Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
தாயுமானவர் கொள்கை

இதனைத் தாயுமானவர் என்பவர் யார்? அவர் கொள்கையாது? என இரண்டு வகையாகப் பிரித்து ஆராயலாமாயினும் முன்னையது நூல்களில் தாயுமானவர் சரித்திர மென்னுந் தலைப்பேரால் எழுதப் பட்டிருக்கின்றமையால் அதனை விடுத்துப்பின்னையதாகிய அவர் கொள்கையையே இவ்விடத்தில் ஆராயத் துணிகின்றேன்..

கொள்கையைப்பற்றி நிச்சயிப்பதற்குப்பிற நூல்களில் தாயுமான வரைப் பற்றிக் கூறப்பட்டிருப்பின் அவையும், தாயுமானவருடைய திருவாக்காகிய பாடல்களுமே கருவியாகும். அவற்றுள் தாயுமானவரைப் பற்றிப் பிற நூல்களிற் கூறியிருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. ஆதலால், அவருடைய பாடல்களையே ஆதாரமாகக் கொண்டு அவர் கொள்கை இன்னதென நிச்சயிக்க எண்ணுகின்றேன்.

இனி, கொள்கையென்பது கொள்ளுதல் என்னும் பொருளைக் குறிக்கும். இதனை ஈகை யென்பது ஈதலென வழுங்குமாற்றானறிக. கொள்ளுதல் என்றதனால் எதனைக் கொள்ளுதலென்னும் ஐயம் நிகழுமன்றே, அந்நிகழ்ச்சிபற்றிக் கொள்ளப்படும் பொருள் உண்டென்பது பெறப்படும். கொள்ளப்படும் பொருள் உலகப்பொருள் கடவுட்பொருளென இருதிறப்படும் அவற்றுள் உலகப்பொருள் என்றுங் கொள்ளப்படுவதின்றி ஒரு காலத்துக் கொள்ளுதற்கும் மற்றொருகாலத்து விடுதலுக்கும் உரியதாகும். கடவுட்பொருளோ அங்ஙனமின்றி என்றுங் கொள்ளத்தக்கதாகும். ஆகவே கொள்கை யென்பதற்குக் கடவுள் பொருளைப் பற்றிய கொள்கை என்பதே சிறந்த பொருளாம்.

இனி கடவுள் என்பது கடந்து நிற்றலையுடையது என்னும் பொருட்டாதலால், அது தன்னின் மேம்பட்ட, சத்தியையுடையதெனக் கொண்டு பாபபுண்ணியமே தன்னின் மேம்பட்டதாம்; அதுவே தாயுமானவர் கருத்தாமென்று பரிபூரணானந்தம் என்னுந் தலைப்பின் கீழ் “கண்மூடி யொருகணமிருக்க வென்றாற் பாழ்த்த கன்மங்கள்போராடுதே'' என்பதை எடுத்துக் காட்டுவர் ஒருசிலர். அடுத்தவரியில் ''பண்டையுள கன்மமே கர்த்தாவெனும் பெயர்ப்பட்ச நானிச்சி ப்பனோ " என்பதனானும், பிறிதோரிடத்தில் ''கர்மமானது கோடி முன்னே செய்தாலு நின்கருணைப் பிரவாகவருளைத் தாகமாய் நாடினரை வாதிக்கவல்லதோ'' என்பதனானும் கன்மமே கருத்தாவென்பது தாயுமானவர் கருத்தன்று.

மற்றொருசாரார் "அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்.........'' என்பது முதலிய வாக்கியங்களை எடுத்துக்காட்டி விக்கிரக ஆராதனந் தாயுமானவருக் குடன்பாடன்று என்பர். ஆகாரபுவனம் எனனுந் தலைப்பின் கீழ்  ''ஆதியந்தமெனு மெழுவா யீறற்றேங்கி யரு மறையின்ன முங் காணாதரற்ற....................... சந்திரமௌலி தடக்கைக் கேற்க வேதக சின் மாத்ரமா யெம்மனோர்க்கும் வெளியாகவந்த வொன்றே'' என்பதனானும், பிறிதோரிடத்தில் ''மூர்த்தி தலந் தீர்த்த முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும்" என்பதனானும் அவர்கருத்துப் பொருந்தாது.

பிறிதொரு சாரார் சின்மயானந்தம் என்னுந் தலைப்பின் கீழ் ''பேரின்பமான சுகவாரியினைவாய் மடுத்துத் தேக்கித்திளைக்க நீ முன்னிற்ப தென்று காண்'' எனவும் பொன்னை மாதரை என்னுந் தலைப்பின் கீழ் ''அங்கணா வுன்னடியிணை யன்றியே தங்க வேறிட முண்டோ” எனவும் கூறுவனவற்றை எடுத்துக் காட்டிக் கடவுள் உருவத்திரு மேனி கொண்டிருக்கும் அந்த வுருவத்தை யடைதலே முத்தி என் பவை தாயுமானவர் கொள்கையென்பர். ஆரணம் என்னுந் தலைப்பின் கீழ் "அடியெனு மதுவும் அருளெனு மதுவும் அறிந்திடில் நிற்குண நிறைவு, முடியெனு மதுவும் பொருளெனு மதுவும் மொழிந்திடிற் சுக கனம்" என்பதனால் அவர்கருத்தும் பொருந்தாது.

வேறொரு சாரார் பரிபூரணானந்தம் என்னுந் தலைப்பின் கீழ் சந்ததமு மெனது செயனினது செயலியா னெனுந்தன்மை நினையன்றி யில்லாத், தன்மையால் வேறலேன்' என்பதனால் தன்னைத் தவிரக் கடவுளில்லை, நான் பிரமம் என்பதே தாயுமானவர் கொள்கை என்பர். சிற்சுகோதய விலாசம் என்னுந் தலைப்பின்கீழ்  ''யாங்களே கடவு ளென்றிடும் பாதகத்தவரும்' என்பதனால் அவர்கருத்தும் பொருந்தாது.

இனித் தாயுமானவர் கொள்கைதான் யாது? அதனை நிச்சயிப்ப தற்குரிய அவர் பாடல்யாது? எனின் கொள்கை நூல்வழியாகத் தான் கொண்டதும் ஞானாசிரியரின் உபதேச வழியாகத்தான் கொண்டது மாகும். அவ்விரண்டும் முரணாவாம். நூல்வழியாகக் கொண்டது ஆசிரியர் உபதேசத்திற்கு முரணுமாயின் பின்னர் உபதேசத்திற்கேற்றவாறு நூலினாற் கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்வதே முறைமையாதலின் அதுபற்றி ஆசங்கை யொன்றுமில்லை. இதனால் கொள்கைக்கு ஆசிரியர் உபதேசமே சிறந்தகாரண மென்றவாறாயிற்று. ஆதலால் தாயுமானவர் பாடல்களுள் ஆசிரிய வணக்கங்கூறும் பாடல்களே அவர் கொள்கையை நிச்சயிப்பதற்குச் சிறந்த கருவியாகுமென அறிக. தாயுமானவருக்கு ஆசிரியர் மௌனகுரு வென்பது சரித்திரவாயிலா யாவரும் அறிந்தவிஷயம். அவர் பாடலில் மௌனகுரு வணக்கமென 10 செய்யுள் சொல்லியிருக்கின்றார். அப்பத்துச் செய்யுளுள்ளும் தனக்கு உபதேசித்த சாதனத்தையும் அதனால் தாமடைந்த பயனையும் ஒரு செய்யுளில் கூறி ஏனைய செய்யுள்களில் ஆசிரியர் பெருமை முதலிய வற்றைக் கூறியிருக்கின்றார். ஆதலால் அவ்வொரு செய்யுளையே அவர் கொள்கையை நிச்சயிப்பதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றேன்.

அச்செய்யுள் வருமாறு: -

ஐந்துவகை யாகின்ற பூதமுத னாதமு
மடங்க வெளி யாகவெளிசெய்
தறியாமை யறிவாதி பிரிவாக வறிவார்க
ளறிவாக நின்ற நிலையில்
சிந்தையற நில்லென்று சும்மா விருத்திமேற்
சின்மயா னந்த வெள்ளம்
தேக்கித் திளைத்துநா ன துவா யிருக்க
செய்சித்ர மிகநன் றுகாண்
எந்தை வட வாற்பரம குருவாழ்க வாழவரு
ளியநந்தி மரபு வாழ்க
என்றடியர் மன மகிழ வேதாக மத்துணி.
பிரண்டில்லை யொன்றென் னவே
வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி
மௌனோப தேச குருவே
மந்த்ரகுரு வேயோக தந்தரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே.

இதன் பொழிப்புரை:-  ''என்றும் அடியார்கள் மனமகிழும்பொருட்டு வேதாகமங்களில் கூறப்படும் முடிபு இரண்டில்லை யொன்றே என அருளிச்செய்ய எழுந்தருளிவந்தகுருவே! சிவஞான சித்தியாரென்னும் நூலிற் கூறப்படும் முடிவான நெறியை மௌனத்தினால் அடியேனுக்கு உபதேசம் செய்தருளிய குருவே! மந்திரத்தில்வலிமைபெற்ற குருவே! யோகத்தைத் தந்திரமாக வுபதேசஞ் செய்தருளும் குருவே! திருமூலர் மரபில் வந்த மௌனகுருவே! ஐந்து வகையாகக் கூற ப்படும் பிருதிவி முதலாக நாததத்துவ மீறாக அனைத்தும் நீங்கும்படியாக நீக்கி, தன்னையுந் தலைவனையும் அறியாதிருந்த அறியாமையினையும் உலகத்தை அறிந்துவந்த அறிவினையும் நீங்கும்படியாக அறிபவர்கள் நிற்கின்ற அறிவாகிய நிலையில் மனத்தின் செயலற்று நிற்பாயெனச் சும்மா விருக்கும்படி செய்து அவ்வாறிருத்தலினால் மேல் சின்மயானந்த வெள்ளம் பூரணமாகி அதனை அனுபவித்து அச்சின் மயானந்தமே நானாக விருக்கும்படி நீ செய்த விநோதம் மிக நன்று;  இவ்வாறு நீ உ.பதேசித்தருளுதற்கு முதற் குருவாய் வடவால் நீழற்கீழ் எழுந்தளியிருக்கும் எமது அத்தனாகிய பரமாசாரியர் வாழ்க, அவ்வாறு வாழும்வண்ணம் அப்பரமாசாரியரைத் துதித்தருளிய நந்தி தேவர் திருமாபு வாழ்க''  என்றவாறு.

என்றடியார் என்றது உம்மைத் தொகை; ஆதலால் என்றும் அடியார் என விரிக்கப்பட்டது. என்னவே என்பதிலுள்ள ஏகார,த்தை ஒன்று என்பதனுடன் கூட்டுக. ஆதலால் ஒன்றே என்று விரிக்கப்பட்டது. வீறு என்பதைச் சிவஞான சித்தி யென்பதன்பின் வைத்துரைக்க. ஆதலால் சிவஞான சித்தியாரிற் கூறப்படும் முடிவான நெறி என்று உரைசெய்யப்பட்டது. சித்தியாரில் கேட்டல்,'சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்னும் நான்கு வகையான ஞான சாதனங் கூறப்பட்டுளது. அவற்றுள் தெளிதலுக்கும் நிட்டைக்கும் இடையீடின்மையானும் தெளிதலிலேயே பெரும்பாலும் சாதன முற்றுப் பெறுதலானும் தெளிதலால் உண்டாயதைச் சாதித்தலே நிட்டையாதலானும் முடிவான நெறி தெளிதலென அறிக.

இச் செய்யுளிலுள்ள விசேடங்கள் வருமாறு: - உயிர்சார்ந்த தன் வண்ணமாய் நிற்குந் தன்மையுடையதாதலால் பூதமுதல் நாதம் வரையுள்ள தத்துவங்கள் நீங்குதற்குச் சிவோகம் பாவனையால் போறிவாகிய சிவத்தைச் சார்ந்து நிற்கவேண்டுமென்பது தோன்ற அறிவாக நின்ற நிலையில் நில்லெனவும், அங்கனம் நிற்குங்கால் கட்டிச்சுட்டி யறிதலின்றி நிற்கவேண்டு மென்பது தோன்றச்சிந்தையற நில்லெனவும், அவ்வாறு நிற்கில் மேற்செய்ய வேண்டுவது ஒன்றுமில்லை என்பது தோன்ற சும்மாயிருத்தி எனவும், இதுவரை சாதனமும் இனிக் கூறப்படுவது பயனுமென்பது தோன்ற மேலெனவும், பதியைச் சார்ந்த உயிருக்கு அப்பதியின் எண்குணங்களும் பொருந்து மென்பது தோன்றச் சின்மயானந்த வெள்ளந்தேக்கி எனவும், எண்குணங்களுந் தன்னிடத்துப் பொருந்திடினும் இறைவன் போலப் பஞ்சகிருத்தியஞ் செய்தலின்றிச் சிவானுபலம் ஒன்றற்கே உரிமையுடைய தென்பது தோன்றத்திளைத்து எனவும், இவ்வாறு நிற்கின்றோ மென்னும் போதமிருப்பின் அவ்வனுபவம் நீங்கிவிடுமென்பது தோன்ற நான துவாயெனவும், இந்நிலை வரைதான் ஆன்மாவென்ப தொன் றுண்டு, இந்த நிலை வந்தால் ஆன்மா இல்லையென்று கூறுவாரு முளராதலால் முத்தியினும் ஆன்மா உண்டென்பது தோன்ற இருக்கவெனவும், இவ்வனுபவம் உண்டாகும் வண்ணம் மௌனமாயிருந்து காட்டினார் என்பது தோன்றச் சித்ரமிக நன்று எனவும், இந்நிலைவேதத்திற்கும் ஆகமத்திற்கும் உடன்பாடென்பது தோன்ற வேதாகமத் துணி பிரண்டில்லை ஒன்றே யெனவும், இவ்வுபதேசமுறை சிவஞான சித்தியாரில் உள்ளதென்பது தோன்ற சிவஞான சித்திநெறி எனவும், முதற்குருவை வணங்கினால் தன் குருவையும் வணங்கினதாகு மென்பது தோன்ற எந்தைவடவாற் பரமகுருவாழ்க என்றும், இவ்வுபதேசமுறை இந்நில உலகத்தில் என்றும் பிரகாசித்து யாவரு மின்புறவேண்டு மென்பது தன்கருத் தென்பது தோன்ற நந்திமரபுவாழ்க வென்றுங் கூறினார்.

இன்னும் பூதமுதனாதமுமென்றதனால் தத்துவரூபமும், வெளியாக என்றதனால் தத்துவ தரிசனமும், இவ்விரண்டுங் கூறியதனால் இவ்விரண்டோடுடனிகழும் ஆன்மரூபமும், வெளிசெய்து என்றதனால் தத்துவசுத்தியும், அறிவாக என்றதனால் தத்துவ சுத்தியோடுடனிகழும் ஆன்மதரிசனமும், சிவரூபமும், சும்மாவிருக்தி என்றதனால்ஆன்ம சுத்தியும், சின்மயானந்த வெள்ளந் தேக்கித் திளைத்து என்றதனால் ஆன்மசுத்தியுடனிகழும் சிவதரிசனமும், நானது வாயென்றதனால் சிவயோகமும், இருக்க என்றதனால் சிவபோகமும் என்றிவ்வாறு தசகாரியமும் கூறினாரெனவும் அறிக.

இச்செய்யுளில் சும்மா விருத்தி சின்மயானந்த வெள்ளந் தேக்கித் திளைத்து என்றது கொண்டு இவர் விக்கிர ஆராதனக் கூறும் மதத்தின ரல்லரென விக்கிர ஆராதனஞ் செய்து கொண்டே செய்யவில்லை என்று கூறும் ஒரு சாரார் கூறுவர் அவ்வாறு கூறுவோருக்குப் பூதமுதலான தத்துவம் உடன்பாடின்மையாலும் பிறவிடங்களிற் கூறப்படும் பர சிவமுதலிய திருநாமங்கள் உடன்பாடின்மையாலும் அவர் கூற்றுப் பொருந்தாது.

இனி வேதாகமத் துணிபு இரண்டில்லை ஒன்றெனவே என்றது கொண்டு கடவுட்பொருள் ஒன்று தான் உள்ளது ஏனைய உயிர், உலகம் என்னும் பொருள்கள் கிடையாவென்பதே இவர்கருத்தெனவும் இப்பொருளுக்கேற்பச் சிவஞான சித்திநெறி என்பதற்குச் சிவஞானத்தைச் சித்திக்கச் செய்யும் நெறி எனக்கொள்ள வேண்டுமெனவும் ஒரு சாரார் கூறுவர். அவர் கருத்து முற்றுப்பெற வேண்டுமாயின் துணிபை ஆகு பெயரால் துணிபொருளுக் காக்க வேண்டும். அவ்வாறு ஆக்குங்காலும் பூதமுதலென்றதனால் பாசமும் நான் என்றதனால் பசுவும் உள்ளனவாக மேலே கூறியதனோடு முரணும், அன்றியும் ஒருபொருள் உண்டெனக் கூறுவார் மதத்தில் கலைமுதலிய வித்தியாதத்துவமும் நாதமுதலிய சிவதத்துவமுங் கிடையா வாதலின் அவர் கூற்றும் பொருந்தாது.

சிவஞான சித்திநெறி என்பதற்குச் சிவஞானத்தைச் சித்திககச் செய்யும் நெறி என்றல் பொருந்துமாயினும், வெளிசெய்தறிவாக சிந் தைய நச் சும்மா விருத்தி என்றதனால் நெறியினையும் செய்சித்ரம் என்ற தனால் அந்நெறியை அருளினாரென்பதையும் மேலே கூறிவிட்டபடியால் மீளவுங்கூறுதல் மிகை. ஆதலால், அந்நெறி சிவஞான சித்தியா ரென்னும் நூலிலே கூறப்பட்டு அத்திருவேட்டை இவருக்கு மௌன மாயிருந்து உபதேசஞ் செய்யுங்காலத்துத் திருக்கரத்துத் தாங்கியுள்ளாமாதலால் பின்னர் அம்மெய்ந்நூலைப் பார்க்கும்பொழுது அதிலுள்ளதாய்க் காணப்பட்டு அந்நூற்பொருளை ஓதுவிக்கா துணர்த்தினா ரென்பதைப் பாராட்டினார் என்றலே சிறப்பாம்.

அன்றியும் இவர் குரு மரபுவணக்கங் கூறுங்கால் கல்லாலாசை என்றது தொடங்கி நந்தி முதலிய அகச்சந்தானாசாரியர்களையும் மெய் கண்டதேவர் முதலிய புறச்சந்தா னாசாரியர்களையுமே கூறினார். அவ்வாறு கூறுங்காலத்து ஸ்ரீ மெய்கண்டதேவருக்குப் பின்னர் ஸ்ரீஅருணந்தி சிவத்தைச் சொல்லவேண்டிய விடத்தில் ''பாதி விருத்தத்தால் இப்பார் விருத்தமாக வுண்மை சாதித்தார் பொன்னடியைத் தான் பணிவதெந்நாளோ" எனக் கூறினார். அருணந்தி சிவாசாரியர் செய்த நூல்கள் சிவஞான சித்தியாரும் இருபா இருபஃதுமே. அவற்றுள் இருபா இருபஃது வெண்பாவும் ஆசிரியப்பாவுமாம், சிவஞான சித்தி யார் தான் விருத்தப்பாவினா லாக்கப்பட்டுளது, ஆகவே பாதிவிருத்த மென்றது சிவஞானசித்தியாரிலுள்ள பாதிவிருத்தத்தையே குறிக்கு மென்றவாறாயிற்று. சித்தியாரின் பெருமையை,

"ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாக
பார் விரித்த நூலெல்லாம் பார்த்தறியிற் சித்தியிலே
ஓர் விருத்தப் பாதிபோதும்.''
எனச் சிவபோகசார நூலுடையார் புகழுமாற்றானுமறிக. அவரும்பாதி விருத்தமென்றே புகழ்ந்தது இங்கே கவனிக்கத்தக்கது.

இனி அச்சித்தியாரிலுள்ள பாதிவிருத்தந்தான்யாதோ? வெனின், அந்நூல் எட்டாஞ்சூத்திரம் இரண்டாமதிகரணம் முப்பதாவது செய் யுளில் அறியாமை அறிவகற்றி என்றதை முதலாகக்கொண்டு கூறி யிருப்பதிலுள்ள முற்பாதியேயாம். இம்முற்பாதியின் பொருளையே மௌனத்தினால் தனக்கு உபதேசிக்கப்பட்டதாகும், ஆதலினாற்றான் மௌனகுரு வணக்கத்தில் சிவஞானசித்தி வீறு நெறி எனப்பொதுவாகக் கூறி மரபுவணக்கத்தில் பாதி விருத்த மெனச் சிறப்பித்தார்.

சித்தியார் செய்யுளுக்கும் எடுத்துக்கொண்ட செய்யுளுக்கு முள்ள சம்பந்தம் வருமாறு: -

எடுத்துக்கொண்ட செய்யுள்
சித்தியார் செய்யுள்
ஐந்து வகையாகின்ற  பூதமுதனாதமுமடங்க வெளியாக வெளிசெய், தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள்.
அருளினா லறியாமை அறிவகற்றி
அறிவாகலின்ற நிலையில்...
அறிவிலுள்ளே யறிவு தனையறியாதே யறிந்து

சிந்தையற ... ...
குறியாதே குறித்தந்தக் கரணங்களோடுங் கூடாதே
நில்லென்று ... ....

வாடாதே

சும்மாவிருத்தி ... ...
குழைந்திருப்பையாயில்

மேற்சின்மயானந்த வெள்ளந்தேக் கித்திளைத்து
பிறியாத சிவன்றானே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெல்லாந்  தானாய்த்தோன்றி யிவையல்லா மல்லவாகி.

நானதுவாயிருக்க ... ...
நெறியாலே நின்றென்றுந் தோன்றிடுவனிராதாரனாயே
நீ செய்சித்ர மிக நன்றுகாண் ... ... ... மூலன் மரபில் வருமௌன குருவே


பாதி விருத்த மென்று புகழப்பட்ட சித்தியாரில் கூறப்படும் இச் செய்யுளைத் தாயுமானவர் தாம் கூறிய செய்யுளில் பாதியில் அடக்கினமை அறிக, அந்தக் கரணங்களோடுங் கூடாதே என்னுஞ் சித்தியார்ப் பொருளை தமது செய்யுளில் சிந்தையற என்றும், அந்தக் கரணங்களோடு கூடாத விடத்துக் கேவலாவத்தை வந்து கூடுமாதலால் அந்த அவத்தையிற் சேராமல் நிற்க வேண்டு மென்பதை வாடாதே எனச் சித்தியாரிற் கூறியதை நில்லென்றும், அங்ஙனம் நிற்குங்காலத்து நிற்கின்றோ மென்னுந் தற்போத மிழந்து நிற்கவேண்டு மென்பதைக் குழைத்திருப்பையாயில் எனச் சித்தியாரிற் கூறியதை சும்மாவிருத்தி யென்றுந் தாயுமானவர் கூறினார். மற்றவை வெளிப்படை.

ஆகவே தாயுமான சுவாமிகளின் கொள்கை சைவசமயமே என்பதாம். இச்சைவ சமயத்திற்றான் கடவுளுக்கு உருவத்திருமேனி அருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி இம்மூன்றுங் கடந்த சச்சிதானந்த சொரூபத் திருமேனி உண்டென்று கூறும். ஆதலினாற்றான் ஒவ்வோரிடங்களில் ஒவ்வொன்றை வியந்து கூறினர். அவ்வாறு கூறியிருத்தல் சந்தர்ப்பங் கருதியேயாம். ஆதலால் முரணாது. இவர் சமயம் சைவமே என்பதனை ''ராஜாங்கத் தமர்ந்தது வைதிக சைவம்''  எனவும் "சைவசமயமே சமயம் " எனவும் அருளிய அவர் திருவாக்குகளாலும் நன்கு தெளிக. இன்னும் சைவமென்பது பாடாணவாத சைவம், பேதவாத சைவம் முதலாகப் பலதிறப்படு மாதலால் அவற்றுள்ளும் சித்தாந்த சைவமே தமது கொள்கை என்பதைச் "சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே”,, என்பதனா லருளிச் செய்வாராயினர்.
      
அவர் பாடலில் "வேதாந்த வீட்டின் விளக்கே பராபரமே" எனவும் "வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும் நாதாந்தமோன நலமே'' எனவும் “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை'' எனவும் இவ்வாறாக வேதாந்தத்தைப் புகழ்ந்தும் சமரசமாகவும் கூறியதன் கருத்தென்னை? எனின் கூறுதும்.
      
வேதாந்த மென்பது வேதத்தின் அந்தமாகிய உபநிடதங்களாம். அவற்றில் தாயுமான சுவாமிகளுக்கு மிகுந்த ஆராய்ச்சியுண்டு. உபநிடதங்களில் கூறப்படும் நெறி முத்தியை அடையச் செய்யுமென்பதும் அவருக்கு உடன்பாடேயாம். ஆயினும் ஒரு கடலைக் கடப்பதற்கு இரண்டு படகுகள் நல்லனவாகக் காணப்படின் இரண்டின் மீதும் இருகால்களைவைத்துச் செல்லின் அக்கரை சேராமல் கடலுள் மூழ்கித் துன்புற நேரூமாதலின் ஒன்றைப் பற்றியே செல்லுதல் முறைமையாகும். அதுபோல வேதாந்த சித்தாந்தம் இரண்டும் முத்திக்கு தேர் நெறியே * யாயினும் யாதானு மொன்றில்தான் செல்லவேண்டும். செல்லுங்கால் மற்றொன்றைச் சமமாகக் கொள்வதே யன்றி சான்றோர் இகழமாட்டார்கள். அவ்வாறே தாயுமானசுவாமிகளும் சித்தாந்த நெறியில் நின்றுகொண்டு வேதாந்தத்தைச் சமரசமாகக் கூறினாரென அறிக.

*  ஆரண நூல் பொதுச்சைவ மருஞ்சிறப்பு நூல்'' எனவும், “வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தம்” எனவும், “வேதச்சிரப் பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்திறத்தடைவர் எனவும்,“ வேதாந்தப் பொருளைத் தெளித்துக் கூறுவது சித்தாந்தம்'' எனவும் வருவனவற்றாலும், வேதாந்தமும் வேதாந்த தாமாகிய சித்தார்தமும்பரிபாகிகள் பேதத்தாலிரண்டாகி, வேதாந்தம் சிவோகம்பாவனை யோடிருக்கும் சீவர் முத்தர் நிலையினையும், சித்தாந்தம் முதல்வனுட னிரண்டறக்கலந்து அனுபவிக்கும் சுத்தாத்து விதானுபவாதீதானந்த நிலையினையும் விளக்குமாகலினாலும், வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் முறையே பொதுசிறப்பெனக் கொள்ள வேண்டியிருத்தலினாலும், முத்திக்கு இரண்டும் நேர் நெறியெனக் கொள்வது எங்ஙனம்? பொது நூலாலடையும் பயனும் சிறப்பு நூலாலடையும்பயனும் சமமாதல் எங்ஙனம்? சிறப்பு ஜூலை நோக்கப் பொது நூல் பூர்வபட்சமாகாதோ?
பத்திரிகாசிரியர்

முடிவுரை.

தாயுமானவர் கொள்கை என்பது அவர் கொண்டசமயம் எது? என்பதைக் குறிக்கு மென்பதூ உம், அவர் பாடல்களே இதனை ஆராய்தற்குக் கருவியா மென்பதூஉம், கன்மமே கடவுள், அருவமே கடவுள், உருவமே கடவுள், நாங்களே கடவுள் என்னுஞ் சமயங்கள் தாயுமானவருக்குடன்பாடில்லை என்பதூஉம் சித்தாந்த சைவமே அவர் சமயமா மென்பதூஉம் பிறவுமாம்.
                     
இங்ஙனம்:
                 பொ. முத்தைய பிள்ளை,
                       திருவாவடுதுறை ஆதீன
                             சைவப்பிரசாரகர்
                                 தூத்துக்குடி.

சித்தாந்தம் – 1915 ௵ - பிப்ரவரி / மார்ச்சு ௴


No comments:

Post a Comment