Saturday, May 9, 2020



தாயுமானாரும் அவரது அத்வைதமும்.

வேதமுடனாகம புராணமிதிகாசமுதல்
வேறுமுளகலைகளெல்லா
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
            விரிவாயெடுத்துரைக்கும்
ஓதரியது விதமேயத்துவித ஞானத்தை
            யுண்டுபணுஞானமாகும்
ஊகமனுபவம் வசனமூன்றினுக் கொவ்வும்
            துபயவாதிகள் சம்மதம்
      ஆதலினெனக்கினிச் சரியையாதிகள் போது.
            மியாதொன்றுபாவிக்க நான்
அதுவாதலாலுன்னை நானென்று பாவிக்கி
            னத்துவிதமார்க்க முறலாம்
     எது பாவித்திடினுமதுவாகி வந்தருள் செய்
            யெந்தை நீகுறையுமுண்டோ
யிகபரமிரண்டிலுமுயிரினுக்குயிராகி
            பெங்கு நிறைகின்ற பொருளே.''
   
1.     இன்று நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக் சொண்டது தாயுமான சுவாமிகள் அருளிப்பாடிய பாசுரங்களி லொன்று. இஃதொன்றே, இச்சுவாமிகளது அத்வைதமார்க்க மின்னதென்பதை மிக நன்குவிளக்குவதாகும். இதனை விளக்குமுகத்தானே நமது சுவாமிகள், இம்மார்க்கத்திற்கு, அத்வைத துவைத மார்க்க மெனவும் பெயர் தந்தனர். எனவே யிச்சுவாமிகளது அத்வைத மார்க்கம், துவைதத்தன்மை விரவாத அத்வைதமார்க்கமு மன்று; அத்வைதத்தன்மை விரவாத துவைதமார்க்கமு மன்று. அஃதாவது, கேவல அத்வைத மார்க்கமுமன்று; கேவல துவைதமார்க்கமுமன்று; இவ்விரண்டு மார்க்கங்களின் றன்மைகளுந் தன்பால் விரவப்பெற்றதோர் மார்க்கமென்பது விளங்கும். எனவே, கேவலதுவைத மார்க்கம், கேவல அத்வைத மார்க்கம், இவற்றின் நன்மைகளை யாராய்ச்சிசெய்து, பின்னர் இச்சுவாமிகளது அத்வைதமார்க்கத்தினை யாராய்ச்சி செய்ய வேண்டுவது முறையாம், இம்முறையினின்றே, கேவல துவைதமார்க்கத்தின் றன்மையினையொருவாறு ஆராய்ச்சி செய்யப் புகுவாம்.
   
2. 'துவைதம்' என்னுஞ் சொல்லிற்கு, இரண்டு, என்பது பொருள். துவைதமார்க்கமென்பது, சித்துப்பொருள்களாகிய பரஜீவர்கள், ஒன்றோடொன்று விரவாத, இருவேறு பொருள்கள் எனக்கூறும் மார்க்கமாம். இம்மார்க்கத்தார், இவற்றிற்குத் திருஷ்டாந்தமாக, இருள், ஒளியென்பனவற்றைக் கூறுவர்.
இருள், ஒளி, யென்பன தம்முள் முற்றும் அந்நியமாதல் போல, பரஜீவர்களுந் தம்முள் முற்றும் அந்நியமா மென்பர். அவைகளிரண்டுந் தம்முளென்றும் விரவாதவாறு போல, இவைகளும், பெத்தம் முத்தியாகிய இரண்டு நிலைகளிலும் விரவுதலில்லை யென்பர். முத்தியின்பத்தை யனுபவிக்கும் பொழுதும், ஜீவப்பொருள், பரம் பொருளோடு விரவாது, அதற் கன்னியமாக நின்றே, அதனாற் றரப்படுஞ் சுகத்தை யனுபவிக்குமேயன்றி, யதனோடொற்றித்து நின்றனுபவித்தலில்லை யென்பதேயிவரது கொள்கை. இவர் கொள்கையின்படி, பரம் பொருள், ஜீவப்பொருளின் கண் வியாபித்தலில்லை. அப்பொருள், ஏனைப் பொருள்களி லெவற்றினோடுங் கலவாது, தனித்து நிற்பதோர் பொருள். எனவே யிவரது பரம்பொருட்குச் சர்வவியாபக மென்பதின்றாம். இது பற்றியே யிவர துமார்க்கம், கேவலது வைதமெனவும், பேதமார்க்கமெனவும் பெயர் பெறும். இம்மார்க்கத்தார் பெரும் பாலும் மாத்வர் என வழங்கப்படுகிறார்கள்.
   
3. இம்மார்க்கத்தார், தம்மார்க்கத்தினை அத்துவித மெனவுங் கூறுவர். இவர், அத்துவிதம் என்னுஞ் சொல்லிலுள்ள, அகரத்திற்கு, மறுதலைப்பொருள் கொண்டும், அத்வைதம் துவைதம் இரண்டும், ஒன்றற்கொன்று மறுதலையென்பர். அஃ தாவது : அத்வைதம் என்னுஞ் சொல்லிற்கு இரண்டின் மறுதலையாகிய ஒன்று என்பது இவர் கொள்ளும் பொருளாம். மறுதலைப்பொருள்களாகிய, இருள் ஒளி யென்பவற்றுள், இருள் உண்டெனவே ஒளியும், ஒளியுண்டெனவே யிருளுமுளதெனப்பெறுதல் போல, அத்வைதமென்னுஞ் சொல்லே மறுதலை முகத்தால், துவைதம் என்பதை யுணர்த்து மென்பர் இம்மார்க்கத்தார். எனவே சுருதிகளிற் பிரயோகமாகி வரும் அத்வைதம் என்னுஞ்சொல், பரஜீவர்களின் துவைதத் தன்மையை யுணர்த்துவதென்பதே யிவரது கொள்கை. துவைதத்தன்மையை துவைதமென்னுஞ்சொல், நேரிலுணர்த்துவதாக, அதனை விடுத்து, அத்வைத மென்னுஞ் சொல்லால், சுருதிகள் உணர்த்து மென்றல் சிறிதும் பொருந்தாதென்று இவர் மறுக்கப்படுவர்.
   
4. அன்றியும், இவரது துவை தமார்க்கம், மற்றுஞ் சுருதிகட்கும் பொருந்துவதன்றாம். வேதங்களில் பேதவாக்கியங்களுமுள; அபேதவாக்கியங்களுமுள. இவரது மார்க்கம், பேத வாக்கியங்களோடு பொருந்துவதாயினும், அபேதவாக்கியங்களோடு பொருந்து மாறில்லை. “ நானே எல்லாமாயினேன் " என்று பரம்பொருளின் சர்வவியாபகத்தை விளக்கும் வாக்கிய முதலிய வற்றினோடிம் மார்க்கம் பொருந்துவதன்றாம். இத்தன்மைத்தான வாக்கியங்களை யிவர் கௌணமென ஒதுக்குவர். எனவே இவ்விருதிறத்து வாக்கியங்கட்கும் பொருத்தங்கூறுஞ் சிவாகமவாக்கியங்கட்கும் இம்மார்க்கஞ் சிறிதும் பொருந்துவதன்றாம். இதனாலேயே சிவாகமங்களை யிவர் பிரமாணமெனக் கொள்ளார். அன்றியும் "மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந் திருந்தொளியதாரகையுந் திரிசுடர்களோரி ரண்டும் பிறவுமாய பெருந்தகையை'' என்னுந் திராவிட சுருதியோடும் பொருந்தா தாகும். இது காறும், இம்மார்க்கம் சுருதி, யுக்தி,
அனுபவம் மூன்றற்கும் பொருந்துவதன்றாம் எனக்காட்டினாம். கேவல அத்வைத மார்க்கத்தின் றன்மையினை யாராய்ச்சி செய்வாம்.

5. இம்மார்க்கத்தார், 'அத்வைதம்' என்னுஞ் சொல்லிலுள்ள அகரத்திற்கு இன்மைப் பொருள் கொள்வர். என்றாலும், இவரும் மாத்துவரைப்போல இச்சொற்குப்பொருள் ஒன்று என்றேமுடிப்பர். ஆனால், இவரும் சுருதிகளிற் கூறும் அத்துவிதச் சொற்குப் பொருள் வேறு வேறாகக் கொள்வர். மாத்துவரோ, முன்னர் காட்டியபடி, இச்சொல் மறு தலையாய் துவித எண்ணையுணர்த்து மென்பர். இவர் இச்சொல் உய்த்துணர்வால் ஏக எண்ணையுணர்த்து மென்பர். இவர் இச்சொற்குக் கூறும் பொருளும் மாத்துவரது போல மறுக்கத்தக்கதேயாம். “ஏகம் ஏவ அத்துவிதீயம் பிரமம்” என்னுஞ் சாந்தோக்கிய. உபநிடத வாக்கியத்திலுள்ள “அத்துவிதீயம்'' 'ஏகம்' என்னுமிரண்டு சொற்களுமிவர் கருத்தின்படி ஒரே பொருளையுணர்த்தி நிற்பதாகும். 'ஏகம்' என்னுஞ் சொல்லாற் போந்த பொருளை அத்துவிதீயச்சொல் வற்புறுத்தலேனுஞ் தெளிவுறுத்தலேனுஞ் செய்கின்ற தென்பதுமில்லை. இச்சொற்கு அத்தன்மையில்லை யென்பது தெளிவாம். எனவேயிவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளையுணர்த்தி நிற்றல் பொருந்துவதன்றாம்.

6. இனி யிவரது 'அத்வைதம்' என்னையென விசாரிப்பாம். பரஜீவர்கள் இருவேறு பொருள்களல்ல; ஒரே பொருள் என்பதே யிவரது'அத்வைதம்.'அஃதாவது, இவர் கருத்தின் படி, சித்து அல்லது அறிவுப் பொருள் ஒன்றே; அதுவே பரம்பொருள்; அவ்வறிவொன்றே அவித்தையோடு கூடிய வழிப்பல வேறு அறிவுப்பொருள்களாகத் தோன்றுவதன்றிப் பிறிதில்லை. இவர் பொன்னையும் அதனாற் செய்யப்படும் ஆபரணங்களையுமிவற்றிற்குத் திருஷ்டாந்தமாகக் கூறுவர். எல்லா ஆபரணங்களிலும் விளங்கும் பொன் ஒன்றே யாதல்போல, எல்லா ஜீவர்களிடத்தும் விளங்கும் அறிவு ஒன்றேயாமென்பர். எனவே, பெத்தம் முத்தியாகிய விரண்டு நிலைகளிலும் பொருள் ஒன்றேயுள தெனப்பெறும். எனவே முத்தியின்பத்தைத் தருபவனும் அனுபவிப்பவனு மொருவனேயாய்முடிந்து முத்தியின்பமென்பதே பெயர் மாத்திரையாய் முடிகின்றது. இவர் பாஜீவர்கள் முற்றும் அபேதமெனக் கூறுவதால், இவர துமார்க்கம் கேவல அத்வைதமார்க்கமெனவும், அபேதமார்க்க மெனவும் வழங்கும். இவர் பெரும்பாலும் ஸ்மார்த்தர் எனப்படுவர்.

7. மாத்துவர் கொள்கை அபேதவாக்கியங்களோடு பொருந்தா தெனக்காட்டினாம். இவரது கொள்கையோ அவ்வபேதவாக்கியங்களோடு பொருந்துமாயினும், பேதவாக்கியங்களோடு பொருந்தாதாகின்றது.'' எவர்க்கு ஆன்மாசரீரமோ” என்னும் பிருகுதாரணியவாக்கியமும் 'அவித்தை வித்தையென்னு மிரண்டினையுமாளுபவர் அவற்றிற்கு வேறாயுள்ள ஈசர்'' என்னுஞ் சுவதாச்சுவேதரவாக்கியமும்,'' பரஜீவர்களாகிய இரண்டு அழகிய பட்சிகள் கூடிநண்புற்றன'' என்னும் முண்டக உபநிடதவாக்கியமும் இம்மார்க்கத்திற்குச் சிறிதும் பொருந்து மாறில்லை. எனவே சிவாகமாதி சுருதியும் இம்மார்க்கத்திற்குப் பொருந்துவ தின்றாம். இச்சுருதியிவர்கட்கு ஒரு சிறிதும் பொருத்தமன்றாம் “ஏரொளியை, யிருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங்கடந் தண்டத்தப்பானின்ற பேரொளியை” என்னுந் திராவிட சுருதிக்கும் பொருந்தாதாகும். எனவே யிவரது கேவல அத்வைத மார்க்கமும் மாத்துவரது கேவல துவைதமார்க்கம் போல, சுருதியுக்தியனுபவங்கட்கும் பொருந்துவதன்றாய் முடிந்தது.

8. மேற் கூறிய இரண்டு மார்க்கங்களு மிவ்வாறாக, நமது சுவாமிகள் விளக்கும் அத்வைதமார்க்கம் இத்தன்மைத் தென ஆராய்ச்சி செய்வாம். இம்மார்க்கத்தார் 'அத்வைதம் 'என்னுஞ் சொல்லிலுள்ள அகரத்திற்குச்சாதிருசியம் அதாவது அன்மைப்பொருள் கொள்வர். இவர்கருத்தின்படி யிச்சொல் துவித எண்ணையேனும் அன்றி யேக எண்ணையேனுமுணர்த்துவதல்ல. இரண்டு பொருள்கட்குள்ள சம்பந்த விசேஷத்தையே யுணர்த்துவதாகும். ஒரு பொருள் மற்றொரு பொருளின் கண் பிரிப்பின்றிக் கலந்து நிற்றலே யிச்சம்பந்த விசேஷமாம். "ஏகம் ஏவ அத்துவிதீயம் பிரமம்''  என்னுஞ் சாந்தோக்கிய உபநிடத வாக்கியத்திலுள்ள 'ஏகம்' என்னுஞ்சொல் பரம்பொருள் ஒன்றே யென்பதையும், அவ்வாக்கியத் திலுள்ள அத்துவிதீயம்' என்னுஞ் சொல், அப்பொருள் ஜீவப்பொருள்களிலும் ஏனைப்பொருள்களிலும் பிரிப்பின்றிக் கலந்து நிற்கு மென்பதையும் முறையேயுணர்த்து மென்பதே யிவரது கருத்தாம். பிரிந்து நிற்கு
மிரண்டு பொருள்கள், ஒன்றற்கொன்று அந்நியமாம். பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் பொருள்களோ ஒன்றற்கொன்று அருந்தியமாம். இவ்வநந்நியத்தன்மை அல்லது அந்நிய நாத்தித்தன்மையையே, 'அத்வைதம்' என்னுஞ் சொல் உணர்த்துமென்பர் இம்மார்க்கத்தார். இப்பொருளையே நமது பிரதம சந்தானகுரவராகிய மெய்கண்ட சுவாமிகள் "அத்வைதம்” என்னுஞ் சொல் அந்நிய நாத்தியையுணர்த்துமாயிட்டு என்றும், நமது தாயுமான சுவாமிகள்,
      “அத்துவிதமென்னு மநந்தியச்சொற் கண்டுணர்ந்து
      சுத்தசிவத்தைத் தொடரு நாளெந்நாளோ”
என்றுஞ் செவ்வனே விளக்கியருளினார்கள்.

9. 'அத்வைதம்' என்னுஞ் சொற்கு இம்மார்க்கத்தார் கூறும் பொருள் இவ்வாறாக, இவரது அத்வைதத்தின் றன்மையின்னதென விசாரிக்கப்புகுவாம். இம்மார்க்கத்தார், பரஜீவர்களிருவேறு பொருள்களேயாம், ஆனால் ஒன்றையொன்று பிரிந்து நிற்பவைகளல்ல; ஒன்றோடொன்று அத்வைதமாய்க் கலந்து நிற்பவைகளே யெனக்கூறுவர். உடல், உயிர் என்பனவற்றைத் திருஷ்டாந்தமாகவுங் கூறுவர். உடல் உயிர் இரண்டும் ஒன்றோடொன்று பிரிப்பின்றி நிற்கின்றன. இந்நிலையில் உடம்புக்கிட்ட பெயரால் பிறரை யழைப்புழி, உயிரே என்னையென வரும்; என்றாலும் உடம்பு உடம்பே; உயிர் உயிரே; உடம்பு உயிராவதுமில்லை; உயிர் உடம்பாவதுமில்லை. அதுபோல பரஜீவர்கள் ஒன்றோடொன்று பிரிப்பின்றி நின்றாலும், பரம் பரமே; ஜீவன் ஜீவனே; பரம் ஜீவனாவது மில்லை; ஜீவன் பரமாவது மில்லை. ஆனால் உயிர் உடம்பேயாயும் அதனின் வேறாயும் நிற்கும். அதுபோல பரம்பொருள் ஜீவர்களாயும் அவற்றின் வேறாயும் நிற்கும். ஜீவன் பரமாய் நிற்பதில்லை. என்னெனில், உயிர் உடம்பாய் நிற்பது உயிரின் குண விசேஷமே யன்றி யுடம்பினதல்ல. அதுபோல், பரம் ஜீவர்களாய் நிற்பதும் பரத்தினருள் விசேஷமேயன்றிப் பிறிதில்லை. இவ்வருள் விசேஷமே, பரம்பொருளின் சர்வவியாபகத் தன்மையாம். இத்தன்மையையே யிம்மார்க்கத்தார் அத்வைதத்தன்மை யென்பர்.

10. பரம் பொருள் எல்லாப் பொருள்களிலும் அத்வைதமாய் வியாபித்து நிற்பதோர் பெரும்பொருள். எத்துணைச் சிறிய அணுப்பொருளேயாயினும், அதனுள்ளும், எத்துணைப் பெரிய மகத்துப்பொருளேயாயினும், அதற்கப்பாலும், வியாபித்து நிற்பதோர் பொருளாம். இதனால் வியாபிக்கப்படாத பொருள் ஒன்று மில்லை. இதுவே யெங்கும் நிறைந்த பொருள். ''கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானை'' யெனத் திராவிட சுருதியாற் கூறப்படும் பொருளுமிதுவே. இவ்வாறு எங்கும் நிறைந்து உயிர்க் குயிராய் நிற்குந்தன்மை ஜீவர்களின் பெத்த முத்தியிரண்டிலுமுள தாம். பெத்த உயிர்களின் பாலும் உயிர்க்குயிராய் நிறைந்து நிற்கும். முத்த உயிர்களின் பாலும் உயிர்க்குயிராய்
நிறைந்து நிற்கும். இகத்திலும் பரம்பொருள் பிறபொருள்களின் பால் நிறைந்து நிற்கும். பரத்திலும் அவ்வாறே நிற்கும். இத்தன்மை யத்வைதத்தன்மை யென்பதை விளக்குதற்கே நமது சுவாமிகள் நாமெடுத்தாளும் பாசுரத்தின் முடிவில்,
      ''இகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி,
      யெங்கும் நிறைகின்ற பொருளே''
எனச்சிறப்பித்து விளக்கியதும். இத்தன்மையே நமது சுவாமிகள் கருத்தின்படி
உண்மை யத்வைதத் தன்மையாம். இத்தன்மை பரஜீவர்களின் துவைதத் தன்மையோடு ஒரு சிறிதும் முரணுமாறில்லை. இம்முரணாமையை யுணர்த்துதற் கென்றே நமது சுவாமிகள் இம்மார்க்கத்தினை 'அத்வைத துவைதமார்க்கம்'' என்று மழைத்தனர்.

11. கேவல துவைத மார்க்கத்தோடு பொருத்தமுறாத அபேதவாக்கியங்களும் இம்மார்க்கத்தோடு பொருந்துவதாகும். கேவல அத்வைதமார்க்கத்தோடு பொருத்தமுறாத பேதவாக்கியங்களும் இதனோடு பொருந்துவதாகும். சுருதிகளில் ஒவ்வொன்றனோடும் ஏனைமார்க்கங்கள் முரணும் போல் இம்மார்க்கம் அவற்றினொன்றனோடு முரணாதாம். சுருதிகளிலொவ்வொன்று கூறுவதையும், மற்றையவற்றினோடு பொருந்தவுணர்தலே யுண்மை யுணர்வாம். இவ்வா றுணர்வார்க்கு, இச்சுருதிகளிலொவ்வொன்றும் இவ்வத்வைத துவைதமார்க்கத்தினையே விளக்குவதாகும். இக்கருத்தினையே நமது சுவாமிகள் நாமெடுத்தாளும் பாசுரத்தின் றலைப்பில்,

      வேதமுடனாகம புராணமிதிகாசமுதல்
            வேறுமுளகலைக ளெல்லாம்
மிக்காகவத்துவித து விதமார்க்கத்தையே
            விரிவாயெடுத்துரைக்கும்"
என்றருளிச் செய்தனர்.

12. கேவல அத்வைதமார்க்கத்தில், அனுபவிப்பதோர்  பொருளின்றாடெனக் காட்டினோம். பெத்தத்திலு மஃதில்லை. முத்தியிலுமில்லை இவரது முத்தியின்பம் ஓர் நாயகி தன்னையே யனுபவித்தாற் போலொத்தவின்பம். இஃதன்றிக் கேவல துவைதமார்க்கத்திலோ அனுபவிப்பதோர் பொருளுண்டாயினும், இவரது முத்தியின்பம் ஏகதேசவியல் பினதாம். முத்தியிலும் ஜீவப்பொருள் பரம்பொருளினின்றும் பிரிந்து நின்றே யப்பொருளையனுபவிப்பதாகும். என்பவே யிவரது முத்தியின்பம் நாயகன் நாயகிகள் தம்மிற்பிரிந்து நின்று ஒருவரை யொருவர் அனுபவித்தாற் போலொத்த வின்பமாம். இம்மார்க்கத்திலே, அனுபவிப்பதோர் பொருளிருப்பதோடு இவரது முத்தியின்பமும் வியாபகவியல்பின தாகும். பரம்பொருளோடு பிரிவற நிற்கும் ஜீவர்கள் அப்பிரிவின்மையை யுணர்ந்து தன்பேதத்தன்மையை மறந்து பரபோகத்தை யனுபவிப்பர்களென யிம்மார்க்கங் கூறுவதால், இவ்வனுபவம் சுட்டிறந்த முற்றனு பவமாய் விளங்கும், இவரது முத்தியின்பம் ஓர் நாயகி தன்னாயகனோடு பிரிவறக் கலந்து நின்று அவனை யனுபவத்தாற்போ வொத்த வின்படாம். இவ்வின்பமே முற்கூறிய இருவகை யின்பங்களிலும் மிகவினிதாமென்பது சொல்லாலே விளங்கும்.

13. அன்றியும் யாதானுமோர் சுகப்பொருளைப் பிரிந்தவிடத்துத் துன்பமும், கலந்தவிடத்து இன்பமுமுண்டாமென்பது எவ்விதத்திலும் உண்மையே இகத்திலு முண்டையே பரத்திலுமுண்மையே. இகவின் பத்தி லிவ்வுண்மையைப் பரஞ்சோதி முனிவர்.

சித்தாந்தம் – 1913 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment