Saturday, May 9, 2020



தாயான சருக்கம்.

பல வளங்களும் நிறைந்த பரதகண்டத்திற்குத் திலகம் போன்ற சோழநாட்டின் கண், அளகைத்தலைவனாகிய குபேரனும் விரும்பிப் பட்டினத் தடிகளாகத் தோன்றிய தவமுடையதும், மணம்புரி மனைவியைச் சிவனடியராகவந்த சிவபெருமானுக் கீந்து, தம்மை எதிர்த்த உறவினர் யாரையும் தடிந்து இறைவன் திருவடிப்போதே தஞ்சம் என்றடைந்த இயற்பகை நாயனார் அவதரிக்கும் ஏற்றத்தை யுடையதுமாகிய காவிரிப்பூம் பட்டினத்தில், முல்லை மாலையைத்தரித்த வணிகர் குலத்து, அழகெலாம் நிறைந்து பெரும் பொருள் பெற்ற அரதனகுத்தன் என்பான் ஒருவன் இருந்தான். இவன் இடம் பொருள் ஏவலாகிய பல செல்வங்கள் பெற்றிருந்தும்.

"பெறும் வற்றுளியாமறிவதில்லை
யறிவறிந்தமக்கட் பேறல்லபிற''
   
என்றும் பெருநாவலர் வாக்கின் வண்ணம், புத்திரச் செல்வம் ஒன்றைப் பெறாது வருந்துவா னாகி எல்லாச் செல்வங்களையும் தரும் இறைவனாகிய சிவபெருமானைத் தியானித்துப் பலவித அறங்களையும் செய்வான். ஆயினான். இமையவர் முதலோர் எங் குடிமுதலேயேனப் பலமுறையேத்தும் இமையவர்த்தனியின் நாயகனாகிய எம்பெருமானை எண்ணி எண்ணரியதவங்கள் செய்தும், ஆண்மகவைப்பெறும் நற்றவம் ஒன்றை முன்செய்திராத இவ் வரதநகுத்தன் பெண்மகவு ஒன்றைப் பெற்றான். இவ்வணம் தனக்கு அரியதோர் தவத்தால் கிடைந்த தன்பெண்ணினை மிகப்போற்றி வளர்த்து, அப்பெண் நாயகனை அடையக்கூடிய மணப்பருவத்தை யடைந்ததை அறிந்த அரதநகுத்தன் தன்னருமகளைத் தன் குலத்திற்கும் வளத்திற்கும் தக்கவன் ஒரு வனித்திரிசிராமலையிலிருந்த தநகுத்தன் என்பானுக்குமணம் பேசி, தன் இல்லத்தில் வதுவையை மகிழ்ச்சியுடன் முடித்தான் மணம்புரிந்த மணாளனாகிய தநகுத்தன் மதனும் இர தியும்போல் இளமைப்பருவத்தே துய்க்கவேண்டிய இன்பம்யாவும் இனிமை பெறத்துய்த்துச் சிலபகல் அங்கிருந்தபின்னர், தன்னூர் செல்லும் விருப்பமுடையனாகி, அதைத்தனது மாதுலனாகிய அரதநகுத்தனுக்கறிவித்தலும், அவனும் தனது மகளுக்குக் கொடுக்க வேண்டிய மகட்கொடையாவும் ஈந்து, பிரிவாற்றாது வருந்தும் மனைவியைத்தேற்றி, மருகனையும் மகனையும் திரிசிராமலைக்கனுப்பினான்.
   
பின்னர் தாய் தந்தையை விட்டுப் பிரிந்த தன்னாயகியின்துயரத்தைத்தனது இனிய சொற்களால் மாற்றி எவரும் விரும்பும் வளம் பொருந்திய தனது நகரமாகிய திரிசிராமலைக்குத் தநகுத்தனுந்தன் மனைவியுடன் சென்று அடைந்தான். தன் வீடுசேர்ந்த தகுத்தன் இல்லறத்தை நல்லறமாக நடத்திவருங்காலத்து இளமை செல்வம் தேகம் முதலியவையாவும் நீரில் குமிழியைப் போலும், அந்நீரில் தோன்றும் அலைகளைப்போலவும், எழுத்தைப் போலவும் என்று அறிந்தவனாதலால், தன் மனைவியுடன் உயிர்க்குறுதியைத்தரும் ஒண்பெருஞ் சுடராகிய திரிசிராமலைத் தலைவன் எழுந்தருளியிருக்கும் திருவாலயத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று வணங்கவேண்டும் என்று கூறலும் அவளும் அவ்வாறே செய்து வருவாள் ஆயினள். இவ்வாறு இருவரும் ஒழுக்கந்தவமுது உலகோர் விரும்பும் இல்லறத்தை நடத்திவரும் நாளில் காவிரிப்பூம்பட்டினத்தினின்றும் அரதகுத்தன் அரவாபரணன் திருவடியடைந்தனன் என்றும் ஓலையைக்கண்டு தந்தையை யிழந்தமங்கை தன்னுயிர் நீங்கப்பெறுபவள் போல் பதைபதைத்துக் கண்களினின்றும் ஊற்று நீர் போல் ஜலம் தோன்றி மார்பெலாம் வழிந்து ஓடத் தன் தாயை நினைத்து ''என்னை ஈன்றெடுத்து என்னுயிர் தன்னுயிராகப் பாதுகாத்த என் அன்னையே, உடலும் உயிரும்போல் விட்டுப்பிரியாது உன்னுடன் வாழ்ந்த உன் கணவனைப்பிரிந்து நீ எவ்வாறு உயிர் தரித்துள்ளாய், ஆணை விட்டுப்பிரிந்த அன்றில் ஆயினையோ அழகெலாம் திரண்ட உன்மேனி பாதாயிற்றோ, அன்னாய், அன்னாய்,” என்று அலறி அழுதனள். தீயில்விழுந்த புழுப்போலவும் வேடுவன் அம்பேறப்பெற்ற மான்போலவும் வருகின்ற தன் மனைவியைக் கண்ணுற்ற ததகுத்தன் பல நீதிமொழிகளாகிய வசனங்களால் அவளைத் தேற்றி, பழமைபோல் இல்லறம் நடத்தும் நாளில், கடலிடைக்கவுத்துவமணி தோன்றியது போல் காரிகைவயற்றுக் கருப்பந்தோன்றியது.
   
இவ்விதம் கருக்கொண்ட மங்கையினிடத்துக் கருக்குறிகளெல்லாம் தோன்றி ''முத்தணிகொங்கை முகங்கள் கறுத்தாள் பொய்த்துகில் கொண்டு புளிப்புமுவந்தாள்'' என்றபடி முலைக் கண்கள் கருநிறங்கொண்ட சூதுக்காய்போல் கறுத்து, பசலை பூத்துப்பகலுறக்கங் கொண்டு புளித்தவைகளையே உண்ணும் விருப்பினளாய் நின்றதை யறிந்த தநகுத்தன் காவிரிப்பூம் பட்டினத்தில் வசிக்கும் அவள் தாய்க்கு அதை அறிவித்தான். இதனையறிந்த தாய் மிகுதியும் மகிழ்வெய்திக் காவிரிப்பூம் பட்டினத்தைவிட்டு, திரிசிராமலையில்வசிக்கும் தன்புதல்வியைப் பார்க்கும் வண்ணம் புறப்படலும் கார்காலத்து மேகமானது வருஷித்து ஊழி வெள்ளம் போல் காவிரி இருகரையும் வெள்ளம்புரண்டு வந்தது வெள்ளம் நீங்கும் வரையும் தாய் வருதற்கில்லாது தாமதித்தலும், அரதநவதியாகிய மகள் இதனையறியாளாய், பிறந்தகம் செய்யும் பொருள் யாவுங்கொண்டு நம் தாய் இன்று வருவாள் நாளை வருவாள் என்று தோழியர் துணை  பெற்றுவாழ்ந்திருந்தனள். நம் தாய் வருவாளானால் "அவள் எதிரே சென்று அவளை மார்புடனனைத்து மகிழ்வோம், விசையுடன் நடந்து வந்தகால்களைப்பிடிப்போம், பூரணச்சந்திரன் போன்ற முகத்தில் அரும்பும் வேயர்வையைத் துடைப்போம்'' என்று பல வெண்ணி ஆவலுடன் தாய் வருகையை நோக்கி அரதநவதியிருக்குங் காலத்தில், எல்லாம் வல்லானாய், உயிர்கள் தோறும் நீக்கமற நிறைந்துள்ளானாய், நாரிபாகனாய், கடைமிடற்றண்ணலாய், கருணை யங்கடலாய், சந்திர சேகரானாய், ஆயிரம் பேருளானாய், திரிசிராமலையில் எழுந்தருளிய சிவபெருமான் கூனிய முதுகில் நரைத்த கூந்தலானது அசைய, கையில் ஓர் தண்டத்தைக்கொண்டு நெற்றியில் வியர்வை துளிக்க, நடக்குந்தொறும் இளைப்பின் மிகுதியால் நின்று நின்று நடந்து பெருமூச்செறிந்து தன்கையில் தாங்கிய கோலின்மீது தன்கூனிய உடல் எலாம் ஒடுக்கிப் புனிதமாகிய பலவித பண்டங்களும், எண்ணெய்க் கலங்களும் விலை மதிப்பேறப்பெற்ற ஆபரணங்களும் விலையில்லாத பட்டுகளும் ஆகிய இவைகளை இரண்டு பெண்கள் மீது சுமப்பித்து மாலும் அயனும் வணங்குதற்கரிய மான்மதநாதன் மண்ணிடை நடந்துவந்தான். இவ்விதம் தனக்கோர் தாயிலியாகிய தனிமுதல் தாயாகி வருவதைக் கண்ட அரதருவதி, துணுக்கென்றெழுந்து, தொழுதெதிர்சென்று, அன்னையின் இரண்டு பாதங்களிலும் விழுதலும், யார்க்கும் அன்னையாகும் அன்னை தன்மகளை இரண்டு கரங்களாலும் தழீஇக் கொண்டு உச்சி முகத்தையும் அணைத்து மோந்து காந்தள் போன்ற கரங்களை மேலிருத்தி அன்பின் மிகுதியால் கண்களினின்றும் நீரரும்பத் தன்னுடன் தழுதழுத்த வார்த்தைகள் பேசும் தன் மகளுடனிருந்தாள் பிறகு தாயுடன் எண்ணரிய பொருள்களைக் கொணர்ந்த மங்கையரிருவர்களும் உண்ணுதற் கியைந்த அமுதம் போன்றஉணவளித்து உபசரித்து மகளும் இருந்தகாலத்து ஓர்நாள் மகள் கருப்பநோயுற்று பூரணச்சந்திரன் போன்ற குழந்தை ஒன்றைப் பெறவும் அதைத் தாயாகவந்த பெருமான் மருந்தொடு கட்டிய எண்ணெய் முதலியவை வார்த்துத் ஏழுதினங்கள் கழிந்த பிறகுதொட்டிலிட்டு முருகவேள் எனும்படி வளர்த்து வருவாளாயினாள்.
   
எறும்பு முதல் யானையீறாகி ஆன்மாக்களையும் இந்திரன் முதலாய தேவரையும் இருந்த இடமிருந்து காக்கும் இறைவன் இவ்வாறு இருத்தலும் மழை நீங்கி ஆற்றில் வெள்ளங்குறைந்தது. அரதநவதியை மெய்யாகவே பயந்த அன்னையும் அங்குவந்து சேர்ந்தாள்.
   
இவ்வாறு அரதனவதியின் தாய்வருதலைக் கண்ணுற்ற மருமகனாகிய தநகுத்தன் ஒருருவைத் தாங்கி பிங்குக் காணப்படும் இருவரில் யாவர் உண்மைத்தாய் என்று நினைக்குமுன் தாயும் வந்துசேர்ந்தனள். இவ்விதம் வந்து நின்றாளாய தாய் முன்னரே தாய்போல் எழுந்தருளியிருக்கும் இறைவன் முன் உட்காருதலும் அரதவதியானவள் இவ்விருவரில் நம்மைப்பெற்ற தாய் எவள் எனச் சந்தேகித்து நிற்றலும் இச்சைத்திருமேனி தாங்கிநின்ற அமலன் தனது திருவுருக்கரந்தருளினன். இத்திருவிளையாடலைக் கண்ணுற்ற இந்திரன் முதலானோர் மலர் மழை சொரிந்து பலவாறு துதித்தனர்.
 
அரதவதியும், தநகுத்தனும் பின்னர் நெடுங்காலம் தாயானசெல்வத்தின் திருவடியை வணங்கி அவன் திருவடி நீழலை யடைந்தனர். அவன் திருவடியை யடைந்தார் விரும்புவதை விரும்பிய அளவாகச் செய்யவல்லவன் இவனேயன்றி வேறுயாவர் தாம் வல்லவராவர்.

சுபம்.
தாயான சருக்கம் முற்றிற்று.

                    கிஷ்ணாம்பேட்டை - குப்புச்சாமி.

சித்தாந்தம் – 1913 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment