Saturday, May 9, 2020



சைவ சாத்திர இலக்கியம்
திரு. மு. அருணாசலம். M. A.
[பழநியில் நிகழ்ந்த சமாஜ ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு]


14, 15 - ஆம் நூற்றாண்டுகள்

மெய்கண்ட சாத்திரங்கள் யாவை என்று கூறுகின்ற வெண்பா எல்லோருக்கும் தெரிந்தது.

உந்தி களிறு உயர் போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றி கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மை நெறி சங்கற்பம் உற்று.

இது கூறுகின்ற சாத்திரங்கள் திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் எனப் பதினான்கு. இவை பல உரைகளோடு சைவ சித்தாந்த சமாஜ வெளியீடாக இரண்டு பதிப்புக்கள் வெளி வந்துள்ளன. இவை பற்றிச் சில கருத் துக்களைத் தொடக்கத்தில் நாம் அறிதல் வேண்டும்.

இவ்வெண்பா எக்காலத்தில் யார் செய்தார் என்பது தெரியாது. எனினும், இதை ஆதாரமாய்க் கொண்டு, கொன்றை மாநகரம் சண்முக சுந்தர முதலியார் முதலான பலர், சென்ற நூற்றாண்டின் இறுதியில் இப்பதினான்கு நூல் களையும் பழைய உரைகளுடன் பதிப்பித்தார்கள். இவற்றுள், சங்கற்ப நிராகரணத்தின் காலம் மட்டும் நமக்குத் திட்டமாய்ப் புலப்படுத்தும் சான்று அதனுள்ளேயே காணப்படுகின்றது.

"சாலி வாகன சகம் 1235 இல் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்தில் ஆனித் திருவிழா ஆறாம் நாளில் சமய வாதிகள் வந்து கூடி வாதம் செய்தனர். அங்கு மறை ஞான சம்பந்தருடைய மாணாக்கர் ஒருவர் வந்து பிறர்கோள் மறுத்துத் தம் கோள் நிறுவினார்" என்று அந்நூல் கூறுகிறது. நூலின் தொடக்கத்தில் வரும் பின் கண்ட வரிகள் கால வரையறைக்கு ஆதாரமாய் உள்ளன.

வாய்ந்த நூல்கள் ஆய்ந்தனராகி
ஆசானாகி வீசிய சமத்துடன்
ஏழஞ் சிருநூறு எடுத்த ஆயிரம்
வாழும் நற் சகனம் மருவா நிற்பப்
பொற் பொது மலிந்த அற்புதன் ஆனி
ஆறாம் விழாவில் பொற்றேர் ஆலயத்து
ஏறா அறுவர் நிரையில் இருப்ப

என்பது பாட்டு. "ஏழஞ்சு இரு நூறு எடுத்த ஆயிரம் " என்பது சகம் 1235; அதாவது கி. பி. 1313. எனவே, இது சங்கற்ப நிராகரணம் தோன்றுவதற்கான காலம் திட்டமாய் வரையறை செய்ததாயிற்று. இதிலிருந்து பதினான்கு சாத்திரங்களுக்கும் பின் வருமாறு காலம் கூறுவார்கள். உந்தி 1148, களிறு 1178, சிவஞான போதம் 1223,
சித்தி 1253, இருபா இருபஃது 1254, உண்மை விளக்கம் 1255, மற்ற எட்டும் முறையே 1306, 1307, 1308, 1309, 1310, 1311, 1312, 1313 ஆகிய ஆண்டுகள். இவை எந்த அளவு உண்மை என ஆராய்ந்து முடிவு கட்ட இப்போது இயலவில்லை. எனினும் சங்கற்ப நிராகரணம் குறிப்பிடும் காலம் 1313; அன்றியும் சாசன ஆராய்ச்சியாளர், மெய் கண்டாரின் காலம் கி. பி. 1232 ஐ ஒட்டி இருக்கலாம் எனக் கூறுவர். இவற்றால் மேற் குறிப்பிட்ட காலக் கணக்கு ஓரளவுக்குப் பொருந்துவதாய்க் கொள்வதில் தவறு இல்லை.

உந்தி களிறு இரண்டும் மிகப் பண்டைய நூல்கள் என்று பெரியோர் கூறுவர். அவை 12 - ஆம் நூற்றாண்டு என்று முன் குறிப்பிட்டது ஏற்கக் கூடியது. முந்தியதான உந்தியின் ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவர். களிற்றுப் படியின் ஆசிரியர், அவருடைய மாணாக்கரான ஆளுடைய தேவ நாயனாரின் மாணாக்கரான திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார். சிவஞான போதம் செய்தவர் திருவெண்ணெய் நல்லூர் மெயகண்ட தேவர். அவருடைய மாணாக்கரான அருணந்தி சிவாசாரியர் சிவஞான சித்தியும், இருபா இருபதும் செய்தார். மெய் கண்டாரின் மற்றொரு மாணாக்கரான திருவதிகை மனவாசகங் கடந்தார் உண்மை விளக்கம் செய்தார். சந்தான பரம்பரையில் அருணந்தியின் மாணாக்கரான மறைஞான சம்பந்தர் நூல் எதுவும் செய்ய வில்லை. அவர் மாணாக்கரே கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியர். இவர் வாழ்ந்த காலம் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியும் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

நாம் இங்கு ஆராயும் காலப் பகுதி உமாபதியாரோடு தொடங்குகிறது. ஆகவே அவருடைய வரலாற்றை நாம் அறியலாம். இவர் தில்லை மூவாயிரவருள் ஒருவராய்ப் பிறந்து, ஒருநாள் நடராஜா பூசை முடித்துச் செல்கையில் வீதியில் மதுகர விருத்தி செய்து சென்ற கடந்தை - மறை ஞான சம்பந்தரை நோக்காது அப்பாற் செல்ல, அவர் 'பகற் குருடன் போகின்றான்' எனக் கூறக் கேட்டு, அந்த நிலையே பரி பக்குவம் பெற்று அவரை வணங்கி அவரால் சோதிக்கப் பெற்று, பின் சிவஞான போத உபதேசம் பெற்றார். இது பற்றி இவரைப் பூசையினின்றும் விலக்கிய தில்லை மூவாயிரவருக்கும் நடராஜா அருளால் தம் பெருமை உணர்த்தப் பெற்று, அவர் சீட்டுப்படி பெற்றான் சாம்பானுக்கும், பின் முள்ளிச் செடிக்கும் முத்தி கொடுத்து, தடைபட்டிருந்த கொடி ஏறும் பொருட்டுக் கொடிக் கவி பாடினார். இவர் செய்த நூல்கள் மேற்கண்ட எட்டுமன்றி, கோயிற் புராணம், திருத் தொண்டர் புராண சாரம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம், திருப்பதிகக் கோவை என்பன; வட மொழியில் பௌஷ்கர வியாக்கியானம்.
இங்குக் குறிப்பிட்ட வரலாறும், நூல்களும் சைவ உலகத்தில் பிரசித்தமாய்த் தெரிந்தவை. ஆகவே அவற்றை ஆராய வேண்டியதில்லை. எனினும், ஒரு குறிப்பு மட்டும் இங்குப் பொருந்துவதாகும். உண்மை நெறி விளக்கம் என்ற ஆறு பாடல்கள் கொண்ட சிறு நூல் இவர் செய்ததன்று; சீகாழிச் சிற்றம்பல நாடிகள் மாணாக்கரான சீகாழித் தத்துவ நாதர் செய்தது என்று திரு. அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள் சமாஜ சாத்திர முதற் பதிப்பில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். அக்கூற்றைப் பின்னால் தத்துவ நாதரைக் குறித்துப் பேசும் போது பார்ப்போம். பல ஏடுகளில் உண்மை நெறி விளக்கம் காணப் படாமல் சிற்றம்பல நாடிகள் செய்த துகளறு போதம் காணப்படுவதாம். இதுவே பதினான்காவது சித்தாந்த சாத்திரமாகும் என்பது பிள்ளையவர்கள் கருத்து.

உமாபதியார் தொகுத்த திருமுறைத் திரட்டு என்பது சைவ உலகம் அதிகம் அறிந்திராத ஒரு சிறப்பான செய்தி.

திருமுறைத் திரட்டு: -

மூவர் தேவாரங்களும் அடங்கன் முறை எனப் பெயர் பெறும். திருமுறை என்றும் இவை சிறப்பாக வழங்கப் பெறும். மிகப் பழைய காலத்திலேயே இவற்றிலிருந்து தனியே தொகுக்கப் பெற்று திரட்டுக்கள் இரண்டு வழங்கின. இவற்றுள் பிந்தியது இன்று வரை பெரிதும் வழக்கில் உள்ளது. இதுவே அகத்தியர் தேவாரத் திரட்டு. இது பற்றிப் பின்னே விரித்துக் கூறுவோம். அதைவிடக் காலத்தால் முந்தியதாக ஒரு திருமுறைத் திரட்டு உண்டு. அது உமாபதி சிவாசாரியார் திரட்டினார் என்பது வழக்கு. இவ்வாறு குறிப்புக்கள் கிடைக்கின்றன. முதலாவது ஞான தீக்கைத் திருவிருத்தம் என்ற நூலின் எட்டாம் பாடல. அது பின் வருவது:

தேசுமிகும் அருட் பயின்ற சிவப்பிரகாசத்தில்
திருந்து பொதுச் சங்கற்ப நிராகரணத் திருத்தி
ஆசிலருள் வினா வெண்பாச் சார்பு நூலால்
அருள் எளிதிற் குறிகூட அளித்து ஞானம்
பூசை தக்க காரண முன் புகன்றதனிற் புரிந்து
புணர் விக்கச் சிவஞான போதசித்தி வழி நூல்
மாசில்சத மணிக்கோவை முன்னூற் சான்று
மருவு திரு முறைத் திரட்டும் வைத்தனன் மன் னுயிர்க்கே

இதன் கடைசி வரியில் "உயிருக்கு ஞான தீக்கைக்காக வைத்த நூல்கள் முறையே சிவஞானபோதம், சித்திவழி நூல், மாசில்சத மணிக்கோவை, திருமுறைத் திரட்டு என்ற நான்கு ஆகும்" என்று அறிகிறோம். இந்தத் திருமுறைத் திரட்டு உமாபதியார் செய்தார்.

இனி இரண்டாவது சான்று; இந்தத் திருமுறைத் திரட்டு ஏட்டுப் பிரதியின் இறுதியில் காணும் உமாபதிவணக்கச் செய்யுளின் பின், "திருமுறைத் திரட்டு உணர்த்தும் தேவே என்பதனாலும் அறிக'' என்று எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டாலும், இந்தத் திருமுறைத் திரட்டு மிகவும் பழமையானது என்றும், இதனைத் திரட்டினவர் உமாபதி சிவாசாரியர் என்றும் நாம் அறிகிறோம்.

இனி மூன்றாவது, தருமபுர மடத்தில் கி. பி. 1740 இல் வாழ்ந்த சிவானந்த தேசிகர் என்பவர், தாம் எழுதிய சம்பிரதாய தீபம் என்ற நூலில், இந்தத் திருமுறைத் திரட்டைக் குறிப்பிடுகின்றார். அளவைக்குத் தாம் பிரமாணமாகக் கொண்ட நூல் இவை என்று இரண்டு வெண்பாக்களால் உணர்த்துகிறார். அவை பின் வருவன:

வந்த அனுமான உபமான அளவைக்கிங்கு
எந்த நூல் முன்னூல் இயம்புவாய் - மைந்தா
சிவநெறி ப்ரகாசம் சிவப்பிரகாசம்
தவர்புகழ்ஞானாமிர்தந் தாம்

தக்துவப்ர காசஞ் சதுர்வேத சங்கிரகம்
முத்தர்பாற் கேள்வி முறைத் திரட்டுச் - சித்தி முதற்
பன்னூலில் உண்மை பகர்ந்தான் குரு அவைகள்
இந்நூலிற் சொன்னோம் எடுத்து.

இங்கு இரண்டாம் பாடலில் முறைத் திரட்டு என்று குறிப்பிடுவது, முன்னே குறிப்பிட்ட உமாபதி சிவாசாரியர் செய்த திருமுறைத் திட்டு என்றே கொள்ளத்தகுந்தது.

இந்தத் திருமுறைத் திரட்டானது 99 திருப்பாசுரங்களை உடையது. திருவருட் பயனில் காணும் பாகுபாட்டைத் தழுவி இதுவும் 1. பதி முது நிலை, 2. உயிரவை நிலை, 3. இருண்மல நிலை, 4. அருளது நிலை, 5. அருவுரு நிலை 6. அறியும் நெறி, 7. உயிர் விளக்கம், 3. இன்புறு நிலை 9. அஞ்செழுத்தருணிலை, 10. அணைந்தோர் தன்மை என்று பத்துப் பகுதியாகப் பகுக்கப் பட்டு முறையே 14, 13, 6, 8, 7, 14, 12, 5, 4, 16, ஆகிய பாசுரங்களை உடையது. மூவர் திருப்பாடல்களையும் கொண்டது. இப்பகுப்பு கொற்றவன் குடிப் பெரியாரே செய்த திருவருட் பயன் பகுப்பினைத் தொடர்ந்து செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் சம்பந்தர் பாடல்கள் 26, அப்பர் பாடல்கள் 63, சுந்தரர் பாடல்கள் 10. இப்பாடல்கள் திருமுறைக் கிரமப்படித் தொகுக்கப் பெறவில்லை. கருத்தமைதியும் தொடர்பும், கருதியே தொகுக்கப் பெற்றுள்ளன. மிக அதிகமான பாடல்கள் அப்பர் பாடல்கள்.

இந்தத் திரு முறைத் திரட்டு சைவ உலகில் இன்று வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே ஆதியில் தோன்றிய திருமுறைத் திரட்டு ஆதலினாலும், சந்தான ஆசாரியாரான உமாபதி சிவாசாரியர் திரட்டியது ஆதலாலும், இது சைவர்களிடையே பெரிதும் பயிலுதற்கு உரியது.
மதுரைச் சிவப்பிரகாசர்: -

இனி 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு ஓர் எல்லையாக உமாபதியார் அமைவது போல, 15 ஆம் நூற் றாண்டின் இறுதிக்கு ஓர் எல்லையாக மதுரைச் சிவப்பிரகாசர் என்ற பெரியார் அமைகின்றார்.

இவர் உமாபதியார் பாடிய சிவப்பிரகாசத்துக்குப் பேருரை எழுதியிருக்கிறார். இருபா இருபதுக்கும் உரை எழுதி இருக்கிறார். இவ்வுரையின் அவதாரிகையில் "இந் நூலுக்கு வியாக்கியை செய்ய வேண்டினது கொண்டு மெய் கண்ட சந்ததியில் ஞானப் பிரகாசத் தம்பிரானார் கடாட்சித்த உபதேச சம்பிரதாயத்தைச் சகாத்தம் ஆயிரத்து நானூற்றொருபதின் மேற் செல்லா நின்ற காலத்திலே வியாக்கியை செய்ததென அறிக'' என்று உரைவரலாற்றை உரைத்தார். சிவப்பிரகாசத்தின் உரை இறுதியில் காணப்படுகின்ற பின் வரும் பாடலாலும் சிவப்பிரகாசர் உரையின் காலம் கி. பி. 1488 என்று ஏற்படுகிறது.

ஓது புகழ் சகாத்தம் ஆயிரத்து நானூற்று
      ஒரு பதின் மேற் செல்கின்ற காலந் தன்னின்
மாது பயில் மதுரையில் வாழ் சிவப்பிர காசன்
வண்மையருள் நிகழ்ச்சியினால் உண்மை யாக
ஈது மலம் ஈதுவினை ஈது மாயை
ஈதுயிர் பின் ஈது சிவம் என்றே காட்டித்
தீதில் சிவப் பிரகாசச் செய்யுள் நூறும்
தேர்ந்துரையிட் டே உலகிற் சிறப்பித்தானே.

சகாத்தம் 1410 எனவே காலம் கி. பி. 1488 ஆகிறது. இது 15 ஆம் நூற்றாண்டின் முடிவுக்கான எல்லை என்று நாம் கருதுவதில் தவறில்லை.

இங்ஙனமாக நாம் மிகவும் திட்டமாய்த் தெரிந்த இந்த இரண்டு எல்லைகளுக்குள் அமைந்த சாத்திர நூற்பரப்பே 14, 15 ஆம் நூற்றாண்டுகளின் சைவ இலக்கிய சரித்திரமாகும். இவருடைய சிவப்பிரகாச உரை மிகவும் பழமையானது மிகவும் விரிவானது. உரைக்கு முன்னும் பல உரைகள் இருந்தன என்று இவர் கூறுகிறார். இவர் சிற்றம் பல நாடிகளுடைய சீடர்களுள் ஒருவராகிய சம்பந்த முனி வர் என்பவர் பரம்பரையில் மதுரை ஞானப்பிரகாசர் என்ப வருடைய சீடர், இவர் காவை அம்பல வாணத் தம்பிரானி டத்து மிகவும் ஈடுபாடு உடையவர்.

இவர் உரையின் சிறப்பு, இவர் கூறுகின்ற ஒவ்வொரு விளக்கக் கருத்துக்கும் ஆதாரத்தைப் பண்டைய சாத்திர நூல்களிலிருந்து எடுத்துக் கூறுவதாகும். இவர் மேற் கோள் ஒவ்வொன்றையும் எந்த நூல் என்று குறிப்பிட்டே எழுதுகிறார். இவ்வாறு இவர் எழுதியது, 14 - 15 ஆம் நூற் றாண்டுச் சைவ இலக்கியப் பரப்பை அறிவதற்கு ஒரு சிறந்த திறவு கோலாக உள்ளது. இவ்வாறு இவர் கூறுகின்ற சைவ நூல்கள் பின்வருவன. சித்தாந்த சாத்திரங்கள், உமாபதி சிவாசாரியருடைய கோயில் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், ஞானாமிர்தம், தேவிகாலோத்தரம், தத்துவப் பிரகாசம், ஞான பூசை முதலான ஐந்து நூல்கள் உரூப சொரூப அகவல், பிராசாத அகவல், சிவானந்த மாலை, தத்துவ விளக்கம், சிற்றம்பல நாடிகளுடைய வெண்பா ஞானப்பஃறொடை, ஒளவை குறள், திருப்புகழ் என்பன.

இவர் கூறும் தத்துவ சரிதை, மெய்ஞ்ஞான விளக்கம், சிவார்ச்சனா போதம் என்பன கிடைக்காத நூல்கள். இவரால் தெரிய வந்த மற்றொரு சிறந்த நூல் திருநெறி விளக்கம். இவ்வாறு இப்பெரியார் இந்த நூல்களைக் குறிப்பிடுவதனால் விளக்க முறாத ஆசிரியர்கள், நூல்கள், காலங்கள் விளக்க முறுகின்றன. சைவ சமயம் செய்த புண்ணியத்தின் உரு என்று இவரைச் சொன்னால் பொருந்தும். இவரைப் போல் கால அறிவுக்கு உபகாரியாயிருந்தவர் வேறு இலர்.

இவர் சிவப்பிரகாசத்திற்கு மட்டு மின்றி இருபா இருபஃதுக்கும் உரை செய்திருக்கிறார். அந்த உரையை விரித்து நமச்சிவாயத் தம்பிரான் செய்த விரிவுரை தான் இன்று வழக்கத்தில் உள்ளது. இவர் வடமொழி நூல்களிலும் நிரம்பப் பயிற்சி உடையவர். அசிந்திதம் முதலான சிவாகமங்கள், சதுர்வேத சங்கிரகம், சூத சங்கிதை முதலிய வடமொழி நூல்களை இவர் குறிப்பிடுகின்றார். இலக்கணங்களில் தொல்காப்பியம் நன்னூல் நேமிநாதம் ஆகிய நூல்களைக் குறிப்பிடுகிறார்.

இவ்வுரையாசிரியர் உரை மிகவும் கவர்ச்சிகரமானது. சொற்களின் நயத்தைப் பாராட்டத்தக்க முறையிலே எழுதுவார். 'வளர் விருத்தம்' என்பதை 'இந் நூலிற் சொற்சுருங்கிச் சுத்தம் பொருந்தியிருக்கையினாலும் ஆராயுந் தோறும் அர்த்தம் மேன்மேலும் விரிந்து வருகையினாலும்' என்று உரைப்பார். 'ஞானக் கடலமுது என்றது ஞானத்துக்குச் சமுத்திரத்தை உவமையாகக் கூறியதே தென்னில் சமுத்திரம் போல ஞானமும் அளவு படாத படியாலும், தன்னிடத்திலே கூடின ஆன்ம ஜாலங்களை அந்தச் சமுத்திரம் போல உள்ளடக்கி நிற்கையாலும், அந்தச் சமுத்திரம் போல அமுதம் விளைகையினாலும், அப்படிச் சொன்னதென அறிக 'தற்சிவம் என்பதற்கு உண்மையான சிவமென்றதே தென்னில், ஒருவிகற்பங்களுமின்றித் தற்சுபாவமாய் நின்ற சொரூபத்தைச் சொன்னதென அறிக. எவையும் நன்றாகா என்றது கொண்டே பழைய நூல்களிற் குற்றங் குறையுமெனக் கொள்க. எவையும் தீதாகா என்றது கொண்டே புதிய நூல்களில் நன்மை குறையு மெனக் கொள்க 'தமக் கென ஒன்று இலரே என்றதைத் தமக்கென அறிவில்லாதவர்கள் என்றதே தென்னில், முன் ஜனனத்தில் தமக்கென ஒரு தவமில்லாதவர்கள் என்ற தென்னவுமாமெனக் கொள்க.

சிவார்ச்சன போதம்: -

மதுரைச் சிவப்பிரகாசர் குறிப்பிடுகின்ற நூல்களில் ஒன்று. இது எண் சீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனது. இரண்டு பாடல்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார். இந்த இரண்டு பாடல்களும் நேரே சித்தியார் பாடல்களுக்கு விளக்க உரை போல் அமைந்துள்ளன.
சிவார்ச்சனா போதமானது. சிவ பூஜையைக் கூறு கின்ற ஆகமங்கள், சோம சம்பு சிவாசாரியர், ஞான சிவா சாரியர் முதலிய பூர்வாசாரியர் சிவாகமத்தின் வழி விதித்த பத்ததிகள் ஆகியவற்றை மொழி பெயர்த்துச் செய்த நூல்களில் ஒன்று" என்று சிவஞான சுவாமிகள் சித்தாந்த மாபு கண்டன கண்டனத்தில் கூறுகின்றார்.

சிவார்ச்சனா போதச் செய்யுட்கள் இரண்டையும் ஆராயும் போது இது ஒரு விரிந்த நூலாய் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மெய் கண்ட சாத்திரங்களுள் மிகவும் விரிந்த நூல் சிவஞான சித்தியார், சுபக்கம் மட்டும் 328 திரு விருத்தங்கள் உடையது. சிவார்ச்சனாபோதத்திலிருந்து மதுரைச் சிவப்பிரகாசர் மேற் கோள் காட்டும் இரு செய் யுட்களைக் கொண்டு, இந்நூலும் மிக விரிந்த சாத்திர நூலா யிருக்கலாம் என்று நாம் யூகிக்க இடமுண்டு. சிவார்ச்சனா போதம் என்ற நூல் இன்று கிடைக்க வில்லை.

பூஜைக் கிரியைகளின் தத்துவங்களை உணர்த்துகின்ற குரு மொழி வினா விடை என்ற சிறு நூல், சிவப்பிரகாசம் கூறுகின்ற ஒரு சிவார்ச்சனா போதப் பாடலை மேற் கோளாக எடுத்து உதகரித்து,'என்றார் உமாபதி சிவன்'என்று கூறுகிறது. இதனால் இந்நூல் உமாபதியார் செய் தது என்று தெரிகிறது.

சீகாழிச் சிற்றம்பல நாடிகள்: -

உமாபதி சிவாசாரியருக்குப் பின் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒப்பற்ற ஞானாசாரியராய்ப் பிரசித்தமாய் வாழ்ந்து சைவத்தை வளர்க்கவும் சாஸ்திர அறிவைப் பெருக்கவும் ஞான பரம்பரைகள் தோன்றவும், காரணமாய் இருந்த பெரியார் சீகாழிச் சிற்றம்பல நாடிகள். இந்த இரு நூற்றாண்டுகளின் சமயச் சரித்திரத்தை ஆராயும் போது இது நன்கு புலனாகின்றது.

உமாபதியினுடைய குருவாகிய கடந்தை - மறைஞான சம்பந்தருக்குச் சீடர் பலர். அவருள் கடைசியாக வந்த சீடரே உமாபதியார் என்பது வரலாறு. உமாபதி தம்முடைய கல்விப் பெருக்கால், பல சாத்திர நூல்கள் செய்யத் தகுதியுடையோராய், சந்தான ஆசாரியருள் நான்கா மவராய், சைவ உலகம் போற்றும் பெருமை பெற்றார். மறை ஞான சம்பந்தருக்கு வேறு சீடர்களும் இருந்தார்கள். அவர்களுள் மச்சுச் செட்டியார் என்பவர் வழி வந்தவர் சிற்றம்பல நாடிகள்.

சிற்றம்பல நாடிகள் வரலாறும் இங்கு அறியத்தக்கது. இவர் சீர்காழியில் பிறந்து அங்கு திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் பரம்பரையில் தோன்றிச் சைவ ஆசாரியராக இருந்த கங்கை மெய்கண்டார் என்பவரிடம் சிவஞானபோத உபதேசம் பெற்று, ஞானாசிரியராய் வாழ்ந்தார். பின்னர், கௌரி மாயூரம் அடைந்து அங்கு ஒருமடம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவருடைய சீடர் அறுபத்து மூவர், அவருடன் வாழ்ந்தார்கள். உணவில் வேப்பெண்ணெய் நெய்க்குப் பதில் பரிமாறிய போது நிர்விகற்ப ஞானம் எய்திய அனைவரும் அதை உணராது உண்ணக் கண்ணப்பர் என்ற ஓர் மாணாக்கர் மட்டும் சவிகற்ப ஞானம் உடையவராய்க் கசந்து உண்ணாது இருந்தார். பக்குவமில்லாமையால் இவர் கூட்டத்தினின்றும் நீங்க நேர்ந்தது. பின்னர் சிற்றம்பல நாடிகள் தாம் சிவத்தொடுகலக்கும் நாள் வந்தமை அறிந்து, அறுபத்து மூன்று சமாதிகள் அமைத்து, " தாம் மூன்று வெண்பாக்கள் பாடிச் சமாதியில் இறங்கினார். உடன் இருந்த அறுபத்து இரண்டு சீடரும் ஒவ்வொரு வெண்பா பாடித் தாமும் இறங்கி விட்டார்கள். பின் வந்த கண்ணப்பர் இதை உணர்ந்து சிற்றம்பல நாடிகளை வேண்டச் சமாதி திறந்து, நாடிகள் வெளிவந்து கண்ணப்பரைத் தம் முடன் ஐக்கிய மாக்கிக் கொண்டார் என்பது கதை. சிற்றம்பல நாடிகளுடைய சமாதி மாயூரத்திற்கு அருகேயுள்ள சித்தர் காட்டில் இன்றும் இருக்கிறது.

நாடிகள் மறைஞான சம்பந்தருடைய மாணாக்கர் மச்சுச் செட்டியாரின் மாணாக்கரான கங்கை மெய்கண்டாரின் மாணாக்கர். இவருடைய காலம், கி. பி. 1325 என்று கூறுதல் பொருந்தும்.

சிற்றம்பல நாடி நூல்கள்: -

இவர் செய்த நூல்களில் மிகவும் சிறப்பானது துகளறு போதம். பல ஏட்டுப் பிரதிகளில் மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது. அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள், இது 14 ஆவது சித்தாந்த சாத்திரமே என்று முடிவு செய்தார்கள். துகளறு போதம் என்றால், ஆணவமலமாகிய பெரிய துகளை அறுக்க வல்ல சிவ ஞானம் என்பது பொருள். எளிதாய்ப் பொருளாக வல்ல 100 வெண்பாக்களையுடையது. மதுரைச் சிவப்பிரகாசர், சிவஞான சுவாமி போன்ற உரையாசிரியரால் எடுத்தாளப் பெற்றுள்ளது. சிற்றம்பல நாடி நூலைக் கூறும் போது சிவப் பிரகாசர், ''இவை திருவருளைப் பெற்று அனுபவித்த அடி யார் வாக்கு" என்று விதந்து ஓதுவார். இந்நூல் பழைய தோர் சாமானிய உரையுடன் திருவாவடுதுறையாரால் அச் சிடப் பெற்றுள்ளது. அநேக பாடல்கள் சித்தியார் கருத்தையும் சொல்லையும் எடுத்தாளுவன.

சிவப்பிரகாசக் கருத்து: -

64 ஆசிரியப்பா வரிகளால் சிவப்பிரகாசப் பாடல் அடிவரவும் அடைவும் தொகுத்து, உரைத்திருக்கிறார். இதை மதுரைச் சிவப் பிரகாசரே நமக்கு எடுத்து உதகரித்தவர்.

இப்படி உமாபதி தேவன் உரைத்த
மெய்ப்படு சிவப்பிரகாச விருத்தக்
கருத்தின துண்மை விரித்துரைத் தருளினன்
சண்பையில் வாழும் தவகுரு நாதன்
பண்பமர் சிற்றம் பலவன் தானே.

சாத்திரக் கொத்து: -

இது 1904 - ல் வெளி வந்தது. துகளறு போதத்தோடு 9 பகுதிகள் உள்ளன. இவை பற்றிய சிறு குறிப்பு இங்கு கூறத் தக்கது.

(அ) கலித்துறை: - இது சிற்றம்பல நாடியைப் போற்றுவது; அவர் செய்த தன்று. பாடல் 54; 51 - ஆம் பாடல் வெண்ணெய் மெய்கண்ட நாதனென்றே உரைக்கின்றது. சிறந்த சாத்திரக் கருத்துக்கள் பொதிந்த நூல்.

(ஆ) வெண்பா : - மேற் கூறிய வரலாறு இதைக் கூறுகிறது. எனினும் காப்புச் செய்யுளோடு நூல் தொடங்குவதை நோக்க, 3 சீடர் செய்த தென்றில்லாது, ஒரு வரே செய்தாரெனக் கருதலாம். 14 ஆம் பாடல் தத்துவப் பிரகாசனை விளிக்கிறது. 10 பாடல்கள் சிற்றம்பல நாடி பெயரைக் குறிப்பிடாதவை. சிறந்த சமயக் கருத்துக்கள். சீடர் செய்த நூல். 65 பாடல்கள்.

(இ) தாலாட்டு: - சீடர் செய்த நூல். 63 கண்ணி கள். சிற்றம்பல நாடியைத் தாலாட்டுவது. வேலை நகர், சீராசை, என்ற ஊர்ப் பெயர்கள் பயில்கின்றன.

(ஈ) அனுபூதி விளக்கம்: - 65 கண்ணிகள். சீடர் செய்த. நூல் சிற்றம்பல நாடி உரைத்த அனுபூதியைக் கூறுவது. கங்கை மெய்கண்டாரையும் போற்றுகிறது.

(உ, , எ) இரங்கல்: - வருகாலம், நிகழ்காலம், செல்காலம் முறையே 49, 50, 54 கண்ணிகள் மூன்றும் சிற்றம்பல நாடிகள் செய்தவை. 'மெய்கண்டான், சந்தானத்தை நீண்ட நாள் மேவாதிருந்தோமே'' என்றும் வருங்திக் கூறுகிறார்.

(ஏ) திருப்புன் முறுவல்: - 11 விருத்தம். நாடிகள் பாடல். ''எம்மான் திருப்புன் முறுவல் என்னை நோக்கி இரங்குவதோ” என்று பாடுகிறார்.

ஞானப்பஃறொடை: - சிற்றம்பல நாடிகள் நூல் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுகிறார். நூல், கொத்தில் கீர்ணப்படவில்லை.

உண்மை நெறி விளக்கவுரை: - சிற்றம்பல நாடிகள் உண்மை நெறி விளக்கவுரை செய்தாரென்று வெள்ளியம்பல வாணர் கூறுகின்றார். இது உண்மையாயின், உண்மை நெறி விளக்கம் செய்தவர் சீகாழித் தத்துவ நாதான்று, உமாபதியாராகல் வேண்டும். ஆனால் இவ்வுரை இன்று கிடைத்திலது. வெள்ளியம்பல வாணர் கூற்று மேலும் ஆராய்தற்குரியது.

சிற்றம்பல நாடிகள் பரம்பரை: -

சிற்றம்பல நாடிகள் பரம்பரை சிறிது இங்கு அறிதல் நன்று. கடந்தை மறை ஞான சம்பந்தரின் மாணாக்கராகிய மச்சுச் செட்டியார் என்பவர், காழிக் கங்கை மெய்கண்டாருக்குச் சிவஞான போதச் சாத்திர உபதேசம் செய்தார். இவர் சீகாழியில் தோன்றிய சிற்றம் பலவர் என்பவருக்கு உபதேசம் செய்தார். சிற்றம் பலவர் தம் பெருமையால், சிற்றம்பல நாடிகள் எனப் பின்னர் வழங்கப் பெற்றார் (சிற்றம் பலத்தை நாடினமையாலே, சிற்றம் பல நாடிகள்). இவரிடத்தில் அருள் பெற்றார் அனேகர். (1) முதலாமவர், சீகாழித்தத்துவநாதர். இவர் உண்மைநெறி விளக்கமும், இருபா இருபதுரையும் எழுதினார். (2) சீகாழித் தத்துவப் பிரகாசர் இவர் தத்துவப் பிரகாசம் செய்தார். இவர் சிவபுரம் தத்துவப் பிரகாசர் அல்லர். (3) காழிச் சம்பந்த பண்டாரம் (4) கண்ணப்பர் முதலாக 63 பேர். இந்த 63 பேரும் சிற்றம் பல நாடிகளுடன் ஒரே காலத்தில் சமாதி பெற்றனர். "ஏக காலத்தில் அறுபத்து மூன்று பெயருக்குச் சாம்பவ தீக்கையால் சத்தியோ நிர்வாண தானம் பண்ணித்தாமும் சமாதியிருந்து சிவகதியடையும் பெருமையுடைய சிற்றம் பல நாடிப் பண்டாரம்" என்று முத்தி நிச்சயப் பேருரையில் வெள்ளியும் பலவாணத் தம் பிரான் எழுதுகிறார்.

இனி மேற்பெயர் குறித்த நான்கு சீடர்களில் மூன்றாம் வராகிய சம்பந்த பண்டாரத்தின் வரலாறு தொடர்ந்து ஆராயத் தகுந்தது. இவர் சிவானந்த மாலை செய்தவர். இவருக்கும் பல சீடர். (1) ஒருவர் காவை அம்பல நாத (வாண) த்தம்பிரான். இவருடைய மாணாக்கர் மதுரை ஞானப் பிரகாசத் தம்பிரான். இவருடைய அருள் பெற்றவர் மதுரைச் சிவப்பிரகாசத் தம்பிரான், இவரே சிவப்பிரகாசப் பேருரை எழுதியவர். "இந்த வியாக்கியானஞ் செய்தது மெய்கண்ட சந்ததியில் காவையம் பல நாதத் தம்பிரானார் திருவடிமரபில் ஆசாரியரில், மதுரையில் ஞானப்பிரகாசத் தம்பிரானார் திருவடியடியாரில் சிவப்பிரகாசன் செய்த வியாக்கியான மென அறிக. இந்தச் சிவப்பிரகாசமாகிய நூலுக்கு முன்னோர்களும் வியாக்கி செய்திருக்க இப்பொழுது இந்த வியாக்கி செய்ய வேண்டுங் காரணமே தென்னில், முன்னுள்ள தம்பிரான்களெழுதிய வியாக்கிகளெல்லாம் பொழிப் புரையாக எழுத அதனோடு சமயிகள் கருத்துக்களுங் காட்டி என் தம்பிரான் ஞானப்பிரகாசத் தம்பிரானார் எழுதின வியாக்கியின் வழியே தொந்தனையும் பாட்டுஞ் சேர்த்து, அது நீங்கலாகக் காவையம்பல நாதத்தம்பிரானார் இந்நூலின் கருத்தாகச் செய்தருளின குறள் வெண்பா நூறும் இந்நூலிற் பாட்டுகள் தோறும் பகுத்துச் சேர்த்து அந்தக் குறளின் கருத்தாகிய அத்தங்களுக்குந் தவறுவராமல் முன்னுண்டான வியாக்கிகளின் பொழிப் போடும் விரி வோடும் நுட்பமும் அகலமுங் காட்டி வழி நூல்களிலுண்டான சூத்திரம் பன்னிரண்டு இந்நூலிலே வகுத்து வியாக்கி செய்ததென அறிக.'' என்று அவர் கூறுவதால், இந்த மதுரை ஞானப் பிரகாசர் ஒரு வியாக்கியானம் செய்தார் என்று அறிகிறோம்.

இனி இரண்டாவது சீடர்: -

இவர் பெயர் சிவபுரம் ஞானப் பிரகாச பண்டாரம் இவர் பரம்பரையில் அடுத்து மூன்றாவது தலைமுறை கீமலை ஞானப் பிரகாசர், அவருடைய சீடரே தருமையாதீனம்தோற்றுவித்தருளிய குருஞான சம்பந்தர். இவ்விருபெரி யார்களும் 16 ஆம் நூற்றாண்டினர்; அனேக சாத்திர நூல்கள் செய்தவர்கள்.

சம்பந்த பண்டாரத்தின் மூன்றாவது சீடர் சம்பந்த சரணாலயர் என்பவர். இவர் சீர்காழி யூரினர், இவர் செய்த நூல் தத்துவ விளக்கம், இவருடைய மாணாக்கர் திருநெறி விளக்கம் பாடிய ஆசிரியர். இவர் சம்பந்த சரணாலயர் என்று தம் குருவைத் துதிக்கிறார். பின்னர் இவ்வாசிரியர் சரணால யரை விட்டு நீங்கிச் சிவாலய முனிவரைத் தம் ஞான குரு வாய்க் கொண்டு வாழ்ந்தார் என்று அறிகிறோம்.

இச்சம்பந்த சரணாலயர் பிற்காலத்தில் காழிக் கண்ணுடைய வள்ளல் என்று பெயர் பெற்றார். இவர் திரு ஞான சம்பந்தன்; சீகாழி நாடன் என்றும், கண்ணுடைச் சம்பந்தன் என்றும், வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் என்றும் பல நூல்களில் பலவாறாகக் குறிப்பிட்டுப் போற்றுகிறார். கண்ணுடைய வள்ளல் ஆகுமுன் இவர் தத்துவ விளக்கம் செய்தார். இவர் வள்ளல் ஆனபின் செய்த நூல்கள் மேலும் பல. இவரது ஒரு சீடர் ஞானியாக வும், பிராசாத யோக நெறி நின்ற யோகியாகவும் இருந்து பிராசாத தீபம் என்ற யோக மார்க்க நூல் செய்தார். மற்றொரு சீடர் திருநெறி விளக்கம் செய்தார். இருவருடைய பெயரும் தெரிந்திலது.

இதுவரை நாம் கூறிவந்தது மறைஞான தேசிகரிடமிருந்து உமாபதி வழியாக அல்லாமல், மச்சுச் செட்டியார் என்ற சீடர் மூலம் வளர்ந்த பரம்பரை.

இனி உமாபதியார் மூலம் வளர்ந்த பரம்பரையைக் குறித்தும் சில சொற்கள் கூறலாம். உமாபதியின் சீடர் அருள் நமச்சிவாயர், அவர்சீடர் சித்தர் சிவப்பிரகாசர்; அவர் சீடர் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்தாபித்த நமச்சிவாய மூர்த்தி,

ஆராய்ச்சியின்மை காரணமாக அறிஞர் என்று பெயர் படைத்தோர் பலர், இக்காலப் பகுதியை இருண்ட காலம் என்று கூறுகிறார்கள். அது சிறிதும் பொருத்தமன்று. மதுரைச் சிவப்பிரகாசர் என்ற ஒரு பெருந் தீபத்தை ஏற்றி நாம் பார்த்தால் அங்கு இத்தனைச் செய்திகளும், நூல்களும், ஆசாரியர்களும், ஞானிகளும் இருக்கக் காண்கிறோம். இவ்வளவு இருக்கும் போது இருண்ட காலமென்பது, வரலாறு அறியாமையே.

இவ்வாசிரியர்கள் நூல்கள் பற்றிய விளக்கங்களும் பின்னர்க் காணலாம்.

ஓர் எச்சரிக்கை பயனுடையதாகும். இவ்விரு நூற்றாண்டுகளிலும் சீகாழியானது சைவ ராஜதானியாகப் பிரகா சிக்கிறது. சிற்றம்பல நாடி போன்ற பெரியார் ஒளிகாலும் ஞாயிறு போலத் திகழ்கிறார்கள். அனைவருக்கும் மூல ஒளி, காழிச் சம்பந்தப் பிள்ளையான ஆளுடைப் பிள்ளையார். ஆகலால் எல்லா ஆசிரியர்களும் சம்பந்தரையே பாடுகிறார்கள். சம்பந்தர் செய்துள்ள அற்புதங்களைத் தம் ஞானாசிரியர்மீது ஏற்றியும் கூறுகிறார்கள். ஆசாரியன் என்ற மாத்திரத்தில் அனேகர் சம்பந்தரையே விளிக்கிறார்கள். இந்தப் பெயரைக் கண்டு நாம் குழம்பக் கூடாது என்று கூறுவது முக்கியம்.
வடலூருக்குச் செல்பவர்கள் இன்றும் வியாழனன்று வெண்பொங்கல் செய்து, சத்திய ஞானசபையில் சம்பந்தருக்குப் படைக்கிறார்களாம். இராமலிங்க சுவாமிகள் சபையில் சம்பந்தருக்கு என்வழிபாடு என்று கேட்டுப் பயனில்லை. சம்பந்தரிடம் உள்ள ஈடுபாடு இவ்வாறு வெளியாகிறது என்று நாம் கருதவேண்டும்.

“அருள் வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் - அந்தப்
பெரு வடிவை யாரறிவார் பேசு.'' 

என்பது திருக்களிற்றுப் படியார் 5 ஆம் பாடல். இதை யொத்த மற்றொரு பாடல் சைவ சமயிகள் எல்லோரும் அறிந்தது, சொற்பொழிவாளர் அனேகர் நாவிலும் பயில்வது;

சொற்கோவுத் தோணிபுரத் தோன்றலும் எம் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் - முற்கோலி
வந்திலரேல் நீறெங்கே மாமறை நூல் தானெங்கே
எந்தை பிரான் ஐந்தெழுத் தெங்கே?

இப்பாடலைச் சொல்லாத சைவர் இருக்கமாட்டார்கள். ஆனால் இது சிவானந்த மாலையில் பதினோராவது பாடல் என்று அறிந்தவர் எத்தனை பேர்?

சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கையும் அடுத்து அனேக சாஸ்திரங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் சிறப்பானது சிவானந்த மாலை என்பது.

இந்த நூலின் பாடல்களை மதுரைச் சிவப்பிரகாசரும், திருப்போரூர் - சிதம்பர சுவாமிகளும் தங்கள் உரைகளில் மேற்கோளாகக் காட்டுகிறார்கள். பெருந்திரட்டில் இது தொகுக்கப் பட்டுள்ளது. அன்றியும் மதுரைச் சிவப்பிரகா சர் இந்நூலைக் குறிப்பிடும் போது "இறை திருவருளைப் பெற்று அனுபவித்த அடியார்களின் வாக்கு'' என்று சொல்லுகின்றார். இதனால் மதுரைச் சிவப்பிரகாசர் போன்ற பெரியார் இந்த நூலை எவ்வளவு சிறப்பாகப் போற்றுகிறார்கள் என்பது விளங்கும். இந்த நூலை அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள் மிக அரிதில் முயன்று பதிப்பித்தார்கள்.

இந்நூல் ஆசிரியரையும் காலத்தையும் பற்றி முதலில் அறிய வேண்டும். இது பற்றி இரண்டு போலிக் கருத்துக்கள் உலவுகின்றன. ஒன்று, தருமபுர மடத்துச் சிவானந்த தேசிகர் இதைச் செய்தார் என்பது. இத்தேசிகர் காலம் 18 ஆம் நூற்றாண்டு. (1740) 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மதுரைச் சிவப்பிரகாசர் குறிப்பிடும் சிவானந்த மாலையை 18 ஆம் நூற்றாண்டுத் தேசிகர் செய்தல் இயலாது என்பது வெளிப்படை.

இரண்டாவது, சிவாநந்த மாலையைக் கண்ணுடைய வள்ளல் செய்தார் என்று கூறுவார்கள். இதை ஆராயும் போது ஓர் உண்மை புலப் படுகின்றது. சிவானந்த மாலை யின் 276 ஆம் பாடல் பின் வருவது.
தாணு வினோ டத்துவிதம் சாதிக்கும் மாண உனை
ஆணவத்தோடத்துவிதம் ஆக்கினர் ஆர் - கோணறவே
என்னாணை, என்னாணை, என்னாணை, ஏகம் இரண்டு
என்னாமல் சும்மா இரு.

இது மதுரைச் சிவப்பிரகாசராலும் மேற்கோள் காட்டப் பட்ட சிறப்புடையது. கண்ணுடைய வள்ளல் பாடிய ஒழிவிலொடுக்கம் என்பது திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் உரைசெய்த பெருமையுடையது. இதன் 151 ஆவது பாடல் இங்குக் குறிப்பிடத் தக்கது.

என்னாணை, என்னாணை, என்னாணை. ஏக மிரண்
டென்னாமற் சும்மா இருவென்று - சொன்னான்
திருஞான சம்பந்தன் சீகாழி நாடன
அருளாளன் ஞான விநோதன்

இந்தப் பாடலையும், முன்னே குறிப்பிட்ட சிவானந்த மாலைப் பாடலையும் ஒரு சோப்பார்க்கும் போது, சிவானந்த மாலையுடையார், "ஏகம் இரண்டு என்னாமல் சும்மா இரு" என்று உபதேசித்தார் என்றும், அந்த உபதேசத்தை மனத்தில் ஏற்றுக் கண்ணுடைய வள்ளல் இவ்வாறு தம் உபதேச குருவைப் போற்றினார் என்றும் நாம் கொள்ள இடம் ஏற்படுகிறது. எனவே, சிவானந்த மாலையில் வந்த பாடல் குருஉபதேசம் ஆதலால், அந்நூல் பாடினவர் ஒழி விலொடுக்கம் செய்த கண்ணுடைய வள்ளலுடைய குரு என்றும், அவர் சீகாழி நாட்டினரென்றும், அவர் திருஞான சம்பந்தர் என்றும் நாம் முடிவு செய்யலாம். இந்தத் திரு ஞானசம்பந்தர் சம்பந்தமுனிவர் என்றும் வழங்கப்படுகின்றார். இவர் சமய ஆசாரியராகிய ஆளுடைய பிள்ளையாரின் திருநாமத்தைத் தரித்தவர் (ஆளுடைய பிள்ளையார் காலம் 7 ஆம் நூற்றாண்டு.)

இவர் சீர்காழிச் சிற்றம் பல நாடிகளின் மாணாக்கருள் ஒருவர். சம்பந்த பண்டாரம் எனவும் வழங்கப் பெற்றார். இவரிடமிருந்தே பல ஞானபரம்பரைகள் பிரிந்தன. இவருடைய சீடருள் முதலாமவர் காவை அம்பலநாதத் தம்பிரான்.

"வந்தளித்த சம்பந்த மாமுனிவர் - எந்தை பதம்
சென்னியின் மேல் வைத்துச் சிவப் பிரகாசக் கருத்தை
அன்னவயற் காவை அம்பலவன் சொன்னான்'.

என்ற வரிகள் இதைத் தெளிவாக்கும். இரண்டாம் மாணாக்கர் ஞானப் பிரகாச பண்டாரம். இவர் வழி வந்ததே தரும புற ஆதீனம். மூன்றாம் மாணாக்கர், சம்பந்த சரணாலயரா யிருந்து தத்துவ விளக்கம் செய்தார்; இவருடைய சீடர் திருநெறி விளக்கம், பாடினார். பின்னர் இவரே காழிக் கண்ணுடைய வள்ளல், தாமே ஒரு பரம்பரையைத் தோற்று வித்தார்.

சம்பந்த முனிவர் பாடிய சிவானந்த மாலை சிறந்த சைவ சித்தாந்த நூல். அரிய சமய உண்மைகளை மிக எளிய உவமைகளால் விளக்குகின்றது. நடையோ மிகவும் எளிய இனிய நடை. இந்த நூலில் 414 வெண்பாக்கள் உள்ளன. காளத்தி, அஞ்சந்தி விநாயகர் காப்புச் செய்யுளோடு இந் நூல் தொடங்குகின்றது. காளத்தி, தோணிபுரம் அஞ்சைக் களம், ஆரூர், காழி ஆகிய தலங்கள் இதனுள் கடவுள் வணக்கப் பகுதியுள் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்நூலிலுள்ள சில பாடல்களை இங்குக் கூறுவது பொருத்தமாகும்.

இவர், அவையடக்கம் கூறுவது, நயமாக உள்ளது. தாம் பெரியோர் முன் இந்த நூலைக் கூறப்பு குவது, பாசமானது, சிவனை அனுபவிக்க முயல்வதை ஒக்கும் ஒன்று கூறுகிறார்.

பாசஞ் சிவனை அனுபவிக்கப் பாவிக்கும்
நேசந் தனக்கு நிகராகும் - காசினிமேல்
நன்மார்க்க மொன்று மிலா நானும் பெரியோர் முன்
சன்மார்க்க நூலுரைத்தல் தான்.

பாசம் ஆன்மாவைப் பந்திக்குமேயன்றி ஆண்டவன்முன் அது இல்லை என்றாகி விடும், தாம் பெரியோர் முன் நூல்  உரைக்கத் துணிவது இயலாத செயல் என்று மிக்க அடக்கத்தோடு குறிப்பிடுகின்றார்.

இலக்கியச் சுவை ததும்புகின்ற மற்றொரு பாடலையும் இங்கே குறிப்பிடலாம். ஆன்மா தோன்றிய அன்றே ஆணவம் ஆன்மாவைப் பந்தித்துக் கொண்டிருக்கிறது; இரண்டிற்கும் உறவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆன்மாவானது கிடைத்தற்கரிய அருளானந்தத்திலே தோய்ந்து முத்தியை அனுபவிக்கும் நிலையில் ஆணவம் பந்திக்க முடியாமல் போகின்றது; 

அந்த மிலா ஆணவமே அன்றுமுதல் இன்றளவும்
வந்த உறவை மறந்தோமே - எந்தையருள்
ஆராத ஆனந்தத் தந்தத்தே எஞ்ஞான்றும்
வாராத முத்தி வர

இப்பாடல் பழைய தனிப் பாடல் ஒன்றை நினைவூட்டுகின்றது. வறுமையால் மிகவும் துன்புற்ற ஒரு புலவர் காளத்தி அப்பர் என்ற வள்ளலைக் கண்டு பரிசில் பெறும் நோக்கத்துடன் அவர் வாழ்ந்த நின்றை என்ற நின்றியூருக்குச் சென்றார்.

நாளைக் காலையில் நாம் காளத்தி அப்பனைக் காண் போம், கண்டு அவனிடத்தில் பரிசு பெறும் போது பிறவி தொட்டு நம்மைப் பீடித்துத் துன்புறுத்தி வந்த இவ்வறுமை நோய் அழிந்தொழியும்'' என்ற பெருமித உணர்ச்சி அவர் உள்ளத்திலே உதித்தது. அப்போது முதல் நாள் இரவு படுத்துறங்கு முன் இந்த எண்ணத்தோடு நல் குரவை விளித்து ''நல்குரவே! இன்றைக்கு மட்டும் நீ சற்று என்னோடு இரு. நாளை நீ இருக்க மாட்டாய் அல்லவா!" என்று இரக்கப் பட்டுப் பாடுகிறார்;

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல் போல
நாளைக் கிருப்பையோ நல்குரவே ! - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே இரு.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ள வேண்டு மென்று, திருமந்திரம் உபதேசிக்கின்றது. மெய்த்தேசிகன் யாவன் என்று சிவானந்த மாலையும் ஓர் இலக்கணம் வகுக்கின்றது.

மந்திரப்பேய் புத்தகப்பேய் வாசனைப்பேய் பூசனைப்பேய்
தந்திரப்பேய் பாவகப்பேய் தர்க்கப்பேய் - சந்தையினின்று
ஆர்த்தவிர தப்பேய் அனைத்துமொரு வார்த்தையிலே
தீர்த்தவனே மெய்த் தேசிகன்.                                  (62)

நாடிய சத்தி நிபாதம் நாலு பாதம்' என்ற சிவப்பிரகாசம் 48 ஆம் திருவிருத்த உரையில் மதுரைச் சிவப்பிரகாசர் சிவானந்த மாலைப் பாடலை எடுத்து உதாரணங்காட்டுதல் அறிந்து இன்புறத் தக்கது. நான்கும் முறையே வாழைத் தண்டு, பச்சைவிறகு, உலர்ந்த விறகு, கரி என்பவற்றில் தீப் பற்றுவது போல என்பார்;

நாலு வகைச் சத்திநி பாதத்து நற்பருவம்
மூல குருவே மொழி எனக்குக் - கோல
அரம்பைத்தண் டொண்பச்சைக் காட்டம் உலர்காட்டம்
நிரம்பு கரி நேரா நினை.                                      (40)

இந்த நான்கு வகைச் சத்திநி பாதமும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்று மதுரைச் சிவப்பிரகாசர் கூறி இவற்றுக்கு அனுபோகமும் கூறுகிறார். முதலாவது, கர்த்தா உண்டென்று அறிவது. இரண்டு, அக்கர்த்தாவைப் பெறும் வழியாது என்று ஆராய்வது. மூன்று, பிரபஞ்சத்தை உவர்த்துப் புளியம்பழமும், தோடும் ஒத்திருப்பது. நான்கு, ஆசாரியனே பொருள் என்று தான் அற நின்று வழி படுகை. இவ்விளக்கத்தைச் சிவானந்த மாலை வேறு விதமாய்க் கூறும்.

மந்ததரம் மெய்யாதி பொய்தோன்றல் மந்தம் கேள்
அந்தமிலா அச்சம் அவையறுத்தல் - பந்த மிகு
தீவ்ரங்கேள் மெய்ஞ்ஞானம் முன்னிரண்டுந் தீர்த் தெழுந்த
தீவ்ரதரம் மெய் வினையாய்த் தேர்

இவ்வகையான சாத்திர நுட்பங்கள் மிகப் பல உணர்வதற்கு இந்நூல் அருந்துணையுமாயுள்ளது.† எளிமையாகவும் ஆனால் மிக்க அழுத்தமாகவும் பல்வேறு சாத்திரக் கருத்துக்களை இந்நூல் சுவைப்படக் கூறுகின்றது. சைவ நன் மக்கள் இதை விரும்பிப் பயில வேண்டியவர்கள்.

இந்நூலுக்கு ஒப்பற்ற தோர் அனுமதியுரையை ஏட்டிலிருந்து, திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்களுக்கு நான் பெயர்த்து எழுதிக் கொடுத்த துண்டு.

ஒளவை குறள்: -

ஒளவையார் அருளிய குறள் நெடுங்காலமாக எல்லோரும் பயில்கின்ற ஒரு சிறு நூல். 31 அதிகாரங்களையும் 310 குறட்பாக்களையும் உடையது. வீட்டு நெறிப்பால், திருநெறிப் பால், தன்பால் என்ற மூன்று பகுப்புக்களை உடையது.

திருவள்ளுவர் செய்த திருக்குறள், அறம், பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களையும் கூறுவதால் முப்பால் என்று வழங்கப் பெறுகிறது. வீடு என்ற பொருள் பற்றி அதில் தனியான பிரிவு இல்லை. ஒளவையார் பாடிய குறளானது வீட்டை மட்டும் கூறுவதால் இது வீட்டு நெறிப்பால் எனப்பெயர் வழங்குகிறது.

திருக்குறளை யடுத்துக் குறட்பாக்களால் ஆன தனி நூல்கள் மிகவும் குறைவு. சைன சமய நூலாகிய அருங்கலச் செப்பு ஒன்று மட்டுமே குறட்பாக்களால் ஆனது. பிற்காலத்தில் உமாபதியார் செய்த திருவருட் பயன் மிக்க சிறப்பும் எளிமையும் உடைய சைவ சமய சாத்திரம் ஆயிற்று. அதன் பின் அனேக நூல்கள் குறட்பாவினாலேயே செய்யப் பெற்றன. உதாரணம் - ஒளவை குறள், மறை ஞான சம்பந்தர் செய்க முத்திநிலை, பரமோபதேசம் முதலான பல நூல்கள், பதி பசு பாசத்தொகை, நித்திய கன்ம நெறி, திருமெய்ஞ்ஞானப் பயன் போன்றவை. ஆனால் இவையாவும், ஒளவை குறள் தவிர, 15 - ஆம் நூற்றாண் டுக்குப் பின் வந்தவை.

திருவருட் பயன்: -

ஒரு சம்பிரதாயத்தைத் தோற்றிவைத்திருக்கிறது. அதாவது சமயக் கருத்துக்களை மனத்தில் இருத்தத் துணை புரிவன, குறட்பாக்கள் என்பது. சுருக்கமாயும் பொருட் செறிவோடும் கருத்தை வெளியிட இவை உதவுவன. இக்கருத்திலிருந்து ஆராயின் இந்தவீட்டு நெறிப்பால் என்பது உமாபதியார் காலத்துக்குப் பின் வந்தது என்பது ஒப்புக் கொள்ளக் கூடியது.

ஆசாரியன் அறிவித்தாலொழிய, நூல்களால் உண்மை ஞானம் பிரகாசியாது என்று சிவப்பிரகாசம் 80 - ஆம்பாடலை விளக்க மதுரைச் சிவப்பி காசர் ஒளவைகுறளைக் கூறுகிறார். “அப்படியாக உண்மையை ஆசாரியன் முகாந்திரமாக அறிகிறதொழிய நூல்களினாலே அறியப்படாது என்பதற் குப்பிரமாணம் ஒளவையார்:

நல்லன நூல்பல கற்பினும் காண்பரிதே
எல்லை யிலாத சிவம்.

எனவரும். மற்றோரிடத்தில் வீட்டு நெறிப்பால் என்று குறிப்பிட்டுப் பின்வரும் பாடலைக் கூறுகிறார்.

ஆணவம் பிண்டி கருமாயை தான் உமி
காமியம் மூக்கென்று காண்.

இது ஔவை குறளில் காணப்படவில்லை.

ஒளவை குறளில் திருமுறைச் சொற்றொடர் ஆட்சிகள் இருத்தல் இயல்பு. தேவார, திருவாசகங்களால் அல் லவா சைவ வாழ்வு? மற்றும் இதனுள் மெய்கண்டசாத்திரத் தொடர்கள் காணப் படுகின்றன. சிறப்பாகக் கொடிக் கவி நான்காம் பாடல்.

அஞ்செழுத்தும், எட்டெழுத்தும், ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - - நெஞ்சழுத்திப் –
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.

இதனோடு ஒளவை குறள் 269 ஆம் பாடலை ஒப்பிடுக.

“பேசா எழுத்துடன் பேசும் எழுத்துறில்
ஆசான் பானந்தி யாம்.''. 

இது கொடிக் கவியைத் தழுவியது என்பது வெளிப்படை குறட்பா யாப்பில் சமய நூல்கள் எவ்வாறு பெருகின என்று கூறிய கருத்துடன் இந்த ஒற்றுமைபையும் ஆராய்ந்தால், ஒளவை குறள் உமாபதியாருக்குப் பின் வந்தது என்பது நன்கு தெளிவாகும்.

இதுகாறும் கூறியவற்றால், ஒளவை குறள் ஒரு சித்தாந்த நூல் என்றும், அதன் காலம் உமாபதியார் காலமா கிய 1300க்கும், 1500க்கும் இடைப்பட்டது, (உத்தேசம் 1400) என்றும் விளங்கும்.

பண்டைக் காலத்தில் புலமை வாய்ந்த தமிழ்ப்பெரு மாட்டியார் அனைவரையும் அவ்வை என்றே வழங்குவது வழக்கம். (புனிதவதியாரை மட்டும் ஊர்ப் பெயரால் காரைக்கால் அம்மை என்றும், தாம் நிகழ்த்திய அற்புதத் தால் 'பேயார்' என்றும், வழங்குகிறோம்.) அவ்வை - அவ் வம்மை. இவ்வாறு பலகறியச் சுட்டாகப் பெருமை பெற்றிருந்த அவ்வையார் பலர். ஒருவர் சங்க காலத்திருந்தார். ஒருவர் சுந்தார் காலத்திலிருந்து விநாயகரகவல் செய்தார் என்பது வரலாறு, புகழேந்தி முதலாயினோர் காலத்திருந்தார் ஒருவர். ஆக்திச்சூடி முதலான நீதி நூல்களைச் செய்தவர் ஒருவர். நாம் கருதும் அவ்வையார் 1400ல் வாழ்ந்து இந்த வீட்டு நெறிப்பால் பாடினார்.

சீகாழித் தத்துவநாதர்: -

சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் பதின்மூன்றாவதாக வுள்ளது உண்மை நெறி விளக்கம். இதை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்து பழமையாக வழங்கி வருகிறது. சைவ சித்தாந்த நூலாராய்ச்சியும் பக்தியும் நிரம்பியவரான அனவரத விநாயகம் பிள்ளை யவர்கள், தக்க ஆதாரத்தின் மேல் இந்த நூல் செய்தவர் உமாபதியாரல்லர், இவர் சீகாழித் தத்துவ நாதர் என்று நிறுவினார்கள். அவர்கள் கருத்துச் சமாஜ முதல் பதிப்பில் வெளியாகியுள்ளது. ஆதாரமான செய்யுள் பின்வருவது:

எண்ணும் அருள் நூல் எளிதின் அறிவாருக்கு
உண்மை நெறிவிளக்கம் ஓதினான் - வண்மையினால்
தண் காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவ நாதன். காழித்தத்துவனார்,

சீகாழிச் சிற்றம்பல நாடிகள். அவருடைய மாணாக்கராகிய சீகாழித் தத்துவநாதர் இந்நூல் செய்தார் என்பது கருத்து.

சித்தாந்த சாத்திர மென்றே இந்நூலைப் பெரியோர் சொல்லி வந்தனர் என்றால், இது எவ்வளவு பெருமையும் நுட்பமும் பொருந்தியதாதல் வேண்டும்? இச்சிறு நூல் ஆறு அரிய திருப்பாடல்களையுடையது, ஆறும் தசகாரியம் கூறும். முதல் இரண்டும் தத்துவரூபம் தரிசனம். சுத்தியும், ஆன்ம ரூபம் தரிசனம் சுத்தியும் கூறுவன. பிந்திய நானகும் முறையே சிவரூபம், தரிகனம், யோகம், போகம் கூறுவன. சித்தாந்த சாத்திரமாய்க் கொள்ளத்தக்க அருமைப் பாடு இச்சிறு நூலில் அமைந்துள்ளமையைக் கடைசி இரண்டு பாடல்களால் அறியலாம்.

சிவயோகம்: -

எப்பொருள் வந்துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்
கெய்தும் உயிர் தனைக் கண்டிவ் வுயிர்க்கு மேலாம்
 ஒப்பில் அருள் கண்டு சிவத் துண்மை கண்டு
உற்ற தெல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச் செய்வதும் அதுவே நினைப்பும் அது தானே
தரும் உணர்வும் பொசிப்பும் அது தானே யாகும்
எப்பொருளும் அசைவில்லை யென அந்தப் பொருளோடு
இயைவதுவே சிவயோகம் எனும் இறைவன் மொழியே

சிவபோகம்: -

பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப் –
பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதி நெறி தப்பிடினும் தவறுகள் வந்திடினும்
தனக்கென ஓர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில்
நாதன் இவன் உடல் உயிராய் உண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையும் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போக மெனப் பேசு நெறி இதுவே.

இனி, சீகாழித் தத்துவநாதர் செய்த மற்றொரு நூல், அருணந்தியாருடைய இருபா இருபதின் உரை:

இருபா இருபஃதுரைஎழுதி னோன்முன்
ஒருவா விகற்பம் உணர்ந்தோன் - அருளுடம்பாம்
பண்புடைய சிற்றம் பலநாடி தாள்பணிவோன்
சண்பை நகர்த் தத்துவ நாதன்.

என்ற செய்யுள். தத்துவநாதர், சிற்றம்பல நாடிகள் மாணாக்கரென்றும், சீகாழியினரென்றும் இப்பாடல் தெரிவிக்கிறது. இது காண்டிகையுரை என்று ஏட்டில் எழுதப்பட்டுள்ளது. சிற்றம்பல நாடிகள் மாணாக்கரான தத்துவப்பிரகாசர் தத்துவநாதர் அனைவரும் சமகாலத்தவர். ஆகலால், சிற்றம பல நாடிகள் காலமாகிய 1325 - 1400 இவர்களுடைய காலமாகும்.

தத்துவப் பிரகாசர்: -

சந்தான ஆசாரியர் நால்வருக்குப் பிறகு ஒப்பற்ற சமயாசாரியர் பலர் விளங்கி இருக்கிறார்கள். அவர்களுள் ஈடற்ற சமயசாத்திரம் செய்த பெரியார் தத்துவப்பிரகாசர். இவர் சிற்றம்பல நாடிகளுடைய மாணாக்கருள் ஒருவர். இவர் தத்துவப் பிரகாசம் என்ற மிகச் சிறந்த விரிவான சாத்திர நூல் ஒன்று செய்திருக்கிறார். இச்சாத்திர நூல் 337 பாடல்கள் உடையது. இதன் இறுதியிலுள்ள வெண்பா

தன்னை அறிவிக்கும் தற்போதம் மாற்றுவிக்கும்
அன்ன அருளானந்தம் ஆற்றுவிக்கும் - மன்னியசீர்த்
தத்துவப்ர காசனியற் சண்பையார் கோனுரைத்த
தத்துவப்ர காசநூல் தான்.

என்பது. இதில் ''சண்பையார் கோன்'' என்றமையால், இவர் சண்பையாகிய சீர்காழியில் வாழ்ந்தார் என்று கருதலாம். இவரைச் சிலர் சிவபுரம் தத்துவப் பிரகாசர் என்று சொல்லுகிறார்கள். அது பொருந்துவதன்று. இந்நூலின் பாயிரப்பகுதி 9 செய்யுட்களையுடையது. யாவும் மிகுந்த நயமுடைய பாடல்கள். சந்தான குரவர் வணக்கப்பாடல் பின் வருவது!

நந்தி சனற் குமரன் சத்தியஞானியடிசேர்
நாதனாம் பரஞ்சோதி மெய்கண்ட தேவன்
முந்து சண் பையர் தலைவன் கொற்றவன் குடியே
முதுபதியாம் உமாபதி இம் முறைமையிலே யாண்ட
செந்திருவின் பயன் சிற்றம் பலநாடி னான்மெய்ச்
சிவஞான வடிவான திருமேனி யடை வாய்த்
தந்த இவர் சந்தான குரவரிவர் மலர்த்தாள்
தப்பாமலெம் மனத்தி லொப்பாக வைப்பாம்.

இங்கு சண்பையர் தலைவன் என்பதன் பொருளாக, "அவரது திருவடியார் நாற்பத் தொன்பதின்மரில் சிரேஷ்டராகிய சண்பையர் தலைவ நாயனார்'' என்று பழமையான தத்துவப் பிரகாச உரை கூறுகிறது. இங்குக் குறிப்பிட்டவர் அருள்நந்தி சிவாசாரியர். இது நாம் கவனிக்கத்தக்கது. சிற்றம்பல நாடிகளையும் சந்தானகுரவரோடு ஒருங்கு வைத்துச் சந்தான குரவர் என்றே தத்துவப் பிரகாசம் குறிப்பிடுவதாகும். இக் குறிப்பினால் சிற்றம்பலநாடிகளுடைய பெருமை நன்குபுவனாகும். அடுத்து வரும் குரு வணக்கத்திலும் இவ்விதமே இவர் தம் குருவாகிய சிற்றம்பல நாடிகளுக்கு வணக்கம் செலுத்துகின்றார்.

மன நினைவில் வாக்கிலனை வருக்கு மறிவரிய
வள்ளல் கள்ளத்தினான் மறுகுமறி விலியேன்
தனை நினைவி லுட்கொண்டே அவனவளோ டதுவாம்
தன்மையில் நின்மல வடிவு தன்னை மன்னித்
தினையனைய வளவிலிரு வினைதுலையொப் பறிந்து
சீர்காழி மன்னு சிற்றம் பல நாடி னானென்
முனைவினையு முடல்வினையும் வருவினையும் அறுத்து
முத்தி யளிப்பவன் மலர்த்தாள் சித்த முற வைப்பாம்

இதன் அவையடக்கப் பாடல் சிவப்பிரகாசப் பாடலைத் தழுவியது. சிவப்பிரகாசத்தினால் சிவம் பிரகாசிக்கும் என்ற குறிப்பு ஏற்படுவது போல, தத்துவப் பிரகாசம் என்ற நூலால் தத்துவம் பிரகாசிக்கும் என்று நாம் கருதலாம். தத்துவங்கட்கும், ஆன்மாவுக்கும், சிவனுக்கும் தத்துவம் என்ற பெயராதலால் தத்துவப் பிரகாசம் என்ற பெயர் என்று உரை கூறுகின்றது..

சித்தியாரைப் பின் பற்றி இவ்வாசிரியர் 9 பாடல்களில் அளவை இலக்கணம் கூறுகின்றார். சைவர்களுக்குச் சித்தியார் எப்படிமிக விரிந்த ஞானசாத்திரமோ அதுபோல இது விரிந்த கிரியா சாத்திரம் என்று கூறினால் உண்மை. சித்தியாரில் குறிப்பாக மட்டும் உணர்த்தப்பட்ட அனேக விஷயங்களை இந்நூல் தெளிவாக விளக்கிக் கூறுகின்றது.

மதுரைச் சிவப்பிரகாசர், ஞானா வாண விளக்கத்தின் ஆசிரியர் போன்றார், இந்த நூலில் நிரம்பப் பயிற்சி உடைய வர்கள்..

இதன் காலம் கி. பி. 1325. மிகப் பழமையான இதன் உரை சிறப்பான உரை. இந்த உரையினாலும், இதுவரையில் அறியப்படாத அநேக நூற் செய்யுட்களை நாம் அறிகிறோம்.

ஒரு குறிப்பு இங்குக்கூறத்தகுந்தது. சிற்றம்பல நாடி கள் வெண்பாவில் 14 - ஆம் வெண்பா பின் வருவது.

என்ன மறைத்த இருள் எங்கேனும் போனதோ
நின்னருளிற் கெட்டதோ நின்றதோ - முன்னைத்
தவகுருவே தத்துவப்ர காசனே சண்பைச்
சிவகுருவே நாயேற்குச் செப்பு.

இப்பாடல் சிற்றம்பல நாடி என்று பெயர் கூறாமல் தத்துவப் பிரகாசனே என்று கூறுவதால் தத்துவப் பிரகாசரைப் போற்றும் செய்யுள் என நாம் கருத இடமுண்டாகிறது. யாப்பிலக்கணப்படி சிற்றம்பல நாடி என்ற தொடர் குறித்த இடத்தில் பொருந்தக் கூடியது. அஃது அங்கு சொல்லப் பெறாமையினால், இது சிற்றம்பல நாடியைக் குறிப்பிடவில்லை. தத்துவப் பிரகாசரையே குறிப்பிடுகிறது என்று எண்ண இடம் தருகிறது.

காவை அம்பல நாதத் தம்பிரான்: -

மதுரைச் சிவப்பிரகாசர் என்ற பெரியார் காவை அம்பல நாதத் தம்பிரான் திருவடி மரபு என்று கூறுவதால் இவர் சில தலை முறைகளேனும் முற்பட்டவர் எனக் கருதலாம்.

காவை அம்பல நாதத் தம்பிரான் என்ற பெயர் காவை அம்பலவாணத் தம்பிரான் என்றும் வழங்கும். இவர் செய்த நூல்களாக இப்போது தெரிந்தவை பின்வருவன:

(அ) பிராசாத அகவல்: - இது 159 வரிகள் உடைய அகவலாக அமைந்தது. 16 பிராசாத கலைகளையும் அவற்றுக் குரிய பெயர், மாத்திரை, வியாபகம், அளவு, வடிவு, ஒளி முதலியவற்றையும் விளக்கிக் கூறுகின்ற, சிறு நூல். இதற்குப் பழமையாய்க் கிடைத்த ஓர் உரையோடு சோம சுந்தர தேசிகர் இதைச் சித்தாந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சிட்டிருக்கிறார். தமிழில் கிடைத்த பிராசாத சாத்திரங்கள் பலவற்றுள்ளும் இதுவே மிகப் பழமையானது. பிரா என்பது சிவஞானம்; சா - கதி; த - தருவது. அதாவது சிவ ஞானமாகிய முத்தி நிலை தருவது. தருமபுரம் மடத்தில் பதினாறு ஒடுக்கம் என்றொரு கட்டு இருப்பதாகச் சொல்வார்கள். இதன்பொருளாவது, பிராசாதத்தில் கூறிய 16கலை களையும் முறையே ஒடுக்கி ஆண்டவனுடைய திருவடியில் ஆன்மாவைக் கொண்டு போய்ச் சேர்த்தல் என்பதாகும். அவ்வாறு ஒடுக்கத்தில் சிவயோகிகள் தங்கிய இடம் இது வாகும்.

அம்பல நாதத் தம்பிரானைக் குறித்து, பிராசாத அக வலின் கடைசியிலுள்ள பின் வரும் வரிகள் கருதத்தக்கன:

துய்யமுத் தமிழ் சேர் வையைமா நதியுங்
குன்ற மெறிந்த வெற்றி வேலன்
போற்றி வானவர் தொழ வீற்றினி திருக்கும்
மன்றவஞ் சோலைக் குன்றநன் னாடும்
பூவலர் வாவிக் காவையம் பதியும்
வளந்திகழ் திசையுடன் விளங்க வந்தோன்
அம்புவி புகழ்திரு அம்பல நாதன்
சிவனரு ளாவருள் திருமந் திரத்தைத்
தவநெறி யொழுகுந் தக்கோர்க் குரைத்தனன்.

இவற்றால் பின்வரும் செய்திகள் வெளியாகின்றன. இவரது ஊர் காவனூர் என்கின்ற காவை; திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தது. கார்காத்த வேளாளர், வள்ளல். முக்கூடற் பள்ளு என்ற நூல் இவரை "காவையம் பலவாணன் பலகிளையும் தழைக்கவே கூறுவாய் குயிலே'' என்று பாடுகிறது. இவர் ஒரு தம்பிரானாய் இருந்து ஒரு ஞான பரம்பரையைத் தோற்று வித்தார் என்று அவதாரிகைக் குறிப்பால் அறிகிறோம்.

(ஆ) உரூப சொரூப அகவல்: - இது அகவற்பாவில் 104 வரிகளையுடைய சிறு நூல், சமீபத்தில் தான் தரும புரத்தார் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. சமாஜம் மதுரைச் சிவப்பிரகாசர் உரையை அச்சிட்ட காலத்தில் இந்நூல் இருப்பதாகத் தெரிய வில்லை. இது பதி பசு பாசம் மூன்றுக்கும் உருவம், சொரூபம், சுபாவம், விசேடம், வியாத்தி, வியாபகம், குணம், வன்னம், தரிசனம், சுத்தி என்ற பத்தையும் கூறும்.

மேவுருவ சொரூபசுபா வம்விசே டம்வியாத்தி
தாவுவியா பகங்குணமே வன்னந்தான் - ஓவுந்
தெரிசனஞ் சுத்தியெனச் சேர்பவை பத்தும்
அருள் பசுபா சங்கட்கும் ஆம்.

என்ற தத்துவப் பிரகாச மேற் கோள் வெண்பாக் காண்க. இவற்றை ஞானாவரண விளக்க வுரையிலும், ஒரு மேற்கோள் பாடல் பின்வருமாறு கூறுகிறது:

உருவம் பின் சொருவ மற்றுமுள சுபாவம் விசேடம்
விரிதரு வியாத்தியோடு வியாபகங் குணமே வன்னம்
தெரிசனஞ் சுத்தி யென்னுந் தெசவித காரியங்கள்
வருவதுஞ் சொல்வர் பத்தும் வருமுறை வேறுஞ்சொல்வர்.

இந்தப் பத்துத் தன்மைகளும் தசக்கிரமம் எனப்படும். இந்த தசக்கிரமம் கூறுகின்ற பிற நூல்கள் தத்துவப் பிரகாசம், குருஞான சம்பந்தர் பாடிய திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் என்பன ஆகும். தசக்கிரமங்களின் பெயர் ஒவ்வொன்றிலும் சற்றே வேறுபட்டிருக்கும். பிராசாத அகவலும், உரூப சொரூப அகவலும் மதுரைச் சிவப்பிரகாசர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. இவற்றைக் கூறுகின்ற கட்டளை யொன்று பல ஆண்டுகளுக்கு முன் சித்தாந்தம் இதழ்களில் வெளியிடப் பட்டுள்ளது.
2. தருமபுர ஆதீன நூல்களில் காவை அம்பலவாணத் தம்பிரான் வெள்ளியம் பலவாணத் தம்பிரானுடைய சீடர் என்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளியம் பலவாணர் குமாகுருபரருடைய மாணாக்கர் என்பார்கள். காலம் 17 - ஆம் நூற்றாண்டின் இறுதி. ஆனால் காவை அம்பலநாதத் தம்பிரானுடைய காலம் 14 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இரண்டுக்குமிடையே 350 ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. ஆகவே அக்கருத்து பொருந்துவதன்று.

களங்கமில் பதிபசு பாசக் கருத்தினை
இவ்வகை தெரிய இயம்பிய தேசிகன்
காரணி பொழில் சூழ் காவை அம் பலவன்
ஏரணி சித்தி உயிர்க் கெய்துதல் எடுத்தே

என்பது இவ்வகவலின் இறுதிவரிகள்.

(இ) சிவப் பிரகாசக் கருத்துக் கலிவெண்பா: -

இவர் சிவப் பிரகாசத்தின் நூற் கருத்தை ஒரு கலி வெண்பாவால் தொகுத்துரைத்தார். பின் வரும் வரிகளைக் காண்க: -

வந்தளித்த சம்பந்த மாமுனிவன் - எந்தைபதஞ்
சென்னியின் மேல் வைத்துச் சிவப்பிரகாசக் கருத்தை
அன்ன வயற்காவை அம்பலவன் - நன்னயத்தாற்
சொன்னான் எழுபிறப்பும் தொல்லை வினை யுந்தீர
மன்னு கமத்தை மதித்து,

இப்பாடல் நம் ஆசிரியரைக் குறித்து ஒரு சிறப்பான செய்தியையும் தெரிவிக்கிறது. இவர் சம்பந்த முனிவருடைய மாணாக்கர். இச்சம்பந்தரே சிற்றம்பல நாடிகளின் மாணாக்கருள் ஒருவரான சம்பந்த பண்டாரம் என்பவர்.
இத்தம்பிரான் மரபையும் இங்கு நினைவு படுத்தலாம். சிற்றம்பல நாடி மாணாக்கர் சம்பந்த மாமுனிவர் (பண்டாரம்). இவர் மாணாக்கர் காவைக் கமலநாகர் : இவர் மாணாக்கர் மதுரை ஞானப் பிரகாசர்; இவர் மாணாக்கரே சிவப்பிரகாசப் பேருரை செய்த மதுரைச் சிவப்பிரகாசர். இவருடைய காலம் கி. பி. 1375 - 1400.

தத்துவ விளக்கம்: -

51 கட்டளைக் கலித்துறை கொண்ட சிறு நூல். சைவ சித்தாந்த மாபின் படி உள்ள தத்துவங்களை விளக்கிக் கூறுவது. ஆசிரியர் இதனில் பாடல் தோறும் காழி வேந்தரைக் குறிப்பிடுகின்றார். இது காரணமாக ஆராய்ச்சியாளர் இந்நூலைக் கண்ணுடைய வள்ளல் செய்தார் என்று கூறுகின்றனர். ஆனால் திருநெறி விளக்கம் ஒன்பதாம் பாடல் "தத்துவ விளக்கம் நவின்ற நாவன். சம்பந்த சரணாலயன்" என்று கூறுகின்றது! இந்த சம்பந்த சாணாலயர் சிற்றம்பல நாடிகளின் மாணாக்கரான காழிச்சம்பந்த முனிவரின் மாணாக்கர்; தம் குருவையே இங்குக் காழி வேந்தர் என்றார். இவரிடம் அருள் பெற்று வாழ்ந்த ஒரு மாணாக்கர் திருநெறி விளக்கம் பாடினார்.

தத்துவ விளக்கம் மிகச் சிறப்பான ஓர் ஆகாச நூலாக இருந்திருக்கிறது; மதுரைச் சிவப்பிரகாசர் பிறசாத்திர உரையாளர்கள், வெள்ளியம்பலவாணத் தம்பிரான், சிவப்பிரகாசப் பெருந்திரட்டுத் தொகுத்தவர் போன்றார் தத்துவ விளக்கப் பாடல்களை எடுத்து ஆளுகின்றார்கள். இந்நூல் சென்ற ஆண்டு சித்தாந்தம் இதழில் வெளி வந்தது.

இவர் திருவருட்பயன் உதாரணம் கலித்துறை என்ற பெயரால் ஒரு நூல் செய்தார் என்று தருமபுரத்தார் வெளி யிட்டிருக்கிறார்கள், இந் நூல் திருவருட் பயன் பாடல் ஒவ் வொன்றுக்கும் ஒரு விளக்கக் கலித்துறையைக் கூறுகிறது. பாடலின் போக்கைக் கொண்டு இது செய்தவர் மதுரைச்'சிவப்பிரகாசர் போற்றிக் கூறும் அம்பல நாதர் அல்லர்; பின் வந்த வேறொருவர் என்று துணிந்து கூறலாம்.

காழிக் கண்ணுடைய வள்ளல்: -

இவர் சீகாழியில் வாழ்ந்த ஞானி. தாமும் பெரிய ஞான பரம் பரையில் தோன்றி எண்ணற்ற சீடருக்கு ஆசிரியராயிருந்து சிவஞானம் பெருக்கியவர். இவரைப் பற்றிய கதைகள் பல. அன்றியும் இவருக்கு முன்னும் பின்னும் சீகாழியில் பல வேறு வள்ளல்கள் தோன்றி வளர்ந்தனர். இத்தனையும் இங்கு ஆராய்ந்து முடிவு சொல்ல இடமில்லை. எனினும் இதுகாறும் செய்துள்ள ஆராய்ச்சிக்குட்பட்ட நூல்களாலும், நாம் ஆராயும் காலத்து எல்லைக்குள் இருந்த பெரியார் என்ற அளவாலும், அறிய வந்த சில உண்மைகளைக் கூறல் பொருந்தும். இவர் திருவதிகையிலிருந்து சீர்காழி வந்து சம்பந்த முனிவர் திருவடிக்குத் தொண்டு பூண்டு சம்பந்த சரணாலயனார் என்ற பெயரோடு வாழ்ந்தார் என்று தெரிகிறது. அந்த நிலையில் இவர் தத்துவ விளக்கம்பாடினார். இவர் மாணாக்கரொருவர் திருநெறி விளக்கம் பாடினார். பின்னர் சம்பந்த சரணாலயர் கண்ணுடைய வள்ளல் ஆனார். திருநெறி விளக்கப் பாடலாலும், தத்துவ விளக்கம் கண்ணுடைய வள்ளல் செய்தாரென வழங்குவதாலும் இதை அறிகி றோம். இவர் ஏற்படுத்திய மடம் குகமடம் என்றும், இவர்களுக்குரியது குகபத்ததி என்றும் அறிகிறோம். பல ஆசிரியர்கள் செய்து வந்ததாகக் கூறிய பல நூல்களை இவர் செய்ததாக எழுதி இருக்கிறார்கள். இது பொருந்துவதன்று. இவர் செய்தனவாக இப்போது தெரிந்து கிடைக்கின்ற நூல்கள் பின்வருவன : ஒழிவிலொடுக்கம், பஞ்சாக்கர மாலை, ஞான சாரம், நியதிப் பயன், மாயாப பிரலாபம், பஞ்சமலக் கழற்றி என்பன.

ஒழிவி லொடுக்கம்

கண்ணுடைய வள்ளல் பாடிய வெண்பா நூல் இது. 253 வெண்பாக்களையுடையது. இந்த நூலில் ஆசிரியர், ஆன்மா கெடாது அதனது போதம் கெடுதலாகிய நெறி யினது சுகாதீத நிலையைக் கூறியமையால் இந்த நூல் ஒழி வில் ஒடுக்கம் எனப் பெயர் பெற்றது. இது திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் உரை செய்த பெருமையும், சென்ற நூற்றாண்டில் வடலூர் இராமலிங்க சுவாமிகள் அச்சில் பதிப்பித்த பெருமையும் உடையது.

இந்த நூலில் உள்ள 151 ஆம் பாடலில் சிவரனந்த மாலை வரிகள் (276) அப்படியே எடுத்து எழுதப்பட்டிருக் கின்றன என்று முன்னமே குறிப்பிட்டோம். இதன் மூலம் இவர் சிவானந்த மாலை ஆசிரியரான சம்பந்த முனிவரின் மாணாக்க சென்பது தெளிவாகின்றது.

இந்த நூல் பொதுவில் உபதேசம், சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு, யோகக்கழற்றி, கிரியைக்கழற்றி, சரியைக் கழற்றி, விரத்தி விளக்கம், துறவு, அவத்தைத்தன்மை, வாதனைமாண் டார் தன்மை, நிலை இயல்பு என்ற பத்துப் பிரிவுகளை உடையது. இதன் இடையில் உள்ள பல பாடல்களிலும் இறுதியில் உள்ள பாடல்களிலும் இந்த நூலைச் செய்தவர் தம்முடைய குருவை "வள்ளல் குருராயன் வாது வென்ற சம்பந்தன்" என்பது முதலான சொற்களால் வழி படுகிறார் என்பது விளங்குகிறது. இந்தச் சம்பந்தர் சிற்றம்பல நாடிகளின் மாணாக்கரான சம்பந்த பண்டாரம் அல்லது சம்பந்தமா முனிவர். சிற்றம் பல நாடிகள் காலம் கி. பி. 1325 என்று மேலே நாம் வரையறுத்தமையால், கண்ணுடைய வள்ளல் காலம் கி. பி. 1350 - - 1375.

ஓர் உண்மை இங்கு அறியத்தக்கது. முந்தைய ஞானா சிரியர் அனைவரையும் போற்றுகின்ற மதுரைச் சிவப்பிரகாசர், மிக்க புகழோடு விளங்கிய இவ்வாசிரியருடைய புகழ் பெற்ற இந்த நூலை எடுத்துக் காட்டவில்லை. ஆகலின், இக் நூலை அவர் சுத்தாத்துவித சித்தாந்த நூல் எனக் கருதினார் இல்லை என நாம் முடிவு செய்யலாம்.


நியதிப்பயன்

வட மொழியில் உள்ள குகபத்ததியின் சாரமாக இவ்வாசிரியர் காழிச் சம்பந்தரை முன்னிலைப் படுத்திப் பாடியது. வினாவும் விடையுமாக 103 கட்டளைக் கலித்துறைகள் உடையுது. நித்திய கருமநியதிகள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லி, ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்று முதல் 29 பாடல்களில் வினாவுகிறார். பின்பு 74 பாடல்களில் அவற்றுக்கு விடை கூறுகின்றார். தம்குருவைக் காழிக் கண்ணுடைய சம்பந்தனே என விளித்துக் கேட்கின்றார். நியதிகளுக்கு இந்நூல் வினாவும் விடையுமாக அமைந்தது போல, பூசைக் கிரியைகளுக்கு வினாவும் விடையுமாக அமைந்த நூல் குருமொழி வினா விடை என்பது பிற்காலத்துச் சதமணிக் கோவையும் இந்த முறையில் அமைந்த நூலே யாகும்.

மாயாப் பிரலாபம்

இது 84 வெண்பாக்களை உடைய சிறு நூல். மாயை யானவள் போதனைப் பறி கொடுத்துப் புலம்புவதாக உள்ளது. இதன் சிறப்புப் பாயிரப் பாடலால் கண்ணுடைத் திரு'ஞான சம்பந்தருடைய தொண்டர் இதைச் செய்தார் என்றும், ஆசிரியர் அதிகைக்கு அதிபர், காழிமூதூரர், குகமடத்தலைவர் என்றும் அறிகிறோம்.

பஞ்சாக் கரமாலை

கண்ணுடைய வள்ளல் செய்த தெனவழங்குவது, 60 வெண்பாக்களையுடையது. எளிமையான நல்ல நடை : இதன் பழமையான உரையோடு சோமசுந்தர தேசிகர் இதைச் சித்தாந்தம் இதழில் வெளியிட்டார். திருவைந் தெழுத்து சம்பந்தமான தூல பஞ்சாக்கரம், சூக்கும் பஞ் சாக்கரம், சீவன் முத்தர் ஞான பூசைக்கிரமம் ஆகியவற்றை உணர்த்தும் நல்ல நூல். இறுதியில் உரையாசிரியர் கூற்றாக வரும் வெண்பாவினால், இதன் ஆசிரியர் கண்ணுடைய வள்ளல் எனக் கருதக்கூடும்.

ஞான சாரம்

118 கட்டளைக் கலித்துறைகளுடைய நூல். வேதாந்தமாகும். " சைவ அத்து விதம் தன்னைத் தமிழினாற் கூறலுற் றாம்'' என்று ஆசிரியர் கூறுகின்றார். சைவசமய சாத்திரக் கருத்துக்களின் சுருக்கமான சிறு நூல்,

பஞ்சமலக் கழற்றி

காழி வள்ளலை முன்னிலைப் படுத்தி பஞ்சமலங்களும் விட்டு நீங்க வேண்டும் என்று கூறுகிற ஐந்து வெண்பாக் களையுடைய சிறு நூல்.


சதமணிக் கோவை: -
    
ஞான பூஜாவிதிப் பாடலின் முன்னே காட்டப் பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலை, மதுரைச் சிவப்பிரகாசர் எடுத்தாளுவதால், இதுவும் பண்டைய நூல் என்றே கொள்ள வேண்டும். பல முறை அச்சான நூல். வினாவடிவில் அமைந்த 106 வெண்பாக்களையும் உரைநடையான வினா விடையாகச் சில வரிகளையும் உடையது.

இது மிகவும் சுவையுடைய சிறு நூல். மாணிக்க வாசகருடைய திருச்சாழலில் ஒருவர் முன்னிரு வரிகளில் கேள்வி கேட்கவும் பின்னிருவரிகளில் ஏற்ற விடையை ஊமைப் பெண் கூறுமாறும் அமைந்திருப்பது போலவே, இதுவும் வினாவிடையாயுள்ளது. கேட்கப் படும் பொருளே வெண்பா. பொருள்கள் புராணகதை, சரியை, கிரியை, தத்துவங்கள். பாசம், அவத்தை ஆன்மதரிசனம் குருதரிசனம் போன்றவை. விடை மிகவும் சுருக்கமாய், ஒன்றிரண்டு சொற்களால் அமைந்தது. எடுத்துக் காட்டாக இங்கு இரண்டு பாடல்களைக் குறிப்பிடுவோம்.

ஒன்று: புராணக்கதை ஈசன் எங்கும் உளன் என்றால் காசி முதலான பதிகளைக் குறிப்பிட்டுப் புகழ்வது ஏன் என்று கேட்கிறார்.

     ஈசன் குறைவறவே எவ்விடத்தும் நிற்பனெனில்
     காகி முதலாகும் பதிகதியாப் - பேசியதிங்கு
     ஏதோ புராணங்கள் எல்லாம் இறையவனே ஈதென்று நாயேற்கு இயம்பு.

விடை: "பசுவின் முலையிலே பால் பலித்தாற் போலே" மற்றொன்று; அத்துவிதமுத்திநிலையை விளக்கவினாவும் வினா.

சித்தாந்தம் – 1962 ௵ - அக்டோபர், நவம்பர், டிசம்பர்



No comments:

Post a Comment