Saturday, May 9, 2020

சைவமும் சைவர் நிலையும்.

சிவபெருமானொருவனே வழிபடற் பாலனாகிய முழுமுதற்கடவு ளென்றும் அங்கனம் அவனை வழிபடுவார்க்கு இன்றியமையா அடை யாளங்களாவன விபூதி உருத்திராக்கதா ரணமும் பஞ்சாக்கர மந்திர முமேயாமென்றும், இவற்றையெல்லாம் ஆன்மாக்கள் இனி துணறு மாறு சுருக்கமாகவும் விரிவாகவுந்தெரிக்கலுறும் நூல்கள் வடமொழியில் வேதசிவாகமங்களுந் தென்மொழியில் தேவார திருவாசக முதலிய பன்னிரண்டு திருமுறைகளும் சிவஞானபோத முதலிய பதினான்கு சித்தாந்த அருளோத்துக்களுமா மென்றும் ஆணை வரம்பு நிறுத்தி அவ்வரம்பு கடவாது ஒழுகும் நல்லான்மாக்களுக்கு முத்தியின்பம் பயப்பது சைவசமயமாம்; இங்ஙனங்கிளந்தெடுத்துக் கூறிய சைவசமயவழி தின்று அச்சமயவிதிகளை வழுவாது அனுட்டித்து ஒழுகுங் கடப்பாடுடைய நன் மக்களெல்லாருஞ் சைவரென்று வேண்டப்படுவர்.
இனித் துரியப் பொருளாகிய சிவனை வழிபடுதலும், அவனடையாளங்களாகிய விபூதி உருத்திராக்கதாரணமும், இவற்றை யறிவிக்குந் தேவார திருவாசக முதலிய நூலாராய்ச்சியுமாகிய மூன்றும் ஒன்றை ஒன்று இன்றியமையாநெறிப்பாடுடையனவாம்.
இங்கே சிவம் என்ற துரியப்பொருள் பிரமன் விண்டு உருத்திரன் என்று ஆண்டாண்டு உபநிடதங்களில் ஓதப்படும் முப்பொருள்களுள் இறுதியில் நின்ற உருத்திரபத வாச்சியப்பொருளன்று மற்று அது குணப்பொருளாகிய அம்மூன்றனையுங்கடந்து மேல்விரிந்து செல்லும் நான்காவதாகிய துரியப்பொருளாவதாம். இக்கருத்துப்பற்றியே அதர்வசிகோப நிடதத்தில் ''இவையனைத்தும் பிறக்கின்றன; இப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னுமவரெல்லாம் - பிறக்கின்றனர்; பூதங்களோடு இந்திரியங்க ளெல்லாம் பிறக்கின்றன; காரணங்களைத் தோற்றுவிப்பானுந்தியாதாவுமான காரணன்றான் பிறப்பானல்லன்; காரணப்பொருளும் ஐசுவரியமனைத்தையுமுடையானும் அனைத்திற்கும் ஈசுபனுடான சம்பு ஆகாய நடுவிற்றியானிக்கப்படும்" என்றும் பஞ்சப்பிரமோபநிடதத்தில் ''மூன்றவத்தைகளைக்கடந்ததும் துரியப்பொருளும் சத்தியமும் ஞானமயமாகவுள்ளதும் பிரமன் விண்டு முதலியோராற் சேவிக்கப்படுவதும் எப்பொருள்பிறத்தற்கு நினைக்களமாவதும் மேலானதும ஈசபதவாச்சியப்பொருள்'' என்றும் சுருதிவாக்கியங்கள் ஒருங்கெழுந்து அறுதியிட்டன. இவ்வாறே தேவர் கோவறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்குமற்றை, மூவர் கோனாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதைமா தாளும் பாகத்தெந்தை'' என்று திருவாசகச்சுருதியினும் போந்தவாறுகாண்க. இனிச் சுவேதாசுவதரவுப நிடதத்திற்போந்த “எவன் தானொருவனாயிருந்து கொண்டே எல்லாப்பொருள்களையு மயக்குவானோ அவன் தன் சருவவல்லமை யால் எல்லாவற்றையும் எல்லா வுலகங்களையும் ஆளுகின்றான்; எவன் உற்பத்தியாங்காலத்தும் சம்பவிக்குங்காலத்துந்தான் ஒருவனாகவே யிருக்கின்றானோ அவனை அவ்வாற்றான் அறியவர் மரணத்தைக்கடக் கின்றார்கள், ஏனெனில், இவவுலகங்களையெல்லாந்தன் முழுமுதன்மை யால் ஆட்சி செய்கின்ற உருத்திரக்கடவுள் ஒருவனேயா தலால், அவ னுக்கு வேறாகப்பிறிதொருபொருள் உண்டென்று அறிவுடையோர் சொல்லார்கள்; அவன் சிருட்டி செய்வானொருவனை உண்டாக்கி எல்லா வுலகங்களையும் படைப்பித்துத் தான் அவ்வெல்லா ஆன்மாக்களினும் அந்தரான்மாவாய் வேறு வேறமர்ந்திருக்கின்றான்; அவன் சங்காரகா லத்தில் தன் கோபாக்கினியால் எல்லாவற்றையும் விழுங்குகின்றான்; எல்லாப்பக்கங்களில் விழிகளும், எல்லாத் திசைகளில் முகங்களும், எல்லாத்திக்குகளிற் புயங்களும், எல்லாத்திக்குகளிற் பாதங்களும் உடையனாய் ஆகாயத்தையும் பூமியையும் உண்டுபண்ணித்தன் கரங் களரனும் சிறகுகளாலும் அவற்றை ஒழுங்குபடுத்துகிற அவன் ஒருவ னே கடவுள்; இங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதல்வனும் மகருஷியும் சிருட்டிகாரண னும் தேவர்களை எல்லாம் பிறப்பிக்கின்றவனும்; அவருள்ளும் இரணிய கருப்பனை முதலிற் படைத்திட்டவனுமாகிய உருத்திர மூர்த்தி எமக்கு மெய்ஞ்ஞானத்தை உதிப்பிக்கக்கடவன்.'', என்னும் அருள்வாக்கியந் திரிமூர்த்திகளுட்பட்ட குணருத்திரர்மேற் செல்வதினறித் தத்துவங்களை ஒடுக்கிக்கொண்டு அத்தத்துவங்களுக்கும் அதீதமாய் விளங்குந்துரிய முழுமுதற்கடவுளான மாசங்கார உருத்திரக்கடவுள வழுத்தற்பொருட்டு ஆண்டெழுந்ததொன்முகலின் அதுபற்றி ஈண்டு வரக்கடவதோர் இழுக்கில்லை யென்றொழிக.
இனி அங்ஙனங்காட்டிய முத்திற முறையுள்ளும் சிவவழிபாடு ஏனையிரண்டி னுஞ் சிறந்ததொன்றாதலானும், அச்சிவவழிபாடு பற்றியே அதற்கங்கங்களான விபூதி யுருத்திராக்கதாரணம் பஞ்சாக்கர மந்திரம் வேதோபநிடத நூலாராய்ச்சியும் பிறவும் வேண்டப்படுதலல்லது அவ்வழிபாடில்வழி அவைபயப்பாடின்றி வறிது கழிதலானும் அச்சிவவழிபாடு ஒன்று தானே ஏனையிரண்டினுஞ் சிறந்தெடுத்துப் போற்றப்படுந்தலைமை யுடைத்தாம். என்னை? கொழுநனையுடையளான ஒரு தலைமகள் தான் தனக்கினிய அக்காதலனை யுடையளாம் அவ்வியைபுபற்றியே அவடனக்கு இன்றியமையாச் சிறப்பினவாகிய மங்கலகாண் மஞ்சட்பூச்சுக் கலவைச்சாந்து நறு முறிக்கொழுந்து விரைமலர்த் தொடையல் செழும் பட்டாடை முதலியன வேண்டப்படுவதன்றி, அவனில்வழி அவையொருசிறிதும் அவளால் விரும்பப்படா வாகலினென்பது, இன்னும், இராச்சியவுரிமை பெற்றானோர் ஆண் மகன் தான் அங்ஙனமெய்திய அவ்வுறிமை பற்றியே அதற்கடையாளங்களான அரதன முடியும் வெண்கொற்றக்குடையும் அரசமுத்திரையும் அரியணை வீற்றிருப்பும் ஒருங்கு பெற்று ஆட்சி செலுத்து தலன்றி, அவ்வுரிமையில்லா தானொருவன் அங்ஙனம் அடையாளங் கொள்ளானாகலானுமென்பது. இனிக்கொழுநனையிலளாகிய ஒருபெண்மகள் மங்கலநாண் முதலிய அலங்காரமுடையளாம் வழி அவளைத் தூர்த்தையென்றுலகம் பழிக்குமாறு போலவும், இராச்சியவுரிமையில்லாதானோருவன் அஃதுடையானேபோல, அரதன முடி முதலிய அடையாளங் கொள்வழி அவனரசனால் ஒறுக்கப்பட்டுச் சிறைகளத்திடப்படுமாறு போலவும் சிவவழிபாடு இல்லாதானொருவன் அஃதுடையானே போல விபூதியுருத்திராக்கந்தரித்துப் பிறரை வஞ்சித்தன் மேற்கொண்டவழி அவன்றன் செயலை யுணர்வாரெல்லாரானும், ஓ ! ஓ ! கொடியன், பாவி, வஞ்சகன், என்று இழித்துக் கூறப்படு தன் மேலும் மறுமையிற் சிவ பெருமானாலொ றுக்கப்படுதலும் உடையனாம். சிவபெருமானைத்தெய் வமாகக்கொண்டு வழிபடும் நற்குலத்திற் சிறந்த சைவர்களே! எம்மரிய சகோதரர்களே! நமக்கு இந்த மானுடதேகமும் அதனினுஞ்சிறந்த சைவகுலமும் முற்சென்மங்களில் ஈட்டிய பெருந்தவப்பயனா வாய்ப் பப்பெற்றும் அவற்றாற்பெரும்பயனை நாம் ஒரு சிறிதும் யோசியாது வாளா வாணாளைக்கழித்தல் நன்றோ? நாம் வழிபடும் முழுமுதற்கடவுள் சிவபெருமான் ஒருவனே என்று துணிந்து அவனை உபாசிக்கும் வாநன்முறை அறியோமாயின், நாம் எவ்வளவுதான் விபூதியுருத்தியாக்கந்தரித்தாலும் அவற்றால் நமக்குப் பிரயோசனம் வருவதன்று. சிவபெருமானை உபாசிக்கும் பொருட்டாகவே அவன்றிருவடையாளங்களான திருநீறுங் கண்டிகையும் அணிகின்றோமென்று அறிந்து அவனைவழிபட்டான் மாத்திரம் நாம் வேண்டியவாறெல்லாம் நமக்கு இம்மைமறுமைப்பயன்களையருளி யிறுதியில் அவ்வாப்தன்றன்றிருவடி பேரின்பத்தையும் நமக்கு ஊட்டுவான்.
இனி, இங்ஙனங் கூறுதல் பற்றி நாம் ஏனைச்சமயங்களையும் அச் சமபிகள் வழிபடுந் தெய்வங்களையும் இகழ்ந்துரைக்கின்றோமென்று நினையாதீர்கள். அங்ஙனம் நாம் ஒருகாலத்துஞ் செய்யோம். நாம் முதற் சஞ்சிகைபில் வரைந்த " இவ்வுலகின் கட் பலவேறு படப்பரந்துகிடக்குஞ்சமயங்களெல்லாந் தம்மை அனுசரித்தொழுகும் ஆன்மாக்களின் பக்குவ முறைமைக்கேற்பவும். அப்பக்குவ முறைமையால் அவரறிவு விரிந்து செல்லுந்தன்மைக் கேற்பவுந்தாமும் ஒரு நெறிப்படாவாய்ப் பல நெறிப்பட அகன்று தாந்தாம நுதலிய பொருளையே உண்மை யெனத்துணிந்து ஆராய்ந்து அவைதம்மாலு றுதிகொண்டு உய்யுநெறி தேடுகின்றன; இங்ஙனம் ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இலக்கணங் களுடைய வாயினும், ஒன்றினொன்றுயர்ந்த குணங்களுடைய வாயி னும் எல்லாச் சமயங்களும் மெய்ச்சமயங்களேயாம், எல்லாம் வீடுபேற்றின்கண் உய்க்கும் வழிகளுந்துறைகளுமேயாய், முழுமுதற்பெருங் கடவுளாகிய தந்தையை ஆன்மாக்களாகிய பசுங்குழவிகள் சென்று அணையுங்காறும் அறிவூண் தந்து வளர்க்குந் தாய்மார்களேயாய் விளங்குவன''  என்னும் வாக்கியக் கூறுகளே அதற்குச் சான்றாம்.
மற்று நங்கருத்து யாதோவெனின்; - எல்லாச்சமயிகளும் தாந்தாம் உண்மையெனக்கொண்டு உபாசிக்குந் தெய்வங்களைத் தாந்தாம் அனு சரித்தொழுகும் விதிபிறழாது தழுவக்கொண்டு உறுதிபெறல் வேண்டு மென்டதே நங்கறுத்தாவதாம். இதனை விடுத்துச் சைவனொருவன் சிவவழிபாடு நீங்கி வேறு சமயிகள் உபாசிக்குந் தெய்வங்களைப் பாராட்டிப்போற்றுதலும், அவ்வாறே அவ்வேறு சம்யிகள் தம்மதங்களுக் கிணங்காத பிறசமயத் தெய்வங்களைப் பாபாட்டிப் போற்றுதலும் வரப் பழித்துச் செய்யுமுறையாதலால் அவை பெரிதும் இடர்ப்படுதற்கேதுவாய் முடியுமென்றொழிக. அற்றேல், சாக்கிய நாயனார் தாந்தழுவிய பௌத்தசமயவழிநின்று உறுதிபெறமாட்டாராய்ச் சிவவழிபாடு இயற்றியது வழுவாம் போலுமெனின், அற்றன்று, அவர் மேலைச் சென்மங்களிற் செய்து போந்ததவ முதிர்ச்சியால் தமக்கு மெய்பறிவு விளங்கி அதிதீவிர பக்குவமுடையராகப் பெறுதலால், அப்பக்குவ நிலைக்கேலாத பௌத்தசமயம் விடுத்து அதற்கேற்பதான சைவம் புகுந்து சிவனை பழிபட்டு உய்ந்தாமாகலின் அதுவழுவாமா யாண்டைய தென்றொழிக. அஃதாயின், அவர்தம் மேலைச்சென்மத் தவமுதிர்ச்சிக்கேற்பச் சைவசமயத்திற்பிறந்து அவ்வாற்றாற் சிவனை வழிபடுதலன்றே மரபாமெனின், நன்று சொன்னாய், அவர் மேலைச் சென்மங்களில் அறிதாற்றிய தவவூழ் அவரைச் சைவசமயத்திற் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே அவர்க்கு அவ்வதிதீவிர பக்குவத்தைப் பயப்பிக்கமாட்டாததாய்ப்பௌத்தசமயத்தின் கண்ணே அவரைப் பிறப்பித்து ஆண்டுநின்றவாற இடையொருகாலத்து அவ்வதிதீவிரபக் குவத்தைப் பயப்பிக்கும் பெற்றித்தாம் முற்கொண்டு அமைந்துகிடந்தது; பின் அக்கிடப்பின்படியே முடிந்ததாகலின் அதுகடாவன்றென மறுக்க. இனிப்பல்வகைச் சமயமுடிவு பொருள்களையும் நுண்ணிதாக ஆய்ந்து அதனான் மெய்யறிவு மிகவிளங்கித்தாம் மெய்யெனக்கண்ட ஒரு சமயத்தை அனுசரித்தொழுகுங் கடப்பாடுடையார்க்குத் தஞ்சமயவரம்பு கடந்து சேறல் குற்றமன்னாம். இனி இவ்வாறெல்லாமன்றித் தஞ்சமயப் பொருளுண்மையும் பிறசமயப் பொருளுண்மையும் அளந்தறிய மாட்டாத புருடர் தஞ்சமயவரம்பு கடந்து விவகரித்தல் பெரியதோர் அபசாரமாமென்றொழிக. இனிச்சைவசமயத்திற் பிறந்து சிவனை வழிபடும் புண்ணியமுடைய நன்மக்கள் அந்நெறிகடை பிடியாது தம்மனம் பேரனவாறெல்லாம் புகுந்து தம்பெருமையிழத்தல் நன்றன்றாம். சைவசமயிகள் சிவபெருமானையன்றினைச்சமயத் தெய்வங்களை உபாசிக்க இடம் பெறமாட்டார். இதற்கு ஸ்ரீமன்மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய,  
கொள்ளேன் புரந்தன் மாலயன் வாழ்வுகுடி கெடினு
நள்ளேனின தடியாரொடல்லானரகம் புகினு
மெள்ளேன் றிருவருளாலேயிருக்கப் பெறினிறைவா
வுள்ளேன் பிறதெய்வமுன்னையல்லா தெங்களுத்தமனே''  

என்னுந் திருவாக்கேயுறுசான்றா மென்க.
இனிச்சிவபெருமானை உபாசிக்குஞ் சைவர்களுக்குச் சிவாராதனை ஒன்றே சாலுமாகலின், விபூதியுருத்திராக்கதாரணமும் பிறவும் அவர்க்கு இன்றியமையாதவென் றுறைத்தவா றென்னை யெனின்; நன்று வினாயினாய், கொழுநனையுடையளான மனைக்கிழத்திக்கு மங்கல நாண் முதலிய அடையாளங்களும், அரசுரிமையுடையனான ஓராண் மகனுக்கு இரதனமுடி முதலிய அடையாளங்களும் இன்றியமையாது வேண்டப்படுகின்றனவாகலின், சிவனை உபாசிக்குஞ் சைவர்களுக்கு அவையும் இன்றியமையாது வேண்டற்பாலனவேயாம்.
இனி ஒரு தலைமகட்கும் ஓர் அரசற்கும் அவ்வவரசர்க்குரிய அன்பும் அதிகாரமுமே சாலுமாகவும், அவற்றின் வேறாக அடையாளங்கள் பிறகோடறான் எற்றுக்கென்று ஆராயலுறுவார்க்குத்தந்நிலையில் நின்றவழி உணர்வின்றிக் கிடந்த ஆன்மாக்கள் எழுவகைத் தோற்றத்துட்பட்ட சரீரங்களையும் அச்சரீரங்களிற் போகநுகர்ச்சிக்கு ஏதுவாய்க் கிடந்தமெய்வாய் கண் மூக்குச் செவிமுதலிய புறக்கருவிகளையும் மனஞ் சித்தம் புத்தியகங்கார முதலிய அகக்கருவிகளையும் ஒருங்குதலைக்கூடி உலகத்தோடு ஒருமைப்பாடுற்று அறிவுவிரியப்பெறுப வென்பதும், இங்ஙனந் தேகத்தோடு இயைபுறு தன்மாத்திரை யானேகுறிவழிச் செல்லும் அறிவு முகிழ்க்கு மென்பதும் இனிது விளங்கும். குறியெனினும் அடையாளம் எனினும் ஒக்கும். இனிமானுடரெல்லாரும் ஆண் பெண் எனப்பகுக்கப்படும் பகுப்புடையராதலும் அவ்வவர்க்குரிய குறிகுணவிசேட அடையாளங்கள் பற்றியேயாம். அவ்வாண்பகுப் பாருள்ளும் இவனெமத்குத்தந்தை இவன் சகோதரன் இவன் புதல் வன் இவன் ஏதிலான் இவன் நண்பன் எனவுணர்ச்சி வேறுபாடு தரு தலும் அவ்வவர்க்குரிய விசேட அடையாளங்கள் பற்றியேயாம். இனி அப்பெண்வகுப்பாருள்ளும் இவள் எமக்குத்தாய் இவளுடன் பிறந்தாள் இவள் புதல்வி இவள் ஏதிலாள் இவள் கிழமையுடையாள் என்றற்றொடக்கத்தான் வேறு வேற்றிதலும் அவ்வவரிடைக்காணப்படும் விசேட அடையாளங்கள் பற்றியேயாம். இனி. ஆங்கில நூலாரும் ஒரு பொருளொடு வேறொன்றனை ஒப்பிட்டுக்காண்டலானும், ஒன்றை ஒன்றின் வேறாக் காண்டலானும் அறிவுமலர்ச்சியுண்டாம் என்று கூறுப. ஆகவே, உலகத்துட்டோன்றி அவ்வுலகியற் பொருட்கண் அது வது வாய்ப்பதியும் அறிவுடைய ஆன்மாக்கள் அடையாளங்கள் பற்றியுணர் * அவ்வவர்க்குரியச்சியுடையராகப்பெறுதல் இயற்கையாகவே வராநின்ற நிகழ்ச்சியாதலின், அது தன்னொடு முரணி வேறு வேறாசங்கித்தல் பொருத்த மின்றாம்
இனி இவ்வாறே ஒருவனைச் சைவனென்றும் ஒருவனை வைணவனென்றும் ஒருவனைப் பௌத்தனென்றும் ஒருவனைச் சமணனென்றும் அறியும் அறிவெல்லாம் அவ்வவர்க்குரிய ஈசுபவழிபாடு கருமவுறைப்பு நூலாராய்ச்சி முதலிய அடையாளங்கள் பற்றியே நிகழ்வதல்லது பிறிதன்றாம். இனி அவரவர்க்குரிய சமய அடையாளங்களும் அவரவர்க்குயிர்போற் சிறந்தனவாய் அவர் செய்து ஈசுரவழிபாட்டின் கண் நெஞ்சம் நெகிழ்த்திப் பத்திச் சுவைமிகுவித்துப் மேம்பாடுறுவனவாம் இப்பெற்றியவான அவ்வடையாளங்கள் அவ்வச்சமயத்தாரெல்லாரானுங் குறிக்கொண்டு போற்றப்படுவன வாதலின் சைவர்க்கு விபூதியுருத்திராக்கதாரணம் இன்றியடையாவடையாளச் சிறப்பின வென்பது தெற்றென விளங்கும்.
இனி, வடமொழியில் வேதாகம நூலாராய்ச்சியுந் தென்மொழியின் தேவார திருவாசக சிவஞானபோத நூலாராய்ச்சியும் வேண்டற் பால வென்றலென்னை, விபூதியுருத்திராக்கத்தரித்து ஐந்தெழுத்தோதி யுண்மையன்பாற் சிவவழிபாடு இயற்றுதலொன்றேயமையுமெனின், அற்றன்று, தாம்மாத்திரம் அங்ஙனம் வழிபட்டு உய்யுநெறியொன்றே கடைப்பிடித்தல் தன்னைப்பற்றுத லென்னுங் குற்றமா தன்மேலும் பிறசீவான் மாக்கள் பிழைத்துப்போம் மெய்ந்நெறிகாட்டி வழிப்படுக் குங்கருணையின்றான் முடி தலானும், கருணையின்றாகவே சீவர்கட்குரிய ஏனைக்குற்றங்களெல்லாமும் ஒருங்கு வந்து சேறலானும், அதனாற் பிறவியறாமன் மேன்மேற் பெருகி வருதலானும் அவர் தாம் உண்மைச் சிவவழிபாடு செய்தாரல்லராவர்; இனித்தாமுய்யும் பொருட்டுச் சிவ வழிபாடு இயற்றுதல் போலவே எல்லாச் சீவன்மாக்களும் உய்கவென்னுங்கருணைமிக்கு அவர் தமக்கெல்லாம் அச்சிவவழிபாட்டின் அருமை பெருமைகளை விரித்துரைத்து அறிவு கொளுத்தற் பொருட்டுத் தம் முரையில் அவரைத் துணிபு ஒருப்படுத்தல் வேண்டுமாகலானும், அங்ஙனந் துணிபொருப்பாடு உறுவித்தற்கு வேதாகம நூலாராய்ச்சி இன்றியமையா நெறிப்பாடுடையதாம். அல்லதூஉம், வேதாகம நூலுரைப் பொருள் செவ்விதின் ஆய்ந்து அவ்வாற்றான் முகிழ்க்கும் மெய்யறிவின்கட் பத்திச்சுவைத்தேன் ஓயாது சுரந்த இறைவன்றிருவடித்தி யானத்தின்கண் மனவெழுச்சிமிகுக்கும் உரிமைப்பாடு விளைதலானும் அவ்வாராய்ச்சி தமக்கும் பயப்பாடு பெரிதுடைத்தாம். இவ்வாறு இரு வழியானுஞ் சிறந்தவடநூல் தென்னூலாராய்ச்சி சைவரெல்லரானும் ஒழுங்காகச் செயப்படு தல்வேண்டும். இங்ஙனம் மூவேறுவகைப்படுத் து எடுத்துக்கொண்ட சிவவழிபாடும் விபூதி யுருத்திராக்கதாரண பஞ்சாக்கரமந்திரமும் வேதாகமப்பொரு ணூலாராய்ச்சியும் சைவசமய நிலைக்குரியனவாம்,
இனி இக்காலத்துச் சைவர்களுட்சிலர் சிவனை வழிபடுதலறியா ராய்ச் 'சிவனென்னவிண்டு மென்ன, எல்லாம் ஒன்று தான்' என்றுரைத்து அன்பிலராய் நாட்கழிக்கின்றார். வைணவசமயிகள் விண்டுவையேதாம் உபாசிக்கும் முழுமுதற் கடவுளென்று துணிந்து அவ்வாற்றான் வழிபடற்பாலார். சைவர் சிவனையே அங்ஙனந்துணிந்து வழிபடற் பாலார். இம்முறை திறம்பி இரண்டையு மொன்றெனக்கூறி அன்பி லராய் ஒழுகி நாட்கழித்தல் எந்தச்சமயிக்கும் நன் முகாது. ஈசுரவழி பாட்டிற்கு ஒருதலையான் வேண்டும் உள்ள நெகிழ்ச்சி எல்லாத் தெய் வங்களையுஞ் சமமாகக் சாணும்போது நோக்கத்தான் வருவதன்று. மற்று அது, ஒருபொருளை ஏனையவற்றினின்றும் வேறுபிறித்துத் தலைமைப்பாடுடைய தெனக்காணுஞ் சிறப்பு நோக்கத்தான் வருவ தொன்றாம். இவ்வியல்பு பற்றியே உலகெங்கும் பலவேறு வகைப் பட்ட சமயங்களும் சமயத்தெய்வங்களும் பலப்பலவாய் விரிந்தன. அவ்வச்சமயத்தாருந் தத்தமக்கு உள்ள நெகிழ்ச்சி செல்லும் வகை யான் தாந்தாம் விரும்புங் குணங்குறிமுதலியன கொண்டு தத்தமக் கியைந்தவழியா னெல்லாம் ஈசுரனை உபாசனை செய்து போதருகின்றார். இவ்வாறு விரிந்த சமயங்களையெல்லாம் ஒருமைப்படுத்தலாவது அல்லதவற்றையெல்லாம் அழிவுசெய்து மெய்ச்சமயமொன்றனை நிறுத்தவாவது யார்க்கும் இயல்வதன்று, அங்ஙனஞ்செய்தல் ஈசுரனுக் குத்திருவுள்ளமுமன்று. அவர்க்குத் திருவுள்ள மானால் ஒருகணத்தி லவ்வெல்லாச் சமயங்களும் ஒருமைப்பாடுறுமன்றோ? ஆகலான், எல்லாச்சமயிகளுஞ் தத்தஞ்சாத்திர. ஆணைவரம்புகடவாது அவ்வச் சமயவிதி வழியொழுகி அதனாலறிவு முதிர்ச்சியடைந்து மேன்மேற் சமயங்களிற் பிறந்து சித்தாந்தமாக நிலைபெறும் முடிநிலைச்சமய பம மொன்றால் நேரே ஈசுபன்றிருவடிப்பேரின்ப முத்தி பெறற்பாலார். இங்கனமின்றித் தஞ்சமயவரம்பு அழித்து அன்பிலராய் எல்லாம் ஒன்றுதான் எனக்கூறுதல் மக்கட்பிறவிப்பேறு. இழப்பதொன்றாய் முடியும். அஃது யாங்கனமோவெனின்; - - பொருள் வேண்டிப்பல ஆடவர்தோள் முயங்கிக்கழிந்த பொதுமகள் அவ்வாடவர் யாவரிடத்தும் அன்பிலளாம்; அன்பிலளாகவே இன்ப நுகர்ச்சியும் அவட்கின்றாம். இனித்தா னின்பந்துய்த்தல் குறித்தாளாயின் அவள் தனக்கு இயைந் தானோர் ஆடவனை ஏனை ஆடவரிற் சிறப்பக்கொண்டு அவன் மாட்டுக் கழிபெருங்காதலுடையளாய் இன்பந்துய்ப்பாளாவது. இன்னும் முத்துப்பவளம் நீலம்பச்சை கோமேதகம் புட்பராகம் வைடூரியம் மரகதம் மாணிக்கம் முதலிய நவமணிகளையும் ஆராய்ச்சி செய்தலுறுவான் அத்தொகுதிக்கண் நல்ல தொன்று கண்டவழி அதனை ஏனையவற்றினுஞ் சிறந்தெடுத்து அதன்கட் கழிபெருங்காதலுடையனாய்ப் பொதிந்துவைத்துப் போற்றக் காண்கின்றோம். அங்ஙனமவற்றைப் பகுத்துக்காணும் அறிவின் மதுகையில்வழி அவனவற்றை ஒன்றுகூட்டி அவற்றின் கண் ஆசையிலனாய் ஒழுகுதலுங் காண்கின்றோம். இருந்தவாற்றால் அன்பென்னும் உள்ள நெகிழ்ச்சியுண்டர்தற்குப் பொதுநோக்குக்கழித்துச் சிறப்பறிவுநோக்குக் கொளல்வேண்டுவது ஒருதலையாம. ஆகவே, சைவர்களாகிய நன் மக்கள் ஏனைச் சமயத் தெய்வங்களைக் கனவினும் நினைதற்கு ஒருப்படாராய்த்தன் கொழுகனிடத்துக் கழிபெருங் காதலுடையளாய் இன்பந்துய்க்கும் மனைக்கிழத்திபோற் சிவபெருமானிடத்து அன்புநிகழப்பெற்று உபாசித்து உய்தல் வேண்டுமென்பது ஈண்டெடுத்துக்கூறிய வாற்றாலினிது விளங்கும்.
இனிச்சைவ நன்மக்களிற் சிலர் விபூதி யுருத்திராக்க பஞ்சாக்கரமந்திர முதலிய திருவடையாளங்களின்றி 'யாம் சிவவழிபாடு பெரி துடையோமாகலான் எமக்கு அவ்வடையாளங்கள் வேண்டா' என்றுரைக்கின்றார். அது பொருந்தாதென்பது மேலே விளக்கினாம் ஆண்டுக்காண்க.
இனி வேறு சில சைவநன்மக்கள் வேதாக முதலிய வடநூலாராய்ச்சியும் தேவார திருவாசக சிவஞானபோதத் தென்நூலாராய்ச்சியும் அரியவாயிருத்தலின் அவற்றின் கண் எமக்கு மனவெழுச்சிசென்றிலது என்று கூறுகின்றார். 'வட நூலாராய்ச்சியில்லா தொழினுந்தமிழ் நூலாராய்ச்சியேனுஞ் செய்து சென்றால் தமிழ் நூல்கள் செந்தமிழ் லக்கணநெறி பிழையா நன்னடையில் எழுதப்பட்டிருத்தலால் அதன் கண்ணும் எமக்கு அறிவு சென்றிலது' என்றும் உரைக்கின்றார், 'நல்ல தங்கைக்கதை' நளன் கதை'' இராயன்கதை'' பாண்டவர்கதை' முதலியனபோல் அத்தனை இலேசாக வருத்தமின்றி அச்செந்தமிழ் நூல்கள் விளங்கற்பாலனவா? சிவபெருமான் திருவடிப் பேரின்பமுத்தி, கத்தரிக்காய் புடோலங்காய் முதலிய தாவரவுணவு கொள்ளுதலானும், யாம் சைவரென்று தருக்கிக்கூறுதலானும் எய்தும் எளிமைத்தன்று. அல்லாமலும் உலக வாழ்க்கை பெருந்துக்க சாகரத்தில் தம்மறிவு தோய்ந்து பெரிதுந்துயருழவாநிற்பவும் அதன்கண் எல்லாந் தமக்கு வருத்தம் இழையளவு தோன்றது, இம்மைமறுமைப்பயன்றந்து உறுதிகூட்டும் ஞான நூலாராய்ச்சின் கண் அவர்க்கு வருத்தந்தோன்றல் புண்ணிய முகிழ்ப்பு இல்லாக் குறைபாடாவதன்றிப் பிறிதென்னை?  விடியுங்காலையில் உறக்க நீங்கி எழுந்து இரவில் துயில் கொள்ளுமளவும்மெய் வியர்வரும்பக்கொல், தச்சு, செவு, உழவு, பொறைச்சுமை, பகடு உய்த்தன் முதலான அருந்தொழில் பலலியற்றிப்பொருள் சிறிது ஈட்டுதற்கண் எம்மனோர்க்கு வருத்தந்தோன்றுதலில்லை; ஒருநாழிகைப் போதேனும் நன்மக்கள் குழுவிலிருந்து ஞான நூலாராய்ச்சி செய்தற்கண் அவர்க்கு வருத்தம் மிகத்தோன்றாகிற்கும். பொய்யுரைத்தும், பொருளுடையாரைக்கண்டால் அவருக்கும்வகை இச்சகம் பேசியும், நல்லோர் பெரியோரைப்புறம் பழித்தும், கலகவுரை நிகழ்த்தியும், விதண்டை பேசியும், வீணுரைகிளந்து தம் நாளொழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந்தோன்றாது; அரைநாழிகைப் போதேனும் ஈசுர விஷயமான நல்லுரையுரைத்து ஆனந்தமுறு தற்கண் அவர்க்கு வருத் தமிகத்தோன்றாநிற்கும். நாட்டுவளங்கள் பலகண்டும் பருவதக்காட்சிகள் பலகண்டும், வனங்களிற்சரித்து ஆண்டுள்ளன பலகண்டும், கடற்காட்சிகண்டு உலாப்போயும், நகரவித்தியாசாலைகள், அறங்கூறு அவை யங்கள், தொழிற்சாலைகள், ஓவியச்சாலைகள், சிருங்காரத்தோட்டங்கள், அறச்சோற்று மண்டபங்கள், யாவையுமலிந்த ஆவண வீதிகள் முதலான வருந்தித்திரிந்து கண்டும் நாட்கழித்தற்கண் நம்மனோர்க்குப் பிரயாசை தோன்றாது; நல்லறிவுடையோரைக்கண்டு அவரோடு அளவளாவுதற்கண்ணுந் தேவாலயங்களுக்குச்சென்று ஈசுரன் றிருவுருவத்தைக் கண்ணாரக்கண்டு களிப்பதன் கண்ணும் அவர்க்குப் பிரயாசை மிகத்தோன்றாநிற்கும், புளுகுரை கேட்டும் புறம் பழிப்புரை கேட்டும் வம்புரை கேட்டும் வாதுரை கேட்டும் வாளா நாட்கழித்தற்கண் நம் மனோர்க்கு மகிழ்ச்சிமிகத் தோன்றா நிற்கும் பெரியோர் சொல் நீதியுரையும். நியாயவுரையும் தருமவுரையும் உபதேசவுரையும் ஞான வுரையும் அன்புரையுங் கேட்டற்கண் அவர்க்கு இகழ்ச்சிமிகத்தோன்றாநிற்கும். என்னே! என்னே! நம்மனோர் செயலிருந்தவாறு! ஆரிய நன்மக்களே! எம்மரியசகோதரர்களே! சைவசமய அன்பர்களே! இனி யேனும் இங்ஙனம் நாட்கழியாவது ஞான நூலாராய்ச்சி செய்து ஈசுரனை உண்மையென்பான் உபாசிப்பதற்கு மடி கட்டி எழுங்கள்! உங்கட்கு ஞான நூலாராய்ச்சி செய்வது கஷ்டமாயின், அவ்வாராய்ச்சி முதிர்ந்த நல்லோரைக் கூட்டி அவருபதேசிக்கும் நல்விஷயங்களைச் செவிமடுத் துப்பிழைக்கு நெறிதேடுங்கள்! 'முயற்சியடையாரிகழ்ச்சியடையார்" என்னும் ஒளவைப்பிராட்டியார் அருள் வாக்கிய உபதேசத்தை ஞாயகத்தில் வையுங்கள்!
''காகமுறவு கலந் துண்ணக்கண்டீ ரகண்டாகாரசிவ
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப்பூரணமாய்
ஏகவுருவாய்க் கிடக்குதையோ வில் புற்றிட நா மினியெடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சோவாருஞ்செகத்தீரே.

ஞானசாகரம்
சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴



No comments:

Post a Comment