தீர்த்தம்பாயு மிடத்திற் பயிராய்ச் செனித்தாலும் அந்த நெல் முதலானவைகளைப் பறவை முதலானவைகள் புசித்தாலும் விசேட ஆலயமுள்ள தலத்திற் செனித்தாலும் வசித்தாலும் மரித்தாலுமேயாம்.
   
இவ்வாறு நிகழப் பெற்ற வுயிர்களுக்குச் சிவபுண்ணியத்திற் பிரவிர்த்தி யுண்டாம் சிவபுண்ணியமாவது சரியை கிரியை யோகம் ஞானம் மென நான்கு. அவற்றுள் 2 பாபம் உண்மையென ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் அதுவும் புத்தி, பூர்வம் அபுத்தி பூர்வம் என இரண்டாய் பதினாறு வகைப்படும்.
1. அபுத்தி பூர்வ உபாயச் சரியையாவது பசு புண்ணியமாகச் செய் யப்பட்ட திரவிய முதலானவை கிரியா குருலிங்க சங்கடங்களுக்கு உப காரமாதல்.
2. அபுத்திபூர்வ உபாயக்கிரியையாவது கோகர்ணத்தில் பழைய சிவ லிங்கத்தில் சிவநிசியில் குருட்டுப்பறைச்சி வில்வார்ச்சனை பண்ணினது முத லாயின.
3. அபுத்தி பூர்வ உபாய யோகமாவது திருவாபரணந் திருட நினை ந்தவனும் திருமேனி காவற்காரனுந் திருமேனியே தியானமாயிருப்பது முதலானவை.
4. அபுத்தி பூர்வ உடாய ஞானமாவது வேதாகமங்களை யோதிப்பொ ருளுண்மைகளைப் பிறருக்கு நன்கு விளக்குகின்ற புகழின் விருப்ப முத லானவை.
5. புத்திபூர்வ உபாயச் சரியையாவது கிரியாகுருலிங்க சங்கமங்களு க்குத் தனது திரவியங்களைக் கொடுத்தலும் ஆலயத்திற் றிருவலகு திருமெ ழுக்கிடுதலு முதலாயின.
6. புத்தி பூர்வ உபாயக் கிரியையாவது அம்மூன்று வடிவையும் தான் பரிசித்துப் பூசித்தல் முதலாயின.
7. புத்தி பூர்வ உபாயயோகமாவது அம்மூன்று வடிவே பொருளென நம்பித் தியானஞ் செய்தல்.
8. புத்தி பூர்வ உபாய ஞானமாவது வேதாகமங்களை விசாரித்துக் கிரியாசாரியரை ஆவாகன மூர்த்தமென்றறிந்து பரமசிவன் பிரம விட்டுணுவாதி ஒன்பது மூர்த்தமாகவும் சூரிய சந்திராதி அட்ட மூர்த்தமாகவும் விளங்குவரென்றும் அப்பொருளிலே நேயம் தனக்குப் பிறக்கின்றதாகவும் அறிந்து நிலைத்து நிற்பது.
9. அபுத்தி பூர்வ வுண்மைச் சரியையாவது ஞானாசிரியரைச் சிவபரம் பொருளே திருமேனி கொண்டதென்று கருதாது உயர்ந்தாரென்று கருதி வழிபடுதல்.
10. அபுத்தி பூர்வ வுண்மைக்கிரியையாவது ஞானாசிரியரை மேற் கூறியவாறு கருதிப்பூசித்தல்.
11. அபுத்தி பூர்வ வுண்மையோகமாவது மேற்கூறியவாறு கருதித் தியானித்தல்.
12. அபுத்தி பூர்வ வுண்மை ஞானமாவது மேற்கூறியவாறு கருதி ஞான சாத்திரங்களை விசாரித்தல்,
13. புத்திபூர்வ வுண்மைச் சரியையாவது ஞானா சிரியரைச் சிவ பரம் பொருளென்று தேறி வழிபடுதல், இது கேட்டலாம்.
14. புத்தி பூர்வ வுண்மைக் கிரியையாவது மேற்கூறியவாறு கருதி ஞானா சிரியரைப் பூசித்தல், இது சிந்தித்தலாம்.
15. புத்திபூர்வவுண்மை யோகமாவது ஞானாசிரிய ரருளால் அவரே பொருளென்று நம்பித் தியானம் பண்ணுதல், இது தெளிதலாம்.
16. புத்திபூர்வவுண்மை ஞானமாவது நிட்டைகூடித் திருவடிசேர்தல்.
     
இப்புத்திபூர்வ வுண்மை ஞானமாகிய நிட்டை, தத்துவரூபம்; தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதெரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதெரிசனம், சிவயோகம், சிவபோக மெனப் பத்துக்காரியமாயிருக்கும் அவற்றைத் தசகாரிய விளக்க மென்னும் நூலில் விரித்துக் கூறியிருக்கின்றேம். ஈண்டு விரிப்பிற் பெருகும்.

மேற்கூறிய சிவபுண்ணியம் பதினாறினுள் முந்தின பன்னிரண்டைக்  கூடியனுட்டிக்கும் பலத்தால் முன்னற் கூறிய இதமகித மென்னும் இரு வினைகளும் இன்பம் துன்பம் என்னும் பலனில் வேறாயிருப்பினும் பிறப் பிறப்பென்னும் பலனில் இரண்டும் ஒற்றுமையுடையனவே யெனத்தோன்றும். இதுவே யிருவினை யொப்பு. அங்ஙனந் தோன்றவே உண்மைச்சரியை யாதிகளிற் புத்தி நிலை பெறும். பெறவே யான் என தென்னும் மலத்தின் சேட்டை குறைந்து சிவபரம் பொருளி னாட்டமும் அப்பொருளுக்கு அடிமை என்னும் உணர்வு முண்டாம். இவையே மலபரி பாகமும் சத்தினி பாதமும் சிவஞானமுமாம். இவ்வாறுண்டாகவே சிவபிரான் றிருவடியை யடைவர்.
     
இவ்வாறு சிவபிரான் றிருவடியடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு யான் என தென்னும் போதமற்றிருத்தலால் ஆகாமிய மேமுது. ஞானம் பிரகாசித்தலால் புத்தி தத்துவம் பற்றுக்கோடாகிய சஞ்சிதம் தீபத்தின் முன்னர் இருள்போலக் கெட்டுப்போம். பிராரத்தம் உடலிருக்குமளவு மிருந்து புசித்துத் தீரும். இதுபற்றியே'ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று சூழினுந் தான் முந்துறும்' என்றார் நாயனார்.
     
இங்ஙனம் புசிக்குங்கால் அப்புசிப்பின் எதுவாக வுண்டா மிருவினைகளுமேல் ஆகாமியமா யேறாதென்பதனை "எத்தனுவினின்று மிறைபணியார்க்கில்லை வினை'' என்னுஞ் சிவஞானபோதமும்'இருள்சேரிருவினை யுஞ்சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு "என்னுந்திருக்குறளும் வலி யுறுத்தும். ப்ராரத்தமாகவரும் அனுபவமும் சிவாநந்த மேலிட்டிருக்குந் தன்னைத் தாக்காது. தாக்கா தென்றதனால் வந்தே தீரு மென்பது - கொள்ளக் கிடக்கின்றது. இதுபற்றியே "அவனருளாலல்லது ஒன்றையுஞ்  செய்யானாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியாவாகலான் எனச்சிவஞான போதத்திலும் ''ஊழையு முப்பக்கங் காண்பருலை வின்றித் தாழாது ஞற்றுபவர்'' எனத் திருக்குறளினும் அருளிச் செய்தவாறு காண்க,
   
இதுகாறுங்கூறிய வாற்றாற்கலாதி தத்துவத்தின் சேர்க்கையாலுண்டாம் எழுச்சி கன்மமல மென்றும், அவ்வெழுச்சியால் இதமகிதத்தைப் புரிதல் ஆகாமியமாகியவிருவினை யென்றும், அவ்வினை முதிர்ச்சியடையுங்கால்  சஞ்சிதமாகிய புண்ணிய பாவமென்றும், அனுபவமாய் வருங்கால் பிராரத்துவமாகிய வின்ப துன்பமென்றும் இன்பதுன்பமான பிராரத்துவமனுபவிக்கும் போது இருவினையின் வழித்தாகவே அனுபவிக்கவருமென்றும், அவ்வினைகளையான் செய்தேன் பிறர் செய்தாரென்று கருதுவதால் மேல்வினையேறு மென்றும், இவ்வாறு நிகழும் இருவினைகள் பந்தவேது வென்றும் பந்த நீக்கத்துக்கான சிவபுண்ணியம் பதினாறுவகைப்படு மென்றும், அவற்றுள்ளும் புத்திபூர்வ வுண்மை ஞானம் பத்துக்காரியமாயிருக்கு மென்றும், இவற்றைய நுட்டித்தோர் சிவபிரான்றிருவடி யடைந்தின் புறுவரென்றும், அவருக்கு ஆகாமிய மேறாது என்றும் சஞ்சிதங் கெட்டொழியு மென்றும் ப்ராரத்தம் புசித்துத் தீருமென்றும், அப்புசிப்புந் தன்னை வருத்தா தென்றும் பெற்றனவாம்.

ஆதலால் ஞான சற்குருவை யடுத்து ஞானசாதனமானதச காரியமென்னும், பத்துச் செயல்களை யடைந்து இன்புறும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவன் றிருவருள் புரிவாறாக.
                       
பொ. முத்தைய பிள்ளை,
சித்தாந்தம் 1912 ௵ - ஜனவரி

No comments:

Post a Comment