Saturday, May 9, 2020



சைவ சித்தாந்த மகா சமாஜம்
56 - ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனி
சைவர் மாநாட்டுத் தலைமையுரை

[சித்தாந்த கலாநிதி - திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]
(30-12-1961)

பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன்ஞானம்
பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
கண்ட இரு தயகமல முகைக ளெல்லாம்
கண் திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன்;
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவும்
மெய்கண்ட தேவன் மிகுசைவ நாதன்
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும்
பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.

திருவிளங்கும் பலமொழியும் சீர்விளங்கு புலவர் பலர்
சிறப்பத் தோன்றி
உருவிளங்கும் பாக்கள் பல உரைகள் பல ஆக்குதலால்
      உளவாம் வாய்மை
மருவிளங்கு தமிழ்மொழியின் மருங்கெழுந்த தென விளம்பும்
      மாண்பிற் றாகும்
 திருவிளங்கு வள்ளுவனார் திருக்குறள் கண்டு, அவர் அடியைச்
      சென்னி வைப்பாம்.

சிவநெறி பேணும் செல்வர்களே, தாய்மார்களே !

திருவருட் பெருங்கடலாகிய பழனியாண்டவன்திருவடி நீழலில் இன்று இங்கே கூடும் சைவ சித்தாந்த மகாசமாசத்தின் ஆண்டு விழாவில் தலைமை தாங்கும்சிறப்பை என்னைப் பாராட்டி அளிக்கும் உங்கள்நல்லன்புக்கு என் மனமார்ந்த நன்றி.

இப் பழனி நகரைக் காணும் போது பழம்பெரும்நிகழ்ச்சி ஒன்று என் நினைவில் எழுகின்றது. இரண்டாயிரம்ஆண்டுகட்கு முன், பழனிக்குன்று பொதினி என்றும்,இவ்வூர் திருவாவிநன்குடி யென்றும், இதனைச் சூழவுள்ளநாடு வையாவி நாடு என்றும் பெயர் தாங்கி நிலவின.இப்போது இவ்வூர்க்குக் கிழக்கில் ஆயக்குடி எனத்திழும்ஊர் அந்நாளில் ஆவிகுடி என்ற பெயருடன் வையாவிநாட்டுக்குத் தலைநகராக இருந்தது; அதன்கண் இருந்துவையாவிக் கோப்பெரும் பேகன் என்ற வள்ளல் ஆட்சிபுரிந்தான். அவன் ஒருகால் பொதினி மலைப்பகுதியில் மயிலொன்று கார்முகிலைக் கண்டு களிமிகுந்து மயிர்சிலிர்த்துத்தன் அழகிய தோகையை விரித்து ஆடுவது கண்டான்;அதன் ஆட்டத்தில் நாட்டம் செலுத்தின அவன் உள்ளத்தேகுளிர் காற்று வீசும் இக்கார்கால மாலையில் மயிர் சிலிர்த்துஆடும் மயில் குளிர்மிக்கு வருந்துமே என எண்ணினான்.உடனே தன் போர்வையை அதற்கென அளித்து நீங்கினான்.அதுபற்றி அவனை அந்நாளை நல்லிசைச் சான்றோர்," மடத் தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்தகெடா அ நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேகன்'',எனப் பாராட்டினர். அப்போர்வை, அக்கானமயிலுக்கு உடுக்கும் உடையாகவோ, போர்க்கும் போர்வையாகவோஆகாது என்பது அவன் அறியாததன்று. அம்மயில் பால்சுரந்த அருள் மிகுதி அவனது அறிவுக் கண்ணை மறைத்தமையின் அவன் கைகள் தாமாகவே மேலிருந்த போர்வையை எடுத்தளித்தன. அதனை நினைந்த ஆசிரியர்பரணர்,

''என்றும், உடாஅ போரா ஆகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு
ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்''

எத்துணையாயினும் ஈத்தல் நன்று என்று எண்ணியும், பிறர்வறுமை களைவது கடன் என்று கருதியும் ஒழுகுபவன் என்று கூறுகிறார்.

இத்தகைய பெருள்ளல் வாழ்ந்த பெருமை மிக்கஇடத்தே அருள் வள்ளலாகிய முருகப்பெருமான் கோயில்கொண்டு தனது அருட் செல்வத்தை வழங்குகிறான். அனைக்துயிரும் அதனைப் பெற்று இன்புறுகின்றன. இவ்வள்ளல் இருந்த வளநாட்டில் கோயில் கொண்டருளும் பழனிப் பரமனது நல்லருள் பெற்ற பெருமக்களான தவத்திரு. சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், தவத்திரு. மறை மலையடிகள், தவத்திரு. சம்பந்த சரணாலயசுவாமிகளான திரு. சி கே. சுப்பிரமணிய முதலியார், திரு. வி. க., திரு. ந. சிவகுருநாதப்பிள்ளை முதலிய பெருமக்கள் தலைமை தாங்கிய இடத்தே நானும் இருந்து பேணிபுரிவதென்பது எனக்கே அச்சம் தருகிறது. எனினும், ''கருடன் சென்ற நீள்விசும்பில் ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்வது'' என்ற வீரசோழியப் பாட்டைக்கூறிக்கொள்வது தவிர வேறு சொல்லில்லை.

பெரியோர்களே!

சுமார் முப்பது ஆண்டுகட்கு முன் சமாசப் பெருவிழா நிகழ்ந்த போது கூடியிருந்த நன்மக்கள் பலரை நான் இன்று காணவில்லை; அந்நாளில் அமைந்த அவைகளில் நிகழ்ந்த பொருளுரைகள் பல இப்போது நிகழவில்லை. கூடும் அன்பரிடையே நிலவிய பேச்சுக்களும் செயல்களும் இன்று இல்லை. அவை யாவும் மாறிவிட்டன. மக்களிடையே நினைவும் சொல்லும் செயலும் அன்று போல் இன்று இல்லை.அவற்றின் பொருளும் முறையும் புதுமையும் ஒளியும்பெற்றுள்ளன. நினைத்தற்குத் துணைபுரியும் புறப்பொருள்களும் புறநிகழ்ச்சிகளும் நாளும் புதிய புதியவாய் மாறுவதால், நம் நினைவும் சொல்லும் செயலும் புதிய புதிய வண்ணமும் வனப்பும் பெற்றுப் பொலிகின்றன. இம் மாற்றத்தால் மக்களுடைய வாழ்க்கையும், சூழ்நிலையும், மனக்கருத்தும் மாற்றம் பெற்றுள்ளன. 'நாளொரு மேனியும்பொழுதொரு வண்ணமுமாக' இயலுவது வாழ்வாதலால், மாற்றம் உலகியல் வாழ்க்கைக்கு இயல்பு. அதனால் தான் மக்கள் அடிவைக்கமாட்டாது உயர்ந்தோங்கி கின்ற பொற்கோட்டிமயமும் இன்று அவர்கள் புல்லிய அடிக்கீழ்மிதிப்புண்டது. பல்லாயிரம் மைல்கள் - கற்கள் என்பது வெறுஞ் சொல்லாய்ச் சுருங்கிவிட்டது. சுருங்கக கூறு மிடத்து, அறமும் பாவமாய் மாறி விட்டது. மணமக்களை வாழ்த்துங்கால், மக்கள் பலரைப் பெறுக என்பது முன்பு அறமாகக் கருதப்பட்டது. இன்று அது, வறுமைக்கு இரையாகி வருந்துக எனக் கேடு கூறும் பாவ வுரையாகி ஒழிந்தது.

இந்த மாற்றம், உலகம் தோன்றிய நாள் முதல்நிகழ்வது. இதனைத் தொல்காப்பியர், திருவள்ளுவர் முதல் அனைவரும் கண்டனர். கால மாற்றத்தைக் கண்டவள்ளுவர், "நாள் என ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்வாள் என்றார். அதனை, அருட்பிரகாச வள்ளலார்,எளிய சொற்களால்,

'ஓடுகின் றனன் கதிரவன்; அவன்பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்,
வீடுகின் றன, என் செய்வோம், இனி அவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடுகின்றனை, அஞ்சலை கெஞ்சே''
என்று நவின்றருளினார்.

இவ்வாறு, மாறுவதே இயல்பாக வுடைய உலகில், இப்பொழுது, சமுதாயம், அரசியல், தொழில், வாணிகம்முதலிய துறைகள் பெருமாற்றம் எய்தியுள்ளன. சாதிசமய வேற்றுமைகள் சமுதாயத்தில் பையமறைகின்றன. அரசியல் நோக்கங்கள் வேறுபடுகின்றன. தொழில்களில் எந்திரங்கள் புகுந்து மக்களின் பெய்யுழைப்பையும் அதுவாயிலாக மக்கட் பண்பையும் மாற்றுகின்றன. வாணிகத்தின் கோக்கமும் போக்கு வரவு வாய்ப்புகளும் பிறவும் பெரு மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டன. உயர் கல்வித்துறையிலும் மக்கட்பண்பை வளர்க்கும் கல்வி சுருங்கி, எந்திர விஞ்ஞானத் துறையில் பெரிதும் சென்று செல்வாக்குப் பெற்றுள்ளது. மக்களின் உணர்விலும் உரையிலும் செயலிலும் புதுமை மணமே நிலைபெற்று விளங்குகிறது. இம் மாற்றங்கட்கிடையே நம் சமய வுணர்வும்ஒழுக்கமும் பண்டைய நிலையிலேயே நின்று பணி செய்யமுயன்று, நின்ற இடம் சுருங்கித் தேய்ந்து வருகிறது. சிலசமய நிலையங்களிலும் பல கோவில்களிலும் இன்றுள்ளசெல்வம் குன்றியிருக்குமாயின், கால மாற்றமாகிய புயலில் நமது சமயம் நிலைகுலைந்து சிதைந்து ஒழிந்து மறைந்துபோயிருக்கும். எப்படியோ இப்புயலிடையே நமதுசமயம் ஒருவாறு நின்று நிலவுவது திருவருட் பெருங்குறிப்பு என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது! "தெய்வம் காட்டுமே யன்றி ஊட்டாது'' என்றபடி, தெய்வத்திருவருள் காட்டும் இச்சூழ்நிலையை உணரும் நாம், அதன்திண்ணிய நிலைபேற்றுக்கு ஆவன செய்தல் சீரிய கடனாகும்.

கால மாற்றந்தான் சாதி சமய வேற்றுமையுணர்வு தளர்ந்தமைக்கும், அவற்றின் பெயரால் நிலவிய கொடுமைகள் மறைந்தமைக்கும் காரணம் என்பர்; அவ்வாறு சொல்வதை விடத் தொழில், வாணிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் முதலியவற்றைப் பற்றிய அறிவும், அரசியல்,சமுதாயம் முதலிய அமைப்புக்களைப் பற்றிய உணர்வும் பெருகியிருப்பதே காரணம் என்பது உலகியலை உணர்ந்து கூறும் உண்மையுரையாகும். உலக மக்களிடையே நிற வேற்றுமையும் சமய வேற்றுமையும் மக்களினத்துக்கே கேடு செய்வன என்ற உணர்வு தோன்றி நிற்பதற்கும் இதுவே காரணம். இந்நிலையில், உலகியற் கல்வியும், உணர்வும், ஒழுக்கமும் மக்களிடையே வேற்றுமையையும் பகைமையையும் எழுப்பி, வாழ்க்கையைச் சீரழிக்காதவாறு காத்துப் பேணும் கருத்துடைய தலைவர்கள் தோன்றியிருப்பதும் நமக்கு மகிழ்ச்சி தருகிறது. சாதி சமய வேற்றுமைச் சழக்கில்லாத சமுதாய அமைப்புத்தான் சித்தாந்தசைவச் செந்நெறியின் சீர்த்த நோக்கமாகும். இதனைச் சைவத் திருமுறைகளையும், திருத்தொண்டர் வரலாறுகளையும், சிவஞானபோதம் முதலிய மெய்ந்நூல்களையும் நன்குபயின்றோர் இனிதறிவர். சமய குரவர்களான சான்றோர், மண்ணக வாழ்வு நன்கு அமைந்தாலன்றி, விண்ணுலகிலோ மேலுலகிலோ மக்களுயிர்க்கு வாழ்வில்லை எனறதுடையவர். அதனைப் "புவனியிற் போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக்கொள்கின்ற ஆறு'' என்று அவர்கள் நமக்கு அறிவுறுத்தியது நினைவில் இருக்கிறது.

நமது பிறப்பின் அருமையையும் சான்றோர் நன்கு விளக்கியிருக்கின்றனர். "எண்ணரிய பிரவிகளில் மானிடம்பிறவியே யாதினும் அரிதரிது காண்'' என்பர். மக்களுடம்புதான் ஞானம் பெறுதற்கு வாயில்; அதனை நன்குபேணுவது அறயாகும். அது பற்றியே திருமூலர், ''உடம்பார் அழியின் உயிரார் அழிவர், திடம்பட மெயஞ்ஞானம், சேரவும் மாட்டார்'' என்று அறிவுறுத்தினார். இவ்வுடலை இனிது ஓம்பி, மண்ணக வாழ்வை மாண்புற நடத்துபவனே,அயரா இன்ப அமர வாழ்வு பெறுவன் என்ற சமயகுரவரது அருட் கருத்துக்கு ஆதரவாகத் திருவள்ளுவனார், "வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'' என்றார். எனவே மண்ணுலகில் பொன்னும் பொருளும் ஈட்டிப், பிறர்க்கும் தனக்கும் பயன்பட வாழ்தல் வேண்டும் என்பது சித்தாந்த செந்நெறிக் கருத்தாவது காணலாம். இது பற்றியே ஞானசம்பந்தரும் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறையில்லை' என்று அறிவுறுத்தினார்.

அதுவாயின், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை முதலிய இயல்புகள் சமய நூல்களில் பெருகித் தோன்றுதற்குக் காரணம் யாது என்று கேட்கலாம். உலகில் இன்ப நுகர்ச்சிக்குக் கருவியாகிய உடலும், உலகியற்பொருள்களும், கால வெள்ளத்தில் அலைப்புண்டு, வளர்ச்சியும் தளர்ச்சியும் வீழ்ச்சியும் எய்தி, தம்மால் நல்கப்படும் இன்பத்துக்கு நிலையாமையாகிய சிறுமையைத் தருகின்றன. அதனால் உலகியல் இன்பம் சிற்றின்பமாய் விடுகிறது. கண்டு கேட்டு உற்று மோந்து உண்டுழலும் ஐங்கருவி,கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்'' என்று அருட் செல்வரான நம்மாழ்வார் நவில்வது இங்கேநினைவு கூரத்தக்கதாகும். சிறிது போதில் கழிவது பற்றி அதனைப் பெரிது பெற்று நெடிது நுகர்தற்கே உயிர்கள் மிகவும் எண்ணி முயல்கின்றன.

"எல்லா உயிர்க்கும் இன்ப மென்பது தான் அமர்ந்துவரூஉம் மேவற்றாகும்” என்ற தொல்காப்பியர் கருத்தின் படி இன்பப்பேறு குறித்த நாட்டமும் முயற்சியும், எல்லா உயிர்கட்கும் இயல்பாக உள்ளன. ஆயினும், இன்பத்துக்குத் தோற்றமும் நிலைபேறும் தருவது பொருளாதலால், பொருளை ஈட்டுதலிலும், அதனை நுகர்தற்குரிய உடலைப் பேணுவதிலும் தம்முடைய உணர்வு உழைப்பு ஆகிய இரண்டையும் செலவு செய்து, பொருளே வாழ்வு, உடலோம்புவதே, வாழ்வு எனக் கருதியுழந்து, அவற்றின் நிலையாமைப் பண்பால் ஏமாந்து, இடும்பையும் கவலையும் எய்தி வருந்துகின்றனர்.

நிலைத்த பெரிய இன்பம் பெற வேண்டுமென எண்ணுவதும், முயல்வதும் நல்லறம்; நிலையாய பெரிய பொருளைநாடிப் பெற முயல்வது அறிவுடைமை. அந்தப் பெரிய பொருளை அறிந்து, அதனாற் பெறக்கூடிய பேரின்பத்தைப் பெற முயல்பவர்க்கு, உலகியற் பொருளின் நிலையாமையையும் இப் பொருள்கள் நல்கும் இன்பத்தின் சிறுமையையும்காட்டுவது, பேரின்பப் பெருவாழ்வின் இயல்புணர்ந்த பெரியோர்க்கு அறமாதலால், அவர்கள், செல்வம் யாக்கை முதலியவற்றின் நிலையாமைகளை அற நூல்களிலும் சமயநூல்களிலும், காலம் வாய்த்த போதெல்லாம், தொகுத்தும்வகுத்தும் விரித்தும் விளம்பினர். இதனால் மண்ணுலகவாழ்வை வெறுத்து, நிறைந்த பொருளைச் சிறந்த அறநெறியில் ஈட்டுவதைக் கைவிட்டுத், தெளிந்த இன்பத்தைத் துறந்தொழுகுவதுதான் அறம் என்பது அவர்கள் கருத்து எனக்கொள்வது குற்றமாகும். வையத்தில் வாழ்பவர் அறிவுமிகுந்து, உழவு, தொழில், வாணிகம் என்ற துறைகளில்ஈடுபட்டுப், பெருஞ் செல்வர்களாய்ப் பலவகை இன்பங்களையும் ஆரத்துய்த்தல் வேண்டும்; அஃது அவர்கட்குமெய்ம்மை யுணர்வு நல்கி மேன்மை வாழ்வு எய்துவிக்கும்என்பது அறவோர்களின் ஆழ்ந்த அகன்ற நுண்ணிய கருத்தாகும். மேலும், சேய்மையிலுள்ள பொருள்களைத் தெளியக் காண்பதற்குக் கண்ணாடி போட்டுக் கொண்டவன்,அதனால் காணப்படும் பொருளின் பாற் பெறலாகும் இன்பத்தை நுகராமல் அக்கண்ணாடியாகிய கருவியையே பெரிதாக எண்ணி, அதனைப் பேணுவதொன்றையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வானாயின், அறிவுடை உலகம் அவனைப் பொருளாக மதியாது. அதுபோல, உலகியல் இன்பத்துக்குக் கருவியாகிய பொருட்கும் தொழிலுக்குமே கண்ணையும் கருத்தையும் செலுத்துவது முறையாகாது; அறமுமாகாது என்பது பற்றியே சான்றோர்பொருள் செல்வங்களின் நிலையாமையாகிய சிறுமையைக்காட்டித் தெளிவுறுத்தினர்.

தொழில் வளர்ச்சியும் பொருட் பெருக்கமுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட உலக நாடுகள், இன்று விஞ்ஞான அறிவைப் பெருக்கி, விரிந்து பரந்து நிறைந்த உயிர்களையும் பொருள்களையும் சுருங்கிய காலத்தில் அழிக்கும் சிறந்த கருவிகளை ஆக்கும் சூழ்நிலையிற் புகுந்து அல்லற்படுவதை இன்று நாம் கண்ணாரக் காண்கிறோம். உயிர்ப்பண்புகளையும் உலகியல் அறப்பண்புகளையும் ஆராயும் துறையை நாடாது இன்றைய மக்களிடையே விஞ்ஞான அறிவுப் பேற்றில் வேட்கையும் முயற்சியும் வீறு கொண்டிருப்பதே போதிய சான்றுமாகும்.

மக்களின் எதிர்கால வாழ்வுக்கு அமைந்த ஒளியும் ஊக்கமும் உண்டாதற்கும் உண்டாக்குகற்கும் உரியமுயற்சியில் ஈடுபட்ட உலகமேதைகள், இன்று ஓரளவுயேனின்று உண்மையொளி பரப்புகின்றனர். இவ்வாறே ஆயிரம் ஆண்டுகட்கு முன், மக்களுலகில் போர்ப் புகழும்பொருட் புகழுமே குறிக்கோளாக நிலவியது கண்டோர், அகவாழ்வில் வெறுப்பும், துறவு வாழ்வில் விருப்பும் தோன்றத்க்க நூலும் உரைகளும் ஆக்கி உலகியற் பொருள் வாழ்வில் மக்கட்கு நாட்டமுண்டாகாத வகையில் பணி புரிந்கனர். அதன்விளைவாக மக்களினத்தின் ஒருமை அழிந்தது; வேற்றுமை மிகுந்தது; போரும் பூசலும் பொங்கி யெழுந்தன; ஆண்மை குறைந்தது; ஆற்றல் காற்றில் பறந்தது; உழவும்தொழிலும் உருக்குலைந்து ஒழிந்தன; வறுமை வளர்ந்தது; பிறர்க்கு அடிமையுற்று வாடும் கீழ்மைநிலை உருவாயிற்று. இந்த மனப்பான்மையை மாற்றி, மக்களிடையே நிலவும் வேற்றுமைக் கொள்கைகளைப் போக்கி, ஒத்த உணர்வொழுக்கமும் உயரிய நோக்கமும், மக்கள் மனதில் அடையச் செய்வது கடன் என்று அந்நாளைய சான்றோர் உள்ளம் எண்ணத் தலைப்பட்டது.

இந் நிகழ்ச்சிகட்கிடையே, வேதங்களும், இதிகாசங்களும் தோன்றி, முழுமுதற் பொருளாகிய சிவனுக்கும் மக்கட்கும் இடையே கூறப்படும் விண்ணுலக வாழ்க்கையைக் காட்டி, விண்ணுறையும் தேவர்கள் பண்ணுலக மக்களைப்போல உழவும் தொழிலுமாகிய செயல் வகையின்றி நினைவு போனபடியே எல்லா இன்பங்களையும் நெடிது நுகர்வரென்றும், அவர்கள் சிவபரம்பொருளின் திருவருளை நேரே பெறுவரென்றும் உரைத்து, மக்களைப் போல அவர்கள் மழை, மின்னல், இடி, கடும் புயல், நிலநடுக்கம் முதலியவற்றுக்கு ஆளாகாது, அவற்றுக்குத் தலைமை தாங்கி நடத்துவர் என்றும் உரைத்தனர்; ஆயினும், புராணங்கள் தோன்றி,தேவர்கள் அசுரர்களால் பெருந்துன்பத்துக்கு உள்ளாகிவருந்தி இறந்து பட்டதையும், இறப்பைத் தடுப்பதற்காகக்கடல் கடைந்து அமுதம் பெற முயன்றதையும், அமுதமுண்டும் அவர்களிற் பலர் இறந்ததையும் ஒளிக்காமல் உரைக்கலுற்றன. ''விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்'' என்று இளங்கோவடிகளும்,

'' நூறு கோடி பிரம்மர்கள் கொந்தினார்,
ஆறுகோடி நாராயணர் அங்கனே,
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்,
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே''

என அப்பரடிகளும் புராணக் கருத்தை வடித்துரைத்தனர்.

மக்களுக்கும் சிவபரம்பொருட்கும் இடையே கூறப்படும் விண்ணகத் தெய்வங்கள், மக்களில் உயர்ந்து பரம்பொருள் அருள் வேண்டி வாழும் உயிர்வகை ஆகுமேயன்றி, வேறல்ல. அதுபற்றியே மணிவாசகர், அத் தேவர்கள் மெய்ம்மை பொய்ம்மை அறியாது துன்புற்று வருந்துதலின் நம் போலும் மக்களே யாவர்; அவர்கள்,

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே''

என்று அவர் பொருட்டு இரங்குகின்றார். பிறிதோரிடத்தில்,

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்-
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை யெல்லாம் தொழ வேண்டி''

எனத் தேவர்களின் வழிபாட்டுக் குறிப்பும் உயர்வாக இல்லை என விளக்குகின்றார். இதனால், தேவர்கள் பிறவாப்பேரின்பத்தை நோக்காது, தேவபோகமே வேண்டுவர் என்றும், முடிவில் மண்ணில் பிறந்து தான் உய்தி பெறுவர் என்றும் தெரிந்தமையின், நம் சான்றோர் மண்ணுலகவாழ்வையே நன்கு மதித்தமை அறிகின்றோம்.

உலகியலையும் சமய நூல்களையும் ஒப்ப நோக்கிய சான்றோர், விண்ணுறையும் தேவர் வாழ்வையும் வெறுத்து, இறைவன் திருவடிக்கண் பெறலாகும் இறவாப் பேரின்பமே மக்கள் முயன்று பெறற்குரியது; இறைவன் படைப்புகோக்கமும் அதுவேயாகும் என அறிவுறுத்துவாராயினர். இச்சூழ்நிலையில் தான் உபநிடதங்களும் சிவாகமங்களும் தோன்றத் தலைப்பட்டன. அவற்றால் மக்களுயிர்க்கும் சிவத்துக்கும் நேரே தொடர்புண்டு என்பது விளங்கிற்று. சிவமும் உயிரும் உலகும் என்ற மூன்றுமே உண்மைச்சமய வாழ்வின் அடிப்படை என்று. மக்களால் உணரப்பட்டது.

நமது சிவநெறியாகிய சைவம், மக்களது இயற்கை அறிவு வளர்ச்சி வாயிலாகத் தானே தோன்றி, செய்யறிவு பெற்ற மேலோர் வழியாக நாட்டில் நிலவுவது; அதனால், இன்ன சான்றோல் இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இன்னசூழ்நிலையில் சிவநெறி தோற்று விக்கப்பட்டது என உரைக்கும் வரலாறே இதற்கு இல்லாதாயிற்று. ஏனைச் சமயங்கள் ஒருவநால் படைக்கப்பட்டு நிலவுவன; அவர் கூறியனவே வேதம்;அவற்றை ஏன்? எப்படி? என ஆராயாது பட்டாங்கு ஏற்று நம்புவதே மக்கள் செயலாகும். நம் சைவசமயமோஎனின், அறிவாராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது; அறிந்தவற்றைக் கொண்டு அறியப்படாத இறை இயல்பை எண்ணி யறிந்து மக்களை ஒழுகச் செய்வது. இதனைச் சிறிது விளங்கக் காண்போம்.

உலகமும் உயிர்களும் யாவரும் அறிந்தவை. உலகு அறிவில்லாதது; உயிர் அறிவு வடிவானது. அறிவில்லாத ஒன்றும், அறிவுடைய ஒன்றும், வேறுவேறு இனமாதலால், இரண்டும் ஒன்றாய்க் கூடி இயைதற்கு வழியில்லை. அறிவில்லாத உலகப் பொருள்களால் வளரும் அறிவில்லாத உடலும், அறிவுடைய உயிரும், ஒருகாலும் தாமே கூடமாட்டா. உடல் அறிவில் பொருளாதலால், தனக்குரிய உயிரைத் தானே தேடிக்இகாள்ளாது; உயிர் அறிவுடைய தாகையால், அழகில்லாத நோய் மலிந்த உடம்பை ஒருகாலும் சென்றடையாது. ஆகவே, இரண்டையும் கூட்டி உருவாக்கி வாழச் செய்யும் மூன்றுவது பொருள் ஒன்று வேண்டும். அப்பொருளே சிவம், முற்றிலும் மாறுபட்ட இயல்புடைய உடம்பினுள் இருந்து, உயிரை உலகில் வாழச் செய்வதால், சிவமும் உயிரும் ஒன்றன்று; உலகுக்கு ஒன்றினை அறியும் தன்மையில்லாமை யால், பொருளியல்பை அறிந்து உருவாக்கும் சிவம் உலகப் பொருளு மன்று; வேறாய் இலங்கும சிவம் இரண்டிலும் வேறுபட்டது. இதனை அணு விஞ்ஞானம் நன்கு காட்டுகிறது. அணுவுக்குள் மாறுபட்ட சக்திகள் ஒன்றாய்ப் பிணிப்புண்டு புதைந்து கிடக்கின்றன. இன்றைய விஞ்ஞான அறிவுக்கு எட்டாது, இன்ன தன்மைத் தென உணரவும் படாது நிற்கும் ஒரு சக்தி ("Unknown Energy''); அவற்றின் மாறுபட்ட தன்மை கெடாத நிலையில் ஒன்றுபடுத்தியுளது. அதுபோல, "இன்ன தன்மையன் என்று அறி வொண்ணாச்'' சிவ பரம்பொருளும், மாறுபட்ட உயிரையும் உலகையும் பிணித்து நிறுத்தியுள்ளது.

உலகு என்பது நிலவணு நீரணு என்பன முதலிய பல அணுக்களாலாகியது; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர், ''நிலம் நீர் தீ வளி விசுப் போடு ஐந்தும் கலந்த பயக்கம் உலகம்'' (மரபு. 89) என்றார். அணுக்கள் யாவும் பலவகைச் சக்திகளால் ஆகியவை எனபது இன்றைய விஞ்ஞானத்தின் முடிவு. “Matter”, says Eddington says,'' Matter is composed of electrons and protons i.e., positive and negative charges of electricity. எனவே, நாம் வாழும் உலகிற்கு முதற் காரணம் சக்தி என்பது விளங்கும். இச் சக்தியை நம் சைவம் மாயை என்று குறிக்கின்றது. மாயையாகிய சக்தி, ஒளிமயமாய் இருப்பது என்பதை அணு விஞ்ஞானம் கண்கூடாக ஒளித்திரையில் (Spectrum) காட்டிவிட்ட து. ''Heat, electricity, light etc, represent the last stages of matter before its disappearance into the ether.அந்த மாயையை "இருளிரி சுடர்'' என்று ஞானாமிருதம் 800 ஆண்டுகட்கு முன்பே காட்டிற்று.

The Nature of the Physical world. P. 3.
Le Bon. 7. 12 & 14.

இனி, மாயையாகிய சக்தியை முதற் காரணமாகக்கொண்டு இவ்வுலகமாகிய காரியப் பொருளைச் சிவபரம்பொருள் ஏன் படைத்தது? மாயா காரியமாகிய இவ்வுலகப் படைப்பின் நோக்கம் (purpose of creation) யாது?என்ற கேள்வி சில அறிஞரிடையே எழுகிறது. இவ்வுலகில் வாழ்வன உயிர்கள். உயிர்களாகிய நாம் உலகில் வாழுங்கால், ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய அறிவு பெறுகின்றோம். சில ஆண்டு வாழ்ந்த இளைஞனைவிடப் பலஆண்டு வாழ்ந்த முதியவனுக்கு உலகியல் ஞானம் பெரிது என்று சொல்லி அவனுக்கு மதிப்புத் தருகிறோம். இதனால், உலகமாகிய மாயையின் தொடர்பு நமக்கு அறிவு விளக்கம் தருவது என்பது விளங்குகிறது. மேலும், சிவன் உலகைப் படைத்து நம்மை அதன்கண் வாழச் செய்வதும்தாம் அறிவுவிளக்கம் பெறுதற்கே என்பது தெளிவாம்.

உயிர் அறிவுடைப் பொருளாயிற்றே, அதற்கு அறிவு விளக்கம் ஏன்? என்பது அடுத்து நிற்கும் கேள்வி. உயிர்களாகிய நமக்கு நாளை நிகழ்வது தெரிவதில்லை; மாலையில் நிகழவிருப்பது காலையிலோ நண்பகலிலோ தெரிவதில்லை.என்? யாதோ ஓர் இருள் நம் அறிவை மறைக்கிறது. இவ்வாறே, நேற்றுக்கு முன்னாளோ நேற்றோ நடந்தது இன்று நினைவில் இல்லை. சென்ற வாரத்தில் நிகழ்ந்தனவும், சென்ற திங்கள், ஆண்டுகளில் நிகழ்ந்தனவும் மறைந்துபோகின்றன. அவற்றை யாதோ ஓர் இருள் சூழ்ந்து மறப்பும் மறைப்பும் உண்டாக்குகிறது. அதாவது நாளை வருவதை அறியாமல் தடுக்குங்கால் இருளை மறைப்பு என்றும், நேற்று நிகழ்ந்ததை அறியாமல் தடுக்குங்கால் அதனை மறப்பு என்றும் வழங்குகிறோம். கால வேறுபாடு பற்றிச் சொல் வேறுபட்டதே யன்றிப் பொருளால் இருள் இருளே. இவ்வாறு நம் அறிவு முன்னும் பின்னும் ஒருவகை இருளால் மறைக்கப்படுகிற தன்றோ, அஃது எங்கே இருக்கிறது? நமக்குள் கிடந்து நம் அறிவைச் சூழ்ந்து கொண்டு மறைக்கிறது. அதனை நம் சிவஞான போதம் மலம். என்று உரைக்கிறது; திருக்குறள் அதனை இருள் என்று காட்டி, "இருள் சேர் இருவினை'' என்றும், "இருள்தீங்கி இன்பம் பயக்கும்'' என்றும் கூறுகிறது. தேவாரத் திருமுறைகள், ''ஊனத்திருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டடி பேணும்'  என்றும், "ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத் திருளை "நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்'' என்றும் அறிவுறுத்துகின்றன. உலகில் உடம்பு கொண்டு வாழ்க்கை. நடத்துவதால், அனுபவம் என்ற ஞானவெளியால் இவ்விருள் பைய நீங்குகிறது. இதனால், உலகப் படைப்புக்குக்காரணம் உயிர்கள் இருள் நீங்கி அறிவு விளக்கம் பெறுதற்பொருட்டு என்பது நன்கு விளங்கும். இக் கருத்தையே,

"காரியம் காசினியாதி; ஏரியல்
ஈசன் கத்தா இவற்கு இது போகம்
ஆதல் செல்லாது. அசன்றுயர் கருமம்
தானோ நுகர்தல் செல்லாது. ஆனாது
என்னை செய்தது என்னின்? அன்னோ !
கொன்னே செய்யான் தன்நேர் இல்லோன்;
பாரிசேடம் அதனில், பரனுக்கு;
ஏரியல் பான்பசு என்று அறி இனிதே''

என்று ஞானாமிர்தம் கூறுகிறது.

உயிரைச் சூழ்ந்திருப்பது போல, உயிர்கள் வாழும் உலகையும் இருள் சூழ்ந்திருக்கிறது. மின்கணையின் (Sputnik) வாயிலாக வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்" (365) என்று புறநானூறு கூறும் நீத்தத்தில் (Ether) உலவிய ருசிய நாட்டு யூரி காகாரின் (Yuri Gagarin) என்பவர், நிலவுருண்டையைச் சுற்றி நீல இருள் சூழ்ந்துளது என்றது பலர்க்கு நினைவிருக்கும். The earth has a blue halo round it and the colors on the horizon change from light blue, thorough blue, dark blue and violet to the black of the sky.'' § [§ Soviet Man in Space - P. 22.] இவ்வளி வழங்கா நீத்தத்தைக் கண்ட தமிழ்ச் சான்றோர், நிலவுலகு இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்ற கருத்தை, முருகப்பெருமானுடைய திருமுகத்தின் அருள் நிலையை உரைக்குமிடத்து, "மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப், பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்'' என்று காட்டியுள்ளனர். இவ்விருள், ஞாயிறும் திங்களும் கோள்களும் மறைந்த நள்ளிரவில் நாம் காணத் தோற்றமளிப்பதை நுணுகி உணர்பவருக்கு, உலகம் இருளில் கிடப்பதென்பது - தெரியும். நல்ல வெய்யிற் காலத்தில் மாசு மறுவில்லாத', நீலவானத்தில் உச்சிப் பொழுதில் ஞாயிறு ஒளிவிட்டுத்திகழும் அமையத்தும் அதன் வெயிலொளியில் இருள்தோய்ந்து உளது என்பாராய் மாதவச் சிவஞான முனிவர், வெயிலொளியில் கையை நீட்டிய வழித் தோன்றும் நிழல்யாது? அஃது இருளல்லது வேறில்லை என்று காட்டியது அறிஞர் தெரிந்த தொன்று. ஞாயிற்றின் கதிரை ஆராய்ந்த விஞ்ஞானிகள், நீலக்கூறு கண்டு அது வேறன்று, இருட்கூறு. என்கின்றனர். இவ் வண்மைகளை மெய் பெறத் தெளிந்த மேலோரான உமாபதி தேவர்,

ஒளிக்கும் இருட்கும் ஒன்றேயிடம்: ஒன்று மேலிடில், ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிர்க்குயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும்; திரிமலத்தே
குளிக்கும் உயிர், அருள்கூடும் படி கொடிகட்டினனே''

என்று எடுத்துரைப்பது. விஞ்ஞான அறிவு பெருகிய இன்றைய நமக்கு மிக்க இறும்பூது பயக்கின்றது.

இவ்வாறு புறத்தே இருள் சூழ்ந்த உலகில், ஞாயிறு முகலிய ஒளிப்பொருளைத் தந்து உய்விக்கும் முதல்வனாகிய சிவபரம் பொருள், அகவிருளாகிய மலம் நீங்கி அறிவொளி பெற்று நாம் இன்புற வேண்டு மென்ற திருவுள்ளங்கொண்டே உலகைப் படைத்துள்ளான் என்பது, இதுகாறும் விளக்கியவாற்றால் நன்கு உணரலாம்.

இங்கே, உலக வாழ்வு, உயிர்கள் இருள் நீங்கி இன்புறுதற்கு எவ்வாறு துணை செய்கிறது? என்றொரு கேள்வி எழுகிறது. உயிர்கள் உலகில் வாழ்தற்பொருட்டு உடல் படைக்கப்பட்டது; உலகப் பொருளையுண்டு வளர்தலால், உடலும் உலகிற்குக் காரணமாகிய மாயையால் ஆகிய தாகும். உடலில் அறி கருவி ஐந்தும், செயற்கருவி ஐந்தும், மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்றநான்குமாகிய அகக்கருவி நான்கும் உள்ளன. உலகியற்பொருளை அறிதற்கும் அப்பொருளிடையே இருந்து செய்வன செய்தற்கும் அறிகருவி செயற்கருவி என்ற இரண்டும் தொழிற்படுகின்றன. இவ்விரண்டும் உடலின்புறத்தே இருத்தலின் இவற்றைப் புறக்கருவி என்பர். இருவகைக் கருவிகளையும் பொறிவட்டம் (Sensory Zone) எனத் தொகுத்துரைப்பர். மனம் முதலிய நான்கும்உடலுக்கு உள்ளே இருத்தலால் அகக்கருவி என்றும் புந்திவட்டம் (Mental Zone) என்றும் குறிக்கப்படும். 'புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனே” என்று அப்பரடிகள் அருளுவது காண்க. புறக்கருவிகள் நிகழ்கால நிகழ்ச்சிகளை அறிதற்கும் செயற்கும் உரியன. அகக்கருவி முக்கால நிகழ்ச்சிகளையும் எண்ணியறிதற்கு அமைந்தன. அகக்கருவியான புந்திக்கு உள்ளே உயிர் இருக்கிறது. உயிரைச் சூழ்ந்து கலை முதலிய உட்கருவிகள் உள்ளன. அவற்றை உயிர்வட்டம் (Spiritual Zone) என்றல் வேண்டும். அவை உயிரின் அறிவு, விருப்பு, தொழில்என்ற மூவகை ஆற்றல்களையும் தொழிற்படுத்துவனவாகும்.அவற்றை வித்தியாதத்துவம் என்று சாத்திரங்கள் கூறும்.

நம் உடற்குள் இருக்கும் கலை முதலிய உட்கருவிகளைச்சிவ பரம்பொருளின் அருட்சத்தி தோய்ந்து தொழிற்படுத்தும். சிவனது அருட்சத்தி அறிவு தொழில் என இரண்டாய் இயைந்து, கலை முதலிய கருவி வாயிலாக உயிரின் அறிவு விருப்பு செயல் ஆகிய மூன்றையும் எழுப்பி, அவற்றிற்குரிய புந்திவட்டத்து அறிகருவிகளையும் பொறிவட்டத்துப் புறக்கருவிகளையும் இயக்கும் அறிவைச் சிவம் என்றும், செயலைச் சக்தி என்றும், அறிவும் செயலும் ஒத்த அளவில் சதாசிவம் என்றும், அறிவினும் செயலளவு மிகுகற்கு ஈசுரம் என்றும், செயலி னும் அறிவாற்றல் மிகுங்கால் சுத்தவித்தை யென்றும் நூலோர் வழங்குவர். அருள் வாயி லாகிய சிவ முதலிய ஐந்தையும் சிவதத்துவ மென்பர். சிவதத்துவம், வித்தியாதத்துவம், புந்திவட்டம் பொறிவட்டம் நிலநீர் முதலிய பூதவட்டம் என்ற மூன்றும் கூடிய ஆன்மதத்துவம், ஆகிய மூன்றையும் கொண்டது நமது உடல். உடலோடு கூடி உயிர் இயங்கும் போது இம்மூவகைத் தத்துவங்களும் தொழிற்படுகின்றன. மனத்தால் எண்ணும் போதும், வாயாற் பேசும் போதும், கைகால்களால் ஒருதொழிலைச் செய்யும் போதும் இம் மூவகைத் தத்துவங்களும் செயல்படுகின்றன.

செயல்கள் அத்தனையும் வினை எனப்படும். மனத்தால், நினைத்தலும் நினையாமையும், வாயாற் பேசுதலும் பேசாமையும், உடம்பால் ஒன்றைச் செய்தலும் செய்யாமையும் யாவும் வினையாகும்.

ஒரு வினை நிகழ வேண்டின் அதனைச் செய்வது ஒன்று வேண்டும். வினையால் விளைவது பொருள், பயன் என இருவகைப்படும். பொருள், செயப்படுபொருள்; பயன் இன்பம் துன்பம் என்பன. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் பயப்பது தீவினை. வினைப்பயன். அவ்வினையைச் செய்பவர்க்கே உரியது; அது வினை தொடங்கும் போது உடன் தோன்றி, அது வளரத் தானும் வளர்ந்து, அதுமுடியுங்கால் இன்ப வடிவிலோ துன்ப வுருவிலோ அமைகிறது. நாளுக்கு இரண்டு ரூபாய் கூலி பேசிக்கொண்டு ஒருவன் ஒருவினையைச் செய்வதாக வைத்துக் கொள்வோம்.அவன் காலையில் அதனைத் தொடங்கும் போதே பயனாகிய கூலியும் தோன்றி வளர்கிறது. பகல் ஒரு மணிக்கு அது ஒரு ரூபாயாகிறது; மாலை மூன்று மணிக்கு ஒன்றரை ரூபாயாகி, ஆறு மணிக்கு இரண்டு ரூபாயாகிறது. வினை முடிந்தபின் அதனிடத்தே ஊழ்த்திருக்கும் பயனாகிய இரண்டு ரூபாயும் அவனை அடைகிறவரையில் வினைப்பயனாய் ஊழாய் நிற்கிறது.

வினைப்பயன் உயிரில்லாத அருவப் பொருளாதலால் அது தானே சென்று செய்பவனை அடையாது; அருவாய் இருத்தலால் வினைப்பயனைச் செய்பவனும் எடுத்துக் கொள்ள முடியாது. அதனால், ஒருவன் ஒருவினையைச் செய்தால், அவ் வினைப்பயன் அவனையே அடையுமாறு இறைவன் ஊட்டுகிறான். இச் செயலால் வினை செய்பவன் அவ்வினைப் பயனை நுகராமல் போவதற்கு இடமில்லையாகிறது.

இவ்வாறு உயிர்கள் உடலைக் கொண்டு உலகில் வினை செய்வதால், அறிவு விளக்கமும் இன்பமும் பெறுகின்றன. அதனால் அவற்றின் அறிவைச் சூழ்ந்த இருள் நீங்குகிறது. இவ்வகையால் மக்கள் உடலும், வினையும் கொண்டு உலகில் செய்வன செய்து நுகர்வன நுகர்ந்து வாழ்வதால் இருள்நீங்கி இன்பம் பெறுகின்றனர்.

உடம்பும் உலகுமாகிய மாயையும், வினையும் என்ற இரண்டும், உயிர், இருள் நீங்கி இன்புறுதற்குக் கருவியும்உதவியுமாயிருக்க, "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்'' எனத் தொல்காப்பியரும், ''வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்'' என்று மெய்கண்டாரும், இவர்கட்கு இடையில் தோன்றிய பெரியார்கள், ''வினையாயின தீர்ந்து அருளே புரியும் விகிர்தன்விரிகொன்றை, நனையார் முடிமேல் மதியம் சூடும் நம்பான்" என்றும், 'வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்குமிக இரங்கி அருள் புரிந்து வீடுபேறு ஆக்கம் பெய்தானைப்பிஞ்ஞகனை'' என்றும், வினையை வெறுத்துப் பேசுகின்றனர். இவ்வாறே உடம்பின் வெறுக்கத்தக்க கூறுகளை வகுத்து  ''ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பதானேன்'' என்றும், "பொத்தையூன் சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பொழுகிய பொய்க்கூரை, இத்தை மெய்யெனக் கருதி நின்று இடர்க் கடலில் சுழித்தலைப்படுவேன்என்றும் உடம்பை வெகுண்டுரைக்கின்றனர். பெரியோர்களின் இப் பேருரைகள், முன்னே நாம் கண்ட கருத்துக்கு மாறுபடுகின்றனவே என்று உண்மை யாராய்வார் உள்ளத்தில் ஐயங்கள் எழும். எழுவது முறையுமாகும்.

இன்ப வடிவினனாகிய இறைவன், உயிர்கள் இன்பம் பெறுவது கருதி யளித்த உடம்பும் உலகும் வினையும் இன்பவடிவினவே யாகும். உடம்புற்று நிற்கும் உயிர்கள் மனம்மொழி மெய்களால் உலகப் பொருள்களினூடே வினை செய்து வாழ்க்கை நடத்துங்கால், அவ்வினை முடிவில் இன்பம் தோன்றுகிறது. "உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்'' என நற்றிணை கூறுவது காணலாம். அரசியலில் உயர்ந்த வினைக்குரிய பதவியிலிருந்து அதன் இன்பச்சுவை கண்டவன் அதற்கே அடிமையாகித் தன் தனிவாழ்க்கைக் குரியவற்றையும் நன்கு எண்ணாது அப் பதவியையே காதலித்து வருவது போல, வினைக்குரிய கூறுகள் யாவும் ஒழுங்காகத் துணை செய்யுங்கால் வினை வழியாக விளையும் பொருளும் பயனும் தோன்றிப் புகழும் இன்பமும், தருகின்றன; இவ்வின்பத்தை நுகரும் உயிர். இன்பநாட்டத்தையே இயல்பாக உடையதாகையால், வினைக்கே அடிமையாகி அது தரும் புகழ் இன்பங்களையே நச்சிப்பற்றுக் கொள்கிறது.

உடம்பும் உலக வாழ்க்கைக்கு ஏற்ற வன்மையும் அழகும் பெற்று இன்பக் கருவியாய், அறமும் பொருளும் நல்கும் இன்பத்தை நுகர்கிறது. இவ்வகையில் உடம்பும் இன்பப் பேற்றுக்கு வாயிலாவதால் அதனுள் உறையும் உயிர் உடம்பின் பால் (மாயை பால்) பற்றுக் கொள்கிறது. "இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறும் காதற்றுயிர்' என்று திருவள்ளுவரும், ''உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே'  என்று அருணந்திசிவனாரும் கூறுவர். இவ்வாறு வினையும் உடம்பும் இன்பம் நல்குவதால் அதுபற்றி, உயிர்கள் வினையே வாழ்க்கைக்கு உறுதியாவது என்றும்,உடம்பைப் போற்றிப் பேணுவதே வாழ்வின் பயன் என்றும் மயங்கி, அவ்விரண்டுக்குமே அடிமையாகின்றனர். வினை நுகர்வும் உடம்பைப் பேணலும் வினையாதலால், அச்செயல்களால் வினைகளும் பெருகுகின்றன. வினை செய்யச்செய்யப் பயன் பல விளைதலால், அவற்றைச் செய்யும்உயிர்கள் வினைப் பயனை நுகர்ந்தே கழிக்க வேண்டியவாகின்றன. வினை நுகர்ச்சி உடம்பில்லாமல் ஆகாது. ஆகவே, வினைக்காக வேறு வேறு உடம்பெடுக்க வேண்டிய இன்றியமையாமை உண்டாகிறது. இவ்வாறு உயிரும் வினையும் உடம்பும் ஒன்றோடொன்று பிணிப்புண்டலால், வினையையும் உடம்பாகிய மாயையும் கட்டென்றும் பாசமென்றும்,உயிரைச் சூழ்ந்து பற்றி நிற்கும் இருளை மலம் என்றும் அசத்தென்றும் சான்றோர் கூறினர்.

இருள் நீங்கி இன்பம் பெறுதற் பொருட்டு இறைவன் படைத்து உதவிய உலகின்கண், அவன் அருளால் கிடைத்த உடம்பிடை நிலவும் உயிர், இருணீக்கத்துக் குரிய வினையை மேற்கொள்ள வேண்டும் என்பது பெறப்படும். அவ்வினைகள் மேன்மேலும் பிறப்பதற்கே ஏது வாதலையும் காண்கிறோம். இவற்றை எண்ணியே திருஞானசம்பந்தரும் "அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்; உய்வினை நாடாதிருப்பது உந்தமக்கு ஊனம் அன்றோ" என்றார். உய்வினை என அவர் கூறியது யாது? உய்வினை என்பது சிவஞானச் செய்தி என அறிவுநூல்கள் கூறும். ஞானசம்பந்தரும், "ஊனமாம் உடம்பினில் உறுபிணிகெட எண்ணில், ஞான மாமலர் கொடுகணுகுதல் நன்மையே" என்பர். மெய்கண்டார், "ஞானம் வினை தீரினன்றி விளையாது” என்பர். இவர்கள் கூறுவனஎல்லாம் அடங்கத் திருமூலர்,

''வினையால் அசத்து விளைவதும் தேரார்
வினைஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினை வீட வீடு என்னும் வேதமும் தேரார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே'' 

என்று சுருங்க உரைக்கின்றார்.

வினை தீர்தற்கு வாயிலாயின் அந்த ஞானம் யாது?

இன்று, ஞானம் என்பது உலகியலில் விஞ்ஞானத்தின் மேல் நிற்கிறது. விஞ்ஞானிகளையே இன்றைய அரசியல் -பொருளியல் உலகுகள் ஞானிகளாகக் கொண்டு அவர்கட்கு வழிபாடு செய்கிறது. அவர்களது விஞ்ஞானம் எங்கே நிற்கிறது என்று காண்பது நன்று. ஓர் உண்மையைக் கண்டறிய முயலும் ஒரு விஞ்ஞானி பன்னாளும்பன்முறையும் பல்வகைப் பொருளையும் கொண்டு ஆராய்கின்றான்; உண்மை காண முடியாமல் மெய் சோர்ந்துஅறிவு சோர்ந்து தளர்ந்து சாய்கிற நிலையில் ஓர் உணர்வு அவன் உள்ளத்தில் ஒளிர்கிறது. அதனைச் செயற்படுத்துகிறான்; உண்மை விளங்கிவிடுகிறது. ஓடுகிறான், ஆடுகிறான், பாடுகிறான், பித்கேறியவன் போல் பேசி மகிழ்கிறான். சிறிது போது கழித்து, இப்பொழுது தோன்றிய இவ்வுணர்வு என் முன்னமே தோன்றவில்லை என எண்ணுகிறான். அவனுக்குப் பெர்க்சன் (Bergson) என்ற அறிஞர், Matter and Memory என்ற நூலில், அது உள்ளுணர்வு (Intuition) என்று உரைக்கின்றார். அவ்வுள்ளுணர்வை (Intuitionism) நம் முன்னோராகிய சிவஞானச்செல்வர்கள் அருள் என்றும், அருள் ஞானமென்றும்,  அருளறிவு என்றும் பலபடப் பாராட்டியுரைப்பர். விஞ்ஞானியின் கருவியாகிய உடலும் கரணமாகிய மனமும் உண்மையாக முயன்று ஓய்ந்து அயர்ந்து செயலறுகின்ற போது உள்ளுணர்வு தோன்றி ஒளி செய்யப் பார்க்கின்றோம். பாரதத்தில் பாஞ்சாலி, அரசவையில் துச்சாதனன் கைப்பட்டுக் கலங்கியபோது, கணவன்மார் கைவிட்டனர்; குடிப் பிறந்தோர் கைவிட்டனர்; சான்றோர் சமழ்த்தனம்; அரசும் கைவிட்டது. கண்ணீர் சொரிந்தாள்; கை சோர்ந்தாள்; மெய் சோர்ந்தாள். சுருங்கச் சொன்னால், பாஞ்சாலியின் கருவி கரணங்கள் யாவும் வலியழிந்து கையறவுபட்டன. அப்போது அவள் கோவிந்தா கோவிந்தா என அரற்றினாள் அவள் உள்ளத்தில் ஊறாத அமிழ்து ஊறிற்று; உடல் முழுதும் பரவிப் பெருவலி நல்கிற்று; துச்சாதனன் சோர்ந்தான்; அங்கிருந்த அனைவரும் அஞ்சி அலமந்தனர்; இது தான் திருவருள் உணர்வு, அறிவு உதவி என்று பாராட்டப்படுவது. இதனைச் சிறிது எண்ணினால் பாஞ்சாலியின் துகில் பற்றிய இச்செய்தி, திருவருள் உயிர்கட்கு அருள் செய்யும் செயற்கு ஏற்ற எடுத்துக்காட் டாவது இனிது விளங்கும்.

இந்த அருளுணர்வை உள்ளத்தின் கண் தோற்றுவித்து அதனை முன்னிறுத்தி, அதற்கு முதலாகிய சிவ பரம்பொருளை உள்ளத்தின் கண் எழுந்தருளச் செய்வதுதான் சித்தாந்தச் செந்நெறியின் அறிவுரை.

அருளொளியை உள்ளத்தில் தோற்றுவிப்பது எவ்வாறு?

மாயை என்ற சத்தி வடிவாய்த் தன் அருளாற்றலில் ஒடுங்கிக் கிடந்ததனை அணுவாக்கிப் பின் அவற்றைக் கொண்டு உலகு உடப்புகளை இறைவன் படைத்து உயிர்கட்கு உதவியது, அவ்வுயிர்கள் உடம்பின்கண் நின்று வாழ்வாங்கு வாழ்தற் பொருட்டு என்று முன்பே கண்டோம். உலகு உடம்புகளின் ஒவ்வோர் அணுவும் ஒழுங்காகவும், முறை பிறழாமலும், வளம் எய்தும் போது வளர்ந்தும், கேடு வரும்போது தற்காத்தும், தானேநிலவுதற் பொருட்டு, அவனது அருளாற்றல் ஒவ்வோரணுவிலும் கலந்து பரந்து நிறைந்து நின்று இயக்குகிறது.அதனால், நாம் அவற்றின் நலம் கண்டு மகிழ்ந்தும், வேண்டுமளவு கையாண்டு பயன் துய்த்தும் வாழ்கிறோம். இன்றுமக்களுயிர் நிலவுலகின் பலவேறு கூறுகளை நுணுகியாராய்ந்து பயன் துய்த்து இன்புறுகிறது. நிலம் நீர் நெருப்புகாற்று வானம் ஆகிய ஐந்தினும் துருவியாய்ந்து அவற்றின்நுட்பங்களைப்பற்றி நல்லறிவு பெற்று வருகிறது. நிலனும்கடலும் காற்றும் வானும், இன்று மக்களுயிர் இயங்குதற்கு ஏற்ற இடமாய்க் கொண்டு இன்புறுதற்கு அறிஞர்செய்த ஆராய்ச்சிகள் ஏதுவாகின்றன. அந்த ஆராய்ச்சிகயாளர் உள்ளத்தில் நின்று அவரது அறிவுக்கும் முயற்சிக்கும் ஒப்ப ஒளி தந்து உதவிய திருவருள் திறத்தை உன்னு தல் வேண்டும். இன்றைய விஞ்ஞானம், தனது புதியபுதிய நுண்ணிய கண்டுபிடிப்புக்களுக்குக் காரணம் தனதுநுழைபுலனும் அதிரா வூக்கமும் அயரா முயற்சியுமே எனநினைக்கிறது. அவற்றின் உள்ளீடாய் நின்று ஒளிவழங்கிய திருவருளை மறந்துவிடுகிறது. அதனால் உலகியல் வாழ்வை ஆராயும் அறிவு 'அறிதோறு அறியாமை கண்டற்று" என்று திருவள்ளுவர் கூறியது போல, அறிதோறும் அறியாமை கண்டு வருந்துகிறது. அந்த அறிஞர்கள்,

“The more we learn the less we know;, every advance reveals new mysteries and new uncertainties; the molecule discloses the atom, tile atom discloses the electron, the electron discloses the quantum and the quantum defies and overlaps all our categories and all our laws. Our instruments, we perceive, are bound up with matter, and our senses are bound up with mind; it is through these mists that we, 'flakes on the water' would comprehend the sea. $
[$ Will Durant's 'Pleasures of Philosophy'. P. 34.] 

என்று கூறுகின்றனர். நான் முன்னே காட்டிய பாஞ்சாலியின் செயலை மறுபடியும் காண்போம். அவள் துரியோதனன் பேரவையில்,

''ஆறாக இரு தடங்கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகைந்த கைசோர மெய் சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்றாற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்துற உடல் புளகித்து உள்ளமெலாம் உருகினாளே.''

என்று பாரதம் கூறுகிறது. தனக்குக் கோவிந்தன் துணைசெய்வான் என்பதை அறிந்திருந்தும், தன் உடல் கருவிகரணங்களை முழுதும் செலுத்தித் தன் மானத்தைக் காக்க முயன்றாள்; அவை யாவும் சோர்ந்து செயலற்றதைக் காண்கிறாள். இறைவன், தான் அருளிய உடலும் மனமும் சோர்வு எய்தும் போது, அச் சோர்வு போக்கி, இன்றியமையாத துணை செய்வது தனக்கு அருட் கடனாதலின், ஊறாத அமிழ்து தந்து அவளுடைய உடலின் சோர்வு போக்கி வன்மை தந்தான்; அவனது திருவருள் அவட்கு வேண்டிய சீலையையும் தோற்றுவித்தது. இவ்வாறே இயற்கைப்பொருளை ஆராய்ந்த அறிஞர்களுக்கு, அவர்சளுடையகருவி கரணங்கள் முழுதும் ஓய்ந்து அயர்ந்தபோது வேண்டிய அறிவொளி தந்து பெறுதற்கரிய நுண்ணிய கருவிகளைக் காணும்படி திருவருள் உதவியுள்ளது. இன்றையநமக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமாகத் தோன்றவில்லை; ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருப்பவரோடு பேசுவது அருமையாக இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பேசுபவரையும் அவர் பேச்சோடு உருவத்தையும் காண்பது வியப்புத் தரவில்லை. இவ்வளவு நலங்களையும் பெறுவதற்குத் தோன்றாத் துணையாவது அருள் என்று அறிதல் வேண்டும்.

ஒரு சிறுவன் ஒரு கணக்குப் போடுகிறான். மிக்ககண்ணும் கருத்துமாய்ப் போட்ட விடத்தும் உண்மை விடை தோன்றவில்லை. தலையில் அடித்துக்கொண்டு வருந்துகிறான்; அழுகிறான்; புழுங்குகிறான். ஒரு வழிக்குப் பல வழிகளை எண்ணுகிறான்; சோர்வு எய்துகிறது. அதனூடே ஒரு குறிப்புப் பிறக்கிறது. கணக்கைப் போடுகிறான்; உண்மை விடை வந்து விடுகிறது. ஆடுகிறான்;மகிழ்கிறான்; அளவில்லாத இன்பம் அடைகிறான். சோர்வும் வருத்தமும் எய்து முன் வராத விடை, அச் சோர்வு தோன்றிய பின் வருகிறது. கருவி கரணங்கள் மெய்யாக உழைத்துச் சோர்வு எய்துங்கால் உண்மை யொளி எய்துகிறது. உடம்பையும் உள்ளத்தையும் மெய்யாக உழைப்பின் கண் செலுத்துவது திருவருளின் தணையைப் பெறுதற்கு நேரிய வழி என்பது இதனால் தெளிவாகக் காணலாம். இதுதான் சிவஞான போதம் கூறும் தவம். அதில் மெய்கண்டார், "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு, அந்நியமின்யையின் அரன்கழல் செலுமே" என்றார். தவம் என்றது உண்மை யுழைப்பு. குரு, இருள் நீக்கும் ஒளிப்பொருள்; ஒளி நல்கும் பொருள். அறிவுக் கறிவாய் அகத்தே நின்று ஒளிர்வதே யன்றிப் புறத்தே அறிவு நல்கும் மக்களாகவோ பொருளாகவோ உதவுவது பற்றித் தம் முதல் குருவுமாய் உணர்த்துவன் என்று அருளுகிறார்.

நான் இப்பொழுது உங்கள் முன் பேசுகிறேன். என் பேச்சின் ஒலியை இவ்வொலி பெருக்கி பன்மடங்கு உயர்த்தி உங்களிடையே பரப்புகிறது. அது செய்யும் வேலை யாது? என் பேச்சை முதற்கண் வாங்குதல் ஒன்று; பன்மடங்கு பெருக்குதல் ஒன்று; பெருக்கிய அதனை வெளியிடல் ஒன்று. வாங்கும் கருவி ஒலியை வாங்குதல் தவிர வேறு எதையும் செய்யாது; ஒலி மிகுவிக்கும் கருவி அஃது ஒன்றைத்தான் செய்யும்; ஒலி பரப்பும் கருவி பரப்புவ தொன்றைத்தான் செய்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனிக் கூறுகளாயினும், என் வாயினின்றெழும் ஒலி, எழுந்தவுடனே உங்கள் செவியில் விழுமாறு அத்துணை விரைவில் இதன் உட்கருவிகள் பணிபுரிகின்றன. இவற்றிற் கெல்லாம் மூலகாரணம் யாது? வேறு ஒன்று மன்று; மின்சக்தி.

நான் பேசுவதைக் காணுங்கள். சிவதத்துவத்தால் இயக்கப்படும் வித்தியாதத்துவத்தால் என் உயிரறிவு பேச முற்படுகிறது; ஆன்மதத்துவத்து மனம் அதற்கு வேண்டும் கருத்துக்களை எடுத்து வழங்குகிறது; அவை உடனே சொல்லுருவும் ஒளியும் பெற்று, என் தொண்டை, நா, பல்,வாயிதழ் ஆகியவற்றின் செயற்பாட்டால் வெளிவருகின்றன. இவை யாவும் ஒழுங்காக வேலை செய்தாலன்றி என்பேச்சு நிரம்பாது. இவை எங்ஙனம் வேலை செய்கின்றன? இவற்றுக்கு மூல காரணம் யாது? அதுதான் ஒலிபெருக்கியை இயக்கும் மின்சக்தி போலும் அருட்சத்தி. அதனை அறிவதுதான் அருளறிவு. அருளொளியை உள்ளத்தின் கண் தோன்றக் காணும் திறமும் இதுவேயாகும்.

இம் முறையில் காணுமிடத்து எப்பொருளும் அருளாட்சியில் அமைந்து கிடப்பது தெரிவதால், காரைக்கால் அம்மையார்,


"அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் அருளாலே
மெய்ப் பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு''   என்று அருளுகின்றார்.

இந்த அருள் எங்கே உளது? இந்த ஒலி பெருக்கியை இயக்கும் மின் சக்தி எங்கும் பரந்து இருப்பது; அஃது இல்லாத இடமே இல்லை என்பது விஞ்ஞானம் உணர்த்தும் உண்மை. ஆனால், அது இன்ன தன்மைத் தென்று இன்றுவரை எந்த விஞ்ஞானியும் கண்டதில்லை. அதனைப் பலபொருளிலிருந்து வெளிப்படுத்திப் பயன் கொள்ள அறிந்த விஞ்ஞானம், அதன் தோற்றக் கூறுகளை அறிய மாட்டாது கைவிட்டு விட்டது. அந்த மின்சக்தி சில பொருள்களின் ஊடே செல்ல முடிவதில்லை. மரக்கட்டையில், ரப்பரில் அது பாய்வதில்லை. இத்தகைய குறைபாட்டுக்கு உள்ளாகிய மின் சக்தி போலாது, அருட்சக்தி உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிலும் கலந்து கொள்ளும் பெருமை யுடையது. அதன் இயல்பு கண்ட அருளாளர்.  அருட் சக்தி, உயிரில் பொருள்களில் ஒன்றாயும், உயிர்ப்பொருளில் உடனாயும், தனி நிலையில் வேறாயும் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனை, ''உலகெலாமாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி நிற்பது எனச் சிவஞானசித்தியார் கூறுவதை நினைவிற் கொள்ள வேண்டும். உயிரில் பொருள்கள் அறிவில்லாதவை யாதலால், அவை ஒழுங்கு முறை பிறழாமல் அமைவது வேண்டி அவற்றோடு ஒன்றயும், உயிர்கள் அறிவுடையவை யாதலால் அவற்றிற்கு அறிவு உதவுவது குறித்து உடனயும் இருக்கிறது. Nature obeys certain laws என்பது விஞ்ஞானி கண்டுரைக்கும் முடிபு.

இவ்வாறே, இத்திருவருள், நம் உடற் கூறுகளில் ஒன்றாயும், உயிரோடு உடனாயும் இருக்கும் திறத்தை அறிதல் வேண்டும் என்பது சிவநெறி கூறும் அறிவுரை யாகும்.அது சிந்தனையால் அறியப்படும்... நான் பேசும்போது என்பேச்சை உருவாக்குங்கால் என் உடற்கூறுகள் ஒழுங்காக  வேலை செய்கின்றன. அறிவில்லாத இக் கூறுகள் மின்சக்தியால் இயங்கும் எந்திரக் கூறுகள் போல ஒழுங்காகவும் முறையாகவும் வேலை செய்வதற்குக் காரணம் அருட்சக்தி என்பது ஆழ்ந்த சிந்தனைக்கே புலனாகிறது. கணக்குப் போட்ட சிறுவனுக்குத் தொடக்கத்தில் தோன்றாத உண்மை, பல் முயற்சிகட்குப் பின்னே தோன்றியது ஏன் என்று சிந்திக்கும்போது, அருட் சக்தியின் உண்மை புலனாகிறது. இது பற்றியே மெய்கண்டார்,  "ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை காடுக' என்றார்.

மின் சக்தியைக் கண்ட விஞ்ஞானிகள் அது வான வெளியில் வளி வழங்காத நீத்தத்தில் (Ether) ஒடுங்குவது கண்டு அதனை ஆராய முற்பட்டனர். அஃது இன்ன தன்மையதென்று யாரும் அறிய முடியவில்லை. ''Ether? Nobody knows''என வில்டூரண்டு என்பவரும், “The ether, said Lord Salisbury, is only a noun for the verb to undulate, it is a fiction created to conceal the learned ignorance of modern Science”‡  என்று William James என்பவரும்,'' The ether is not a kind of matter; it is non - material"  என்று எடிங்டன் என்பவரும் கூறுகின்றனர்.

Pleasures of Philosophy - P. 40.
The Meaning of Truth - P. 59.

ஆனால், சிவநெறிச் செல்வர்களாகிய நம் முன்னோர், அருட்சக்தி யொடுங்கும் நீத்தம் சிவபரம்பொருள் என்றும், அதற்கு அந்த அருளே திருமேனி என்றும் அறிவறுத்தருளினார்.

மேலே நிகழ்ந்த அருளாராய்ச்சியால் நமது மனம்நினைப்பதற்கும் வாய் பேசுவதற்கும், உடல் ஏற்ற தொழில்களைச் செய்தற்கும் அருட்சத்தியின் இயக்கம் முதலாதல் கண்டோம்.

இந்த அருளறிவை அருள்ஞானம் என்றும் சிவஞானமென்றும் பதிஞானமென்றும் சான்றோர் குறிப்பிடுவர். இதனை அறிந்து பெறுபவர் அருட்கு முதலாகிய சிவத்தைத்தமக்கு முன்னே நிறுத்தித் தம்மை அதன்கண் ஓடுக்கித்தமது நினைவு சொல் செயல் அனைத்தும் அச் சிவத்தின் செயலாகவே கொள்ளத் தலைப்படுவர். அவ்வாறு ஆணும் பெண்ணுமாகிய ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தவே மெய்கண்ட தேவர், ''அவனேதானே ஆகிய அந்நெறி, ஏகனகி இறைபணி நிற்க'' என்றும், அவ்வாறு நின்றால் பிறப்பிறப்பாகிய துன்பச் சூழலினின்றும் நீங்கலாம் என்றற்கு மலமாயை தன்னொடு வல்வினை இன்றே'' என்றும் வற்புறுத்துகின்றார்.

அவர்க்குப் பல்லாண்டு கழித்துத் தோன்றிய உமாபதிசிவம், அருளையறிந் தொழுகும் நெறியை ஞானம் பற்றல், தன் பணி நீத்தல், நேயத் தழுந்தல் என்று மூன்றாக்கி,அவற்றை முறையே ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்மலாபம் எனப் பெயர் தந்து,

"தேசுற மருவும் ஆன்ம தெரிசனம் ஆன்ம சுத்தி
ஆசிலா ஆன்ம லாபம் ஆக மூன்முகும் மூன்றும்
பாசமது அகல ஞானம் பற்றல் தான் பணியை நீத்தல்
எசில் நேயத்து அழுந்தல் எனும் இவற்று அடங்கும் அன்றே"

என்று வகுத்தும் விளக்கியும் கூறினர்.

நாம் செய்யும் முயற்சியில் நமது கருவி கரணங்களோடு கலந்து, நாம் அறிய வேண்டியவற்றைத் தானும் அறிந்தும், அதுபற்றி நாம் செய்ய வேண்டியவற்றிற்குச் செய்முறை அறிவித்தும், திருவருள் உதவுவதை நினையின்,உதவி புரியும் அவன்பால், உதவி பெறும் நமக்கு அயராஅன்புண்டாகிறது. அந்த அன்பு, நம்மை, முடிவில்,உடலின் நீங்கும் காலத்துச் சிவானந்த ஞான வடிவம்நல்கிச் சிவபரம் பொருளின் திருவருள் இன்பம் பெறுவிக்கிறது.

இதனை மெய்கண்டார்,
"காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே''
என்றார்.

இச் செயல் முறைகள், சுமார் 700 ஆண்டுகட்கு முன்வாழ்ந்த மக்களினத்துக்கு இனிது அறிந்து கொள்ளும்வகையில் உரைக்கப்பட்டன. இடைக் காலத்தில் நாம் நம்நாட்டின் சூழ்நிலையையும் மக்களினத்தின் நினைவியல்புகளையும் பொருளும் தொழிலும் பிறவுமாகிய வாழ்வியல்களையும் அறியும் அறிவு சுருங்கிப் " பிறர்க்கே உழைத்து ஏழையானேன் " எனத் திருமங்கையாழ்வார் சொல்வதுபோலப் பிறர் பொருட்டு அடிமையுற்றோம். அதனால்,இன்று நமக்கு அப்பெருமக்கள் கூறியன அறிதற்கு,அருமையாகத் தோன்றுகின்றன. எளியவாய் இருப்பின்,நாம் அனைவரும் சீரிய பெரிய சிவஞானச் செல்வர்களாக அன்றோ திகழ்வோம் !

இந்த நிலையில் கல்வி, சமுதாயம், தொழில், வாணிகம்.அரசியல் முதலிய துறைகள் அருள்நெறி நோக்காது பிறழ்ந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ளமனமும் சொல்லும் செயலும் இருள் நெறியிலே இயங்குகின்றன. மன நினைவில் காரண காரியஆராய்ச்சி நோக்கமில்லை. மெய்யுணர்தல் என்றதலைப்பில் திருவள்ளுவர் சொன்ன அறவுரை, செயலுக்கு வரவில்லை. எதனையும், ஏன்? எப்படி? எனஆராயும் மனப்பான்மை பெரும்பான்மையும் காணப்படவே இல்லை. அதனால் வாயிலிருந்து வெளிவரும்சொல், உள்ளே மனத்துக்கும் வெளியே செயலுக்கும்.ஒவ்வாமல் உளது. சொல் வேறு, செயல் வேறு படுதலால் தொழிலும்வாணிகமும் உலக மக்கள் அரங்கில் நம்பிக்கையிழந்து சோர்வுபடுகின்றன. தான் வாழ ஏனோர் தனக்குக் கீழாக எனும் ஊன அறிவு உயர்ந்து நிற்கின்றது.

மக்கள் மனம் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணர்வுகளால் நிரம்பாது குறைபடுவதால், பள்ளத்தை நோக்கியோடும் நீர் போலத் தன்னலம் ஒன்றே கருதும் தீயுணர்வுகள் போந்து மனத்தில் நிரம்பி விட்டன; துன்பமும் இருளும் சூழ்ந்து கொண்டன. அருள்நெறி நல்கும் இன்பமும் ஒளியும் மறைந்தன. அச்சமும் அடக்கப்பண்பும் தோன்றி உலக அரசியற் சூழலில் அலைக்கின்ற காட்சியை நாம் நாளும் காண்கின்றோம். நாமும் சமயமாநாடு கூட்டியும் புராணப் பிரசங்கம் செய்தும் திருவிழாக்கள் எடுத்தும் சமயவுணர்வும் ஒழுக்கமும் ஓங்கச் செய்தோம்; நமது சமுதாயம் இம்மியளவும் அசைய வில்லை.

மக்கள் வாழ்க்கையை நோக்காது அதைப் புறக்கணித்து இயலும் எவ்வகைச் சமயமும் சமயமாகாது. வாழ்வில் அறமும் பொருளும் இன்பமும் நிறைந்து அமைவதை வற்புறுத்துவது தான் உண்மைச் சமயம். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து சிவப் பேரின்பம் பெறச் செய்வதே நம் சைவ சமயத்தின் குறிக்கோள். அதுபற்றியே, சைவசமயத்துக்கென வரையறுத்த நூல்களைத் தொகுத்துக்கூறிய பண்டை நாளைப் பெரியோர்,

"வள்ளுவர் மெய்யன்பர் மொழி வாசகப் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகன் செய்தவுரை – ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுத்தி ஓர்ஆறும்
தண்டமிழின் மேலாம் தரம்''  என்றனர்.

''வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற திருக்குறளும், அதன் கடவுள் வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்ற அதிகாரங்களும் பிறவும் சைவத்தின் தனிப்பெருங் கொள்கைகளாதலால், சைவர்கள் திருக்குறளைமுதற்கண் நன்கு படித்துப் பயில வேண்டும் என்பதற்காக வள்ளுவர் எனத் தலைமை நூலாகத் திருக்குறளைச் சைவர்கள் மேற்கொண்டனர்.

மண்ணுலகு முதலிய பலவகை உலகுகளையும் இறைவன் படைத்தளிப்பது, ''நாம் மண்ணகத்தே வந்து'' வாழ்தற் பொருட்டே என்று ஞானசம்பந்தர் முதல் மாணிக்கவாசகரை உள்ளிட்ட பலரும் அவ்வப்போது உரைத்துள்ளனர். உடம்பை நன்கு பேணினாலன்றி மக்கள் ஞானவாழ்வு பெறார் என்பதற்காகத் திருமூலர்,

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்''

என்று தெளிவாகக் காட்டியுள்ளார்.

மக்கள் வாழ்வு தனித்தனியாகவும் சமுதாயமாகவும் இயலுவது. இவ்வாழ்க்கைக்கு வேண்டுவன உதவும் வகையில் கல்வியும், தொழிலும் வாணிகமும் பணி புரிகின்றன; இவற்றிற்கு ஏற்ற வாய்ப்பும் பாதுகாப்பும் அரசு நல்குகிறது. மனைவாழ்வு - நோய்க்கிடந்தராத அகம் புறம்தூய்மை பற்றிய அறிவும், மக்களை நன்முறையில் வளர்த்து நல்லொழுக்க முடையராக்கும் செயல்பற்றிய அறிவும்,ஒவ்வொருவரும் மேற்கொண்டிருக்கும் தொழில் பற்றியஅறிவும், சமுதாயத்துக்கும் அரசுக்கும் தனக்கும் உள்ளதொடர்பு பற்றிய அறிவும், திருவருள் முதல்வனாகிய சிவநெறி அறிவும் கருத்தும் அமைய வேண்டும் என்று வில்லியம் குளோவர் (William Glover) என்பவர் உரைக்கின்றார். இந்த அறிவு மக்கள் மனத்தில் சிந்தனையைத் தூண்டி எல்லாவற்றிற்கும் உள்ளீடாய்த் திகழும் திருவருள் ஞானத்தைப் பெறுவிக்கும் என இக்காலத்துச் சமயச் சான்றோர் கூறுகின்றனர். இங்கே குறித்த அறிவுகளும் கருத்துக்களும் உலக வாழ்வை வாழ்வாங்கு வாழத் துணை செய்துதிருவருள் ஞானத்தை விரிவாகப் பெறுதற்கு உதவுகின்றன.

அருளாராய்ச்சியால், மாயா காரியமாகிய உலகியற் பொருள் நிகழ்ச்சிகளின் உண்மை புலனாகிறது; செய்யப்படும் நல்வினை தீவினைகள் முறையே நல்கும் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக நோக்கும் மனப்பான்மை எய்துகிறது. அதனால், உண்மையறிவான சிவ ஞானத்தால் உலகியல் நாட்டம் தூர்ந்து விடுகிறது; உயிர் சிவத்துள் ஒடுங்குகிறது. எஞ்சி நிற்கும் வினை பற்றுக்கோடின் றிக் கெட்டொழிகிறது.

வாழ்வாங்கு வாழ்ந்து அருள் நிலையை உணரும் உயிர், அதனை விடாது பற்றிப் பயிலுதற் பொருட்டு நாளும்திருவருட் சிந்தனை இன்றியமையாது வேண்டப்படுகின்றது.அருட் சிந்தனைக்குத் திருவைந்தெழுத்தும், அதனைப் பற்றிவிடாமைக்குச் சிவ வழிபாடும் துணையாகும். திருவைந்தெழுத்தில் என்ற எழுத்து உலகியல் வாழ்வையும், அதனை வாழ்வாங்கு வாழப் பண்ணும் அருளையும், வாழும்உயிரையும், உலக வாழ்வை விடுத்துச் சிவானந்தத்தைநுகர்விக்கும் அருட்சக்தியையும், சி இறவாப் பேரின்பம்நல்கும் சிவத்தையும் குறிப்பன.

நமது உள்ளம், உலகியல் வாழ்வுக்குரிய மனைவாழ்வு. சமுதாய வாழ்வுகட்கு வேண்டிய அறிவு செயல் வகைகளில் ஈடுபடுங்கால், அவற்றிற்குரிய கருத்துக்களை வழங்கி, உலகியற் பயன்களை நுகரப்பண்ணும் திருவருள், சிவத்தையும் அதன் பேரருளையும் நினையாவாறு மறைக்கும். மறைக்காவிடில், உலகியல் அனுபவம் நிகழாது; உயிர் தன்னைச்சூழ்ந்திருக்கும் இருள் மறைப்பினின்றும் நீங்காது. அதற்காகவே நாம் ஒன்றில் ஈடுபடும்போது, மற்றவை தோன்ருதவாறு மறைக்கப்படுகின்றன. திருவருள் நினைவால் "அதற்கு முதலாகிய சிவத்தை நினைக்கும் போது, உலகியல்,உணர்வுகளை மறைத்து, சிவ நினைவால் பிறக்கும் சிவஞானவாழ்வை நுகர்விக்கின்றது. இவ்வாறு உலகியற் பொருளின்பாலும் சிவத்தின்பாலும் நம் அறிவும் மனமும் ஈடுபட்டு இருள் நீக்கம் பெறற்கு இருவழியும் மறைத்துத்துணைபுரியும். திருவருளை என்ற எழுத்தால் பெரியோர் காட்டியிருக்கின்றனர்.

உலகில் நாம் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டியும்,அதனை விடுத்து இன்பமே நிலவும் பெருவாழ்வு பெறல் வேண்டியும், தனது திருவருட் சக்தியைச் செலுத்தி, வேண்டுவனவற்றை அறிவித்தும் வேண்டாதவற்றை- மறைத்தும் அத்திருவருளே தனக்குத் திருமேனியாகக் கொண்டு, வேறுய் நில்லாது, நம்மோடு உடனயும் ஒன்றயும் நின்றருளும் சிவ பரம் பொருளை, நாம் மறத்தல், நன்றிகொன்ற தீவினையாக முடியும்; நன்றி மறத்தல் உலகவாழ்வில் பெருந்துன்பத்தைச் செய்வதுபோல, சிவன்பால் பெறலாகும் பேரின்ப வாழ்விலும் குற்றமாதல் பற்றியேசிவ வழிபாடு சிறப்பாக வேண்டப் படுகின்றது.

சிவ பரம்பொருள் உயிர்கட்குச் செய்திருக்கும் அருட்செயல்களை நினைதலும், வழிபாடாகும்; அதுபற்றியேதிருமுறை ஆசிரியர்களும், அவர்கட்குப் பின் வந்த பெருமக்களும், சிவனுடைய அருட் செயல்களை எழுத்துத்தோறும் இன்பம் பெருக, இனிய இசை கலந்த பாட்டுக்களில் தொகுத்துப் பாடியுள்ளனர். அவற்றைப் பாடிப்பயிலுவதால் நமது உள்ளம் அவனுடைய பேரருட் பெருமையில் தோய்ந்து பேரின்பமும், உலகியல் நுகர்ச்சிகளைமறந்து தூய்மையும் எய்துகிறது.

இன்றைய மக்களினம் பொருட் செல்வம் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு, அதனைப் பெருகப் பெறுவதற்குரிய விஞ்ஞானம், தொழில், வாணிகம்,அரசியல் என்ற துறையிலேயே பெரு மயக்கம் கொண்டு இயலுகின்றது. உலக வாழ்க்கைக்குப் பின் உயிர்கட்குவேறு வாழ்க்கையில்லை என்று கூறும் சமயவுரைகள் செல்வாக்குப் பெற்றதே இதற்குக் காரணமாகும். மேலும் அச்சமயங்கள் கடவுட் கொள்கையும் வழிபாட்டு மரியும்உடையவாயினும், மக்களை அறிவாராய்ச்சி வகையால்அறிந்துணரும் வழிவகைகளைக் காட்டாமல், கண்மூடிநம்பிக்கையையே வற்புறுத்தின; அதனால் வாழப் பிறந்தமக்களுக்கு மண்ணில் வாழ உரிமையுண்டு என்பதை மறந்து, ஒருவரை யொருவர் தாழ்த்தியும் வேறுபடுத்தும் அடிமைப்படுத்தும் அலைத்த செய்தியை வரலாறு காட்டு கிறது. இன்றோ மக்களினம், நலம் செய்யக் கற்றுணர்ந்த பொறியியல் விஞ்ஞானத்தால், பேரழிவு விளைக்கும் கருவி களைச் செய்து பெருங்கேட்டை எதிரே நிறுத்திக்கொண்டு வருந்துகிறது. இவ்வுலக வாழ்வுக்குப் பின்னும் வாழ்வு உண்டு. இன்று செய்வன நல்லனவாயின் மறுமையில் இன்பமுண்டு. தீயனவாயின் துன்பமே எய்தும் என்ற எண்ணம் நெஞ்சில் ஊன்றி விடுமாயின் தீமை குறையும்; நன்மை பெருகும்.

தீமை செய்தற்கு அச்சமும், நன்மை செய்தற்கு விருப்பமும் மக்கள் உள்ளத்தில் வளமுற அமைவதற்குச் சமய வுணர்வை மக்களிடையே பரப்புவது தவிர வேறு வழியில்லை. பொருட் பெருக்கத்துக்கான பொறியியல் தொழிலியல் விஞ்ஞான அறிவைப் பரப்புவதற்காகப் பொதுமக்களும் அரசும் பெரிதும் முனைந்திருப்பதைக் காண்கின்றோம். அதுபற்றி, அவர்கள் திட்டங்கள் வகுப்பதையும் அவற்றை முறையே செயற்படுத்துவதையும் அறிகின்றோம். அவை சிறந்த பயனை அளித்து வருவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். அவ்வாறு நாமும் ஏன் திட்டமிட்டு நமது சமயப்பணிகளைச் செய்யக்கூடாது?

இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் இந்நாட்டுநன்மக்களாவர். அவர்கட்கு வழங்கப்படும் கல்வி உலகிற்குவேண்டுவனவற்றையே முழுதும் தன் கண் கொண்டுளது.அரசும் அதனையே பெரிதும் ஆதரிக்கிறது. அதன் வாயிலாக வளரும் மாணவர்கள் நாளைக்கு உலகிற்கே பெருங்கேடு செய்யும் பெருங்கருவிகளைப் படைத்து நாசகாரிகளாகப் பிறங்குவரோ என்ற அச்சம் இப்பொழுதுதோன்றியிருக்கிறது. அமெரிக்க நாட்டு நியூயார்க்குநகரதது ஏசிவா (Yeshiva) பல்கலைக் கழகத்தைச சேர்ந்தடாக்டர் சாமுவேல் பெல்கின் (Dr. Samuel Belkin) என்பார், தற்காலக் கல்வி நிலையையும், அது உண்மைச்சமுதாய அமைப்புக்கு உதவாதொழிந்தமையையும் மக்கள்பால் அமைய வேண்டிய ஆன்மஞான ஒழுக்கங்களை எண்கணாது பகை வளர்க்கும் பண்பில் செயலாய் அக்கல்வி மாறியதையும் எடுத்துக் காட்டி, உண்மை காணும் அறிவும், உண்மை ஞான அருளாராய்ச்சியும், மிகைப்படப் பெறச் செய்வதுதான் இன்று கல்வியின் முடிந்த முடிபாக வேண்டும் என்ற கருத்துப்பட, ''If the present day educators are openly alarmed at the fact that Europe with its ancient seats of learning : failed to stem the tyranny and brutality on the continent, it is primarily because the modern age has overestimated the power of secular and material knowledge to  influence the conduct of human beings. Our knowledge of the Natural sciences, the social sciences and humanities has not failed us, we have failed it by expecting these branches of learning to serve a purpose which is not within their domain – the creation of an ideal society.”

The complete divorcement between scientific research and spiritual and moral ideas has brought disastrous consequences. A science which remains indifferent to the importance of morality in the life of society becomes an opponent of morality.

“The end of education should be the cultivation of intellectual and spiritual values bringing to a maximum development the moral potentialities of man" £ என்று கூறுகிறார்.

என்றாலும் பொருள் வேட்கை அறிவை மறைத்துவிடுகிறது. கல்வித் துறையில் நாற்பது ஆண்டு அனுப்வத்தைக் கொண்டு இசனைக் கண்டுரைக்கிறேன். கெய்சர்லிங் (Keyserling) என்ற மேனாட்டறிஞர், கல்வியாளர்உலகாய்தச் சூழ்நிலையைக் கடந்து சென்று விட்டார்கள் இப்பொழுது பொதுமக்கள் அதன் கண் காலை வைத்துள்ளார்கள் என்பாராய், 'If men of education have already passed through the materialistic stage, the masses are only just entering it " என்று கூறுகின்றார்.

£ Span P. 38 Sept. 1961
The World in the Making - p. 265

எதிர்கால மக்களுக்கு இத்தகைய சூழ்நிலை எய்தாமற்காப்பதற்குக் கல்வி நிலையங்களில் திருவருள் உணர்வு ஒழுக்கக் கல்விக்கு இடமில்லை. பொது மேடைகளோ,செய்தித் தாள்களோ இடம் கொடுப்பதில்லை; கோயில்களிலும் போதிய வாய்ப்பில்லை. ஆனால், எங்கள் கல்லூரி நிறுவிய கலைத்தந்தை திரு. கருமுத்து, தியாகராசச் செட்டியார் ஒருவர் தான், திருவருள் உணர்வும் ஒழுக்கமும் நல்குதற்கு மிக்க துணிவுடன் ஏற்பாடு செய்துள்ளார். வேறு யாரும் எவ்விடத்தும் சைவச் செந்நெறியாகிய திருவருள் உணர்வு நெறியைக் கற்பிக்க எண்ணினாரில்லை. பரந்த பெரு நாட்டில், பல கோடி மக்களிடையே பத்துப்பதினைந்து பேர்க்குத் தரப்படும் இக்கல்வி கடலிற் கரைத்தகாயம் போல் ஆகிறது.

அரசு வகுக்கும் ஐந்தாண்டுத் திட்டம் போல் அறநிலையங்களும் செல்வக் கோயில்களும் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்துத் திருவருள் உணர்வுப் பணி புரியத் தலைப்படவேண்டும். ஆண்டுதோறும் கோயில்களிலும் அறநிலையங்களிலும் விழாக்களும் குரு பூசைகளும் நடைபெறுவதில் தவறுவதில்லை. விழா நடக்கும் நாளில் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. ஆயினும் அவை வெறும்பொழுது போக்காக உள்ளனவே யன்றி முறையாகத்திருவருள் நெறியை உணர்த்துவனவாக இல்லை. இப்பொழுது இந்து அறநிலையத்துறைத் துணை ஆணையாளராக இருக்கும் திரு. விவேகானந்தம் பிள்ளையவர்கள் திருச்செந்தூரில் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, கந்தர் சட்டி விழாவில் ஆறு நாளும் திருமுருகாற்றுப்படை, சிவஞான போதம் என்ற நூற் பொருளை வகுப்புப்போல அமைத்து நடத்தினார். இருநூற்றுவர்க்குக் குறையாமல், கற்ற அறிஞர்கள் வந்திருந்து கேட்டனர். கற்றவர்கள் திருந்தினால் மற்றவர்கள் அவர்களைப் பார்த்துச் செம்மையான முறையில் திருந்தி விடுவார்கள். இதுதொடர்ந்து நடந்திருந்தால், சிவ நெறியின் செம்பொருளை உணர்ந்தவர்கள் 2000 பேர்களாகியிருப்பார்கள். இதுகோயில் தோறும் அறநிலையங்கள் தோறும் தொடர்ந்து பத்தாண்டுகள் நடக்குமாயின், ஆண்டுக்கு 5000 விகிதத்தில் நாட்டில் 50,000 பேர் திருவருள் ஞானம் பெற்ற. தக்கோராய்த் தோன்றி விடுவர். அவர்களுடைய உணீர்வும் செயலும் நாட்டின் சமுதாய வாழ்வில் மிகச் சிறந்த நோக்கங்களை உண்ட

நமது சமாசமே ஆண்டு விழாவின் வேறாக இடையிடையே பலவிடங்களில் சைவ வகுப்பு ஏற்படுத்தித் திருவருள் ஞானம் நல்கும் பணியில் முயன்றது. அரசியல் தேர்தல்கள் போல் இந்த மக்கட்பணி கைம்மேல் பயன் தருவதில்லையாதலால் சில ஆண்டுகளில் செல்வரது ஆதரவு குறைந்தது; அதனால் சமாசம் தனது பணியைத் தொடர்ந்து நடத்த இயலாது போயிற்று. ஆகவே அப் பணிகளைக்கோயில்களும் அறநிலையங்களும் மேற்கொள்ளுதல் கடனாகிறதல்லவா?

திருவருள் உணர்வு நல்கும் முறையிலும் சிறிதுகருத்தைச் செலுத்த வேண்டும்.

அருள் நூல்கள் தோன்றிய காலத்தில் மக்களினத்தின் அறிவும் சூழ்நிலையும் வேறு வகையில் இருந்தன. இப்போது உலகியல் பொருள் அறிவு பெருகியுள்ளது. காரணகாரிய ஆராய்ச்சி ஆண்பெண் இருபாலாரிடத்திலும் ஓரளவு வளர்ந்துள்ளது. வெறும் நம்பிக்கைகள் நிற்க இடமின்றித் தடுமாறுகின்றன. திருக்குறள், சிவஞானபோதம், திருமுறைகள் போன்ற நூல்களே இன்று விஞ்ஞான நெறியில் வளரும் அறிவாராய்ச்சியின் எதிர் நிற்கும்ஆற்றல் உடையவையாக இருக்கின்றன. ஆண்டு தோறும் கோயில்களும் அறநிலையங்களும், விழா நாட்களில் பதினாறு வயதுக்கு மேற்பட்ட கற்ற இளைஞர்களையும் முதியவர்களையும் கூட்டிச் சிவஞானபோதம் திருக்குறள் ஆகிய நூற்கருத்துகளைக் காலையில் வகுப்பு நிறுவிக் கற்பிப்பதும், மாலைசொற்பொழிவு வாயிலாகத் திருமுறை வரலாறு, திருமுறைஆசிரியர் வரலாறுகளை எடுத்துரைப்பதும் என ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று வகுத்துப் பணி புரிவது இக்காலத்துக்கு ஏற்றது. ஓர் ஆண்டுக்கு நமது மாநிலத்தில்பத்தாயிரம் பேர் விகிதம் சமயவுணர்வுடையராகச் செய்வது தக்கது. ஐந்தாண்டில் 50, 000 பேர் ஆவர். அவர்கள்வாயிலாக ஆளுக்கு ஐந்து பேர் வீதம் கொண்டாலும்,ஐந்து ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேர் சமயவுணர்வு பெற்று மகிழ்வர்.

நம் நாட்டில் கோயில் வழிபாடு பொறுப் பற்ற நிலைவிலும், விழாக்கள் பொழுது போக்காகவும் மாறி வருகின்றன. சில இடங்களில் பீடி சுருட்டு முதலிய பொருள்களின் விற்பனை விளம்பரம் தருவதற்கு விழாக்கள் வசதி செய்து தருகின்றன, கோயிலுக்குப் போகிறவர்கள், இறைவனுக்கு நீராட்டு வித்தாலும், தேங்காய் உடைத்தலும் சூடம் ஏற்றுவிப்பதும், விளக்கிடுவதும் விழாச் செய்வதுமே சமயப் பணியாகக் கருதி அமைகின்றனர். இவைவழி பாட்டில் நம் சிந்தையை ஈர்த்து நிறுத்துவன. ஆயினும்,இவற்றைச் செய்பவருள் பெரும்பாலார் மனம் இவற்றோடு நேரே தொடர்பு படுவதில்லை; இது திருவருளின் இயக்கம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆண்டவனை வழிபடும் போதும், அவனது திருவருளேநம்மில் இயங்குகிறது, " அவன் அருளாலே அவன் தாள்வணங்கி'என்பது மணிவாசகம். இத்திருவருளைச் சிந்திக்கும் பயிற்சி இல்லாமை தான் வழிபாட்டில் மனம் பொருந்தாமைக்குக் காரணமாகும். ஆண்டவனுக்கும் நமக்கும்உள்ள தொடர்பு; ஆண்டவனுக்கும் நாம் வாழும் உலகுக்கும் உள்ள தொடர்பு; நமக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு;ஆகிய மூன்று தொடர்புகளும் என் உண்டாயின? எப்படி உண்டாயின? எனச் சிந்திப்பதே திருவருட்சிந்தனை.

அச்சிந்தனை திருவைந்தெழுத்தை முன்நிறுத்தி நமதுமனத்தின் கோழைப் பண்பை மாற்றித் திண்மையும், தூய்மையும் உடையதாக்கும். மனம் திண்ணியராயினோர் திருக்குறள் சொல்வதுபோல'' எண்ணிய எண்ணியாங்குஎய்துவர்.'' மனம் தூய்மை, கல்வி, தொழில் வாணிகம்முதலிய வாழ்க்கைக் கூறுகளை வளமாக்கி மக்கட் செல்வமும், மாநிதிச் செல்வமும், மிக்க வாழ்நாள் மேம்படு செல்வமும் நிறைவிக்கும். மனம் தூய்மை கெடாமல் பாதுகாப்பது அரிது. அதற்கு வழி திருமுறைகளைப் பொருளறிந்து ஓதுவது. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்துசொல்லுவார், பலரும் ஏத்தப் பேரின்பம் பெறுவர். எப்படியெனில் மனம் தீய நினைவுகட்கு இடமாகும்போது தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைப் பாட்டுக்களைப்படித்து அவற்றின் கருத்தறிய முற்படுவோமானால்தூயமையைச் சிதைக்கும் நினைவுகள், ந என்ற மறைக்கும் அருளால் கெட்டுப்போகும்; பாட்டின் பொருளும் அவற்றைச் செய்த திருமுறை ஆசிரியர்களின் ஞானவொளியும் உள்ளத்தில் பாய்ந்து ஒளிசெய்யும். மனமும் தூய்மைகெடாமல், திண்மை சிதையாமல் திகழ்ந்து சிறக்கும்.

வெறும் நம்பிக்கைமேல் நில்லாமல் அறிவாராய்ச்சிமேல் நிற்கும் நம் சைவ சமய வுணர்வு தழைத்துப் பரவுமானால், மக்கள் அனைவரையும், சமநிலையில் நின்று இயக்கும் திருவருளின் சிறப்பு நன்கு உணரப்படும். ஒவ்வொருவரும் உலகோடு தமக்கிருக்கும் தொடர்பையும், தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் உணர்வர்; உணர்ந்தால் தம்போல் உலகில் பிறந்த அனைவரும், இறைவன்அருள் பெறும் இயல்பினராவர் என்ற உணர்வு பெற்று,வேற்றுமையுணர்வைப் போக்கி ஒரு குடும்பத்தவராய் ஒத்து வாழ்ந்து இன்பம் எய்துவர். இதனை முடிபாகக் கொண்டே மெய்கண்டதேவ நாயனார்,
''தம்மை யுணர்ந்து தமையுடைய தன் உணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் – தம்மை
உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன்''

என்று சிவஞான போதத்தின் தொடக்கத்திலேயே எடுத்துரைத்தார்.

இதில் தம்மை யுணர்வது என்பது ஒரு பெரிய செயல் அன்று. இந்த உணர்வு, உலகத்தையும், உடம்பையும் படைத்தளித்து வாழச் செய்யும் தலைவனாகிய சிவ பரம்பொருளின் திருவருட் செயலை அறிந்து கொள்ளச்செய்யும்.இனி தம்மையுடைய தன் உணர்தல் என்பது இவ்வாறு தன் உணர்வார், தம்மைப் போல் ஏனை நாம் எல்லாரும் சிவத்தின்அருட்கு இலக்கானவர் என்ற கருத்து விளங்கப்பெற்றுதம்மைத் தம் போலவே எண்ணிச் சமநிலையில் கொண்டுதழுவி ஒழுகுவர் என்பதற்காக, 'எம்மை உடைமை எமை இகழார்' என்று சிவஞானபோதம் கூறுகிறது. 'தன்' என்ற சொல் முதல்வனாகிய சிவ பரமபொருளைக் குறிக்கிறது.

தம்மை உணரார் உணரார்: அதாவது முன்னே சொன்ன முறையில் தம்மை உணராதவர் வேற்றுமையற்ற ஒருமைச் சமநிலைச் சமுதாய அமைப்பே வேண்டியது.. என்று அறியமாட்டார்கள். அந்த உணர்விலிகள் தம்மில்மனம் கலந்து ஒன்று சேர்ந்து வாழ ஒருப்படவும் மாட்டார்கள். என்பது விளங்க, உடங்கு இயைந்து தம்மில் புணரார் என்றும், பின்பு அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் பிறரைப் புறங்கூறிச் சமுதாய்த்தின் ஒருமையைச் சீரழிப்பர் என்றும் அவர் கூறுவதை யாங்கள் ஒருநாளும் செவியில் ஏற்கமாட்டோம் என்றும் கூறலுற்ற மெய்கண்டதேவர், கேளாம்புறன் என்றும் விளங்க உரைக்கின்றார்.

இன்றைய அரசியல் தலைவர்கள் பலரும் இத்தகைய ஒருமைச் சமுதாயம் அமையவேண்டும் என்று தமக்குரிய முறையில் அரசியல் மேடைகளிலும், பொது மேடைகளிலும் பறையறைந்து வருகின்றனர். நமது சிவநெறிச் சமயக்கருத்தும் அதற்கு ஒத்து இயங்குவதால், அவர்கட்கு இதனைஎடுத்துரைப்பின் அவர்களும் வேண்டும் உதவிகளைச்செய்வர்; அவரவர் எண்ணும் எண்ணங்களும் ஈடேறும்.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை"   

என்று  செம்மாந்து பேசும் செல்வ வாழ்வு பெற்றுச் சிறக்கலாம்.

பெருமக்களே, இதுகாறும், என் உள்ளத்தில் தோன்றிய கருத்துக்களை எடுத்துரைத்தேன்; நீங்களும் அமைதியுடன் இருந்து கேட்டீர்கள். இவ்விழாவிற்குத் தலைமைதந்து என்னைச் சிறப்பித்த வரவேற்புத் தலைவரையுள்ளிட்ட பெருமக்களுக்கும், சென்னைச் சைவசித்தாந்த மகா சமாஜத்தினர்க்கும், இங்கே கூடியிருக்கும் ஏனை நன்மக்கள் அனைவர்க்கும், என் பணிவன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கருவி கரணங்களை இயக்கியும், இச்சமாச ஆண்டுவிழா இங்கே நிகழ்தற்கு வேண்டிய எண்ணத்தையும் முயற்சியையும் உண்ணின்று தூண்டியும், உதவிய சிவபரம் பொருளாகிய பழனிப் பால தண்டாயுத முருகப்பெருமான் திருவடிகள் வாழ்க என வாழ்த்தி, என் தலைமையுரையை இவ்வளவில் நிறுத்துகின்றேன். வாழ்க சிவநெறி.

சைவ சித்தாந்த மகா சமாஜம்
56 - ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனி
சைவர் மாநாட்டுத் திறப்புப் பேருரை
(திரு. M. S. சாரங்கபாணி முதலியார், B. A, B. L. ஆணையர், அறநிலையத்துறை, சென்னை)
(30 - 12 - 1961)
ஞாலநின் புகழேமிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே.

"மெய்யன்பர்களே!

சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் 56 - ஆம் ஆண்டுவிழாவை யொட்டிய சைவர் மாநாட்டைத் தொடங்கிவைக்கும் பேற்றை எனக்கு அளித்துள்ளீர்கள். அந்த வாய்ப்பை எனக்கு அளித்தவர்கள் பழனிச் சைவசித்தாந்த சபையினரும், சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாஜத்தினரும் ஆவர். அவ்விரு கழகத்தார்களும் 'வண்ணப்பணித் தென்னைவா வென்ற வான் கருணைக்கு' யான் யாது கைம்மாறுசெய்யவல்லேன்! ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் இருப்ப, தகுதியில்லாத என்னை இத்தொண்டை மேற்கொள்ளச் செய்தது அவர்கள் என் மாட்டுக் கொண்ட அன்பின் மிகுதியேயாகும். ஆண்டவன் அருளும் அடியார் அன்பும் ஒன்று சேர்ந்தால் அடியேன் அடங்கித் தானே ஆகவேண்டும். உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதியின் புகழைப் பேசுவதற்காக இங்கு நாமெல்லாம் கூடியிருக்கிறோம். தோற்றமும் ஈறுமில்லாத இறைவனின் தொல் பெருமை பேசப்படும் இப்பேரவையைத் தொடங்கிவைக்கப் பணித்தமைக்கு என் உளங்கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாடு பழனியம்பதியிலே கூடியிருப்பது மிகப்பொருத்த முடையது. இத்தலத்தின் பெருமையையும், இங்கெழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் மகிமையையும் அறியாதார் இல்லை. இது பழம் பெருமை வாய்ந்தது; சங்க இலக்கியங்களில் விதந்து பேசப்படுவது; அறுமுகச்செவ்வேளின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்வது; நக்கீரர் தாமுரைத்த நன் முருகாற்றுப்படையில் இடங்கொண்டது; தேவர்களும், மூவர்களும் இங்கு வந்து திருமுருகனின் திருவோலக்கத்தைக் கண்டதாகக் கூறப்படும் பெற்றி வாய்ந்தது.

ஆவியர் குடியினராகிய பேகன் முதலிய குறுநிலமன்னர் ஆட்சிக்குட்பட்ட இடமாதலின் ஆவிந்ன்குடி எனப் பெயர் பெற்றது. சங்க நூல்களில் போதினி என்ற பெயரால் அழைக்கப்படுவது. பல திருநாமங்களையுடைய முருகனுக்கு, சித்தன் என்ற பெயரும் ஒன்று. அதனால் சித்தன் வாழ்வு என்ற பெயரும் இத்தலத்திற்கு அமைந்திருக்கிறது. ஒளவையார் "நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ்வு இல்லந்தொறும் மூன்று எரியுடைத்து'' என்று பாடியிருப்பதே இதற்குச் சான்றாகும்.மயிலுக்குப் போர்வையளித்த வள்ளல் வாழ்ந்த இடம் இது. மயிலை ஊர்தியாக உடைய முருகப்பெருமான் காட்சி அந்த மன்னனின் மனக்கண் முன்னே தோன்றியிருக்க வேண்டுமென்று கொள்வதில் வியப்புமுண்டோ !செந்தமிழ்ச் சந்தப்பாக்களை அந்தமாகப் பாடிய அருணகிரியார் இங்குள்ள முருகப்பிரான் மீது 130 திருப்புகழ்ப்பாடல்களைப் பாடியிருக்கிறார். இவ்வளவு பாடல்களை அவர்வேறு எந்தப் பதிக்கும் பாடியதாகத் தெரியவில்லை. 'பழைய பழனி,'' தண்டமிழ்சேர் பழனி','வழியடிமைகொண்டுமிக்க மாதவர்வளர் பழனி' என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார். இன்னும் சிவமலை, சிவகிரி, சிவவெற்பு, ஞானமலை, பழனாபுரி என்ற பெயர்களையும் குறிக்கிறார்.அடிவாரத்திலுள்ள கோயிலைத் திருவாவினன்குடி என்றும்,மலைமேலுள்ள கோயிலைப் பழனி என்றும் வழங்குகிறோம். அருணகிரியார் ஒரு பாடலில் பழனித் திருவாவினன்குடி என்றே சேர்த்துப் பேசுகிறார். 'நாதவிந்து கலாதீ நமோ நம'' என்ற பாடலை அறியாதவர்களில்லை. அதில்,
ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி அந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்க னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

என்று முடிக்கிறார். கொங்குமண்டலத்திலுள்ள 'வைகாவூர் நாட்டிலுள்ளது ஆவினன்குடி என்பது இதனால் பெறப்படுகின்றது. சித்தன் வாழ்வு என்று போற்றப் பெறும் இப்பதியில் சைவசித்தாந்த மாநாடு கூடியிருப்பது சாலப் பொருத்தமுடையது என்று கூறவும் வேண்டுமோ!

சைவசமயத்தின் வரலாற்றையோ அல்லது சைவசித்தாந்த தத்துவங்களையோ நான் உங்கள் முன்பெடுத்துப் பேசப் போவதில்லை; அப்படிப் பேச எனக்குப் போதிய ஆற்றலுமில்லை. இறைவன் எப்படி அனாதியோ அப்படியே இந்த உலகமும் உயிர்களும். கடவுள் என்ற சொல்லைக் கண்ட தமிழனின் நுண்மாண் நுழைபுலத்தை என்னென்று கூறுவது! கட, உள் என்ற பகுதி விகுதிகளையுடையது. கட என்பது எல்லாவற்றையும் கடந்தது (Transcendental) என்று பொருள் படுவது. அப்படியானால் நமக்கென்ன பயன் என்ற கேள்வி யெழும். அவ்வினாவிற்கு விடையாகவே உள் என்ற விகுதியமைந்திருக்கிறது. அவன் எல்லாவற்றுள்ளும் நிறைந்து (Immanent) நிற்கிறான் என்பதைக் குறித்து நிற்கிறது. உயிர் என்ற சொல் உய்வதற்கு வழிதேடுவது என்ற பொருளமைதியுடையது. உயிரைப் போர்த்தி நிற்பது உடல்.உடு என்னும் பகுதியினடியாகப் பிறந்தது. உடலை இயக்குவிப்பது உயிர். அவ்வுயிரை இயக்கு விப்பது உயிர்க்குயிராய் நிற்கும் இறைவன் கடவுள் உயிர் உலகம் என்ற மூன்று பொருள்களையும் கண்டவன் தமிழன் -சைவன். சிவபெருமானைப் போன்றே சைவ சமயமும் அனாதியானது. The most ancient living faith'' என்று மேனாட்டவர் புகழ்ந்து பேசப்படும் பெருமையுடையது. சைவ சித்தாந்தத்தின் சீரிய கருத்துக்களைப் பற்றி அரிய சொற்பொழி வாற்றக் கற்றுத்துறைபோய தலைவர் முதலிய பேரறிஞர்கள் பலர் இங்கே கூடியிருக்கும் காட்சி கழிபேருவகை யளிப்பதாகும்

சைவசித்தாந்த மகாசமாஜம் 56 ஆண்டுகளாகப் பலநற்செயல்கள் புரிந்து வருகிறது. நாடெங்கிலும் மாநாடுகள் கூட்டுகிறது. கடல் கடந்தும் இலங்கை சென்று மூன்று ஆண்டுகள் யாழ்ப்பாணம், கொழும்பு, திருக்கேதீச்சுரம் இந்த இடங்களில் மாநாடுகளை நடத்தியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் மலாய் நாடு சென்றுமாநாடு நடத்தப்போகிறதென்பதை யறிய மட்டற்றமகிழ்ச்சி உண்டாகிறது. சங்க நூல்கள், திருமுறைகள்,சாத்திரங்கள் முதலியவற்றைப் பிழையறப் பதிப்பித்து அடக்க விலைக்கு விற்று நாடெங்கணும் வீடுகள் தோறும் சமய நூல்கள் சேரும்படி செய்திருக்கிறது.'' சித்தாந்தம் "என்ற மாத இதழை வெளியிட்டு வருகிறது. " சைவப்புலவர் தேர்வு'' ஒன்றையும் நடத்தி வருகிறது. ஈடும் எடுப்புமற்ற சைவ சமயத்தின் தத்துவங்களை எல்லோரும்படித்து இன்புறுவதற்கு ஏற்ற எளிய முறையில் நூல்கள் வெளிவர வேண்டுமென்பது என்னுடைய பேரவா. இலக்கிய இலக்கண அறிவுடையோர்க்கே சித்தாந்த சாத்திரங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்பது உண்மை. ஆனால் சாதாரண அறிவுடையவர்களும் அவற்றைத் தெரிந்து கொள்வதற்குப் படி முறைகளை வகுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு ஆவன புரியுமாறு இங்குக் கூடியிருக்கும் அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எங்களுடைய அறநிலையத்துறையில் எங்களால் இயன்ற பணிகளைச் செய்து வருகிறோம். சீர்குலைந்திருந்த எல்லாக் கோயில்களையும் பழுதுபார்த்துத் திருப்பணிசெய்து வருகிறோம். பாடல் பெற்ற பதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பாக எங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறோம்.பல கோயில்களில் திருமுறைக் கோயில்களை அமைத்திருக்கிறோம். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைவாய் என்ற தலத்திலுள்ள கோயிலில் திருஞானசம்பந்தர் பதிகம்கல்லில் பொறித்து வைத்திருப்பதைச் சில ஆண்டுகளுக்குமுன்பு கண்டு பிடித்ததை நாம் அறிவோம். அதே போல் பல கோயில்களில் திருமுறைப் பாடல்களைப் பொறித்து வைத்திருக்கிறோம். பல கோயில்களில் நூல் நிலையங்கள் இருக்கின்றன. தேவாரப் பாடசாலைகள் நடத்தி வருகிறோம். அவ்வப் போது வேதாகம சைவசித்தாந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடத்துகிறோம். ஓதுவார்களுக்கும் தேவாரப் பயிற்சியளித்துப் பரிசுகளும் வழங்குகிறோம். திருவிழாக்காலங்களில் சமயச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்கிறோம். தலவரலாறுகளும், தலத்தைப் பற்றிய நூல்களும் வெளியிட்டு வருகிறோம் 'திருக்கோயில்' என்ற சிறந்த மாத இதழையும் எங்கள் அலுவலகத்திலிருந்து மூன்று ஆண்டுகட்கு மேலாக வெளிபிட்டு வருகிறோம். கோயில் நிர்வாகத்தினர்க்கு ஏற்றவகையில் இந்து சமயக் கையேடு" (Guide book on Hindu Religion) என்ற நூலும் வெளியிடுவதற்காக உருப்பெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கோயில்களைப் பற்றிய வரலாறுகளும் தொகுத்து வெளிபிடுவதற்கு அரசாங்க ஆணை பிறந்திருக்கிறது. அத்திட்டத்தின் படி ஒரு மாவட்டத்தின் கோயில்கள் வரலாறு எழுதி முடிந்து விட்டது. கூடிய விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மற்றுமோர் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு என் மனம் உந்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த கோயில்களையும் விழாக்களையும் விளக்கும் வகையில் அமைந்த வண்ணப் படம் ஒன்று பெரும் பொருட் செலவில் எடுத்திருக்கிறோம். நம் நாட்டாரும் வெளிநாட்டாரும் கண்டுகளிக்கும் வண்ணம் தமிழிலும் இந்தியிலும் அதற்கு விளக்கங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. விரைவில் ஆங்கிலத்திலும் விளக்கம்' அமைக்கப்படும். அந்தப் படத்தையும் கூடிய விரைவில் திரையிடத் திட்டமிட்டிருக்கிறோம். ஏதோ நாங்கள் செய்து கொண்டு வரும் தொண்டுகளை உங்கள் முன்னால் ஆசை பற்றி அறையலுற்றேன். தற்பெருமை கூறிக் கொள்வதாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். சமய உண்மைகளைப் போதிப்பதற்காகத் தனியே நம்முடைய நாட்டில் கல்லூரி இல்லாத குறை யிருந்தது. அதை நிறைவு செய்வதற்காக இப்பதியிலே "பழனியாண்டவர் கீழ்த்திசைப் பண்பாட்டுக் கல்லூரி'' என்ற ஒன்றைப் பல்கலைக் கழக இசைவு பெற்று இரண்டாண்டுகளாக நடத்தி வருகிறோம். சமயத்திற்குச் செய்ய வேண்டிய ஆக்க வேலைகள் எவ்வளவோ இன்னும் இருக்கின்றன. அறிஞர்கள் கூடியிருக்கும் இப்பேரவையில் அவற்றை ஆராய்ந்து தெரிவித்தால், " ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாயெல்லாம் செயல்'' என்ற வள்ளுவர் வாக்கிற் கிணங்கப் பணி புரிய முயல்கிறோம்.

இந்த மாநாடு கூடியிருக்கும் கூடம் முன்னாலேயே திறந்து இருக்கிறது. எல்லோரும் இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம். இனி யான் எதைத் திறந்துவைப்பது என்று புரியவில்லை. மக்கள் மனத்தைத் தான் திறந்து வைக்கவேண்டு மென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மனிதன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குச் சமய உணர்வே அடிப்படை. அந்தச் சமயத்தைப் பரப்புவதே நம்முடைய தலை சிறந்த பணி. அந்த சீரிய தொண்டில் ஈடுபட வந்திருக்கும் எல்லோரையும் சேரவாரும் செகத்தீரே' என்று அழைக்கின்றேன். இதுவரையில் என்சொற்களைச் செவிமடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றி 'உரித்தாகும்.'' அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்ட "இந்த இரண்டு சங்கத்தார்க்கும் மீண்டும் என்னுடைய மனங்கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

சித்தாந்தம் – 1962 ௵ - ஜனவரி ௴


No comments:

Post a Comment