Saturday, May 9, 2020



சைவ சித்தாந்த உட்கருத்துக்கள்
[சி. வை. வன்னியநாதன்;
ஆயுள் வேதவைத்தியர், சுட்டிபுரம், வரணி, இலங்கை]

பிருதிவி அப்பு தேயுவாயு ஆகாயம் என்ற பஞ்ச பூதங் களாலாய இந்த உலகத்தின் கண்ணே சிவம், ஆன்மா, மலம் என மூன்று பொருட்கள் உள்ளன. அவற்றுட் சிவம் ஒரேபொருள். ஆன்மாக்கள் எண்ணில்லாதன. மலம் ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகைப்படும். இந்தச் சிவமும் ஆன்மாவும் ஆணவம் கன்மம்மாயை ஆகிய ஐந்தும் நித்தமாயுள்ளன. நித்தம் என்றால் தோற்றம் - நாசம்; (தொடக்கம் - முடிவு) இல்லாதவை என்று பொருள் படும்.

சிவமும் ஆன்மாவும் சித்துப் பொருட்கள், ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்றும் சடப் பொருட்கள். சித்து என்றால் அறிவுடையது என்றும், சடம் என்றால் அறிவில்லாதது என்றும் பொருள்படும். இந்தச் சிவம் ஆன்மா ஆகிய சித்துப்பொருட்களுள்ளும் வேறுபாடிருக்கின்றது. ஆன்மா தூலசித்து; சிவம் சூக்குமசித்து; அன்றியும் சிவம் தானே உணரும் சித்து; ஆன்மாக்கள் அச்சிவத்தினால் உணர்த்த உணரப்படும் சித்து.

இந்த எண்ணில்லாத ஆன்மாக்கள் அநாதியே தமக்கு உயிராயுள்ள சிவத்தைப்பற்றாது, தமக்கு வேறாய்ச் சடமாயுள்ள மலத்தைப் பற்றி நின்றது. இந்த மலத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ள சம்பந்தமாகிய தொடர்பு சகசம்' என்று சொல்லப்படும். பளிங்கை அடுத்து அதன் தன் மையைத் தன் - தன்மையாகக் கொள்ளுகிற ஒரு இயல்பு இந்த ஆன்மாவுக்கு உண்டு.

“ஒரு பொருளுங்காட்டா திருளுருவம் காட்டும்
இருபொருளுங் காட்டா திது."                (திருவருட்பயன்)

ஆணவமலம் இருளிலும் கொடியது என்பதற்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.

நிற்க ! ஆன்மா தன் வலிமை இல்லாததற்குக் கீழே ஓர் உதாரணம் கொடுக்கப் படுகிறது அது 

"கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும் –
திண்டிறலுக் கென்னோ செயல்,'' என்பதாகும்.  

இந்த ஆன்மாவானது சார்ந்ததின் வண்ணமாயுள்ளது. இது அனாதியே சிவத்தைப் பற்றியிருந்தால், சிவத்தின் குணமாகிய ஞானானந்த நிலையை அடைந்திருக்கும். அப்படியின்றி ஆன்மா அனாதியே மலத்தைப் பற்றிய படியால், மலம் தன்குணமாகிய அறியாமையைக் கொடுக்க ஆன்மா அறிவிருந்தும் அறியாது மயங்கியது.

கண்ணானது எல்லாவற்றையும் காணும் இயல்புடைய தாயிருந்தாலும், இருளில் அகப்பட்ட போது ஒன்றையும் காணமாட்டாமை போல, ஆன்மா அறிவுடையதாயிருந்தும் இந்த மலத்தின் வசப்பட்ட, நிலையில் ஒன்றும் அறியாமல் நிற்கும். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒவ்வொரு - ஆணவமலமாய் எண்ணில்லாத ஆன்மாக்களுக்கும் எண் ணில்லாத மலமிருந்து மறைப்பதல்ல. இதை நாம் நன்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அளவில்லாத கண்களை ஒரேயிருள் எப்படி மறைக்கின்றதோ, அப்படியே அளவில் லாத ஆன்மாக்களையும் ஒரே மலம் மறைத்து நிற்கும். இந்த மலமறைப்பினாலே வருந்திய ஆன்மா அந்த மறைப்பில் நின்று நீங்கும்படி தன் அறிவு வெளிப்படுவதற்கு வியஞ்சகமாகிய மாயாதனுகரணங்களை விரும்பியது. வியஞ்சகம் என்பது விளக்கும்படி செய்கை அல்லது விளக்கும் கருவி. தன் செயல் வெளிப்படுவதற்கு ஏதுவாகிய கன்மத்தையும் இச்சித்தது.

அதுகண்டசிவம் அப்படிவருந்தும் உயிர்கள் மேல் இரக்கங் கொண்டபோது சத்தி என்றாயிற்று. அச்சத்திக்குப் பராசத்தி என்று பெயர். அப்பராசத்தியின் வசப்பட்டு உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்று முயன்றபோது அச்சிவம், பதி என்னும் பெயருடையதாயிற்று. சிவம் உயிர்களிடத்தில் ஐந்தொழில் செய்ய முயன்ற போது அச்சிவத்தோடு கூடி நின்ற சத்தி, ஆதி என்னும் பெயருடையதாயிற்று அவ்வாதிசத்தி பின்பு இச்சை, ஞானம், கிரியை என மூன்றாக வேறுபட்டு அப்பதியினது செயலுக்குத் துணைபுரியும். அன்றியும் ஆரணி, ஜனனி, ரோதயித் திரி எனவும் மூன்று விதமாகும். அச்சத்திகள் சுத்தமா யையைக் காரியப்படுத்தி ஆன்மாவின் மலமறைப்பை வாட்டி, ஆன்மாவின் அறிவை - இழக்கப்பண்ணும். அசுத்த மாயையைக் காரியப்படுத்தி ஆன்மாவின் அறிவை வியாபிக்கும்படி செய்யும் அதன் பொருட்டு அச்சத்திகள் செய்யும் தொழில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அரு ளல் என்னும் ஐந்துமாம் இந்த ஐந்து தொழில்களையும் அந்தச் சத்திகள் நேரே செய்வதில்லை.

பிரம்மாவை அனுஷ்டித்துப் படைப்பையும், விஷ்ணுவை அனுஷ்டித்துக் காப்பையும், உருத்திரனை அனுஷ்டித்து அழிப்பையும், மகேசுரனை அனுஷ்டித்து மறைப்பையும், சதாசிவம் வாயிலாக அனுக்கிரகத்தையும் செய்யும். பதி ஐந்தொழில் செய்ய முயன்றது உயிர்களின் விருப்பப்படி யேயாம். உயிர்களுக்கு தனு, கரண, புவன, போகங்களைக் கொடுத்தலே ஐந்தொழிலாகும். உயிர்கள் தனுகரண புவன போகங்களை இச்சித்தபடியால் முதல்வன் அவற்றைக் கொடுத்தனன். அவ்விச்சைக்கு ஏதுவாய் நின்றது இந்த ஆணவமலமேயாகும். அதனாலே இதற்கு மூலமலம் என்று பெயருண்டாயிற்று. மூலமல மறைப்பைச் சிறிது ஒழிப்பதற்கு முதல்வன் சத்திகள் மூலம் மாயா தனுகரணங்களை உளக் கூட்டினான்.

அந்தமாயை இரண்டு வகைப்படும். ஒன்று சுத்த மாயை; மற்றது அசுத்தமாயை. சுத்தமாயையிலிருந்து நான்கு வாக்கும், ஐந்துகலையும், ஐம்பத்தொரு அட்சாமும், எண்பத்தொரு பதமும், பதினொரு மந்திரமும், இருநூற்று இருபத்தினான்கு புவனமும், சுத்தவித்தை முதலிய ஐந்து தத்துவமும் உண்டாகும். அசுத்த மாயையிலிருந்து காலம், நியதி, கலை, வித்தை, புருடன், ராகம், மாயை என்னும் ஏழு தத்துவங்கள் தோன்றும். ஆன்ம தத்துவம் இருபத்தினான்கு; வித்தியாதத் துவம் ஏழு; சிவதத் துவம் ஐந்து; ஆக முப்பத்தாறு தத்துவங்கள்.

"தத்துவம் முப்பத்தாறும் தனித்தனி களைந்து நீக்கின்
மொய்த்து இருள் மூடும், அத்தை முன்னவன் அருளால் நீக்கின்
மெய்த்த தன்னுருவம் நன்றாய் விளங்கிடும் அதற்கப்பாலே
சுத்தமெஞ்ஞான மேனிச் சோதிபோல் ஆவனன்றே"

இன்னும் இதன் விரிவைப்பின் வரும் இதழ்களில் தொடர்ந்து காண்க.

சித்தாந்தம் – 1964 ௵ - மார்ச்சு ௴


No comments:

Post a Comment